Print this page
திங்கட்கிழமை, 08 April 2019 16:03

நீதியின் குரல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

 

நீதியின் குரல்!

குற்றவாளிகள் அல்லது குற்றத்திற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என நினைத்து சட்ட பாது காப்பாளர்களில் ஒரு பிரிவினரான காவல்துறை போலீஸார் இன்ன காரணத்திற்காக கைது / அல்லது அழைத்துச் செல்லப் படுகின்றார் என்று எழுத்து மூலமாய் அவர்களை எங்கிருந்து கூட்டிச் சொல்கின்றார்களோ அங்கிருந்து அப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்களின் வீட்டிற்கும் தகவல் கொடுத்து விட்டு, அவர்களை நீதி அரசர்கள் எனப்படும் நீதிபதிகளின் முன்னிருத்தி காரணங்களை எழுத்து மூலமாக விளக்கி எத்தனை நாள் அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து நீதிமன்றத்திலிருந்து கூட்டிச் சென்று மனித நேயத்துடன் குற்றத்திற்குத் தகுந்தவாறு விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது ஏன் என்றால் எதற்காக ஒருவரை அரசின் சமூக பாதுகாப்பாளர்கள் எனப்படும் காவல்துறை போலீசார் அழைத்துச் செல்கின்றார் என்பது அவர்களுக்கோ அல்லது அவர் உறவுகளுக்கோ தெரிவதில்லை.ஒரு சில சமயம் இன்னாரைக் காணவில்லை என்று புகார் கொடுக்கச் செல்லும்போதுதான் காணமல் போன நபர் புகர்கொடுக்குமிடமான அந்த காவல்துறை நிலையத்திலேயே இருப்பது தெரிய வருகின்ற நிலை. 

குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை குற்றவாளிகளுக்கு எந்த நிலையிலும் ஆதரவு தெரிவிக்கின்ற நிலை இக்கட்டுரையிலில்லை அவர்கள் யாராயிருந்தாலும் என்ன காரணமாய் இருந்தாலும் சட்டத்தின்முன் சமம் என்ற நிலையை மேற்கொள்வதே காவல்துறைக்கு சிறப்பாகும். ஒருவரின் தனிபட்ட செல்வாக்கு காரணமாக காவல்துறை தன் நிலையை நலிவடையச் செய்து விடக்கூடாது. குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை எல்லோருக்கும் ஒரே நடைமுறையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். பின் அவர்கள் செய்த குற்றங்கள் உறுதியானால் அதற்கேற்ற நிலைகள் என வைத்துக் கொள்வது சிறப்பு.

காவல் நிலையங்களில் இருப்பவர்கள் வெறும் உள்ளாடையுடன் இருப்பதக் காண்கின்றோம். நாகரீகம் வளர்ந்த இந்நாளில் ரோட்டில் செல்லும் ஒருவன் ஆடையின்றியோ அல்லது அரைகுறை ஆடையுடன் இருந்தால் அவனை மனவளர்ச்சி குன்றியவன் என்கிறோம். அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு என்ன காராணத்தினால் இந்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளானோ என வருந்துகின்றோம். நீதி மன்றங்களில் குற்றங்கள் நிரூபணம் ஆனபின் குற்றவாளிகள் என அவர்களுக்கு ஓர் சீருடை அளித்து அவர்கள் மனமாற்றம் அடைய அவர்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனை அடைய வேண்டும் என்று ஓர் கட்டுகோப்பை ஏற்படுத்தி உள்ளது அரசின் சட்டங்கள்.

அப்படியிருக்கும்போது எதுவும் உறுதி செய்யாமல் ஒருவரை காவல் நிலையத்தில் அரைகுறை ஆடைகளில் வைப்பது எந்த சட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் மனித நேயத்திற்கு எதிரானது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

ஓர் உயிர் பறிக்கப்பட்டபின் அந்த உயிர் சமபந்தப்பட்டவர்களின் இழப்பை யாராலும் சரிப்படுத்த முடியாது. சமுதாயத்தில் ஒரு உயிரை மற்ற உயிர் பறித்தல் கூடாது என்தற்காகவே இவ்வகைக் குற்றங்களுக்கு கடுமையான சட்டமுறைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சட்ட முறைகளையெல்லாம் மீறி தன் பணபலத்தால் தனிப்பட்ட செல்வாக்கால் கடுமையான சட்ட திட்டங்களை மீறி ஒருவரால் செயல் படுத்த முடியும் என்றால் என்ன சமதர்மம். அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதெல்லாம் எதற்கு! என்ற எண்ணங்கள் மக்களிடையே தோன்றுவதை அணுமதிப்பது வளரவிடுவது எதிர்கால சமுதாயத்திற்கு சீர்கேடாகும்.

ஓர் உயிரைப் பறித்ததற்காக ஒருவர்மேல் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவுகள் வருந்தி கதறலாம். ஆனால் அவர்கள் கொலை செய்யப்பட்டவரின் உறவுகளின் நிலையை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனைக் கனவுகள். கற்பனைகள். வாழ்வாதாரம் எல்லாம் வீணாகி அவரின் பிரிவால் அந்தக் குடும்பம் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளதே! அதற்கு காராணமான தங்கள் உறவினன் செய்தது சரியா என நினைக்க வேண்டும். இதே நிலையில் தன் உறவின் குடும்பம் இருந்தால் எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டும். அது எவ்வளவு துயரம் என்பது அப்போது அவர்களுக்குப் புரியும்.

ஓர் சாதாரண வாழ்வு நிலையிலிருந்து மாறுபட்ட ஒருவர் மற்றொருவரைத் தாக்கி கொலை செய்வது என்றால் அந்த வன்மம் ஏன்! அந்த வன்மத்துடன் இருக்கும் அவரை எந்த உறுவுகளாவது கண்டித்தனவா அல்லது தடுத்தனவா! இப்போது ஏன் தன் உறவு சிக்கலில் சிக்கியதே என்று கண்ணீரும் புலம்பலும்! தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.

பத்திரிகைகளும், செய்திகளும் தவறு செய்தவரின் உறவுகள் கண்ணீர் விடுவதை, புலம்புவதை, அழுவதை தெரிவித்து மற்றவர்களின் மனதில் ஓர் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்த முயல்வதை தடுக்க வேண்டும். தவறு, குற்றம் என்றால் எந்த நிலையிலும் யாரும் அந்த நிகழ்வுகளை ஆதரிக்க கூடாது என்ற நிலை ஏற்பட்டால்தான் நாட்டில் அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்வன குறையும். தெய்வம் நின்று கொல்லும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப பத்திரிகைகளிலும் செய்திகளிலும் தெரிவிக்க வேண்டும். இந்த நிலைதான் சமூகத்தில் மற்ற உயிர்களுக்கு கெடுதல் புரிபவர்களுக்கு ஓர் குற்ற உணர்ச்சியைத் தூண்டி குற்றங்கள் செய்யப்படுவதைக் குறைக்க முடியும். குற்றங்கள் செய்யாமலிருக்க தூண்டுதலாக அமையும்.

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு தாக்குகின்றார் என்றால், தாக்கப்பட்டவர் செய்தது என்ன! எதனால் தாக்குபவருக்கு இவ்வளவு வன்மம் ஏற்பட்டுள்ளது. இன்ன காராணத்தினால் எனக்கு இவர்மேல் வன்மம் ஏற்பட்டுள்ளது . என்ற முறையீட்டிற்கு தீர்வு காணும் முறை நீதி மன்றங்களில் இருந்தால் இது மோன்ற வன்மங்கள் அதிகமாகி ஒருவர் தன் எதிர்காலம் பற்றி கவலை கொள்லாமல் வன்மம் தலை தூக்கிய நிலையில் ஒரு குற்றத்தினைச் செய்து விட்டு அதனால் தன் உறவுகளுக்கு பாதிப்பையும் பலகஷ்டங்களையும் விரும்பியா உருவாக்குவார்!

சமுதாய சீர்திருத்தத்திற்கு மிகவும் சிந்தித்து செயலாக்கம் வேண்டிய பொது விஷயம் இது! இதற்காண ஓர் அமைப்பு இருந்து அதில் முறையீடு செய்து ஒருவரின் வன்மங்கள் குறையும் நிலை ஏற்பட்டால் இது போன்ற உயிர் போக்கும் அவல நிகழ்வுகள் நடைபெற வாய்பில்லாமல் போகும். மனித நேயம் மேம்பட்டு சமுதாயம் உயர் நிலை அடையும்.

ஓர் விசாரணையை ஆரம்பித்த அமைப்புகள் முடிவுகளை விரைவாக ஒர் கால நிர்ணயத்திற்குள் கட்டாயமாக அறிவிக்கப் படுபனவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளிவைக்கக் கூடாது. வாய்தா என்பது பல்லாண்டுகள் வாழ்க என்பதுபோல் வழக்குகளை வாழவைக்கும் சொல்லாகும். வாய்தா வழக்குகள் வாழ்வதற்காகவே! வழக்குகள் விரைவில் முடிக்க வேண்டும் என்ற எல்லோரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஏன் மந்தமாக முடிவாகமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. அதற்கு ஓர் முக்கியமான காரணம் வாய்தா அளிப்பதே. ஒரு விசாரனைக்கு இத்தனை வாய்தாதான் என்று கட்டாயமாக்கப்படவேண்டும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் வரவில்லை என்றால் அவர்மேல் குற்றம் நிருபணம் ஆவற்கு இதுவும் ஒர் காரணம் என்ற நிலை ஏற்படும் என கட்டயமாக்குதலே,

வாய்தாவினால் காலதாமதம் ஏற்பட்டு அந்தக் காலங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு பாலருக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. இந்த வாய்தா நிலையிலிருந்து மக்களையும், நீண்டகாலமாக வழக்குகள் நடந்து கொண்டிருப்பது என்ற நிலைகள் மாற வாய்தாக்களை இத்தனை என்று நிர்ணயிக்கப் படவேண்டும். சிலருக்கு இது நன்மைகள் தராமலிருக்கலாம். சிலருக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலன் நீதி நிர்வாகம் பாழ்படுவதை எல்லோரும் எல்லா காலமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைச் சீர்படுத்தினால் நாட்டில் தேங்கிக் கிடக்கும் பல் ஆயிரக்கணக்காண குற்றங்களை விசாரண நடத்தி விரைவில் தீர்த்து வைக்கப்படலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றங்களை நாடினால் வாய்தா! வாய்தா! என நம் ஆயுளில் முடிக்க மாட்டார்கள், மேலும் அவ்வளவு செலவு செய்ய முடியாமல் நம்மைத் தீர்த்து விடுவார்கள் என்ற நினைவு கொண்டு. விரைவில் தீர்வு வேண்டும் என குறுக்கு வழியில் தகாத சமூக முறைகளை மேற்கொள்ள வழி வகுக்கும்.

வேண்டுமென்று தகராறு செய்துவிட்டு நீதி மனறத்தில் புகார் பதிவு செய்து விட்டால் அது பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டிருக்கும் என்ற நிலையில் பல சமூக விரோதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அவல நிலை மாற அனைவரும் முயற்சிக்க வேண்டும். நீதி நேர்மையாக அனைவருக்கும் விரைவில் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

ஒரு விசாரணையில் அது முற்றிலும் பொய்யானது. வேறு நோக்கிற்காக வழக்கு புனையப்பட்டது என்று தெரிந்தால் எக்காரணத்திற்காகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது நிச்சயமாக அந்த தவறை உணரும் வகையில், பொய்யான குற்றசாட்டுகள் சுமத்தி ஒருவரை மனஉலைச்சலுக்கு ஆளக்கிய காரணத்திற்காகவும், வக்கீல்கள், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தினை பொய்யான வழக்கினால் வீணடித்த குறத்திற்காகவும் கடுமையா தண்டனை தர வேண்டும். அப்போதுதான் இது போன்ற போலியான வழக்குகள் நீதி மன்றத்திற்கு உள்ளேயே வராது. நீதி மன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது. நன்றாக வெளிப்படையாகத் தெரியும் ஒரு போலி வழக்கை எந்த ஒரு வழக்கறிஞரும் வாதாடக்கூடாது. அப்படி வாதடும் வழக்கறிஞர்மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்காடும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

வழக்காடு மன்றத்தில் வழக்காடுபவர்கள் ஒவ்வொரு வழக்கின் தன்மையை உணர்ந்து அதில் தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்ற நிலை அறிந்து வழக்குகளை மேற்கொண்டால் ஆரம்பத்திலேயே போலியான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவது குறைந்து விடும். அப்படி வந்தாலும் அந்த வழக்குகள் இனம் கண்டு கொள்ளப்பட்டு நீதிபதி அவர்கள் தண்டனை தறுவாரென்ற நிலை உறுதியாக இருந்தால் போலியான வழக்குகள் குறைந்து நீதி மன்றத்தின் நேரங்கள் வீணடிக்கப்படாது. ஆண்டுக்கு ஆண்டு போலி வழக்குகள் குறைந்து நாட்டில் நீதித்துறை மேன்மையடைந்து நீதி நியாயம் வழுப்பட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ வாழ்வியல் முறை அமைந்து நாட்டில் அமைதி பெருகி ஆனந்தமும் நிறையும்.

ஒரு வழக்கறிஞர் தேர்வு எழுதி நீதி அரசருக்குகான தகுதியில் இடம் பெற்றிருந்தாலும் அவரின் முந்தைய காலங்களில் அவர் ஈடுபட்ட வழ்க்குகள் அடிப்படையில் அவரின் முழுத் தகுதி தெரிந்து மற்றவர்களில் சிறந்தவர் என்ற நிலையில் அவர் நீதிஅரசருக்குத் தெரிந்தெடுக்கப் படவேண்டும். அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது செல்வாக்கிற்காகவோ எந்த ஒருவரும் நீதி அரசராகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது. உண்மைகள் மறைக்கப்படாத தெளிவு கொண்ட வாதம், விவாதம், முடிவுகள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும்.

ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து விட்டு முன் ஜாமீன் கேட்கிறார் என்றால் எதற்கு அவருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யாத ஒருவர் ஏன் பயப்படவேண்டும். ஒரு குற்றம் தன்மேல் சாத்தப்படவிருக்கின்றது என குறு குறுக்கும் நெஞ்சிற்கு பாதுகாப்பிற்காக ஜாமீன் வழங்குதல் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கி மேலும் அந்த குற்றப் பின்னியை சீர்குலைக்க அவருக்கு உதவுவதற்காகவே அந்த ஜாமீன் அமையும். எந்த குற்றம் செய்தாலும் சட்ட விளக்கங்களைச் சொல்லி முன் ஜாமீன் வாங்கி விடலாம் என்ற அவல நிலையிலிருந்து நீதிமன்றங்களின் நிலை மாற வேண்டும்

ஜனநாயகம் எல்லோருக்கும் பொது. பணம் இருப்பவர்களுடன் அறிவில் சிறந்தவர்கள் சேர்ந்து அதை தங்கள் பக்கம் இழுத்து ஜனநாயகத்தை பணநாயகமாக ஆக்க விடக்கூடாது என்பதற்காகவே நீதி மன்றங்கள். நியாய தர்ம சிந்தனையுடன் வழக்காடுபவர்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாட்டில் தர்ம் நியாங்கள் நிலைக்க அவர்களும் உதவ வேண்டும். அதிகாரமும் பணமும்தான் சட்டத்தின் கண்கள் என நினைத்து தர்மத்தினை விட்டு வேறு செயலுக்கு துணை போகக்கூடாது. இதிகாசங்களும் புராணங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்புண்ணியபூமியில் நியாயம் தர்மத்தை உறுதிப்படுத்தவே போர்கள் நடந்து அவற்றை நிலைப்படுத்தியுள்ளதை அறிஞர்கள் புரிந்து தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டு நியாயம் தர்மத்திற்காக போராடும் நிலையை மேற்கொள்ள வேண்டும்.

சட்டம் என்றால் அது தன் கடமையைச் செய்யும் என்ற நிலை, உணர்வு, ஓர் பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என சொல்லும் நிலையை நாட்ட நீதி மன்றங்கள்தான் முற்றிலும் உதவி செய்ய வேண்டும்.

ஒரு குற்றத்தைச் செய்தவன் எந்த நிலையிலிருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. பாரபட்சமின்றி நீதி சொல்லி நியாமான தண்டணைகளை அடைய வேண்டும் என்பதே தர்மத்தின் குரலாக நீதி மன்றங்களில் ஒலிக்க வேண்டும். ஒரு விசரணையில் ஒரு நீதி மன்றத்தில் தண்டனை மறு நீதி மன்றத்தில் விடுதலை. எப்படி ஒரு நீதியானது இரு நீதிமன்றங்களிலும் மாறு பட்டு நிற்கின்றது. விசாரணை ஒன்றே. நியாமும் தர்மமும் ஒன்றே. அப்படியானால் ஏன் இரு வேறு வகையான தீர்ப்புகள். அப்படி நீதிக்கு முரணான தீர்ப்புகளை வெளியிட்ட நீதி அரசர்களுக்கும் தண்டனை என்ற நிலை ஏற்பட்டால் இது போன்ற ஒரே வழக்காட்டில் இரு வேறு தீர்ப்புகள் வெளிவராதல்லவா!. நீதிமன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது அல்லவா.

ஒரு நீதி அரசர் அளித்த தீர்ப்பு எங்கு சென்றாலும் அது நீதிக்கு உகந்தது. அதுவே சரி என்ற நிலை வேண்டும். அதுவே நீதி. நீதி என்பதில் ஒன்றுக்கு மேற்பட்டது எல்லாம் நீதியென்றாகாது. அது நீதியின் ஆட்சி! அதுவே நீதியின் குரல்!.--குருஸ்ரீபகோரா

#####

Login to post comments