Print this page
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆனந்தபூக்கள்

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

&&&&&

ஆனந்தப் பூக்கள்!

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. அந்த ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்குறிய செயல்பாடுகள் வேண்டும். இளமையுடன் செயல்பாடுகள் இனைந்திருக்க வேண்டும். எண்ணங்கள் இளமையாக இருக்க வேண்டும். இளமை இனிமையானது. அதை பலர் தவறவிட்டு விடுகின்றனர். அது இளநீர் போன்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் இளநீர் தேங்காய் நீராகிவிடும். இளநீரின் சுவைவேறு. பயன்வேறு. தேங்காயின் நீர்வேறு சுவை. இளநீர் தேங்காய் நீராகும். தேங்காய் நீர் எப்போதும் இளநீராக முடியாது. இதைப்போன்றதே இளமையும். காலங்கடந்தபின் இளமையின் சுவையை அனுபவிக்காமல்விட்டு பின்னால் வருத்தமடைகின்றனர்.

எல்லா உயிர்களுக்கும் ஆசை உண்டு. ஆசை இனிமையானது. அது தேங்காயின் உள்ளே உள்ள இளநீர் போன்று சுவையானது. உலகின் ஆசைகளின் அடையாளம் இளநீர். அந்த நீர் தேங்காயின் மேல் உள்ள ஓடு உடையாது என நம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அந்த ஓடு உடைபடும். காலம் அதிகமானால் நீர் வற்றி தேங்காய் கொப்பரையாக மாறி முதிர்ந்த நிலையை அடைந்துவிடும். அன்புள்ள ஆன்மாக்களே! இளநீர் போன்ற ஆசைகளால் நம் உடல் கொப்பரைத் தேங்காயைப்போல் உறுதியாகும் நிலையானதாகும் என எண்ணி மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொள்கின்றோம்!

எந்த நோக்கிலும் அந்த இளமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். காலம் கடவுளின் ராகம். அவை வீணடிக்கப்பட்டால் திரும்பவும் கிடைக்காது. சமூகத்தின் மேல் பழி சொல்லி, அதனால் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கொள்ளக்கூடாது. உனக்கு, உன் ஆன்மாவிற்கு சரியென்று தோன்றினால் செயல்படு. இளமையின் ஆனந்தத்தை ருசிக்க முடியும் போதெல்லாம் ருசித்துவிடு.

ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கழியும். வயதுக்கு ஏறுகிற சக்தியுண்டு. இறங்குகிற சக்தி கிடையாது. கழிந்தபின் வருத்தப்பட்டு ஒன்றும் பயனில்லை. எத்தனை வயது வாழ்ந்தான் என்பதில் பயனில்லை. என்ன செய்தான் என்பதுதான் கேள்வியாக வரும்.

அரசாங்கத்தில் வேலை செய்ய வயது வரம்பு வைத்துள்ளனர். அதை தாண்டிய ஒருவருக்கு அங்கு வேலை கிடைக்காது. அதைப் போன்றே இளமையில் அடைய வேண்டியதை அடைய வேண்டும்.

இளமையின் பருவங்களை அனுபவியாமல் விட்டு, மீதி பயணத்தில் யந்திரகணமாக அவசர அவசரமாக இழந்ததை அடைய வேண்டும் என்ற நினைப்பில், வாழ்வின் ருசியை அறியாமல், எதையும் புரியாமல் கண்டும், கேட்டும், உடுத்தும், உண்டும் நாட்களை கழித்து விட்டீர்களானால் எப்படி ஆனந்த வாழ்வு வாழமுடியும்.

நீங்கள் அழகாக இருந்தால் அதனால் இளமையாக இருக்கின்றீர்கள் என அர்த்தமில்லை. கண்களில் ஓர் பிரகாசம் இருக்க வேண்டும். பார்வையில் ஓர் துடிப்பு இருக்க வேண்டும். புண்ணகை முறுவல்ஒளி தவழவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் என்பது போன்றே இளமையின் மினுமினுப்பு முகத்தில் இருக்க வேண்டும்.

இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப முகத்தின் தோற்றம் கவலை, துக்கம், துயரம் போன்றவைகள் பற்றிய எண்ணங்களை பிரதிபலிப்பனவாக இருக்கக்கூடாது. ஒரு பந்தை வீசி எறிந்தால் அது எப்படி துள்ளிக் குதிக்கின்றதோ அதுபோன்ற துள்ளிக் குதிக்கும் எண்ண உணர்வுகள் வேண்டும் மனதிற்கு, அதுவே இளமையின் அடையாளம். ஆடி மகிழும் காலம். இப்போது என்ன வேண்டும் என்று இளமையைக் கேட்டால் எல்லாம் வேண்டும் என்று பதில் வரவேண்டும். அதுவே இளமை. இளமையான எண்ணங்களை உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சுறுசுறுப்பிற்கு நீங்களும் இயங்கவேண்டும். மனம் சோர்வு அடையக்கூடாது.

வேதங்கள் சொல்லும் அறிவுரைகளை மனதில் வாங்கி புத்தி கெடாமல் காப்பாற்றிகொள்ளும் திறமையுடையது இளமை. பின்னாளில் அந்த திறமை உபயோகமாகும்.

இசைக்கருவியின் கம்பிகள் அதிக இறுக்கத்துடன் இருந்தால் கம்பிகள் அறுந்து விடும். தளர்வாக இருந்தாலும் இசை பிறவா. விறைப்புமின்றி தளர்வுமின்றி நடுநிலையில் இருந்தால் மட்டுமே இசை பிறக்கும். அது இளமையின் தன்மைகொண்டது. அதற்குத்தக்க நம் உடம்பும், உறுப்புகளும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோருடனும் அன்பு, நட்புடன் பழகவேண்டும். நீங்கள் பூவாகவோ, நாராகவோ, அல்லது நீங்கள் பழகும் நபர் பூவாகவோ, நாராகவோ இருக்கலாம். எப்படியிருப்பினும் பூவும் நாரும் சேர்ந்தால்தான் பூச்சரம், மாலை. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மணம்-அது இயற்கை.

உங்களைவிட திறமைசாலிகளை சந்திக்கும்போது நமக்கு புத்திசாலித்தனம் இல்லை என வருத்தப்படாதீர்கள். அவர்களுடன் நட்புக்கரம் நீட்டி பழகுங்கள். ஓர்நாள் நீங்கள் பூவோடு சேர்ந்த நார்போல் மணம் பெறுவீர். ஏன் மணக்கும் மலராகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. புதிய சிந்தனைகள் ஏற்பட்டு உங்கள் இளமை தூண்டப்பட்டு செயலாக்கம் நடைபெற்று வெற்றி காண்பீர்கள்.

எப்போதும் மலர்ந்தமுகம், இனியசொல், தெளிந்த சிந்தனை இவற்றோடு துடிப்புடன் இருப்பதே இளமையின் அடையாளங்களாகும். அதற்கு ஆத்மார்ந்த சந்தோஷத்தில் திகழ வேண்டும் அந்த இளமை.

அன்பை பெருக்குவதே வாழ்க்கை. அன்புகொள்வீர்! அனைவரிடமும் அன்பு கொள்வீர்! எல்ல உயிர்களிடத்திலும் அன்பு கொள்வீர்! தோன்றிய, பிறந்த எல்லா உயிர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது, ஆகவே வாழ்விற்கு தேவையானவற்றைத் தேடும் உரிமையும், அடையும் உரிமையும் உள்ளது. இதைத் தடுப்பதும், மறுப்பதும் பாவமாகும். தடுத்து பாவச் செயல்களை செய்ய எந்த ஒர் ஆன்மாவும் விழையக்கூடாது. நிறம் கண்டு அன்பு வருவதில்லை. அழகு கண்டும் அன்பு வரக்கூடாது. சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் எந்நிறத்தையுடையதாக இருந்தாலும், அழகாயிருந்தாலும், அழகின்றி இருந்தாலும் அது ஓர் உயிர். ஓர் ஆன்மா வாழும் உடம்பு. அதற்கு உரிய காலத்திற்கு வாழும் உரிமை உள்ளது அதில் தலையிட மற்ற ஆன்மாக்களுக்கு உரிமையில்லை. அதை அதன் போக்கில் செயல் படவிடுங்கள். அதன்மீது அன்பைக் காட்டுங்கள்.

நாம் செய்யும் செயலுக்கு அவர் என்ன சொல்வாரோ, இவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணங்களால், வெளி மனித உலக ஆக்கிரமிப்பால் நம்மால் விரைவில் முடிவு எடுத்து செயல்பட முடிவதில்லை. வெளிமனிதர்கள் எதையும் சொல்லலாம். ஆனால் செயல்பாடு, பாதிப்பு என வந்தால் அவர்கள் ஒதுங்குவர். அப்படியிருக்கும்போது நாம் ஏன் அவர்களை நினைத்து நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும்.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு நாமே எஜமான். அதனால் அடையும் பலாபலன் நம்முடையதே! ஒருமனித ஆன்மாவிற்கு உட்புற நிகழ்வுகள் நிகழ்ந்தால்தான் உண்மையான ஆனந்தம் உணரமுடியும்.

அது எல்லையற்ற உணர்வுகளுடையது. சூழ்நிலைக்கேற்ப நம்மை பதப்படுத்திக் கொள்வது உண்மையான ஆனந்தம். உலகத்தின் இன்பங்களை எல்லாம் நுகர்ந்து அனுபவித்து ஆனந்தப்பட நினைக்கும் ஆன்மாக்களே! தனு என்ற உடல், கரணம் என்ற உடற்கருவிகள், புவனம் என்ற அந்தந்த ஆத்மாக்கள் வாழும் உலகம், போகம் என்ற அனுபவம் என இந்த நான்கும் குறைவின்றி ஓர் ஆன்மாவின் உடலின் உயிருக்கு கிடைத்தால்தான் அந்த ஆன்மா ஆனந்தப் படமுடியும்.

இந்த உடல் மாயையானது, என்றும் சாசுவதமானது அல்ல. கொப்பரை போலாகாது. உண்மையை உணர்ந்துகொள். எள்ளின் உள்ளே எண்ணெய்யும், பசுவின் மடியில் பாலும் உண்டு எனச் சொல்வதால் எண்ணெய்யும், பாலும் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி வேண்டும். வெறும் முயற்சி மட்டும் போதாது. மனம் உடல் இரண்டும் இனைந்து முயற்சிக்க வேண்டும். மனதில் எண்ணி உடல் ஒத்துழைக்காவிடில் அது உபயோகமில்லை. வாழ்வில் கிடைப்பதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வேண்டும். உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் அதிருப்தியடைந்து ஒதுக்கிவிட்டு வேறுஒன்றை நாடினால், இதன் சுவை, இனிமை தெரியாமல் போய்விடும். ஒருவேளை அடுத்தமுறை இதுகூட உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே கிடைத்ததை நுகர்ந்து அனுபவியுங்கள். பின் வேண்டுவனவற்றிற்காக முயற்சியுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.

இந்த உலகை எட்டிப்பார்க்கும் எல்லா உயிர்களும், தங்கள் கருவிலிருந்து, கூட்டிலிருந்து முயற்சி செய்து உந்திதான் வெளிவருகின்றது. வெளிவரும்பாதை சிறியது என்றாலும் அங்கிருந்து வெளிஉலகைக்காண முயற்சி செய்து உந்தி வெளியே வருவதால்தான் அதனிடம் தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. முயற்சித்தால் தன்னால் எதுவும் முடியும் என நம்புகின்றது. அவ்வாறு முயற்சிக்காத உயிர்கள் அப்படியே இறந்து விடுகின்றது. முழு வளர்ச்சி, முதிர்வு அடைந்த பூரண வளர்ச்சிக்குப்பின் எந்த உயிருடன் கூடிய உடலும் தான் வளர்ந்த கருவுக்குள் முடங்கி கிடப்பதில்லை. முட்டை ஓட்டை முட்டி குஞ்சுகளும், கூட்டை கிழித்து பட்டாம் பூச்சிகளும், ஏன் நாமும், கரு முழு உருவானதும் உந்தி முயற்சி செய்துதான் வெளிப்படுகிறோமோ அன்றி உள்ளேயே அடங்கி கிடப்பதில்லை. இந்த உந்துதல் முயற்சிதான் நமக்கு வாழ்நாள் பயணத்தில் அதிகம் தேவைப்படுகின்றது. பலர் அதை மறந்துவிடுகின்றனர். எனவே எதற்கும் முயற்சி தேவை. சில விஷயங்கள் நமக்கு அதிசயமாயிருக்கும். நமதுவாழ்வின் நோக்கம் என்ன! நாம் ஏன் இங்கு வந்தோம்! பிறந்தோம்! நமது வாழ்வின் லட்சியம், குறிக்கோள் என்ன! நாம் காலத்தை விரயம் செய்யக்கூடாது. மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து நம் செயல்பாடுகள் இருக்கக் கூடாது, நாமே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

நாம் கேள்விப் படுவதையெல்லாம் ஒருகாதின் வழிவாங்கி மற்றொரு காதின்வழி விட்டும் விடும் பழக்கத்தை மேற்கொள்ளும் மந்த புத்திக்காரராக இருக்கக்கூடாது. நாம் கேட்டவைகளைப் பற்றி தொடர்ந்து அளவில்லாமல் பேசும் மத்திம புத்திக்காரராகவும் இருக்கக்கூடாது. நாம் கண்டவை கேட்டவைகளை மனதில் இருத்தி தூய்மையுடன் ஜீரணித்து உங்களுக்கு பயன்கள் தருமாறு ஆக்கும் ஞானமுடன்கூடிய உத்தமபுத்திக்காரராக இருத்தல் வேண்டும்.

வாழ்க்கையில் ஆனந்தமாக வாழத்தெரிந்து கொள்ளவேண்டும். வாழ எப்போதும் முயற்சி செய்யவேண்டும். அனுபவத்தால் எதுஎது ஆனந்தம் அளிக்கக்கூடியது, எது துயரம் அளிக்கக்கூடியது என கண்டு கொள்ளலாம். “முயற்சி திருவினையாக்கும்” முயற்சிக்காவிடில் ஏதும் நிகழாது. முயற்சியின்றி வாழ்வது மனிதனின் மிகப்பெரிய குற்றமாகும். தானே நடக்கும், விதிப்படி நடக்கும் என்று சும்மா இருப்பது வீண். உனக்கு கிடைத்திருக்கும் வாழ்நாளை சுவைக்காமல், அனுபவிக்காமல் சோம்பேறியாய் இருந்து வாழ்நாளை வீணடிப்பதில் என்ன பயன்? ‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கும் சிறிய நேரத்தைக்கூட வீணடிக்காமல் பயன் படுத்துங்கள்.

அதிர்ஷ்டம் என்பது நம்மை நோக்கி வரும் காலத்தை சரியான முறையில் பயன் படுத்துதலே!. ஒரு கண்ணாடி ஜாடியில் கொஞ்சம் மணலைவிட்டு, பின் கற்களைப் போட்டு பின் நீர் ஊற்றினால் அது நிரம்பிவிடும். ஆனால் கொஞ்சம் யோசனை செய்து செயல்பட்டால் இன்னும் கொஞ்சம் மணல், கற்கள், நீர் ஆகியவைகளை அந்த ஜாடி ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் சிறப்பு. இது எப்படி சாத்தியமாகும்.

முதலில் பெரியகற்களையும் பின் சிறியகற்களையும் அதன்பின் மணலைபோட்டு குலுக்கினால் குறுகிய இடைவெளிகளில் மணல் நிரம்பும். பின் நீர் ஊற்றினால் மணலும் கற்களும் முடிந்த அளவு நீர்கொள்ளும். இப்போது அளவிட்டால் முதலில் செய்ததைவிட இரண்டாம் முறையில் மணல், நீர், கற்கள் அதிகம் பிடித்திருக்கும். இதன்மூலம் ஓர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.

நம் உள்ளே தோன்றும் எண்ணங்களை வரிசைப்படுத்தி அதில் முதலில் எதை செய்வது என முறைப்படுத்தி தீர்மானத்துடன் செயல்பட்டால், நம் எண்ணங்கள் செயலாக்கத்தில் சிறப்பான வெற்றியை காணும். அது நமக்கு மனநிறைவு தந்து மகிழ்ச்சிதரும். மகிழ்ச்சியை அடைவதுதான் நம் வாழ்வின் குறிக்கோள். ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி நன்முறையில் செயல்பட்டு வெற்றி கொண்டு மகிழ்வது உங்களின் செயல்களில்.

கடந்த இரவு மீண்டும் திரும்புவதில்லை. வேறு இரவு வரும், ஆனால் அது கடந்த இரவாக இருக்காது, அமையாது. ஓடும் நதிகள் உற்பத்தியான இடத்தை சேர்வதேயில்லை. எங்கு புறப்பட்டாலும், எப்படிச் சென்றாலும் அது சேருமிடம் கடல்! நதியின்பயணம் வாழ்க்கை பயணத்திற்கு உதாரணமாகும். கடந்த இரவு, கடலில் சேர்ந்த நீர் இவை பற்றி சிந்தியாதே! எங்கு எதை நோக்கி பயணம் செய்கின்றாய்! அதன் பலனை அடைய முயற்சி செய். நீ முயற்சிக்காவிடினும் காலத்தின் முடிவு பதில் ஒன்றுதான். சூரிய உதயம் கண்டால் இன்னொருநாள் குதூகலமாக இருக்கலாம் என்றும், சூரிய அஸ்தமனத்தில் இன்று ஒருநாள் போய்விட்டது, நாளைப் பார்க்கலாம் என்றும் கணக்குப் போட்டு நாட்களைத் தள்ளாதே! இருக்கும் நாட்கள் உனக்குடையது. காலம் பொன் போன்றது. நீ இழந்த நாட்களும் நேரமும் திருப்ப கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். இது தான் கீதையில் சொல்லப் படுகின்றது. செயலை செய், பலனை கர்மத்திடம் விட்டுவிடு.

எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. செய்வது என தீர்மானித்து விட்டால், அதை செய்துவிடு. யாருக்கு, எதற்கு, ஏன் என்றெல்லாம் சிந்திக்காதே! அதேசமயம் எப்படிப் பட்டவனுக்கு செய்கிறாய் என்று கவனிக்கவும். அதாவது உன் உதவி உண்மையாக வேண்டுபவனுக்கு, தேவைப் படுகிறவனுக்கு செய்யப்பட வேண்டும். நீ செய்யும் நன்மை ஓர் நிலையில் ஒரு காலத்தில் உனக்கு மிகுந்த பலனோடு உன்னை வந்தடையும். அல்லது அது உன் சந்ததிக்கு பயனாகும்.செய்ய முடிந்த ஒன்றை செய்ய விரும்பாதவன் சமூகத்துரோகி. செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்கள் பரிதாபத்திற்கு உறியவர்கள். இப்படி முடியாதவனாகவும், விரும்பாதவனாகவும் இருந்து உனது கர்மத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ளாதே! இல்லாத ஒன்றை செய்யவில்லை, முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்கள் பயணத்தில் உங்களால் முடியக் கூடிய ஒன்றை செய்யாமல் விட்டு விடாதீர்கள். அது துயரமான மிகமிக துயரமான ஒன்று!

உற்பத்தியாகி காய்க்கும்போது ஓர் சுவை, கனியாயிருக்கும் போது ஓர் சுவை. சுவை கண்டவர் சுவைக்காவிட்டாலும் காலத்தின் கனிவால் கனி கனிந்து பருவம் கடந்து அழுகியநிலை ஏற்பட்டாலும் அதுவும் பல உயிர்களுக்கு உணவாகி தான் தேன்றிய காரண கர்மத்தை பூர்த்தி செய்கின்றது. ஒருவர் கைபிடித்து நடந்த நீ, ஓர்நாள் தனியாய் நடக்கின்றாய்! தனியாய் நடக்கும் நீ வேறொருவர் கைபிடித்து அழைத்து செல்கின்றாய்! ஆனல் மீண்டும் உன்னை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் நிலை உருவாகின்றது. இது காலத்தின் சூழ்ச்சி! கட்டாய மற்றங்கள்! இது இயற்கையின் நியதி! புரிந்து கொள்வீர்! அந்தந்த காலத்திற்கேற்ப உங்கள் கடமைதனை செய்யுங்கள்! பலனை எதிர்பாராதீர்கள்! செடிகள், மரங்கள் நடுகின்றோம். இதில் எத்தனை நட்டவர்களுக்கு பயன் தருகின்றது. வாரிசுகளுக்கு, உறவினர்களுக்கு என்ன பயன் தருகின்றது. ஓர் சூழலில் முற்றிலும் சம்பந்தப்படாத வேறு நபர்கள் அதை ருசித்து பலன்களை அனுபவிக்கின்றனர். இது நியதி. சிந்தனை கொள்ளுங்கள்.

இவ்வுலகில் உள்ள எல்லாம், உனக்குத் தரப்பட்ட எல்லாம் உன்னுடையது அல்ல! வாழ்க்கைப் பயணத்தில் நீ சந்தோஷத்தைக்காண உன் உபயோகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒன்று. வாழ்வின் முடிவில் அதை உன்னுடன் சேர்த்து எடுத்து செல்ல முடியாது. உன் பயணத்தின் இடையில் கிடைத்த அதை நீ முழுமையாக அன்பு காட்டி ஆனந்தப்பட்டு, சந்தோஷிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. வாழ்க்கையை சுவைத்து மகிழுங்கள். உங்கள் கர்மத்தின் பலன்படி, நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப உங்களுக்கு வரவேண்டியது வந்து சேரும். நீங்கள் அடைவது என நிர்ணயக்கப்பட்டதை அடைந்தே தீருவீர்கள்.

ஏ மானிடமே! உன் விருப்பத்திற்கு ஆண் அல்லது பெண் ஆக பிறக்க வில்லை. நீ இறப்பதும் உன் எண்ணத்திற்கு இல்லை. எதுவும் உன் முடிவில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் வாழ இயற்கை தோற்றுவித்தது இன்ப துன்பங்களுடன் கூடிய பாலின வாழ்க்கை. அதில் கவர்ச்சியுண்டு. எங்கே! எது! எப்படி! எப்போது! யார், யாருக்குக் கிடைக்க வேண்டுமோ! அங்கே! அது! அப்படி! அவரவருக்கு கிடைக்கும்! அது மட்டுமே கிடைக்கும்! ஆனால் கண்டிப்பாகக் கிடைக்கும்! இது கர்ம செயல் பலன்! ஒரு மரம் பூ பூத்து, காய்த்து, கனியாகுமுன்பே அந்த தன்மைகள் மரத்தில், செடியில் ஒளிந்திருப்பது போலவே, மனிதன் பிறக்கும்போதே அவன் அனுபவிப்பதற்கு, முன்பு செய்த முற்பிறப்பு வினைகள் மறைந்து கிடக்கின்றன. அதை வாழ்நாளில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியதி. உணர்ந்து புரிந்து நடந்தால் ஆனந்தம் உள்ளத்தில் பூத்து ஆனந்த பூக்களாய் வலம் வரும் ஆனந்தம்!!-அன்புடன் குருஸ்ரீ பகோரா
@#@#@#@#@#@

Login to post comments