Print this page
புதன்கிழமை, 26 September 2018 09:44

ராகவேந்திரர்!

Written by
Rate this item
(0 votes)

ஸ்ரீ ராகவேந்திரர்!


ஒம் நமசிவாய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####


வேங்கடநாதன் பிறப்பு!

திம்மண்ண பட்டர், கோபிகாம்பா என்ற தமப்தியினருக்கு முதலில் வேங்கடம்பாள் என்ற பெண் குழந்தையும், குருராஜன் என்ற ஆண குழந்தையும் பிறந்தனர். இன்னொரு குழந்தை வேண்டுமென்று திருப்பதி பெருமாளிடம் வேண்ட கோமதியம்மாள் மீண்டும் கருவுற்று 1959 ம் வருடம் பால்குணமாதம் சுக்ல சப்தமி மிருக சீரிட நட்சத்திரத்தில் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டனர். அந் நிகழ்ச்சியில் வந்த பரிசுப் பொருட்களை ஒதுக்கிவிட்டு துளசி மாலையை மட்டும் எடுத்து குழந்தை விளையாடியது கண்டு அனைவரும் ஆனந்தப்பட்டனர்.


வித்யாப்யாசம்-!

மூன்று வயது ஆனதும் குழந்தைக்கு மணலின் மீது ஓம் என்று எழுதி சொல்லித்தர ஆரம்பித்தனர். திம்மண்ணபட்டர், சமஸ்கிருதம், கன்னட மொழிகளைக் கற்பித்து வீணைவாசிக்கவும் பயிற்சியளித்தார். திம்மண்ண பட்டர் இறைவடி சேர்ந்ததால் வேங்கடநாதனின் தமையன் குருராஜன் இவருக்கு உபநயனம் செய்வித்து தன் தமக்கையின் கணவர் மதுரை ஸ்ரீலட்சுமி நரசிம்மாச்சாரிடம் குருகுலவாசத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு வேதம், தர்க்கம், வியாக்கரணம், வேதாந்தம், மீமாம்ஸம் போன்றவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தார்.


திருமண வாழ்க்கை!

குருராஜன் தன் சகோதரன் வேங்கடநாதருக்கு சரஸ்வதி என்ற பெண்ணை 1614-ம் ஆண்டு திருமணம் செய்வித்தார். இவருடைய மேதா விலாசத்தை அறிந்த காவேரிப்பட்டின வாசிகள் தங்களின் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பி வைத்தனர். கல்வி கற்றுத்தர எந்தவித அன்பளிப்பையும் ஏற்காமல் வேங்கடநாதன் இருந்ததால் குடும்பத்துடன் இந்த சுமையும் சேர்ந்தது.

வெங்கடநாதனின் பாண்டியத்தில் அகம் மகிழ்ந்த சரஸ்வதி மற்ற சுமைகளை பெரிது படுத்தாமல் இன்பத்துடன் வாழ அவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு லட்சுமிநாராயணன் என்று பெயர் வைத்தனர்.

சத் புருஷர்!

ஒரு தனவான் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சூக்த பாராயணம் செய்து கொண்டிருந்தபோது இவருடைய ஏழ்மையைக் கண்ணுற்ற புரோகிதர் அங்குள்ள பிராமணர்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்க பணித்தார். வேங்கடநாதன் உளம் ஒன்றி சூக்த பாராயணம் செய்து கொண்டே சந்தனம் அரைக்க அந்த சந்தனத்தில் அக்னி ஆவிர்பவித்தது, அது தெரியாமல் இந்த சந்தனத்தை பூசிக்கொண்ட அனைவருக்கும் அக்னியால் எரிச்சல் உடம்பெல்லாம் பரவியது. அப்போது அந்த வீட்டின் உருமையாளர் யார் சந்தனம் அரைத்தது என்று கேட்டு விபரம் அறிந்து ஒரு சத் புருஷரை அவமதித்து விட்டதை அறிந்து வேங்கடநாதனிடம் மன்னிப்புக் கோர அக்னியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டினார். மீதியுள்ள சந்தனத்தை வாங்கி வருண சூத்திரம் ஜபித்து சந்தனத்தை தர அதைப் பூசியதும் அவர்களின் எரிச்சல் அடங்கியது. எல்லோரும் வேங்கடநாதரின் பெருமையை உணர்ந்தனர். தனவான் இவருக்கு மரியாதை செய்து சன்மானம் அளித்தார். இந்நிகழ்விற்கு பிறகு எந்த நிகழ்ச்சிக்கும் போவதில்லை என்று உறுதி கொண்டார்.

வறுமையின் பிடியில்!

காலப் போக்கில் எல்லோருக்கும் உணவு அளிப்பது மிகவும் சிரமமாயிருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் ஒரே உடை மட்டும் அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாப்பிட இலை இல்லாததால் தரையை கழுவி அதில் போட்டு சாப்பிட்டனர். சாலிக்கிராம நீரையே பாலாக தன் குழந்தைக்கு கொடுத்து வந்தனர். ஒருநாள் இரவு கள்வர்கள் வீட்டிற்குள் புகுந்து இருந்த ஒரிரு பாத்திரங்களையும் திருடிச் சென்றுவிட்டனர். இதையறிந்த வேங்கடநாதன் கோபப்படாமல் நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று வருந்தினார்.

ஸ்ரீமடம்-கும்பகோணம்!

திடிரென்று சரஸ்வதிக்கு ஒர் யோசனை தோன்ற அதன்படி இருவரும் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் சரணடைவது என முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் கும்பகோணம் மடம் செல்ல இவர்கள் வருகையை சுசீந்திரர் எதிர்பார்த்து காத்திருப்பது போலிருந்தது.


சுசீந்தர் அறிந்த ரகசியம்!

ஸ்ரீ நாமநவமி உற்சவத்திற்கு ஸ்ரீ மடத்திற்கு பல்வேறு ஊர்களிலிருந்து சீடர்கள் வந்திருந்தனர். திம்மண்ணபட்டரும் தம் மகன் வேங்கடநாதனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். சுசீந்திர தன் குரு விஜயீந்தருடன் இருக்கும்போது திம்மண்ணபட்டர் வந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த விஜயீந்தரர் அவர் மகன் வேங்கடநாதன் நமஸ்கரிக்கும்போது அவரை நமஸ்கரிக்க விடாமல் அப்படியே தூக்கி தன் மடிமேல் வைத்துக் கொண்டார். அது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்க விஜயேந்திரர் அந்த ரகசியத்தைச் சுசீந்திரருக்கு சொன்னார். அதாவது தன்னுடைய குரு ஸ்ரீ வியாசராஜர்தான் மீண்டும் பிறவி எடுத்து வேங்கடநாதனாக வந்திருக்கின்றார். அதனால் தான் அந்தக் குழந்தை என் குருநாதர் என்னை நமஸ்கரிக்க விடாமல் எடுத்துக் கொண்டேன் என்றார். அதனால் உங்களுக்குப் பிறகு இந்த மடத்தின் ஆதிபத்யத்தை வேங்கடநாதருக்கே அளிக்க வேண்டும் என்றார்.

மஹாபாஷ்யாச்சார்யர்!

தன் குரு சுசீந்தருடன் ராஜ மன்னார்குடி சென்றபோது அத்வைத சன்யாசி ஒருவருடன் வ்யாகரண மஹாபாஷ்யத்தை வாதம் செய்து வெற்றி கண்டதால் மனம் மகிழ்ந்த சுசீந்திரர் பண்டிதர் சபையில் மஹாபாஷ்யாச்சார்யர் என்று பட்டம் அளித்து கௌரவித்தார். ஒருமுறை தன் குருவுடன் தஞ்சாவூர் சென்ற போது ராஜ சபையில் குருவின் சார்பில் வாதம் செய்து வெற்றி கண்டார். தஞ்சை மன்னர் இருவரையும் கௌரவித்தார். குருவின் விருப்பப்டி ஸ்ரீ நாராயண பண்டிதாச்சார்யர் இயற்றிய ப்ரமேய நவமாலிகா- என்ற அனுமத்வ விஜயம் என்ற க்ரந்தத்திற்கு வியாக்யானம் எழுதி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

குழப்பத்தில் வேங்கடநாதர்!

குரு சுசீந்திரருக்கு உடல் நலம் சரியில்லமல் போகவே வேங்கடநாதனை அழைத்து பெறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்ல நான் இன்னும் சம்சார பந்தத்தில் இருப்பவன் என்னால் நீங்கள் வகித்த பதவியை வகிக்க முடியாது எனச் சொல்ல வேறு ஒருவருக்கு சன்யாச தீக்ஷை அளித்து ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர் என்று ஆச்ரமப் பெயரைச் சூட்டினார். சில நாட்களில் சுசீந்திரரின் உடல் நலம்பெற ஸ்ரீயாதவேந்த்ர தீர்த்தரை பாரததேச தீர்த்த யாத்திரை அனுப்பி மதப் பிரசாரம் செய்யச் சொன்னார்.

சில மாதங்கள் சென்றபின் மீண்டும் குரு சுசீந்திரரின் உடல் நலம் குறைந்தது. சிஷ்யர் ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர் யாத்திரையில் இருந்ததால் அவரை வரச் சொன்னாலும் அவர் வர நீண்ட காலம் ஆகும். அதுவரை ஸ்ரீமூலராமருக்கு பூஜை செய்வது தடைப்படும் என வருந்திய சுசீந்திரரின் கனவில் வேங்கடநாதனே பீடாதிபத்யத்தை ஏற்கத் தகுந்தவன். இம்முறை அவன் சரி எனச் சொல்வான். அவனுக்கு சன்யாஷ தீக்ஷை தந்து ஸ்ரீ ராகவேந்த்ரர் என்று பெயர் சூட்டு என அருளாசி கூறி மறைந்தார்.

காலையில் கண்விழித்த சுசீந்திரர் தன் கனவும் குரு விஜயேந்திரரின் விருப்பமும் ஒன்றாக இருப்பது கண்டு மகிழ்ந்தார். மாலை வேங்கடநாதனைக் கூப்பிட்டு தன் கண்ட கனவையும் குருநாதர் விருப்பத்தையும் கூறி பொறுப்பை ஏற்கச் சொல்ல வேங்கடநாதன் கட்டாயமாக மறுத்தார். மீண்டும் வற்புறுத்தினால் மடத்தைவிட்டு சென்று விடுவேன் என்றார். சுசீந்திரர் இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என விட்டு விட்டார்.

மந்திர உபதேசம்!

வீட்டிற்கு வந்த வேங்கடநாதர் தமக்கு பிடிக்காத விஷயமான குருவின் ஆணையை மீறுதலை எப்படிச் செய்வது. குருவின் ஆனையை ஏற்றால் தன்னை நம்பியிருக்கும் மனைவி குழைந்தைகள் நிலை என்னாவது என முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உறங்கினார். அப்போது இரவில் திடிரென்று ஓர் ஒளி வீசியது. அங்கே சர்வாலங்கார பூஷிதையாக கையில் வீணையுடன் சரஸ்வதி காட்சி கொடுத்து குமரா, என்னை சரஸ்வதிதேவி என்று அறிவாயாக! உன் குரு சுசீந்திரர் விரிந்தாவனவாஸி ஆக இன்னும் சிலகாலம் இருப்பதால் மூலராமரை பூஜை செய்ய சன்னியாசி வேண்டும் நீயே அதற்கு தகுதியானவன். இப்பிறவி உனக்கு அதற்காகத்தான். உன் சம்சார பந்தம் ஒரு காரணத்தால் ஏற்பட்டது. அது உனக்கு நிரந்தரம் அல்ல. சன்யாசம்தான் உனக்கு சொந்தம்.பூர்வத்தில் சத்ய லோகத்தில் பிரம்மதேவருக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்த சங்கு கர்ணன் கிருதயுகத்தில் ஸ்ரீப்ரஹலாதன், துவாபரயுகத்தில் பாஹ்லீக மன்னர் கலியில் வியாசராஜ தீர்த்தர். நீ சன்யாசம் பெற்று மக்களை நல்வழிப்படுத்த இப்பிறவி ஏற்பட்டது. இது உன் விதி. உன்னால் மாற்ற முடியாது. உன் மனைவி குழந்தையை காப்பாற்றுவது இறைவனின் பொறுப்பு என மந்திர உபதேசம் பெற்றார். மனத்தெளிவு அடைந்தார்.

சரஸ்வதி சம்மதம்!

காலையில் தன் மனைவியிடம் மனம் விட்டு பேசலானார். குரு தன்னிடம் கூறியதையும் பின் இரவில் சரஸ்வதிதேவி காட்சி கொடுத்ததைப் பற்றியும் விளக்கமாகக் கூறி தன்னை சன்யாசம் ஏற்க அனுமதிக்கும்படி கேட்டார். தலையில் இடி விழுந்ததுபோலான சரஸ்வதி புழுப்போல துடித்தார். கணவனின் விருப்பத்திற்கு மாறாக இதுகாறும் ஏதும் சொன்னதில்லை என்பதால் இப்போது தமக்கு எந்த துன்பம்வரினும் அவர் விருப்பப்படி நடக்கட்டும் என முடிவெடுத்து தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் தங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்றார். தன் மனைவியின் எண்ண ஓட்டம் புரிந்ததால் காலத்தின் கட்டாயம் என்று இறைவன்மேல் பாரத்தைப் போட்டு சன்யாசம் ஏற்க தீர்மானித்தார்.

தன் குருநாதர் சுசீந்திரரிடம் நடந்தவைகளைக்கூறி தன் சம்மதத்தை தெரிவித்தார். ஆனந்தப்பட்ட சுசீந்திரர் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்யலானார். வேங்கடநாதர் இருந்து அவர் மகனுக்கு உபநயனம் செய்ய வேண்டியதை முதலாவதாக முறைப்படி செய்வித்தார். கணவருடன் சேர்ந்து செய்யும் கடைசி விசேஷமாக இருந்ததால் சரஸ்வதியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.

நிகழ்ச்சி முடிந்ததும் தன் அண்ணா குருராஜாவை அழைத்து தனக்கு சன்யாசம் உத்திரவு ஆகியிருப்பதால் தன் மனைவி மகனை பார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். அவரும் அவர்கள் இருவரையும் தங்கள் இருப்பிடத்திற்கு கூட்டிச் சென்றார்.

ஸ்ரீ ராகவேந்தர தீர்த்தர்!

வேங்கடநாதர் சன்யாசம் தஞ்சாவூரில் நடத்த குரு சுசீந்திரர் முடிவு செய்தார். இந்த வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேக நிகழ்வை தஞ்சாவூர் மன்னர் சிறப்பாக செய்து முடித்தார். 1621 துர்மதி ஆண்டு பால்குண சுத்த த்விதியை அன்று சுசீந்திரர் ஸ்ரீ மத்வாச்சாரியார் பரம்பரை வழக்கப்படி தனது சீடரான வேங்கடநாதருக்கு பட்டாபிஷேகம் செய்வித்து ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்ற பட்டமளித்து மகாசமஸ்தானத்தின் விக்ரஹங்களான மூலராம, திக்விஜயராம, ஜயராமர் மற்றும் சாஸ்திர கிரந்தங்கள் போன்ற பொக்கிஷங்களை ஒப்படைத்தார். வெண் கொற்றக்குடை, சாமரங்கள், அம்பாரி, பல்லக்கு பொன்ற ராஜ கௌரவங்களையும் ஒப்படைத்து வழ்த்தினார் அன்றைய தினமே ஸ்ரீ ராகவேந்திரர் விக்கிரஹங்களுக்கு செய்த சமஸ்தான பூஜை சிறப்பாக அமைந்தது.

சரஸ்வதி நற்கதி அடைதல்!

தன் கணவரை இனிமேல் பார்க்க முடியாததால் உலகமே இருண்டு போய் விட்டதாக நினத்த சரஸ்வதி துக்கம் தாளாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ஊழ்வினையால் தற்கொலை செய்து கொண்டதால் பிசாசு வடிவம் கொண்டு அல்லல் பட்டார். தன் குருவுடன் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வந்ததும் இந்த செய்தி கேட்டு வருந்தினர். ஒரு நாள் காவிரிக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்தபோது சரஸ்வதி தன் நிலைகுறித்து வருந்த அவர்மேல் இரக்கம் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் தன் கமண்டலத்திலிருந்து நீரைத் தெளித்து அவருக்கு நற்கதியருளினார்.

சுசீந்திரர் ஹரிபாதம்!

ஸ்ரீ ராகவேந்திர்ர் தன் குருவுடன் சஞ்சாரம் செய்கையில் ஆனேகுந்திதியில் சுசீந்திரர் ஹரிபாதம் அடைந்தார். அவருக்கு அங்கு விருந்தாவன் பிரதிஷ்டைதனை முறைப்படி செய்வித்து கும்பகோணம் வந்து சேர்ந்தார்.

கும்பகோணத்தில் ஸ்ரீயாதவேந்த்ரரை மடத்தின் பொறுப்பை ஏற்கச் சொன்னார். அவர் ஸ்ரீ ராமரே தங்களை தேர்வு செய்தபின் நான் அந்த பொறுப்பை ஏற்பது சரியில்லை எனக்கூறி அன்று மட்டும் மூல ராமருக்கு பூஜை செய்துவிட்டு தேச சஞ்சாரம் சென்று கிருஷ்ணா நதிக்கரையில் முதுமலே என்ற இடத்தில் தவம் செய்து அங்கேயே பிருந்தாவனஸ்தரானார்.

ஸ்ரீ ராகவேந்திரர் நித்ய அனுஷ்டானங்கள்!

தினமும் ப்ரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து மூலராமர், வேதவ்யாசருக்கு நமஸ்காரம் செய்து துளசி செடியில் எழுந்துள்ள லட்சுமி தேவியை வணங்கி, ஆஞ்சநேயரை வழிபட்டு கஜேந்திர மோஷ துதி முதலிய ஸ்தோத்திரங்களைச் சொல்லிக் காவிரியில் சங்கல்ப விதிபடி ஆசமனம் செய்து மந்திரங்கள் ஜபித்து, மிருத்திகா ஸ்நானம், அகமர்ஷண ஸ்நானம் செய்து ஜபம் செய்வார்.

பின்னர் தன் பரமகுரு விஜயீந்தர தீர்த்தருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு ஸ்ரீ மடத்திற்கு வந்து பாட ப்ரவசனங்கள் செய்வார்.

மதியம் மீண்டும் ஸ்நானம் ஜபம் முடித்து சமஸ்தான பூஜை, பகவத் ஆவாஹனம் ஷோடசோபசார பூஜைகளினால் த்யானம் ஆவாஹனம் அர்க்ய பாத்யம் செய்து நைவேத்யம் படைத்து மஹா தீபாராதனை செய்து மந்திர புஷ்பங்களை சமர்பிப்பார். வாயு பூஜை, குருபரம்பரை பூஜை செய்து பக்தர்களுக்கு மூலராமர், திக்விஜயராமர், வாசுதேவ மூர்த்தியை தரிசனம் காட்டி பூஜையை முடிப்பார். பிஷை ஏற்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பாட ப்ரவசனம் செய்வார்.

மாலையில் தரிசனத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தரிசனம் தந்து ஆசி வழங்குவார். பின் ஸ்நானம் செய்து மாலை பூஜை முடித்து வந்தவர்களுக்கு ஆசிவழங்கி மடம் சம்பந்தப்பட்ட அலுவல்களை கேட்டுத் தெரிந்து கொள்வார். பின் இரவு நித்திரை செய்வார்.

ஸ்ரீ ராகவேந்தரின் யாத்திரை!

ஸ்ரீ ராகவேந்திரர் மதுரை வந்தபோது திருமலை நாயக்கரின் மந்திரி அப்பைய தீக்ஷிதரின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர் ராகவேந்தரர் உடன் வாதத்தில் ஈடுபட்டு, இவரது வாதத்திறமையை மெச்சி இவர் இயற்றிய ’பாட்ட சங்க்ரஹ’ எனும் கிரகந்தத்தை யானை அம்பாரிமீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை செய்தார்.

உடுப்பியில் பல நாட்கள் தங்கியிருந்து கிருஷ்ணனை பூஜித்தார். அப்போது தந்த்ர தீபிகா, ந்யாய முக்காவளி, சுதா பரிமளா ஆகிய கிரந்தங்களை இயற்றி கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தார். கிருஷ்ணருக்கு சிறிய தங்கத்திலான விக்ரஹம் செய்து ஸ்ரீ மடத்தின் பூஜையில் சேர்த்தார்.

உத்ர கர்நாடகாவில் கிரீடகிரி என்ற கிரமத்தில் இருந்த வெங்கடதேசாய் வீட்டில் மூலராமர் பூஜை செய்ய ஒப்புக் கொண்டார். வெங்கடதேசாயும் அவர் மனைவியும் பூஜைக்கும் விருந்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை போஜனத்திற்கு வைத்திருந்த மாம்பழரச அண்டாவில் எட்டிப்பார்த்து தவறி உள்ளே விழுந்து இறந்து விட்டது. சிரிது நேரத்தில் குழந்தையைத் தேடிய குடும்பத்தினர் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயம் தெரிந்தால் அந்தணர்களது போஜனம் தடைபடும் என்பதால் இருவரும் உண்மையை மறைத்தனர். பூஜை முடிந்ததும் தீர்த்தம் வாங்க அனைவரையும் வரச் சொன்னவர் வெங்கடதேசாயை குடும்பத்துடன் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். வெங்கட தேசாய் தீர்த்தம் வாங்குவதை தவிர்க்கும் விதமாக கடைசியில் வாங்குகின்றேன் என்றார். சூழ்நிலையை அறிந்த ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமர் உன் வீட்டில் எழுந்தருளியிருக்கும்போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாது. உன் குழந்தையை தூக்கிவா என்றார். தன் கமண்டலத்திலிருந்த நீரை ஜபித்து குழந்தையின் மேல் தெளிக்க குழந்தை தூக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்தது. வெங்கடநாதர் ஆனந்தமடைந்து அந்த கிராமத்தையே ஸ்ரீ ராயருக்கு தானமாக அளித்தார்.

கிரீடகிரியிலிருந்து பீஜப்பூர் செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் களைப்பாற அருகில் இருந்த மேடையில் அமர்ந்தார். தோட்டக்காரன், சுவாமி நேற்றுதான் சாவனூர் நவாபின் மகன் பாம்பு தீண்டி இறந்தபின் சவ அடக்கம் செய்யப் பட்டுள்ளது. அதன் மீது தாங்கள் அமரக்கூடாது என்றான், சிறிது யோசித்த ஸ்ரீராயர், அந்தக் குழந்தை இறக்கவில்லை. மேடையை தோண்டி அச்சிறுவனை வெளியே எடுங்கள் என்றார். நாவாப் தன் ஆட்களுடன் வந்து தோண்டி உடலை வெளியே எடுத்து வத்தனர். பலகன் மேல் கமண்டல நீரைத் தெளிக்க உயிர் பெற்றான். மகிழ்வடைந்த நவாப் பல பரிசுகள் அளித்து கௌரவித்தார்.

பீஜப்பூரின் சுல்தான் ஸ்ரீ ராயருக்கு ஜகத்குரு என்ற பட்டமும், மரியாதைக்குரிய பரிசாக வெண்கொற்றக் குடையும் அளிக்க அங்கிருந்து பண்டரிபுரம் சென்றார்.

யாத்திரை செல்லும் வழியில் உடன் வந்த சிஷ்யரின் மனைவிக்கு பிரசவ வலி எடுக்க அந்த இடத்தில் குடிக்க நீரில்லாமல் இருக்க தன் தண்டத்தால் பூமியில் தட்ட நீரூற்று தோன்றியது. இது தண்ட தீர்த்தம் எனப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு பண்டரிபுரம்- பாண்டுரங்கன், கோல்ஹாபூர்- மஹாலட்சுமி, ராய்ச்சூர்-மாணவி கிராமம்- ஆஞ்சநேயரை தரிசித்தார். அங்கு வந்த முதியவர் நற்கதி அருள வேண்ட நாளை மூல ராமருக்கு முடிந்த சேவை செய் என்றார். அடுத்தநாள் அவர் தன்னால் இயன்ற கடுகு கொண்டுவர சாதுர்மாஸ்ய மாதத்தில் சேர்க்க கூடாது என்ற நியதி இருப்பதால் தயங்கிய சிப்பந்திகளுக்கு மூலராமர் ஏற்றுக் கொண்டார். அதனால் சமையலில் சேர்த்தலாம் என்றும் இனி சாதுர்மாஸ்ய மாதத்தில் கடுகு சேர்ப்பதில் தவறில்லை என ஆணை வழங்கினார். நைவேத்தியம் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. முதியவர் முக்தியடைய ஸ்ரீராயர் இவர் முன் ஜன்மத்தில் ஸ்ரீகனகதாஸர். இப்பிறவியில் என்மூலம் முக்திபெற காத்திருந்தார் என பெரியவரின் பெருமைதனை சொன்னார்.

ஸ்ரீனிவாச்சார் என்ற அறிஞர் தான் இயற்றிய நூல்களை ஸ்ரீராயரிடம் காட்டி பாராட்டுப் பெற்றார். மந்த்ராக்ஷதை பெற்று ஸ்ரீமடத்தில் பிரசாதம் உட்கொள்ளும் போது அதில் கடுகு சேர்ந்திருக்க கண்டவர் உணவை ஒதுக்கினார். குருராஜரின் ஆணையின் பேரில் வேறு உணவு அவருக்கு பரிமாறப்பட்டது. ஊர் திரும்பிய அவர் அவர் தமையனாருக்கு மந்த்ராக்ஷதையை கொடுக்க எடுத்தபோது அது கறுப்பாயிருக்க, அவர் தமையனார் நடந்த விஷயங்களைக் கேட்டு, தம்பி நீ தவறு செய்து விட்டாய், ஸ்ரீராயர் பெரிய மகான், அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றம் செய்தால் அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு. அவரிடம் மன்னிப்புகேள் என்றார். உடன் குருராஜரை சந்தித்து தன் தவறுக்காக வருந்தினார். மூலராமருக்கு நைவேத்தியம் செய்ததை உதாசீனம் செய்ததால் இது நடந்தது. நீங்கள் இன்று ஸ்ரீமடத்தில் பிரசாதம் உட்கொள்ளுங்கள் என்றார். ஸ்ரீ ராயரிடம் உத்திரவு பெற்று ஊர் திரும்ப நினைத்து கருப்பான மந்த்ராக்ஷதை காண்பிக்க எடுக்க அது சிவப்பாக மாறியது கண்டு தான் மன்னிக்கப்பட்டதை உணர்ந்து ஆனந்தித்தார்.

கந்தனாடி என்ற ஊருக்கு வந்தபோது தாய், தந்தையை இழந்தவனின் சொத்துக்களை அனுபவிக்கும் மாமன், மாமியால் கல்வி அறிவில்லாதவனாக வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளை மேய்ப்பவனாக கொடுமை படுத்தப்பட்ட வெங்கண்ணா என்ற அந்தணச் சிறுவன் ஸ்ரீராயரைச் சந்தித்து தனக்கு நல்வழி காட்ட வேண்டினான். “ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம” என்று ஜபம் செய். நல்லது நடக்கும் என்றார். சிலமாதங்கள் கழித்து அவ்வழிவந்த அதோனியின் அரசன் சித்தி மசூத்கானிடம் ராஜங்க சேவகன் இரு கடிதங்களைக் கொடுக்க அவற்றை படிக்க எப்போதும் படிக்கும் உதவியாளன் இல்லாததால் வேறு ஆள் தேடி வெங்கண்னாவிடம் கொடுக்க படிப்பறிவில்லாதவன் ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து தியானித்து அக்கடிதத்தைப் பார்க்க அதிலுள்ள எழுத்துக்கள் அவனுக்குப் புரிய விளக்கத்துடன் சொன்னான். அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றும், பல காலமாக முற்றுகையிட்ட ஒரு கோட்டை அவன் வசமானது என்ற இரண்டு செய்தியை விளக்கமாக கூறியதால் அரசன் மகிழ்ந்து வெங்கண்ணாவை ராஜாங்க அதிகாரி அந்தஸ்தில் தன் ஆலோசனையாளராக நியமித்தான்.


“ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம” என்ற மந்த்ரத்தை ஜபித்தால் அது மகாலட்சுமியையும், ராமசந்திர மூர்த்தியையும் குறிக்கும். அது ராமஜபத்திற்கு இனையானது என்பதால் ஆஞ்சநேயர் மகிழ்வார். நரசிம்மரை பூஜித்தால் ப்ரகலாதனை பூஜிப்பதற்கு சமம். பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்த்ரராக பிறந்திருப்பதால் நரசிம்மரை பூஜித்த பலனும் கிட்டும்.

தஞ்சையில் பஞ்சம்!

கந்தனாடியை விட்டு புறப்பட்டு திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஷேத்திரங்களில் தரிசனம் செய்து கும்பகோணம் வந்தார். தஞ்சை மன்னன் விஜயராகவநாயக் பீஜப்பூர், மைசூர், வேலுர் அரசர்கள் படையெடுப்பால் தோல்வியுற்றதால் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு தஞ்சை பஞ்சத்தில் சிக்க ஸ்ரீ ரகவேந்த்ரரை அழைத்து அவரிடம் ஆலோசனை கேட்டான். அரசனின் தான்ய களஞ்சியத்தில் பீஜாட்க்ஷர மந்திரத்தை எழுதி மக்களுக்கு வழங்க களஞ்சியத்தில் தானியங்கள் அள்ள அள்ள குறையாமல் இருந்தது. பின்னர் மழை வேண்டி யாகம் செய்து மழையை தருவிக்க நீர் நிலைகள் நிறைந்து பஞ்சத்திலிருந்து தஞ்சை மீண்டது. தன் மகிழ்வைத் தெரிவிக்க தன் வைரமாலையை ஸ்ரீ ராயருக்கு அன்பளிப்பாக கொடுக்க அவர் அதை யாகத்தீயில் போட்டுவிட மனம் வருந்திய மன்னன் ராயர் தன்னை உசாதீனப்படுத்தி விட்டாரென நினைத்தான். யாகம் முடியும்போது அந்த மாலை யாகத்தீயிலிருந்து வெளிவர அதை மன்னனிடம் கொடுக்க தன் தவறை உணர்ந்த மன்னன் அதை மீண்டும் ஸ்ரீராயரிடம் அன்புடன் கொடுத்தான்.

காஷாய வஸ்திரம். பிருந்தாவன் பூஜை உரிமை!

கன்னட தேசத்திலிருந்து வந்த மூன்று அந்தணர்கள் காவிரிக்கரையில் குளிக்கும்போது ஸ்ரீராயரை சோதிக்க எண்ணி ஒவ்வொருவரும் ஒரு இனிப்பை மனதில் நினைத்து அது தனக்கு பரிமாறப்பட்டால் ஸ்ரீராயர் மாகன் என ஒப்புக்கொள்வது என முடிவு செய்தனர். அப்போது ராகவேந்த்ரர் கஷாய வஸ்திரத்தை துவைப்பவன் நீங்கள் நினைத்தபடி இனிப்பு பரிமாறப்படும் என்றான். பின்னர் வஸ்திரத்தை கல்லின்மேல் வைத்துவிட்டு குளிக்கச் சென்றான். அப்போது நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டனர். அவன் உங்களிடம் நான் ஒன்றும் சொல்ல வில்லையே என்றான். பின் கரையேறி வந்து வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் நம்பிக்கையுடன் ஸ்ரீமடத்திற்கு வாருங்கள் நீங்கள் விரும்பியது கிடைக்கும் என்றான். வஸ்திரம் கையில் வைதிருக்கும்போது இவர்கள் மனதில் உள்ளதை அறிகின்றான் என புரிந்த அவர்கள் ஸ்ரீராயரின் வஸ்திர மகிமையை உணர்ந்தனர்.
பின்னர் ஸ்ரீமடத்தில் பூஜையில் கலந்து கொண்டு உணவருந்தச் சென்றனர். அவர்கள் எண்ணியபடி இனிப்புகள் பரிமாறப்பட்டது. போஜனம் முடிந்தபின் குருராஜர் நீங்கள் நினைத்தபடி பஷணங்கள் பரிமாறப்பட்டனவா என்றார். அவர் கால்களில் விழுந்து தங்களை மன்னிக்க கோரினர். அவர்களை மன்னித்த குருராஜர் தன் பிருந்தாவன் பூஜை செய்யும் உரிமை இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கும் என சாசனம் எழுதி தந்தார்.

மிருத்திகை மகிமை!

ஸ்ரீ மடத்துச் சிப்பந்தி ஊருக்குச் சென்று மணம் செய்ய விரும்பி சமயம் வரும்போது தனிமையில் ஸ்ரீராயரிடம் சொல்லி அனுமதிபெற்று பொருளுடன் ஊருக்குச் செல்ல விரும்பினான். தனிமையான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ ராகவேந்த்ரர் மிருத்திகா சௌசம் சுத்தி செய்யும்போது சந்தர்ப்பம் கிடைக்க தன் எண்ணத்தைச் சொன்னான். உடன் ஸ்ரீராயர் தன் கையிலிருந்த மிருத்திகாவை கொடுத்து நீ ஊருக்குப் போகுமுன் உனக்குப் பொண்ணும் பொருளும் கிடைக்கும் என ஆசி வழங்கினார்.

வழியில் இரவு நேரமானதால் அருகிலிருந்த ஊரின் வீட்டுத் திண்ணையில் படுத்தான். அந்த வீட்டில் குழந்தை பிறந்திருப்பது அறிந்து அவர்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றெண்ணி ஓரமாக அமைதியாகப் படுத்துக் கொண்டான். நடு இரவில் ஓர் பிரம்ம ராஷஸன் எழுப்ப விழித்து பார்த்தவன் அவன் உருவத்தைப் பார்த்து பயந்தான். அப்போது அந்த உருவம் உள்ளே இருக்கும் குழந்தையை சப்பிடப்போகின்றேன். உன்னிடம் இருக்கும் ஒன்று என்னைத் தடை செய்கின்றது. அதை மறைத்து வை என்றது. அப்போதுதான் அந்த பிரம்ம ராஷஸன் சொல்வது ஸ்ரீராயர் தன்னிடம் கொடுத்த மிருத்திகை என உணர்ந்தான். ராஷ்ஸனிடம் நீ எனக்குப் பொன்னும் பொருளும் தந்தால் நான் நீ கூறியவாறு செய்கின்றேன் என்றான். ராஷஸன் ஒரு குடம் நிறைய தங்க காசுகளை கொடுத்தது. உடன் அந்த மிருத்திகையை எடுத்து ஸ்ரீராயரை நினைத்து அந்த ராஷஸன்மேல் போட அவன் எரிந்து கந்தர்வனாக மாறினான். தன் சாபம் தீர்ந்ததற்கு நன்றி சொன்னான். இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் இவரைப் பற்றி விசாரித்து அவர் சொந்தத்தில் உள்ள ஒர் பெண்ணைக் காட்ட திருமணம் நடைபெற்றது. மிருத்திகை மகிமையால் பொன்னும் பொருளும் கிடைத்தது

பிருந்தாவன பிரவேசத்திற்கு சூசகம்!

கும்பகோணத்தில் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஸ்ரீ ராகவேந்த்ரர் திடிரென்று எழுந்து வானை நோக்கி கை கூப்பி வணங்கினார். அப்போது ஆகாயத்தில் இரண்டு விரல்கள் மூன்று முறை தெரிய அதைப் பற்றி விளக்கும்போது தனக்கு பிருந்தாவன வாஸம் செய்ய 2வருடங்கள், 2மாதங்கள், 2நாட்கள் இருப்பதாகவும் முக்திக்குச் செல்லும் ஸ்ரீகிருஷ்ண த்வைப்பாயனர் இதைக் குறிப்பால் உணர்த்தியதாகவும் கூறினார். அனைவரும் வருத்தப் பட்டாலும் ஸ்ரீ ராகவேந்திரர் கும்பகோணத்தை விட்டு புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

மடத்தின் நிர்வாகத்தில் இருந்த கும்பேஸ்வரர், சக்ரபாணி, சாரங்கபாணி கோவில்களை காமகோடிபீடம், வைணவ மடங்களுக்கு மாற்றினார். விஜயீந்த்ரர் பிருந்தாவனம் பாடசாலைகளை பூர்வாசிரம பந்துக்கள் வசம் ஒப்படைத்தார். பின் இங்கிருந்து புறப்பட்டு ஆனே குந்தி சென்று தன் குரு மார்களை பூஜித்து விட்டு அதோனி நோக்கிச் சென்றார். தனக்கு வாழ்வளித்து தன்னை உயர் நிலைக்கு உயர்த்திய குரு ஸ்ரீராகவேந்த்ரர் வரவேற்பிற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்ண கும்ப மரியாதையுடன் வெங்கண்னா திவான் செய்தார். பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.


பிருந்தாவனத்திற்குரிய இடம் தேர்வு!

அரசர் சித்தி மசூத்கானை மூலராமர் பூஜையில் கலந்து கொள்ள வெங்கண்ணா கேட்டுக் கொண்டார். பூஜைக்குமுன் சந்திக்க வந்த சித்திமசூத்கான் ஒரு வெள்ளித் தட்டில் மாமிசத் துண்டுகளை வைத்து அதை ஒர் பட்டுத் துணியால் போர்த்தி ஸ்ரீ ராகவேந்த்ரரிடம் கொடுத்தான். பூஜை முடிந்ததும் தன் கமண்டல நீரைத் தெளித்து துணியை விலக்க உள்ளே பழங்களும் பூக்களாகவும் இருக்கக் கண்ட சித்தி மசூத்கான் ஆச்சர்யம் கொண்டு சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான். ஸ்ரீராயர் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, மூல ராமர் நீங்கள் கொண்டு வந்ததை பழங்களாகவும் பூக்களாகவும் ஏற்றுக்கொண்டார். நீங்கள் வருந்த வேண்டாம் என்றார். எனினும் அரசரின் மனம் தான் அபசாரம் செய்து விட்டதாக வருந்தியது. அதற்கு பரிகாரமாக இரண்டு கிராமங்களை தானமாகத் தர ஸ்ரீ ராகவேந்த்ரர் அந்த கிராமங்கள் மக்கள் பயன் பாட்டிற்கு இருக்கட்டும். மாஞ்சால கிரமம் மட்டும் வேண்டும் என்றார். மாஞ்சால கிராமம் முன்னதாகவே காஜிக்கு தானமாக தரப்பட்டிருந்தாலும் காஜிக்கு அந்த இரண்டு கிரமங்களைக் கொடுத்து மாஞ்சாலக் கிராமத்தை மீட்டு ஸ்ரீமடத்திற்கு தானமாகக் கொடுத்தார் மன்னர்.

பிருந்தாவனம்-இடத்தின் சிறப்பு!

ஒர் நல்ல நாளில் வெங்கண்ணா உதவியுடன் மாஞ்சால கிரமத்தில் ஓர் இடத்தில் குழி தோண்டச் சொன்னார். அங்கு கொஞ்சம் யாகம் செய்ததற்கு அடையாளமாக சாம்பலும் அதற்கு கீழ் பலிபீடமும் இருந்தது. கிருத யுகத்தில் தான் பிரஹலாதனாக இருந்தபோது பலமுறை இந்த இடத்தில் யாகங்கள் செய்திருக்கின்றேன். ஸ்ரீராமர், லட்சுமணர் சீதையைத் தேடி வந்தபோது இந்த இடத்தில் இளைப்பாறியுள்ளனர். திரேதாயுகத்தில் பாரத யுத்தத்திற்குப்பின் அசுவமேதயாகம் செய்தபோது அனுஸால்வனை எதிர்த்து அர்ச்சுனன் சண்டையிட நேர்ந்தபோது அனுஸால்வனை அர்சுனனால் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் இந்த யாகம் செய்த இடத்தில் இருந்து சண்டையிட்டதுதான். இதை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் அர்சுனனை சிறிது பின்னே செல்ல வைத்தார். பின்னர் அனுஸால்வனை அர்ச்சுனன எளிதாக வென்றான். விபுதேந்திர தீர்த்தர் என்ற மகானும் இங்கு பலகாலம் தவம் செய்துள்ளார். எனவே இந்த இடம் மிகவும் புனிதமானது. இந்த இடத்தில்தான் தான் பிருந்தாவன பிரவேசம் செய்யப்போவதாக அறிவித்தார்.

பிருந்தாவன பிரவேசம்!

மாஞ்சால கிராமத்தின் தேவதை மாஞ்சாலம்மனைப் பிரார்த்தித்து அந்த இடத்தில் தன்னுடைய பிருந்தாவன பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க வேண்டினார். மாஞ்சாலம்மன் தன் சன்னதிக்கு அருகிலேயே பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் படியும் பிருந்தாவன் சன்னதிக்கு எதிரே பன்னிரண்டு ஆட்டுத் தலைகளை கல்லில் செதுக்கும்படியும் அதன் மூலம் தான் குருராஜருக்கு அனுகிரஹிப்பதாயும் உறுதியளித்தாள். தன் குலதெய்வமான வெங்கட்ரமண சுவாமிக்கு ஓர் கோவில் கட்டினார். பூஜை செய்பவர்கள் சிப்பந்திகள் தங்குவதற்கு வீடுகள் கட்டினார். வெங்கண்ணாவிடம் பிருந்தாவனம் தயார் செய்யச் சொன்னார். அருகிலுள்ள மாதவரம் கிராமத்தில் ஸ்ரீராமர் 7நாழிகை நேரம் அமர்ந்திருந்த கல்லை அடையாளம் காட்டி அதை வைத்து பிருந்தாவனம் செய்யும்படி பணித்தார்.

அருகிலுள்ள கணதாளம் என்ற இடத்தில் உள்ள குன்றின்மேல் தவம் செய்தார். அங்கு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் உருவம் சுயம்பாக தோன்றியது.

தனது பூர்வாசிரம அண்ணன் பேரர்களில் ஒருவர் வெங்கண்ணாச்சார்யார் என்பவரை தனக்குப்பின் பீடாதியத்யம் ஏற்க அனுக்ரஹித்தார். அவருக்கு ஸ்ரீயோகீந்த்ர தீர்த்தர் என ஆச்ரமப் பெயர் சூட்டினார். தன் பாதுகையை ஸ்ரீ யோகீந்த்ர தீர்த்தரிடம் கொடுத்து அதை பூஜித்து வரப் பணித்தார். அது ஸ்ரீ மடத்தின் பூஜையில் உள்ளது.

விரோதிகிருது வருடம்-1671 ஸ்ராவண மாதம் கிருஷ்ணபக்ஷ் த்விதை வெள்ளிக்கிழமை பூர்வத்தில் ஸ்ரீபிரஹலாதனாக இருந்தபோது யாகம் செய்த இடத்தில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து துளசிமாலை கையில் எடுத்துக் கொண்டு கையைத் தூக்கி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார். பின் கண்களை மூடி மாலையை உருட்டி ஜபம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஜபமாலை உருட்டுவது நின்றது. குருராஜர் நிர்விகல்ப சமாதி அடைந்தார்.

ஸ்ரீ குருராஜரை சுற்றி பிருந்தாவனம் ஸ்தாபனம் செய்து தலைக்குமேல் வந்ததும் 700 லக்ஷ்மிநாராயண சாலிக்ரமங்களைக் கொண்டு நிரப்பினர். அதற்குமேல் வெள்ளிப் பலகை வைத்து மூடி அதன்மேல் மிருத்திகையைப் பரப்பி பிருந்தாவன பிரதிஷ்டை செய்து ஸ்ரீயோகீந்த்ர தீர்த்தர் பிருந்தாவனத்திற்கு பூஜை செய்தார்.

அப்பண்ணாச்சார்யர்!

ஸ்ரீ ராகவேந்தரிடம் பக்தி கொண்ட சீடர் அப்பண்ணாச்சார்யார் 25கி.மீ தொலைவில் உள்ள பிக்ஷாலாயாவில் குழைந்தகளுக்கு பாடம் சொல்லித்தரும்போது பிக்ஷையாக பெற்ற அரிசி மற்றும் தானியங்களை நீரில் நனைத்து துணியில் கட்டித் தொங்கவிட்டு பாடம் நடத்துவார், பாடம் கற்றுத் தந்தபின் மரத்தில் கட்டப்பட்ட அரிசி மூட்டையை எடுத்து பார்த்தால் அது வெந்து சாதமாக மாறியிருக்கும். அதை நிவேதனம் செய்து மாணவர்களுக்கு உணவாக வழங்குவார். வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் சென்று விட்டு ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் அவரை சந்தித்து விடலாம் என நினைத்தார். பயணம் முடிந்து திரும்பி வந்தபோது துங்கபத்திரையில் வெள்ளம் கரை பிரண்டு ஓடியதால் உடன் மாஞ்சலா கிரமத்திற்கு வரமுடியவில்லை. வெள்ளம் வடிந்தபின் ஓடோடி வந்தார். அவர் வருவதற்குள் ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தின் மேற்பகுதி மூடப்பட்டது. விக்கித்து நின்ற அவர் அழுது புரண்டார். வரும்போது அவர் புதியதாக இயற்ற ஆரப்பித்த ஸ்தோத்திரம் பாதியில் நின்றுவிட்டது. அப்போது அந்த ஸ்தோத்திரம் முடிவதற்கான வார்த்தையை குருராஜர் சொல்ல அனைவரும் கேட்டனர். அதுவே அப்பண்ணாச்சார்யருக்கு ஸ்ரீ ராகவேந்தரின் காட்சியாக கிடைத்தது.

ஸர்தாமஸ் மன்றோ!

19-ம் நூற்றாண்டில் மஞ்சால கிராமத்தையும் மற்ற இடங்களையும் அரசுடைமை ஆக்க பிரிட்டிஷ் அரசாங்கம் ஆணையிட அதற்கு பக்தர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்க அப்போதைய பெல்லாரி கலெக்டர் ஆரய்ந்து முடிவு செய்ய ஸ்ரீமடத்திற்கு வந்தார். அங்குள்ள முறைப்படி காலணிகளை கழற்றிவிட்டு பிருந்தாவனத்தின் முன் நின்று வணங்கினார். ஸ்ரீராகவேந்த்ரர் வெளிப்பட்டு அவரிடம் அரசுடமை ஆக்கக்கூடாது என வாதிட்டார். சர்தாமஸ் மன்றோ கேட்ட கேள்விகளுக்கு திருப்தியான் முறையில் பதில் அளித்தார். அப்போது அவர் மீண்டும் வணங்க அவர் கையில் மந்த்ரக்ஷ்தை இருந்தது. வெளியில் வந்தவர் இதுவரை என்னுடன் பேசியதுதான் உங்கள் ஸ்ரீ ராகவேந்த்ரரா எனக் கேட்டபோதுதான் சிப்பந்திகள் ஸ்ரீராயர் தரிசனம் தந்து உரையாடியுள்ளார் என அறிந்தனர். பின்னர் இந்த அரசுடமை ஆணை ரத்து ஆனது.

#####

Read 12302 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 06 January 2019 12:28
Login to post comments