Print this page
சனிக்கிழமை, 16 May 2020 11:06

தவம்!

Written by
Rate this item
(0 votes)


ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

தவம்!

1624. சிவத்திடம் உள்ளத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது உலகத்தில் உள்ள எந்த துன்பத்தைக் கண்டும் நடுங்குவதில்லை. அன்னார்க்குத் துன்பமும் இல்லை. இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை. பிற பொருள் மேல் பற்று விட்டவர்க்கு விளையும் பயன் வேறு ஒன்றுமில்லை..

1625. அரிய உடலோடு சேர்ப்பதன் பிறப்பும் அது உடம்புடன் கூடி அனுபவிப்பதற்கு இடமான உலகப் படைப்பும் சிறப்பான தவத்தின் மேன்மையும் சிவபெருமானின் அருள் பெற்றவர்க்கு அல்லாமல் பெருந்தவத்தில் நன்மை அடைய மாட்டார்.

1626. பலவகையில் பொருளைமட்டும் முயற்சியின்றி பிச்சை எடுக்கும் மனிதர்கள் பிறப்பின் நோக்கத்தை அறிய வில்லை. இறைவனை மறவாமல் பெருந்தவத்தைச் செய்பவர் இப்பிறப்பில் சிறப்பான செல்வத்தை பெறுவர். மேலும் பிறப்பை நீக்கும் பெருமையையும் அடைவர்.

1627. தனியாய் இருந்து சிவப்பேற்றை அடைய அரிதில் முயன்று தவத்தை செய்யும் உள்ள உறுதி உடையவர் உள்ளத்தை மாற்ற வேண்டும் என்று இந்திரனோ மற்ற தேவர் யார் வந்தாலும் மயங்காமல் தம் மனத்தை சிவத்திடம் உறுதியாக வைத்திருப்பர்.

1628. பக்குவம் பெற்ற ஆன்மாக்களால் விரைவாக தொழிற்படும் வெண்மையான மதியில் விளங்குபவன் தவம் அற்றவர்க்கு மறைந்தும் தவம் உடையவர்க்கு வெளிப்பட்டும் இருப்பான். அகக் கண்ணுக்கு அல்லாது புறக் கண்ணுக்கு தோன்றுவான். பரவிய ஒளித்திரை உடையவன். பசிய பொன் போன்ற நிறம் உடையவன். அரிய தவம் உடையவர்க்கு அல்லாது மற்றவர் அனுகமுடியாதவன்.

1629. உயிர்கள் பின்னால் அடைய வேண்டிய இன்பப் பிறப்பை முன்னே நியதியாய் வைத்த முதல்வன் இறைவனை உயிர் தன்னை அறியப் போகும்போது தானே வந்து சேரும். உயிர்க்குத் தலைவனை அடையச் செய்வது மன உறுதி ஆகும்.

1630. த்ன்னையும் தலைவனையும் கண்ட தவத்தவர், அமைச்சும், யானைக் கூட்டமும் அரசும் பகைத்து எழும் போரின் நடுவிலும் திருவருளில் அமைந்த ஞானமும் அதனால் பெற வேண்டிய அன்புப் பொருளான சிவத்தையும் நோக்கி இமைக்காமல் நிலைபெற்றிருப்பர்.

1631. சாத்திரம் படித்துக் கொண்டு பெருமை அடைவதை விட்டு ஒருக் கணப்போதாவது புறத்தே போகும் உள்ளத்தை தடுத்து உள்ளத்தே நோக்குங்கள். உள்முகப் பார்வையானது பசுமையான மரத்தில் அடித்த ஆணிபோல் பிணித்த பிறவியானது தனது பிணிப்பினின்று நீங்கிப் போய்விடும்.

1632. ஞானம்பெற தவம் தேவை. ஞான சமாதி கூடியபின்பு அதற்குரிய சாதனை வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து யோகம் செய்பவர்க்கு சமாதி பெறுவதற்குரிய தவம் தேவையில்லை. நான் தவம் வேண்டா எனச் சொல்லும் உண்மையை உலகத்தார் அறியார்.

#####

Read 1584 times
Login to post comments