Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:13

திருவருள் வைப்பு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

திருவருள் வைப்பு!

1792. அறிய வேண்டிய நெறி கதிரவ நெறி, திங்கள் நெறி என இரண்டாகும். இத்தகைய கதிரவன் கலை, திங்கள் கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்னும் தெய்வ சத்தியைப் பெறத் திங்கள் நெறி பற்றியவர்க்கு அறமும் கதிரவ நெறி பற்றியவர்க்குத் த்வமும் ஆக உள்ளன. இந்த இரு நெறியிலும் மனத்தின் பண்புக்கு ஏற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.

1793. ஊனக் கண்ணால் காண்பதற்கு அரியவன் மனத்தில் பாவித்து அறியவும் அரியவன், குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் தொடுவதற்கும் அணுகுவதற்கும் தொலைவில் இருப்பவனாய் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பவர்க்கு அகநோக்கில் விளக்கொளியாவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்தில் இருந்த அஞ்ஞானம் விலகும்.

1794. விளக்கொளியைப் பார்த்து நின்றபோது அகக் காட்சியில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்ப் பொருள்களும் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கின் உயிர்க்குயிராய் இருக்கும் பரமன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின் ஞானமே வடிவான காட்சி தோன்றித் தேவ வடிவு உண்டாகும்.

1795. ஞானத்தின் திருவடிவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணாய் கழிந்தன. எம் சிவனான தலைவன் தன் சொருப நிலையினின்றும் பெயர்ந்து குருவாய் வந்து காட்டிக் காண்பான் அங்ஙனம் உண்மை அறிவே துணையாய்ப் பொருந்தி உணர்பவரிடம் பொருந்தி விளங்கும் தன்மை உடையவன் சிவன்.

1796. உயிர்களைப் பிணித்திருக்கும் வினைகள் அழிந்தபின்பு ஒளிமயமான சிவன் தானே அறிவான். தான் அறியாது இருந்தும் என் பக்குவத்தை என் குருநாதனான அவன் அறிவான். ஆனால் ஊனே உருகி உணர்வு மயமான பொருளை அறிந்தபின் இறைவன் தேனைப் போல் நோயைப் போக்கி இன்பத்தை வழங்குவான்.

1797. இவ்வுடம்பு தோன்றியபோதே ஒளியாயும் உயிர்ப்பாயும் இருக்கின்ற இறைவனை நான் அறிந்தே இருந்தேன். வான் மண்டலத்தில் வாழ்பவர்கள் இந்த உண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். உடலின் உள்ளே உயிர்ப்பின் இய்க்கத்தை நடத்தும் ஒளிமிக்க கொழுந்தான் இறைவன் தான் அறியவில்லை என்றால் பின்பு யார் அறிந்து உதவ முடியும்.

1798. உல்கத்தார் அருளே எங்குமாக இருக்கின்றாது என்பதை அறியார். இறையருள் அறிபவர்க்கு அஃது அமுதம் போல் இனிமையைத் தரும் என்பதையும் உலகத்தார் எண்ணித் தெளியார். சத்தியே மிக நுட்பமாய்ப் படைப்புத் தொழில் முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமானது என்பதை நினைத்துப் பார்பதில்லை. அருட்சத்தியானது கண்ணாய் இருந்து எல்லாவற்றையும் ஒரு சேர கண்பதையும் உணரார்.

1799. அறிவின் உருவமான சிவத்திடம் பொருந்துவதற்கு ஏற்ற அறிவைத் தந்து கருவிகள் வழிப் புலன்களைப் பற்றும் ஆசையை உண்டாக்கி ஆன்ம அறிவுடனே திருவருளும் கலந்து கருவிகளுடன் பொருந்தாமல் கூடிப் புலனறிவு பெறும் தன்மையான் அறிவை அளித்து அடியவர் நடுவுள் இருக்கும் அருளை அளிக்கும் தன்மையுடையவர் சிவம் ஆயினர்.

1800. அருட் சத்தியால் பிறந்து வளர்ந்து அருளால் அழிந்து இளைப்பு நீங்கி மறைந்துள்ள அவனை ஒளிமயமான ஆனந்தம் அடையும்படி செய்து பின்பு அவன் தானே எழுந்தருளிக் குருமண்டலத்தை விளங்கச் செய்தான்.

1801. என் குருநாதன் தன் அருட்சத்தியால் இறப்பைக் தவிர்க்கும் ஒளி மண்டலத்தில் இட்டுத் திருவருட் சத்தியைப் பதிப்பித்து என்றும் ஒரேவிதமான அனபையும் அளித்து சிவபோகமாகிய அழுதையும் உண்ணச் செய்து அருளால் என் மனத்தில் எழுந்தருளினான்.

1802. அருள் என்னைப் பாசத்தில் பொருந்த்தி அனுபவிக்கச் செய்தது. அந்தப் பாசத்தினால் பற்றாகக் கொண்டுள்ள என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது, அந்த பாசத்தில் பற்று விட்டதும் அன்புப்பொருளான சிவத்துடன் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளுடன் பிரிவின்றி நிலைபெறச் செய்தது.

1803. பிறவிக்குக் காரணமான இருளைப் போக்கி ஒளியைத் தந்த பெருங்கருணை உடையவன், சிவனை இன்பத்துள் ஆழ்த்தி மறைக்காதபடி சத்தியை பதிப்பித்து மாதவன் உதவுவதால் குறையாத இயல்புடைய கடல் போன்ற கருணையாளன் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவன். இத்தகைய இய்ல்புடை இறைவனை விரும்பினேன். இதனால் அவன் உறவாய் வந்து என் மனத்துள் புகுந்தான்.

1804. இறைவன் தன் அருளால் என் மனத்துள் புகுந்தான். அருள் இல்லாமல் இருளில் அழுந்தியிருப்பவர்க்கு மனம் புகுந்தாலும் அவரால் அறியப்படான். என் மனத்துள் புகுந்து ஆனந்த மயமாக்கிச் சிவமாகச் செய்தான். மனத்துள் புகுந்த காரணத்தால் நானும் ஆனந்த வடிவு பெற்றவன் ஆனேன்.

1805. ஆராயும் அறிவு மயமான ஆன்மாவுடன் அறியப்படாத மாமாயையும் மாயையின் காரியமான அந்தக் காரணங்களையும் ஐம்பூதங்களையும் இந்திரியக் கூட்டங்களையும் அவற்றுடன் பராசத்தி ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனின் திருவருட் செயல் ஆகும்.

1806. பூத காரியம் அனைத்தும் அருளால் நிகழ்வன. அவை மலக் குற்றத்தால் அசைவனவாகவும் அசையாதனவாகவு,ம் அருளில் நிலை பெற்றுள்ளன. இருள் எனவும் ஒளி எனவும் கூறுமாறு எங்கும் உள்ள இறைவன் தன் அருட்சத்தியே திருமேனியாகக் கொண்டு விளங்குவான். திருவருள் அன்றிச் சிவம் வேறாக இல்லை.

1807. சிவம் சத்தி மேலான விந்து நாதம், மேலான சதாசிவம் மகேசுவரன் உருத்திரன் பிறவியில் படும் திருமால், நான்முகன் ஈறாக ஒன்பது வேறுபட்ட வடிவங்களாய்ப் பிரிந்து ஏகனாய் ஒன்றியும் நடிப்பவன் சிவனே ஆவான்.

1808. குருட்டுத் தன்மையுடைய கண் உடையவர்க்குக் கதிரவன் முதலியவை விளங்க மாட்டா. தெளிந்த கண் உடையவர்க்குக் கதிரவன் ஒளியால் எங்கும் ஒளியாய்த் திகழும். அவை போன்று அருட்கண் என்ற பெயரையுடைய அரும் பொருளான சிவம் சத்தி விந்து நாதம் ஆகியவை தோன்றா. நெற்றிச் சக்கரம் திறந்தவர்க்குச் சிவன் தன் நான்கு அருவத் திருமேனிகளையும் உணர்ந்த்த முகத்தின் முன்பு தோன்றியருளுவான்.

1809. சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். படைத்தவற்றைச் சத்தியே காக்கும். காத்தவற்றை அதுவே அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு தந்து அதுவே மறைக்கும். இவற்றுடன் கூடியவனே பரந்துள்ள பொருள்கள் யாவற்றுக்கும் மேலான தலைவனாக உள்ளான்.

1810. மேன்மையுடைய சிவம் சத்தி நாதம் விந்து என்னும் நான்கும் சிவத்துக்குரிய அருள் நிலையாகும். நீங்காத அருவுருவம் சதாசிவம் நிலை பெறுவதற்குரிய மகேசுவரம், அரன், அரி, நான்முகன், ஆகிய நான்கும் நீடிய உருநிலைகளாகும். அழியாத் இந்த ஒன்பதாயும் இவற்றைக் கடந்து நின்று இவை யாவற்றையும் இயக்குவதாயும் உள்ள பரமசிவம் ஒன்றேயாகும்.

1811. ஒப்பில்லாத தன்மையால் கேடற்ற சிவம் தானேயாக நிற்கின்றது. அதுபோல அவற்றின் உயிராக உயிர்களுடன் பொருந்தி அவற்றின் மனத்தே நேயப் பொருளான சிவம் துணை என்று கூறும்படி உடன் நின்று செலுத்தியது விளையாட்டே ஆகும்.

1812. அன்பினால் நிலை பெற்றுள்ள மலமற்ற சிவன் சத்தியுடன் கூடி அதனைத் தொழில்படச் செய்தான். அதனால் நாதம் தோன்றிய்து. விரிந்து நிவிருத்தி முதலாய் ஐந்து கலைகளைக் கூடி அழிவற்ற விந்துவாக விளயும்.

1813. எல்லாமாகப் பரவிப் பரவிந்து வடிவில் நிலைத்துள்ள சத்தியே அனைத்துத் தத்துவங்களிலும் நிறைந்து விளங்குகின்றாள் அவளிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்தமாயையும் விளைகின்றன. இந்த இரண்டு வகையான மாயையிலே தேவரும் விரிவாகக் கூறப்பட்ட பிரணவமும் அதன் வெவ்வேறான மந்திரங்களும் நான்கு வேதங்களும் எண்ணில்லாத அண்ட கோடிகளும் தோன்றும்.

#####

Read 1516 times
Login to post comments