Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:12

நின்மலாவத்தை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

#####

நின்மலாவத்தை!

2304. வானமான வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியுள் நழுவாது அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வர்.

2305. காற்று தீ நீர் நிலம் வானம் என்ற ஐந்தையும் மகேசன் உருத்திரன் திருமால் நான்முகன் உருவச் சதாசிவர் ஆகியவர் முறையே இயக்குபவர் ஆவார். இவர்களை விட்டு இவர்களுக்குமேல் உள்ள அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி சிவம் அன்னும் ஐந்தையும் பொருந்தும் ஆற்றல் உடையவர்க்கு இயமனும் இல்லை. உலகம் பற்றிய எண்ணம் இல்லாமல் திருவடிச் சார்பில் பொருந்தி விளங்குவர்.

2306. ஆன்மாவே சிவகுமாரன் ஆனான் என்று பெரிய மறையானது கூறும் உண்மையை உலக்த்தவர் அறியவில்லை. ஆனால் ஆன்மாவே சிவகுமாரன். நின்மல அவத்தையில் ஆன்மா என்று ஒன்று இல்லை. ஆதலால் இவன் சிவனுக்கு மகன் என்று கூறலாம். அந்நிலையில் இருபத்தைந்து தத்துவங்களும் இல்லை.

2307. ஒளி தோன்றுதல், உலக சிந்தனையற்று அதில் அழுந்துதல் ஐம்பொறிகள் ஓய்ந்து அடங்குதல் என்ற மூன்றும் முறையே நின்மல சாக்கிரம், நின்மலக் கனவு, நின்மல உறக்கத்தில் ஆகும். இவை பொருந்திய சித்துப் பொருளை ஆன்மா தனக்குப் பற்றுக்கோடாக விளங்கும் பேர் உறக்க நிலையில் மிக்க மங்கல வடிவாய் அழியாத பேறு அடையும்.

2308. மாயேயம் ஆகிய எல்லாத் தத்துவங்களும் சீவ ஒளியில் அடங்கத் தத்துவங்களில் உள்ளும் வெளியுமாகிய சீவ ஒளி தானாய் அது நன்மையைத் தரும் துரியநிலை மேற்கொண்டால் சுத்த ஆன்மா ஆகும். அப்போது அது தீமையைத் தரும் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடாமல் தனித்துவிடும். ஆன்மா ஞான வடிவாய்ப் போய் அடைவதற்கு அரிய சிவசத்தியை அடையும்.

2309. தீயிலே காய்ந்த இரும்பு தீயை விட்டு நீங்கினாலும் தீயினது தன்மை இரும்பில் இருக்கும். அதுபோல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிர்கும் நின்மலத் துரியத்தின் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு நீங்காமல் இருக்கும்.

2310. ஞானத்தை அளிப்பதான மறைக்கு ஆதியான நாதம் வெளிப்பட்டு வந்து பிறவற்றைப் புலப்படுத்தும் நனவு நிலையில் இந்த வகையான நாதத்தை கடந்து நாதந்த நிலையில் பொருந்திய போது உண்டான மலமற்ற தன்மையே ஆன்மா பரமாகும் என்பதாம்.

2311. நாத வெளிப்பாடு பெற்றுச் சகலநிலையில் நின்மல துரியாதீதத்தில் பொருந்தினால் அத்தகையவரை விட்டு சிவத்தின் அருட்சத்தி நீங்குவது இல்லை. அந்த நாதத்தையே தியானப் பொருளாகக் கொண்டு மனம் விரும்பும் உலக போகத்தின் வழிப் போகாது நாதாந்தத்தில் போய்ச் சமாதி அடைந்து சிவத்துடன் பொருந்துவதற்கு திருவருட்சத்தியே முதல் காரணம்.

2312. சிவன் உமை,யொருபாகனாக விளங்குவதால் உல்க உயிர்கள் ஆனும் பெண்ணுமாக இருகூறு செய்தான். அர்த்தநாரியாக ஒன்றாக இருக்கும்போது அவனே என்னை உலக கவர்ச்சியினின்று மீட்டான். அகண்ட வடிவம் ஆக்கினான். எங்கும் போகும் ஆற்றலை அளித்தான். மேலும் அவன் என்னை விட்டு நீங்காத அருட் கோலத்தில் தந்தையாய் இருந்தான்.

2313. காற்றாடியின் ஓலையும் கொள்ளிக் கட்டையின் வட்டமும் கடலின் அலையும் அழகு நிறைந்த தயிரின் மத்தும்போல் உயிர் மலத்தால் சுழன்று அங்ஙனம் தத்த, புண்ணிய பாவத்துக்கு ஏற்பப் பொருந்தும் சொர்க்கம் நரகம் கூடிப் பூமியை அடைந்து வருந்தி இறைவன் அருளை அடைந்தால் பின்பு இறப்பு நீங்கும்.

2314. ஆன்மாவில் சிவம் என்னும் தன்மை வெளிப்பட்டால் பழமையான மலமும் அதனால் அமையும் பாச வேறுபாடும் அதனால் ஆன குணமும் மேலான ஆன்மா தன் உண்மை அறியாது அடையும் தடையும் கதிரவன் ஒளியின் முன் சந்திர ஒளீபோன்று ஒளிராமல் அகன்று விடும்.

2315. நின்மலத் துரியத்தில் சிவ ஒளியால் நுட்ப நிலையில் தீயும் நீரும் காற்றும் உண்டு. கதிரவன் திங்கள் கலைகளும் அங்கே அடங்கியிருக்கும். படைப்புத் தொழிலை ஆற்றும் நான்முகனும் காக்கும் திருமாலும் அழிவைச் செய்யும் உருத்திரனும் தொழில் அற்று அங்கே இருப்பர்.

2316. ஐந்து பொறிகள் என்னும் யானைகளை அடக்கி அறிவாகிய ஞானத் தீயை தூண்டி காணும் ஒளியுள் புகுந்து ஊனால் ஆன உடலைச் சோதி வடிவாகக் காண்பவர்க்கு சிவவுலகம் ஏற வழி மிக எளிதாம்/

2317. சந்திர கலையில் இயக்கம் பெறும் பிராணனும் அதுபோல போவதால் உண்டாகும் சிறுபறை ஒலியும், ஒலிக்கின்ற வேத ஆகமங்களால் உண்டாகும் ஒலியும் என இடைகலை நாடியில் சகசிரதளத்தில் நான் கண்டு கொண்டேன்.

2318. முன் பிறவியில் ஜானத்தால் பயிற்சி செய்த நல்வினை காரணமாக இப்போது உண்டாகிய பிறவியில் அந்த அறிவு ஒளிபெற்று விளங்கில் தன் இயலபான அண்ட வடிவை அறிய முடியும். இவ்வாறு அறிவதே தன்னை அறிவதாகும். அங்ஙனமின்றிப் பிற அறிவைப் பெற்றால் பேய் போல சொர்க்க நரகங்களிலே அலைந்து பின்பு பிறவி எடுக்க வேண்டியதாகி விடும்.

2319. நின்மலத் துரியத்தில் ஆன்மா உட்கருவிகளின் குறும்பு இல்லாமல் இருந்தால் சிவானந்தம் ஏற்படும். இந்நிலை கைவரப் பெற்றவர் பிரசாதம் முதலிய சிவயோக நெறியைச் செய்யமாட்டார். இவ்விதம் செயல் அறுதலைப் பெற்றவர் உலகத்துடனும் சேர மாட்டார். இவ்வாறு செயல் இல்லாமல் வாளா இருப்பவர்க்கே சிவனருள் கிட்டும்.

2320. ஆன்மா தான் சிவமாம் தன்னை எய்திச் சமாதியிலிருக்கையில் ஆன்மாவைப் பிணித்துள்ள மலம் நீங்கும். அதன் கட்டுப்பட்ட இயல்பு நீங்கும். பிறப்பைத் தரும் புரியட்டக உடலையும் ஒழித்துச் சிவத்துடன் ஒன்றுபவர்க்கு மேலான நிலத்தில் குற்றமற்ற ஒளியுடன் அழியாதிருக்கும்.

2321. ஆன்மாவை விட்டு நீங்காத சிவத்தின் அருட்சத்திப் பதிவால் நாதம் ஏற்படும். அந்நிலையில் ஆன்மாவை விட்டு நீங்காத இருளும் ஒளியும் விளங்க முறையே அவ்வான்மாவும் நீங்காத கிரியையிலும் ஞானத்திலும் தங்கி மாளாத பெத்த நிலையிலும் முத்தி நிலையிலும் அருட்சத்தியுடன் தோய்ந்து விளங்கும்.

2322. இங்ஙனம் பெத்தத்திலும் முத்தியிலும் தொடர்ந்து உதவும் சத்தியை உயிரானது முறையே மயங்கியும் விளங்கியும் உணரும். அவ்வாறு அந்த உயிர்களுகுச் சத்தியால் அளீக்கப்படும் அறிவே ஆன்மசத்திக்கு நல்ல துணையாகும் அப்போது அந்தச் சக்தியே நிலையில்லாத சீவர்களின் ஒளிக்கு ஒளியைத் தருவதாகும்.

2323. முப்பத்தாறு தத்துவங்கள் அறிவற்றவையாம். அவற்றுடன் பொருந்தி அவையாகவே இருந்த போது நான் எல்லாவற்றையும் அறியும் அறிவு வடிவம் என்பதை அறியாமல் இருந்தேன். சிவத்தை நாடினபோது நீ அறிவின் வடிவம் சடம் அன்று என்பதை நாத சத்தி வழியாக நந்தி எனக்கு அறிவித்தனன். பின்பு நான் வான்மயமாய் என்னையும் தத்துவங்களையும் அறிந்தவன் ஆனேன்.

2324. சிவன் என்னை அவனாகச் செய்த ஞானத்தலைவன். வானவ்ர் கூட்டத்துக்கு முதன்மையானவன். மட்சிமை பொருந்திய சிவந்த ஒளிக் கூட்டமானவன். இத்தகைய சிவனையும் குற்றம் இல்லாத மெய்ஞானத்தின் அருட்சத்தியான நாத சத்தியும் உடல் வடிவு இல்லாதவளுமான சத்தியையும் எனது உடலில் நான் கண்டேன்.

2325. ஒளி என்பதும் இருள் என்பதும் பரை என்பதும் பரையுள் விளங்கும் அருளாகும். ஆன்ம பேதம் சுழன்று அந்த அருளைச் செய்யும் அருட்சத்தியும் தெளிவான அறிவையும் நாத சத்தி உண்டாகிச் சிவானந்தம் உண்டாகும்.

2326. சிவத்தின் அருட்சத்தியில் ஆன்மா தன்வயம் அற்று அழுந்தினால் ஆனந்தம் ஏற்படும். உடம்பைக் கடந்து சாமாதி செய்து உணர்வு மயமாய் உள்ளுணர்வு மய்மாய் உள் உணர்வில் கலந்து அகண்டமாய் விளங்கும் அறிவைப் பெற்றால் உடலின் தலைவனான ஆன்மாவின் சுட்டறிவு முடிந்துவிடும். இது பெருவாக்கியத்தின் பொருளாகும்.

2327. ஆன்ம ஞானம் இல்லாது தாமத குணம் பொருந்தியவர்களுக்கு ஞானோதயம் செய்ய வேண்டாம். முன்பிறவி காரணமாக இயல்பாகவே ஞானம் பெற்றவ்ர்க்கும் அறிவிக்க வேண்டாம். ஞானத்தைக் கல்வியினால் அறிந்தும் அனுபவம் கூடமல் அறியாமையில் உள்ளவர்க்கே தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனுபவம் பெற்றுத் தமது உண்மை வடிவை அறிவார்.

2328. சத்து அசத்து சத சத்து என்னும் மூன்று பொருள்களில் தான் எனப்படும் ஆன்மா மற்றப் பொருளகளுடன் கூடிய அறிவுப் பொருளாகவும் அறிவற்ற பொருளாகவும் பேரறிவுப் பொருளாகவும் விளங்கும் தன்மை உடையது.

2329. ஆன்மா தானாகவே தனது உண்மை வடிவத்தை அறியாது. ஆனால் அறிவு அற்றவனும் அல்லன் தன் அறிவு அறிவும் அறியாமையும் உடையது என்று வடிவத்தை அறிந்த பின்பு அறிவான். ஆனால் இந்த இருநன்மைகளும் அருட்சத்திப் பதிவால் உண்டாக ஆன்மா தன்னையும் அறிந்து தலைவனான சிவத்துடன் பொருந்திப் பேரின்பத்தை அடையும்.

2330. முப்பத்தாறு தத்துவங்களையும் அவை செயல்படும் தன்மையையும் அறிந்து வாழ்பவர்க்கே தத்துவ ஞானம் வாழ்க்கையில் அமைந்து விளங்கும். அவ்வன்னம் தத்துவ ஞானம் பெற்று ஆன்மா சிவமானால் தத்துவ ஞானத்தவர்க்கு சிவானந்தம் உண்டாகும்.

2331. ஆன்மா தனது பரந்த நிலையை உணர்ந்து அதனின்றும் விடுபட்டுச் சிவத்தை நினைத்து சிவமாகும் பேற்றை அடைந்தால் ஆன்மாவிடம் நின்ற மலமும் அதனால் ஆன குணமும் அழியும் மேல்வரும் பிறவி நீங்கும். பின்பு அந்த ஆன்மா நல்ல மூத்தியும் சன்மார்க்க ஞானமும் நன்மையைத் தரும் ஞானத்தின் அடையாளமும் பொருந்தும்.

2332. சிவனின் திருமேனி ஞானம் ஆகும். கிரியையில் அவன் நடு அங்கமாயுள்ள இதயத்தில் உறைபவனாக இருக்கின்றான். உயிரின் இச்சையில் தனது இச்சையைப் பொருந்த்தி அந்த மேலான சிவம் உயிர்களிடம் ஒளியில் பொருந்திப் படைப்பு முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமாய் உள்ளதால் பிரணவ யோகம் செய்தவர் அவன் அறிவுடன் பொருந்தி தம் இச்சை கிரியங்களை விட்டு ஞான முத்திரையைப் பெற்றனர்.

2333. உயிர்க்கு உரிய அறிவு சத்தியப் பொருள் உடையது. உயிருக்கு அபிமானம் அதன் விருப்பம் ஆகும். உயிரின் செயல் உயிருடன் பிணிக்கப்பட்ட மாயையின்.அளவாகும். இவை எல்லாம் பரவிந்துவில் நுண்மையாய் இலங்குவன. இவற்றை உயிருடன் புணர்த்தியவன் யாவற்றையும் புணர்த்தும் சிவமேயாகும். ஆதலால் உயிரின் செயல் அவற்றின் செயலாகாது. உள்ளத்தில் உள்ள சிவத்தின் செயலாகும்.

2334. முன்பு சிவமாம் தன்மை அடைந்து சீவரின் இச்சா ஞானச் செயல்கள் நீங்காத சுத்தாசுத்த மாயை செயல்களால் உண்டாவன. அச்சீவன் பழியற்ற கார்ண காரிய தத்துவங்கள் பாழாக நிலைபேறான சாந்தியாதீதக் கலைகள் விளங்குபவனான சிவம் ஆவான்.

2335. சிவன் நிலையற்ற காரியப் பொருளான மாயா வடிவங்களிலும் நிலையான கரணமான பரவிந்துவிலும் யாவற்றிலும் கலந்து தானாகிப் பொருள் தன்மையால் இல்லதும் உள்ளதும் அப்பொருள்களின் வேறாயும் உள்ளவன். ஆக அப்பெருமானை வாக்குக்கு அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்று விரைவில் சிவஞானத்தால் உணரின் அவன் உயிர்க்கு உயிராய்த் திகழ்பவன் ஆவான்.

2336. உயிர்களிடம் விருப்பத்தை உண்டாக்கி மாயையை இடமாய்ப் பொருந்தும்படி செய்யும் சத்தி ஞானமானபோது உயிரின் விருப்பத்தை அழித்து விளங்கும். உயிர்களுக்கு இறைவனிடம் அன்பு ஏற்படச் செய்து உடனாய் இருத்தலால் உயிரானது உலக் விருப்பங்களை அழித்து மேலான் சிவபதம் பெறும்.

2337. உயிர் விருப்பத்தை வாட்டிச் சிவமாம் பேற்றை பெற்றவர் உயிர்க் குற்றங்களுக்குரிய ஐந்து மலங்களையும் நீக்கியவர் ஆவார். அவ்வாறு சிவத்துடன் ஒன்றுதல் இல்லாதவர் உயிர்குற்றமான ஐந்து மலக் குற்றங்களையும் பொருந்தி இருள் உடையவராய் இருப்பர். இத்தன்மையுடையவர் புவியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் உழல்பவராக உள்ளனர். இப்படிப் பிறந்து உழல்வது சிவசத்தியால் என்பதை யாரும் உணர்வதில்லை.

2338. தூய மாயை துவா மாயைகளைப் பொருந்தி அதனதன் இயல்புக்கு ஏற்பப் போக போக்கியங்களை எய்தினர். பெருமையான ஞான சத்தியை அடைந்து அதன் பேறான ஞானத்தைப் பெற்றனர். பெரிய புவி சத்தியின் கவர்ச்சியில் ஈடுபட்டு அதனால் ஆன நன்மைகளை அடைந்தனர். இவ்வாறு பொருந்துவது சிவத்தின் அருளால் ஆகும்.

2339. திருவடி ஞானத்தால் திருந்திய உயிர்கள் இன்பம் அல்லாத நரகத்தை விட்டனர். அவர் இன்பமயமான சொர்க்கத்தையும் விட்டனர். அவர் தம்மோடு பொருந்தியுள்ள மலக் கூட்டத்தையும் விட்டனர். அவர் சிவமாய்ப் பயன் அற்ற பிறவியையும் விட்டவர் ஆவர்.

2340. நல்ல அறிவு இல்லாதவர் எது பயனற்றது எது பயனுள்ளது என்பனவற்றை அறியமாட்டார். அறிவுடையவர் பயனற்றதையும் பயன் உள்ளதையும் பிரித்து உணர்வார். அவ்வாறு பிரித்து அறிவால் தெளிந்தால் சீவர்களுக்கு உண்டான கேடும் நன்மையும் அவனது அருளால் ஆகும் என்பதை உணர்வர்.

2341. அருள் என்ற சிவசத்தி தீயும் அதனை விட்டு அகலாத வெம்மையும் போல் அவன் பொருளாய்த் தான் ஞானமாய்ப் பொருந்தும். ஆன்மாவில் சிவசத்தி இருளாகவும் ஒளியாகவும் பிரிந்து பின் மும்மலங்களாக விரியும். சிவானந்தத்தை விளைக்கும் சத்தியே சிவம் ஆகும்.

2342. கதிரவன் தோன்ற வளரும் தாமரை முதலிய மலர்கள் பக்குவ வேறுபாட்டுக்கு ஏற்ப அவ்வற்றின் இயல்பு மாறுபட்டு கதிரவனது ஒளிக் கதிர்களால் அம்மலர்கள் தொழிற்பட மலர்ந்தும் மலர்ச்சி புலப்படாதது போல் சத்தியின் அருள் பதவியினால் உண்டாகும் மாறுபாடும் ஆகும்.

2343. கண்டகளில் காணப்படும் உலகை வேற்றுமையாகவும் ஒற்றுமையாகவும் வேற்றுமையும் ஒற்றுமையாகவும் காணும் இயல்பும் இயற்ஐ அறிவும் கல்வி கேள்விகளால் ஆன அறிவும் ஞானமும் நாதமும் நாதத்தை தொடர்ந்து ஆதிநாதம் என்ற நாதாந்த நிலை பெறுதலும் ஆன்மாவுக்கு அருளில் அமைந்த இச்சாசத்தியின் கருணையாகும்.

2344. பொய்யான யானைப் பதுமையை மனிதன் பொருத்தி ஆட்டும் செயலைப் போன்று பரந்த ஐம்பூதங்களைக் கொண்டு ஆடச் செய்து படைப்பு முதலிய தொழில்களால் புவி சொர்க்கம் நரகம் முதலியவற்றுடன் கூடச் செய்து ஞானம் உண்டாக்ச் செய்தல் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனருட்சத்தியால் ஆகும்.

2345. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுத் தன் உண்மையை அறிந்த ஆன்மா எல்லா உயிர்களிடம் போக வல்லவனாயும் எல்லா உயிர்களையும் தன்னிடத்தே காட்டுபவனாயும் அவற்றின் வேறாயும் பரவெளியில் புகுந்து வீட்டை அடைவான். முன்பு இருந்த மய்க்கம் தேறித் தெளிவுற்று அருட்சத்தி பதியின் சிவம் ஆவான்.

2346. தற்பேதத்தால் அடைவதற்குரிய அரிய திருவடியை முப்பிறவியின் தொடர்பாக இப்பிறவியில் அருள்கூட்ட உணர்ந்து அந்த நெறியிலே போஉ மூலாதாரத்திலிருந்து மேல் ஏறும் வாசி என்ற குதிரையில் ஏறி ஆறு ஆதாரங்கள் கடந்து நிராதாரம் போய்ச் சிவனுடன் அடைதல் கூடும்.

2347. சிவபெருமானைச் சார்ந்தவ்ர்கள் சாரணர்கள் சித்தர்கள் சமாதி பொருந்தியவர்கள். உண்மைச் சிவஞானத்தை உணர்ந்தவரும் சார்ந்தவரே. சிவத்திடம் அன்பு பூண்டு சிவானந்தத்தை அனுபவிப்பவர்களும் சார்ந்தவரே. நாதமாகிய அருளில் திகழ்பவரும் சார்ந்தவரே.

2348. ஆன்மாவான தான் என்றும் சிவமாகிய அவன் என்றும் ஆக உண்மைப் பொருள் இரண்டு என்று உரைப்பர் சகலர். தான் என்று அவன் என்று இல்லாமல் ஒன்றான தன்மையை அருட் கேவலத்தில் இருப்பவர் தன்னைச் சிவத்துக்கு வேறான பொருள் என நினைக்க மாட்டார். அவாறு ஆன்மா தற்பேதம் கெட்டுச் சிவமேயாகத் தத்துவம் தூய்மை ஆகும்.

2349. தத்துவ தூய்மையுடைய ஆன்மா தன் உண்மையில் தன் தலைவனான சிவத்தை அறிய அது வளர்ந்து தோன்றும். அங்ஙனம் தன்னிடத்தே அதன் உண்மையை அறிந்து பொருந்தின் தன்னிடத்தே தனது தலைவனையும் அடைதற்கு அரிதாகும்.

2350. சிவனருள் கிட்ட வில்லையே என்று நீ கவலை கொள்ளாதே. ஞான் நெறியில் நின்று திருவருளைப்பெறும் வாய்ப்புக் கிடைத்தபின்பு கதிரவன் திங்கள் கலை என்று நடத்தியவன் என் உள்ளத்தில் மிகப் பெரிய திங்கள் மண்டல ஒளியாக விலங்குவது போல் உன்னிடமும் விளங்கும்.

2351. மண் என்னும் ஒரு பொருள் பானை சட்டி முதலிய பல பண்டங்களாக ஆகின்றது. அதுபோல் இறைவன் ஒருவனே எல்லா உயிர் இனங்களிலும் நிறைந்துள்லான். கண் ஒரு பொருளாக இருந்தாலும் உடல் பல பொருள்களைக் கண்டும் அதனை அவை காணா. அதுபோல் உயிர்களின் தலைவனான இறைவனும் தான் எல்லாவற்றையும் அறிந்தும் தான் அவற்றால் அறியப்படாதவனாயும் இருக்கின்றான்.

2352. இறைவன் இந்த எழு உலகங்களையும் உயிர்க்கு உயிராய் நின்று காத்து வருகின்றான்,. மனம் குவிந்த மெய்ஞ்ஞானியர் இந்த உண்மையை அறிந்து உயிர்க்கு உயிராய் எடுத்துச் சொல்வர். சிவபெருமானைப் பற்றி எண்ணாதவர் அவனை அறியமாட்டாது புலம்புகின்றனர். மன ஒருமைப் பாடு இல்லாதவர் சிவனை அடைய முடியாது.

2353. உயிருக்கு உயிராய் இருக்கும் சிவத்தைத் தன் உண்மை எனும் பரவிந்து மண்டலம் வெளிப்படாதபோது அறியமாட்டார். இவ்வாறு தன் உண்மை அறியாதவர் உடம்புடன் கூடிப் பலப் பிறப்பெடுப்பர். சிவன் வேறு தாம் வேறு என்று நினைக்காமல் சிவத்துடன் பிரிவின்றி இறைவனுடன் நில்லுங்கள். அவ்வாறு கூடிச் சுட்டி அறிதல் இல்லாது அதுவே ஆக இருந்தும் அம்சம் ஆகுவீர்.

2354. சிவானந்தத்தை அடைவது எது. உடம்போ. உயிரோ. இவ்விரண்டில் எது. வான் ரூபினியான சத்தியுடன் பொருந்தி இவை ஒன்றும் அறியாது இருக்கத் தாம் மிகவும் அறிகின்றோம் எனக் கூறும் மக்கள் மேலும் மேலும் உண்டாகின்ற் பிறப்பு இறப்புகளில் பொருந்தி அவற்றை நீக்க அறிய மாட்டார்.

#####

Read 1670 times
Login to post comments