Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:17

ஆறந்தம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!

#####

ஆறந்தம்!

2370. மறையின் வடிவான உபநிடதங்களின் கூற்றும் மேன்மையான சித்தாந்தமான சிவாகம முடிவும் நாத தத்துவத்தின் முடிவும் கூறத்தக்க அட்டாங்க யோக நெறியின் முடிவும் முதலாவதான நிவிருத்தி முதலிய கலைகளின் முடிவும் என்ற இவை ஆறு அந்தங்கள் ஆகும்.

2371. ஆறு அந்தங்களையும் தம்மில் கொண்டு அறிபவர் மேலான சுத்த தத்துவத்தை உணர்ந்தவர் ஆவார். மலம் அற்றவர் தாம் ஆறு அந்தங்களையும் அறிய இயலும். இவ்விதம் கூறப்பெற்ற ஆறு அந்தங்களையும் அறியாதவர்க்கு உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிய முடியாது.

2372. நான் முழுமுதற்பொருள் என்னும் வேதாந்தமும் நான் சிவம் என்னும் சித்தாந்தமும் நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது உண்மை வடிவான ஒளியைக் கண்டு இனிய மேலான பரம் அபரமாக விளங்கும் சிவத்துடன் சேர்வதாய் ஆன்மா தன் மலங்கள் அகற்றி எட்டுப் பேரும் சித்திகள் அடைவது பயனாகும்.

2373. உயிரானது சிவத்துடன் பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும், சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் என்ற புலன்களின் உண்மையை அறிந்திட்டுச் சுத்தமாயை அசுத்த மயைகள் பற்றாவகை நினைத்துத் தலைவனான முழுமுதற் பொருளை அடைவதே சித்தாந்த நெறியாம்.

2374. பொருந்தும் நானமுகன் திருமால் உருத்திரன் ஆகியவருக்கு மறைப்பையும் அருளையும் செய்யும் மகேசன் சதாசிவன் ஆகியோருக்கும் அப்பால் மிக்கு விளங்கும் பரவிந்து பரநாதம் முதலிய நீங்காத முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு நீங்கும்போது ஆன்மா ஒன்றே இருப்பதாகும்.

2375. முப்பத்தாறு தத்துவங்களால் பிணிப்பைத் தெளிந்து அழித்து நாதாந்தத்தைக் கடந்து மேல் உள்ள ஆணவம் என்ற இருளும் நீங்கிடச் சிவத்துடன் ஒன்றிய உணர்வாகப் பொருந்தி நிற்பின் இகழ்வு இல்லாத நாதமுடிவில் அறிவு பொருந்தும்.

2376. ஞானியரால் உணர்த்தப்படும் இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புக்களை உடைய அட்டாங்க யோக நெறியில் சென்று நீங்கி சமாதியில் பொருந்தி அங்குள்ள சிவத்துடன் பொருந்திடச் சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுகளை நீங்கிய போது உபசாந்த நிலை பொருந்தும் என்பதே யோகத்தின் முடிவாகும்.

2377. சித்தாந்தக் கொள்கையில் கூறப்பெறும் கலாந்தத்தை ஆராயின் நீங்குகின்ற நிவிருத்தி முதலிய கலைகள் உள்ளனவாகிய விந்து சத்தியில் ஒடுங்கியிருத்தலும் தெளிவாய் ஆராய்ந்து அதைத் தெளிவு பெறுதலும் ஆகும்.

2378. முன்பு தெளிந்த நிவிருத்தி முதலிய கலைகள் மேதை முதலிய சோடசக் க;லைகள் அன்றி ஆராயும் ஐங்கலைகள் வேறு ஒளியில் அமைந்திருப்பனவற்றை அறியவல்லார்க்கு அருளையுடைய சிவனது மந்திர தந்திரமும் தெளிவு உபதேசமும் ஞானத்துடன் ஐந்து பிரிவில் அடங்கும் என்பதை உணர்க.

2379. ஆகமங்களும் வேதங்களும் பழமையானவை. தந்திரக்கலை அந்நூல் கூறும் சடங்குகளைச் செய்து அவற்றின் பயனை எதிர் நோக்கியிருப்பது உடல் அல்லாத பழைய மந்திரத்தை விளக்க முடியாததாகும். இதுவே சிவத்தை விளக்கும் அறிவும் உபதேசமும் ஆகும்.

2380. சிவஞானக் கலை என்பது பேரொளியில் பிழம்பாய் உள்ள சிவம். எனவே இதுகாறும் மேற்கொண்டு வந்த ஒழுக்கமும் அன்பும் மறையும் சிவகலையின் இறுதியில் தன்னை வேறாகக் காணும் உண்ர்வை விட்ட ஞானியர் சொல்லுக்கும் உள்ளத்துக்கும் எட்டாத சிவம் ஆவார்.

2381. சீவன் சிவமாகும் தன்மையை அடைந்தால் பயிற்சியாலான கலாந்த நாதாந்த யோகாந்தமும் மற்றப் போதாந்த வேதாந்த சித்தாந்தமும் ஞானமாக அமைய அந்தச் சிவமே சீவனாய் விளங்கும்.

2382. ஆறு அந்தங்களும் நேயப் பொருளில் போய் அடங்கி விடும். ஆறு அந்தங்களால் அடையப் பெறும் பொருளான சிவத்தில் காண்பவனான சீவன் அடங்கும். மற்றத் தத்துவங்களை விட்டு நிற்க. தெளிந்து பிரணவ யோகத்தில் உண்மையான சிவானந்தம் ஏற்படும்.

2383. உண்மையான ஆறு அந்தமான கலைகளும் பிரணவத்தின் உருப்புகளான அ, உ, ம, விந்து, நாதம் என்பவனவற்றுள் அடங்கும்.. உண்மையான கலாந்தமான இரண்டுல் சிவ தத்துவம் ஐந்துடன் வித்தியாதத்துவம் ஏழும் முடியும். உண்மையான சிவகலை ஒருமித்து முடிவான நாதாந்தத்தில் உண்மைக் கலையைச் சொன்னால் அஃது முடிவை அடையும்.

2384. ஆன்மாக்களை இயக்கும் சத்தியான குண்டலினியை நாதத்தின் தலைவனான சிவன் ஏற்றுக் கொண்டபின் அநேகமானவரை நடத்தும் எம்பெருமையுடைய அச்சிவனின் திருவடிகளை முடிமேல் சூட்டி அழிவில்லாது வேதாந்த சித்தாந்தங்களின் சிறப்பை நாதாந்தத்தால் உணர்த்தியருளிய சிவ குருநாதனை எண்ணியிருங்கள்.

2385. வணங்குபவரின் வழிபாட்டுக்கு ஏற்பச் ச்வபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறும் உண்மைச் சமயத்துக்கு ஏற்பப் புறம்பாய் இருக்கும் மாயை மகாமாயை என்பனவற்றைச் கடந்ததே வேதாந்தம் சித்தாந்தத்தால் உணர்த்தப்படும் உண்மையாகும்.

2386. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும் வேற்றுமை இல்லாத ஒரு தன்மை உடையவை. ஆன்ம அறிவே முடிவான ஞானம். யோகாந்தம் பொதுவாக ஞேயப் பொருளைக் காட்டும். நாதாந்தம் ஆனந்தமாய் இன்பத் தோற்றம் தருகின்ற ஒளி ஏற்படும். பழமையான முத்திரையானது பிரணவ சமாதியில் பொருந்தியிருக்கத் தக்கது.

2387. வேதாந்த நெறியில் சீவனுக்கு உரிய காரிய உபாதிகள் ஏழின் பிணிப்பு நீங்க நாதாந்தத்தின் பசுத்தன்மை கெடும்படியான தொம்பதம் (உயிர்) பொருந்தும். மேல் உள்ள காரண உபாதிகளான ஏழையும் உடைய உண்மையான பரன் அறிவின் முடிவான தற்பதம் (சிவன்) ஆகும். பின்பு இவ்விரண்டான தன்மைகளும் நீங்கி ஒன்றான அசிபதம் பொருந்தும்.

2388. ஏழு அண்டங்களையும் நீங்கி அப்பால் விளங்கும் பேரொளிக்குள் இருக்கும் ஒளியினை பழமையாய்ப் பொருத்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன் தன் வடிவ நிலையில் தனியாய் விளங்கும் எம் தலைவன் ஆவான்.

2389. சிவத்தை உணர்த்தும் நாதத்தை இலட்சியமாகக் கொண்டு தெய்வத்தால் அருளப்பட்ட செயலையே தம் செயலாய்க் கொண்டு செய்து தோத்திரப் பாடலைக் கொண்டு வழிபட பிரணவத்தின் உறுப்புகளாகிய அகர உகர மகர விந்து நாதங்களைக் கடந்து இவற்றை அடக்கிய சிவம் அமையும்.

2390. ஒருவனாக உள்ள சிவத்தை நினைக்கமாட்டார். உயிரைப்பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் துய்க்கும் இன்ப துன்பங்களுக்கு முன் செய்த வினையே காரணம் என்பதை உணரமாட்டார். அசுத்த மாயை சுத்தமாயை என்னும் காரணம் இவற்றால் கட்டுண்டிருப்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஏகனாய் விளங்கும் சிவபெருமானே இவை யாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை அழியும்படி செய்து அருவமாய் நின்று யாவற்ருக்கும் ஆதாரமாய் உள்ளான்.

2391. சிவபெருமான் அன்பர்களை இடமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான். அவர்கள் பக்குவம் அடையப் பலசத்திகளை அவர்களின் ஆன்மாவிடம் பொருந்துகின்றான். வன்மையுள்ள சிவ சங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட ஆன்ம சங்கற்பம் உருவத்தைப் பற்றாத போது அந்தச் சத்தியின் செயல் நீங்கச் சிவானந்தம் உண்டாகச் செய்வான்.

2392. வேதாந்தத்தில் சொல்லப்படும் தொம்பதம் பசு என்னும் ஆன்மாவைக் குறிக்கும் என்பர். நாதாந்தத்தின் பசுத்தன்மை இயல்பாய் நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவான தத் என்ற் சொல்லாகும். சீவன் சிவன் என்னும் இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாய்ச் சிவசாயுச்சியம் என்ற அசிபதமாகும்.

2393. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டும் சீவன் சிவமாதலைப் பற்றி உரைக்கும். நன்மையற்ற நான்முகன் திருமால் உருத்திரன் மகேசன் என்ற நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவ மூர்த்தியின் ஆணைவழி செய்த படைத்தல் முதலிய தொழில்கள் முடிவுற்று ஒன்றாகுமானால் வியப்புக்குரிய வேதாந்தாம் ஞானம் தரும் சித்தாந்தம் ஆகும்.

2394. சித்தாந்த சைவத்தில் சீவன் முத்தி நிலை கை கூடுவதால் சித்தாந்த சைவ நெறியில் நிலைத்து நிற்பவர் முத்திநிலை –சிவப்பேறு பெற்றவர் ஆவார். சித்தாந்தம் வேதாந்தம் இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தலே. ஆதலால் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும்.

2395. சிவத்தை பரமாகவுள்ள சீவனின் உள்ளாகவும் வெளியாகவும் விளங்கும் குற்றம் அற்ற வேதாந்த நெறியும் சித்தாந்த நெறியும் என்று ஆனால், தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமேயாகும். இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து கடைபிடிப்பவர் சிறந்த தத்துவ உணர்வுடையோர் ஆவர்.

2396. ஆன்மா நிறைந்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவம் உடையவனவாயும் உருவம் அற்றவனவாயும் உள்ளன். இவற்றுள் விந்து நாதம் ஆகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவர். சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப்பொருளாகும். இந்த நிலையை அடைவதே சிவ சாயுச்சியம் ஆகும்.

2397. வேதங்களும் ஆகமங்களும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்ற உண்மையை விளக்கும் நூல்களாகும். வேதம் பொதுவாகவும் ஆகமம் சிறப்பாகவும் உள்ளன. சிவபெருமானால் உணர்த்தப்பட்ட அவற்றின் முடிவுகள் வெவ்வேறானவை எனச் சிலர் மொழிவர். தத்துவத்தால் உணர்ந்த சான்றோர்க்கு இவற்றுள் வேறுபாடின்மை விளங்கும்.

2398. பரமான சீவன் பெறும் சிவானந்தம் எல்லாம் மேலான ஆனந்தமாகும். மேல் மூன்றாயுள்ள பாழாகிய மாயையில் பொருந்தாத ஆன்மாவும் சாம்பவி கேசரி முதலான முத்திரைகளால் அடையும் ஆனந்தமும் சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தமும் ஆகியவற்றைப் பெற்ற உள்ளம் அழகுடையதாகும்.

2399. கலாத்தமாவது மேதை முதலிய பதினாறு கலைகளும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளுமாகும். நாதந்த நிலையில் அகர் உகர மகர விந்து நாதம் என்ற ஐந்தாகும். ஆதலில் அரனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை முடிவு செய்வதனால் பற்றிப் பஞ்சாந்தகன் அவன் என்று அவனே வேதங்கலிலும் ஆகமங்கலிலும் மொழிந்துள்ளான்.

2400. பஞ்ச கலைகளின் முடிவு வேறாகும் என எண்ணாது எல்லாம் ஒரே முடிவை உடையன என்று சித்தாந்த வேதாந்த நெறிகளில் தலைப்பட்டு நின்றால் யோகத்தின் முடிவுகள் சமாதி அமையும். அங்ஙனம் அமைந்தால் வானத்தை இடமாகக் கொண்டு நடிக்கும் கூத்தப் பெருமான் திருவடியை அடைவான்.

2401. சிவனின் திருவடியைப் பொருந்தும் பழமையான சீவன் ஐந்து மலங்களும் கெட்டு அநாதியாய் உள்ள ஆன்மாவின் சுட்டநிலை அழித்துத் தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவ வடிவு கொள்ளும். தன் ஆதி மலமான ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருப்பதைப் போன்று சீவன் சிவமாதல் வேதாந்தம் கூறும் உண்மையாகும்.

2402. உயிரையும் பரனையும் மேன்மையான சிவனையும் மய்க்கம் நீங்கிய நான் அதுவானேன் என்னும் வாக்கியப் பொருளாக உணர்க. அதனால் சுட்டியறியும் தன்மை கெட்டு அறிவாகிப் பேரறிவுடன் அடங்கி நிற்பதே மயக்கம் அற்ற சித்தாந்தம் என்க.

2403. நிலையான் அகண்டப் பொருளான அது நான் என்ற பாவனை அந்தணர் சிறந்ததாகக் கொண்டு ஒழுகும் சிவயோகம். இதனையே தான் சித்தாந்தம் பாவிக்கச் சொன்னது. ஆதலால் சிறந்த வேதத்தால் ஆராயப்பட்ட பொருள் செறிவு உடையது ஆகமநூல் ஆகும் என்பது விளங்கும்.

2404. வேதம் காலத்தால் ஏற்பட்டது. ஆகமம் முழுமைத் தன்மையுடையது, ஆன்மாக்களுக்குத் தலைவனான இறைவன் அருளியவை இரண்டுமே ஆகும். பழமையான வேதம் படிப்படியாக வந்து மிக மேம்பட்ட வேதாந்தமும் சித்தாந்தமும் ஆகும்.

#####

Read 1934 times
Login to post comments