Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 15:52

பரலட்சணம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

பரலட்சணம்!

2452. நின்மல துரியாதீதத்தில் விளங்கும் நந்தி ஆன சிவம் பரந்து நிற்கும் தனமையும் அறிவும் கொண்டது. ஆன்மா துரியாதீதத்தில் தன் அறிவை இழந்து நிற்பன். ஆன்மாவில் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்துடன் ஒன்றாய்ப் பொருந்தினால் சிவம் உயிரில் பதிந்து தனது பரப்பையும் அரிவையும் பொருந்தும்.

2453. சிவன் முதலும் முடிவும் இல்லாத மேலான தலைவர். அவர் பேரொளி வடிவம் உடையவர். எங்கும் நிறைந்தவர். நல்லார்க்குத் தோன்றுவார். அல்லார்க்குத் தோன்றார். செம்மையோடு விளங்குபவர். அந்தச் சிவஞானத்தை அவ்வாறு உணர்வில் பெற்றவர் நல்வினை உடையவர் ஆவர்.

2454. நின்மல துரியத்தில் சிவன் பரையோகத்தில் ஆழ்ந்து ஆணவம் அற்று விளங்கும் நிலையைக் கடந்து அது தூய்மை அடையும் துரியாதீதத்தில் அந்தச் சீவர்களுக்கு வீடுபேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந்தலைவனான சிவத்தைப் பிரணவச் சுனையில் துருவிக் காண வல்லார்க்கு எவ்வகைப் பட்ட குற்றமும் இல்லை.

2455. செந்நிறமான நாதத்தின் முன்பு வெண்மையான இய்லபு கெட்டு ஒடுங்கும். அது போன்று உண்மையான பரசிவத்துடன் சீவன் முனைப்பு அற்று ஒடுங்கும். பொய்யான உலக முகத்து ஓடாத உள்ளத்துடன் நிற்பதுடன் எண்ணுவதையும் கைவிட்ட பாழில் குண்டலினி சத்தியாகிச் சிவமேரு என்றபிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனுடன் ஒன்றாவாள்.

2456. சிவமேருவில் நாத சத்தியுடன் பொருந்திய சீவர்க்குக் கலை முதலிய தத்துவங்கள் ஒடுங்கும். ஒடுங்க எஞ்சியுள்ள சுத்தமாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியுடன் மீண்டும் முனையாதபடி நீங்க துவாத சாந்தத்தில் உண்மைப் பொருளான சிவம் விளங்க அப்பெருமான் அச்சத்தை நீக்கி என்னை அடிமையாய் ஏற்று ஞான நிலை பெறுமாறு செய்தான்.

2457. என் உண்மை நிலை இன்னது என உணர்த்தினான் நந்தியெம்பெருமான். அவன் என் உண்மை வடிவை அறிந்தும் இதுவரை சொல்லாத பரவெளியுடன் அறிவுடன் செல்லுமாறு செய்து பின் பிரணவ ஒளியில் ஆன்ம வடிவை வேறாய் விளங்கத் தன்சத்தியை அளித்துத் தற்பரம் ஆக்கினான்.

2458. நுண்மையான பூத நிலையில் விரிந்தும் பெரும் பூத நிலையில் சுருங்கியும் மண், விண், தீ, நீர், காற்று, எங்கும் நிறைந்த கதிரவன், சந்திரன், பயனாய் அகண்டமான வானத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றான்.

2459. அருவத் திருமேனி கொண்ட சிவத்தின் நிலையில் தானாக விளங்கும் சத்தியும் தற்பரனாய் விளங்கும் அந்தப் பரையே பரனுக்கு உடல் ஆகும். தனு கரண புவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்னத்தால் ஞான சத்தி முதலிய பேதங்களைப் பெருமை மிக்க பரனிடத்து அகலாமல் இருந்து படைப்பு முதலிய ஐந்தொழில்களைச் செய்து நடிப்பாள்.

2460. உடம்புக்கு கீழ் மேல் சூழ் இருந்து மெய் வாய் கண் மூக்கு செவி என்பனவற்றைக் காக்கும் விந்து சத்தி பரையும் பரையாக அருவமான சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கில் ஞானத்தைப் பெறும்படி செய்து ஆணவ மலத்தில் கட்டுண்டவர்களை நட்த்தும்.

2461. பரையினது ஒலி வேறு வேறு இயல்பு உடையதாய் அறு ஆதாரங்களில் பொருந்தி ஆறு வகையான வேறுபாடுகளை அளிப்ப்தாய் வேறு வேறு தத்துவங்களை மாயையால் தொழிற்படுத்துகின்றது. மாயை ஒளியைத் தூண்டுவதாய்ச் சீவனை அசைவித்து மூச்சை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையுமாறு செய்யும். ஆனால் மாயையின் செயலான தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத் தக்க பேராகும்.

2462. தனது பரம் என்ற நிலை ஒப்பில்லாத பேரொளியில் நிலைபெற்று உள்ளது. அதுவே மேலான ஒப்பில்லாத ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும். ஆன்ம அறிவு நீங்கித் தன் ஒளியை அறிந்து சிவப் பேரொளியில் புகுந்து சுட்டி அறிகின்ற அறிவை விட்டு நிற்பதைவிட இங்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை.

2463. பழைய மறைகள் சிவத்துக்கு மேன்மையான வானமே உடல் என்று கூறும் பிறைத் திங்களைச் சூடிய சிவபெருமான் விளங்கும் வானில் துரியாதீத நிலையில் தன்னைக் கண்டு அப் பரநிலையை அடைந்தவனும் தூமாயைக்கே நெருங்கில் அவன் ஆராயின் தூய்மை உடையவன் ஆகமாட்டான்.

2464. வான், காற்ரு, தீ, நீர் பொருந்தும் நிலம் என்பவை இலயமாகும் கோயிலான தற்பரமே அந்தத் துரிய நிலையில் விளங்கும் சிவம் ஆகும். வான், காற்று, தீ நீர் பொருந்தும் நிலம் என்பனவற்றில் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியே அவனது வடிவம் ஆகும்.

2465. பண்னிரண்டாம் நிலையான துவாத சாந்தப் பெருவெளியில் பரவிய கதிர்களையுடைய சிவத்தைப் பொருந்தும் வண்ணம் தானாகவே வந்து பொருந்தும். எனவே இந்த நிலையை நழுவ விடாமல் இருங்கள். உயிர்களுக்குச் சொல்லக் கூடியது இதைவிட வேறு ஒன்றும் இல்லை.

#####

Read 1522 times
Login to post comments