ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
குரு மரபு!
67 .நந்தியின் அருள்பெற்ற குருமார்களை கணக்கிட்டால் தட்சிணாமூர்த்தியிடம் ஞானம்பெற்ற சன்காதி முனிவர்களான சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் ஆகியோருடன் சிவயோக முனிவர், தில்லையில் கூத்தை கண்டுதரிசித்த பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் என்னுடன் சேர்த்து எண்மர் ஆகின்றோம்.
68. சிவபெருமான் திருஅருள் எங்களை குருநாதராக்கியது. அவ்வருளால் மூலதாரச் சக்கரத்தில் உள்ள ருத்திரனை நாடினோம். சிவன் அருள் உலகில் எல்லாவற்றையும் செய்ய வல்லது. சிவன் வழிகாட்டுதலின்படி மூலாதாரத்திலிருந்து தலைமேல் ஏறி நிலைபெற்று இருக்கலானேன்.
69. திருமந்திரத்தை என் மணாக்கர்களாய் பெற்றவர் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கட்டுத்தறிபோன்ற காலங்கி, கஞ்சமலையான் ஆகிய ஏழுபேர் ஆகும்.
70. சனகாதி முனிவர்கள் நால்வரும் ஒரு திசைக்கொருவராக நான்கு திசைக்கும் சென்று தாங்கள் பெற்ற பல்வேறு வகையான அனுபவங்களை உபதேசங்களாக எடுத்துரைத்து நால்வரும் தேவர்களாய் மேன்மையுடன் குருநாதர்கள் ஆனார்கள்.
71. சிவயோக முனிவர், பதஞ்சலி, முனிவர், வியாக்ரபாதர் முனிவர் ஆகிய மூவருக்கும், சனகர், சனந்தர், சதானந்தர், சனத்குமரர் ஆகிய நால்வருக்கும் இறப்பையும் பிறப்பையும் நீங்கும்படி செய்யும் பெருமை பொருந்திய நெறியை உபதேசம் செய்தான். செழுமையான திங்கள், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களை உடைய சிவபெருமான் குறைந்த பெருமையை அளிப்பவன் அல்லன்.
72. பெரிய மழையாக எட்டு திசைகளில் பெய்தாலும் வளர்ச்சியை தரும் கடமைகளைத் தவறாமல் செய்யுங்கள் என்று சிவபெருமான் யோகியர் தலையில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தியிருந்து அன்புகொண்ட சனகாதி முனிவர் நால்வருக்கும் அருளுரை செய்தார் அண்ணாலகிய எம்பெருமான்.
#####