ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
திருமூர்த்திகாளின் வரலாறு!
103. அளவில்லாத இளமைப் பருவமும், எல்லையில்லா அழகும், எல்லை இல்லாத இறுதியும், அளக்கும் காலம் எனும் நான்கையும் உணர்ந்து ஆராய்ந்தால் உயிர்களுக்கு நலம் செய்யும் சிவசங்கர் எந்த வகையிலும் குறைவு இல்லாதவன். அவன்தன் அடியவரால் சொல்லப் பெரும் எல்லையில்லா பெருமை எல்லாம் திருமாலுக்கும் பிரமனுக்கும் வருமோ. வராது.
104. மூலாரத்தில் உறையும் உருத்திரன் ,நீலமணி நிறமுடைய திருமால், சுவாதிட்டானத்தில் உள்ள படைக்கும் பிரமன் ஆகிய மூவரையும் ஆராய்ந்தால் தொடர்பில் மூன்றும் ஒன்றே என நினையாமல் வெவ்வேறானவர் எனக் கருதி முரண்பட்டவர்களாக நிற்பது அவர்களின் அறியாமை.
105. நல்வினை தீவினைகளுகு ஏற்ப உடலை படைத்துக் காத்து அழிக்கும் மூவர் ஆட்சிக்கும் அப்பால் உள்ளான் சிவன்.. மூவர் உருவாவதற்கு கார்ணமான மூலப் பொருள் சிவனே யாகும். அவரே பெருந்தெய்வம். குற்றமுடையவர் அது தெய்வம் இது தெய்வம் என மயங்குவர். மாசற்ற தூய்மை உடையோரே மூலமான பெருமானே மேலான கடவுள் என உணர்வர்.
106. நான்முகன், திருமால், ருத்திரன் என்ற மூவருடன் மகேசுவரன், சதாசிவம் இருவரையும் சேர்த்தால் ஐவராக சிற்றம்பல சபையில் விளங்குவான். ஆறு ஆதாரங்களும் மகேசுவர, சதாசிவம் பொருந்திய இரண்டும் ஒன்றொடு ஒன்றாகி ஜீவர்கள் உலக நோக்கில் உள்ளபோது சகஸ்ரதளம் கவிழ்ந்தும், சிவமுகமாக உள்ள்போது சகஸ்ரதளம் நிமிர்ந்தும் இருக்கும். அப்போது விந்து-ஒளியாக நாதம்-ஒலியாக அந்தச் சபையில் இருப்பவருக்கு சங்கரன் எனப்பெயர்.
107. ஜீவன்கள் அடையும் பயன் தெரிந்து சிந்திக்கும் போது நான்முகனும் திருமாலும் வேறு வேறானவர் இல்லை. முன்று கண்களையுடைய சிவன் வழிநின்று படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்பவர் ஆவர். ஆதலின் அத் தேவர்களால் பயனடையலாம்..
108 அழியாத தன்மை கொண்ட தேவர்கள் நிறைந்த சபையில் வெண்ணிறப் பெருமானை நான் வணங்கவும், அவர் நீ திருமாலுக்கும் முதல் தொழிலாகிய படைப்பைச் செய்யும் பிரமனுக்கும் நிகராவாய். ஆதலால் மண்ணுலகில் திருவடி ஞானத்தை அளிக்கும் போதக ஆசிரியனாய் இருப்பாய் என அருளினன்.
109. தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையணிந்த சிவன் காத்தருளும் உடல் வேறு. அவர் பாடலால் வானவர் என்றும் மனிதர் என்றும் சொல்லப்படுகின்றனர். அதுதவிர வேறு ஒரு சிறப்பும் உயிர் வகையில் இல்லை.. தனித் தெய்வம் என்பது எல்லோராலும் விரும்பும் ஒப்பற்ற சிவனே. உடல் விரும்பி வாழ்வோர் சிவபெருமானை அறிவதே பிறவிப் பேறாகும்.
110. பேரொளியாய் விளங்கும் சிவன் நான்முகன், திருமால், உருத்திரன் என மூவராகவும் மகேசுவரன் சதாசிவன் ஆகியோருடன் சேர்ந்து ஐவராகவும் விளங்குவதை அறியாத மூடர், முறமையாக ருத்திரன், திருமால், நான்முகன் என வேவ்வேறாகக் கருதி அவர்களைப் பற்றி பேசுகின்றார்களே அவர்களின் பேதமை என்னே!
111. உலகில் மேலான சிவமாய் எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாய் விருப்பத்தை உண்டாக்குவதில் திருமாலாய், படைத்தலில் நான்முகனாய் தகுதிக்கு ஏற்ப ஒருவரே பலப் பல தேவராக விளங்காதவாறு மறைவாக உருத்திரனாக விளங்கிச் சம்காரத் தொழிலைச் செய்பவன் அவன்.
112 .பரம் பொருளின் ஒரு கூறான சதாசிவமான நந்தியம் பெருமான் வான் கூற்றில் பொருந்தி எல்லாத் தத்துவங்களிலும் ஊடுருவி வேறாய் உள்ளான். அவனே உடலாகவும் பிராணவடிவுமாய் உள்ள தலைவன் மற்ற கூறு பரந்த வடிவாய் உள்ளது.
#####