ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
இளமை நிலையாமை!
177 .கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியனைக் கண்டும் அறிவில்லாதவர்கள் நிலையாமையை உணரமாட்டார். அது போன்றே இளமையும் வளர்ந்து சில நாளில் மூப்பு அடைந்து இறந்து படும் என்பதைக் கண்டும் வியன் உலக மாந்தர் இளமையின் நிலையாமையை உணரமாட்டார்.
178. பல ஆண்டுகள் அறியாமையிலே கழிந்துவிட்டன.. உயிர்களுக்கு தந்தையான சிவபெருமானை யாரும் தன் உடலில் நிலைபெறுமாறு செய்து அந்த அகண்ட ஒளியில் பேரறிவைப் பெறுபவர் இல்லை. நீண்ட காலம் உலகில் வாழ்ந்தாலும் தூண்டும் விளக்கின் சுடர் போன்ற இறைவனை அறியாதவராயினர்.
179. சிறிது சிறிதாக தேய்ந்து இறுதியில் இற்று ஒழியும் இளமை, முதுமை அடைந்தபின் அரிய செயல்கள் செய்ய முடியாதவை ஆகின்றன. உயிர் உடலில் செழுமையாக இருக்கும்போதே கங்கை பாய்ந்து மறைந்த சடையை உடைய சிவபெருமானை நினைந்து அவனிடம் பொருந்துங்கள்.
180. மெல்லிய இயல்பு கொண்ட பெண் கரும்பை பிழிதெடுக்கும்போது வரும் சாற்றை விரும்புவதுபோல் இளமையில் என்னை விரும்பினர். அப்படி விரும்பப்பட்ட நான் தாமரை அரும்பு போன்ற முலையையும் அழகிய அணியை அணியும் பெண்னுக்கு இளமையில் இனிமையானவகவும் முதுமையில் எட்டிக் காயைப் போலவும் கசப்பானவன் ஆனேன்.
181. பாலன், இளையவன், முதியவன் எனவும் பல பருவங்கள் மாறுபடுவதை உயிர்கள் அறியர். இந்த உலகத்தைக் கடந்து அதற்கு மேல் உள்ள அண்டங்களையும் கடந்து நிற்கும் இறைவன் திருவடியை மென்மேலும் பொருந்த விரும்புகின்றேன் நான்.
182. காலை எழுந்தவர் மாலை உறங்கச் செல்வது ஒரு வாழ்நாள் குறைத்தலைப் போன்றதே. அவ்வாறு வாழ்நாளைக் குறைக்கும் ருத்திரன் மிகுந்த சினம் கொண்டவனாகிலும் பொருந்தி நிற்பவர்க்கு இன்பம் அளிப்பவன்.
183. பருத்த ஊசியைப் போன்ற் ஐம்புலன்களும் ஒரு பையைப்போல் உடலில் இருக்கின்றன். இந்த ஐம்பொறிகள் பறந்துபோய் உண்ணும் காக்கை போன்றவை. சிரசில் பனிப்படல்ம் போல் ஒளிரும் ஒளியில் இந்த ஐம்பெறிகளும் அமைந்தால் ஐந்து பெறிகளைவுடைய உடலின் நினைவு நீங்கி விடும்.
184. குளிர்ந்த சந்திரனும் வெப்பமான சூரியனும் உலக உயிர்களின் உடம்பில் இருந்து அவரின் வாழ்நாளை அளந்து கொண்டிருப்பர் என்பதை யாரும் அறியவில்லை. முப்பது வயதிற்குள் ஆன்மக் கலையை அறிந்து வான்பேறு அடைபவர், அதை அறியாமல் இருப்போர் வினைக்கு உட்பட்டு அழிவர்.
185 பொருந்திய பதினாறு கலைகள் உடன் நிற்பதைக் கண்டும் கீழானவர் அக்கலைகள் வழி சென்று மேல் இருக்கும் சிவனை சேர்வதில்லை. சினம் கொண்ட காலன் உருத்திரன் மீண்டும் கருப்பையில் வைத்தபின் அதிலே மீண்டும் பிறவி அடைவர். அவர்கள் மனமயக்கம் அழியாதவர்கள்.
186. நெறியில் சென்று சந்திரமண்டலத்தில் இருந்து இளமை நீங்காதிருக்கும்போது நந்தியம் பெருமானை பாடல்களினால் துதியுங்கள். அவ்வாறு துதிப்பாடல்கள் செய்து பிராண இயக்கம் நடைபெறுவதை உணராமல் தியானம் செய்து உண்மையை உணர்ந்தேன்.
#####