ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
உயிர் நிலையாமை!
187. தழைக்கும் செம்மையான தளிரையும், குளிர்ச்சி மலரையும் உடைய பூங்கொம்பில் தோன்றுபவை யாவும் சருகாக மாறுவதைக் கண்ட உயிர்கள் அப்போதே இறைவனின் திருவடிகளை துதிக்க மாட்டார். இயமனிடமிருந்து அழைப்பு வந்தபோதும் இறைவனை வணங்க அறியாதவர்கள் அவர்கள்.
188 .பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவரும் தங்களது தொழிலை செய்ய உடலாகிய ஒரு நிலம் விளைந்து கிடந்தது. அவர்கள் ஐவரும் அவ் உடலைப் பாதுகாத்து உயிர்க்கு வினைப் பய்னை அளித்து வருவார்கள். ஐவர்க்கும் தலைவன் சிவபெருனிடமிருந்து வினை நுகர்வு முடிவு வந்தால் இவர்கள் அந்த உடம்பாகிய சடலத்தை விட்டு காலத்தைக் கழிப்பர்.
189. மண்ணால் ஆன உடம்பு ஒன்று அதனுள் உயிர்ப்பை விடுத்தலும் நிறுத்தலும் ஆகிய இரண்டும் உண்டு. அந்த உடம்பை எனது என பற்றி ஆளும் ஜீவனின் கருவிகளும் இருக்கின்றன. அங்கு உள்ள அரசனான உயிர் உடலைவிட்டு நீங்கினால் மாயையான மண்ணிலிருந்து வந்த உடல் மீண்டும் மண்ணாய் ஆகும்.
190. சிரசின் ஈசான் திசையில் விளங்கும் சிவன் வாக்கு வடிவாய் இருந்து நடிப்பவன், வெந்து அழியும் உடலினுள்ளே தீயாய் உள்ள உருத்திரன் அழிகின்ற உடம்பில் உள்ளான் என்பதை அறியாமல் உடலைத் தாங்கும் அரிய உயிரையும் அறியாதவர்கள்.
191. சிவ சூரியன் வான் திசை பத்திலும் சென்று உணர்ந்து உணர்வு மயமாக விளங்கி உடலில் பரவி அறிகின்றவன். உலக உயிர்கள் இதனை அறியவில்லை. உலக உயிர்கள் நான் என்ற அகங்காரம் கெட்ட ஞானியரோடு கலந்திருக்கும் மாயத் தன்மையையும் உணர்வதில்லை..
192. திருத்தி ஒழுங்கு செய்து நெய்யப்பட்ட பட்டாடை ஓர்நாள் கிழிந்துபோகும். என்ற உண்மையை உலக உயிர்கள் அறிவதில்லை.. கருமை நிறம் கொண்ட மயிர் எனச் சொல்லப்படுவது ஒருநாள் நரைமயிர் ஆவதும் உலகில் பிறப்பதும் இறப்பதும் சிறுபொழுதே என்பதை உலக உயிர்களே உணருங்கள்.
193. இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியன இடம் பெற்ற உடலான பானைக்கு வித்து என்கிற அரிசி ஒன்றாகும். உடலில் உள்ள சந்திர சூரிய அக்னி என்ற அடுபிற்கு பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய ஐந்து வாயுக்களும் விற்காகும். உடல் அக்னியில் விந்தைக் கொடுத்து மதிஅமுதத்தை அடையுங்கள் உடலுக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் வீணாகப் போகின்றன.
194. இன்பத்தை தேடிடும் வண்டுகள் பூக்களில் உள்ள மணம் வீசும் தேனை உண்ணும். அதுபோல் உயிரானது அகத்தாமரையில் இன்பத்தை நாடி நினைத்தாலும் சோமசூரியாக்னி என்ற ஒளியிலே விளங்கும் சிவன் வெளியே நிற்கும் மனத்தில் கருத்தில் விளங்குவான்.
195. இப்பிறவியில் இன்பம் தரும் நன்னெறியை நாடி ஒழுக்கத்துடன் இருங்கள். நிலமான ஒளிமண்டலத்தை விரும்பி பெருமானை துதித்து பாடுங்கள். உயிர்களாய் பிறந்த நல் ஊழ்வினையைப் பெற்ற அரியவர்க்கு சொல்லப்போனால் விதி பற்றி விளக்க வேண்டியது ஏதுமில்லை.
196. வேண்டாத பிறர்க்கு தீங்கு செய்யும் வஞ்சனை, பொய் மிக்க தீய சொற்களை பேசி அறத்தின் முறைகெட்டு நிற்காதீர். ஆசையில் பேராசை கொண்டு பிறர் பொருளை விரும்பாதீர். எல்லா வகையிலும் மேம்பட்ட பண்புகளை உடையவராகுங்கள். உண்னும்போது நாடிவந்தோருக்கு ஒர் அகப்பை அளவாவது உணவை கொடுத்து பின் உண்ணுங்கள்.
#####