ஓம்நமசிவய!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
#####
அந்தணர் ஒழுக்கம்!
224. அந்தணர்களாய் இருப்போர் பிறவியை ஒழிக்கும் தொழிலைச் செய்பவர், அக்னி வேள்வி செய்து மூன்று காலங்களிலும் தங்களுக்குரிய தவமான நல்ல காரியங்களைத் தவறாமல் செய்து மாலையில் செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்து முடிப்பர்.
225. வேதங்களின் முடிவான உபநிடதத்தின் உண்மையை விருப்பமுடன் அறிய தத்+ துவம்+ அசி என்ற மூன்று சொற்களின் இருப்பிடமான ஓங்காரத்தில் பொருந்தி நாதம் கடந்து உபநிடதங்களின் உச்சியாய் விளங்கும் பெருமானை இதுவே முடிவு என்று எண்ணாமல் முப்பதங்களையும் கடந்த நிலையில் விளங்குவர்.
226. காயத்திரி எனக் கருத்தபடும் சாவித்திரிக்குரிய மந்திரத்தை செபிக்க அந்தணர் விரும்புவர்., அன்பு எனும் தேரில் ஏறிச் சென்று சிவம் எனும் நேயப் பொருளோடு பொருந்தி புவன போகங்களைச் செய்யவிரும்பாமல் வெற்றியுடன் விளங்குவர்.
227 வீடுபேறு என்ற பெருநெறியான பிராணவத்தை தெளிந்து, குருவின் உபதேசம் பெற்று தத்துவமசி என்று உணர்த்தும் நெறியில் அக வழிபாட்டில் பிரம்ம சொரூபம் ஆனவர் குற்றம் அற்ற அந்தணர் ஆவார்.
228. உண்மையும் தவமும் தனக்கென்ற செயலல்லாமல் சிவனுக்குரிய செயலாக எண்ணியிருந்து இந்திரியங்களைப் புலன்வழி செல்லாமல் தடுத்து வினைகளை ஒத்த உயிர்களாய் ஞானத்தை அடைந்து பந்தங்களை அறுத்து பிரம்மம் ஆவர்.
229. வேதத்தின் முடிவான உபநிடதத்தை கேட்க விரும்பும் அந்தணர் அதைக் கேட்டு தம் ஆசையை விட்டுவிட வில்லை. ஆசையை விட்ட இடமே வேதத்தின் முடிவாகும்,. வேதத்தின் உட்பொருளை உணர்ந்து கேட்டவர் ஆசையை விடுவர்.
230. பூணூலும் குடுமியும் வைத்தால் அந்தணர் ஆகுமா! பூணூல் என்பது பருத்தி பஞ்சே. சிறிய சிகை என்பது சிறிதளவு மயிரே! இடைகலை பிங்கலை சுழுமுனை மூன்றையும் ஒன்றாக்கி உணர்தலே மறையின் முடிவு. அதன் பயனே பிரம்ம நாடி சிறந்து சிரசில் ஞானம விளங்கும் என்பதை பூணூல் தரித்த அந்தணர் அறிவார்.
231. உண்மைப் பொருள் அறிவு இல்லாது, தன்னை உணரும் ஞானமும் இல்லாது, மனத்தில் பொருந்துகின்ற ஆசைகளை விடுத்து, உண்மைகளை உணரும் உணர்வும் இல்லாது, உண்மையான பக்தியும் இல்லாது, மேலான ஒரு பொருளை உண்டு என்ற நினைவும் இல்லாது, பித்தமேறிய மூடர்கள அந்தணர் ஆகமாட்டார்.
232. மேன்மையுடைய பிரணவ நெறியில் அறிவு அறியாமை இன்றி குருவினது உபதேசத்தின்படி ஈசனின் திருவடி அடைந்து பிரணவ நெறியில் நின்று புறக்கிரியைகளை விடும் தூய அந்தணர்க்கு சமாதி நிலை பொருந்தி நிற்கும்.
233. வேதப் பொருள் உணர்ந்து ஓதுபவரே அந்தணர். அவர்களின் வேதாந்தம் உண்மையாய் தூயமை உடையது ஆகும். வேதம் அல்லாத மற்ற குற்றம் உடைய நூல்களைக் கற்றல் என்பது வெறும் ஆரவாரத்திற்கே ஆகும். இவற்றை அறிந்து ஓதுபவரே உண்மையான அந்தணர்.
234 அந்தணர் வேதவடிவான எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்ட. சிவத்தை தொடர்ந்து நினைப்பதனால் அவர் வளமான பூமியை அடைவர். அது எப்போதும் வளமை குன்றாமலிருக்கும். அங்குள்ள மன்னனும் நல்லவனாக இருப்பான். அங்குள்ள அந்தணர்கள் காலை மாலை இரண்டு வேளையிலும் துதிப்பர்.
235. வேதாந்த நெறியில் நின்று ஞானம் அடைவதற்கு விருப்பமில்லால் நிறக ஊழ்விதி இல்லாதவர் நாதாந்த முக்தி அடைவர். அறிவின் முடிவில் ஞானம் உண்டாகி பரத்தை அடைந்தால் நாதாந்த முக்தியுடன் சித்தியும் அடைவர்.
236. பிராணன் உள்சுவாசம், வெளிசுவாசம் ஆகிய மூன்றும் அடங்கிய கலத்து அமைதியாக இருந்து நல்லதைப் பேசிக்கொண்டிருந்தாலும் சிறப்பான முத்தியை பெறுகின்ற செல்வர்கள் எல்லாவற்றையும் கடந்த சிவத்தையே நாடுவர்.
237. சிவனை நினைக்க தாமே விட்டு நீங்குபவன நான் என்ற அகப்பற்றும் எனது என்றப் புறப்பற்றும். அதனால் அகங்காரம் அழிந்து ஒன்றையும் நாடாது. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் புண்ணியத்தை விருப்புகின்றவராய் செய்யப்படும் ஆகுதி அவியை உண்ண பற்றுகள் நீங்கும்.
#####