gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

ஆனந்தம் (9)

புதன்கிழமை, 06 May 2015 05:10

சேருமிடம்சேர்!

Written by

நல்லோருடன் சேர்! நலவாழ்வு பெறுவாய்!

கதிவேறில்லை மதிகெட்ட மனமே. மரணம் வந்தெதிரில் நிற்கும்போது சரணம் வேண்டி என்ன பிரயோசனம், வாவென்று காலன் வந்தழைக்கும்போது ஆவென்று அலறுவாய் கற்றறிந்த மூடனே! நெட்டுருஞ் சூத்திரங்கள், மந்திரங்கள் எதுவும் அப்போது சற்றேனும் உதவாது அன்பான மடமதியே!

செல்வம் ஈட்டும் ஆசை ஒரு தீராத்தாகம், வெல்லுதல் வேண்டும் அந்தப் பொல்லா நோயை. நல்ல முடிவு செய்துகொள் உள்ளத்திலே, சொந்தத்தில் பாடுபட்டு இதுவரை வந்ததை வைத்து அந்த மட்டில் போதுமென்று மகிழ்ந்து அமர்வாய். வியர்த்தமானது பணம் பணமென்று அலைவது, அர்த்தம் என்பது அனர்த்தமே புரிந்துகொள், எள்ளளவும் சுகமில்லை பணம் சேர்ந்த பாவிக்கு, கள்ளனை மட்டுமல்ல, பெற்ற மகனையும் கண்டு அஞ்சுவான், சந்தேகமில்லா உண்மையிது அறிவாய் எந்த ஊரிலும், யாரிடத்துமுள்ள பணத்தின் மாறாக் குணமிது. அகத்தில் உள்ள மனக் கோயிலை காப்பாய்! அன்பனே மிகக் கவனம் வைப்பாய்! 

நம்பாதே நரம்பு வேகத்தை முறுக்கும் வலுவில் ஆனந்தமாயிருக்கும் அதனடியில் உள்ள தீரா மோகம் விவேகமழிக்கும்! அழகும் அந்தமும் வேர்வையும் மலமும் அழகும் தசையுமென்று தீர்த்தபின் உள்ளது என்ன! இந்த உண்மையைத் திரும்ப திரும்ப உணர்ந்து உள்ளத்தில் உறுதி அடைவாய்! கடை ஆயுள் முழுவதும் தீராத் துயரம் நோயும் நொடியும் உடலை வாட்டமுறும்போது மதிகெட்ட மனதை நினைத்து வருந்தி என்ன! மண்ணுலகத்தில் சாவதென்பது உறுதி இதை கண்ணாரக் கண்டும் இந்த பாபங்களை விடாமல் இருப்பது ஏனோ!

சற்றும் ஒழியாது ஆசைமேல் ஆசைதீர அலைந்து, தாமரை இலையின் நீர்த்துளி போல் சாகும்வரை இருந்துகாண்பது என்ன!, சுகமொன்றில்லை! சஞ்சலமன்றிச் சாந்தம் என்பது கொஞ்சமுமில்லா வாழ்க்கை! உடல் பலமுள்ளபோது சம்பாதிக்கும் சக்தியுடையவனை சம்பாத்தியமுள்ளவரை சார்ந்த பந்து, பாத்திய உறவு, வருமானமுள்ள மட்டும் பரிவாரக் கூட்டம், கிழவனாய்ப் நோயில் படுத்தபின் விழுந்தோடிக் கலையும். சிந்திப்பாய் நான் என்னும் பொருளை உண்மை ஞானம் அடைய. நல்லோர் வழியிலே மனத்தை நிறுத்து, செல்வம் இருந்தால் உண்மையாய் தேவைப் படுவோருக்கு உதவுவாய் சுருக்கமாய் சொன்னேன்.

வயதானால் ஏனென்பாரில்லை. இளம் மூச்சுள்ளபோது மனையாளின் பேச்சு, ஆசையுடன் கட்டியணைத்த தேகம் பட்டுப் போச்சு என்றதும் பயங்கொண்டு ஒதுங்குவாள். சுயம்வர மனைவியும். முதுமை வந்ததும் மாயமாகும் காமவிகாரம், வற்றிய நீர்நிலை போல் இருந்தவிடம் காணாது போகும், செல்வம் சுருங்கியதும் அதுகாறும் சூழ்ந்திருந்த சுற்றம் எங்கே! ஞானம் பெற்றால் இந்த மாயமெல்லாம் தீரும்.

விளையாட்டில் தீரும் குழந்தைப்பருவம், அதன் பின்னர் வளையல் கை மகளிரே சிந்தனையில், மனைவியும் மக்களும் கிழவன் விசாரம், கடவுளை நினைப்பனில்லை எந்த சூழலிலும். சொந்தமில்லை! பந்தமில்லை! மனிதர்குலமே, இது என்ன விந்தையே! அனைத்தும் சிந்தித்தாயேல், மனைவி, மக்கள், நீயும் அனைத்துமே மாயை என்று உணர்வாய் குலமேது ஊரேது உயிருக்கு! உறவையும் பணத்தையும் வயதையும் நம்பிட வேண்டாம், ஆங்காரம் போங்காலம் வந்தால், சடக்கென்று எல்லாம் மறையும் மகனே நொடிப்பொழுதில்.

நல்லது நல்லவர் நேசம், அதனால் குறையும் பிடித்த பாசம், பாசம் குறையத் தீரும் மோகம். மோகம் போனால் சித்தத்தில் ஏற்படும் அமைதி அதுவே உயிருடன் வீடு எனப்புரிவாய்.
காலையென்றும், நடுப்பகலென்றும், மாலைவேலையென்றும், நட்சத்திர மீன்கள் நிறைந்திருக்கும் இரவு என்றும், வெய்யில் என்றும் குளிர்பனி என்றும் ஆடியாட சந்தோஷ நடனமாடும் காலதேவி அவள். இடைவேளையின்றி ஆடினாலும் உன் மடைமை ஆசை தணியாத. புத்திகெட்ட மனமே! உன்னை நடத்துவார் இல்லையோ! சொத்தும் மனைவியும் எப்பவும் கவலையோ! வாழ்வின் கடைசி காலத்திலாவது நல்லாரின் சேர்க்கையை பிறவிக் கடலைக் கடக்க நல்லப் படகாக பயன்படுத்து!

நரம்பெல்லாம் நைந்தன, மயிரெல்லாம் நரைத்தது, குரங்கு முகமாச்சு, பல்லும் இழந்தாச்சு, கோலூன்றி நடக்கின்றான் தள்ளாடும் கிழவன், மேலும் மேலும் ஆசை இதற்கென்ன செய்வது! மரத்தடி இருப்பிடம், எடுப்பது பிச்சை, இரவினில் மோவாய்ச் சேருது முழங்கால் இவனையும் ஆட்டுது போராசைப் பேய்! எவனையும் எந்நிலையிலும் விடாதோ இந்நோய்! ஞானத்தை அடையாது விடுதலையில்லை. இமயமுதல் குமரிவரை நிலைத்த அனைத்து சமயங்கள் சொன்னதும் இதுவேயாகும்!

யோகத்திலிருப்பவனும் ஒரு சுகவேகத்திலிருப்பினும் கூட்டத்திலிருப்பினும், தனியிடத்திலிருப்பினும் அகிலம் கடந்த மெய்ப்பொருளில் கலந்து மகிழும் மகிழ்ச்சியே அளவிலா மகிழ்ச்சி. தான் புண்ணியம் தேடமாட்டான் பாவமும் செய்யான் ஈசனில் கரைந்து போச்சு இந்த ஆத்மனின் சித்தம். . இனி உள்ளம் எப்பவும் ஆனந்தம்.

என்ன இது! நான் யார்! நீர் யார்! அன்னையும் யார்! அப்பனார் யார்! யாது எம் ஊர்! ஒன்றுமில்லை இங்கே! தேடும் பொருள் எது! கனவின் கவலைகளைத் துறப்பாய்! தன்னையே தான் வெறுத்தல் விவேகமோ! என்னுயிருக்கும் உயிராவான்! உன்னுயிர்க்கும் அவனே உயிரன்றோ! எல்லாம் ஓர் உயிர்! எதிலும் ஓர் உயிர்! எல்லா உயிரும் அவன் அன்றோ! உன் வெறுப்பில் யாது பொருளுமில்லை! வித்தியாச எண்ணங்களை நீக்கி அனைத்து உயிரும் ஒன்றே என ஒர் உயிரைக் கண்டு கொள்வாய்!.

பகையென்றும் நட்பென்றும் பாராதே, மகனென்றும் உறவென்றும் மயங்காதே, சிவனடி சேரவேண்டி விரும்பின் சீக்கிரமே எவரிடத்தும் அகல்வதும் வேண்டாம், சேர்வதும் வேண்டாம் நட்பென்று, எல்லோரிடமும் ஒன்றுபோல் நிற்பாய். நலம் உனக்கு சொல்வேன், காமம் வேண்டாம், கோபம் வேண்டாம் ஆபத்தினின்று தப்ப அகற்றுவாய் லோபத்தை, ஒழிப்பாய் மோகத்தை,

சுவாசத்தை ஒழுங்காக்கி அமர்ந்து, ஆசையை அடக்கி ஐம்பெரும்பூதங்களான மூர்க்கரை மெய்யெது, மோகமெது என்று உணர்ந்து செய்யும் ஜபமும் தியானமுங் கொண்டு பையப் பையப் பயில்வாய், மனம் அலையாதிருக்க, மெய்பொருளின் சித்தத்தை நிலை நிறுத்தவே! குருவின் பாதகமலத்தில் குறையா பக்தி வைத்தால் துரிதம் அடைவாய் உறுதி

புலனும் மனமும் ஒழுங்குபட்டால் காண்பாய் உன் உள்ளத்தினுள்ளேயே! உலகத்தையாளும் ஒருவனின் ஒளிமயமான ஒளிஉருவை! -சித்தர்கள், யோகிகள் சொல்லியது- குருஸ்ரீ பகோரா

ஓர் ஆன்மாவின் குரல்!


நான் அமரன்! எனக்குச் சாவு கிடையாது!
நாழிகைகள் கழிந்தாலும் நாட்கள் ஒழிந்தாலும் பருவங்கள் மாறினாலும்
ஆண்டுகள் சென்றாலும் எப்போதும் நான் மாறுபடமாட்டேன்!
நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன்!
என்றும் உயிர் வாழ்வேன்!
எப்போதும் சத்யமாவேன்!
எப்போதும் ஆனந்தித்திருப்பேன்.
இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன்!
இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்!
ஏனெனில் என்னுள் நான் நிரம்பிக்கிடக்கின்றேன்!

நான் கடவுளின் அணு!
ஆதலால் சாக மாட்டேன்!
தெய்வம் என்னுள் எப்போதும்
வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி
என்னைத் திறந்து வைத்திருக்கின்றேன்!
அதாவது, நான் என்னுள் வீழும்படி
எப்போதும் திறந்து நிற்கிறேன்!
என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான்!
அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன்!
உடல் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது!.

அதனால் உடலின் ரத்தம் வேகமும்
தூய்மையும் உடையதாய் இருக்கின்றது!
அதனால் என்னுள்ளே வீர்யம்
பொங்கிக் கொண்டிருக்கிறது!
நான் எப்போதும் வீர்யம் உடையேன்! ஜாக்ரதையுடையேன்!
எப்போதும் தொழில் செய்வேன்!
எப்போதும் அன்பு செய்வேன்!
அதனால் சாதல் இல்லாதவன்!
நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடப்பது ஏன்!
நான் தேவன் ஆதலால்!

நான் தீராத இளமை சார்ந்தேன்!
என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும்,
தீராத மாறாத இளமையுடையோன்!
மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர்!
நான் அதனை வேண்டேன்!
ஏனென்றால் வேண்டும் நீண்ட வயது
துன்பமாகிறதேயன்றி வேறில்லை!
நான் சதாகாலமும் துன்பமின்றி
வாழும் வாழ்க்கையை விரும்புகின்றேன்!
அதனை நான் எய்திவிட்டேன்.

தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை
சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்!
ஞானம்பெறும் எண்ணம் குறையும்!
நான் கவலையை ஒழித்தேன்!
ஆதலால் எப்போதும் வாழ்வேன்!
ஆதலால் கவலையை விட்டேன்!
கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது!
கவலையும் பயமும் பகைவர்கள்!
நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்!
ஆதலால் மரணத்தை வென்றேன்.

நான் அமரன். நான் அமரன்.
நான் அமரன். என்றும் நான் அமரன்.
நீங்களும் அமரனாகலாம்! முயற்சி
திருவினையாக்கும்.
இது ஓர் ஆன்மாவின் இனியகுரல் --குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

தெய்வீகம்!

Written by

தெய்வீகம்-தெய்வீகத்தன்மை-தெய்வீகவழிபாடு!

எல்லா உயிர்களும் ஓர் நிலையில் கோபம் கொள்கின்றன. மனிதன் தான் கோபத்தை தன்னைச் சார்ந்தவர்கள், உறவுகள், பணியாளர்கள், நணபர்கள் என்றில்லாமல் கடவுளிடமும் சிலசமயங்களில் வெளிப்படுத்துகின்றனர். எவ்வளவு பிரார்த்தனை செலுத்திருக்கின்றேன். காலை மாலை வணங்குகின்றேன். கோபுரங்கண்ட இடத்தில் கும்பிடுகின்றேன். விடுமுறை என்றால் ஊர் ஊராக கோவில் கோவிலாக சுற்றுகிறேன். இருந்தும் எனக்கு என் ஒரு சிறு செயல்கூட செய்யவில்லை. என் நினைவுகள் பலிக்க வில்லை. அவை நிறைவேற ஒரு துணையும் புரியவில்லை. என மனம் வெதும்பி ஓர் அசாதாரன கோபம் கொண்டு பிதற்றுகின்றோம். புலம்புகின்றோம். 

இறை வணக்கத்தில் நாம் கடைபிடிக்கும் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து அது வேண்டும் இது வேண்டும் என நினைக்கின்றோமோ தவிர மனம் ஒன்றி வணங்கியிருக்கின்றோமா என நினைத்துப்பாருங்கள். உணர்வுகளால் தாக்கப்பட்டு வருத்தத்தினால் புலம்பி கோரிக்கைகள் வைப்பதற்குத்தான் அதிகமான நேரங்கள் செல்விடப் பட்டிருக்குமோயன்றி முழுமனதுடன் வணங்கியது என்பதை கணக்கெடுத்தால் மிகக் குறைவாக இருக்கும். எனெனில் மனதின் அசுர சக்தியான வேதாளம் நம் பிரச்சனைகளை முன்வைத்து நம்மனதைக் குழப்பி இறை வணக்கத்தை தடை செய்யும் நோக்குடன் நம்பிரச்சனைகளை சொல்ல வைக்கின்றது. அதனால் நம் கவனம் இறைவணக்கத்தில் முழுமை யடைவதில்லை. நம் துயரங்களை துன்பங்களை மனவேதாளத்தின் தூண்டுதலால் புலம்பிவிட்டு வருகின்றோம். இது எவ்வாறு இறைவணக்கம் ஆகும். எந்த தெய்வீகத்தன்மையையும் நாம் அருகில் நாட வாய்ப்பில்லை.

நாம் ஜெபம், தியானம், துதிப்பது மற்றும் மனம் ஒன்றி பூஜை செய்து வணங்குவது மூலமாகவே நம் பிரச்சனைகள் அவரிடம் சென்று விடுகின்றன. அவ்வாறிருக்க நீங்கள் ஏதும் சொல்ல வேண்டியது இல்லை. எல்லாம் தெரிந்தவர், புரிந்தவர் அவர். உங்களுக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நன்கு உணர்ந்திருப்பவர். மனமொன்றி வழிபடுதல் மட்டும் போதும். நம்மை படைத்தவர் நமக்கு உணவளிப்பவர் நமக்கு என்ன எப்போது தரவேண்டும் என அவருக்குத் தெரியும்.

நம் எண்ணங்கள் தெய்வீகத் தன்மை உடையனவா புனிதத் தன்மை உடையனவா அன்பானதா என அறிந்து அவர் நம்மை ஆசீர்வதிப்பதும் அல்லது சபிப்பதும் இல்லை. படைத்தவர் என்ற முறையில் நம்முள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவித்து அதன் மூலம் நீங்கள் பயன் பெற வைப்பவர். அதற்கான ஆசீர்வாதங்கள் அவரிடம் எப்போதும் உண்டு. உங்களிடம் தர்ம சிந்தனையுடன் கூடிய உணர்வுகள் மேலோங்கும்படி செய்வார். அன்புடன் கூடிய தர்ம சிந்தனைகள் இல்லாதவரை நீங்கள் ஓர் சதைப் பிண்டமாகவே கருதப்படுவீர்கள். 

ஆகவே இந்த நிமிடத்திலிருந்தாவது இறையை வணங்கும்போது நல்ல தர்ம சிந்தனையுடன் வழிபாடு நடத்துங்கள். உங்கள் உள்ளே உள்ள தீய வேதாள சக்திகள் பிரிக்கப்பட்டு நீங்கள் புதிய சிந்தனைகளுடன் தெய்வீக வளையத்துள் அடியெடுத்து வைக்கமுடியும். இறைவா இதைச்செய். நான் உனக்கு இதைத் தருகிறேன் என்பது பேரமாகும். இறைவன் ஒன்றும் ஊக்கத்தொகைப் பெறும் இடைத் தரகர் இல்லை. இறையை நீங்கள் வணங்கி வழிபடுவது உங்கள் மன நிம்மதிக்கு… தானங்கள் செய்வது செய்த பாபங்களின் தீவினைகளை குறைக்க… நீங்கள் தெய்வ வழிபாடு செய்யுமுன்னே அவர் உம்மை அறிந்துள்ளார். ஏனெனில் நீ அவரின் அணு. இந்த அடிப்படைப் புரியாமல் இறைமீது கோபதாபங்கள் கொள்ளல் தவறாகும்.

கோபங்களும் கோரிக்கைகளும் கொண்ட வேண்டுதல்களினாலேயே உன்னால் அவரின் அருகில் செல்ல முடியாமல் இருக்கின்றாய் என்பதை உணர்ந்து அன்பான உள்ளார்ந்த மனத்துடன் வழிபாடு செய்தால் நீயும் அந்த தெய்வீகத்தன்மையை உன்னுள்ளே பெறுவாய்-குருஸ்ரீ பகோரா.

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

தனிமை நாடல்!

Written by

தனிமை நாடுதல்! Alone Lonely in the breeze!

அமைதியை நாடும் ஆத்மாக்கள் தனிமையை விரும்பும். தனி இடத்தில் போய் அமர்ந்து விட்டால் மட்டும் மனம் அமைதியுறுமா! மனம் பக்குவப்பட்டுவிடுமா! நடந்த நிகழ்வில் தனிமையான இடத்தில் மனநிறைவைக் காணும் மனோபாவம் வேண்டும். தனிமையும் அமைதியையும் நாடும் மனம் தன்னுடன் தன் மனோபாவம் இருப்பதில் மகிழ்வு கொள்ளும். இது ஓர் அழகிய உணர்வாகும்.

ஜீவஆத்மாக்களில் பல இதைப் புரிந்து கொள்வதில்லை. தன் மனோபாவம் தன்னிடம் இருப்பதை பலர் விரும்புவதில்லை. அதிலிருந்து தப்பிவிட நினைக்கின்றனர். அதற்காக முயற்சிக்கின்றனர். தன்னிடம் தன் செயல்களில் திருப்தி இருப்பதில்லை. நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அப்படி நாம் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு வாய் நிறைய பலவற்றை அனுபவித்த அனுபவசாலிபோல் எடுத்துச் சொல்கின்றோம். நம்மை நாம் சந்திக்கப் பயந்து எந்தெந்த வகையில் திசை திருப்பிவிட முடியுமோ அவ்வாறு செயலாற்றுகின்றோம். இதனால் நாம் நம் மனதைச் சந்திக்க வேண்டிய நேரமோ, காலமோ, தனிமையோ கிடைப்பதில்லை. கிடைக்காதவாறு சூழ்நிலைகளை ஏற்படுத்திச் சுய சந்தோஷம் காண்கின்றோம்.

ஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது கூட நம் எண்ணங்களை சிந்தனைகளைச் சந்திக்க முடியாமல் ஓர் பேப்பரில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோம். அதே போன்று நம்மை நாமே சந்திப்பதைத் தவிர்க்க தொலைக்காட்சி,, ஒலிச்சித்திரங்கள், பத்திரிகைகள், பூங்கா, உல்லாசப் பயணங்கள் ஆகியன ஆத்மாக்களுக்கு பெரிதும் உதவி புரிகின்றன. சில ஆத்மாக்கள் போதை, லாஹிரி வாஸ்துக்களை உபயோகித்து தன்னைத் தானே சந்திப்பதை தவிர்த்துக் கொள்கின்றன.

நம்மை நாமே சந்திக்க தவிர்க்க உதவும் இந்த சாதனங்கள் இல்லை எனில் நமக்குள் ஓர் சலிப்பு, ஓர் உணர்வு, ஏதோ இல்லா குறை உணர்வு தோன்றுவதை அறியமுடிந்தால் அப்போது தன்னைத்தானே சந்தித்துக் கொள்வதை தவிற்கவே அவற்றை நாடுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தனிமையை விரும்புகிற ஆத்மா உலக நிகழ்வுகளைக் கண்டு பயந்து ஒதுங்குவது என்றாகாது. சோகத்தன்மை கொண்டதுமல்ல. எதிலும் திருப்தி காண்பவன். எப்போதும் அமைதியானவன். ஆழ்ந்த சிந்தனை கொண்டவன். தன்னைத்தானே சந்தித்துக் கொள்வதில் எவ்வித பயமற்றவன். அதைத் தவிற்க அந்த ஆத்மா எந்தவித பொழுது போக்கு மற்றும் சுற்றிலும் ஆத்மாக்களின் இறைச்சல் நிகழ்வுகள் வேண்டி நாடுவதில்லை. 

எந்த ஆத்மா தன்னைத்தானே சந்திக்க பயம் கொள்கின்றதோ அந்த ஆத்மாவிற்குத்தான் பலவித பொழுது போக்குகளும் இரைச்சலும் வேண்டியதாயிருக்கும். அப்போதுதான் மனம் அவற்றில் ஈடுபட்டு தன் எண்ணவெழுச்சிகளை சந்திப்பதிலிருந்து தப்பிக்க முடியும். அவைகளை ஒத்திவைக்க முடியும். 

நீங்கள் தனிமையை விரும்புவரா! அப்படி இருப்பவராயிருந்தால்தான் தன் மன எண்ண ஓட்டங்களிடையே பயணித்து உங்களைப் புரிந்து வெற்றி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் - குருஸ்ரீ பகோரா.

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

சொல்மயக்கம்!

Written by

சொல்மயக்கம்! தன்னடக்கத்தின் எதிரி!

வாழ்வில் நாம் கேட்கும் சில சொற்கள் பல தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. சில சொற்களைக் கேட்டவுடன் அது நம்முள் ஒர் உணர்ச்சியை தோற்றுவிக்கும் தன்மையுடையது. அந்தச் சொற்கள் என்ன! அதன் தன்மை என்ன என்பதை அறியாமலே, அதைப் பார்க்காமலே அதைப் பற்றி ஓர் எண்ணம் நம்முள் பதிவாகியிருப்பதால் அந்த எண்ணம் ஒர் உணர்வை வெளிப்படுத்தும். அது அவரை அந்தப் பகுதியில் ஓர் குழப்பத்தை தோற்றுவிக்கும் வலிமையுடையது. இது ஒருவித மயக்கம். அறிவின் மயக்கம்.

ஒலி முதலிய ஒரு நிரந்தர நிலைப்பாட்டினால் ஒரு பொருளைப் பற்றி கற்பித்துக் கொள்ளும் அறிவானது விகல்பம் எனப்படும். மனத்தில் தோன்றுவது கல்பம். மொழியால் அதைக் கூறுவது ஸங்கல்பம். அதைக் கற்பனையாக மாற்றிக் கூறுதல் விகல்பம், இல்லாத ஒரு பொருளை இருப்பதுபோல் கற்பித்தலாகும். பாம்பு இல்லாமல் பாம்பு என்ற வார்த்தை ஒரு கூட்டத்தை கலைக்கும், சொல்லைக்கேட்டு அது இல்லாத இடத்தில் கற்பித்துக் கொள்வது. பொருள் இல்லாதிருக்கும்போது வெறும் சொல்லைப்பற்றி நிகழ்வது- சொல் மயக்கமாகும் (விகல்பம்). ஒரு சொல்லைக் கேட்டவுடன் அதன் கருத்தை ஆராயக் காத்திராமல் உடனே ஒரு முடிவுக்கு வருகிறோம். இது சித்தத்தின் வலிமையின்மைக்கு அறிகுறி. மனம் அடக்கம் குறைந்த நிலை. சில செய்திகள் காதில் விழுந்ததும் மனம் ஏன் கோபம் அல்லது வருத்தம் போன்ற நிலைகளை அடைகிறது. சொற்கள் காதில் விழுந்ததும் தொடர்ந்து விருத்தி என்கிற தொடர் எண்ணங்கள்கள் வராது தடுத்து பழகுதல் நன்மை பயக்கும். அவனே தன்னடக்கம் உடையவன்.

அந்த நிலைக்கு வர நீங்கள் உங்கள் உள்ளே உங்களை தயாராக இருக்கும்படி செய்யுங்கள். உங்கள் சித்தம் எப்போதும் வலிமையுடையதாக இருக்கட்டும்.-குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆன்மீக அளவு!

Written by

ஆன்மீக அளவு!


ஆன்மீக அளவு என்பது தூய்மை- நன்மை செய்யும் மனித நேயம்- சுயநலமற்ற தன்மை- சரணாகதி- பணிவு- பிரார்த்தனை ஆகியவை நிறைந்தது.

ஒருவன் குளித்துவிட்டு கோவிலுக்குப் போனால் மட்டும் போதாது. உடலுடன் மனமும் தூய்மையுடன் இருக்கவேண்டும். அப்படி இருப்பவனின் பிரார்த்தனையே இறைவன் நிறைவேற்றுவார். அகவழிபாட்டின் அடையாளமே புறவழிபாடு. எனவே அகவழிபாடும் மனத்தூய்மையும்தான் உண்மையான வழிபாடு. இவையின்றி செய்யப்படும் புறவழிபாட்டில் பயன் ஏதுமில்லை. இதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டு ஒரு தலத்திற்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்தால் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் என்று கீழான நிலையில் இருந்து சிந்திப்பவர்கள் கலியில் நிறைய இருக்கின்றனர். 

தூய்மையின்று கோவிலுக்குச் செல்லும் ஒருவன் தன்னிடம் இருக்கும் பாவங்களுடன் மேலும் ஒன்றைச் சேர்த்துக் கொள்கின்றான். அவன் நிலை கோவிலுக்குச் செல்லும்போது இருந்ததைவிட மேலும் மோசமானவனாகவே வீடு திரும்புவான்.

கோவில்கள் மகான்களும் புனித பொருட்களாலும் நிரம்பியிருப்பவை.. கோவில்களில் புனித தன்மையில்லை என்றால் தெய்வீகம் தோன்றாது. மறைந்துவிடும்.. திருத்தலங்களில் செய்யும் பாவங்களைப் போக்கிக்கொள்வது கடினமாகும்.

எல்லா மதவழிபாடுகளிலும் தூய்மை, பிறருக்கு நன்மை செய்தல் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. ஏழை, எளியவர், பலவீனமானவர், நோயாளிகள், துன்ப துயரத்தில் உழல்வோர் ஆகியோரிடம் அன்பு கொள்பவரே உண்மையாக கடவுளை வழிபடுபவன். வெறும் விக்ரகத்தில் மட்டும் தெய்வத்தை நினைப்பவன் வழிபாடு எத்தனை காலம் ஆனாலும் ஆரம்ப நிலையாகும்.

கோவிலில் தன்னை தினமும் காண்பவனைவிட மனித நேயத்துடன் மற்ற ஆத்மாவிற்கு அன்பு செய்யும் அன்பனிடம் இறைவன் மகிழ்வு கொள்கின்றார். தந்தையாகிய கடவுளுக்குச் சேவை செய்ய நினைப்பவர்கள் முதலில் அவரின் குழந்தைகளாகிய உலக உயிர்களுக்குச் சேவை செய்யவும். இறைவனின் தொண்டர்களுக்கு சேவை செய்வபவனே இறைவனின் மிகச் சிறந்த தொண்டன்.

நல்லன நினையுங்கள் நல்லது செய்யுங்கள். பலனாக இதயம் தூய்மையடையும். அப்போது உங்கள் உள்ளே இருக்கும் இறைவனை நீங்கள் உணர்வீர். அழுக்கடைந்த கண்ணாடியில் நம் உருவத்தை சரியாகப் பார்க்க முடியாததுபோல் அஞ்ஞானமும் தீய குணங்களும் உள்ள மனத்தினால் இறைவனின் ஒளியைக் காணமுடியாது.-குருஸ்ரீ பகோரா

நமது நண்மையை மட்டுமே பார்க்கும் சுயநலம் பாவங்களில் முதன்மையானது. சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீகவாதி. அவனே கடவுளுக்கருகில் இருப்பான். சுயநலத்துடன் ஒருவன் எத்தனைக் கோவில்களுக்குச் சென்று புண்ணிய தலங்களில் நீராடி இறைவனைத் தரிசித்திருந்தாலும் அவனால் தெய்வத்தை நெருங்க முடியாது. விலகியே இருப்பான்.

இறைவணக்கம் வெறும் சம்பிரதாயமல்ல. அது ஒர் சரணாகதி தத்துவம். அவ்வழியே சென்றால்தான் நாம் விரும்பிய இடத்தை எளிதில் அடைய முடியும். கட்டாயப்படுத்தலின் மூலம் எதையும் கைப்பற்ற முடியாது. பணிவு என்ற கதவுதான் வாழ்வின் விந்தைகளைக் திறந்து காட்டும். பணிவுடன் பிரார்த்தனையில் நம்பிக்கை வைத்தால் அன்பின் மையப் பகுதியை அடைந்துவிடலாம். இந்த எண்ணம் உங்கள் உள்மனதிலிருந்து வெளிப்பட வேண்டும். அன்பினுக்கு எல்லை கிடையாது. நீங்கள் நேசிக்க நேசிக்க அதன்மீது பிரேமை உங்களுக்குள் விரிவாக்கம் காணும். நீங்கள் அதில் ஆழ்ந்து போனால் அங்கே இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பது புலனாகும். அதை ருசித்து அனுபவிக்கப் பழகுங்கள். அப்போதுதான் உங்களிடமிருக்கும் அன்பான பண்பிற்கும் உங்கள் இதயத்திற்கும் உள்ள இடைவெளி குறைந்து இதயம் அன்பினால் நிறையும். அன்பும் இதயமும் ஒன்றிவிடவேண்டும்.

வெறுப்பு, பொறாமை, விரோத மனப்பான்மையுடன் வாழும் ஒருவர் மொழியின் வார்த்தைகள் தெரிந்திருப்பதால் படிக்கலாம். ஆனால் ஆழமான உள்ளார்த்தமான அன்பை புரிந்துகொள்ள முடியாது.

ஒரு மரத்திலிருந்து தழைகளைப் பறித்துவரச் சொன்னார் ஞானி தன் சீடனிடம். அவன் கைகொள்ளும் அளவு இலைகளைப் பறித்து வந்தான். எனக்குத் தெரிந்ததும் நான் உனக்குப் போதித்ததும் உன் கையில் இருக்கின்றது. எனக்குத் தெரியாததும் உனக்குப் போதிக்காததும் நீ தெரிந்து கொள்ளவேண்டியதும் மீதி இலைகள் மரத்தில் இருப்பது போல் உலகில் உள்ளது. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. இதுவே ஆன்மீகத்தின் அளவின் தன்மை. -குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆனந்த அன்பு!

Written by

ஆனந்த அன்பு!

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறானவை. ஜீவாத்மா எல்லா உயிர்களிலும் இருப்பது. பரமாத்மா ஜீவாத்மா உள்பட எங்கும் எதிலும் நிறைந்திருப்பது. இந்த ஆத்மாக்கள் இருக்கும் இடம் ஆத்ம உலகமாகும். அது அன்பும் அமைதியும் நிறைந்தது.

ஜீவன்கள் அங்கிருந்து அவ்வப்போது தங்களின் ஆசையின் விருப்பத்திற்கு ஏற்ப இங்கு வந்து வாழ்க்கையின் இன்ப துன்பங்களை நுகர்ந்து அனுபவிக்க வருகின்றன. உலக வாழ்க்கை ஆரம்பத்தில் உல்லாசமாக இருந்தாலும் அதில் வெற்றி, தோல்வி, சலிப்பு, துக்கம், சந்தோஷம், இன்பம், துன்பம், சாந்தம், கோபம், அழுகை, சிரிப்பு எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்கின்றது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்காக ஆசைகளை மேற்கொண்டே ஆத்மாக்கள் இப்புவியில் வந்துழன்று மீண்டும் சென்று மீண்டும் பிறப்பெடுத்து சுழன்று சுழன்று மாறும் ஜனன மரண விளையாட்டை நடத்த அந்த ஆன்மாக்களின் கர்ம விணைகளுக் கேற்ப விதி என்ற பெயரில் இறைவன் நிகழ்வுகளைப் புரிகின்றான்.

இந்த பூவுலகில் அன்பும் அமைதியும் மேற்கொண்டு வாழ்வியலின் நுணுக்கங்களுடன் இயந்து வாழ்பவர்கள் வாழ்வில் வெற்றி கண்டு ஆரோக்கியமான ஆனந்த வாழ்வுதனை வாழ்ந்திடமுடியும். ஏனோ கலியுகத்தில் அதற்கான சிந்தனைகள் குறைந்து கொண்டு வருகின்றது. ஜீவாத்மாக்கள் அன்பைப் புறந்தள்ளி அமைதியிழந்து காணப்படுகின்றனர். பொதுவாக நல்ல எண்ணங்களை கொண்டிருக்கும் ஜீவர்கள் எதையும் சாதிக்க முடியும். நல்ல எண்ணங்கள் ஆரோக்கியமான சிந்தனையை தோற்றுவித்து அதை வளப்படுத்தி அந்த ஆத்மா மேநிலையடைய தூண்டுகோலாக இருந்து வெற்றியைப் பரிசளிக்கும். மகிழ்ச்சி என்பது உணர்வில் பூக்கும் பூவாகும். அந்தப் பூ மலர்ந்தால் உடல் உள்ளே நறுமணம் சூழ ஆத்மா மலர்ந்து தன் நிலை உணரும். உண்ணும் உணவிலும் பொருட்கள் வாங்குவதில் இன்னபிற அடைவதிலும் ஏற்படும் மகிழ்வு உண்மையான மகிழ்வு இல்லை. நீர், காற்று, வாயுவினால் ஒன்றான மனம் விரிந்து மகிழ்வு என்ற உனர்வு ஊள்ளேயிருந்து பூத்து அதை உணர்தலே உண்மையான ஆனந்த மகிழ்வாகும்.

சொர்க்கமும் நரகமும் மனித மனத்திலேதான். ஒருவருக்கு சொர்க்கமாகும் வாழ்க்கை மற்றொருவருக்கு நரகமாகத் தோன்றும். அது அந்த ஆத்மாவின் எண்ணப்படி நடக்கின்றது. தெய்வீகமான ஓர் முகத்தை வரைய விரும்பினான் ஓவியன். பல நாட்கள் தேடி ஒரு சிறுவனைக் கண்டான். ஓவியம்வரையப் பட்டு முழுமையடைந்தது. பார்ப்பதற்கு தெய்வாம்சம் மிகப்பெருந்தியிருந்தது அந்த ஒவியம். நிரைய பிரதிகள் எடுக்கப்பட்டு விற்றது.

பலவருடங்கள் கழிந்தது. ஒவியனுக்கு தற்சமயம் சாத்தானைப் போல் ஓர் ஓவியம் வரைய ஆசை பிறந்தது. பல இடங்களில் தேடி கடைசியாக ஒர் சிறையில் இளைஞன் ஒருவனைக் கண்டான். அவனே தன் எண்ணத்திற்கு பொருத்தமானவன் என்று அவன் ஒவியத்தை வரைந்தான். முடிவில் அந்தபடம் ஒவியன் எதிர்பார்த்ததுபோல சிறப்பாக அமைந்தது. அந்தபடத்தைப் பார்த்ததும் மாடலாக நின்றவன் கதறி அழுதான். விசாரித்தபோது நீங்கள் முதலில் தெய்வாம்சம் என வரைந்ததும் என் உருவத்தைதான். காலம் என்னை சீரழித்துவிட்டது எனப் புலம்பினான்.

மனிதனுக்குள் கடவுள், சாத்தான் இரண்டும் உள்ளது என்பது புரியும். அதிலிருந்து சொர்க்கம் அல்லது நரகத்தை கண்டுகொள்வது மனிதனுக்கு சிறப்பு. என்னவாக வேண்டும் என்பதை மனமே நீ தேர்ந்தெடு.
ஒவ்வொரு இடத்திலும் தவாறகப் புரிந்து கொள்ளுதல், தான் சொல்வது செய்வதுதான் சரி என்ற மனப்பான்மை, பொறாமை போன்றவைகளே கர்வம், கோபம் ஏற்படக் காரணமாயிருந்து மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கின்றது.

நாம் ஆத்மா எப்போதும் ஒளிர்ந்து வெளிச்சம் தோன்ற தாயாராய் இருக்கின்றது அதை நாம் சரியான பாதையில் இயக்கி ஆத்மாவின் வாழ்க்கையை சிறப்பானதாக்க முயற்சிக்கவேண்டும். இயற்கை எல்லாம் தரவல்லவை. பெறவேண்டியதை பெறவேண்டிய தருணத்தில் பெற்று வளம் பெறுவீர்.

அன்பு இறையின் ஆணை. அது ஓர் வரப்பிரசாதம். எல்லா உயிரையும் மனித நேயத்துடன் நேசி. ஜாதி, மதம், இனம், தேசம், மொழி எல்லாம் கடந்து அன்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்டால் வாழ்வு வளம் சேர்க்கும். எல்லோரும் போற்றுவர். இதை உணர்த்தும் விதமாக இராமாவதாரத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த குகனுடனும், குரங்கு இனத்தில் பிறந்த சுக்ரீவனுடனும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனுடனும் சகோதர உணர்வுடன் பழகியுள்ளார் இராமர். சபரிக்கும், அகலிகைக்கும் தாய்ஸ்தானத்தில் வைத்து போற்றினார். பறவை இனத்தில் பிறந்த ஜடாயுவை தன் பெரியப்பா ஸ்தானத்தில் வைத்து போற்றினான். தூய அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்கும்.

பண்பு நிறைந்த ஓர் வீட்டின் கதவு தட்டப்பட்டது. அந்த ஒலி கேட்டதும் வீட்டின் உள்ளே இருந்த கணவன் மனைவி இருவரும் கதவைதிறக்க வந்தனர். திறக்குமுன் வந்திருக்கும் தாங்கள் யார் எனக் கேட்டனர். வந்தவர்கள் நாங்கள் செல்வம், வெற்றி, அன்பு. உங்கள் பண்பு கண்டு வந்துள்ளோம். எங்களில் யார் ஒருவர் உங்கள் வீட்டிற்குள் வர அனுமதி கொடுப்பீர்கள் எனக் கேட்டனர். கணவன் மனைவி இருவரும் சிறிது யோசனை செய்து, உங்களில் யார் அன்போ, அவர் வரலாம் என்றனர். அன்பு நுழைய, தொடர்ந்து வெற்றி, செல்வம் இரண்டும் அன்பு இன்றி நாங்களில்லை எனக்கூறி உள்ளே வந்தது. எனவே எல்லோரிடமும் எல்லாவற்றின் மேலும் அன்பு கொள்ளுங்கள். எல்லா இன்பங்களும் அடைவீர்.

உலகில் அன்பைப் போன்ற சிறந்த ஆயுதம் ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொண்டு அன்பை எல்லா ஜீவர்களிடமும் உயிர்களிடமும் பகிர்ந்து பாசம் காட்டி நேசத்துடன் வாழ வாழ்த்துகிறேன் - குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆப்தன்!

Written by


ஆப்தன் யார்!

யோகிகள் நேரில் புரிந்து சொன்ன உண்மைகளை ஆப்த வாக்யம் என்கிறோம். நாம் அறிவைப் பெறுவதற்காக தீவிரமாக முயற்சிக்கின்றோம். நீண்ட காலம் காரணம் தேடி கண்டுபிடித்து வாதம் செய்து அதிக சிரமங்களுக்குப்பிறகு உண்மைகளைக் கண்டு அறிவைப் பெறுக்குகின்றோம். பரிசுத்த ஆன்மாவான யோகிகள் இந்த முறைகளைக் கடந்து, கடந்தவைகளையும், நிகழ்வதையும், வரும் எதிர்காலத்தையும் பற்றிய அறிவுகள் அவர் மனதில் உள்ளத்தில் தோன்றி ஒளிருவதை அவர் தன் உரையில் வெளியிடுகிறார். ஆன்மீக சாஸ்திரங்களை இப்படித்தான் ஞானிகள் தோற்றுவித்துள்ளனர்.

அவர்களின் சொற்கள் நமக்குப் பிரமாணம். நம்முடைய அனுபவம் கடந்த கால அறிவுடன் ஒத்து இருக்குமாயின் அந்த அனுபவத்தை பிரமாணம் எனலாம். விவேக புத்திக்கும் அனுபவத்திற்கும் முரண்பாடில்லாமல் இருந்தால் அந்த அறிவை ஏற்கலாம். ஓர் உண்மையை வெளியிடுவதற்கு ஒரு மனிதனின் குணம் முக்கியமில்லை. தீய ஒழுக்கமுடையவன் வான சாஸ்திரத்தில் ஓர் உண்மையைக் கண்டு பிடிக்கலாம். ஆனால் ஆன்மீகத்துறையில் தூய மனமற்ற ஒருவன் எப்போதும் ஆன்மீக உண்மைகளை காண வல்லமைதனைப் பெறமாட்டான். ஆப்தன் என்று சொல்வதற்கு முன்னால் அவன் தன்னலமற்றவனாகவும் தூயவனாகவும் இருக்கின்றான என அறியவேண்டும். மேலும் அவன் புலன்களை வென்று அவற்றைக் கடந்தவனாக இருத்தல் வேண்டும். புதிய கண்டுபிடிப்பின் உண்மை பழைய உண்மைக்கு மாறுபடாததாகவும் அதை ஒட்டியதாகவும் இருக்க வேண்டும். அந்த உண்மை எல்லோர் அனுபவத்திற்கும் வரும் வாய்ப்பாக இருக்கவேண்டும். ஒருவனுக்கும் வந்த ஞானக்காட்சி மற்றவர்களுக்கும் வரக்கூடியதே. தான் பெற்ற ஞானத்தை விலைக்கு விற்பவன் ஆப்தன் அல்லது ஞானி ஆகமாட்டான். ஞானம் வழங்குபவன் தூய்மையுடனும், தன்னலமற்றும், செல்வத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படதாவனாக இருக்க வேண்டும். உலகுக்கு பயன்படக்கூடியதாகவும் புலன்களுக்கு எட்ட முடியாததாயும் உள்ள ஞானத்தை எல்லோருக்கும் வழங்குபவனாக இருத்தல் வேண்டும். அவனின் கொள்கை எல்லோராலும் பின்பற்றக்கூடியதாக இருக்கவேண்டும். மற்ற உண்மைகளுக்கு முரண்படாதவையாக இருக்க வேண்டும்.

ஆப்தர்- என்றால் அடைந்தவர் என பொருள். ஆப்த வாக்கியம் அகத்திலிருந்து வருவது. ஆவேசம் கொண்டவன் ஆப்தனாக மாட்டான். ஆவேசம் புறத்தேயிருந்து அகத்தே வருவதாகும்.-குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆதர்ச குடும்பம்!

Written by

ஆதர்ச குடும்பம்!

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாடுடன் இருந்தாலும் அந்த நால்வரிடையே எத்தனை வித்தியாசங்கள். இந்த வித்தியாசங்களைப் போக்கி நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்டவர்களின் ஒரு குடும்பத்தின் ஒற்றுமை நிலைப்பற்றி தெரிந்து புரிந்து கொள்ளுங்கள். யார் எப்படி இருந்தாலும் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவது சிறப்பு.

சிவன் பிறைசூடிய பித்தன். அணியும் ஆடை புலியின் தோல். மண்டை ஓட்டையும் விஷபாம்பையும் ஆபரணங்களாக அணிபவர். பிசாசுகளும் பூத கணங்களும் அவருக்கு தோழமை. உடம்பில் சாம்பலை பூசிக்கொள்பவர். உடுக்கை அடித்து தாண்டவமாடுபவர். வாகனமாக காளையை வைத்துள்ளார்.

சிவனின் மனைவி உமா, பார்வதி முத்து, வைர நகைகளை அணிந்து அழகு பார்ப்பவள். பட்டு ஆடைகளை விரும்புவாள். சிங்கத்தை தன் வாகனமாகக் கொண்டவள்.

விநாயகரோ, விக்னங்களை நீக்குபவர். ரித்தி-சித்தி கொடுக்கக்கூடியவர். லட்டு, மேதக உணவுப் பிரியர். சுண்டெலியை வாகனமாகக் கொண்டவர்.

முருகன் அசுரர்களை வதம் செய்யப் பிறந்தார். தேவர்களுக்கு சேனாபதி. வாகனம் மயில்.

சிவனின் வாகனமான காளைக்கு பார்வதியின் வாகனம் சிம்மம் பகை. சிவனின் ஆபரணம் பாம்பிற்கு முருகனின் மயில் பரம விரோதம். விநாயகரின் வாகனம் சுண்டெலி சிவனின் பாம்பிற்கு விருப்பமான இரை. கணவன் சித்தம் போக்கு சிவன் போக்கு என்றிருப்பவன். மனைவி அழகு பார்ப்பவள். பிள்ளை ஒருவன் ஞானி, உணவுப் பிரியன். ஒருவன் போர் பிரியன். இத்தனை மாறுபாடுகளுடன் இருந்தாலும் அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள். சிங்கம் நந்தியை தாக்குவதில்லை. பாம்பு மயிலைப் பார்த்து அஞ்சுவதில்லை. எலியும் பாம்பைக்கண்டு ஒளிவதில்லை. சிவன் பார்வதியின் ஆடை அலங்காரங்களைக் கண்டு கொள்வதில்லை. பார்வதியும் சிவன் செயல்களைக் கண்டு கொள்வதில்லை. பிள்ளைகளையும் கண்டிப்பதில்லை. எல்லோரும் முழுச் சுதந்திரமாய் ஆனந்தமாய் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

பிள்ளை அழைப்பதற்கு முன் நிற்பவன்-தந்தை, பெற்றோர் கேட்பதற்கு முன் தருபவன்-பிள்ளை, கணவன் நினைத்தவுடன் செய்து முடிப்பவள் மனைவி, ஒருவர் என்ன நினைப்பார்கள், எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து மற்றவர் செயல் பட்டால் அது அன்பு நேசம். ஆனந்த மயம். இதுவே ஆதர்ச குடுப்பம்--.

இந்த ஆதர்ச குடும்பம்போல் உங்கள் குடும்பத்தையும் மாற்றுங்கள். குடும்பத்தில் என்றும் எப்போதும் குழப்பம் வராது. சண்டை சச்சரவுகள் இருக்காது. அமைதியும் அன்பும் நிறம்பும். ஆனந்த வாழ்க்கையாக மாறும். முயற்சி செய்து பாருங்கள்.—அன்புடன். குருஸ்ரீ பகோரா

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911545
All
20911545
Your IP: 162.158.78.238
2021-04-13 09:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg