gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை!.வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்!

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 12 April 2019 17:03

ஸ்தூல, சூக்ம உறுப்புகள் !

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#

ஸ்தூல, சூக்ம உறுப்புகள் !

பஞ்ச பூத உலகில் எந்தப் பொருளாயிருந்தாலும் அதன் காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி மனிதனின் உடல் உறுப்புக்களுக்கும் காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளபடியாலும் அதை உபயோகப்படுத்தும் முறையையும் கொண்டு அதன் வாழ்நாள் அப்படியே இருக்கலாம். அல்லது குறையலாம். எப்படியிருப்பினும் ஒரு பொதுவான வாழ்நாள் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளதை அறிவோம். -குருஸ்ரீபகோரா


இருதயம்:

இரத்தத்தை உள்வாங்கி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இதய பம்ப். இரத்தத்தை விரைவாக அனுப்பும் திறன் கொண்டது. நாற்பது வயதிற்குமேல் இது பலவீனமடைந்து விடுவதால் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் பாயும் வேகமும் குறையும்.

எலும்புகள்:

எலும்புகள் இருபத்தைந்து வயதுவரை வலுவாக இருக்கும். முப்பத்தைந்தாவது வயதிலிருந்து பலவீனமடையும்.

கல்லீரல்:

உடலின் உள் உறுப்புகளிலேயே சிறந்த இயக்கத்தைக் கொண்டுள்ள உறுப்பு கல்லீரல்தான். மனிதனின் எழுபது வயதுவரை இது நன்றாக இயங்கும். மது போன்றவை இல்லாமலிருந்தால் மிகவும் நன்றாகச் செயல்படும் திறன் கொண்டது.

கண்:

மனிதனின் நாற்பது வயது முதல் இதன் இயக்கம் குறைய ஆரம்பிக்கும். அதனால் தான் மனிதன் நாற்பது வய்திற்குமேல் பொருள்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது கண்களைச் சுறுக்கிக் கொண்டு பார்க்க வேண்டி வரும்.

குடல்:

ஒரு மனிதனின் குடல் சுமார் ஐபத்தைந்து வயது வரை நன்றாகச் செயல்படும். அதன் பிறகு ஜீரணத்திற்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிப்பதால் வயிற்றில் பிரச்சனைகள் தோன்றும்.

குரல்:

தொண்டையில் உள்ள மெல்லிய திசுக்களுக்கு லாரினக்ஸ் எனப் பெயர். இது நீடிக்கும்வரைதான் குரலில் இனிமை இருக்கும். அறுபத்தைதிற்கு மேல் முற்றிலும் குரல் மாறிவிடும்.

சிறுநீரகம்:

சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்ஸ் என்ற திசுக்கள் அங்கு வரும் அசுத்த ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையைச் செய்கின்றன. ஐம்பது வயது வரை வலுவுடன் இயங்கி அதற்குமேல் வலுவிழக்கும்.

சிறுநீர்ப்பை:

உணவில் சேர்க்கும் நீர் பிரித்து இங்கு வரும்போது முப்பத்தைந்து வயது வரை இரு கப் அளவிற்கு தேக்கி வைக்கும் ஆற்றல் உண்டு. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சம் சுறுங்கி வயது அறுபத்தைந்தில் ஒரு கப் அளவிற்குத்தான் நீரை தேக்கி வைக்க முடியும்.

தசைகள்:
மனிதனின் முப்பது வயதுவரை ஆரோக்கியமாக இருக்கும் இது அதன்பிறகு 0.5 முதல் 2.0 சதவீதம்வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். இதை வலுவுடன் இருக்கச் செய்ய தினசரி உடற்பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு அவசியம்.

தலைமுடி:

சராசரியாக முப்பது வயதிலிருந்து ஒரு மனிதனுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். பின்னர். அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை முடியாக மாறிக் கொண்டு வரும்.


தோல்:

மனித உடலின் தோல் இருபத்தைந்து வயதிலிருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.

நுறையீரல்:

மனிதனின் இருபது வயது வரை நன்றாக இயங்கும். அதன்பின் இடுப்பு எழும்பு பகுதி நெருக்கிக்கொள்ள நுரையீரல் சக்தி குறைந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடும் அளவு குறையும். இதனால் தான் சிலருக்கு நாற்பது வயதிற்குமேல் கொஞ்ச தூரம் நடந்தால் கூட மூச்சு வாங்கும். படியேறினால் மூச்சு வாங்கும்.

பற்கள்;

வாயில் எச்சில் உற்றும் வரைதான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களை விரட்டியடிக்கும். நாற்பது வய்தில் எச்சில் ஊறுவது குறைய ஆரம்பிக்கும்.

மார்பகம்:

சுமார் முப்பத்தைந்து வயது வரை ஆரோக்கியமாக இருக்கும் மார்பகம் அதற்குமேல் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகளில் கொழுப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். பருத்த மார்பகங்கள் சுருங்க ஆரம்பிக்கும்.

மூளை:

சராசரியாக ஒரு மனித மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி. மனிதனின் எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகளே காரணம். இதன் செயல்பாடுகள் இருபது வயது வரை சுறு சுறுப்பாக இருக்கும். இருபது வயதிலிருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். நாற்பது வயதில் இருந்து ஒரு நாளைக்கு பத்தாயிரம் வீதம் குறைந்து கொண்டு வரும். இந்தச் சரிவினால்தான் மனிதனுக்கு நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்கும்.

#####

வெள்ளிக்கிழமை, 12 April 2019 12:42

சிவ திருவிளையாடல்கள்!

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

சிவ திருவிளையாடல்கள்!

சிவன் என்றால் மங்கலமானவன், இன்பம் தருபவன் என்று பொருள். மங்கலமான சிவன் மக்களுக்கு மங்கலங்கள் தருபவனாகவும் பேரின்ப பேறான வீடு பேற்றை, முக்தியை அளிப்பவனாகவும் விளங்குகின்றான். ஒரு நகரத்தை அடைய பல வழிகள் இருப்பது போல பேரின்பமாகிய வீடு பேற்றை அடைவதற்கு பல வழிகள் உள்ளன. மக்கள் மனம் விரும்பும் தெய்வத்தை வணங்கி முற்றிலும் சரண் அடைந்து வீடுபேற்றை அடைய முயலுகின்றனர். ஆனால் தன்னை வணங்கும் அடியவர்களுடன் நெருங்கி விளையாட விருப்புவன் சிவன். அடியவர்களை நெருங்கி விளையாடி சோதித்து காட்சி கொடுத்து பேரின்ப பேறாகிய வீடுபேற்றை அளித்தவன் சிசபெருமான். அப்படி அடியவர்களுடன் சிவன் நெருங்கிய திருவிளயாடல்களை திருவிளையாடல் புராணம் என்பர். அவை அறுபத்திநான்கு எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த திருவிளையாடல்கள் மனித சமுதாயத்தின்மேல் இறைவனுக்கிருந்த அன்பை புலப்படுத்துவனவாய் இருக்கின்றது. உலகத்து உயிர்களுக்குள் நிறைந்துள்ள ஆன்மாக்கள் இறைவனிடம் இருந்து வந்தவை என்பதும் அவை பிறவிப்பயனால் வினைகளைப் பெற்று பின் வினை நீங்கி இறைவனைச் சென்று சேரும் என்பதை இந்த திருவிளையாடல்கள் உணர்த்துகின்றன. குருஸ்ரீ பகோரா

அந்த அறுபத்தி நான்கு திரு விளையாடல்கள் :.

1.குருவை இழந்த இந்திரன் சாபத்தை போக்கியது.

2.வெள்ளை யானைக்கு துர்வாச முனிவரால் வந்த சாபம் தீர்த்தது.

3.கடம்ப வனத்தை அழித்து நாடாக்கியது.

4.மலயத்துவச பாண்டியனுக்கு உமாதேவி மகளாய் பிறந்தது.

5.சிவபெருமான் சோமசுந்தரராய் வந்து தடாதகைப் பிராட்டியரை மணம் செய்து கொண்டது.

6.பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களுக்கு வெள்ளி அம்பலத்துள் திருக்கூத்து தரிசனம் காட்டி அருளியது.

7.தடாதகை பிராட்டியார் பொருட்டு குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிட்டது.

8.குண்டோதரன் பொருட்டு வைகையையும் அன்னக் குழியையும் வருவித்தது.

9.தடாதகை பிராட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சனமாலை நீராட ஏழு கடல்களை அழைத்தது.

10.காஞ்சனமாலை நீராட சொர்க்கத்திலிருந்த மலையத்துவச பாண்டியரை வரவழைத்தது.

11.தடாதகை பிராட்டியரிடம் உக்கிரகுமாரன் மகனாகப் பிறந்தது.

12.உக்கிரகுமாரனுக்கு வேல், வளை, செண்டளித்தது.

13.கடல் வற்ற வேல் எறிந்தது

14.உக்கிரகுமருடன் போர் புரிந்த இந்திரன் முடிமேல் வேல் எறிந்தது.

15.மேருமலையிலிருந்த செல்வத்தை எடுக்க முற்பட்டபோது அதற்கு ஒப்புக்கொள்ளாத மேருவை செண்டால் எறிந்தது.

16.வேத்ததிற்கு பொருளறியாத ரிஷிகளுக்கு பொருள் கூரி விளக்கியது.

17.பாண்டிய மன்னனின் மகனின் கீரிடத்திற்காக இரத்தினம் விற்றது.

18.மதுரை மீது வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது.

19.வருணன் விட்ட மழையைத் தடுத்து நான் மாடல் கூடலாக்கியது.

20.எல்லாம் வல்ல சித்தராய் எழுந்தருளி சித்துக்கள் செய்தது.

21.பாண்டியனுக்காக கல்யானையை கரும்பு திண்ண வைத்தது.

22.மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையைக் கொன்றது.

23.கௌரியம்மையின் பொருட்டு விருத்த குமாரர் பாலரானது.

24.பாண்டியன் பொருட்டு கால் மாறி ஆடியது,

25.கொலைக்கஞ்சிய வேடன் பொருட்டு, பழிக்கஞ்சி, வேண்டிய பாண்டியனுக்காக வணிகன் திருமணத்தில் சாட்சி காட்டியது.

26.தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனது மிகப்பெரிய பாவத்தைப் போக்கியது.

27.வாட்படை ஆசிரியரின் மனைவியை வலிமையின் காறணமாக காதலித்த மாணவனின் கையை வெட்டியது.

28.சமணர் மதுரை மீது ஏவிய நாகத்தை அழித்தது.

29.சமணர் அனுப்பிய பசுவை நந்தி தேவரை அனுப்பிக் கொன்றது.

30.சவுந்தர சாமாந்தன் எனும் சேனாதிபதியின் பொருட்டு போர்ச் சேவகராய் மெய்க் காட்டியது,

31.பாண்டியனுக்கு உலவாக்கிழி அருவியது.

32.மதுரை வீதியில் இருந்த ரிஷி பத்தினிகள் பொருட்டு வளையல் விற்றது.

33.இயக்கியர்களுக்கு அட்டமாசித்தி வழங்கியது.

34.சோழன் பொருட்டு மீன்முத்திரை பொறித்திருந்த கதவை திறக்கச் செய்து தரிசனம் தந்தது. அவன் சென்றபின் மீண்டும் இரிஷப முத்திரைப் பொறித்தது.

35.பாண்டியன் படைகளுக்கு தண்ணீர் பந்தல் வைத்தது.

36.பொன்னையாள் பொருட்டு இரசவாதஞ் செய்தது.

37.மதுரை மீது படை எடுத்து வந்த சோழனை மடுவில் ஆழ்த்தியது.

38.வேளாளராகிய அடியவர் பொருட்டு உலவா நெற்கோட்டை அருளியது.

39.தாயத்தார் வழ்க்கு தொடுக்க மருங்கிய வணிகன் மருகன் பொருட்டு மாமனாக வந்து வழக்கு தீர்த்தருளியது.

40.வருண தேவர் பொருட்டு சிவலோகம் காட்டியது.

41.இசைவல்ல பாணபத்திரர் பகைவனை விறகு விற்பவராய் வந்து இசைபாடி ஓடச் செய்தது.

42.பாணபத்திரர் பொருட்டு சேரமானபெருமான் நாயண்மார்க்கு திருமுகம் தந்தருளியது.

43.பாணபத்திரர் மழையால் வருந்தாது பாட பலகையிட்டது.

44.ஈழதேசத்துப் பாண்வல்லாளை பாணபத்திரர் மனைவி வெல்ல அருள் செய்தது.

45.தாயிழந்த பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்தது.

46.பன்றிக் குட்டிகளைப் பாண்டியர்க்கு மந்திரியர் ஆக்கியது.

47.கரிக்குருவிக்கு உபதேசம் செய்தது.

48.நாரைக்கு முக்தி கொடுத்தது.

49.பிரளயத்தால் அழிந்த மதுரை மாநகரின் எல்லையை அரவங்கணத்தால்-(பாம்பு) வளைத்து அறிவித்தது.

50.பாண்டியன் பொருட்டு படைத்துணை சென்று சுந்தரப் பேரம் செய்தது.

51.பாண்டியன் பொருட்டு தருமிக்கு ஐயந்தீர்க்கும் கவிதந்து கிழியறுத்துக் கொடுப்பித்தது.

52.தருமிக்கு தந்த கவிக்கு குற்றம் கூரிய நக்கீரரைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்திப் பின் கரை ஏற்றியது.

53.நக்கீரருக்கு இலக்கணம் உரைத்தது.

54.நக்கீரர் முதலிய புலவர் பொருட்டு சங்கப் பலகை தந்தது.

55.சங்கத்தார் கலகத்தை மூங்கைப்பிள்ளையாய் தீர்த்தது.

56.பாண்டியருடன் கோபித்து நீங்கிய இடைக்காடர் பிணக்கு தீர்த்தது.

57.பரதவர் குலத்துப் பெண் பொருட்டு வலை வீசீ அவளை மணந்தது.

58.வாதாவூரடிகளுக்கு-மாணிக்கவாசகருக்கு உபதேசித்தது.

59.அரசனுக்கஞ்சிய வாதாவூராருக்காக நரிகளை பரிகளாக்கியது.

60.பாண்டியனுக்களித்த பரிசுகளை நரிகளாக்கியது.

61.வாதாவூரடிகள் பொருட்டு வைகையில் வெள்ளம் வரச்செய்து அதை அடைக்க ஏவிய வந்திக்காக கூலி ஆளாய்ச் சென்று பிட்டுக்கு மண் சுமந்தது.

62.திருஞான சம்பந்த சுவாமிகளால் கூன்பாண்டியன் கரத்தையும் கூனையும் நீக்குவித்தது.

63.சம்பந்த சுவாமிகளின் வாதத்தில் தோற்ற சமணர் கழுவேறியது.

64.வாணிகப் பொண்ணுக்குச் சாட்சியாக வன்னி மரமும் கிணறும் லிங்கமும் வரச் செய்தது.

#####

வெள்ளிக்கிழமை, 12 April 2019 10:22

சிவ தாண்டவங்கள்!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#*#*#*#*#

சிவ தாண்டவங்கள்!

சிவனின் தாண்டவத்தால்தான் இந்த உலகம் இயங்குகின்றது. அவரின் ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்யவே. பல தலங்களில் ஆடவல்லான் பல வகையான ஆடல்களை நிகழ்த்தியிருக்கின்றார். எம்பெருமான் இறைவன் 108 தாண்டவ பேதங்களை ஆடியுள்ளார் என பரத நாட்டியத்தை உலகுக்கு அளித்த பரத முனிவர் கூறியுள்ளார். அவையே கர்ணங்கள் என அழைக்கப்படுகின்றன.

தன் ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வகைச் செயல்களை செய்து அதாவது நடனம் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றார். சிவனின் ஆடல்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது எட்டு வகையான தாண்டவங்களே!

இதில் முதல் ஏழு தாண்டவங்களும் ஸப்த ஸ்வரங்களை உலகிற்கு அளித்தன. ஆடத் தொடங்குமுன் ஆரோஹணமும் ஆடி முடிக்கையில் அவரோஹணமும் ஆக ஸ ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் உலகிற்கு கிடைத்துள்ளது.

காளிகா தாண்டவம்!

அன்னை சிவகாமி காளியாக கோபம் கொண்டு இருக்கும்போது அந்த கோபத்தை தணித்து தானும் அவளும் வேறு வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம் காளிகா தாண்டவம் எனப்படும். இந்த தாண்டவக் கோலத்தில் இறைவன் எட்டுக் கரங்களில் உடுக்கை, மணி, அக்ணி ஆகிய வற்றை வலது கரங்களிலும், இடது கையில் அபய ஹஸ்தம் கஜ ஹஸ்தமும் காட்டிய கோலத்தில் காட்சி. திருநெல்வேலி தாமிர சபையில் இந்த வகை நாட்டியத்தைக் காணலாம்.

இந்த கோலத்தில் இறைவனைத் தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும். கடன் தொல்லை, தாழ்வு மனப்பான்மை நீங்கும்.


சந்தியா தாண்டவம்!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட உலக நன்மையை முன்னிட்டு சிவபெருமான் அதனை அருந்தினார். விஷத்தின் வீர்யத்தால் அவர் மயங்கி பார்வதியின் மடியில் சாய்ந்த அந்த சில நிமிஷங்கள் பூமியின் இயக்கம் நின்றது. உலக உயிர்களுக்கு மூச்சுக் காற்று கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமான் மயக்கம் தீர்ந்து எழுந்திருக்க மனமுறுகி வேண்டினர். சிறிது நேரத்தில் பெருமான் மயக்கம் தீர்ந்து கண்விழித்ததைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அந்த ஆனந்தத்தில் பெருமானை ஆனந்த நடனம் ஆட வேண்ட அப்போது ஆடிய நடனமே சந்தியா தாண்டவம். பிரதோஷ வேளை.


உமா தாண்டவம்:

அன்னையும் அப்பனும் சேர்ந்து ஆடிய நடனம் உமா தாண்டவம் ஆகும். இந்தக் கோலத்தில் அபஸ்மர புருஷனை மிதித்தபடி ஆடுகின்றார் எம்பெருமான். இந்த நடனத்தில் கஜஹஸ்தம் என்ற முத்திரையைக் காண்பிப்பதால் இது காத்தல் தொழிலைக் குறிக்கும் தாண்டவம் எனப்படுகின்றது.

இந்தக் கோலத்தை கண்டு தரிப்பவர்களுக்கு தம்பதியர் ஒற்றுமை சிறந்து விளங்கும்.


ஊர்த்துவ தாண்டவம்:

தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கோபம் கொண்டு உமை பெருமானை விட்டு விலக அதனால் அவர் உக்கிரம் மேலும் அதிகமாகி காளியாகி நின்றார்.. அந்த உக்கிரத்தை தணித்து காளியை சிவகாமியாக மாற்ற நினைத்து காளியுடன் போட்டியை ஏற்படுத்தி நடனமாடத் துவங்கினார். நடனம் சமமான முறையில் நீண்டு கொண்டே சென்றது. அப்போது நடனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்த எம்பெருமான் தன் காதிலுள்ள தோட்டை கழற்றி கீழே விழச் செய்து நடனமாடியபடியே மீண்டும் அதை காலில் எடுத்து காதில் அணிந்து கொண்டார். இந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெருமானுக்கு ஊர்த்துவ தாண்டமூர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டது.

கௌரி தாண்டவம்:

தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் வந்தார் எம்பெருமான். அவருடன் விஷ்ணுவும் மோகினி அவதாரம் எடுத்து வந்தார். அப்போது இருவரும் ஆடிய நடனம் இது. எப்போதும் தன்னுடன் ஆடும் இறைவனின் மற்றொரு நடனத்தை காண கௌரிதேவி ஆசைப்பட அவருக்காக இறைவன் ஆடிய நடனம் கௌரி தாண்டவம் எனப்பட்டது. ஆனந்த தாண்டவத்தில் இல்லாத கோலமாக கையில் ஒரு பிரம்பு இருப்பதே கௌரி தாண்டவம் ஆகும்.


கஜ சம்ஹார தாண்டவம்:

தருகாவனத்து முனிவர்கள் தங்கள் அபிசார வேள்வியில் மதங்கொண்ட யானையை தோற்றுவித்து பெருமானை நோக்கி அனுப்பினர். அந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார் எம்பெருமான். அப்போது ஆடிய தாண்டவமே கஜ சம்ஹார தாண்டவம் எனப்படும்.


ஆனந்த தாண்டவம்:

பதஞ்சலி, வியாபாக்ர முனிவர்களின் விருப்பத்திற்காக இறைவன் ஆடிய தாண்டவம் ஆனந்த தாண்டவம். ஆகும். ஐந்து தொழில்கள், ஐந்து பூதங்கள், ஐந்து பொழுதுகள் ஆகியவற்றைக் குறிக்கின்ற தாண்டவம் இது, இதை களி நடனம் என்றும் சொல்வர். சிதம்பரம் எனும் தில்லையில் நடராஜர் உருவத்தில் ஆடும் பெருமானை தில்லைக்கூத்தர், அம்பலக் கூத்தர் என்றழைப்பர்.

இதுவே மிகச் சிறந்த தாண்டவமாகக் கருதப்படும். இந்த நடனத்தை அடிப்படையாகக் கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும், பரத முனிவர் நடன கலையையும் தோற்றுவித்தனர்.

இந்த நடன தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்நாள் இன்பம் நிலைத்து நிற்கும்.


அஜபா தாண்டவம்:

அன்னை விடும் சுவாசக் காற்றிற்கேற்ப பெருமான் ஆடிய நடனம் இது. அஜபா தாண்டவம் எனப்படும். இறைவன் அசைந்து அசைந்து மெதுவாக பொறுமையாக ஆடிய நடனமாகும். அஜபா நடனம் பல ராகங்களின் பிறப்பிடம். இந்த நடனத்தால் இசை, ஆடல் போன்ற கலைகள் சிறந்தன.

இந்தத் திருக்கோலத்தில் இறைவனை தரிசித்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.—குருஸ்ரீ பகோரா.

#####

வியாழக்கிழமை, 11 April 2019 09:00

சிவ நிர்வாணாஷ்டகம்!

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#*#*#*#*#

சிவ நிர்வாணாஷ்டகம்!

மனமும் நானல்ல!
புத்தியும் நானல்ல!
நான் என்ற அகங்காரமும்
நானல்ல! உடலின்
அங்கங்களும் நானல்ல!
ஆகாயமும் பூமியும் நானல்ல!
ஜோதியும் நானல்ல!
காற்றும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!

உச்சுவாச நீச்சுவா மூச்சினால்
ஆனவன் அல்ல! நான்.
கப, பித்தம் முதலிய
ஏழு தாதுக்களால்
ஆனவனுமல்ல! பஞ்ச
கோசத்தால் ஆனவனும்
அல்ல! வாக்க நான் அல்ல! கை
கால்களும் நான் அல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!

துவேஷம் எனக்கில்லை!
ராகமும்-அன்பும் எனக்கு இல்லை
லோபமும் எனக்கில்லை!
மோகமும் எனக்கில்லை!
மதமும் எனக்கில்லை!
மாச்சர்யமும்-சினம் எனக்கில்லை!
தர்மத்துக்கு தொடிசு இல்லை
சம்பத்துக்கும் சம்பந்தமில்லை
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!

புண்ணிய பாவமும் எனக்கேது!
ஓதுவது தீர்த்தாடனம் எனக்கேது!
வேதம் வேள்வி எனக்கேது!
சுகம் ஏது!
துக்கம் ஏது!
ஹவிஸ் நானல்ல!
அனுபவிக்கிறவனும் நானல்ல!
அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!

மிருத்யு(மரணம்) விடம் பயமில்லை!
ஜாதி வித்தியாசம் எனக்கில்லை!
தகப்பனும் இல்லை! தாயும் இல்லை!
பிறவியும் எனக்கில்லை!
பந்துவும் இல்லை!
சினேகிதனும் எனக்கில்லை!
ஆசானும் இல்லை!
சிஷ்யனும் எனக்கில்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!

சஞ்சலம் இல்லாதவன்!
உருவங்களால் கட்டுப் படாதவன்!
இந்திரியங்கள் அனத்தையும் ஜயித்தவன்!
பற்றை அறவே துறந்தவன்!
எனக்கு முக்தியே!
பந்தமோ விஷயமோ இல்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!

சொல்லும் பொருளும் போல்
இணைபிரியாத ஜகத்தின் தாய்
தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை
நான் வணங்குகின்றேன்!
சொல்லும் அதன் பொருளும் நான்
நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.

ஆதிசங்கரர் சிவவழிபாட்டின் உன்னதநோக்கம் பற்றி எழுதிய பாடல் வரிகள்.- குருஸ்ரீ பகோரா

#####

செவ்வாய்க்கிழமை, 09 April 2019 20:05

சிவ சதாஷ்டகம்!

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#*#*#*#*#

சிவ சதாஷ்டகம்!

பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.

அலைகள் மோதும் கங்கையின் பிரவாகத்தையும் சந்திர கலையையும் சிரசில் அணிந்தவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களை உடையவரும் சிறந்த பாம்பைக் குண்டலமாக அணிந்தவரும் புண்ணியமிக்கவர்களைக் காப்பவரும் என்றைக்கும் மங்கலமானவருமாகிய சிவனுக்கு நமஸ்காரம்.

தாமரை போன்ற நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவால் நான்கு வேதங்களாலும் விளக்கப்படும் பெருமை மிக்கவரும் நான்கு கைகளை யுடைய திருமாலின் தங்கையான மீனாட்சி அன்னையை இடப்பாகத்தில் கொண்டு விளங்குவதால் அழகுடன் விளங்குபவரும், நான்கு விதமான புருஷார்த்தங்களை அளிக்கவல்ல தாண்டவக் கோலத்தில் விளங்குபவரும் என்றைக்கும் மங்கலமானவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணுவின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமத் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

திரிபுர சம்ஹார காலத்தில் பூமியை ரதமாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், பிரம்மனை சாரதியாகவும் வேதங்களை குதிரையாகவும் கொண்ட சதாசிவனும் சம்புவுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சிவ நிந்தனை செய்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு வீரபத்ர கடவுளைத் தோற்றுவித்து அவரது கர்ஜனையை கேட்டு பயந்து ஓடிய, அவிர்பாகம் பெற வந்த தேவர்களுக்கு நற்கதி அளித்த ஸர்வலோக சாட்சியான சதாசிவனும் மங்களமூர்த்தியுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயனை யமதர்ம ராஜனிடமிருந்து காத்து ஆயுள் அளித்தவரும், கன்னத்தின் ஒளியால் சந்திரனை வென்றவரும், நிரந்தர சுகமளிக்கும் மோட்சத்தை விரும்பும் சான்றோர்களால் தியானிக்கப் படுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களால் நமது பாத தாமரைகளில் இடைவிடாது அர்ச்சனை செய்யப்படுபவரும், தங்க மலையை வில்லாகக் கொண்டவரும், வெள்ளியம்பலத்தில் கூத்தாடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

மதுரையம்பதிக்கு அரசரும், மகேசுவரனும், ஆலகாலம் என்ற விஷத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், மீனாட்சியின் பதியாக விளங்குபவரும் சுந்தரத் தாண்டவம் ஆடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

இந்த சதாஷ்டகம் பதஞ்சலி முனிவரால் அருளப்பட்டது.- குருஸ்ரீ பகோரா

#####

செவ்வாய்க்கிழமை, 09 April 2019 09:59

சாலைகள்!

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#

சாலைகள்!

சாலை பொதுவாக ஒர் இடத்தையும் மற்றொரு இடத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்டது. ஒற்றையடிப்பாதை, இருசக்ர வாகனங்கள் செல்லும் பாதையாகமாறி பின்னர் மாட்டு வாண்டிகள் கார் பயணிக்க மாற்றம் கொண்டு தற்போது பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் பெரிய எந்திரங்கள் ஆகியவற்றிற்காக பயன் படுத்தப்படுகின்றது.

நிறைய போக்குவரத்து உள்ள வழித்தடங்கள், பெரிய ஊர்களை இனைக்கும் சாலைகள் ஆகியன நெரிசல் காராணமாக இரு வழிப் பாதயாக மாறி தற்போது நான்கு வழிச்சாலை மற்றும் எட்டு வழிச்சாலையாக மாற்றம் கண்டு வருகின்றன. இவையெல்லாம் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு தங்கு தடையின்றி விரைந்து செல்லவும் மக்கள் நலன் கருதி ஏற்படுத்தப் பட்டுள்ளன.

அதனால் இந்த பெருவழிச் சாலைகளின் சட்ட திட்டங்களை மக்கள் அவசியம் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். மீறீனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படலாம். விபத்துக்கள் தவிர்க்கப் படுவதற்காக ஆங்காங்கே குறியீடுகளும், சாலையை கடக்க வழிமுறைகளையும் எற்படுத்தியுள்ளனர். இதை மீறி செயலாக்கம் கொண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தால் அதற்கு யாரும் பொறுப்பில்லை. வாகனங்களுக்கோ உயிருக்கோ பாதுகாப்பு பாலிசிகள் எடுத்திருந்தாலும் அது உதவாது. எனெனில் நீங்கள் சட்டத்தை மீறி தானாகே விபத்தைத் தேடி ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்பதால் எந்த பணமும் கிடைக்காது. ஆனால் மருத்துவ உதவி மட்டும் கிடைக்கும்.

சாலைகள் சீராக இருந்தால்தான் பயணம் நன்றாக இருக்கும் உடல் உபாதைகள் குறையும். சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் பயணம் செய்யும் மக்களுக்கு உடல் உபாதைகள் அதிகம். ஓர் இடத்தில் சாலை செப்பனிட்டு புதியதாக அமைத்தால் அடுத்த வாரத்திலேயே மின் அல்லது குடிநீர் அல்லது தொலைபேசி இவர்களில் ஏதாவது ஒரு நிர்வாகம் சார்பாக குழிபறித்து விட்டு அவர்கள் வேலை முடிந்ததும் அப்படியே மண்ணை நிரப்பிவிட்டு சென்று விடுகின்றனர்.

ஆனால் அவர்கள் அவ்வாறு குழி பறிப்பதற்கு அந்த சாலைக்குரிய நிர்வாகத்திடம் எழுத்துமூலம் எழுதிகேட்டு அனுமதி பெற்ற பின்னரே குழி தோண்ட வேண்டும் என்பது நியதி. அதன்படி அங்கு தோண்டப்பட்ட குழியை மூடி சமன் செய்து பழைய நிலையான தார் சாலையாக மாற்றுவது உள்பட விரிவான அறிக்கை தயரித்து அதற்காண பணத்தைக் கட்டச் சொல்லிய பின்னரே அனுமதி என்றாலும் ஒரு சில சமயம் அவசரம் காரணமாக சம்பந்தப்பட்ட துறையிடம் சொல்லிவிட்டு வேலை தொடங்குவதும் நடப்பதுண்டு. எப்படியிருப்பினும் அவர்கள் அதற்குரிய தொகையைச் செலுத்தி விடுகின்றனர். ஆனல் அந்த துறை அந்தச் சாலையை மீண்டும் சரியான முறையில் செப்பனிடாமல் அந்த சாலையைப் உபயோகப்படுத்தும் பயணிகளுக்கு தொடர்ந்து துன்பம் விளைவிக்கக்கூடியதாக வைத்து விடுகின்றனர். அவ்வாறு பல குழிகள் சேர்ந்தபின் முழுமையான சாலை அமைக்கும் போதுதான் அந்த மேடு பள்ளம் சரியாகின்றது.

முறைப்படி அனுமதி பெற்று தோண்டுவது ஒருபுறம் என்றால் அனுமதியில்லாமல் மக்கள் தங்கள் சுயநலம் கருதி பல இடங்களில் தோண்டி சாலையை மேடுபள்ளம் ஆக்கி விடுகின்றனர். போதுவாக சாலைகளை யாராயிருந்தாலும் எந்தப் பணிக்காக இருந்தாலும் உரிய உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று வேலை முடிந்த பின்னர் அவர்களே சரியான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என்று கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டிற்குள் ஓரு வேலை செய்து விட்டு அதை சரிசெய்யாமல் அப்படியே விட்டு விடுவார்களா என்ன! அனுமதி பெற்று வேலை முடிந்தபின்னர் மேற்பார்வை செய்து சாலையை செப்பனிடாமல் விடுபவர்களை உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை என்ற பயம் இருந்தால் எல்லாம் சரியாக இயல்பாக நடைபெறும். சாலையில் தோண்டும் ஒவ்வொரு குழிக்கும் கட்டணம் செலுத்தி இரசீது பெற்றபின்னரே குழி தோண்ட வேண்டும். அவசரம் கருதி அவசரகாலப் பணியாகவும் அனுமதி வாங்கலாம்.

எந்த சாலையும் மேடுபள்ளங்களின்றி மக்களின் ஆரோக்கிய பயணத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதனால் உடனுக்குடன் செப்பனிடல் நடைபெற வேண்டும். அனுமதியின்றி குழிதோண்டல் விளம்பரங்களுக்காக தோண்டல் கூட்டங்களுக்காக தோண்டல் என்று எதுவாக இருந்தாலும் அனுமதியில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு அதற்குரிய தண்டணை வழங்கப்பட வேண்டும்.

சாலைகளை ஆக்ரமித்து கடைகளையும் வீட்டின் பகுதிகளையும் அதிகப் படுத்தி உபயோக்கும் எண்ணங்கள் சரியில்லை. அவ்வாறு செய்பவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப் படவேண்டும்,. பின்னும் அவ்வாறு தொடர்ந்தால் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும். ஒரு வியாபார இடத்திற்கு முன்னால் அங்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு அவர்களே ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறின்றி சாலைகளில் தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்ய விடுவது வியாபாரம் செய்பவர் அல்லது அந்த இடத்தினுடைய சொந்தக்கார்களே பொறுப்பு என்பதை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சாலை ஆக்கிரமிப்புகளால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

பெரிய நகரங்கள் /ஊர்களை இனைக்கும் சாலைகளில் சேரும் குறுக்குச் சாலைகளிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கவனமுடன் வரவேண்டும். அதை விடுத்து அவர்கள் வேகமாக வந்து திரும்புவார்களாம். அதனால் நெடுஞ்சாலையில் சாலையை உயர்த்தி மேடாக்கி தடுப்பு அல்லது தட்டிகள் வைத்து ஒருசமயம் ஒரு வண்டி செல்வது போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.

குறுக்குச் சாலையில் எப்பொழுதாவது சில வண்டிகள் வரும். நெடுஞ்சாலையில் அடிக்கடி வண்டிகள் வரும். ஒரு சில வண்டிகளுக்காக நெடுஞ்சாலையைக் கடக்கும் நூற்றுக் கணக்காண வண்டிகள் தங்கள் வேகத்தை குறைத்து மேட்டில் ஏறி இறங்கி மெதுவாக செல்ல வேண்டுமாம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இருக்கின்றது. இது போன்று ஒரு நெடுஞ்சாலையில் பல மேடுகளைக் கட்டி தடுப்பு செய்துள்ளதால் நெடுந்தொலைவு பயணிக்கும் மக்கள் துன்பமடைகின்றனர். பொதுவாக சாலைகள் மேடு பள்ளங்கள் நிறந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை போதாது எண்பதற்காக இந்த மேடு பள்ளங்கள்வேறு. இதனால் ஒவ்வொரு முறையும் வண்டி ஏறி இறங்கும்போது அதில் பயணம் செய்யும் மக்களின் முதுகுத் தண்டு தேவையில்லாமல் தேய்வடைகின்றது. பலருக்கு கழுத்து சுளுக்கு ஏற்படுகின்றது. நிறைய பயணிகளுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு சாலை தடுப்புகளை குறுக்குச் சாலைகளில் மட்டும் அமக்க வேண்டும். இரு பக்கமும் எச்சரிக்கை பலகைகளை முறைப்படி பொறுத்த வேண்டும்.

இது மட்டுமில்லாமல் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்த இடத்தை கடக்க கீர்முறையை மாற்றி செயல் படுவதால் நிறைய பெட்ரோல் தேவையின்றி வீணாக்குகின்றோம். இப்படியெல்லம் செய்து விட்டு பெட்ரோலை சிக்கனப்படுத்த நடவடிக்கை என்று விளம்பரங்கள் எதற்கு!

அடுத்து பள்ளிகளுக்காக தடுப்புகளை சாலையில் ஏற்படுத்துகின்றனர். பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்கள் வேகமாக கவனமின்றி சாலையைக் கடப்பதாலேயே பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. நம் குழந்தைகள் அறிவில் சிறந்தவை. புத்திசாலித்தன மிக்கவர்கள். அவர்களுக்கு முறையான விளக்கங்களைச் சொல்லி வழி முறைகளை கற்றுத் தந்தால் அவர்களின் செயல் பாடுகள் நம்மை மிஞ்சி இருக்கும். அவர்களுக்கு சாலைகளின் குறியீடுகள் சாலியை கடக்குமுன் செயல் படும் முறைகளை சரியாக கற்றுத்தாராமல் அவர்களை சரியான இயக்கமில்லாத மண்பொம்மைகளாக்கி விடுகின்றோம்.

எல்லா பள்ளிகளின் வாயிலில் முறையான தடுப்பை ஏற்படுத்தி மாணவ மாணவிகளின் வேகத்தை குறைத்து தாங்கள் ஒரு சாலையை கடக்க இருக்கின்றோம் என்ற விழிப்பு நிலையை ஏற்படுத்தி செயல் படவைத்தால் எந்த பள்ளிக் குழந்தையும் விபத்தில் சிக்காது. இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களில் அவர்கள் சாலையைக் கடக்கும்போதும் உபயோகமாயிருக்கும். இதற்கு உதவியாக காலை, மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் அந்தப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சியாளர்கள், பாட்டு மற்றும் கலைத் துறை ஆசிரியர்கள், நூலகப் பெருப்பாளர் ஆகியோரின் உதவியுடன் குழந்தைகள் பள்ளி வாயிலிலுள்ள சாலயைக் கடக்கச் செயல் முறைப்படுத்தலாம்.

பள்ளிக்கூடங்களின் வாயிற் கதவுகள் திறந்திருக்கக் கூடிய காலங்கள் காலை மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகள் சேர்ந்து மொத்தம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே. இந்த மூன்று மணி நேரத்திற்காக ஒரு நாளைக்கு மற்ற இருபத்தியோரு மணி நேரமும் அந்த நெடுஞ்சாலையில் செல்வோர் மேடுகளில் ஏறி இறங்கி முதுகு தண்டு வடத்திற்கு அதிர்ச்சி தந்து செல்ல வேண்டுமா! இதுமட்டுமல்லாமல் விடுமுறை தினங்கள் வேறு.! இந்த சிந்தனை கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் சிந்தித்து நம் மக்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு உதவ வேண்டுகின்றேன்.

 

ஒரு இரயில் பாதையை மற்றும் நான்கு வழிச் சாலகளை கடக்கும்போதும் எப்படி கவனுத்துடன் இருபுறம் பார்த்து செல்கின்றோமோ அதே கவனம் எந்த சாலையாயிருப்பினும் கவனமுடன் கடந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

இப்படி வீணற்ற தடுப்புகளால் பயணம் செய்வோரின் கழுத்து, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு என்ற நிலை குறைவது மட்டுமல்லாமல் நாட்டில் பெட்ரோல் சிக்கனமும் ஏற்படும்.

அடுத்து சாலை தடுப்புகளை சில கல்லூரி, மருத்துவ நிர்வாகங்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்கின்றன. இவர்கள் விளம்பரம் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். விளம்பரங்களை உரிய

இடங்களில் சாலை ஓரங்களில் அனுமதி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும் கண்ட பொது இடங்களில், சாலைகளில் வைக்கக்கூடாது என்று கட்டாய மாக்கப் படவேண்டும்.

பெரிய ஊர்களில் சாலைகளை முறையாகக் கடப்பதற்கும் போக்குவரத்தை சீர்படுத்தவும் மின் விளக்கு (சிமப்பு-ஆரஞ்சு-பச்சை) கம்பங்களைப் பெறுத்தியிருக்கின்றனர். அதிலும் சில நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்ய தங்களது தட்டிகளை பெரிய அளவில் வைத்துள்ளனர். எங்கு செல்ல வேண்டும் என்ற குறிப்புகள் மறைக்கப் பட்டோ அல்லது சிறிய அளவிலே வைக்கப்பட்டுள்ளது. அது எப்படி மக்களுக்கு சாலையை முறையாக கடந்து வேண்டிய இடத்திற்கு செல்ல வழிகாட்டியாக உதவும்.

போக்குவரத்து விளக்கு கம்பங்களில் விளம்பரங்கள் செய்வது தடுக்கப் படவேண்டும். இதை யார் அனுமதிக்கின்றனர் என்றே தெரிவதில்லை. சாலைகளில் நேராக விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டு வாகன ஒட்டி வண்டியைச் செலுத்தினால் ஏன் விபத்துக்கள் அதிகமாகாது.

பொதுவாக பெரிய நிர்வாகங்கள் வளர விளம்பரங்கள் வேண்டியதுதான். அதை முறைப்படி மக்களுக்கு பாது காப்பாகவும் அதே சமயம் பயன் படுபவனாகவும் இருக்கும்படி விளம்பரங்கள் செய்ய வேண்டியது அவர்களது சமுதாய கடமை. அதற்கு அரசு நிர்வாகங்கள் தகுந்த மேற்பார்வை முறைகளை ஏற்படுத்தி சாலைகளை முறையாக பயணிப்போர் நலன் கருதி மேம்பாட்டுச் செயல்களைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!— குருஸ்ரீ பகோரா

#####

திங்கட்கிழமை, 08 April 2019 16:03

நீதியின் குரல்!

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#*#*#*#*#

 

நீதியின் குரல்!

குற்றவாளிகள் அல்லது குற்றத்திற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என நினைத்து சட்ட பாது காப்பாளர்களில் ஒரு பிரிவினரான காவல்துறை போலீஸார் இன்ன காரணத்திற்காக கைது / அல்லது அழைத்துச் செல்லப் படுகின்றார் என்று எழுத்து மூலமாய் அவர்களை எங்கிருந்து கூட்டிச் சொல்கின்றார்களோ அங்கிருந்து அப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்களின் வீட்டிற்கும் தகவல் கொடுத்து விட்டு, அவர்களை நீதி அரசர்கள் எனப்படும் நீதிபதிகளின் முன்னிருத்தி காரணங்களை எழுத்து மூலமாக விளக்கி எத்தனை நாள் அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து நீதிமன்றத்திலிருந்து கூட்டிச் சென்று மனித நேயத்துடன் குற்றத்திற்குத் தகுந்தவாறு விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது ஏன் என்றால் எதற்காக ஒருவரை அரசின் சமூக பாதுகாப்பாளர்கள் எனப்படும் காவல்துறை போலீசார் அழைத்துச் செல்கின்றார் என்பது அவர்களுக்கோ அல்லது அவர் உறவுகளுக்கோ தெரிவதில்லை.ஒரு சில சமயம் இன்னாரைக் காணவில்லை என்று புகார் கொடுக்கச் செல்லும்போதுதான் காணமல் போன நபர் புகர்கொடுக்குமிடமான அந்த காவல்துறை நிலையத்திலேயே இருப்பது தெரிய வருகின்ற நிலை. 

குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை குற்றவாளிகளுக்கு எந்த நிலையிலும் ஆதரவு தெரிவிக்கின்ற நிலை இக்கட்டுரையிலில்லை அவர்கள் யாராயிருந்தாலும் என்ன காரணமாய் இருந்தாலும் சட்டத்தின்முன் சமம் என்ற நிலையை மேற்கொள்வதே காவல்துறைக்கு சிறப்பாகும். ஒருவரின் தனிபட்ட செல்வாக்கு காரணமாக காவல்துறை தன் நிலையை நலிவடையச் செய்து விடக்கூடாது. குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை எல்லோருக்கும் ஒரே நடைமுறையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். பின் அவர்கள் செய்த குற்றங்கள் உறுதியானால் அதற்கேற்ற நிலைகள் என வைத்துக் கொள்வது சிறப்பு.

காவல் நிலையங்களில் இருப்பவர்கள் வெறும் உள்ளாடையுடன் இருப்பதக் காண்கின்றோம். நாகரீகம் வளர்ந்த இந்நாளில் ரோட்டில் செல்லும் ஒருவன் ஆடையின்றியோ அல்லது அரைகுறை ஆடையுடன் இருந்தால் அவனை மனவளர்ச்சி குன்றியவன் என்கிறோம். அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு என்ன காராணத்தினால் இந்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளானோ என வருந்துகின்றோம். நீதி மன்றங்களில் குற்றங்கள் நிரூபணம் ஆனபின் குற்றவாளிகள் என அவர்களுக்கு ஓர் சீருடை அளித்து அவர்கள் மனமாற்றம் அடைய அவர்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனை அடைய வேண்டும் என்று ஓர் கட்டுகோப்பை ஏற்படுத்தி உள்ளது அரசின் சட்டங்கள்.

அப்படியிருக்கும்போது எதுவும் உறுதி செய்யாமல் ஒருவரை காவல் நிலையத்தில் அரைகுறை ஆடைகளில் வைப்பது எந்த சட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் மனித நேயத்திற்கு எதிரானது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

ஓர் உயிர் பறிக்கப்பட்டபின் அந்த உயிர் சமபந்தப்பட்டவர்களின் இழப்பை யாராலும் சரிப்படுத்த முடியாது. சமுதாயத்தில் ஒரு உயிரை மற்ற உயிர் பறித்தல் கூடாது என்தற்காகவே இவ்வகைக் குற்றங்களுக்கு கடுமையான சட்டமுறைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சட்ட முறைகளையெல்லாம் மீறி தன் பணபலத்தால் தனிப்பட்ட செல்வாக்கால் கடுமையான சட்ட திட்டங்களை மீறி ஒருவரால் செயல் படுத்த முடியும் என்றால் என்ன சமதர்மம். அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதெல்லாம் எதற்கு! என்ற எண்ணங்கள் மக்களிடையே தோன்றுவதை அணுமதிப்பது வளரவிடுவது எதிர்கால சமுதாயத்திற்கு சீர்கேடாகும்.

ஓர் உயிரைப் பறித்ததற்காக ஒருவர்மேல் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவுகள் வருந்தி கதறலாம். ஆனால் அவர்கள் கொலை செய்யப்பட்டவரின் உறவுகளின் நிலையை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனைக் கனவுகள். கற்பனைகள். வாழ்வாதாரம் எல்லாம் வீணாகி அவரின் பிரிவால் அந்தக் குடும்பம் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளதே! அதற்கு காராணமான தங்கள் உறவினன் செய்தது சரியா என நினைக்க வேண்டும். இதே நிலையில் தன் உறவின் குடும்பம் இருந்தால் எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டும். அது எவ்வளவு துயரம் என்பது அப்போது அவர்களுக்குப் புரியும்.

ஓர் சாதாரண வாழ்வு நிலையிலிருந்து மாறுபட்ட ஒருவர் மற்றொருவரைத் தாக்கி கொலை செய்வது என்றால் அந்த வன்மம் ஏன்! அந்த வன்மத்துடன் இருக்கும் அவரை எந்த உறுவுகளாவது கண்டித்தனவா அல்லது தடுத்தனவா! இப்போது ஏன் தன் உறவு சிக்கலில் சிக்கியதே என்று கண்ணீரும் புலம்பலும்! தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.

பத்திரிகைகளும், செய்திகளும் தவறு செய்தவரின் உறவுகள் கண்ணீர் விடுவதை, புலம்புவதை, அழுவதை தெரிவித்து மற்றவர்களின் மனதில் ஓர் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்த முயல்வதை தடுக்க வேண்டும். தவறு, குற்றம் என்றால் எந்த நிலையிலும் யாரும் அந்த நிகழ்வுகளை ஆதரிக்க கூடாது என்ற நிலை ஏற்பட்டால்தான் நாட்டில் அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்வன குறையும். தெய்வம் நின்று கொல்லும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப பத்திரிகைகளிலும் செய்திகளிலும் தெரிவிக்க வேண்டும். இந்த நிலைதான் சமூகத்தில் மற்ற உயிர்களுக்கு கெடுதல் புரிபவர்களுக்கு ஓர் குற்ற உணர்ச்சியைத் தூண்டி குற்றங்கள் செய்யப்படுவதைக் குறைக்க முடியும். குற்றங்கள் செய்யாமலிருக்க தூண்டுதலாக அமையும்.

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு தாக்குகின்றார் என்றால், தாக்கப்பட்டவர் செய்தது என்ன! எதனால் தாக்குபவருக்கு இவ்வளவு வன்மம் ஏற்பட்டுள்ளது. இன்ன காராணத்தினால் எனக்கு இவர்மேல் வன்மம் ஏற்பட்டுள்ளது . என்ற முறையீட்டிற்கு தீர்வு காணும் முறை நீதி மன்றங்களில் இருந்தால் இது மோன்ற வன்மங்கள் அதிகமாகி ஒருவர் தன் எதிர்காலம் பற்றி கவலை கொள்லாமல் வன்மம் தலை தூக்கிய நிலையில் ஒரு குற்றத்தினைச் செய்து விட்டு அதனால் தன் உறவுகளுக்கு பாதிப்பையும் பலகஷ்டங்களையும் விரும்பியா உருவாக்குவார்!

சமுதாய சீர்திருத்தத்திற்கு மிகவும் சிந்தித்து செயலாக்கம் வேண்டிய பொது விஷயம் இது! இதற்காண ஓர் அமைப்பு இருந்து அதில் முறையீடு செய்து ஒருவரின் வன்மங்கள் குறையும் நிலை ஏற்பட்டால் இது போன்ற உயிர் போக்கும் அவல நிகழ்வுகள் நடைபெற வாய்பில்லாமல் போகும். மனித நேயம் மேம்பட்டு சமுதாயம் உயர் நிலை அடையும்.

ஓர் விசாரணையை ஆரம்பித்த அமைப்புகள் முடிவுகளை விரைவாக ஒர் கால நிர்ணயத்திற்குள் கட்டாயமாக அறிவிக்கப் படுபனவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளிவைக்கக் கூடாது. வாய்தா என்பது பல்லாண்டுகள் வாழ்க என்பதுபோல் வழக்குகளை வாழவைக்கும் சொல்லாகும். வாய்தா வழக்குகள் வாழ்வதற்காகவே! வழக்குகள் விரைவில் முடிக்க வேண்டும் என்ற எல்லோரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஏன் மந்தமாக முடிவாகமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. அதற்கு ஓர் முக்கியமான காரணம் வாய்தா அளிப்பதே. ஒரு விசாரனைக்கு இத்தனை வாய்தாதான் என்று கட்டாயமாக்கப்படவேண்டும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் வரவில்லை என்றால் அவர்மேல் குற்றம் நிருபணம் ஆவற்கு இதுவும் ஒர் காரணம் என்ற நிலை ஏற்படும் என கட்டயமாக்குதலே,

வாய்தாவினால் காலதாமதம் ஏற்பட்டு அந்தக் காலங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு பாலருக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. இந்த வாய்தா நிலையிலிருந்து மக்களையும், நீண்டகாலமாக வழக்குகள் நடந்து கொண்டிருப்பது என்ற நிலைகள் மாற வாய்தாக்களை இத்தனை என்று நிர்ணயிக்கப் படவேண்டும். சிலருக்கு இது நன்மைகள் தராமலிருக்கலாம். சிலருக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலன் நீதி நிர்வாகம் பாழ்படுவதை எல்லோரும் எல்லா காலமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைச் சீர்படுத்தினால் நாட்டில் தேங்கிக் கிடக்கும் பல் ஆயிரக்கணக்காண குற்றங்களை விசாரண நடத்தி விரைவில் தீர்த்து வைக்கப்படலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றங்களை நாடினால் வாய்தா! வாய்தா! என நம் ஆயுளில் முடிக்க மாட்டார்கள், மேலும் அவ்வளவு செலவு செய்ய முடியாமல் நம்மைத் தீர்த்து விடுவார்கள் என்ற நினைவு கொண்டு. விரைவில் தீர்வு வேண்டும் என குறுக்கு வழியில் தகாத சமூக முறைகளை மேற்கொள்ள வழி வகுக்கும்.

வேண்டுமென்று தகராறு செய்துவிட்டு நீதி மனறத்தில் புகார் பதிவு செய்து விட்டால் அது பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டிருக்கும் என்ற நிலையில் பல சமூக விரோதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அவல நிலை மாற அனைவரும் முயற்சிக்க வேண்டும். நீதி நேர்மையாக அனைவருக்கும் விரைவில் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

ஒரு விசாரணையில் அது முற்றிலும் பொய்யானது. வேறு நோக்கிற்காக வழக்கு புனையப்பட்டது என்று தெரிந்தால் எக்காரணத்திற்காகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது நிச்சயமாக அந்த தவறை உணரும் வகையில், பொய்யான குற்றசாட்டுகள் சுமத்தி ஒருவரை மனஉலைச்சலுக்கு ஆளக்கிய காரணத்திற்காகவும், வக்கீல்கள், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தினை பொய்யான வழக்கினால் வீணடித்த குறத்திற்காகவும் கடுமையா தண்டனை தர வேண்டும். அப்போதுதான் இது போன்ற போலியான வழக்குகள் நீதி மன்றத்திற்கு உள்ளேயே வராது. நீதி மன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது. நன்றாக வெளிப்படையாகத் தெரியும் ஒரு போலி வழக்கை எந்த ஒரு வழக்கறிஞரும் வாதாடக்கூடாது. அப்படி வாதடும் வழக்கறிஞர்மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்காடும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

வழக்காடு மன்றத்தில் வழக்காடுபவர்கள் ஒவ்வொரு வழக்கின் தன்மையை உணர்ந்து அதில் தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்ற நிலை அறிந்து வழக்குகளை மேற்கொண்டால் ஆரம்பத்திலேயே போலியான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவது குறைந்து விடும். அப்படி வந்தாலும் அந்த வழக்குகள் இனம் கண்டு கொள்ளப்பட்டு நீதிபதி அவர்கள் தண்டனை தறுவாரென்ற நிலை உறுதியாக இருந்தால் போலியான வழக்குகள் குறைந்து நீதி மன்றத்தின் நேரங்கள் வீணடிக்கப்படாது. ஆண்டுக்கு ஆண்டு போலி வழக்குகள் குறைந்து நாட்டில் நீதித்துறை மேன்மையடைந்து நீதி நியாயம் வழுப்பட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ வாழ்வியல் முறை அமைந்து நாட்டில் அமைதி பெருகி ஆனந்தமும் நிறையும்.

ஒரு வழக்கறிஞர் தேர்வு எழுதி நீதி அரசருக்குகான தகுதியில் இடம் பெற்றிருந்தாலும் அவரின் முந்தைய காலங்களில் அவர் ஈடுபட்ட வழ்க்குகள் அடிப்படையில் அவரின் முழுத் தகுதி தெரிந்து மற்றவர்களில் சிறந்தவர் என்ற நிலையில் அவர் நீதிஅரசருக்குத் தெரிந்தெடுக்கப் படவேண்டும். அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது செல்வாக்கிற்காகவோ எந்த ஒருவரும் நீதி அரசராகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது. உண்மைகள் மறைக்கப்படாத தெளிவு கொண்ட வாதம், விவாதம், முடிவுகள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும்.

ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து விட்டு முன் ஜாமீன் கேட்கிறார் என்றால் எதற்கு அவருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யாத ஒருவர் ஏன் பயப்படவேண்டும். ஒரு குற்றம் தன்மேல் சாத்தப்படவிருக்கின்றது என குறு குறுக்கும் நெஞ்சிற்கு பாதுகாப்பிற்காக ஜாமீன் வழங்குதல் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கி மேலும் அந்த குற்றப் பின்னியை சீர்குலைக்க அவருக்கு உதவுவதற்காகவே அந்த ஜாமீன் அமையும். எந்த குற்றம் செய்தாலும் சட்ட விளக்கங்களைச் சொல்லி முன் ஜாமீன் வாங்கி விடலாம் என்ற அவல நிலையிலிருந்து நீதிமன்றங்களின் நிலை மாற வேண்டும்

ஜனநாயகம் எல்லோருக்கும் பொது. பணம் இருப்பவர்களுடன் அறிவில் சிறந்தவர்கள் சேர்ந்து அதை தங்கள் பக்கம் இழுத்து ஜனநாயகத்தை பணநாயகமாக ஆக்க விடக்கூடாது என்பதற்காகவே நீதி மன்றங்கள். நியாய தர்ம சிந்தனையுடன் வழக்காடுபவர்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாட்டில் தர்ம் நியாங்கள் நிலைக்க அவர்களும் உதவ வேண்டும். அதிகாரமும் பணமும்தான் சட்டத்தின் கண்கள் என நினைத்து தர்மத்தினை விட்டு வேறு செயலுக்கு துணை போகக்கூடாது. இதிகாசங்களும் புராணங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்புண்ணியபூமியில் நியாயம் தர்மத்தை உறுதிப்படுத்தவே போர்கள் நடந்து அவற்றை நிலைப்படுத்தியுள்ளதை அறிஞர்கள் புரிந்து தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டு நியாயம் தர்மத்திற்காக போராடும் நிலையை மேற்கொள்ள வேண்டும்.

சட்டம் என்றால் அது தன் கடமையைச் செய்யும் என்ற நிலை, உணர்வு, ஓர் பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என சொல்லும் நிலையை நாட்ட நீதி மன்றங்கள்தான் முற்றிலும் உதவி செய்ய வேண்டும்.

ஒரு குற்றத்தைச் செய்தவன் எந்த நிலையிலிருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. பாரபட்சமின்றி நீதி சொல்லி நியாமான தண்டணைகளை அடைய வேண்டும் என்பதே தர்மத்தின் குரலாக நீதி மன்றங்களில் ஒலிக்க வேண்டும். ஒரு விசரணையில் ஒரு நீதி மன்றத்தில் தண்டனை மறு நீதி மன்றத்தில் விடுதலை. எப்படி ஒரு நீதியானது இரு நீதிமன்றங்களிலும் மாறு பட்டு நிற்கின்றது. விசாரணை ஒன்றே. நியாமும் தர்மமும் ஒன்றே. அப்படியானால் ஏன் இரு வேறு வகையான தீர்ப்புகள். அப்படி நீதிக்கு முரணான தீர்ப்புகளை வெளியிட்ட நீதி அரசர்களுக்கும் தண்டனை என்ற நிலை ஏற்பட்டால் இது போன்ற ஒரே வழக்காட்டில் இரு வேறு தீர்ப்புகள் வெளிவராதல்லவா!. நீதிமன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது அல்லவா.

ஒரு நீதி அரசர் அளித்த தீர்ப்பு எங்கு சென்றாலும் அது நீதிக்கு உகந்தது. அதுவே சரி என்ற நிலை வேண்டும். அதுவே நீதி. நீதி என்பதில் ஒன்றுக்கு மேற்பட்டது எல்லாம் நீதியென்றாகாது. அது நீதியின் ஆட்சி! அதுவே நீதியின் குரல்!.--குருஸ்ரீபகோரா

#####

வெள்ளிக்கிழமை, 05 April 2019 16:31

நிழல்!

ஓம்நமசிவய!

பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#*#*#*#*#

நிழல்!

எது பிறந்ததோ அந்த வேளையில்தான் நானும் பிறந்தேன். நித்திய தத்துவம் ஒன்றின் விளக்கமாக ஆண்டவன் என்னை அதனுடன் படைத்தனன். நான் பிறந்தது அதற்குத் தெரியாது. எப்போதாவது என்னை காண வேண்டி வரும் .அப்போது அது என்னைக் கண்டு ஆச்சரியப்படலாம். சில சமயம் அதன் பார்வைக்கு நான் தென் படமாடேன். அதனால் என்மீது அதற்கு நம்பிக்கையில்லாமல் போகலாம். ஆனால் நான் அதனுள்தான் ஒளிந்தும் ஒளியாமலும் இருந்து வருகின்றேன்.

அது பிறந்ததிலிருந்து தனக்கு வாழ்க்கை கிடைத்து விட்டது என மகிழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். உண்மை என்ன வென்றால் சாவை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. பிறப்பு என்பது சாவில் நுழைவு வாயில். எனவே காலத்தின் கையில் வாழ்க்கை. எனவே காலச்சக்கரத்தின் மணித்துளிகளை இனியனவாக்கிக் கொள்ள முயற்சிசெய் என்ற தத்துவத்தை அது தெரிந்ததாகத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் நான் அதன் நண்பன். அதன் துணைவன். அது எங்கு சென்றாலும் எது செய்தாலும் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுவே இறைவன் எனக்கு இட்ட கட்டளை.

ஆண்டவன் என்கிற ஒளியுடன் அது கலக்கும்போது அதுவும் நானும் ஒன்றாகி விடுவோம். சம்சார சாகரங்களைக் கடந்த நித்ய நிலையும் அதுவே! அந்த ஒளியிடமிருந்து அது விலகி ஓடினால் அதன் கோரச்சாவு எனக்கு புரிகின்றது. அதை எச்சரிக்கும் முறயை நான் அறிந்ததில்லை. இருந்தாலும் உண்மையை ஒர் நாள் அது உணர்ந்து திருந்தும் என்ற நம்பிக்கையில் அதனுடன் பயணிக்கின்றேன் அது அந்த இறை ஒளியை நாடி முன்னேறும்போது அதுகலக்கும்போது நானும் கலந்துவிடலாம் என்ற நப்பாசையில் அதனுடன் இனைந்து வர அதன் அடியொற்றி நடக்கின்றேன். இதுவே நான் அதைச் சுற்றி சுற்றி அதனுடன் அலைவதன் உள்ள சிறிய தத்துவம். -குருஸ்ரீ பகோரா

#####

வெள்ளிக்கிழமை, 05 April 2019 08:34

ஒதுக்கீடு!

ஓம்நமசிவய!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !
#*#*#*#*#

ஒதுக்கீடு!

பிறப்பால் ஒதுக்கீடு அளிப்பது முற்றிலும் சரியில்லை. மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வாய்ப்புக்கள் கிட்ட தாம் இந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! அந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! என ஏங்கும் நிலை. இதற்காக பொய் கூறி பிறப்பை மாற்றி சான்றிதழ் பெறும் அவல நிலை

சமுதாயத்தில் சமமான நிலைக்காக தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள அனைவரும் மேம்பாடு அடைய ஓர் ஊக்கம் தர வேண்டியது அவசியம் அனைவரின் கடமை. அதன் முகத்தான் அரசும் மற்றையோரும் படிப்பிற்கும், முதல் வேலை வாய்ப்புக்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் செயல்பட சட்டங்களைத் திருத்துவதில் தவறில்லை.

இதையே எல்லா நிலைகளிலும் பயன்படுத்துவது ஓர் போட்டி, பொறாமை உணர்வுகளை மற்ற்வர்களிடையே தோற்றுவிக்க வழி வகுக்கும். வேலை வாய்பிற்குப்பின் ஊக்குவிப்பு என்றபெயரில் அடுத்த நிலை தருவது சரியில்லை. அந்நிலை அடைந்தோர் எந்தவிதத் திறமையையும் வெளிபடுத்தா நிலையில் பிறப்பால் தனக்கு வேலை மட்டுமல்ல ஊக்குவிப்பும் என்பது என்றென்றும் ஓர் மெத்தனமான போக்கையே உருவாக்கி கொண்டிருக்கின்றது..

இதே நிலையில் இணையாகப் பணி புரிந்தோருக்கு எல்ல திறமைகளிருந்தும் பிறப்பு ஜாதி இல்லை. அதனால் ஊக்குவிப்பு இல்லை அதனால் இங்கேயும் மெத்தனப் போக்கு உருவாக சாதகமான மனநிலை ஏற்படுகின்றது. இப்படிப் பட்ட நிலை உருவானால் நிர்வாகம் எப்படி சீரும் சிறப்புமாக இருக்க முடியும். விரைவில் நலிவடையும் நிர்வாகம் சீர் கெடும்— -குருஸ்ரீ பகோரா

#####

வியாழக்கிழமை, 04 April 2019 19:33

அன்பளிப்பு!

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#*#*#*#*#

அன்பளிப்பு! 

ஒருவருக்கு ஒருவர் கொடுகும் லஞ்சத்தை கீழ்கண்ட பெயர்களில் கூறினாலும் பொதுவாக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு! குற்றம்!. தண்டனைக்குரியது. என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை,
அன்பளிப்பு,
நல்லெண்ணம் பரிமாறல்,
வாழ்த்துக்கள்
வெற்றிபெறுவதற்காக
பழிவாங்க
ஜென்ம கடனை திரும்ப செலுத்துதல்
இயற்கை சமன் (நாம் வாங்கிய லஞ்சத்திற்கு)

ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுத்தால் அது ஒன்று வட்டியில்லா கடனாக அல்லது வட்டியுடன் கூடிய கடன் அல்லது லஞ்சமாகத்தான் இருக்க முடியும்.

மனிதனுக்கு மனிதன் பொருளோ அல்லது பணமோ கொடுத்தால், உறவாயிருந்தாலும் சரி, நண்பர்களாயிருந்தாலும் சரி, மூன்றாவது நபராக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலை, எதிர்பார்ப்பு இவைகளைக் கணக்கில் கொண்டுதான் அன்பின் மிகுதியால் கொடுக்கப் படுகின்றதா அல்லது மறைமுக எதிர்பார்ப்புடன் கொடுக்கப் படுகின்றதா என தீர்மானிக்க முடியும்,

அன்பு என்ற ஓர் காரணத்திற்காக கொடுக்கப்பட்டாலும், அதே காரணத்திற்காக பெறப்பட்டாலும் காலங்கள் மாறும்போது சூழ்நிலை உறுவாகும்போது ஒருவன் செயலை மற்றவன் நினைத்துப் பார்த்து அவன் இப்படிப்பட்டவன், இவ்வளவு அன்பு காட்டியுள்ளான், இதுகாறும் ஏதும் செய்ய வில்லை. இனியாவது அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், இப்போதைக்கு அவன் கேட்காமலேயே இந்த உதவியாவது செய்யலாம் என்ற ஓர் எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. என்றோ எதற்கோ பெறப்பட்டதிற்கு பிரதி பலன் வேறு முறையில் திருப்பி செலுத்தப் படுகின்றது- இது ஒருவகை.

ஒரு சின்ன குழப்பத்தில் ஆழ்த்தி அவனுக்கு பணம் கொடுத்து விவகாரத்தில் மாட்டி வைப்பது ஒரு வகை பழி வாங்குதல்.

ஒருவனை சந்தோஷத்தில் பணம் கொடுத்து வாழ்த்துவது ஒருவகை

ஒருவனை வேதனையில் வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு சபிப்பது ஒரு வகை.

இவையெல்லாம் ஏன்! எதற்காக!`

லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும்! எதற்காக கொடுக்க வேண்டும்!

ஒருவனுக்கு ஓரிடத்தில் ஓர் செயல் நடக்க வேண்டும் என்றால் நடக்க இருக்கும் காரியத்தின் தன்மை, அதனால் கிடைக்கும் பலன் இவைகளைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டு பிரதியாகப் பணம், பொருள், மது, பெண்ணாகக் கேட்கப் படுகின்றது. இவனால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க அவனுக்கு என்ன லாபம் என்று வரையறுக்கப் பட்டு ஏதாவது ஒன்றாக கொடுக்கப் படுகின்றது.

முதலில் தொடர்பு கொண்டு இந்த பரிவர்த்தனையை நட்புடன் ஆரம்பிக்க, வாங்க காபி அல்லது தேநீர் அருந்திக் கொண்டே பேசலாம் என்ற அழைப்பு. பின் ஷேம நலன்கள், ஊர் முறையில் அல்லது ஜாதி முறையில் ஏதாவது ஓர் முறையில் ஒருவரை ஒருவர் நெருங்க முயற்சி. நெருங்கிய வட்டத்திற்குள்தான் எல்லாம் விரிவாக பேச முடியும் என்பதால் எல்லா விபரங்களையும் கேட்டு எப்படியாவது இரு பாலரும் அந்த குறுய வட்டத்திற்குள் நுழைய பிடிவாதம் பிடிக்கின்றனர். அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று புகழ் பாடி ஏதாவது ஓர் தொடர்பை ஏற்படுத்தி அரசியல் நிலை, காலப் போக்கு, சூழ்நிலை இவைகளை பேச்சுத் திண்ணைபோல் பரிமாறி.. இன்றைய சூழலில் செலவின்றி ஏதும் செய்ய முடியாது. அவருக்கு இவருக்கு என்று கணக்குச் சொல்லி ஒருமித்த கருத்தடைவர்.

இருவரும் சமரசம் ஆகி ஓர் நிலையில் இந்த வேலை செய்து முடிக்க என்ன தருவாய்! என்ற கேள்வி வரும்.. அவர் அந்த வேலையைச் செய்வதற்கு நிர்வாகம் ஊதியம் தந்தாலும் அவருடைய ஆசைக்கு பேராசைக்கு பணம் பற்றாக் குறையாக இருப்பதால் அல்லது அவன் ஆடம்பரச் செலவு செய்வதற்கு தேவையாக இருப்பதால் இந்தக் கேள்வி. இது மற்றயவருக்கும் தெரியும், இந்த வேலையைச் செய்வதற்குத்தான் அவன் சம்பளம் பெறுகின்றான் என்று. இருந்தாலும் தனக்கு வேறு வேலை இருப்பதாலும் மீண்டும் மீண்டும் அலைய முடியாது என்பதாலும் கேட்பதை கொடுத்து தொலைத்து விடலாம். நமக்கு காரியம் ஆனால் சரி. இல்லையென்றால் ஏதாவது கேள்விகேட்டு இழுத்தடிப்பான் என்று நினைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதவரைப் போல நான் என்ன செய்ய வேண்டும் என்பார்.

சரியாக நம் வழிக்கு வந்து விட்டார் என கணக்கிட்டு எல்லோருக்கும் தரவேண்டும் மீதிதான் எனக்கு என்று கிம்பளம் வாங்காத ஆட்களையெல்லம் சொல்லி கணக்கிட்டு ஒரு தொகையைச் சொல்வார். அந்தத் தொகையைக் கேட்டதும் பகீர் என்றிருக்கும் கேட்டவருக்கு. இவ்வளவா! என்பார். அதற்கு இதே போன்ற ஒரு கேஸிற்கு முன்பு இவ்வளவு வாங்கினோம். நீங்கள் மிகவும் பழகி விட்டீர்கள். முன்பு பேசியதில் ஏதாவது உறவு ஒன்றைச் சொல்லி, அதனால் உங்களுக்காக நான் பெரும் தொகையை குறைத்துக் கொண்டுதான் சொல்லியுள்ளேன் என்று ஒரு அற்புதமான விளக்கமான பதிலை தருவார்.

வேறு வழியில்லாமல் சில்லரையாக உள்ள ஐம்பது அல்லது நூறைக் குறைத்துக் கொண்டு தருகின்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துவிட்டு கொஞ்சம் முன் பணமாக கொடுத்துவிடுவார். பின் இரண்டு நாட்கள் கழித்து மீதி பணத்தையும் கொடுத்து விட்டு அவனிடமிருந்து காரியம் முடிந்து பெறும்வரை நடப்பார். அவனும் இதே முடிந்துவிட்டது. அங்கு பைல் இருக்கின்றது. அவரிடம் கையெழுத்து வாங்க வெண்டும் என்று எதையாவதைச் சொல்லி இழுத்தடித்து மிகவும் கஷ்டப்பட்டு காரியத்தை முடிப்பது போல பாவலா செய்து விட்டு உங்களுக்காகத்தான் இவ்வளவு சிரமப்பட்டு சீக்கிரம் முடித்து தந்துள்ளேன் என்று கூறுவான். நபர் மிகவும் நம்பிவிட்டால் எனக்கு கொஞ்சம் சேர்த்து தாருங்கள் என்று மேலும் ஒரு சிறியதிற்கு ஆசைப்பட்டு பேசுவான். அவனின் அந்த ஆசை தீருவது இவரின் ஏமந்த நிலையைப் பெறுத்தது.

அப்பாடா ஒருவழியாய் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டார்கள் இதில் ஏது லஞ்சம் எனக் கேட்போர் கேட்கலாம். அவர்கள் இருவரும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெறவேண்டியதை பெற்றுக் கொண்டேன் என்றும், பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு தரவேண்டியதை தந்துவிட்டேன் என்று சொல்வார்களா! எப்படிச் சொன்னல் என்ன! காரியம் சிக்கலின்றி இனிது முடிந்தது.

என்ன தருவாய்! என்ன வேண்டும் என்ற பேரத்தில் ஆரம்பித்து இன்ன இன்ன பிரச்சனைகள் யார் யாருக்கு பங்கு என அலசப்பட்டு நாளொரு தேதியும் ஒவ்வொரு செயலுக்கும் விலை நிர்ணயிக்கப் படுகின்றது. காரியங்கள் ஒழுங்கு முறையின்றி வரிசை ஒழுங்கு முறையின்றி மாறி நடத்தப்பட்டு விரைவாக முடிக்க அதைப் பெற்று முடித்து வைக்கப் படுகின்றது.

இந்த முறையில்லையேல் இந்தக் காரியம் நடந்திருக்க முடியாது. இவ்வளவு நாள் ஆனாலும் செலவானாலும் பரவாயிலை காரியம் நடந்தேறியதே என்ற மகிழ்வு ஓர்புறம். சம்பளம் பெற்றுக் கொண்டு முறைப்படி செய்ய வேண்டிய வேலையை முறையின்றி பெற வேண்டியதை பெற்று ஒழுங்கு முறை தவறி செய்து கொடுத்ததால் அடைந்த பணப்பயன் புற சந்தோஷங்களுக்கு பயன் படுகிறது என்கிற அளவிலா ஆனந்த சந்தோஷம் மறுபுறம்.

இவைகள் உண்மையான சந்தோஷங்களா. இது நீடித்து நிலைக்குமா! என்று தெளியும் இந்த சந்தோஷ மோகம்! யார் அறிவார்! இறைவனன்றி!---குருஸ்ரீபகோரா.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13847884
All
13847884
Your IP: 172.69.63.72
2019-11-22 21:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg