gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:09

புறங்கூறாமை!

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

புறங்கூறாமை!

2512. மதியில் உள்ள முயல் கறையை எய்ய மணி கட்டப்பட்ட வாளை எடுத்துச் செல்பவரைப்போல் திருநீலகண்டனை காண மாட்டாதவர் உபாசாந்த நிலையை அறிவோம் என்று சொல்லித் திரிவர். இவர் எல்லாம் வீண் ஆரவாரம் செய்பவரே அல்லாமல் உள்ளத்தில் அரியாதவரே ஆவார்.

2513. கரிய நிறமுடைய காலையுடைய பருந்து வான் வீதியில் செல்லக் கடுமையான தாள்கள் நிறைந்த குளத்தில் கரிய நிறம் உடைய பாம்பு அடங்கியிருத்தல் போல் மனமே நின் பெருமையை நினைக்காது அடங்கி இருப்பாயாக. மற்றும் நீர் அருந்த முடியாத அலை கடலில் ஆறு போய் ஒடுங்குவது போலவும் மனமே அடங்குவாயாக.

2514. ` பகைவர் இற்ந்து போகப் போர் முனையில் நிலைபெற்று போர் செய்வது அற்ப அறிவுடையவர் செய்யும் ஆண்மைத்திறம் ஆகும் உபாசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கை கூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவர் ஆவார்.

2515. சிவத்தையன்றி மற்றத் தேவரிடம் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர். எல்லா உலகங்களுக்கும் அவரே ஒப்பில்லாத தனிப் பெருங்கடவுள் என்று எண்ணி வழிபடில் பதினெண் கணத்தவரும் உம் அழகிய அடியைக்காண வணங்கி எழுவர். அங்ஙனம் இறைவனை நாடி இன்பம் அடையலாம்.

2516. என்னைவிட எனக்கு இனிமை தரும் இறைவன் பொன்னைவிட மிக்க ஒளியுடைய துயவனை விளங்கும் எல்லாவுயிர்க்கும் உயிராய் உள்ள விகிர்தனை பொருந்தும் வகையில் மனத்தைத் திருவடியில் பதித்து நினைப்பீராக.

2517. நிற்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் படுத்துள்ள போதும் மலம் அற்ற சிவனைப் பொருந்தும் வகைகளை வாயால் கூறுவராகிலும் ஐம்புல ஆசைகளைக் கொடுத்து அவற்றை ஒவ்வொன்றாய் அறியும் குணத்தையும் போக்கி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெற்று விளங்கும் சிவத்துடன் உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையை அறிவீராக.

2518. உயிர்களின் உணர்வுக்கு உணர்வாய் எல்லா உலகமாய் ஏழ் உலகத்தவரும் எண்ணத் தகுந்த அறிவாய் விளங்கும் என் பெருமானாய்த் தகுதியுடையவரை அறிபவனாய் உள்ள இறைவனைத் தியானத்தில் பொருந்தியிருக்கும் ஞானியரை விண்ணுலகத்தவர் உய்வு பெறுவதற்காக விரும்புகின்றனர்.

2519. விண்ணவராலும் அறியப்படாத பெருமானை காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல் அகத்தே பார்வையைச் செலுத்தி கண்டு எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையைச் செய்து வந்தால் மேலான பரனாம் தன்மையைப் பெறலாம்.

2520. சிவபெருமான் தன்னை ஒப்பவர் இல்லாமல் ஏழு உலகங்களிலும் பரந்து நிறைந்துள்ளவன் அப்பொருமானின் திருவடியை அடைக்கலமாய் அடைந்த பின்பு பேரருளை அளித்த பெருமைமிக்க வள்ளலும் ஆவான். மாறுபாடு இல்லாத மனத்தை உடையவரின் அறிவுக்குள் விளங்குபவன் வாடாத சகசிரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான்.

2521. எம் தந்தையான சிவபெருமானின் திருவடியைப் போற்றி என்று வணங்கினேன். அவ்வழிபாட்டுக்கு வைத்தது எந்நாளும் வீசும் ஒளியே ஆகும். அது பிராணனால் அமையும் விளக்காகும். அதனால் உடலுக்கு இன்ப நிலை அருளும் நாதம் ஒலித்தது. அப்போது தேவன் விளங்கும் திருச்சபையைப் பார்த்தேன்.

2522. சகசிர தளத்தில் இறைவன் இருப்பதைக் கண்டேன். அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பவர் இலர். எலும்புக் கூண்டைத் தாங்கி நிற்கும் பிரமதண்டின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன். அவனது கோலத்தைக் கண்ணை மூடிக் கண்டேன். அப்போதும் உலகப் பொருள்கள் யாவற்றையும் நான் கண்டேன்.

2523. சிவபெருமானைப் புகழ்வதால் அமையும் ஞானமும் சிவானந்த தேனும் இருக்கும் சகசிர தளத்தை அறிந்து உடலைக் கடந்து நினைவைப் பதித்தவர்க்கு வனத்தை உடலாக்கும் வீரனும் அங்கு விளங்குவான்.

2524. மாண்புமிக்க மதி மண்டலத்தில் நினைவு கொண்டு நின்ற பெருந்தவத்தினரின் அறிவுக்கும் அறிவு தருபவனாக விளங்கும் சிவன் பேரின்பத்தைத் தருபவனாய் உள்ளான். அத்தகைய சிவ அறிவில் தாம் அறிவு ஒன்றுபடுவதில் உபசாந்தம் அமைந்து ஆகின்ற மலம் நீங்கியவராய்த் திருவடியின் கீழ் அமைதி பெற்றவர்.

2525. பத மூர்த்திகளான சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் மூன்றையும் குற்றம் உடையவை என்று நீக்கி இன்பத்தை அளிக்க வல்ல மாயா காரியமான இருளைவிட்டு ஆணவம் அற்று எனது யான் என்னும் புறப்பற்று அகப்பற்று என்பனவற்றை அறவே நீக்கி அங்குச் சிவத்துடன் ஒன்றாய் நிலைத்திருப்பவர் சிவ சித்தர் ஆவார்.

2526. சித்தர் அகண்ட பரந்த சிவத்தைக் கண்டவர். சிவ சிந்தனையில் நின்ற தூமாயை துவா மாயையில் தோய்ந்தாலும் தாமரை இலை நீர்மேல் பற்று இல்லாது விளங்குவர். இந்தச் சீவன்முத்தர் முன் கூறிய சாயுச்சிய நிலையை அடையும் தன்னம உடையவர். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சத்தியை வசப்படுத்தியவர். இவர்கள் சதாசிவத் தன்மை வாய்ந்தவர் ஆவார்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:07

உபசாந்தம்!

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

உபசாந்தம்!

2506. சிவஞானமே வீடுபேறு அடைவதற்கு வாயில். சிவனிடத்தில் தன் முனைப்பு இல்லாமல் அவனது திருவடியைப் பொருந்த்தியிருப்பதே பத்தி செய்வதற்கு வாயிலாகும். சிவத்தைப் பொருந்த்திச் சிவமாவதே எண்பெருஞ் சித்தி அடைவ்தற்கு வழியாகும். உயிர் வெறுப்பு இல்லாது அடங்கி இருப்பதே சத்தியை அடைவதற்கு உரிய வாயிலாகும்.

2507. காரிய உபாதி ஏழும் தூவா மயையில் இலய முறைப்படி ஒடுங்கும். காரண உபாதி ஏழும் பராகாயமான சிவத்தில் இலயம் அடையும். காரிய உபாதி காரண உபாதிகளின் வாசனை பற்று அற நீங்கினால் பெருமையுடைய உபசந்த நிலை பொருந்தும்.

2508. சிவ தத்துவத்தையும் கடந்து துரிய நிலையில் நிற்பது ஆன்மத் தூய்மையாகும். முற்படும் சாக்கிராதீத நிலையில் உடலில் பொருந்தும் பரம் வெளிப்பட்டு நிற்கும். அந்தப் பரம் தன்னில் உடனான சிவ வியாபகத்தில் நிற்பதே உபசாந்தம்.

2509. உயிர் முப்பத்தாறு தத்துவங்களின் சேர்க்கையால் ஆணவ மலத்தளையை நீக்கிக் கொள்ளுதல் கிடைத்தற்கரிய பேறான தன் இயல்பான வடிவத்தை அறிதல். தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களினின்று நீங்கித் தூய்மை அடைதல். அளவுபடுத்திச் சொல்ல முடியாத இன்ப நிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியைத் தரும் சிவனிடம் அடங்கி இருத்தல் என்பவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்தம் ஆகும்…

2510. தனக்கு வாய்த்த உபசாந்தம் அமையப் போய்ப் பொருந்திய சிவமாய் ஆதலால் சிவானந்தத்தில் ஆழ்ந்து அந்த நினைவு நீங்குதலும் மௌன நிலையாகிய சுக அனுபவத்தோடு நின்று அதையும் நீங்குதல் என்பது உபசாந்தநிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகள் ஆகும்.

2511. பரை ஒளியில் கலப்பைப் பெற்றுப் பரத்துடன் பிரிவு இல்லாமல் அலையற்ற ஆழமான கடல் நீரை ஒத்து நின்று குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சு அற்ற பேரானந்தத்தை அடைந்து பிறவிக் கடல் நீங்கியவன் ஆவான்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:05

காரிய காரண உபாதி!

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

காரிய காரண உபாதி!

2501. துன்பத்தைத் தருவதற்கு இடமான மாயா காரிய வித்தியா தத்துவம் ஏழும் பொருந்தும் பர உபாதியான சுத்தவித்தை ஈசுவரன் சதாசிவன் விந்து நாதம் சத்தி சிவன் என்ற ஏழும் காரிய காரண நிலையினின்று நீங்கத் திருவைந்தெழுத்து அமையும். அங்ஙனம் நீங்க உயிரானது சிவமாகும்.

2502. இறை சிந்தனையால் ஆன்மாவைப் பற்றியுள்ள காரிய உபாதியான முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க தத்துவங்களுக்கு வேறான நின்மல நனவில் பொருந்தும் கனவிலும் நனவோடு முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய நிலையில்; உறக்கத்தை அடையாமல் அரிய இடமான துரியத்தே தங்கியிருக்கும் உயிரே தொம்பதம் ஆகும்.

2503. முப்பதமான் ஓம் என்னும் பிரணவத்தில் அகரம் உயிர் உகரம் அகந்தை இல்லாத பரம் மகரம் சிவமாய் விளங்கும். இனிச் சிவய என்பதில் உள்ள சிகாரம் சிவமாகும். வகரம் பரம் ஆகும். யகரத்தை உயிர் எனக் கூறலும் ஆகும்.

2504. உயிர்க்கு உயிராய் நீக்கம் இல்லாமல் நிறைந்து அழிவுற்றுச் சோர்வைத் தரும் காரண உபாதிகள் உயிர்களின் பக்குவ நிலையிலே உடனாய் நிற்கும். இறைவன் கருணையால் அன்றி நடுக்கத்தைச் செய்யும் ஆன்மாக்களின் ஆணவத்தை நீக்குவது இயலாது.

2505. காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தினால் பசுத் தன்மை கொண்ட உயிர் மய்ங்கி நிற்கும். காரண உபாதியாகி ஏழில் உயிர் ஒளியை அறிவதில் மேலான சிவம் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனையாகும். அசிபத பொருளை உணர்ந்து அனுபவிக்கும் போது அது நீங்கிய பாழில் மேலான பரன் உள்ளது.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:03

முப்பாழ்!

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோ

#####

முப்பாழ்!

2495. மாயையின் செயலால் வித்தியா தத்துவம் ஏழினையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிய ஆன்ம சொரூபம் விளங்கும் உடல் பிரக்ஞையும் காரணமான சிவ நிலைகள் ஏழினையும் கண்டு நீங்க ஆன்ம அறிவும் காரிய காராணங்களாய் உள்ளவற்றைக் கண்டபோது உண்டான உபாசாந்தமும் அகலும் முப்பாழும் நீங்கப் பிறவி நீங்கும்.

2496. மாயாப்பாழும் சீவப்பாழும் உபாசாந்தப்பாழும் நிலைபெற்ற பர்னின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்ப்டி சிவசத்தியான அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ் நிலைகளாகும். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே தத்துவமசி என்ற வாக்கியத்தின் முடிவாகும்.

2497. தனக்கு ஒப்பு இல்லாத பரவிந்து ம்ண்டலத்தில் விளங்கும் தலைவனான நந்தியின் திருவடியை அடைய அதுவே நெறி என்று மாயப்பாழ் போதப்பாழ் உபாசாந்தப்பாழ் என்னும் மூன்றையும் கடந்து அதற்கு மேல் அளவிட்டு அறிய முடியாத நிலையில் மயங்கி நின்றேன்.

2498. துரியம் கடந்து சொல்வதற்கு முடியாத பாழினை அடைவதற்கு முடியாத மேலாம் நிலை என்று அறிவற்றவர் உரைப்பர். ஆனால் அறிவுடையவர் அரிய மேலாம் பாழ் என்றே வணங்குவது அரிய முப்பாழும் கடந்த நிலை என்பதை யார் அறியவல்லார்.

2499. முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கத் திரோதானமான நகரமும் மலமாகிய மகாரமும் நீங்கி திருவருட் சத்தியான பரை என்னும் யகார்மாகிய ஆன்மாவை உண்மையான பரநிலையின் முடிவில் சிவவச்த்தியுடன் சேர்ப்பிக்கும். ஆராய்ந்தால் அது வல்லவர் உயிர்களால் அறிய இயலாத சிவயநம என்பதன் கருத்தாகும்.

2500. மன மண்டலமே உடல் என்றும் உடலே மன மண்டலம் என்றூ கூறும் தன்மை அறிந்து அவ்விரண்டுக்கும் உள்ள உண்மையான தொடர்பை உணரும் ஞானியர்க்குத் தம்மை கீழ்படுத்தும் பள்ளமும் இல்லை. மேலாகச் செய்யும் மேடும் இல்லை. காரியப்பாழ் காரணப்பாழ் உபாசாந்தப்பாழ் என்பவை இல்லை. உள்ளமும் இல்லை. அவரிடம் பிரகிருதி நாட்டமும் இல்லை. ஆதலால் அவர் உடல் அறம் கடந்து விளங்குவர்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:00

முக்கரணம்! முச்சூன்ய தொந்தத் தசி!

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

முக்கரணம்!

2485. தான் தங்குவதற்குரிய இடமான பருவுடல் நுண்ணுடல் காரணவுடல் என்ற மூன்றில் பொருந்திய ஆன்மா தனக்கு அந்த உடம்புகள் வேறானவை எனக் கூறும் தன்மையைப்போல சிவன் என்றும் பரம் என்றும் சீவன் என்றும் உள்ள வேறுபாட்டையும் ஒன்று என்று உணர முடியுமோ.

2486. ஒளியை உடைய கண் பார்வையைப் மேலும் ஒளியை பெறும்படி செய்து பிரணவத் தியானத்தால் மூலாதாரக் கனலை எழுப்பி சந்திரக்கலை, சூரியகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்துத் தலைக்குமேல் உள்ள சகசிரதள வெளியில் பொருந்தித் தியானம் முதிரச் சிவபதம் பொருந்தும்.

2487. மனம் வாக்கு காயம் என்னும் முன்று கருவிகளின் சோர்வை நீங்கி அங்ஙனம் சோர்வு அடையாமல் எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் திறத்தைச் சிவபெருமான் தந்தான். உடம்பைப் பற்றிய சதாசத்தியான மனோன்மனி கவிழ்ந்த சகசிரதளத்தில் நின்றுவிட அதன்மேல் விரிந்த சகசிரதளத்தில் உன்மனி கலையில் சமாதி பொருந்தும்.

#####

முச்சூன்ய தொந்தத் தசி!

2488. அது என்ற தத்பதம் நீ என்ற தொம்பதம் அதுவாக ஆகிறாய் என்ற அசிபதம் என்ற மூன்றும் பழைய மூன்று பதங்களும் நின்மல் துரியத்தில் விளங்க அத்தோற்றத்தில் உயிர் பரன் சிவம் நிற்கும். இம்மூன்றில் சொல்லப்படும் பதமே தொந்தத் தசி யாகும்.

2489. தொந்தத்தசி என்னும் மூன்றில் பழைய கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழைமையான தாமதம் இராசதம் சாத்துவிகம் என்பனவையும் ஆகிய மலமும் குணமும் கெடச் சிவன் தோன்றினால் முழுமதியின் முன்பு இருள் கெட்டு ஒளி உண்டாவதைப் போல் ஆன்மப் பேரொளி அமையும்.

2490. தொந்தத் தசி என்ற வாக்கியப் பொருளை வாசியில் பொருந்த்திக் காண அம்முறையில் யகரம் விளங்கும் படியாகச் செய்து முடிவற்ற நிலையை அவ்வாக்கியத்தில் மேலே?றும் முறையில் சிவன் முன் வைத்துத் தத்துவமசி என உச்சரிப்பாயாக.

2491. சிவத்தை முன்வைத்துத் திங்கள் மண்டலம் விளங்குமாறு செய்து பிரணவமான உபதேசத்தை உண்மையான இதயத் தானமான சகசிரதளத்தில் பொருந்தி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் உண்மையுணர்ந்து சிவனுக்கு அடிமை என்று ஆன்மா இன்ப மயமாய் விளங்கும்.

2492. மாயையில் தோன்றும் சீவனான தொம்பதமும் மேலான பரையிடத்து விளங்கும் பரமான பசுவும், விரும்பப்படும் சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆன அந்த வாக்கியம் மேலான தொடராகும். அந்த உரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியான உணர்வு பொருந்தும்.

2493 .தேவதத்தனிடத்து ஆகிய காலம் இடம் முதலியவை விட்டால் அவனே இவன் என்பது போல் உடல் மாயை நீங்கிய நிலையில் நீ அது ஆகிறாய் என்பர். அப்போது உண்மை அறிவான உயிர் பரமாய்ச் சிவனாகும்.

2494. தாமதம் இராசதம் சாத்துவ்கம் என்னும் மூன்று குணங்களும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் அகர உகர மகர ஆகிய பிரணவத்தால் நீங்கும். சீவன் அகாரமாய்ப் பருவுடல் நுண்ணுடல் காரண உடல்களைக் கடந்து விளங்கும் துரியமும் தொந்தத் தசியால் ஆகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 15:57

மும்முத்தி! முச்சொரூபம்!

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

மும்முத்தி!

2474. சீவன் தன் முத்தி நிலையைத் துரியா தீதத்தில் பெறும். ஆன்மா தன் செயலற்று அருள் வழியே நிற்கும் நிலையே பரமுத்தி எனப்படும். சிவமுத்தி என்பது சிவானந்தம் ஆகும். மூன்று இடங்களிலும் சீவமுத்தி பரமுத்தி சிவமுத்தி என்று மூன்று வகைப்படுவதாய்ப் பிரணவத் தொனியின் வழியே செயலின்றி எண்ணியிருப்பின் நாதாந்தம் அமையும்.

2475. பிறவிப் பயனை அறியாதவரின் உயிர் பிறவியில் வந்து விடும். பிறவிப் பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர் இறைவன் திருவருளை நாடிப் ப்யன் பெறும். வெளியேயுள்ள உலகில் உள்ளத்தே உள்ள கருவி கரணங்களிலும் உயிருக்கு நன்மை தருவது என்பதை அறிந்து உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நிற்கும் சிவத்துடன் பொருந்துதலே முத்தியாகும்.

2476. சிவத்தை நினைத்து சிவமாகி ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று குணங்களையும் அழித்து தாமத இராசத சாத்துவீகம் ஆன முக்குணங்களையும் தொலைத்துத் தவத்தால் அடையும் மும்முத்தி என்ற அது நீ ஆகின்றாய் என்ற அறநெறி நின்று சோகம் பாவனை செய்பவர்க்கு மலம் இல்லாச் சிவன் தானே வெளிப்பட்டு அருளுவான்.

2477. தளையைப் போக்கும் பரசிவ்னே, எண்பெருஞ் சித்திகளும் வீடு பேறும் மேலான சிவமுமாகும். நின்மல் துரியாதீதமும் மூன்று துன்பங்களைத் தொலைக்கும் சிவானந்தம் மேலான சமாதியாகும்.

#####

முச்சொரூபம்!

2478. ஆணவ மலத்தில் கட்டுண்ட உயிர்கள் பக்குவமாதற் பொருட்டு இறைவன் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்பனவற்றைக் கூட்டி ஆணவம் வலிமைகெட இருவினை ஒப்ப வந்த நிலையில் சிவோகம் பாவனை மேற்கொண்டு செய்து மேலும் ஒரு நிலையாக்கிச் சீவ பர சிவ நிலைகளை அடைந்து நீங்கி அவ்விடத்து இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அந்த உயிர்களை நிலைபெறச் செய்வான்.

2479. சகலர், பிரளயக்லர், விஞ்ஞானகலர் என்னும் மூவர்கள் வாழ்கின்ற இடம் பிரகிருதி மாயை, தூமாயை, துவாமயை ஆகும். இந்த மூன்று மாயைகளிலும் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றியுள்ளன. இம்மூன்று மண்டலங்களிலும் பொருந்தி நிற்கும் ஆத்ம பேரொளியைக் கண்டபோதே எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடியும்.

2480. உலகம் தோன்றிய வண்னமே ஒடுங்கிப் பல ஊழிகள் போயின. அப்போது ஊழி முடிவில் சீவன் பரன் சிவன் என்ற ஒன்றுள் ஒன்றாய் ஆராய்ந்து உணரும் தன்மையில் சிவன் உடனாயிருந்து உபசரிக்கும் அள்வையும் பெருமையையும் யாரோ உணர்ந்து தெரிய வல்லாவர்.

2481. உயிர் இனங்களைப் பெரிதாய் முதலாக எண்ணப்படும் வேறுபாடுகளாய் விகாரப்படுத்தித் தான் அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் ஒளிவடிவாய் வெளிப்பட்டு அருள் செய்யும் நாத சத்தியின் தலைவனான இறைவன் உயிர்களின் தொகுதி உருவமாயும் உடன் இருப்பவனாகவும் அங்ஙனம் இருந்தாலும் அவற்றால் அறியப்படாதவனாயும் விளங்குகின்றான்.

2482. மாணிக்க மணியின் முன் வெண்பளிங்கு அதன் வண்ணம் தன்மை என்பனவற்றைப் பெற்று மாணிக்கம் என்று கூறுமாறு நிற்கும். அது போல் தணிந்த இயல்புடைய ஆன்மா சீவ சொரூபம் பர சொரூபம் சிவசொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது அவையேயாய் ஆகும்படி செய்த பெருமை உடைய சிவனது திருவடிகளைப் பற்றி நிற்கும்.

2483. பளிங்கைப் போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவ ஒளியின் பிரகாசம் தோன்ற தன்மையைச் செய்யும் கண்மணியில் நாடி ஒளியுடைய தத்துவமசி என்னும் முப்பதத்தால் போதல்பாழ் சீவப்பாழ் சிவப்பாழில் நின்று சொல்லால் அடைய முடியாத பிரணவத்தால் ஞானமுத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால் அறியாமை ஆன இருள் நீங்கிப் பிறவி அறும்.

2484. மாறுபட்ட தன்மையுடைய ஆயிரம் இதழ்த் தாமரையுள் விளங்கும் பேரொளியைச் செல்லும் மூலாதாரத்தினின்றும் தோன்றும் நாதமானது அருளால் கிட்டுமானால் அங்கே பொருந்தும் அமுதேசுவரி வெளித்தோன்ற முன்பு அடைந்திருந்த மேல் வாசலைத் திறந்திருப்பாயாக.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 15:55

முத்துரியம்!

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

முத்துரியம்!

2466. உயிர் கேவல சாக்கிரம் கனவு உறக்கம் என்பனவற்றைக் கடந்து சிவ துரியத்தை அடையும். சீவனுக்கு ஆதியான பரமும் கனவு நனவு உறக்கம் என்ற மூன்றையும் கடந்து பர துரியத்தை அடையும். சிவனும் பரனைப் போன்று நின்மலக் கனவு முதலிய மூன்றைக் கடந்து துரியத்தை அடையும். இப்படித் தொந்தத்தசி -தத்துவமசி என்ற பெருவாக்கியம் விளக்கும் நெறி அமையும்.

2467. சீவனின் நனவில் பொருந்தும் துரிய நிலையே தொம்பதம் ஆகும் சகல சாக்கிரத்தி; உள்ள துரியத்தில் ஆன்மா பரதுரியம் பொருந்தும். சீவன் அப்பர நிலை நீங்கிச் சிவநிலை அடைவது நின்மல நனவில் ஏற்படும் துரியம்-பேருறக்கம். ஆகும். மேன்மை பொருந்திய மேல் கூறப்பெற்ற சிவபர சிவதுரிய நிலைகள் இவ்வாறு அமையும்.

2468. சீவன் விளங்கும் துரியத்தில் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என நான்காகிப் பணியும் பரதுரியத்தில் பொருந்தும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் என்னும் நான்கும் மேலான பரமாகிப் பொருந்தும். சீவ பரசிவச் சேர்க்கையில் சீவ துரியம், பரதுரியம் என்ற பொதுமையில் இரண்டும் சீவபர துரியத்தில் உள்ள விரிவாகிய எட்டு நிலைகளுமாகப் பத்தாகும்.

2469. மேல் கூறப்பட்ட பத்து நிலைகள் பொருந்திய சீவபர துரியத்தில் சிவ்த்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி நின்று பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடையச் செய்கின்ற நாத விந்துக்களான இரண்டு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக.

2470. சீவஒளி விளங்கும் துரிய நிலையில் நீங்காது பொருந்தியிருங்கள். இதை நீங்கள் அடைய முடியாது என்று எண்ணினால் அடையக்கூடிய நெறியை உணர்த்தும் ஞன நூல்களைச் சிந்தித்திருந்தால் பல் நா உதடுகள் பொருந்திச் சொல்வதற்கு மேற்பட்ட சிவதத்துவம் நாதமாய் அமையும்.

2471. அசத்தான முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்து வடிவான பரமாய் சார்ந்திருந்த சுத்த மாயை அசுத்தமயைகளை அருள் சத்தியால் சிதைத்து அதன் விளைவான பிரிவற்ற சிவ சத்தியைப் பொருந்திடும் இயல்பைச் சிவநெறியில் ஈடுபட்ட அன்பர் நெறி காடும் முடிவை அறிந்திருந்தனர்.

2472. நனவில் நான்காம் நிலையான துரியத்தில் தன் உயிர் விளங்கும் தொம்பதம் என்ற ஒளி நிலை ஆவது போல் வினைகளினின்றும் நீங்கிய சிவன் நின்மலச் சாக்கிரத்த்தை ஆதியாக உடைய நான்காம் நிலையான நின்மலதுரியம் அடைய பரதுரியம் அமைந்து அதனையும் கடந்த துரிய தீதத்தில் தற்பரம் என்ற நிலையை அடையும்.

2473. முத்துரியத்தில் தொம்பதம் என்றும் தற்பதம் என்றும் சொல்வது போல் நம்பத் தகுந்த மூன்றாம் துரியமான சிவதுரியத்து மிக நுண்ணிய நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் பரம் பொருள் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிறப்பு மிக்க நந்தியாகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 15:52

பரலட்சணம்!

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

பரலட்சணம்!

2452. நின்மல துரியாதீதத்தில் விளங்கும் நந்தி ஆன சிவம் பரந்து நிற்கும் தனமையும் அறிவும் கொண்டது. ஆன்மா துரியாதீதத்தில் தன் அறிவை இழந்து நிற்பன். ஆன்மாவில் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்துடன் ஒன்றாய்ப் பொருந்தினால் சிவம் உயிரில் பதிந்து தனது பரப்பையும் அரிவையும் பொருந்தும்.

2453. சிவன் முதலும் முடிவும் இல்லாத மேலான தலைவர். அவர் பேரொளி வடிவம் உடையவர். எங்கும் நிறைந்தவர். நல்லார்க்குத் தோன்றுவார். அல்லார்க்குத் தோன்றார். செம்மையோடு விளங்குபவர். அந்தச் சிவஞானத்தை அவ்வாறு உணர்வில் பெற்றவர் நல்வினை உடையவர் ஆவர்.

2454. நின்மல துரியத்தில் சிவன் பரையோகத்தில் ஆழ்ந்து ஆணவம் அற்று விளங்கும் நிலையைக் கடந்து அது தூய்மை அடையும் துரியாதீதத்தில் அந்தச் சீவர்களுக்கு வீடுபேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந்தலைவனான சிவத்தைப் பிரணவச் சுனையில் துருவிக் காண வல்லார்க்கு எவ்வகைப் பட்ட குற்றமும் இல்லை.

2455. செந்நிறமான நாதத்தின் முன்பு வெண்மையான இய்லபு கெட்டு ஒடுங்கும். அது போன்று உண்மையான பரசிவத்துடன் சீவன் முனைப்பு அற்று ஒடுங்கும். பொய்யான உலக முகத்து ஓடாத உள்ளத்துடன் நிற்பதுடன் எண்ணுவதையும் கைவிட்ட பாழில் குண்டலினி சத்தியாகிச் சிவமேரு என்றபிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனுடன் ஒன்றாவாள்.

2456. சிவமேருவில் நாத சத்தியுடன் பொருந்திய சீவர்க்குக் கலை முதலிய தத்துவங்கள் ஒடுங்கும். ஒடுங்க எஞ்சியுள்ள சுத்தமாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியுடன் மீண்டும் முனையாதபடி நீங்க துவாத சாந்தத்தில் உண்மைப் பொருளான சிவம் விளங்க அப்பெருமான் அச்சத்தை நீக்கி என்னை அடிமையாய் ஏற்று ஞான நிலை பெறுமாறு செய்தான்.

2457. என் உண்மை நிலை இன்னது என உணர்த்தினான் நந்தியெம்பெருமான். அவன் என் உண்மை வடிவை அறிந்தும் இதுவரை சொல்லாத பரவெளியுடன் அறிவுடன் செல்லுமாறு செய்து பின் பிரணவ ஒளியில் ஆன்ம வடிவை வேறாய் விளங்கத் தன்சத்தியை அளித்துத் தற்பரம் ஆக்கினான்.

2458. நுண்மையான பூத நிலையில் விரிந்தும் பெரும் பூத நிலையில் சுருங்கியும் மண், விண், தீ, நீர், காற்று, எங்கும் நிறைந்த கதிரவன், சந்திரன், பயனாய் அகண்டமான வானத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றான்.

2459. அருவத் திருமேனி கொண்ட சிவத்தின் நிலையில் தானாக விளங்கும் சத்தியும் தற்பரனாய் விளங்கும் அந்தப் பரையே பரனுக்கு உடல் ஆகும். தனு கரண புவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்னத்தால் ஞான சத்தி முதலிய பேதங்களைப் பெருமை மிக்க பரனிடத்து அகலாமல் இருந்து படைப்பு முதலிய ஐந்தொழில்களைச் செய்து நடிப்பாள்.

2460. உடம்புக்கு கீழ் மேல் சூழ் இருந்து மெய் வாய் கண் மூக்கு செவி என்பனவற்றைக் காக்கும் விந்து சத்தி பரையும் பரையாக அருவமான சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கில் ஞானத்தைப் பெறும்படி செய்து ஆணவ மலத்தில் கட்டுண்டவர்களை நட்த்தும்.

2461. பரையினது ஒலி வேறு வேறு இயல்பு உடையதாய் அறு ஆதாரங்களில் பொருந்தி ஆறு வகையான வேறுபாடுகளை அளிப்ப்தாய் வேறு வேறு தத்துவங்களை மாயையால் தொழிற்படுத்துகின்றது. மாயை ஒளியைத் தூண்டுவதாய்ச் சீவனை அசைவித்து மூச்சை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையுமாறு செய்யும். ஆனால் மாயையின் செயலான தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத் தக்க பேராகும்.

2462. தனது பரம் என்ற நிலை ஒப்பில்லாத பேரொளியில் நிலைபெற்று உள்ளது. அதுவே மேலான ஒப்பில்லாத ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும். ஆன்ம அறிவு நீங்கித் தன் ஒளியை அறிந்து சிவப் பேரொளியில் புகுந்து சுட்டி அறிகின்ற அறிவை விட்டு நிற்பதைவிட இங்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை.

2463. பழைய மறைகள் சிவத்துக்கு மேன்மையான வானமே உடல் என்று கூறும் பிறைத் திங்களைச் சூடிய சிவபெருமான் விளங்கும் வானில் துரியாதீத நிலையில் தன்னைக் கண்டு அப் பரநிலையை அடைந்தவனும் தூமாயைக்கே நெருங்கில் அவன் ஆராயின் தூய்மை உடையவன் ஆகமாட்டான்.

2464. வான், காற்ரு, தீ, நீர் பொருந்தும் நிலம் என்பவை இலயமாகும் கோயிலான தற்பரமே அந்தத் துரிய நிலையில் விளங்கும் சிவம் ஆகும். வான், காற்று, தீ நீர் பொருந்தும் நிலம் என்பனவற்றில் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியே அவனது வடிவம் ஆகும்.

2465. பண்னிரண்டாம் நிலையான துவாத சாந்தப் பெருவெளியில் பரவிய கதிர்களையுடைய சிவத்தைப் பொருந்தும் வண்ணம் தானாகவே வந்து பொருந்தும். எனவே இந்த நிலையை நழுவ விடாமல் இருங்கள். உயிர்களுக்குச் சொல்லக் கூடியது இதைவிட வேறு ஒன்றும் இல்லை.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:24

முப்பரம்!

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

முப்பரம்!

2445. உடலில் இயல்பாகவே சுற்றி எழுகின்ற அக்கினி மண்டலம், கதிரவ மண்டலம், சந்திர மண்டலம் என்பனவற்றுள் விளங்கும் சிவனை இளங்கொடி போன்ற குண்டலினி சத்தி தாங்கி நின்று உயிர்கட்டு இன்பத்தை விளைவித்து கீழ்முகம் கொண்டு அக்கினி மண்டலத்துள் பக்குவம் அடையச் செய்து நன்மை அருளூகின்றான்.

2446. குண்டலினி சத்தி தலையைக் கடந்தபோது வான் மண்டலம் முழுவதும் பரவியுள்ளது. அது மிகவும் மேம்பட்ட பொருளாக விளங்கும், அவளுடன் பொருந்திய சிவன் அங்கு நின்ற எல்லாப் பொருளிலும் முழுமையாய் கலந்து நின்றான். கன்று கதறியபோது ஓடி வரும் தாயைப் போன்று சீவன் நினைத்த போது அருள் பொழிவன் இறைவன். அவன் அருளியபின்பு அந்தச் சீவன் குன்றின் மீது இட்ட விளக்கைப் போன்ற ஒளி பெறும்.

2447. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் விளங்கும் பரம் சொல்லாமல் சொன்ன உபதேசத்தைச் சொல்லப் போனால் சிவபரம் பொருள் வேறாய் வெளிப்பட்டுக் குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாது காத்துக் கொள்ள வேண்டும்.

2448. தத்துவங்களின் பற்று நீங்கப் பொருளைப் பற்றிய விஞ்ஞான கலர் நிலையடைந்து ஆன்மாக்கள் சதாசிவம் ஆவார். அப்படிப் பற்று நீங்க நாதத்தைத் தொழுவதால் நாத வடிவான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும். சிவபேதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே பழைய தத்துவங்களின் பற்று நீங்கிப் பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிக்குப் பரமாகக் கூடும்.

2449. மேலான சதாசிவ பதவி அடைந்தவர் பாசம் பற்றாத மிக மோசமான நிலையை அடைந்தவர் ஆவார். அவர் சிவத்தைச் சார மிக மேன்மையான சிவனந்தம் விளங்கும். இவ்வாறு ஆன்மாக்களை மிக மேன்மையாய்ச் செய்வது அறிவின் வடிவான சிவமாகும்.

2450. நின்மலச் சாக்கிரத்தில் கலை வித்தை அராகம் புருடன் மாயை என்று ஐந்து தத்துவங்களும் நீங்கி கருவி அறிவையும் விட்டு ஆன்மா தனித்து நின்றபோது நினைவையும் விட்டு நீங்கிய துரியாதீதத்தில் நேயப் பொருளான சிவத்தை சார்ந்து அறிவு வடிவான உயிர் தற்பர நிலையை அடையும்.

2451. தன்னைத் தூய்மையாகக் காணாலும் என்னிடம் விரிவாகக் காணலும் பின்பு கருவி கரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலை மாறிச் சிவனும் சீவனும் கலந்து தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாக உடைய பிரணவ வடிவான சிவத்தை நாடுக.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:22

முக்குற்றம்! முப்பதம்!

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

முக்குற்றம்!

2435. காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்கள் உள்ளன. அவையாவும் உயிர்களுக்குத் துன்பத்தை தருவன. அதனால் உயிர்கள் தங்களின் உண்மை வடிவத்தை அறியாமல் மாயா காரியமான இருளில் ஆழ்ந்து மயங்கியுள்ளன. காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களிலிருந்தும் விடுபட்டவர் பிறப்பு இறப்புகளை நீக்கினவர் ஆவர். அங்ஙனம் நீங்காதவர் அம் முக்குற்றங்களின் காரியமான மாயையில் துன்புற்று அழிவர்.

2436. காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் நீக்கிப் பாதுகாவலான திருவடி பற்றியிருக்கும் எனக்கு மணியோசை பொன்ற பிரணவத் தொனியினும் பொருந்துவதான ஒளியைத் தலைப்படுதல் இயலும்.

####$

முப்பதம்!

2437. தோன்றிய தீ என்ற பதம் அது என்ற பதத்தை சூழ்ந்திருக்க ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஆகிறாய் என்ற பதமும் என்ற இம்மூன்றோடும் பொருந்தியவன் பிறவி நீங்க அகண்டப் பொருள ஆவான். இவ்வாறு ஏற்றுக் கொள்ளப் பட்டவன் இவ்வுடல் ஒழியச் சிவன் ஆவான்.

2438. திருவருளால் பெறும் நாத உபாசனையில் நின்று பூதம் முதலாகப் பேசப்படும் தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும் நாதாந்த நிலையில் நீங்கி வேதம் உணர்த்திய நீ என்ற பதமாதல் உண்மையான நிலையாகும்.

2439. தத்பதம் என்பதும் துவம் பதம் என்பதும் திருவருளால் பொருந்தியிருப்பதும் அசிபதம் ஆகும். எல்லாவற்றாலும் அளவினால் அளவிட்டுக் கூற முடியாத சிவபெருமான், பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்தருளுகின்றான்.

2440. உயிரும் பரமும் அசிபதத்தில் பொருந்தித் தங்கு தடையற்ற சிவமும் கலந்தால் உவமம் கட்ட இயலத பாலும் தேனும் அமுதமும் போன்று அந்த இன்பப் பொருளால் வாய் பேசா மௌனத்தில் திகழ்வதாகும்.

2441. தொம்பதம்- சீவன் தத்பதமாக- பரமாக மாறுவது அசிபத நிலையில் உள்ளது. சிவனை நம்பிய சீவன் சிவத்தன்மை விட்டு பரன் என்ற பேரைப் பெற்றுச் சிவன் ஆகின்றான். மேலான உண்மையுடைய பெருவாக்கியத்தில் அழகிய அசி என்ற பதத்தின் செம்பொருளை உணர்த்திச் சிறப்பு மிக்க நந்தியின் சிவபெருமான் எங்களை ஆண்டருளினான்.

2442. ஐம்பது எழுத்துக்களும் வாக்கின் வடிவான சத்திகள் என்பதை மக்கள் அறியாதவர் ஆவர். அவருள் அறிந்தவர் சிலர் சத்திகளைக் கொண்டே இறைவனை நாடி உரைக்கப்படும் முப்பதத்தால் உணர்த்தப்படும் பொருளில் உணர்வைச் செலுத்தி விந்து நாதமாய்ச் சிவமாய் விளங்குவர்.

2443. நாத ஒலியை அறியும் ஆன்மாவின் நிலைநழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும். ஐம்பொறிகள் ஐந்தும் சத்தம் முதலியவற்றை விடப் பரம் ஆகும். இந்த ஐம்பொறி அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே சிவன் அநாதியான நின்மலச் சாத்திரம் முதலியவற்றைக் கூட்டி உயிர்களைப் பக்குவப் படுத்துகின்றான்.

2444. ஆன்மா மேலான நின்மலத் துரியத்தில் நனவு நிலையில் விரியாத காலத்து நின்மலக் கனவு அமையும். இதில் அலையில்லாத கடல் போன்று அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும். சிவத்திடம் பொருந்திய போது அதுவும் நீங்கிய நின்மலத்துரியமே அசிபதமாகும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

21578413
All
21578413
Your IP: 172.70.34.206
2021-06-13 10:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg