gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழத் தகுதி உள்ள உயிர்களே.! வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப் படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்!

குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 07 January 2019 16:27

சக்திபீடம்-2-ஆ/ஆம்

சக்திபீடம்-2-ஆ/ஆம்

ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#*#*#*#*#

எண் சக்திபீடம்-2

அட்சரம் ஆ/ஆம்(இரண்டாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் அவிமுக்தம் / ஆனந்தபவன் / மஹாச்மசானம் / வாராணாசி
அட்சரதேவிகள் ஆகர்ஷணீ / அதர்விணீதேவி
அங்கம் ஸ்தனம்
பைரவர்/இறைவன் காலபைரவர்/விஸ்வநாதர்-9/12
அங்கதேவி/இறைவி விசாலாட்சி
பீடங்கள் வாராணஸ்யை நம
51-ல் நம் உடலில் முகவட்டத்தில்
ஊர் வாரணாசி / காசி
அருகில்
மாகாணம்/நாடு உத்தரபிரதேசம்

இது வாரணாசி எனும் மகாசக்தி பீடம். இந்த தலத்தில் வீழ்ந்த ஸ்தனங்களிலிருந்து பால் குபுகுபுவெனப் பொங்கி நீராய் மாறி வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் வருணா நதியாகவும், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் அஸி நதியாகவும் ஆகி இவ்விரு நதிக்களுக்கு இடையே உள்ள இடமே வாரணாஸி ஆனது.
சக்ர புஷ்கரணி என்பது மணிகர்ணிகா கட்டம் ஆகும். மணிகர்ணகைக்கு ஒர் கோவில் மற்றும் குளம்- இதுவே வாராணாஸியின் மிகப் பெரிய மாயானம்.
விசாலாட்சி அம்மன் கோவிலில் சிவலிங்கம், முருகன், விநாயகர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உண்டு.
உபசக்தி பீடங்கள்:
வாராணாஸீ-க்கு தெற்கிலுள்ள அஸி நதிக்கரையில் தக்ஷிண ஸாரநாத் வடக்கில் உள்ள வருணா நதிக்கரையில் உத்ர ஸாரநாத் –இங்கு சாக்தர்கள் அப்பியாஸிக்கும் தக்ஷிண, உத்ர மார்க்கங்கள் ஸித்தியை அளிக்கும் திறன் உடையவை.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பச்சைநிற மேனி-தூய வெண்ணிற ஆடை- வலதுமேல் கரத்தில் கத்தி, கீழ்கரத்தில் வரமுத்திரை-இடதுமேல் கரத்தில் கேடயம், கீழ்கரத்தில் அபய முத்திரை உடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ஆகாராக்யா தர்விணீ து ச்யாம சுக்லாம்பரா சுகரீ
த்தே கட்கம் ச கேடம் ச க்ரமேணைவ வராபயௌ:

#####

ஞாயிற்றுக்கிழமை, 06 January 2019 11:48

சக்திபீடம்-1-அ/அம்

சக்திபீடம்-1-அ/அம்

எண் சக்திபீடம்-1
அட்சரம் அ/அம்- (முதலாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் காமரூபம் / காமகிரி
அட்சரதேவிகள் அமிர்தா/அஜாமுகீ
அங்கம் யோனி
பைரவர்/இறைவன் உமாநந்தா
அங்கதேவி/இறைவி காமாக்யா / காமரூபினி / காமேஸ்வரி / காமா
பீடங்கள் காமரூபாயை நம- யோனி பீடம்
51-ல் நம் உடலில் தலையில்
ஊர் கௌகாத்தி
அருகில் பிராக்ஜோதிபுரம்
மாகாணம்/நாடு அஸ்ஸாம்

இது காமரூபம் / காமகிரி எனும் மகாசக்தி பீடம். கருவறையில் அம்மன் சிலையோ / விக்ரகமோ கிடையாது. அருவுருவம். ஒரு சிறிய நீர்த்தொட்டி 32 அங்குல அளவில் திரிகோண வடிவத்தில். அதன் மையத்தில் கல்லால் வடிக்கப்பட்ட யோனி அங்கம் உள்ளது. புறக்கண்களுக்கு தெரியாவண்ணம் தொட்டியில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். கருவறையில் மறைவிடமாய் உறைவிடம் கொண்டுள்ள அன்னையை நாம் அதிர்வலைகள் மூலமாக உணர்ந்து ஆனந்தப்படலாம். யோனிபீடம் என்பர்.
இங்கு அனுஷ்டிக்கப்படும் கௌமார்க்க குல சாஸ்திரம் சாக்தர்களுக்கும் ஞானிகளுக்கும் முக்தி அளிக்க வல்லது.
திருக்குளம் – புனிதநீர்- சௌபாக்ய குண்ட் உள்ளது.
கௌல / வாம மார்க்க முறைப்படி அம்மனுக்கு பூஜை வழிபாடுகள்.
உபசக்தி பீடங்கள்:
காமாக்யாவில் தேவியின் ரஜஸ் விழுந்த இடம் ‘வம்சா’ இங்குள்ளது.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ரத்த வர்ண நிறம்-வெண்ணிற ஆடை ஆட்டின் முகம் சதுர் புஜங்களில் வலது கரங்களில் வில்லும் வர முத்திரையும், இடது கரங்களில் அம்பும் அபய முத்திரையுடன் ஹம்ஸ வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
அம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் அஜாமுகி
ரக்தவர்ணா ஹம்ஸகா தவளாம் சுகரீ
சராஸநம் வரம் தக்ஷே
தத்தே வாமே சரா அபயௌ:

#####

ஞாயிற்றுக்கிழமை, 06 January 2019 11:13

பீடங்கள்!

பீடங்கள்!

சதச்ருங்க மலையில் விஷ்ணு அம்சம் கொண்ட சனத்குமாரர் ஈசனைக் குறித்து தவம் செய்ய அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன் கையிலிருந்த ‘டமரு’ என்ற உடுக்கையில் ஒலி எழுப்ப சனத்குமரர் கண் திறந்து பார்த்து வணங்கினார். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது. சனத்குமாரரை ஆழ்ந்த தியானத்திலிருந்து எழுப்ப சிவபெருமான் தன் டமரூ என்ற உடுகையிலிருந்து டம்டம் என்று நாதம் எழுப்பியபோது அந்த நாத ஒலி அட்சரஒலியாக உருவாகி பல புண்ணிய இடங்களை அடைந்து உருவம் பெற்று பதிந்துள்ளது.

பிரளயத்திற்குப்பின் உலகில் படைப்புத் தொழிலை ஆரம்பித்து அனைத்தையும் உற்பத்தி செய்த பிரம்மனுக்கு. மற்ற தொழில்களான காத்தல். அழித்தல். அருளல். மறைத்தல் ஆகியமற்ற தொழில்களும் சிறப்பாக நடக்க விஷ்ணு மற்றும் சிவனின் ஈடுபாடு தேவை என்று நினைத்தார். படைக்க நானும், காக்க விஷ்ணுவும் இருக்க மற்ற தொழில்களும் சரிவர நடைபெற்றால்தான் மீண்டும் சிருஷ்டிதொடங்க முடியும். ஜீவன்கள் மறைந்து கொண்டிருந்தால்தான் புதியவைகளை படைக்க முடியும். என நினைத்த பிரம்மன் பெரும் யோகியாக விளங்கும் ஈஸ்வரனை போக வாழ்க்கைக்கு மாற்ற தன் மகன் தக்ஷபிராஜாபதியிடம் சென்று நீ மாகாமாயாவை நோக்கித் தவமிருந்து மாகாமயையை உனக்கு மகளாக பிறக்க வேண்டிக்கொள்ளச் சொன்னபடி தட்சன் வேண்ட தட்சாயணியாக பிறந்தவளை பிரம்மனும் விஷ்ணுவும் நேரில் சென்று மணந்துகொள்ளச் சொல்ல ஈஸ்வர் விரும்பி மணம் புரிந்து கொண்டார்.

ஈஸ்வரன் தனக்கு மருமகன் என்ற நினைவினால் தக்ஷபிரஜாபதிக்கு கர்வம் ஏற்பட்டது. மகளையும் மருமகனையும் காண கயிலாயத்திற்கு சென்றபோது என்ன சொல்லியும் நந்திதேவர் உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட தட்சன். கயிலை நாதனை அவமானப்படுத்தும் நோக்கில் ஓர் யாகம் நடத்த முடிவு செய்து மருமகன் சிவன் தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பு அனுப்பினான்.

சிவன் விருப்பத்திற்கு மாறாக தட்சாயினி தந்தையின் யாகத்திற்கு வந்தாள். தந்தை அவளை வரவேற்காமல் அவளையும் அவள் கணவன் சிவனையும் இழிவு படுத்தி பேச அவமானப்பட்ட தட்சாயினி, உன்னால் உருவான இந்த உடம்பு எனக்கு தேவையில்லை, இனி நீ எனக்கு தந்தையுமில்லை என கூறி ஆவேசத்துடன் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவள் உயிர் போனாலும் அக்னி அவள் உடலை தீண்டவில்லை. சிவனால் உருவான வீரபத்திரர் அங்கு வந்து யாகத்தில் கலந்து கொண்டோரை துரத்திவிட்டு யாகத்தை அழித்து தட்சனையும் கொன்றார். இந்திரன் குயிலாக பறந்தான். அக்னியின் நாவை அறுத்தார் வீரபத்திரர், சூரியன் பற்கள் உடைந்துவிட்டன. சந்திரன் தேய்வுற்றான். அங்கு வந்த சிவன் அவள் உடலை தன் தோள் மீது போட்டுக் கொண்டு கோபத்துடன் தாண்டவமாடினார். அது ஊழிக் கூத்தானது.

சிவன் ருத்ரதாண்டவம் ஆடிய போது உபயகாவேரி எனும் இடத்தில்அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர அந்த பதினொரு இடங்களிலும் பதினொரு சிவபருமான் உருவம் தோன்றி ருத்திர தாண்டவத்தை ஆடியது.

சிவ உருவங்கள் ருத்ர தாண்டவம் ஆடிய பகுதியை அடைந்த பெருமாள் பதினொரு விஷ்ணுவாய் தோன்றி பதினொரு சிவபெருமானையும் கட்டித் தழுவ சிவன் கோபம் தணிந்து சாந்தமடைந்து ஒரே உருவமாய் மாறினார். சிவபெருமான் சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் பதினொரு வடிவங்களாக பெருமாள் கோவில் கொண்டார். அவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படும்.

சிவனின் சடாமுடி உதிர்ந்த பதினோரு இடங்களிலும் பத்னொரு ருத்திரர்கள் தோன்றி ருத்ர தாண்டம் ஆடியதை விஷ்ணு பதினொரு உருவமெடுத்து சந்தப் படுத்திய இடங்கள் பன்னிரு சிவ பீடங்களாக உருவாயின. அவை.
1.தத்புருஷ பீடம்-திருநாங்கூர் ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸர் சுவாமி திருக்கோவில்.
2.அகோரபீடம்-கீழைத் திருக்காட்டுப்பள்ளி அகிலாண்டநாயகி உடனுறை ஆரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில்.
3.வாமதேவபீடம்-கீழ் சட்டநாதபுரம் திருயோகிஸ்வரர் யோகாம்பாள் உடனுறை யோகநாத சுவாமி திருக்கோவில்
4.சத்யோஜத பீடம்- காத்திருப்பு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் சுவாமி திருகோவில்.
5.சோமபீடம்-,திருநாங்கூர் அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில்
6.சர்வபீடம்- அல்லிவிளாகம் செம்பதனிருப்பு நாகநாத சுவாமி திருக்கோவில்
7.மகாதேவபீடம்-திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை உடனுறை நம்புவார்க்கன்பர் சுவாமி திருக்கோவில்,
8.பீமபீடம்-திருநாங்கூர் கைலாசநாதர் சுவாமி திருக்கோவில்,
9.பவபீடம்-திருநாங்கூர் சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்,
10.பிராணபீடம்-அத்தீஸ்வரம் பெருந்தோட்டம் அதுல்ய குஜாம்பாள் உடனுறைஐராவதேஸ்வரர் சுவாமி திருக்கோவில்,
11.ருத்ரபீடம்- அன்னப்பன்பேட்டை சுந்தராம்பாள் உடனுறைசுந்தரேஸ்வரர் திருக்கோவில்
12.பாசுபதபீடம்-மேல்நாங்கூர் நயனவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில்

பதினாலு உலகங்களும் நடுங்க, இவ்வுலகிற்கு பேராபத்து நிகழும் என அஞ்சிய சூரிய சந்திரர்கள் மற்றும் தேவாதி தேவர்கள் நடுங்கி விஷ்ணுவிடம் விபரம் சொல்ல அவர் தன் சக்ராயுதத்தை அணுப்ப அது சிவனரை பின் தொடர்ந்து சதிதேவின் உடற் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தியது. அவ்வாறு துண்டு துண்டாக வெட்டப்பட்ட தட்சாயினியின் உடற் பாகங்கள் எங்கெங்கு விழுதனவோ அந்த இடங்கள் அம்பாளின் சக்தி பீடங்கள் எனப் பெயர் பெற்றன.

தேவபாஷையான சமஸ்கிருத எழுத்துக்களின் அட்சர ஒலி வடிவிலான பீஜாக்ஷார எழுத்துக்கள் தோன்றிய அந்த இடங்களில் தட்சாயனியின் உடல் பாகங்கள் விழுந்தது. அதாவது அக்ஷரங்களும் அங்கங்களும் ஒருங்கே சேர்ந்த இடங்களில் பீடங்கள் உருவாகி அவை மாத்ருகாபீடங்கள் / மகா சக்தி பீடங்கள் எனப்பட்டன. மற்ற இடங்களில் தட்சாயனியின் உடல் பாகங்கள் அணிகலன்கள் விழுந்தபடியால் அங்கும் பீடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை உபசக்தி பீடங்கள் என்றானது. இந்த உண்மையை உணர்ந்த ரிஷிகளும் சித்தர்களும் அம்பிகையின் உடல் பாகங்களுக்குப் பதிலாக பொன் / வெள்ளி / செம்பு களால் ஆன மந்திரத் தகடுகளை செய்து அதில் மந்திர பீஜாக்ஷரா எழுத்துக்களையும் பொறித்து மந்திரங்களை உருவேற்றி பூமியில் புதைத்து அதன்மேல் சிலைகள் / விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

அம்பாளை உபாசிப்பவர்கள் / வழிபடுபவர்கள் சாக்தர்கள் என்றும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் என்றும் அழைக்கப்படுவர். இறைவனின் அருளைப்பெற புனித மந்திரங்களே நல்வழிகாட்டிகளாக உதவுகின்றன. இறைவனின் சூட்சும வடிவமே அத்தகைய மந்திரங்கள், தெய்வ சக்தியை அளிக்கும் மந்திரங்கள் ஏழுகோடி என்று முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். 51 சமஸ்கிருத எழுத்துக்களில் அடங்கியுள்ள இவையே ஆதிபீஜாக்ஷரங்கள் ஆகும். எல்லா மந்திரங்களும் இந்த ஐம்பத்தி ஒன்று ஆதி பீஜாக்ஷரங்களில் அடங்கும். இந்த எழுத்துக்களை மாத்ருகாக்ஷரங்கள் / ஆதி மந்திர பீஜாக்ஷரங்கள் என்றும் கூறலாம். தேவர்களும் ரிஷிகளும் ஆதீபீஜாக்ஷர சக்தித் தலங்களில் தங்கியிருந்து தவம், யோகம், மந்திரஜபம் ஆகியவற்றைச் செய்து நற்பேறுகள் பெற்றுள்ளனர்.

உலக உயிர்களின் உடலைப் பிண்டம். என்பர். பிண்டத்திலிருப்பது அண்டத்திருக்கும். அண்டத்திலிருப்பது பிண்டத்தில் உள்ளது என்பர். பிர்மாண்டத்தில் தோன்றிய 51 ஆதி பீஜாக்ஷர எழுத்துக்களும் உயிர்களின் உடல் பகுதியில்-பிண்டத்தில் உள்ளதால் வித்யா உபாசனைப்படி அந்த அட்சர எழுத்துக்களின் ஒலிவடிவில் தேவி உடலில் வீற்றிருக்கின்றாள் என்று மனதில் வைத்து தன் கை விரலால் அந்த இடத்தை தொட்டு அந்த அட்சர எழுத்தை உச்சரித்தால் அந்த உடலில் தெய்வீக சக்தி தேஜோமயமாக விளங்கும் என்றும் இந்த முறைக்கு நியாஸம் என்றும் பெயர். இந்த முறையை அகத்தியருக்கு ஹயக்கிரீவ பகவான் போதித்துள்ளார் என்கிறது வேதம்.

நியாஸ முறையில் அந்த 51 ஆதிபீஜாக்ஷர மந்திர எழுத்துக்களும் அதற்குறிய உடலின் இடங்களைத் தொட்டுக்கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவாறு உச்சரித்து உயிர்களே நீங்களும் பயன் பெறுங்கள் என்று அன்புடன் அருளாசி வழங்கும் குருஸ்ரீ-பகோரா.
#*#*#*#*#

“ஆதி மந்திர பீஜாக்ஷரங்கள்”

‘அங்க நியாஸம்’ அகத்தியருக்கு
ஹயக்கீரீவ பகவான் போதித்தது-
நியாஸம்-தேவி ஒலி வடிவத்தில் உடலில்
வீற்றிருக்கும் பகுதியை தொட்டு வணங்குதல்-தினமும்.
#*#*#*#*#

1. ‘அம்’-காமரூபாயை நம- தலையில்
2. ‘ஆம்’-வாராணஸ்யை நம- முகவட்டத்தில்
3. ‘இம்’-நேபாலாயை நம- வலது கண்ணில்
4. ‘ஈம்’-பௌண்ட்ரவர்த்தனயைநம- இடது கண்
5. ‘உம்’-புரஸ்திரகாஷ்மீராயைநம- வலது காது
6. ‘ஊம்’-கன்யாகுப்ஜாயை நம- இடது காது
7. ‘ரூம்’-பூர்ணசைலாயை நம- வலது மூக்கு மடிப்பு
8. ‘ரூம்’-அர்புதாசலாயை நம- இடது மூக்கு மடிப்பு
9. ‘லும்’-ஆம்ராதகேசவராயைநம- வலது கன்னம்
10. ‘லூம்’-ஏகாம்பராயை நம- இடது கன்னம்
11. ‘எம்’-த்ரிஸ்ரோதஸ் நம- மேல் உதடு
12. ‘ஐம்’-காமகோட்யை நம- கீழ் உதட்டில்
13. ‘ஓம்’-கைலாஸாயை நம- மேற்பற்கள்
14. ‘ஒளம்’-ப்ருகுநகராயை நம- கீழ்ப்பற்கள்
15. ‘அம்’-கேதாராயை நம- நாக்கு நுனி
16. ‘’-சந்த்ரபுஷ்கரிண்யைநம- கழுத்து
17. ‘க1ம்’-ஸ்ரீபுராயை நம- வலது தோள்
18. ‘க2ம்’-ஓங்காராயை நம- வலது முழங்கை
19. ‘க3ம்’-ஜாலந்தராயை நம- வலது மணிக்கட்டு
20. ‘க4ம்’-மால்வாய் நம- வலது கைவிரல் அடி
21. ‘த3ம்’-குலாந்தகாயை நம- வலது கைவிரல் நுனி.
22. ‘ச1ம்’-தேவிகோடாயை நம- இடது தோள்.
23. ‘ச2ம்’-கோகர்ணாயை நம- இடது முழங்கை.
24. ‘ஜம்’-மாருதேச்வராயைநம- வலது மணிக்கட்டு.
25. ‘ஜ4ம்’-அட்டஹாஸாயைநம- இடது கைவிரல்.
26. ‘ஞம்’-விராஜாயை நம - இடது கைவிரல் நுனி
27. ‘டம்’-ராஜகோஹாயைநம- வலது தொடை மேற்பகுதி.
28. ‘ட2ம்’-மகாபதாயை நம- வலது முழங்கால்.
29. ‘ட3ம்’-கோலாபுராயை நவ- வலது கணுக்கால்.
30. ‘ட4ம்’-ஏலாபுராயை நம- வலது கால் விரலடி.
31. ‘ணம்’-காலேச்வராயை நம- வலது கால் விரல் நுனி.
32. ‘தம்’-ஜயந்திகாயை நம- இடது தொடைமேல்பகுதி
33. ‘த2ம்’-உஜ்ஜயின்யை நம- இடது முழங்கால்.
34. ‘த3ம்’-சித்ராயை நம- இடது கனுக்கால்.
35. ‘த4ம்’-க்ஷீரிகாயை நம்- இடது கால் விரல் அடி.
36. ‘நம்’-ஹஸ்தினாபுராயைநம- இடது கால் விரல் நுனி.
37. ‘பம்’-உட்டிசாயை நம- வலது விலாப்புறம்.
38. ‘ப2ம்’-ப்ரயாகயை நம- இடது விலாப்புறம்.
39. ‘ப3ம்’-ஷஷ்டி சாயை நம- முதுகு.
40. ‘ப4ம்’-மாயாபூர்யை நம- நாபி.
41. ‘மம்’-ஜலேசாயை நம- வயிறு.
42. ‘யம்’-மலயாயை நம- இதயம்.
43. ‘ரம்’-ஸ்ரீசைலாயை நம- வலது தோள்பட்டை
44. ‘லம்’-மோரவே நம- பிடரி.
45. ‘வம்’-கிரிவராயை நம- இடது தோள்பட்டை.
46. ‘ச1ம்’-மஹேந்திராயை நம- இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை.
47. ‘ஷம்’-வாமனாயை நம- இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை.
48. ‘ஸம்’-ஹிரண்யபுராயைநம- இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை.
49. ‘ஹம்’-மகாலக்ஷ்மிபுராயைநம- இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை.
50. ‘ளம்’-ஓட்யாணாயை நம- இதயம் முதல் இன உறுப்பு வரை.
51. ‘க்ஷம்’- சாயச்சத்ராயை நம- இதயத்திலிருந்து தலை உச்சிவரை.

#####


அந்த அற்புத 51 ஆதிபீக்ஷார சக்தி தலங்கள் / மகா சக்தி பீடங்கள்

 

      ஓம்

1-அ/அம்

2- ஆ/ஆம்

3- இ/இம்

4- ஈ/ஈம்

5- உ/உம்

6- ஊ/ஊம்

7- ரு/ரும்

ஓம்

28-2/டம்

ஓம்

சி

ஓம்

8-ரூ/ரூம்

27-1/டம்

29-3/டம்

34-3/தம்

39-3/பம்

42-ய/யம்

47-ஷ/ஷம்

9- லு/லும்

26-ஞ/ஞம்

30-4/டம்

35-4/தம்

40-4/பம்

43- ர/ரம்

48-ஸ/ஸம்

10-லூ/ல்ரூம்

25-2/சம்

சி

31-ண/ணம்

36-ந/னம்

41-ம/மம்

44-ல/லம்

49-ஹ/ஹம்

சி

11-ஏ/ஏம்

24-1/சம்

32- 1/தம்

37-1/பம்

45-வ/வம்

50- ள/ளம்

12-ஐ/ஐம்

23-2/சம்

33- 2/தம்

38-2/பம்

46-ச/ஷம்

51-ஷ/க்ஷம்

13-ஓ/ஓம்

22-1/சம்

ஓம்

சி

ஓம்

14-ஒள/ஒளம

ஓம்

21-ங்/நம்

20-4/கம்

19-3/கம்

18-2/கம்

17-1/கம்

16- அஹ

15- அம்

          ஓம்

 

######

இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்!

அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றபோது உடன் அழைத்துச் சென்ற வீர்ர்களில் ஒருவன் வழிதவறிப் போய்விட்டான். அவனை மாலைவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் அனைவரும் அரண்மனைக்குத் திரும்பினர். வழிதவறிய வீரன் தன்னோடு வந்தர்களைக் காணாமல் தேடி அலைந்து களைப்படைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். மாலை மங்கிக்கொண்டிருந்தது.

அப்போது ஒரு குரல் என்னால் பாதுகாக்கப்பட்டுவரும் புதையல் உனக்கு வேண்டுமா என கூறக் கேட்டவன், குரல் வந்த திசையை நோக்கி நீ யார். எதற்காக இப்படி பொய் பேசுகின்றாய் என்றான். அதற்கு அந்தக் குரல் இல்லை நான் பலகாலம் காத்திருக்கும் புதையல் அது என்றது. அப்படி என்றால் அதைக் காட்டு என்றான். உடனே அவன் முன்னாள் பத்து பானைகள் தங்க காசுகளுடன் தென்பட்டன. இதை நீ பெற்றுக் கொண்டால் எனக்கு விடுதலை கிடைக்கும் என்றது. இந்தப் புதையலை நான் எப்படி என் வீட்டிற்கு கொண்டுபோவேன். நீ இந்த புதையலை என் வீட்டில் கொண்டுவந்து கொடு, நான் வாங்கிக் கொல்கின்றேன் என்றான். அப்படியே அந்தக் குரலுக்குறிய பூதம் அந்தப் புதையல் பானைகளுடன் அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட புதையலை அவன் வாங்கிக் கொள்ள பூதத்திற்கு விடுதலைக் கிடைத்தது.

தனது அதிர்ஷ்டத்தை வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே எல்லா பானைகளையும் திறந்து பார்த்தான். ஒன்பது பானைகள் நிறைய இருந்த பொற்காசுகள் பத்தாவது பானையில் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கவே எப்படி இந்தப் பானையில் மட்டும் குறைந்தது என சந்தேகப்பட்டான். இந்த எண்ணம் அவன் மனதில் வேரூன்றி பதிய ஆரம்பிக்க அதைப் பற்றிய நினைவே அவன் தூக்கத்தை கொடுத்தது.

கிடைத்ததை உண்டு உறவுகளோடு ஆனந்தமாக இருந்தவனுக்கு ஒன்பது பானைகள் நிறைய தங்க காசுகள் இருப்பது நிறைவாகத் தெரியாமல் பத்தாவது பானையில் குறைந்து காணப்படுவதே பிரச்சனையாகி நிம்மதி இழந்தான். தூக்கம் கெட்டான். உடல் நலிவு அடைந்தான்.

முதலில் பொருள் சேர்த்து பானையை நிறைக்க வேண்டும் என்ற நினைவுடன் இதுநாள்வரை அரன்மணக்கு வேலைக்குப் போகாமல் இருந்தவன் வேலைக்குப் போனான். பழையபடி கவனத்துடன் அவனால் வேலை செய்ய முடியவில்லை. காணமல் போய் அவனைத் தேடியதிலிருந்து அவன் திரும்பி வந்தது முதல் அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததை அனைவரும் உணர்ந்தனர். அரசனிடம் சென்று எனக்கு கொடுக்கும் சம்பளம் போதாது எனக் கேட்டான்.

அரசன், உன் நடவடிக்கைகளினால் முன்பு இருந்ததைவிட நீ இப்போது மாற்றத்துடன் காணப்படுகின்றாய். நீ உன நிம்மதி இழந்து விட்டாய் போலிருக்கின்றது. நான் நினைப்பது சரியாக இருந்தால் நீ காட்டில் பூதத்தின் புதையலை வாங்கிக் கொண்டு வந்தாயா! எனக் கேட்க, யாரிடமும் சொல்லவில்லை மன்னருக்கு எப்படித் தெரிந்தது என ஆச்சரியப்பட்டான். இருந்தாலும் மன்னரிடம் அதை ஒப்புக்கொண்டான்.

பத்தாவது பானை குறைந்திருப்பது பற்றிதானே கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றாய். அது அவ்வளவுதான். அது குறைவாகவே இருப்பதால் அந்தப் பானைக்கு திருப்தியின்மை என்று பெயர். நானும் அந்த பூத்த்தை சந்தித்துள்ளேன். நான் அதனிடம் புதையல் பெற்றுக்கொண்டால் நீ விடுதலை அடைந்து விடுவாய். எனக்கு நிம்மதி கிடைக்குமா! என்றேன். பூதத்தை காணவில்லை. அதனிடம் நீ அகப்பட்டுக்கொண்டு உன் நிம்மதியை தொலைத்து விட்டாய் என்றார்.

உண்மை புரிந்த உடனே வீரன் எனக்கு நிம்மதிதான் வேண்டும். அந்த புதையல் எனக்கு வேண்டாம் எனக் கூவ அனைத்து பானைகளும் மறைந்தன. அரன்மணையில் மீண்டும் தன் பணியை மகிழ்வுடன் தொடங்கினான். மனநிறைவு, மகிழ்ச்சி, நிம்மதி சந்தோஷம், ஆரோக்கியம் இவைகள்தான் அதிர்ஷ்டத்திற்குரியது.

#####

புதன்கிழமை, 26 September 2018 09:44

ராகவேந்திரர்!

ஸ்ரீ ராகவேந்திரர்!


ஒம் நமசிவாய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####


வேங்கடநாதன் பிறப்பு!

திம்மண்ண பட்டர், கோபிகாம்பா என்ற தமப்தியினருக்கு முதலில் வேங்கடம்பாள் என்ற பெண் குழந்தையும், குருராஜன் என்ற ஆண குழந்தையும் பிறந்தனர். இன்னொரு குழந்தை வேண்டுமென்று திருப்பதி பெருமாளிடம் வேண்ட கோமதியம்மாள் மீண்டும் கருவுற்று 1959 ம் வருடம் பால்குணமாதம் சுக்ல சப்தமி மிருக சீரிட நட்சத்திரத்தில் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டனர். அந் நிகழ்ச்சியில் வந்த பரிசுப் பொருட்களை ஒதுக்கிவிட்டு துளசி மாலையை மட்டும் எடுத்து குழந்தை விளையாடியது கண்டு அனைவரும் ஆனந்தப்பட்டனர்.


வித்யாப்யாசம்-!

மூன்று வயது ஆனதும் குழந்தைக்கு மணலின் மீது ஓம் என்று எழுதி சொல்லித்தர ஆரம்பித்தனர். திம்மண்ணபட்டர், சமஸ்கிருதம், கன்னட மொழிகளைக் கற்பித்து வீணைவாசிக்கவும் பயிற்சியளித்தார். திம்மண்ண பட்டர் இறைவடி சேர்ந்ததால் வேங்கடநாதனின் தமையன் குருராஜன் இவருக்கு உபநயனம் செய்வித்து தன் தமக்கையின் கணவர் மதுரை ஸ்ரீலட்சுமி நரசிம்மாச்சாரிடம் குருகுலவாசத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு வேதம், தர்க்கம், வியாக்கரணம், வேதாந்தம், மீமாம்ஸம் போன்றவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தார்.


திருமண வாழ்க்கை!

குருராஜன் தன் சகோதரன் வேங்கடநாதருக்கு சரஸ்வதி என்ற பெண்ணை 1614-ம் ஆண்டு திருமணம் செய்வித்தார். இவருடைய மேதா விலாசத்தை அறிந்த காவேரிப்பட்டின வாசிகள் தங்களின் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பி வைத்தனர். கல்வி கற்றுத்தர எந்தவித அன்பளிப்பையும் ஏற்காமல் வேங்கடநாதன் இருந்ததால் குடும்பத்துடன் இந்த சுமையும் சேர்ந்தது.

வெங்கடநாதனின் பாண்டியத்தில் அகம் மகிழ்ந்த சரஸ்வதி மற்ற சுமைகளை பெரிது படுத்தாமல் இன்பத்துடன் வாழ அவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு லட்சுமிநாராயணன் என்று பெயர் வைத்தனர்.

சத் புருஷர்!

ஒரு தனவான் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சூக்த பாராயணம் செய்து கொண்டிருந்தபோது இவருடைய ஏழ்மையைக் கண்ணுற்ற புரோகிதர் அங்குள்ள பிராமணர்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்க பணித்தார். வேங்கடநாதன் உளம் ஒன்றி சூக்த பாராயணம் செய்து கொண்டே சந்தனம் அரைக்க அந்த சந்தனத்தில் அக்னி ஆவிர்பவித்தது, அது தெரியாமல் இந்த சந்தனத்தை பூசிக்கொண்ட அனைவருக்கும் அக்னியால் எரிச்சல் உடம்பெல்லாம் பரவியது. அப்போது அந்த வீட்டின் உருமையாளர் யார் சந்தனம் அரைத்தது என்று கேட்டு விபரம் அறிந்து ஒரு சத் புருஷரை அவமதித்து விட்டதை அறிந்து வேங்கடநாதனிடம் மன்னிப்புக் கோர அக்னியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டினார். மீதியுள்ள சந்தனத்தை வாங்கி வருண சூத்திரம் ஜபித்து சந்தனத்தை தர அதைப் பூசியதும் அவர்களின் எரிச்சல் அடங்கியது. எல்லோரும் வேங்கடநாதரின் பெருமையை உணர்ந்தனர். தனவான் இவருக்கு மரியாதை செய்து சன்மானம் அளித்தார். இந்நிகழ்விற்கு பிறகு எந்த நிகழ்ச்சிக்கும் போவதில்லை என்று உறுதி கொண்டார்.

வறுமையின் பிடியில்!

காலப் போக்கில் எல்லோருக்கும் உணவு அளிப்பது மிகவும் சிரமமாயிருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் ஒரே உடை மட்டும் அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாப்பிட இலை இல்லாததால் தரையை கழுவி அதில் போட்டு சாப்பிட்டனர். சாலிக்கிராம நீரையே பாலாக தன் குழந்தைக்கு கொடுத்து வந்தனர். ஒருநாள் இரவு கள்வர்கள் வீட்டிற்குள் புகுந்து இருந்த ஒரிரு பாத்திரங்களையும் திருடிச் சென்றுவிட்டனர். இதையறிந்த வேங்கடநாதன் கோபப்படாமல் நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று வருந்தினார்.

ஸ்ரீமடம்-கும்பகோணம்!

திடிரென்று சரஸ்வதிக்கு ஒர் யோசனை தோன்ற அதன்படி இருவரும் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் சரணடைவது என முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் கும்பகோணம் மடம் செல்ல இவர்கள் வருகையை சுசீந்திரர் எதிர்பார்த்து காத்திருப்பது போலிருந்தது.


சுசீந்தர் அறிந்த ரகசியம்!

ஸ்ரீ நாமநவமி உற்சவத்திற்கு ஸ்ரீ மடத்திற்கு பல்வேறு ஊர்களிலிருந்து சீடர்கள் வந்திருந்தனர். திம்மண்ணபட்டரும் தம் மகன் வேங்கடநாதனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். சுசீந்திர தன் குரு விஜயீந்தருடன் இருக்கும்போது திம்மண்ணபட்டர் வந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த விஜயீந்தரர் அவர் மகன் வேங்கடநாதன் நமஸ்கரிக்கும்போது அவரை நமஸ்கரிக்க விடாமல் அப்படியே தூக்கி தன் மடிமேல் வைத்துக் கொண்டார். அது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்க விஜயேந்திரர் அந்த ரகசியத்தைச் சுசீந்திரருக்கு சொன்னார். அதாவது தன்னுடைய குரு ஸ்ரீ வியாசராஜர்தான் மீண்டும் பிறவி எடுத்து வேங்கடநாதனாக வந்திருக்கின்றார். அதனால் தான் அந்தக் குழந்தை என் குருநாதர் என்னை நமஸ்கரிக்க விடாமல் எடுத்துக் கொண்டேன் என்றார். அதனால் உங்களுக்குப் பிறகு இந்த மடத்தின் ஆதிபத்யத்தை வேங்கடநாதருக்கே அளிக்க வேண்டும் என்றார்.

மஹாபாஷ்யாச்சார்யர்!

தன் குரு சுசீந்தருடன் ராஜ மன்னார்குடி சென்றபோது அத்வைத சன்யாசி ஒருவருடன் வ்யாகரண மஹாபாஷ்யத்தை வாதம் செய்து வெற்றி கண்டதால் மனம் மகிழ்ந்த சுசீந்திரர் பண்டிதர் சபையில் மஹாபாஷ்யாச்சார்யர் என்று பட்டம் அளித்து கௌரவித்தார். ஒருமுறை தன் குருவுடன் தஞ்சாவூர் சென்ற போது ராஜ சபையில் குருவின் சார்பில் வாதம் செய்து வெற்றி கண்டார். தஞ்சை மன்னர் இருவரையும் கௌரவித்தார். குருவின் விருப்பப்டி ஸ்ரீ நாராயண பண்டிதாச்சார்யர் இயற்றிய ப்ரமேய நவமாலிகா- என்ற அனுமத்வ விஜயம் என்ற க்ரந்தத்திற்கு வியாக்யானம் எழுதி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

குழப்பத்தில் வேங்கடநாதர்!

குரு சுசீந்திரருக்கு உடல் நலம் சரியில்லமல் போகவே வேங்கடநாதனை அழைத்து பெறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்ல நான் இன்னும் சம்சார பந்தத்தில் இருப்பவன் என்னால் நீங்கள் வகித்த பதவியை வகிக்க முடியாது எனச் சொல்ல வேறு ஒருவருக்கு சன்யாச தீக்ஷை அளித்து ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர் என்று ஆச்ரமப் பெயரைச் சூட்டினார். சில நாட்களில் சுசீந்திரரின் உடல் நலம்பெற ஸ்ரீயாதவேந்த்ர தீர்த்தரை பாரததேச தீர்த்த யாத்திரை அனுப்பி மதப் பிரசாரம் செய்யச் சொன்னார்.

சில மாதங்கள் சென்றபின் மீண்டும் குரு சுசீந்திரரின் உடல் நலம் குறைந்தது. சிஷ்யர் ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர் யாத்திரையில் இருந்ததால் அவரை வரச் சொன்னாலும் அவர் வர நீண்ட காலம் ஆகும். அதுவரை ஸ்ரீமூலராமருக்கு பூஜை செய்வது தடைப்படும் என வருந்திய சுசீந்திரரின் கனவில் வேங்கடநாதனே பீடாதிபத்யத்தை ஏற்கத் தகுந்தவன். இம்முறை அவன் சரி எனச் சொல்வான். அவனுக்கு சன்யாஷ தீக்ஷை தந்து ஸ்ரீ ராகவேந்த்ரர் என்று பெயர் சூட்டு என அருளாசி கூறி மறைந்தார்.

காலையில் கண்விழித்த சுசீந்திரர் தன் கனவும் குரு விஜயேந்திரரின் விருப்பமும் ஒன்றாக இருப்பது கண்டு மகிழ்ந்தார். மாலை வேங்கடநாதனைக் கூப்பிட்டு தன் கண்ட கனவையும் குருநாதர் விருப்பத்தையும் கூறி பொறுப்பை ஏற்கச் சொல்ல வேங்கடநாதன் கட்டாயமாக மறுத்தார். மீண்டும் வற்புறுத்தினால் மடத்தைவிட்டு சென்று விடுவேன் என்றார். சுசீந்திரர் இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என விட்டு விட்டார்.

மந்திர உபதேசம்!

வீட்டிற்கு வந்த வேங்கடநாதர் தமக்கு பிடிக்காத விஷயமான குருவின் ஆணையை மீறுதலை எப்படிச் செய்வது. குருவின் ஆனையை ஏற்றால் தன்னை நம்பியிருக்கும் மனைவி குழைந்தைகள் நிலை என்னாவது என முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உறங்கினார். அப்போது இரவில் திடிரென்று ஓர் ஒளி வீசியது. அங்கே சர்வாலங்கார பூஷிதையாக கையில் வீணையுடன் சரஸ்வதி காட்சி கொடுத்து குமரா, என்னை சரஸ்வதிதேவி என்று அறிவாயாக! உன் குரு சுசீந்திரர் விரிந்தாவனவாஸி ஆக இன்னும் சிலகாலம் இருப்பதால் மூலராமரை பூஜை செய்ய சன்னியாசி வேண்டும் நீயே அதற்கு தகுதியானவன். இப்பிறவி உனக்கு அதற்காகத்தான். உன் சம்சார பந்தம் ஒரு காரணத்தால் ஏற்பட்டது. அது உனக்கு நிரந்தரம் அல்ல. சன்யாசம்தான் உனக்கு சொந்தம்.பூர்வத்தில் சத்ய லோகத்தில் பிரம்மதேவருக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்த சங்கு கர்ணன் கிருதயுகத்தில் ஸ்ரீப்ரஹலாதன், துவாபரயுகத்தில் பாஹ்லீக மன்னர் கலியில் வியாசராஜ தீர்த்தர். நீ சன்யாசம் பெற்று மக்களை நல்வழிப்படுத்த இப்பிறவி ஏற்பட்டது. இது உன் விதி. உன்னால் மாற்ற முடியாது. உன் மனைவி குழந்தையை காப்பாற்றுவது இறைவனின் பொறுப்பு என மந்திர உபதேசம் பெற்றார். மனத்தெளிவு அடைந்தார்.

சரஸ்வதி சம்மதம்!

காலையில் தன் மனைவியிடம் மனம் விட்டு பேசலானார். குரு தன்னிடம் கூறியதையும் பின் இரவில் சரஸ்வதிதேவி காட்சி கொடுத்ததைப் பற்றியும் விளக்கமாகக் கூறி தன்னை சன்யாசம் ஏற்க அனுமதிக்கும்படி கேட்டார். தலையில் இடி விழுந்ததுபோலான சரஸ்வதி புழுப்போல துடித்தார். கணவனின் விருப்பத்திற்கு மாறாக இதுகாறும் ஏதும் சொன்னதில்லை என்பதால் இப்போது தமக்கு எந்த துன்பம்வரினும் அவர் விருப்பப்படி நடக்கட்டும் என முடிவெடுத்து தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் தங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்றார். தன் மனைவியின் எண்ண ஓட்டம் புரிந்ததால் காலத்தின் கட்டாயம் என்று இறைவன்மேல் பாரத்தைப் போட்டு சன்யாசம் ஏற்க தீர்மானித்தார்.

தன் குருநாதர் சுசீந்திரரிடம் நடந்தவைகளைக்கூறி தன் சம்மதத்தை தெரிவித்தார். ஆனந்தப்பட்ட சுசீந்திரர் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்யலானார். வேங்கடநாதர் இருந்து அவர் மகனுக்கு உபநயனம் செய்ய வேண்டியதை முதலாவதாக முறைப்படி செய்வித்தார். கணவருடன் சேர்ந்து செய்யும் கடைசி விசேஷமாக இருந்ததால் சரஸ்வதியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.

நிகழ்ச்சி முடிந்ததும் தன் அண்ணா குருராஜாவை அழைத்து தனக்கு சன்யாசம் உத்திரவு ஆகியிருப்பதால் தன் மனைவி மகனை பார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். அவரும் அவர்கள் இருவரையும் தங்கள் இருப்பிடத்திற்கு கூட்டிச் சென்றார்.

ஸ்ரீ ராகவேந்தர தீர்த்தர்!

வேங்கடநாதர் சன்யாசம் தஞ்சாவூரில் நடத்த குரு சுசீந்திரர் முடிவு செய்தார். இந்த வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேக நிகழ்வை தஞ்சாவூர் மன்னர் சிறப்பாக செய்து முடித்தார். 1621 துர்மதி ஆண்டு பால்குண சுத்த த்விதியை அன்று சுசீந்திரர் ஸ்ரீ மத்வாச்சாரியார் பரம்பரை வழக்கப்படி தனது சீடரான வேங்கடநாதருக்கு பட்டாபிஷேகம் செய்வித்து ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்ற பட்டமளித்து மகாசமஸ்தானத்தின் விக்ரஹங்களான மூலராம, திக்விஜயராம, ஜயராமர் மற்றும் சாஸ்திர கிரந்தங்கள் போன்ற பொக்கிஷங்களை ஒப்படைத்தார். வெண் கொற்றக்குடை, சாமரங்கள், அம்பாரி, பல்லக்கு பொன்ற ராஜ கௌரவங்களையும் ஒப்படைத்து வழ்த்தினார் அன்றைய தினமே ஸ்ரீ ராகவேந்திரர் விக்கிரஹங்களுக்கு செய்த சமஸ்தான பூஜை சிறப்பாக அமைந்தது.

சரஸ்வதி நற்கதி அடைதல்!

தன் கணவரை இனிமேல் பார்க்க முடியாததால் உலகமே இருண்டு போய் விட்டதாக நினத்த சரஸ்வதி துக்கம் தாளாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ஊழ்வினையால் தற்கொலை செய்து கொண்டதால் பிசாசு வடிவம் கொண்டு அல்லல் பட்டார். தன் குருவுடன் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வந்ததும் இந்த செய்தி கேட்டு வருந்தினர். ஒரு நாள் காவிரிக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்தபோது சரஸ்வதி தன் நிலைகுறித்து வருந்த அவர்மேல் இரக்கம் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் தன் கமண்டலத்திலிருந்து நீரைத் தெளித்து அவருக்கு நற்கதியருளினார்.

சுசீந்திரர் ஹரிபாதம்!

ஸ்ரீ ராகவேந்திர்ர் தன் குருவுடன் சஞ்சாரம் செய்கையில் ஆனேகுந்திதியில் சுசீந்திரர் ஹரிபாதம் அடைந்தார். அவருக்கு அங்கு விருந்தாவன் பிரதிஷ்டைதனை முறைப்படி செய்வித்து கும்பகோணம் வந்து சேர்ந்தார்.

கும்பகோணத்தில் ஸ்ரீயாதவேந்த்ரரை மடத்தின் பொறுப்பை ஏற்கச் சொன்னார். அவர் ஸ்ரீ ராமரே தங்களை தேர்வு செய்தபின் நான் அந்த பொறுப்பை ஏற்பது சரியில்லை எனக்கூறி அன்று மட்டும் மூல ராமருக்கு பூஜை செய்துவிட்டு தேச சஞ்சாரம் சென்று கிருஷ்ணா நதிக்கரையில் முதுமலே என்ற இடத்தில் தவம் செய்து அங்கேயே பிருந்தாவனஸ்தரானார்.

ஸ்ரீ ராகவேந்திரர் நித்ய அனுஷ்டானங்கள்!

தினமும் ப்ரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து மூலராமர், வேதவ்யாசருக்கு நமஸ்காரம் செய்து துளசி செடியில் எழுந்துள்ள லட்சுமி தேவியை வணங்கி, ஆஞ்சநேயரை வழிபட்டு கஜேந்திர மோஷ துதி முதலிய ஸ்தோத்திரங்களைச் சொல்லிக் காவிரியில் சங்கல்ப விதிபடி ஆசமனம் செய்து மந்திரங்கள் ஜபித்து, மிருத்திகா ஸ்நானம், அகமர்ஷண ஸ்நானம் செய்து ஜபம் செய்வார்.

பின்னர் தன் பரமகுரு விஜயீந்தர தீர்த்தருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு ஸ்ரீ மடத்திற்கு வந்து பாட ப்ரவசனங்கள் செய்வார்.

மதியம் மீண்டும் ஸ்நானம் ஜபம் முடித்து சமஸ்தான பூஜை, பகவத் ஆவாஹனம் ஷோடசோபசார பூஜைகளினால் த்யானம் ஆவாஹனம் அர்க்ய பாத்யம் செய்து நைவேத்யம் படைத்து மஹா தீபாராதனை செய்து மந்திர புஷ்பங்களை சமர்பிப்பார். வாயு பூஜை, குருபரம்பரை பூஜை செய்து பக்தர்களுக்கு மூலராமர், திக்விஜயராமர், வாசுதேவ மூர்த்தியை தரிசனம் காட்டி பூஜையை முடிப்பார். பிஷை ஏற்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பாட ப்ரவசனம் செய்வார்.

மாலையில் தரிசனத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தரிசனம் தந்து ஆசி வழங்குவார். பின் ஸ்நானம் செய்து மாலை பூஜை முடித்து வந்தவர்களுக்கு ஆசிவழங்கி மடம் சம்பந்தப்பட்ட அலுவல்களை கேட்டுத் தெரிந்து கொள்வார். பின் இரவு நித்திரை செய்வார்.

ஸ்ரீ ராகவேந்தரின் யாத்திரை!

ஸ்ரீ ராகவேந்திரர் மதுரை வந்தபோது திருமலை நாயக்கரின் மந்திரி அப்பைய தீக்ஷிதரின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர் ராகவேந்தரர் உடன் வாதத்தில் ஈடுபட்டு, இவரது வாதத்திறமையை மெச்சி இவர் இயற்றிய ’பாட்ட சங்க்ரஹ’ எனும் கிரகந்தத்தை யானை அம்பாரிமீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை செய்தார்.

உடுப்பியில் பல நாட்கள் தங்கியிருந்து கிருஷ்ணனை பூஜித்தார். அப்போது தந்த்ர தீபிகா, ந்யாய முக்காவளி, சுதா பரிமளா ஆகிய கிரந்தங்களை இயற்றி கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தார். கிருஷ்ணருக்கு சிறிய தங்கத்திலான விக்ரஹம் செய்து ஸ்ரீ மடத்தின் பூஜையில் சேர்த்தார்.

உத்ர கர்நாடகாவில் கிரீடகிரி என்ற கிரமத்தில் இருந்த வெங்கடதேசாய் வீட்டில் மூலராமர் பூஜை செய்ய ஒப்புக் கொண்டார். வெங்கடதேசாயும் அவர் மனைவியும் பூஜைக்கும் விருந்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை போஜனத்திற்கு வைத்திருந்த மாம்பழரச அண்டாவில் எட்டிப்பார்த்து தவறி உள்ளே விழுந்து இறந்து விட்டது. சிரிது நேரத்தில் குழந்தையைத் தேடிய குடும்பத்தினர் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயம் தெரிந்தால் அந்தணர்களது போஜனம் தடைபடும் என்பதால் இருவரும் உண்மையை மறைத்தனர். பூஜை முடிந்ததும் தீர்த்தம் வாங்க அனைவரையும் வரச் சொன்னவர் வெங்கடதேசாயை குடும்பத்துடன் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். வெங்கட தேசாய் தீர்த்தம் வாங்குவதை தவிர்க்கும் விதமாக கடைசியில் வாங்குகின்றேன் என்றார். சூழ்நிலையை அறிந்த ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமர் உன் வீட்டில் எழுந்தருளியிருக்கும்போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாது. உன் குழந்தையை தூக்கிவா என்றார். தன் கமண்டலத்திலிருந்த நீரை ஜபித்து குழந்தையின் மேல் தெளிக்க குழந்தை தூக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்தது. வெங்கடநாதர் ஆனந்தமடைந்து அந்த கிராமத்தையே ஸ்ரீ ராயருக்கு தானமாக அளித்தார்.

கிரீடகிரியிலிருந்து பீஜப்பூர் செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் களைப்பாற அருகில் இருந்த மேடையில் அமர்ந்தார். தோட்டக்காரன், சுவாமி நேற்றுதான் சாவனூர் நவாபின் மகன் பாம்பு தீண்டி இறந்தபின் சவ அடக்கம் செய்யப் பட்டுள்ளது. அதன் மீது தாங்கள் அமரக்கூடாது என்றான், சிறிது யோசித்த ஸ்ரீராயர், அந்தக் குழந்தை இறக்கவில்லை. மேடையை தோண்டி அச்சிறுவனை வெளியே எடுங்கள் என்றார். நாவாப் தன் ஆட்களுடன் வந்து தோண்டி உடலை வெளியே எடுத்து வத்தனர். பலகன் மேல் கமண்டல நீரைத் தெளிக்க உயிர் பெற்றான். மகிழ்வடைந்த நவாப் பல பரிசுகள் அளித்து கௌரவித்தார்.

பீஜப்பூரின் சுல்தான் ஸ்ரீ ராயருக்கு ஜகத்குரு என்ற பட்டமும், மரியாதைக்குரிய பரிசாக வெண்கொற்றக் குடையும் அளிக்க அங்கிருந்து பண்டரிபுரம் சென்றார்.

யாத்திரை செல்லும் வழியில் உடன் வந்த சிஷ்யரின் மனைவிக்கு பிரசவ வலி எடுக்க அந்த இடத்தில் குடிக்க நீரில்லாமல் இருக்க தன் தண்டத்தால் பூமியில் தட்ட நீரூற்று தோன்றியது. இது தண்ட தீர்த்தம் எனப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு பண்டரிபுரம்- பாண்டுரங்கன், கோல்ஹாபூர்- மஹாலட்சுமி, ராய்ச்சூர்-மாணவி கிராமம்- ஆஞ்சநேயரை தரிசித்தார். அங்கு வந்த முதியவர் நற்கதி அருள வேண்ட நாளை மூல ராமருக்கு முடிந்த சேவை செய் என்றார். அடுத்தநாள் அவர் தன்னால் இயன்ற கடுகு கொண்டுவர சாதுர்மாஸ்ய மாதத்தில் சேர்க்க கூடாது என்ற நியதி இருப்பதால் தயங்கிய சிப்பந்திகளுக்கு மூலராமர் ஏற்றுக் கொண்டார். அதனால் சமையலில் சேர்த்தலாம் என்றும் இனி சாதுர்மாஸ்ய மாதத்தில் கடுகு சேர்ப்பதில் தவறில்லை என ஆணை வழங்கினார். நைவேத்தியம் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. முதியவர் முக்தியடைய ஸ்ரீராயர் இவர் முன் ஜன்மத்தில் ஸ்ரீகனகதாஸர். இப்பிறவியில் என்மூலம் முக்திபெற காத்திருந்தார் என பெரியவரின் பெருமைதனை சொன்னார்.

ஸ்ரீனிவாச்சார் என்ற அறிஞர் தான் இயற்றிய நூல்களை ஸ்ரீராயரிடம் காட்டி பாராட்டுப் பெற்றார். மந்த்ராக்ஷதை பெற்று ஸ்ரீமடத்தில் பிரசாதம் உட்கொள்ளும் போது அதில் கடுகு சேர்ந்திருக்க கண்டவர் உணவை ஒதுக்கினார். குருராஜரின் ஆணையின் பேரில் வேறு உணவு அவருக்கு பரிமாறப்பட்டது. ஊர் திரும்பிய அவர் அவர் தமையனாருக்கு மந்த்ராக்ஷதையை கொடுக்க எடுத்தபோது அது கறுப்பாயிருக்க, அவர் தமையனார் நடந்த விஷயங்களைக் கேட்டு, தம்பி நீ தவறு செய்து விட்டாய், ஸ்ரீராயர் பெரிய மகான், அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றம் செய்தால் அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு. அவரிடம் மன்னிப்புகேள் என்றார். உடன் குருராஜரை சந்தித்து தன் தவறுக்காக வருந்தினார். மூலராமருக்கு நைவேத்தியம் செய்ததை உதாசீனம் செய்ததால் இது நடந்தது. நீங்கள் இன்று ஸ்ரீமடத்தில் பிரசாதம் உட்கொள்ளுங்கள் என்றார். ஸ்ரீ ராயரிடம் உத்திரவு பெற்று ஊர் திரும்ப நினைத்து கருப்பான மந்த்ராக்ஷதை காண்பிக்க எடுக்க அது சிவப்பாக மாறியது கண்டு தான் மன்னிக்கப்பட்டதை உணர்ந்து ஆனந்தித்தார்.

கந்தனாடி என்ற ஊருக்கு வந்தபோது தாய், தந்தையை இழந்தவனின் சொத்துக்களை அனுபவிக்கும் மாமன், மாமியால் கல்வி அறிவில்லாதவனாக வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளை மேய்ப்பவனாக கொடுமை படுத்தப்பட்ட வெங்கண்ணா என்ற அந்தணச் சிறுவன் ஸ்ரீராயரைச் சந்தித்து தனக்கு நல்வழி காட்ட வேண்டினான். “ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம” என்று ஜபம் செய். நல்லது நடக்கும் என்றார். சிலமாதங்கள் கழித்து அவ்வழிவந்த அதோனியின் அரசன் சித்தி மசூத்கானிடம் ராஜங்க சேவகன் இரு கடிதங்களைக் கொடுக்க அவற்றை படிக்க எப்போதும் படிக்கும் உதவியாளன் இல்லாததால் வேறு ஆள் தேடி வெங்கண்னாவிடம் கொடுக்க படிப்பறிவில்லாதவன் ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து தியானித்து அக்கடிதத்தைப் பார்க்க அதிலுள்ள எழுத்துக்கள் அவனுக்குப் புரிய விளக்கத்துடன் சொன்னான். அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றும், பல காலமாக முற்றுகையிட்ட ஒரு கோட்டை அவன் வசமானது என்ற இரண்டு செய்தியை விளக்கமாக கூறியதால் அரசன் மகிழ்ந்து வெங்கண்ணாவை ராஜாங்க அதிகாரி அந்தஸ்தில் தன் ஆலோசனையாளராக நியமித்தான்.


“ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம” என்ற மந்த்ரத்தை ஜபித்தால் அது மகாலட்சுமியையும், ராமசந்திர மூர்த்தியையும் குறிக்கும். அது ராமஜபத்திற்கு இனையானது என்பதால் ஆஞ்சநேயர் மகிழ்வார். நரசிம்மரை பூஜித்தால் ப்ரகலாதனை பூஜிப்பதற்கு சமம். பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்த்ரராக பிறந்திருப்பதால் நரசிம்மரை பூஜித்த பலனும் கிட்டும்.

தஞ்சையில் பஞ்சம்!

கந்தனாடியை விட்டு புறப்பட்டு திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஷேத்திரங்களில் தரிசனம் செய்து கும்பகோணம் வந்தார். தஞ்சை மன்னன் விஜயராகவநாயக் பீஜப்பூர், மைசூர், வேலுர் அரசர்கள் படையெடுப்பால் தோல்வியுற்றதால் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு தஞ்சை பஞ்சத்தில் சிக்க ஸ்ரீ ரகவேந்த்ரரை அழைத்து அவரிடம் ஆலோசனை கேட்டான். அரசனின் தான்ய களஞ்சியத்தில் பீஜாட்க்ஷர மந்திரத்தை எழுதி மக்களுக்கு வழங்க களஞ்சியத்தில் தானியங்கள் அள்ள அள்ள குறையாமல் இருந்தது. பின்னர் மழை வேண்டி யாகம் செய்து மழையை தருவிக்க நீர் நிலைகள் நிறைந்து பஞ்சத்திலிருந்து தஞ்சை மீண்டது. தன் மகிழ்வைத் தெரிவிக்க தன் வைரமாலையை ஸ்ரீ ராயருக்கு அன்பளிப்பாக கொடுக்க அவர் அதை யாகத்தீயில் போட்டுவிட மனம் வருந்திய மன்னன் ராயர் தன்னை உசாதீனப்படுத்தி விட்டாரென நினைத்தான். யாகம் முடியும்போது அந்த மாலை யாகத்தீயிலிருந்து வெளிவர அதை மன்னனிடம் கொடுக்க தன் தவறை உணர்ந்த மன்னன் அதை மீண்டும் ஸ்ரீராயரிடம் அன்புடன் கொடுத்தான்.

காஷாய வஸ்திரம். பிருந்தாவன் பூஜை உரிமை!

கன்னட தேசத்திலிருந்து வந்த மூன்று அந்தணர்கள் காவிரிக்கரையில் குளிக்கும்போது ஸ்ரீராயரை சோதிக்க எண்ணி ஒவ்வொருவரும் ஒரு இனிப்பை மனதில் நினைத்து அது தனக்கு பரிமாறப்பட்டால் ஸ்ரீராயர் மாகன் என ஒப்புக்கொள்வது என முடிவு செய்தனர். அப்போது ராகவேந்த்ரர் கஷாய வஸ்திரத்தை துவைப்பவன் நீங்கள் நினைத்தபடி இனிப்பு பரிமாறப்படும் என்றான். பின்னர் வஸ்திரத்தை கல்லின்மேல் வைத்துவிட்டு குளிக்கச் சென்றான். அப்போது நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டனர். அவன் உங்களிடம் நான் ஒன்றும் சொல்ல வில்லையே என்றான். பின் கரையேறி வந்து வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் நம்பிக்கையுடன் ஸ்ரீமடத்திற்கு வாருங்கள் நீங்கள் விரும்பியது கிடைக்கும் என்றான். வஸ்திரம் கையில் வைதிருக்கும்போது இவர்கள் மனதில் உள்ளதை அறிகின்றான் என புரிந்த அவர்கள் ஸ்ரீராயரின் வஸ்திர மகிமையை உணர்ந்தனர்.
பின்னர் ஸ்ரீமடத்தில் பூஜையில் கலந்து கொண்டு உணவருந்தச் சென்றனர். அவர்கள் எண்ணியபடி இனிப்புகள் பரிமாறப்பட்டது. போஜனம் முடிந்தபின் குருராஜர் நீங்கள் நினைத்தபடி பஷணங்கள் பரிமாறப்பட்டனவா என்றார். அவர் கால்களில் விழுந்து தங்களை மன்னிக்க கோரினர். அவர்களை மன்னித்த குருராஜர் தன் பிருந்தாவன் பூஜை செய்யும் உரிமை இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கும் என சாசனம் எழுதி தந்தார்.

மிருத்திகை மகிமை!

ஸ்ரீ மடத்துச் சிப்பந்தி ஊருக்குச் சென்று மணம் செய்ய விரும்பி சமயம் வரும்போது தனிமையில் ஸ்ரீராயரிடம் சொல்லி அனுமதிபெற்று பொருளுடன் ஊருக்குச் செல்ல விரும்பினான். தனிமையான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ ராகவேந்த்ரர் மிருத்திகா சௌசம் சுத்தி செய்யும்போது சந்தர்ப்பம் கிடைக்க தன் எண்ணத்தைச் சொன்னான். உடன் ஸ்ரீராயர் தன் கையிலிருந்த மிருத்திகாவை கொடுத்து நீ ஊருக்குப் போகுமுன் உனக்குப் பொண்ணும் பொருளும் கிடைக்கும் என ஆசி வழங்கினார்.

வழியில் இரவு நேரமானதால் அருகிலிருந்த ஊரின் வீட்டுத் திண்ணையில் படுத்தான். அந்த வீட்டில் குழந்தை பிறந்திருப்பது அறிந்து அவர்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றெண்ணி ஓரமாக அமைதியாகப் படுத்துக் கொண்டான். நடு இரவில் ஓர் பிரம்ம ராஷஸன் எழுப்ப விழித்து பார்த்தவன் அவன் உருவத்தைப் பார்த்து பயந்தான். அப்போது அந்த உருவம் உள்ளே இருக்கும் குழந்தையை சப்பிடப்போகின்றேன். உன்னிடம் இருக்கும் ஒன்று என்னைத் தடை செய்கின்றது. அதை மறைத்து வை என்றது. அப்போதுதான் அந்த பிரம்ம ராஷஸன் சொல்வது ஸ்ரீராயர் தன்னிடம் கொடுத்த மிருத்திகை என உணர்ந்தான். ராஷ்ஸனிடம் நீ எனக்குப் பொன்னும் பொருளும் தந்தால் நான் நீ கூறியவாறு செய்கின்றேன் என்றான். ராஷஸன் ஒரு குடம் நிறைய தங்க காசுகளை கொடுத்தது. உடன் அந்த மிருத்திகையை எடுத்து ஸ்ரீராயரை நினைத்து அந்த ராஷஸன்மேல் போட அவன் எரிந்து கந்தர்வனாக மாறினான். தன் சாபம் தீர்ந்ததற்கு நன்றி சொன்னான். இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் இவரைப் பற்றி விசாரித்து அவர் சொந்தத்தில் உள்ள ஒர் பெண்ணைக் காட்ட திருமணம் நடைபெற்றது. மிருத்திகை மகிமையால் பொன்னும் பொருளும் கிடைத்தது

பிருந்தாவன பிரவேசத்திற்கு சூசகம்!

கும்பகோணத்தில் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஸ்ரீ ராகவேந்த்ரர் திடிரென்று எழுந்து வானை நோக்கி கை கூப்பி வணங்கினார். அப்போது ஆகாயத்தில் இரண்டு விரல்கள் மூன்று முறை தெரிய அதைப் பற்றி விளக்கும்போது தனக்கு பிருந்தாவன வாஸம் செய்ய 2வருடங்கள், 2மாதங்கள், 2நாட்கள் இருப்பதாகவும் முக்திக்குச் செல்லும் ஸ்ரீகிருஷ்ண த்வைப்பாயனர் இதைக் குறிப்பால் உணர்த்தியதாகவும் கூறினார். அனைவரும் வருத்தப் பட்டாலும் ஸ்ரீ ராகவேந்திரர் கும்பகோணத்தை விட்டு புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

மடத்தின் நிர்வாகத்தில் இருந்த கும்பேஸ்வரர், சக்ரபாணி, சாரங்கபாணி கோவில்களை காமகோடிபீடம், வைணவ மடங்களுக்கு மாற்றினார். விஜயீந்த்ரர் பிருந்தாவனம் பாடசாலைகளை பூர்வாசிரம பந்துக்கள் வசம் ஒப்படைத்தார். பின் இங்கிருந்து புறப்பட்டு ஆனே குந்தி சென்று தன் குரு மார்களை பூஜித்து விட்டு அதோனி நோக்கிச் சென்றார். தனக்கு வாழ்வளித்து தன்னை உயர் நிலைக்கு உயர்த்திய குரு ஸ்ரீராகவேந்த்ரர் வரவேற்பிற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்ண கும்ப மரியாதையுடன் வெங்கண்னா திவான் செய்தார். பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.


பிருந்தாவனத்திற்குரிய இடம் தேர்வு!

அரசர் சித்தி மசூத்கானை மூலராமர் பூஜையில் கலந்து கொள்ள வெங்கண்ணா கேட்டுக் கொண்டார். பூஜைக்குமுன் சந்திக்க வந்த சித்திமசூத்கான் ஒரு வெள்ளித் தட்டில் மாமிசத் துண்டுகளை வைத்து அதை ஒர் பட்டுத் துணியால் போர்த்தி ஸ்ரீ ராகவேந்த்ரரிடம் கொடுத்தான். பூஜை முடிந்ததும் தன் கமண்டல நீரைத் தெளித்து துணியை விலக்க உள்ளே பழங்களும் பூக்களாகவும் இருக்கக் கண்ட சித்தி மசூத்கான் ஆச்சர்யம் கொண்டு சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான். ஸ்ரீராயர் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, மூல ராமர் நீங்கள் கொண்டு வந்ததை பழங்களாகவும் பூக்களாகவும் ஏற்றுக்கொண்டார். நீங்கள் வருந்த வேண்டாம் என்றார். எனினும் அரசரின் மனம் தான் அபசாரம் செய்து விட்டதாக வருந்தியது. அதற்கு பரிகாரமாக இரண்டு கிராமங்களை தானமாகத் தர ஸ்ரீ ராகவேந்த்ரர் அந்த கிராமங்கள் மக்கள் பயன் பாட்டிற்கு இருக்கட்டும். மாஞ்சால கிரமம் மட்டும் வேண்டும் என்றார். மாஞ்சால கிராமம் முன்னதாகவே காஜிக்கு தானமாக தரப்பட்டிருந்தாலும் காஜிக்கு அந்த இரண்டு கிரமங்களைக் கொடுத்து மாஞ்சாலக் கிராமத்தை மீட்டு ஸ்ரீமடத்திற்கு தானமாகக் கொடுத்தார் மன்னர்.

பிருந்தாவனம்-இடத்தின் சிறப்பு!

ஒர் நல்ல நாளில் வெங்கண்ணா உதவியுடன் மாஞ்சால கிரமத்தில் ஓர் இடத்தில் குழி தோண்டச் சொன்னார். அங்கு கொஞ்சம் யாகம் செய்ததற்கு அடையாளமாக சாம்பலும் அதற்கு கீழ் பலிபீடமும் இருந்தது. கிருத யுகத்தில் தான் பிரஹலாதனாக இருந்தபோது பலமுறை இந்த இடத்தில் யாகங்கள் செய்திருக்கின்றேன். ஸ்ரீராமர், லட்சுமணர் சீதையைத் தேடி வந்தபோது இந்த இடத்தில் இளைப்பாறியுள்ளனர். திரேதாயுகத்தில் பாரத யுத்தத்திற்குப்பின் அசுவமேதயாகம் செய்தபோது அனுஸால்வனை எதிர்த்து அர்ச்சுனன் சண்டையிட நேர்ந்தபோது அனுஸால்வனை அர்சுனனால் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் இந்த யாகம் செய்த இடத்தில் இருந்து சண்டையிட்டதுதான். இதை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் அர்சுனனை சிறிது பின்னே செல்ல வைத்தார். பின்னர் அனுஸால்வனை அர்ச்சுனன எளிதாக வென்றான். விபுதேந்திர தீர்த்தர் என்ற மகானும் இங்கு பலகாலம் தவம் செய்துள்ளார். எனவே இந்த இடம் மிகவும் புனிதமானது. இந்த இடத்தில்தான் தான் பிருந்தாவன பிரவேசம் செய்யப்போவதாக அறிவித்தார்.

பிருந்தாவன பிரவேசம்!

மாஞ்சால கிராமத்தின் தேவதை மாஞ்சாலம்மனைப் பிரார்த்தித்து அந்த இடத்தில் தன்னுடைய பிருந்தாவன பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க வேண்டினார். மாஞ்சாலம்மன் தன் சன்னதிக்கு அருகிலேயே பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் படியும் பிருந்தாவன் சன்னதிக்கு எதிரே பன்னிரண்டு ஆட்டுத் தலைகளை கல்லில் செதுக்கும்படியும் அதன் மூலம் தான் குருராஜருக்கு அனுகிரஹிப்பதாயும் உறுதியளித்தாள். தன் குலதெய்வமான வெங்கட்ரமண சுவாமிக்கு ஓர் கோவில் கட்டினார். பூஜை செய்பவர்கள் சிப்பந்திகள் தங்குவதற்கு வீடுகள் கட்டினார். வெங்கண்ணாவிடம் பிருந்தாவனம் தயார் செய்யச் சொன்னார். அருகிலுள்ள மாதவரம் கிராமத்தில் ஸ்ரீராமர் 7நாழிகை நேரம் அமர்ந்திருந்த கல்லை அடையாளம் காட்டி அதை வைத்து பிருந்தாவனம் செய்யும்படி பணித்தார்.

அருகிலுள்ள கணதாளம் என்ற இடத்தில் உள்ள குன்றின்மேல் தவம் செய்தார். அங்கு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் உருவம் சுயம்பாக தோன்றியது.

தனது பூர்வாசிரம அண்ணன் பேரர்களில் ஒருவர் வெங்கண்ணாச்சார்யார் என்பவரை தனக்குப்பின் பீடாதியத்யம் ஏற்க அனுக்ரஹித்தார். அவருக்கு ஸ்ரீயோகீந்த்ர தீர்த்தர் என ஆச்ரமப் பெயர் சூட்டினார். தன் பாதுகையை ஸ்ரீ யோகீந்த்ர தீர்த்தரிடம் கொடுத்து அதை பூஜித்து வரப் பணித்தார். அது ஸ்ரீ மடத்தின் பூஜையில் உள்ளது.

விரோதிகிருது வருடம்-1671 ஸ்ராவண மாதம் கிருஷ்ணபக்ஷ் த்விதை வெள்ளிக்கிழமை பூர்வத்தில் ஸ்ரீபிரஹலாதனாக இருந்தபோது யாகம் செய்த இடத்தில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து துளசிமாலை கையில் எடுத்துக் கொண்டு கையைத் தூக்கி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார். பின் கண்களை மூடி மாலையை உருட்டி ஜபம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஜபமாலை உருட்டுவது நின்றது. குருராஜர் நிர்விகல்ப சமாதி அடைந்தார்.

ஸ்ரீ குருராஜரை சுற்றி பிருந்தாவனம் ஸ்தாபனம் செய்து தலைக்குமேல் வந்ததும் 700 லக்ஷ்மிநாராயண சாலிக்ரமங்களைக் கொண்டு நிரப்பினர். அதற்குமேல் வெள்ளிப் பலகை வைத்து மூடி அதன்மேல் மிருத்திகையைப் பரப்பி பிருந்தாவன பிரதிஷ்டை செய்து ஸ்ரீயோகீந்த்ர தீர்த்தர் பிருந்தாவனத்திற்கு பூஜை செய்தார்.

அப்பண்ணாச்சார்யர்!

ஸ்ரீ ராகவேந்தரிடம் பக்தி கொண்ட சீடர் அப்பண்ணாச்சார்யார் 25கி.மீ தொலைவில் உள்ள பிக்ஷாலாயாவில் குழைந்தகளுக்கு பாடம் சொல்லித்தரும்போது பிக்ஷையாக பெற்ற அரிசி மற்றும் தானியங்களை நீரில் நனைத்து துணியில் கட்டித் தொங்கவிட்டு பாடம் நடத்துவார், பாடம் கற்றுத் தந்தபின் மரத்தில் கட்டப்பட்ட அரிசி மூட்டையை எடுத்து பார்த்தால் அது வெந்து சாதமாக மாறியிருக்கும். அதை நிவேதனம் செய்து மாணவர்களுக்கு உணவாக வழங்குவார். வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் சென்று விட்டு ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் அவரை சந்தித்து விடலாம் என நினைத்தார். பயணம் முடிந்து திரும்பி வந்தபோது துங்கபத்திரையில் வெள்ளம் கரை பிரண்டு ஓடியதால் உடன் மாஞ்சலா கிரமத்திற்கு வரமுடியவில்லை. வெள்ளம் வடிந்தபின் ஓடோடி வந்தார். அவர் வருவதற்குள் ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தின் மேற்பகுதி மூடப்பட்டது. விக்கித்து நின்ற அவர் அழுது புரண்டார். வரும்போது அவர் புதியதாக இயற்ற ஆரப்பித்த ஸ்தோத்திரம் பாதியில் நின்றுவிட்டது. அப்போது அந்த ஸ்தோத்திரம் முடிவதற்கான வார்த்தையை குருராஜர் சொல்ல அனைவரும் கேட்டனர். அதுவே அப்பண்ணாச்சார்யருக்கு ஸ்ரீ ராகவேந்தரின் காட்சியாக கிடைத்தது.

ஸர்தாமஸ் மன்றோ!

19-ம் நூற்றாண்டில் மஞ்சால கிராமத்தையும் மற்ற இடங்களையும் அரசுடைமை ஆக்க பிரிட்டிஷ் அரசாங்கம் ஆணையிட அதற்கு பக்தர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்க அப்போதைய பெல்லாரி கலெக்டர் ஆரய்ந்து முடிவு செய்ய ஸ்ரீமடத்திற்கு வந்தார். அங்குள்ள முறைப்படி காலணிகளை கழற்றிவிட்டு பிருந்தாவனத்தின் முன் நின்று வணங்கினார். ஸ்ரீராகவேந்த்ரர் வெளிப்பட்டு அவரிடம் அரசுடமை ஆக்கக்கூடாது என வாதிட்டார். சர்தாமஸ் மன்றோ கேட்ட கேள்விகளுக்கு திருப்தியான் முறையில் பதில் அளித்தார். அப்போது அவர் மீண்டும் வணங்க அவர் கையில் மந்த்ரக்ஷ்தை இருந்தது. வெளியில் வந்தவர் இதுவரை என்னுடன் பேசியதுதான் உங்கள் ஸ்ரீ ராகவேந்த்ரரா எனக் கேட்டபோதுதான் சிப்பந்திகள் ஸ்ரீராயர் தரிசனம் தந்து உரையாடியுள்ளார் என அறிந்தனர். பின்னர் இந்த அரசுடமை ஆணை ரத்து ஆனது.

#####

வெள்ளிக்கிழமை, 10 August 2018 09:18

வணங்கும்முறை!

ஓம்நமசிவய!

அற்புதக் கீர்த்தி வேண்டினேன்! ஆனந்த வாழ்க்கை வேண்டினேன்!
நற்பொருள் குவிதல் வேண்டினேன்! நலமெலாம்பெருக வேண்டினேன்!
கற்பகமூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம்
பணிந்து பார்த்தேன் பொய்யில்லை! கண்ட உண்மையது!

#####

வணங்கும்முறை!

கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். நந்தி பகவானின் வாலைப் பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளவும். அங்கிருந்தபடியே நந்தியின் கொம்புகளிடையே மூலத்தானத்தில் உள்ள லிங்கப் பெருமானைப் பார்த்து வணங்கவும். கோவிலின் உள்ளே இடதுபுறம் இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவனுக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும்.

இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று திருநீறு பெற்று நமசிவாயா எனச்சொல்லி நெற்றியில் மூன்று விரலால் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும்.

அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். அங்கு அப்படியே மனமுருகி அம்மையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். சில கோவில்களில் அம்மன் சன்னதி தனித்து இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பெரிய கோவில்களில் தலமரம் இருக்கும். அங்கு வணங்கியபின் அடுத்து ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரரை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுறிவந்து வணங்கவும். பிறகு நடராசர், சனி பகவான் தனி சன்னதி, காலபைரவர், சந்திரன் சூரியன் சன்னதிகளில் வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.

#####

திங்கட்கிழமை, 23 July 2018 20:42

ஐயப்பன்!

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

####

ஐயப்பன்!

தத்தாத்ரேயர்

அனுசூயையின் கற்பை சோதிக்க தம் தம் கணவர்களான மும்மூர்த்திகளை அனுப்ப அனுசூயையின் கற்பின் சக்தியால் அவர்கள் குழந்தையாய் மாற முப்பெரும் தேவியரின் வேண்டுதல்களுக்கு இணங்கி மீண்டும் மும்மூர்த்திகளாய் மாற்ற, தங்கள் மூவரின் அம்சமாக அனுசூயைக்கு தத்தாத்ரேயரை அளித்துச் சென்றனர்.

லீலாவதி!

இதனால் முப்பெரும் தேவியரும் தங்களின் அம்சங்களை ஒன்றாக்கி காலவ முனிவரின் மகளாகத் தோன்றினர். லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்து அவளை தத்தாத்ரேயருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

அவதார நோக்கம் முடியும் காலத்தில் பழையபடி மும்மூர்த்திகளுடன் இணைய விரும்பிய தத்தாத்ரேயர் சன்யாசம் மேற்கொள்ள தீர்மானித்தார். ஆனால் லீலாவதி பிடிவாதமாக சன்யாசம் வேண்டாம் சம்சாரத்தில் இருக்கவே விரும்பி பலவிதமான சாகஸங்களால் தடங்கள் செய்தாள். பொறுமை கடந்த தத்தாத்ரேயர் எருமைபோல் இடைஞ்சல் பண்னும் நீ எருமையாக போகக்கடவுது எனச் சபமிட பதிலுக்கு மனைவியின் அருமை தெரியாத நீங்களும் எருமையாக வேண்டும் எனப் லீலாவதி பதில் சாபமிட்டாள்.

மகிஷி!

ரம்பன் அண்ணன், கரம்பன் தம்பி. எருமை உருவம் கொண்ட அசுரர்கள். ரம்பனின் மகன் மகிஷாசுரன். கரம்பனின் மகள் கரம்பி என்ற மகிஷி. இவள்தான் தத்தாத்ரேயரால் போன பிறப்பில் எருமையாகப் போக சாபம் பெற்ற லீலாவதி. அண்ணன் மகிஷாசூரனை அம்பிகை வதம் செய்ததால் கோபம் அடைந்த மகிஷி பிரம்மனை நோக்கி தவமிருந்து இருமூர்த்தி வடிவாக பிறக்கும் ஒருவன் குழந்தையாய் பன்னிரண்டு ஆண்டுகள் பூவுலகில் வாழ வேண்டும், அவனால்தான் தனக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றும் வரம் பெற்றாள்.

சுந்திர மகிஷம்!

வரம் பெற்றதும் அட்டகாசங்கள் புரிந்து தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப் படுத்தினாள் மகிஷி. மும்மூர்த்திகளும் உரிய காலம் வரை பொருத்திருக்கச் சொன்னார்கள். மூவரும் தங்கள் அம்சங்களை உள்ளடக்கிய எருமை ஒன்றை உருவக்கி, அழகிய அதற்கு சுந்திர மகிஷம் எனப் பெயரிட்டனர். இந்த எருமையே மனைவி லீலாவதி சாபப்படி எருமையாக பிறப்பெடுத்த தத்தாத்ரேயர். சுந்திர மகிஷத்தைக் கண்டதும் முற்பிறப்பின் பந்தம் காரணமாகத் தான் செய்து வந்த கொடுமைகள மறந்து அன்பு கொண்டாள்.

ஹரிஹர சுதன்-மணிகண்டன்!

காலம் ஓடியது. மும்மூர்த்திகளும் சுந்திர மகிஷனை மறையச் செய்தனர். சுந்திர மகிஷம் காணாமல் போகவே பழையபடி தன் அட்டூழியங்களைத் தொடர்ந்தாள் மகிஷி. விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மோகினியை பார்த்தார் சிவன். கண்கள் கலக்க பிறந்த குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டி அங்கேயே விட்டு மறைந்தனர். அடர்ந்த காட்டிற்கு வேட்டைக்குவந்த பந்தள மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துச் சென்றான். பிள்ளையில்லாத தன் குறைதீர்க்க கடவுளின் பரிசு என மகிழ்ந்து குழந்தைக்கு கண்டத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என பெயரிட்டு வளர்த்தான்.

மணிகண்டனுக்கு பன்னிரண்டு வயது நிரம்பியது. மணிகண்டனை தன் குழந்தையாய் வளர்த்த அரசிக்கு தாயாகும் பாக்கியத்தை தேவர்கள் அளிக்க குழந்தை பிறந்தது. சொந்தக் குழந்தைமேல் பாசம் அதிகம் கொண்டதால் மந்திரியின் ஆலோசனைப்படி மணிகண்டன் இளவரசன் ஆகமல் இருக்க நோயால் பீடிக்கப்பட்டவள் போல நடித்து மணிகண்டனை நோய்க்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவர காட்டிற்கு அனுப்பினாள்.

ஐயப்பன்!

வழியில் மணிகண்டனைப் பார்த்த தேவர்கள் அவனை அழைக்க அவன் திரும்பவில்லை. காட்டில் தென்பட்ட மதயானையை அடக்கியபோது ஐயா அப்பா சரணம் என்று தேவர்கள் கூச்சலிட்டதும் திரும்பிய மணிகண்டனிடம், மகிஷியின் அட்டகாசத்தைக் கூறி அவளை அழிக்க வேண்டினர். எருமையாய் காட்டில் அலைந்து கொண்டிருந்த மகிஷியை மணிகண்டன் வதம் செய்ய எருமை வடிவம் நீங்கி அழகிய நங்கையாக மாறினாள் மகிஷி. தேவர்கள் ஐயப்பா சரணம் என மகிழ்ந்தனர். தன் சாபம் நீங்கச் செய்த ஐயப்பனிடம் தன்னை மணக்க வேண்டுகோள் வைத்தாள்.

அதற்கு ஐயப்பன் தான் இப்பிறவியில் பிரமச்சாரிய விரதம் பூண்டு தவம் இருக்கப் போகின்றேன். எனவே உன்னை மணக்க இயலாது என்றார். அவளது இயற்கையான அடம் தலைதூக்கவே நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தினாள். மும்மூர்த்தி அம்சமான தத்தாத்ரேயரின் பத்தினியாக முப்பிறப்பில் பிறந்தவளுக்கு தான் தற்போது இரு மூர்த்திகளின் அம்சமாக இருப்பதால் அவளை மணக்க இயலாது என்பதைப் புரியவைக்க முயற்சித்தார். அவள் அதை புரிந்து கொள்ளவில்லை.

கன்னிசாமி, மாளிகைபுரத்து அம்மன்!

யோசித்த ஐயப்பன், மகிஷியே சபரிமலைமீது யோகத் தவம் செய்யப் பொகும் எனக்கு அருகிலேயே நீயும் அமர்ந்து கொள். உனக்கு மாளிகைபுரத்து அம்மன் எனப் பெயரடைவாய். பக்தர்கள் உன்னையும் என்னையும் வணங்குவர். ஆண்டுதோறும் வரும் புதுப்புது பக்தர்களை .நீ பார்த்துக் கொண்டிரு. எந்த வருடத்தில் புதுபக்தர்கள்–கன்னி சாமி வரவில்லையோ அந்த வருடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என்று சொல்ல சபரிமலயில் மகிஷியும் மாளிகைபுரத்து அம்மனாக அமர்ந்தாள்.

புலிப்பால்!

தன் வளர்ப்பு தாய்க்கு புலிப்பால் கொடுப்பதற்காக புலியாக மாறிய தேவர்களுடன் சிம்மமாகமாறிய இந்திரன்மீதேறி அரண்மனை சென்றார்.

யோகத்தவம், பூதநாத கீதை!

புலிகளுடன் வந்த வளர்ப்பு மகனைக் கண்ட அரசனும் அரசியும் அவன் சாதாரண பிறப்பல்ல என்பதை உணர்ந்தனர். அரசி தன் செயலுக்கு மிகவும் வருந்தினாள். அரியனை அவசியமில்லை எனச் சொல்லி தான் யோகத்தவம் இருப்பதாகக் கூறி கானகம் சென்றான். தன் வளர்ப்பு மகன் இப்படிச் செல்வது கண்ட மன்னன் அவனைத் தனக்கு குருவாக இருக்க கேட்க தந்தைக்கு குருவாக இருப்பது தவறு என அகத்தியரை அழைத்து தனது போதனைகளை அவரிடம் கூறி அதனை பந்தள அரசனுக்கு பாடமாகக் கூறவைத்தார். அந்த போதனைகள் பூதநாத கீதை எனப்படும். மனிதன் அறவழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். கலியில் பக்தி மார்க்கமே சிறந்தது என்ற இரண்டு கருத்துக்களை இது வலியுருத்துகின்றது.

திரு ஆபரணம். அரசன்போல் காட்சி!

சபரிமலையில் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் அமர்ந்தர். மகனைத் தேடிவந்து தரிசித்த பந்தள மன்னன் கண்ணாய் மணியாய் வளர்த்த மகன் இப்படி ஆண்டியாய் காட்சி தருகின்றானே எனவருந்த ஆண்டிற்கு ஒருநாள் தைமாதம் முதல் நாள் ஆபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் தன் தந்தைக்கு காட்சி அளிப்பதாக வாக்குக் கொடுத்தார்.

மகரஜோதி!

தை மாதம் முதல் நாள் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதால் மகர சங்கரந்தி என்றும் அந்த மாதம் முழுக்க மகர ராசியிலேயே இருப்பதால் தை மாதத்தை மகர மாதம் என்பர். மகர மாதத்தில் தெரியும் ஜோதியை மகர ஜோதி என்றாலும் அதில் ஒரு தத்துவம் உள்ளது.

தர்மசாஸ்தா!

சன்னியாசி ஆன பின் அரசனுக்குரிய ஆபரணங்கள் அணிவது முறைப்படித் தவறு. இருப்பினும் தந்தைக்கு அளித்த வாக்கை நிறைவேற்றவே இது நடந்தாலும் மனதிற்கு சரி எனப் படாததால் ஐயப்பன் தனது அவதார அம்சத்தினை ஜோதி வடிவாக்கி அருகில் உள்ள காந்த மலையில் இருத்திவிட்டு அதன் பிறகு பந்தள மகராஜனின் ஆபரணங்களை அணிந்து கொள்கின்றார். தான் ஏற்றுக் கொண்ட சன்யாச தர்மத்திற்கு எந்த வகையிலும் குறைவராதபடி தர்மத்தைக் காத்ததால் தர்ம சாஸ்தா எனப் பெயரடைந்தார்.

சிதம்பரத்தின் எட்டுத்திசைகளிலும் மகா சாஸ்தா, பால சாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, ஜகன்மோகன் சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, ருத்ர சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, என சாஸ்தாவின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

காந்த மலையில் தேவர்கள் ஜோதியை ஆராதித்தார்கள். இந்த ஐதீகத்தின் படியே மகர ஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

தரிசிக்க-விரதம்!

கார்த்திகை மாதத்தில்தான் சிவன் ஜோதிவடிவாகத் தோன்றினார். மாதங்களில் நான் மார்கழி என விஷ்ணு சொல்லியுள்ளார். எனவே ஐயப்ப பக்தர்கள் சிவனுக்குரிய கார்த்திகை மாதம் மாலை தரித்து விஷ்ணுவுக்குரிய மார்கழி மாதம் வரை விரதம் இருந்து சிவ விஷ்ணு அம்சமான ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும். தை மாதத்தில் தோன்றும் மகர ஜோதியை தரிசிக்க வேண்டும். என்பதே சிறப்பான பலகளைத் தரும் விரதமாகும்.

இருமூர்த்தி அம்சம்!

ஐயப்பன் இரு மூர்த்தி வடிவம் என்பதை மீலாவதி-மகிஷி-மாளிகைபுரத்து அம்மனுக்கு உணர்த்தவே சிவரூபமான தேங்காயில் விஷ்ணு அம்சமான நெய் ஊற்றி எடுத்து வருகின்றனர். பசு நெய் மகாலட்சுமி அம்சம். மகாலஷ்மி மகாவிஷ்ணு மார்பில் எப்போது குடியிருப்பவள் அதனால் நெய் விஷ்ணுவின் ஸ்வரூபமாகும். மேலும் இருமுடி என்பது இரு மூர்த்தி வடிவம் என்பதையே குறிக்கும். கெடும் பாலிலிருந்து கிடைக்கப்பெறும் கெடாத நெய் போல அழியும் உடம்பில் அழியாத ஆன்மா இருப்பதைக் குறிக்கும் நெய்த் தேங்காயை ஆன்மா பிரிந்ததும் உடலை நெருப்பில் இடுவதுபோன்றே தேங்காயிலிருந்து நெய்யை எடுத்ததும் தேங்காயை நெருப்பில் போட்டு விடுவர்.

மஞ்சள் மாதா!

வருடாவருடம் தொடர்ந்து வரும் புதுப் பக்தர்கள்-கன்னி சாமிகளால் தான் தன் திருமணம் தடைபெறுகின்றது என்பதால் மாளிகைபுரத்து அம்மன் கோபம் கொள்ளாமல் சாந்தம் அடைய வேண்டும் என்பதால்தான் மஞ்சள் தூவி தேங்காய் உருட்டுகின்றனர்.

புதிதாக வரும் கன்னி ஐயப்ப சாமிகள் சரங்குத்தி மரத்தில் சரம் குத்த வேண்டும். மாளிகைபுரத்து அம்மனாக மஞ்சள்மாதாவாக அங்கே காத்திருக்கும் அந்தக் கன்னிகை ஒவ்வொரு வருடமும் அந்த சரங்குத்தி மரத்திற்கு வந்து சரங்குத்தியிருப்பதைப் பார்த்து கன்னிசாமி வந்துள்ளார்கள் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வாள்

ஐயப்பன் வகனங்கள்!

வில் அம்பு ஏந்தி புலி வேட்டைக்குப் புறபட்டது குதிரையில் என்பதால் குதிரையே அவர் முதல் வாகனம். காட்டில் மதயானையை அடக்கி அதன் மீது அமர்ந்து .சென்றதால் இரண்டாவது வாகனம் யானை. தேவர்கள் யாவரும் புலியாக மாறியதும் இந்திரன் சிம்மமாகமாற அதன்மீதேறி அரண்மனை வந்ததால் மூன்றாவது வாகனம் சிங்கம். பின்னாளில் புலி ஐயப்பன் வாகனமானது. ஹரிவராசனம் என்ற ஐயப்பனின் பக்திப் பாடலில் வரும் ‘களப் கேசரி, வாஜி வாகனம்’ என்பது களபம்-யானை, கேசரி-சிங்கம், வாஜி-குதிரை என்பதை உணர்த்துவதாகும்.

ஹரிவராசனம்!

இந்தப்பாடல் கும்பக்குடி குளத்தூரார் என்பவரால் 1950–ல் இயற்றப்பட்டது. இரவில் நைவேத்யமாக பானகம் படைக்கப்பட்டபின் ஐயப்பன் துயில்வதற்காக இரவு பதினொன்னரை மணியளவில் பாடப்படும். ஒவ்வொரு விளக்காக அனைத்து விட்டு பின்னால் நடந்து வந்து கடைசி வரிகள் பாடப்படும் போழுது கடைசி விளக்கை அர்ச்சகர்கள் அனைப்பர்.

காவல் தெய்வம்!

பொதுவாக ஐயப்பனை காவல் தெய்வம் என்றே புராணங்கள் சொல்கின்றன. சூரபதுமனிடமிருந்து இந்திராணியைக் காப்பாற்ற ஐயப்பனையே காவலுக்கு நிறுத்தியதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை சித்தர்கள் வாழுமிடம்!

சித்த யோகினியாக வாழ்ந்த சபரி அம்மன் ஜீவசமாதி அடைந்த இடம் சபரிமலை. சித்தர்கள் வாழும் பகுதி என்பதால் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் யோகம் செய்ய இந்த இடத்தை தெரிவு செய்தார். பதினெட்டுப் படிகளில் பதினென் சித்தர்கள் இருப்பதாக ஐதீகம்.

பதினெட்டாம் படிகள்!

மனிதனிடம் உள்ள பஞ்சேந்திரியங்களான செவி, பார்வை, நுகர்வு, தொடு உணர்ச்சி, சுவை ஆகிய ஐந்தை முதல் ஐந்து படிகள் குறிக்கின்றன. காமம், குரோதம், பேராசை, மோகம், அகந்தை, போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகிய எட்டை அடுத்த ஆறு முதல் பதின்மூன்று வரைலான படிகளும், சத்வகுணம், ராஜோ குணம், தாமஸ குணம் என்ற மூன்றையும் அடுத்த பதினான்கு முதல் பதினாறு வரையிலான படிகளும் வித்யா, அவித்யா என்ற அறிவையும், அறியாமையும் அடுத்துள்ள பதினேழு, பதினெட்டாம் படிகளும் குறிக்கின்றன. ஒவ்வொரு படியைக் கடக்கும் போது ஒரு தீய பழக்கம் நம்மை விட்டு நீங்குவதாக ஐதிகம். உலகியல் மயக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து இறைவனிடம் பரிபூரணமக சரணடைந்தால் மெய்ஞானம் பெறமுடியும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்தும்.

மேல்சாந்தி!

நிர்வாகப் பொறுப்பு முதல் பூஜைகளைத் தொடங்கி வைக்கும் பொறுப்பும் கோவிலை திறந்து வைக்கவும் மூடவும் அதிகாரமும் உள்ள முதல் அர்ச்சகர்-மேல்சாந்தி. வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரங்களை முறையாக கற்று மற்ற கோவில்களில் மேல் சாந்தியாக அனுபவம் பெற்றவர்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவரது பதவிக் காலம் ஓரண்டு. ஆண்டு முழுவதும் சபரிமலையிலேயே தங்கியிருக்க வேண்டும். வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே சபரிமலையின் மேல்சாந்தியாக முடியும்.

ஐயப்ப விரதம்- சபரிமலை!
ஐயப்பனுக்கு ஒரு பக்தன் மாலை அணிந்து இருமுடிகட்டி 41 நாட்கள் முறைப்படி விரதம் மேற்கொண்டு 48 மைல்கள் நடந்து செல்ல வேண்டும் என்பதே முன்னோர் வழி முறைப்படுத்திய நெறியாகும். விரத காலத்தில் மனதிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மையைக் கடைபிடித்து சைவ உணவு உண்டு காமம், கோபம், பொறாமை ஆகியவறை கட்டுப்படுத்தி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

சபரிமலை யாத்திரைக்கு மூன்று காலங்கள் முக்கியமானதாக் கருதப்படும். கார்த்திகை முதல் தேதியில் தாய், தந்தை, குரு, பெரியோர்களிடம் ஆசி பெற்று குருநாதர் முன் தெய்வ சன்னதியில் பூஜை செய்து துளசி மாலையை அணிந்து கொள்ளல் வேண்டும்.

தினமும் சரணாகதி நிலையைக் குறிக்கும் முழுமையாக இறைவனிடம் நம்மை சமர்ப்பணம் செய்யும் சரணங்களை கூறிவழி படவேண்டும்

இரண்டு பகுதிகள் கொண்ட துணிப்பையில் முன்பகுதியில் சுவாமிக்குரிய பூஜைப் பொருட்கள் மற்றும் நெய்த்தேங்கயும் பின் பகுதியில் யாத்திரிகனுக்குரிய உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் தத்துவம் சுவாமிக்குரிய பொருட்கள் புண்ணியம், யாத்ரிகனுக்குரியது பாவச்சுமை. பயணத்தில் யாத்ரிகன் மலையை நெருங்க நெருங்க அவனுக்குரிய பொருட்கள் குறையும். அதாவது இறைவனை நெருங்க நெருங்க பாவச் சுமை குறைந்து கொண்டு வந்து முடிவில் புண்ணியம் மட்டும் மிஞ்சும்.

இறைவன் முன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை என்பதை உணர்த்தும் விதமாகவே ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சமி என அழைத்துக் கொள்வது வழக்கமானது.

கார்த்திகை முதல் தேதி தொடங்கி மார்கழி, தை மாதங்களில் நடைதிறக்கப்படும் சமயத்தில் சபரிமலை சென்று மகர விளக்கு- காந்த மலை ஜோதி தரிசித்து வருதல் சிறப்பு ஆகும். நல் ஒழுக்கத்தைக் கடைபிடித்து தன்னை நாடிவந்து வணங்குவோரின் மெய்யில் நலம் நீங்காதிருக்க என்றும் ஐயப்பன் அருள்வார்-.

#####

திங்கட்கிழமை, 23 July 2018 20:27

தத்தாத்ரேயர்!

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

####

தத்தாத்ரேயர்!

தங்களைவிடப் பதிவிரதைகள் பூலோகத்தில் இல்லை என்பதை நாரதர் மறுக்க கோபம் கொண்ட அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரிடம் இரும்பு கடலையைக் காட்டி வேகவைக்க முடியுமா என்றார். பதிவிரதை என நீங்கள் சொன்ன அனுசூயையினால் கூட இதை வேகவைக்க முடியாது என்றனர் மூவரும். அனுசூயை இருப்பிடம் சென்ற நாரதர் அவரிடம் அந்தக் கடலைகளைக் கொடுத்து அவற்றை வேக வைக்கச் சொன்னார். அவர் தன் கணவர் அத்ரிமுனியை எண்ணி நீர் விட அந்த இரும்புக்கடலைகள் வெந்தன. இதை அறிந்த மூவரும் அனுசூயை சோதிக்க எண்ணம் கொண்டனர். தங்கள் கணவர்களை முனிவர்களாக மாறிச் சென்று அனுசூயையிடம் பிட்சைகேட்கவும் அனுசூயையை ஆடையின்றி பிட்சையிடவும் நிபந்தனை விதித்தனர்.

மும்மூர்த்திகளும் அத்ரி இல்லம் சென்று பிட்சை கேட்டனர். ஆடையின்றி அமுது அளிக்க வேண்டுகேள் வைத்தனர். முனிவர்களின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ந்த அனுசூயை தன் ஞானதிருஷ்டியில் வந்திருப்பது மும்மூர்த்திகள் என அறிந்து அவர்களது கோரிக்கைக்குச் சம்மதித்து அவர்களுக்கு இலைபோட்டு அமரவைத்தாள். தன் கணவரைத் துதித்து நீரை அவர்கள்மேல் தெளிக்க மூவரும் குழந்தைகளானார்கள். மும்மூர்த்திகள் விருப்பம் போல் அவர்களுக்கு தாயன்புடன் உணவு ஊட்டினாள். அரன் அரி அயன் மூவரும் குழந்தைகளாக விளயாடிக் கொண்டிருக்க கண்ட தேவியர்கள் அனுசூயையிடம் மன்னிப்புகோர அனுசூயை அவர்களை மீண்டும் மூர்த்திகளாய் மாற்றினார். மும்மூர்த்திகள் தங்கள் அம்சமாக தத்தாத்ரேயரை அந்த தம்பதியினருக்கு அளித்தனர்

மூன்று முகங்கள் ஆறு கரங்களுடன் அத்ரி முனிவர் அனுசூயாதேவி ஆகியோருக்கு மகனாக மும்மூர்த்திகளின் அருளால் பிறந்தவர் தத்தாத்ரேயர். ஒளதும்பரம் என்ற அத்திமரத்தடியில் பசு அருகில் இருக்க நான்கு நாய்களுடன் தரிசனம் தருபவர். பசு தர்ம தேவதையையும் பூமியையும், நான்கு நாய்கள் நான்கு வேதங்களின் அம்சமாகவும் கருதப்படும். கர்த்த வீர்யார்ஜுனனுக்கும் பிரகலாதனுக்கும் குருவாகத் திகழ்ந்தவர். அனுமனும் தத்தரும் யோகிகளுக்கு காட்சி தருவதுண்டு. ஆதிசங்கரர் இவரைச் சந்தித்து தமது அத்வைத கருத்துக்களுக்கு ஒப்புதல் பெற்றார்.

பஹுதர், குடீசர், ஹம்சர், பரமஹம்சர் என நான்கு சன்யாசி பிரிவுகளில் பரமஹம்சர்கள் மேம்பட்டவர்கள். அவதூதர்கள் அவர்களைவிட உயர்ந்தவர்கள். அவதூத சன்னியாசிகளின் முன்னோடி. ஜீவன் முக்த கீதை மற்றும் அவதூத கீதை என்ற அரிய நூலை எழுதியுள்ளார். வித்வத் சந்நியாசம் என்ற அவதூத பரம்பரைக்கு மூலகாரணபுருஷர் தத்தாத்ரேயர். அவதூத ஆஸ்ரமத்தை துவக்கி வைத்தார் தத்தாத்ரேயர். சதாசிவபிரமேந்திரான், புதுக்கோட்டை சாந்தானந்தர், ஜட்ஜ் சுவாமிகள் ஆகியோர் இந்த ஆசிரமத்தில் சந்நியாசம் பெற்றவர்கள்.

மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் தத்தாத்ரேயருக்கு பிரியமான இடம். கும்பமேளா சமயத்தில் எண்ணற்ற அவதூத சந்நியாசிகள் கூடுகின்றனர். இவர்களுக்கு தண்டம் கமண்டலம் கிடையாது. இவர்களின் பாதுகைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்வது வழக்கம்.

இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் தத்தாத்ரேயர் தங்கி தவமியற்றிய தத்தர்குகை உள்ளது. பதினாயிரம் படிகளை உடைய கிர்நார் மலியின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை உள்ளது. ஸஹ்யமலை- தத்த சேத்திரம்- மகாபலேஷ்வர் என அழைக்கப் படுகிறது. குல்பர்கா அருகில் காங்காப்பூரில் தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் உள்ளார். இவரை ஜன்னல் மூலம் தரிசனம் செய்ய வேண்டும். மராட்டிய கிருஷ்ணா நதி தீரத்தில் தத்தர் ஆலயம்- பாதுகைகள் வழிபாடு. உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என அழைப்பட்டு தத்தகுரு ஆராதனை சிறப்பு. ஆந்திரா கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஒளதும்பரம் தத்த க்ஷேத்திரம். சேலம், சேர்ந்தமங்கலம் தத்தகிரி குகாலயத்தில் சிலாரூபம், குடவாசல் எனும் புதுக்குடியில் தத்த குடீரம், உடையார்பட்டியில் பதினாறு அடி உயரமுள்ள சிலாரூபம், சுசீந்திரன் தாணுமாலயன் ஒரு தத்த க்ஷேத்திரம்மைசூரில் புகழ் பெற்ற தத்தாத்ரேயர் கோவில் உள்ளது. தஞ்சை வடகுடியில் தத்தாத்ரேயருக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் கோவில்.

#####

திங்கட்கிழமை, 23 July 2018 19:30

நாரதர்!

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

####

நாரதர்!

நாரதர் என்றால் என்ன! முன் ஜென்ம விருப்பம்!

வேத வித்துக்களிடம் பணி புரிந்த வேலைக்காரின் மகனாகப் பிறந்து அவர்களுக்கு பணிவிடை செய்து வந்ததால் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்று எதையும் அர்ப்பணமாக செய்து வர பக்தியும் ஞானமும் வளர்ந்தது. தாயார் இறந்துவிட வடக்கே புறப்பட்டுச் சென்று ஓர் நதியில் நீராடி நீரை அருந்தி உபதேச மந்திரத்தை ஜபித்து கிருஷ்ணனை தியானிக்க உள்ளத்தில் தோன்றி மறைந்து விட்டார். பின்னர் இப்பிறவியில் என்னைக் காணும் தகுதி உனக்கில்லை என் அசரீரி எழுந்தது. உள்ளத்தை இருத்தி பற்றின்றி இருக்க பஞ்சபூத சரீரம் விழ புண்ணிய சரீரம் கிடைத்தது.

சத்ய யுகத்தில் சாரஸ்வதன் என்பவன் அவந்தி நகரில் வாழ்ந்திருந்தான். ஒருநாள் அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது எனதோன்றியது. எதனால் இந்த எண்ணம் வந்தது என அவனுக்குத் தெரியவில்லை. தனது செல்வங்கள் எல்லாவற்றையும் தனது புத்திரர்களிடம் அளித்துவிட்டு ஸ்ரீமன்நாராயணனை நோக்கி தியானம் செய்ய ஆரம்பித்தான். தன் முன் தோன்றிய பகவானிடம் என்னை தங்களுக்குள் இனைத்துக் கொள்ளுங்கள் என வேண்டினான். சாரஸ்வதா சிறந்த பக்திமானான நீ இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டியுள்ளது. உனது முன்னோருக்கு நீ தர்ப்பணமாக அளித்த உணவும் நீரும் எனக்கு மகிழ்வைத் தந்தன. அதனால் உனக்கு நாரதன் என்ற பெயரை அளிக்கின்றேன். (நாரதர்-நீர் அளித்தவர்) சிறிது காலத்தில் சாரஸ்வதன் இயற்கையெய்தி பிரம்ம லோகத்தில் இருந்தான். பின்னர் பிரம்மாவின் புத்திரனாக தோன்றி பகவான் அளித்த பெயரால் நாரதன் என அழைக்கப்படலானான்.

மனிதர்கள் எதனால் நரர்கள் எனப்பட்டனர்! ஐம்பூதங்களும் ஒரு மனித உடலில் பரவியிருந்தாலும் நீரின் அளவே அதிகமாகும். பிராண ஆதாரம் நீராகும். அதனால்தான் மனிதர்கள் நரர்கள் எனப்பட்டனர். அந்த நீரில் உறைபவனான விஷ்ணுவை நாராயணன் என்றனர்

நாரதர் பெற்ற சாபங்கள்!
பிரம்மாவின் மூச்சுக்காற்றில் கலந்து மாரீசி போன்ற ஒன்பது முனிவர்களுடன் மானச புத்திரனாக தோன்றினார் நாரதர், பிரம்மன் நாரதரை அழைத்து மற்றவர்களைப் போலவே நீயும் எனக்கு படைப்புத் தொழிலில் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்க, தந்தையே என் மனம் மோட்ஷத்தை அடைய விரும்புகின்றது. பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை எனக்கு தாங்கள் போதிக்க வேண்டும் என்றார். கோபம் கொண்ட பிரம்மன் நாரதா நீ மேற்கொள்ள என்னும் பிரம்ச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக இருந்து பல சிக்கல்களுக்கு ஆளாக வேண்டும், கந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்பட்டபின் ஒரு முனிவரின் சாபம்பெற்று தாழ்குலத்தில் மானிடனாக பிறந்த பின்னரே உனக்கு சாப விமோசனம் கிட்டும் எனச் சாபம் கொடுத்தார்.

பிரம்மனின் சாபப்படி கந்தர்வர்களில் சிறந்த இசைமேதையான உபன் மகனாக உபவருக்கன் என்ற பெயரில் பிறந்து மகதி என்ற யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்றிருந்தான். முனிவர்கள் உபவருக்கனை தங்கள் ஆஸ்ரமத்திற்கும் யாக சாலைக்கும் அழைத்து சாமகானம் இசைத்துப் பாடச் சொல்லி ஆனந்தப்பட்டனர்.

பிரம்மசிரேஷ்டிரர் முனி தன் யாகசாலைக்கு உபவருக்கனை அழைக்க சாமகான வேதத்தை யாழிசையுடன் இசைத்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த இளம் பெண் இந்த இசையில் மயங்கியிருக்க அவளைப் பார்த்த உபவருக்கனும் மயங்கியதால் இசையில் தடுமாற்றம் ஏற்பட பிரம்மசிரேஷ்டர் உபவருக்க என இடி குரலில் அழைத்து சாம வேதகானத்தில் பிழையை உண்டாக்கியதால் நீ ஈன குலத்தில் மானிடனாய் பிறப்பாய் என சாபமிட்டார்.

முனியின் சாபத்தைப் பெற்றதால் வருத்தமுற்ற உபவருக்கன் யோகத்தில் ஆழ்ந்து தன் உயிரை விட்டான். கன்யாகுப்ஜ நாட்டில் தருமியன்-கலாவதி என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்ததும் நாட்டில் சுபிட்சமாக மழை பொழிந்ததால்- நீரை வர்ஷித்ததால் அவனுக்கு நாரதர் எனப் பெயரிட்டனர். தாய் தந்தையர் இறக்க காட்டில் தவம் மேற்கொண்டார். நாராயணர் தோன்றி நாரதா நீ இப்பிறவியில் என்னைக் காணமுடியாது. அடுத்த பிறவியில் உன் எண்ணம் நிறைவேறும் என்றதால் தெளிந்த நாரதர் மீண்டும் யோகத்தில் அமர்ந்து தன் உயிரை விட்டார்.

உடலைக் களைந்து சுய ரூபம் அடைந்து சத்ய லோகமடைந்து தந்தை பிரம்மனை வணங்கி, கையிலையில் சிவனை வணங்கி மோட்சம் பெறும் வழியைக் கேட்டார். பிரமச்சரிய விரதம் கொண்டு மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி இன்சொல் கூறி அறவழியில் நடந்து இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டும் உண்டு சதா இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

அதன்படி சதா சர்வ காலம் இறைவனை நினைத்து திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த நாரதர் பத்திரிகாசிரமம் சென்று நாராயணனை தரிசிக்க அவர் நாரதரை பூலோகத்தில் சிருஞ்சியர் மகள் சுவர்ணகிரீயை மணந்து வாழ அறிவுருத்த அவ்வாறே சுவர்ணகிரீயை மணந்து வாழ்ந்து கொண்டிருந்த நாரதருக்கு அங்குவந்த சனத்குமாரர் தாரக மந்திரத்தை உபதேசித்தார்.

நாராயணனின் தாரக மந்திரத்தை உபதேசம் பெற்றதும் நாரதர் பற்றற்ற நிலையை அடைந்து கானகம் சென்று தவமேற்கொண்டார். மகாவிஷ்ணு காட்சியளிக்க இசையில் வல்லவராக வரம் பெற்றார்.

தன் தாயையும் தந்தையையும் வணங்கி தாயிடம் உள்ளது போன்ற வீணையையும் அதை மீட்டும் ஞானமும் பாடும் திறமையும் பெற்றார். அவரின் இசை நாரத கானம் என்றாயிற்று.

நாரதர் திரிலோக சஞ்சாரி எப்படி ஆனார்!

தான் தோன்றியதிலிருந்தே நாராயணனை தன் சிந்தையில் வைத்து துதித்து வந்தார். தட்சப்பிரஜாபதி தன் குலத்தை விரிவாக்க 1000 மகன்களை மூன்றுமுறைத் தோற்றுவிக்க ஒவ்வொரு முறையும் அவர்களை பக்தி வழியில் ஈடுபடவைத்து முக்தி மார்க்கத்தில் நாரதர் செலுத்திவிட கோபம் கொண்ட தட்சப்பிரஜாபதி, நாரதா நீ இனி ஒரே இடத்தில் தொடர்ந்து ஒரு முகூர்த்த காலத்திற்குமேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் உன் தலை வெடித்து விடும் எனச் சாபம் கொடுத்தார்.

தன் தாயின் (சரஸ்வதி) தந்தையின் (பிரம்மா) ஆலோசனைப்படி நாரதர் மாதையூர் சென்று சிவனை வழிபட்டு தவமிருந்தார். சிவனிடம் தான் நினைத்தவுடன் எந்த உலகிற்கும் செல்லும் ஆற்றலையும் புகழையும் வேண்டிப் பெற்றார். தான்பெற்ற சாபப்படி நாரதர் ஒரே இடத்தில் இல்லாமல் எல்லா உலகங்களுக்கும் பயணித்தவாறே இருக்கின்றார். பகவானின் பரம பக்தனாக எந்நேரமும் நாராயணன் நாமம் உச்சரிக்கும் திரிலோக சஞ்சாரியாக பேறு பெற்றான்.


நாரதரின் ஆசை!

நாரதி, தமிழ் வருடங்களின் பிறப்பு! நாரம்- என்றால் தீர்த்தம் அல்லது மனிதமனம். நாரம் எனும் தீர்த்தத்தினை இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் நாராயணன். மனிதர்களின் மனத்தைப் புரிந்து கொள்கின்ற தன்மை இருப்பதனால் நாரதர். இந்த இருவர் சமபந்தப்பட்ட நிகழ்வே தமிழ் வருடங்கள்.

நாரதர் கட்டை பிரமச்சாரி. கங்கைக் கரையில் மக்கள் குடும்ப சகிதமாக செல்வதைக் கண்ட நாரதருக்கு ஒர் ஆசை தோன்றியது. குடும்பம் என ஒன்றில்லாததால் இல்லற சுகம் என்பதை தான் அறியமுடியவில்லை என நினைத்தார். அப்போது கங்கையில் ஓர் பெரிய மீன் தன் குஞ்சுகளுடன் நீந்தி செல்வது அவருக்கு மிகவும் மகிழ்வைக் கொடுக்க தானும் அதுபோல் குடும்பமாக சென்று அந்த சுகத்தினை அனுபவிக்க ஆசை கொண்டார். தன் நாவில் எப்போதும் உச்சரிக்கும் நாராயனின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்தபோது தன் ஆசையைக் கூறினார். மேலும் தாங்கள் ஆயிரக்கணக்கான மனைவிகளுடன் எப்படி குடும்பம் நடத்துகின்றீர்கள் என அறிய ஆசைப் படுவதாகச் சொல்ல கிருஷ்ணர் தனது மனைவிகள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று நேரில் அறிந்து வரும்படி கூறினார். எல்லா வீட்டிலும் கிருஷ்ணர் தன் மனைவி மக்களுடன் ஆனந்தமாக இருப்பதைக் கண்டு தானும் அப்படி இருக்க விரும்பிய எண்ணங்களுடன் கங்கையில் மூழ்கி நீராடினார்.

நீராடி எழுந்தபோது கிருஷ்ணரின் அருளால் பெண்ணாக மாறியிருந்தார். நாரதர் நாரதி ஆனார். கரையேறிய நாரதியை கங்கைக் கரையில் இருந்த ஓர் சந்நியாசி கையைப் பிடித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். நாரதியின் மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருந்தது. முதல் குழந்தைக்கு பிரபவ எனப் பெயரிட்டனர். ஆண்டுக்கு ஓர் குழந்தை என பிறக்க நாரதியின் உடல் நலம் குன்றியது. இப்படியே நாரதிக்கு அறுபது குழந்தைகள் பிறந்தன. அறுபதாவது குழந்தைக்கு அக்க்ஷய எனப் பெயரிட்டனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு, மருந்து அளிக்க முடியா நிலை ஏற்பட்டது. இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் கிருஷ்ணரை மனதாரத் துதித்தாள்.

அப்போது இதுவரை அவள் கணவராக இருந்துவந்த முனிவர் மறைந்து ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார். நாரதியிடம் குடும்ப வாழ்க்கையின் சுகம் போதுமா! என வினவினார்! மணவாழ்க்கை மலர்ப் படுக்கை என நினைத்து ஏமாந்து விட்டேன் .இதிலிருந்து என்னை மீட்க உதவி செய்யுங்கள் என வேண்டினாள். அறுபது வருடங்களாக மாயையில் ஆழ்ந்திருந்த நாரதி விழிப்பு ஏற்பட்டு நாரதாராக மாறினார்.

தன் தாயும் தந்தையும் நிலை மாறியதால் கலக்கமடைந்த அறுபது குழந்தைகளும் தங்களின் நிலை என்ன வென்று வேண்ட நாரதர் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்க்க, அவர் அறுபது பிள்ளகளையும் அறுபது ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இப்பூவுலகை சுகத்துடன் ஆண்டு வர ஆசிகூறினார். அதன்படி முதல் குழந்தை பிரபவ –ல் தொடங்கி அறுபதாவது குழந்தை அக்க்ஷய –ல் முடியும் ஆண்டுகளாக மாற்றம் பெற்று பூவுலகில் ஆட்சி செய்து வருகின்றனர்.

60 ஆண்டுகளின் பலன்கள்- புராணங்கள் கூறுவது
பிரபவ- உற்பத்தி
விபவ- செல்வம்
சுக்கில- வெளுப்பு,
பிரமோதூத- பிரபையுடன் கூடிய தூது
பிரஜோத்பத்தி- ஜனப்பெருக்கம்
ஆங்கீரஸ- வளமான செல்வ பெருக்கம்
ஸ்ரீமுக- லக்ஷ்மிகடாட்சம்
பவ- இறையருள் பொங்கிப் பெருகும்
யுவ- இளமை
தாது- வறட்சி நீங்கி வளம் பெரும்
ஈஸ்வர இறையருள் பரிபாலிக்கும், அமைதி நிலவும்,
வெகுதான்ய- விளைச்சல் அமோகம்
பிரமாதி- சில தவறுகள் நேரும்
விக்ரம- வீரமும், விளைச்சலும் அதிகரிக்கும்
விஷு- எல்லாப் பொருள்களும் பெருகும்
சித்ரபானு- மகிச்சிதரும் சம்பவங்கள் நிகழும்
சுபானு- இன்பமும் சுகமும் நிறைந்திருக்கும்
தாரண- மழை அதிகமாக இருக்கும்
பார்த்திப- உணவுப் பொருள் அதிகம் கிடைக்கும்
விய- அதிக செலவாகும்
சர்வஜித்- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி
சர்வதாரி- மழை அதிகம்
விரோதி- மழை அதிகம் இருக்காது
விக்ருதி- கஷ்டங்கள் அதிகம்
கர- வெற்றியில் வீரம் வெளிப்படும்
நந்தன- அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பர்
விஜய- விசேஷ வெற்றி
ஜய- வெற்றி
மன்மத- நோய்களினால் துன்பம்
துர்முகி- கலகங்கள் நேரும்
ஹேவிளம்பி- பணக் கஷ்டம்
விளம்பி- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
விகாரி- மாற்றங்கள் ஏற்படும்
சார்வாரி- எல்லா வளங்களும் பெருகும்
பிலவ- அனைத்தும் இழுபறி
சுபகிருது- சுபங்கள் நடைபெறும்
சோபகிருது- மங்களங்கள் பெருகும்
குரோகி- குரோதம் வளரும்
விஸ் வாவஸு- தெய்வ அருள் பெருகும்
பராபவ- தோல்வியை எதிர் கொள்ள வேண்டும்
பிலவங்க- துயரங்களைச் சமாளித்தல்
கீலக- தீர்க்கமாக இருத்தல்
சௌமிய- அமைதியாக இருக்கும்
சாதாரண- இன்ப துன்பம் சமம்
விரோதி கிருது- விரோதத்தை வரவழைக்கும்
பரிதாபி- பரிதாபத்தைக் கொடுக்கும்
பிரமாதீச- அஞ்ஞானம் அகன்று ஒளி கிடைக்கும்
ஆனந்த- ஆனந்தம் பெருகும்
ராக்ஷஸ- கொடூரம்
நள- சமையல், சமயத் தொடர்பான மேன்மைகள்
பிங்கள- வளப்பமிக்க விளைச்சல்கள்
காளயுக்தி- அதீத புத்திசாலித்தனமிக்க கண்டுபிடிப்புகள்
சித்தார்த்தி- சாதனைகள்
ரௌத்ரி- கோபதாப எரிச்சல் அதிகம்
துர்மதி- குறைவான மழை, கெட்ட எண்ணம் மிகுதியாக இருக்கும்
துந்துபி- மகிழ்ச்சி நிலவும்
ருத்ரோத்காரி- பூரண மழை பெய்வதுடன் கோபமான சம்பவங்கள் நிகழும்
ரக்தாக்ஷி- சிவந்தகண்கள் கோபப்படுவதும் பயக்கண்ணீர் விடுவது நடக்கும்
குரோதனா- கோபம், குரோதம் வெறுப்பும் அதிகரிக்கும்
அக்ஷய- பணப்பஞ்சம். கெடுதல் இல்லா சுபிட்சம் நிலவும்.

நாரதர் பெற்ற சாபம்! வீணை மண்ணுலகத்திற்கு வந்தது!
தேவேந்திரன் அகத்தியரை வரவேற்று உபசரித்தான். வரவேற்பு நிகழ்ச்சியில் ஊர்வசியின் ஆடலுக்கு நாரதர் வீணையை மீட்டினார். இந்திரன் மகன் சயந்தன் ஊர்வசியின் ஆடல் கண்டு காதல் கொள்ள அதை அறிந்த ஊர்வசியும் அவன்மேல் காதல் கொள்ள ஊர்வசியின் ஆடலில் பிழை ஏற்பட்டது. தாள சுருதிக்கு ஏற்ப ஊர்வசி ஆடாமல் காதலினால் தவறாக ஆடுவதைக் கண்ட நாரதர் ஊர்வசியின் ஆடலுக்கு ஏற்ப இசையை காதல் கானமாக இசைத்தார். இசையில் வல்லவரான அகத்தியர் இதை உணர்ந்து கோபம் கொண்டு சயந்தனை மூங்கிலாகும்படியும், ஊர்வசியை பூவுலகில் மானிட பிறவி எடுத்து வாழவும் சபித்தார். ஊர்வசி சாபம் பெற நாரதரும் இன்பரசம் பொங்க பிழைபட வாசித்து தன்னை அவமதித்தார் என்பதால் ‘வீனை மண்மிசை தங்குக’ என்று சாபமிட வீணை மண்ணுலகிற்கு வந்தது.

குரங்கு முகம்! நரதர்பெற்ற சாபம்!
பர்வத ரிஷியும் நாரதரும் நண்பர்கள். இருவரும் உலகை சுற்றிப் பார்த்து வரும்போது உணவு, மங்கை, பொருள் ஆதியவற்றின்மீது அவ்வப்போது ஏற்படும் உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். சஞ்சயம் என்ற நாட்டின் அர்சன் அவர்களை வரவேற்று அன்புடன் உபசரித்தான். அவர் மகள் தமயந்தியை அவர்களுக்கு பணிவிடை செய்ய நியமித்தான். இரு முனிவர்களின் குறிப்பறிந்து அவர்கள் கேட்காமலே அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். நாளடைவில் அவள் நாரதருக்கு செய்யும் பணிவிடைகளில் அதிக அக்கறை தெரிந்தது. இதுபற்றி நாரதரிடம் கேட்க அவர் நாங்கள் இருவரும் காதலிக்கின்றோம் என ஒப்புக்கொண்டார். நம் ஒப்பந்தப்படி நீர் ஏன் என்னிடம் இது பற்றி சொல்லவில்லை என பர்வத ரிஷி கோபங்கொண்டு நாரதரை குரங்கு முகமாக மாற சாபமிட்டார். நண்பர் என்று பாராமல் அவர் சாபம் இட்டதும் நாரதரும் உமக்கு சுவர்க்க வாசமில்லாமல் மிருத்ய லோகத்தில் வாசம் உண்டாகட்டும் என எதிர் சாபமிட்டார்.

பர்வத ரிஷி வருத்தத்துடன் வனப்பக்கம் சென்று விட்டார். நாரதரின் இசை கேட்டு மகிழ்ந்தபடி வந்த தமயந்தி அவர் முகம் குரங்கு முகமாக மாறியிருப்பது கண்டு வருத்த முற்றாலும் அவருக்குச் செய்யும் பணிவிடைகளில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அன்புடன் செய்து வந்தாள்.

தன் மகளுக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதால் அவளுக்கு நல்ல அரச குமரனை தேர்ந்தெடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தமயந்தி தன் தோழியின் மூலமாக தந்தைக்கு தூதுவிட்டாள். தந்தை வருந்தி தன் மனைவிடம் சொல்லி மகளை அரசகுமரனை மணந்து கொள்ள தூது அனுப்பினார். தாய் எவ்வளவோ சொல்லியும் மகள் கேட்காமல் உறுதியாக குரங்கு முகம் கொண்ட நாரதர்மேல் அன்பு கொண்டிருக்க அவர்களுக்கு திருமணம் செய்வித்தார் மன்னன். நாரதர் அங்கேயே இருந்து வழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் நண்பன் பர்வத ரிஷி அங்கு வந்து நண்பன் குரங்கு முகத்துடன் வாழ்க்கை நடத்துவது கண்டு வருத்தப்பட்டு தன் சாபத்தை விலக்கிக்கொள்ள நாரதரும் அவர்மேல் தான் இட்ட சாபத்தை விலகிக்கொண்டார்.

நாரதர் கலகம்!
தேவலோகம் சென்ற நாரதரை வறவேற்று உபசரித்த தேவேந்திரன் அவரிடம் ஓர் பாரிஜாத் மலரை அளித்தான். அம்மலருடன் கிருஷ்ணரைக் காணவந்தவர் கிருஷ்ணனிடம் கொடுக்க அதை அவர் அருகில் இருந்த ருக்மணியிடம் கொடுத்தார். பின் சத்யபாமவைப் பார்க்கச் சென்ற நாரதர் அவரிடம் தான் பாரிஜாதமலரை கிருஷ்ணரிடம் கொடுத்தது அவர் அதை ருக்மணியிடம் கொடுத்தது எல்லாம் சொல்லிச் சென்றுவிட்டார். பிறகு அங்கு வந்த கிருஷ்ணன் சத்யபாமாவின் முகம் வாடியிருக்க காரணம் கேட்டு ஒரு பாரிஜாத மலருக்கா இத்தனை சோகம் என நாரதரை அழைத்து தான் சொன்னதாகக் கேட்டு தேவேந்திரனிடம் ஒரு பாரிஜாத மரத்தை வாங்கி வரச் சொன்னார். போன கையில் திரும்பி வந்த நாரதர் தேவேந்திரன் அந்த மரத்தை பூவுலகிற்கு தரமுடியாது எனச் சொன்னதை சொல்ல கிருஷ்ணருக்கும் தேவேந்திரனுக்கும் போர் நடந்தது. காசிப முனிவர் வந்து இருவரையும் சமாதானம் செய்து பாரிஜாதமரத்தை இந்திரன் துவாரகைக்கு அனுப்பி வைத்தான். சத்யபாமா நந்தவனத்தில் நட்ட மரம் பூத்து குலுங்கி ருக்மணி வீட்டில் விழுந்தது கண்டு பாமா கோபம் கொள்ள கிருஷ்ணர் பாமாவுடன் ருக்மணி வீட்டை அடைய பாரிஜாத மாலையை கிருஷ்ணர் கழுத்தில் போட்டு வரவேற்றாள் ருக்மணி. எல்லா மலர்களையும் மாலையாக தொடுத்து விட்டாயே உனக்கு மலர்கள் இல்லையா என்று கேட்டதற்கு என்னையே தங்களுக்கு தந்துவிட்ட பின் எனக்கு எதற்கு மலர்கள் என்றாள் ருக்மணி. ருக்மணியின் அன்பு கண்டு பாமா வெட்கினாள்.

பாமா ஒரு சமயம் கிருஷ்ணனின் அன்பு நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என நாரதரிடம் கேட்டாள். துலாபாரத்தில் கிருஷ்ணனை இருத்தி எடைக்கு எடை தங்கம் தானம் செய்தால் நல்லது நடக்கும் என்றார் நாரதர். அதன்படி ஏற்பாடுகள் நடந்தது. பாமா கிருஷ்ணனை வரவழைத்து துலாபாரத்தின் ஒரு தட்டில் அமரவைத்து மற்ற தட்டில் தன்னிடமுள்ள பொன் பொருள்களை வைக்க ஆரம்பித்தாள். எடைக்குமேல் பொன் தன்னிடம் வைத்திருப்பதாக கர்வம் இருந்தது. அவள் நினைத்ததுபோல் அவ்வளவு சீக்கிரமாக எடையை சரி செய்ய முடியவில்லை. எல்லாவற்றையும் வைத்தும் தராசு சரியாக வில்லை. தானம் பெற வந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பாமாவிடம் ருக்மணியை அழைத்து ஏதாவது செய்ய முடியுமா எனப் பார்க்கச் சொன்னார்கள். என்னால் முடியாததை அவள் எப்படி சரி செய்வாள் என நினைத்தவளுக்கு அனைவரின் பேச்சை தட்ட முடியாமல் ருக்மணியை அழைத்து வந்தாள். ருக்மணி தட்டிலுள்ள பொன் பொருட்களை எல்லாம் எடுக்கச் சொன்னாள். பின் கிருஷ்ணரை நினைத்து வழிபட்டு துளசி தளம்- இலை ஒன்றை வைத்தாள், என்ன ஆச்சரியம் தட்டு சமனாகியது. சத்ய பாமா தன் கர்வம் அழிய ருக்மணியைப் பார்த்தாள்.

இறைமேல் நம்பிக்கை!
நாரதர் பூமியை சுற்றி வரும்போது தற்செயலாக மூவர் அவரைப் பார்த்து விட்டனர். அவர்களில் செல்வந்தர், புலவர் இருவரும் நாரதரிடம் நீங்கள் வைகுந்த வாசனிடம் எங்களுக்கு வைகுந்த வாசம் கிடைக்குமா! எனக் கேட்டு வாருங்கள் என்றனர். மூன்றாவது நபர் ஓர் ஏழைத் தொழிலாளி. அவர் நாரதரிடம் ஒன்றும் கேட்கவில்லை.

உலகைச் சுற்றி விட்டு வைகுந்தம் சென்று விஷ்ணுமுன் நின்றார். நாரதர் பேச ஆரம்பிக்குமுன், நீ பூலோகம் சென்று அந்த மூன்று பேரிடமும் நான் ஊசியின் காதில் யாணையை நுழைத்துக் கொண்டிருப்பதாக கூறு. அவர் நுழைத்து முடித்த பின்னர் உங்கள் கேள்விக்கான பதிலைச் கேட்டுச் சொல்கின்றேன் எனச் சொல் உனக்கே எல்லாம் புரியும் என்றார்.

இதை அந்த மூவரிடமும் சொன்னார். புலவரும், செல்வந்தரும் இதைக் கேட்டுச் சிரித்தனர். ஊசியின் காதில் யானை நுழைக்கவே முடியாத காரியத்தை விஷ்ணு செய்கின்றாராம் என கிண்டலடித்து மீண்டும் சிரித்தனர். ஆனால் ஏழைத் தொழிலாளி, ஆண்டவன் எவ்வளவு வல்லமை கொண்டவர். அவர் நினைத்தால் எதையும் செய்வார். சின்னஞ்சிறு விதைக்குள்ளே பெரிய மரத்தை ஒளித்து வைத்திருக்கும் அவரால் எதுவும் முடியும், எனப் பரவசப்பட்டான்.

நாரதர் அந்த தொழிலாளியைப் பார்த்து, அன்பனே, இறைவனால் எதையும் செய்ய முடியும் என நம்புவர்க்கே அவர் துணை கிட்டும் எனக்கூறி மறைந்தார்.

கர்வம் கொண்ட நாரதர்!

1.இறை நம்பிக்கை உணர்வே ஆன்மீக ஆதாரம்!
நாராயணன் திருநாமத்தை சர்வ காலமும் சொல்லிக் கொண்டிருப்பது தான் ஒருவன் தான் என்ற நினைவு கொண்டதனால் கர்வம் கொண்ட நாரதர் அதை பெருமாளிடம் பெருமையாகச் சொன்னார். விஷ்ணு புன்னகைத்தார். நாரதா எவ்வளவு பெருமை உன்னிடம் இருக்கின்றது. நீ ஒருவனால் மட்டுமே அதைச் செய்யமுடியும் என்று சொல்லி அவரிடம் எண்ணெய் நிறைந்த கிண்ணம் ஒன்றைத் தந்து, “நாரதா இது புனிதமான எண்ணெய். ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் சுமந்தபடி உலகை மூன்றுமுறை வலம் வரவேண்டும். இப்போதே புறப்படு என்றார்.”

இது என்ன பிரமாதம் என கிண்ணத்தை கையில் ஏந்திக்கொண்டு ஓர் அடியெடுத்து வைக்க எண்ணெய் அசைந்தது. எங்கே கீழே சிந்தி விடுமோ என்ற பயம் பிடிக்க நாரதரின் கவனம் பார்வை முழுவதும் எண்ணெய் கிண்ணத்தின் மீதிருக்க அடிமேல் அடியெடுத்து வைத்து ஜாக்கிரதையாக ஒருமுறை வலம் வந்தார். அப்போது பரந்தாமனைப் பார்த்து இந்த எண்ணெய்யை சிந்தாமல் எடுத்துக் கொண்டு வருவது என்பது என்னால் முடியாது. வேரு ஒருவரிடம் இப்பொறுப்பை ஒப்படையுங்கள் என்றார்.

திருமால் பூ உலகின் பக்கம் பார்த்து அங்கிருந்த பக்தன் ஒருபெரியவரை அழைக்க வந்தவரிடம் எண்ணெய்யை கீழே சிந்தாமல் உலகைச் 3முறைச் சுற்றிக்கொண்டு வரவேண்டும் என்று கிண்ணத்தை கொடுத்தார். கிண்ணத்தை வாங்கியபோது அப்பெரியவரின் கை நடுங்கியது கண்ட நாரதருக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். சிரஞ்சீவியான தன்னாலேயே முடியாதபோது உடல் நலம் குன்றிய வயதான பெரியவர் எப்படி இதைச் செய்யமுடியும். இன்று பெருமாளுக்கு ஏதோ குழப்பம் போலிருக்கின்றது என நினைத்தார்.

கிண்ணத்தை கையில் வாங்கிய பெரியவர் தள்ளாடியபடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கி ஒன்றல்ல, சொல்லிய வண்னம் மூன்று முறை வலம் வந்து முடித்து துளிக்கூட எண்ணெய் சிந்தாமல் கிண்ணத்தை பெருமாளிடம் கொடுத்தார். அருகில் இருந்து பார்த்த நாரதர் முழித்தார். அப்போது பெருமாள் நாரதா உன்னிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன் மறந்துவிட்டேன். நீ உலகைச் சுற்றிவரும்போது என்னென்ன பார்த்தாய் என்றார். என்னது! வேடிக்கைப் பார்ப்பதா! எதுவும் செய்யத் தோன்றவில்லை. கவனம் முழுக்க எண்ணெய் கிண்ணத்தில் தான் இருந்தது என்றார். இதே கேள்வியைப் பெரியவரிடம் கேட்க, பெருமாளே உலகில் படைக்கப்பட்ட பல உயிர்கள், நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்தேன். நடுவில் சில சமயம் தங்களை நினைத்துக் கொண்டேன். எப்படி ஒர் பொன்னான வாய்ப்பு என்று எண்ணி சந்தோஷம் கொண்டேன் என்றார். அப்படியானல் எண்ணெய் கிண்ணத்தை கவனிக்கவே இல்லையா என்று கேட்க, அதை ஏன் கவனிக்க வேண்டும், பெருமாளால் அதை நான் செய்வேன் என்று என்னிடம் ஒப்படைக்கப் பட்டதை அவர் பார்த்துக் கொள்வார். நான் செய்வேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும்போது அதை கீழே கொட்டிவிடுவேனோ என்று நான் சந்தேகப்பட்டால் அது முட்டாள்தனம்! கொஞ்சமும் சிந்தாமல் கொண்டு வர பெருமாள் உதவி செய்வார் என நம்பினேன். சுலபமாய் சுற்றிவந்தேன் என்றார். 

நாரதரைப் பெருமாள் பார்த்தார். அதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. உங்களுக்கு புரிந்ததா! உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டது. உங்களிடம் செய்து முடிப்பேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். செயலாற்றுங்கள். நடப்பது நடந்தே தீரும். இறை நம்பிக்கைதான் ஆன்மீக ஆதாரம். வாழ்வின் துடுப்பு!

2. பெண்ணாசை இல்லை!
வைகுந்தத்தில் உரையாடலின்போது தான் பெண்ணாசை இல்லாதவர் என நாரதர் கர்வத்துடன் கூற அதைப் பரிசோதிக்க எண்ணிய திருமாள் நாரதர் சொல்லும் வழியில் ஓர் பசுஞ் சோலையையும் அதில் ஒரு பெண் படுத்திருக்கவும் செய்தார். அப்பெண்ணைக் கண்ட நாரதர் மையல் மேலிட அவளை திருமணம் செய்து கொள்ள விருப்புவதாக கூறினார். அப்பெண் நான் நாராயணன் போல் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள். நாரதர் எப்போதும் நாராயணன் திருநாமத்தை உச்சரிக்கும் தனக்கு அந்த நாரயணன்போல் உரு கொள்வதில் சிக்கலில்லை நான் திரும்பி வரும் வரையில் நீ இங்கேயே இரு எனக் கூறி வைகுந்தம் சென்றார். திருமாலிடம் பூவுலகில் நடந்த விசயத்தை மாற்றி ஒரு பெண்ணைக் கண்டதாகவும் அவள் சபதப்படி தங்களது சங்கு சக்கரத்தைத் தந்தால் நான் அவளிடம் காண்பித்து திரும்பிவந்து விடுவேன் என்றார். திருமால் சங்கு சக்கரத்தைக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு பூவுலகம் சென்றவர் அங்கு அந்த பெண்ணைக் காணாமல் சேர்ந்துபோனார். அப்போதுதான் இது திருமால் செய்த நாடகம் என்பது புரிந்து அவர் கர்வம் அழிந்து வைகுந்தம் திரும்பினார். அவரைப் பார்த்த திருமால் எதை விரும்பி என்னிடம் மறைத்து பொய் கூரினாயோ அந்தச் செயலுக்காக பேடியாக மாற சாபமிட்டார். நாரதர் வகுளாரண்ய சேத்திரமாகிய இங்கு வந்து வழிபட்டு சாபம் நீங்க அருள் பெற்றார். நாரதர் பெண்ணாசை கொண்டதால் பேடியாகி விஷ்னு சாபம் தீரவழிபட்ட தலம். நாரதர் தவமிருகும்போது மகிழமரத்தின் பழங்கள் மேல் விழ மகிழம் காய்க்காமல் இருக்க வும், குளத்தில் நீராடும்போது தாமரை மலர்கள் இடைஞ்சலாக இருக்க இங்கு தாமரை பூக்காமல் இருக்கவும் சாபமிட்டார் நாரதர். பூக்காத பொய்கை-பூத்தாலும் காய்க்காத மகிழ மரம். குடும்ப அமைக்கு ஒற்றுமைக்கு வழிபாடு. வகுளம்-மகிழமரம்-ஆரண்யம்-காடு-வகுளாரண்யம். .- கடலங்குடி

#####

திங்கட்கிழமை, 23 July 2018 19:15

விஷ்வக்க்ஷேனர்!

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

####

விஷ்வக்க்ஷேனர்!

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 2வது ஸ்லோகம்-சொல்வது கஜநாதன், “ஜயத்சேநன், ஹரிவக்ரர், காலப்ரக்ருதி போன்ற படைத்தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பரிஜனங்கள் எவருடைய ஆணைக்கு கீழ்படிந்து நடக்கின்றார்களோ அப்படிப்பட்ட விஸ்வக்‌ஷேனரை சகலவிதமான விக்னங்களும்-தடைகள் விலகுவதன் பொருட்டு வணங்குகின்றேன்.”

ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லும்போது விஷ்ணுவின் சேனைத் தலைவரான விஷ்வக்‌ஷேனரை பற்றிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லியே தொடங்குவது வழக்கம். சேனைத் தலைவர் என்பது தழிலில் சேனைமுதலி, சேனைநாதன் என்பர். மரியாதை நிமித்தமாக சேனைமுதலியார் என்பதுமுண்டு. சைவர்கள் எந்த செயலையும் தொடங்கும் முன்பாக விநாயகரை வணங்கித் தொடங்குவதுபோல் வைஷ்ணவர்கள் விஸ்வக்‌ஷேனரை வணங்கியே முயற்சிகளைத் தொடங்குவர்.

விஸ்வக்‌ஷேனரின் முக்ய வேலை திருக்கோவில்களைப் பராமரித்து கோவிலுக்கு வந்து போவோரை கண்காணித்து கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வதாகும். பொதுவாக இவரை வணங்கிய பின்னரே பெருமாளை தரிசிக்க வேண்டும். பிரமோற்சவத்தின் முதல் நாள் சேனை முதலியார் உற்சவம் என்று இவரை ஆராதித்த பின்னரே தொடங்குவர். விஸ்வக்‌ஷேனர் ஐப்பசி மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார். வைஷ்ணவ சித்தாந்தத்தின்படி முதல்குரு ஸ்ரீமந்நாராயணன், அடுத்தது தாயார். தாயார் பெருமாளிடமிருந்து உபதேசம் பெற்று விஸ்வக்‌ஷேனருக்கு உபதேசிக்கிறார்.. அதனால் ஆச்சாரியர்கள் வரிசையில் மூன்றாவதாகப் போற்றப்படுகின்றார்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13848000
All
13848000
Your IP: 172.69.62.111
2019-11-22 21:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg