gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத்தேட உரிமை உண்டு, வாழ்வின் இரகசியம் அது! அது அற்புத இலக்கணம்!

குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 01 June 2020 10:45

சிவயோக சாரம்!

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சிவயோக சாரம்!

சிவயோக சாரம் என்ற ராஜ யோக மார்க்கத்தை உணர்ந்து பல நூலகளில் உள்ள கருத்துக்களோடு சேர்த்து பூரணானந்தர் எழுதிய இந்நூலைப் படித்து உயிர்கள் பயன் பெற வேண்டும் குருஸ்ரீ பகோரா.

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்!

இந்த ராஜயோகத்தை அப்பியசிக்கும் ஆசிரியன் தெளிந்த ஆத்ம ஞானியாய் அடுத்தவர்களை ஆதரித்துப் போதிக்கத் தக்கவனாய் இருக்க வேண்டும்.. சின்முத்திரையாகிய மௌன நிலை ஈதென்றும், அதைக் கைவல்யப் படுத்துவதற்குரிய ஆசனம் முதலிய விதிகள் இவையென்றும், சாம்பவி முதலிய மகா முத்திரை இவையென்றும், குண்டலி சக்தி ஈதென்றும், அதை விழிப்பிக்கும் மார்க்கம் ஈதென்றும், இதுவே சிவராஜ யோகம் என்றும் இந்த யோகம் செய்யத் தக்கவர் பெறத்தக்க நாதாந்தம் இதுவென்றும், இது வசமுற்றால் ஒரு மயக்கந் தோன்றுமென்றும் அது நீங்கும் வரையில் நின்றால் அருள் தரிசனம் உதயமாகு மென்றும் அவ்வனுபவம் அவ்வனுபவம் கிடைக்க காண்பானாதிகள் இறக்கு மென்றும் அங்ஙனம் இறக்கின் மனம் அசையாதிருக்குமென்றும் அப்போது அந்நாதாந்தத்தில் பஞ்சாக்ஷர முதலியவைகள் தோன்றாதொடுங்குமென்றும் இத்தன்மைப்பட்ட சுவானுபவ சாக்ஷாத்காரத்தை உணர்ந்த ஆத்ம ஞானாசாரியனாய் இருக்க வேண்டும்.

மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும்!

உத்தம ஜென்மமாயும், வித்தைக்கு உடையவனாயும், சாந்த சற்குண முடையவனாயும், பற்றில்லாதவனாயும், காம சங்கற்பம் இல்லாதவனாயும், கோபத்தை வென்றவானாயும், சத்திய தருமத்தை விரும்பியவனாயும், குரு பணிவிடையில் பிரியமுள்ளவனாயும், மாதா பிதாக்களை உபசரிப்பவான்யும், தனது கிருகத்தில் இருப்பவனாயும், நல்லொழுக்கமுடையவனாயும், சற்சீடனெனும் பக்குவமுடையவனாயுமுள்ள மாணாக்கனே இவ் இராஜயோகத்திற்கு உகந்தவனாவான்.
இத்தன்மைப்பட்ட நற்சீடன் சாக்ஷாத்காரத்தை உணர்ந்த ஞானாசிரியனைக் கண்டெடுத்து அவன் திருவடிகளில் பணிந்து அவன் மனங்களிகூறும்படி நடந்து உடல் பொருள் ஆவி மூன்றும் அச்சற்குருவின் திருவடியில் தத்தஞ் செய்து அநுக்கிரகிக்கும் திருவடித் தீக்ஷையையும் பிராணாயாமத்துக்குரிய் மூல மந்திரத்தில் முதல் வாக்கியத்தையும் இந்த யோகத்தின் விதிகளையும் உபதேசிக்கப்பெற்று குருவின் சன்னதியிலிருந்து சற்குரு சொல்லாமற் சொல்லும் முதல்வாக்கியத்தை உண்ணாமல் உன்னி யோக சாதனை செய்து வருங்காலையில் சுவானுபவத்தின் கண் அடையா நின்ற சம்சயங்களனைத்தும் தீரும்படி அவ்வாசிரியரிடத்தில் விண்ணப்பம் அடிக்கடி செய்து கொண்டு அந்தச் சங்கற்பம் நசிக்கும்படி கேட்டுக்கொள்ளல் வேண்டும்.

பிராண வாயுவின் நிலை!

மாணாக்கன் ஆரம்பத்தில் கவனிக்க வேண்டிய விதிகள் யாதெனில் அவை சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று நாடிகளை நடைகளின் நடைகளெனப்படும் மூன்று நாடிகளின் சுவாத்தினாலுண்டாகும் சத்தத்தைக் கண்டறிய வேண்டும். அச்சத்திற்கு அஜபா என்று பெயர்.
அந்தச் சத்தத்தைக் கண்டுபிடிக்கச் சில விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
வாயுக்கள் மூன்று அவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்பவவாகும். இடைகலை என்பது இடநாசியிலும், பிங்கலை என்பது வலநாசியிலும் சுழுமுனை என்பது இரண்டு நாசியிலும் வரவும் போகவும் இருக்கிற சுவாசம். இதற்கு அஜபா ந்ன்பது பெயராம் இடைகலை என்பது சந்திரனும் பிங்கலை என்பது சூரியனும் சுழுமுனை என்பது அக்கினியுமாம்.
அன்றியும் இடைகலையானது சுக்கிலபட்சமாகிற அமாவாசையின் பிரதமை, முதல் மூன்று நாளைக்கு காலையில் தொடர்ச்சியாய் வர வேண்டும். சதுர்த்தி முதல் மூன்று நாளைக்கு பிங்கலை நடக்க வேண்டும். இதே மாதிரியாக சுக்கில பட்சம் முழுமையும் மூன்று நாளக்கு இடைகலையும் மூன்று நாளைக்கு பிங்கலையுமாய் நடக்க வேண்டு
இவ்வண்ணம் சுக்கில பட்சத்தில் சந்திரக்கலை வராவிடில் அவனுக்குத் தேக அசவுக்கியப்பட்டு கவலை மேலிடும்மென்றறிக. அதைச் சரிப்படுத்த வேண்டிய விசயத்தை பற்றி பின் வரும் வாக்கியத்தில் காண்க.
கிருஷ்ணபக்ஷம் அதாவது பௌர்ணமி பிரதமை முதல் மூன்று நாட்களும் பிங்கலை நடக்க வேண்டும். பின் மூன்று நாளைக்கும் இடைகலை நடக்க வேண்டும்
இத்தன்மையாக இரண்டு கலைகளும் மும்மூன்று நாளைக்கொரு முறை மாறிமாறி நடக்க வேண்டும். இதை மாணாக்கன் குறிப்பாக தினம் தினம் கவனிக்க வேண்டும்.
சுழுமுனை கூடுவது கஷ்டமாதலால் அதைச் சாக்கிரதையாய் அப்பியசித்துப் பழக வேண்டும்.
மாணாக்கனுக்கு முக்கியச் வேலை இடைகலையும் பிங்கலையும் திதிக்குத் தவறி நடந்தால் அத மாற்ற வேண்டிய விசயத்தைபற்றிக் குருமூலமாகக் கேட்டுத் கொள்ளுதலே.

இடைகலையின் பலன்!

இடைகலை நடக்கும் காலம் தாகம், ஜலவிருத்தி, தீர்மானம் செய்ய, வேலை செய்ய, நகை செய்ய, நகை அணிந்து கொள்ள், அன்னிய தேசத்திலிருந்து யாத்திரை போக, வீடு, சத்திரம், கோவில் கட்ட, திருமணஞ் செய்ய, வஸ்திரம் கட்ட,, தருமஞ் செய்ய, சாமான் சேகரம் செய்ய, கிணறு குளம் வெட்ட, கலியாணம் செய்ய, வஸ்திரம் கட்ட, வைத்திய சாஸ்திர அப்பியாசம், மருந்து கற்பங்கள் முதலியன செய்ய, சினேகிதனைக் காண, வியாபாரஞ் செய்ய, தானியம் இருப்புச் செய்ய, வீட்டிற்கு குடிபோக, விதை விதைக்க, சமாதானஞ் செய்ய, அன்னிய பாஷை அப்பியாசஞ் செய்ய, உபதேசஞ் செய்ய, பலனைப் பற்றி யாத்திரைபோக, எஜமானன் ஆக, ஆடல் பாடல் கற்க, ஒரு புதிய ஊருக்குப் போக, பந்துக்களைக் காண ஆகிய நடவடிக்கைகளுக்குப் பயன்படும்.

இடைகலை சரிவர நடந்தால் தேகம் சௌக்கியமாக இருக்கும்.. இதில் ஆகாசத்தில் அம்சமிருக்குமானால் முன் சொன்ன நடவடிக்கைகள் ஒன்றும் செய்யக் கூடாது. இரவாய் இருந்தாலும் பகலாய் இருந்தாலும் மேற்சொன்ன வேலைகலை இடைகலையிலேயே நடத்த்ல் வேண்டும்.

பிங்கலையின் பலன்!

வலநாசியில் உண்டாகிற பிங்கலையில் அதாவது சூரிய நாடிக் காலத்தில் கஷ்டமான வேலை எதுவும் அப்பியசிக்க , எவ்விதக் கொடூரமான செய்கையும் செய்ய, மலம் கழிக்க, போகம் செய்ய, கடல்யாத்திரை போக, சண்டை செய்ய, படை எடுக்க, கஷ்டமான சாஸ்திரம் கற்க, குதிரை முதலிய நாற்கால் ஜீவன்களை வாங்க, விற்க, மட்டமான மலை ஏற, குதிரை மல்யுத்தம் முதலியன பழக்கம் செய்ய, ஆறு, குளம், க்டல் முதலிய இடங்களில் நீந்த, உலோகங்கள் குறித்த சாஸ்திரம் கற்க, பாடம் எழுத, பணம் வாங்க கொடுக்க, எஜமானத்துவமான வேலை பார்க்க, அரசைக் காண, இரண வைத்தியத்திற்கு மருந்து செய்ய கடினமான் ஆகாரம் ஜீரணிக்க ஆகியவற்றை முயற்சி செய்யலாம்.


சுழுமுனையின் பலன்!

சுழுமுனை இரண்டு நாசியிலும் வரும் சுவாசம். அதை அதன் நடவடிக்கை காலத்திலேதான் அறியலாம். ஒரு கணத்தில் இடநாசியிலும் ஒரு கணத்தில் வலநாசியிலும் வரும் வாயுவானது இரண்டு நாசியில் வரும்போது சுழுமுனையாம்.
இந்தச் சுழுமுனை நடக்கும்போது உலக நடவடிக்கைகளை நிறுத்தி விட வேண்டும் தவறி நடந்தால் அபஜயமாம்.
எண்ணத்திற்கு விரோதமாய் நடக்கும் இந்தவாயுவின் காலத்தில் ஆத்துமத் தியானமும் பூஜையும் செய்யலாம். இந்த வாயு நடக்குங் காலத்தில் சுவாச பந்தனம் செய்யக்கூடும். இந்தச் சுவாசம் கட்டுவதனால் மனத்திற்கும் தேகத்திற்கும் இன்பம் உண்டாகின்றது.

நாடிகளின் நிலை!

மனிதர்களுக்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன். அவற்றுள் முக்கியமானவை இருபத்து நான்கு இவை எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கின்றது. இவைகளைக் குண்டலினி சக்தி என ஆதிநாதர் அருளியுள்ளார்.
குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கின்றது. பத்து நாடிகள் மேலாகவும் பத்து நாடிகள் கீழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் மற்ற இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன.
இந்தக் குண்டலினி சக்தி பாமபைப் போலச் சுற்றிக் கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும் மணி பூரகத்திற்குக் கீழாகவுமிருக்கின்றது.
இந்த இருபத்து நாடிகளுல் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்துள்ளனர், இந்த பத்து நாடிகளின் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருகின்றபடியால் அவற்றுள் இடைகலையானது தேகத்தின் இடப்பக்கத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலப்பக்கத்திலும் சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலுமிருக்கின்றன.

ஆசன விதிகள்!

பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம், ஆகிய ஐந்தும் ஞான சாதனத்திற்குரிய ஆசனங்கள் ஆகும்.
இவற்றுல் பதுமாசனமாவது இரண்டு தொடைகளில் இரண்டு பாதங்களையும் செவ்வையாய் வைத்து உட்காருதல். இது சகல பாவங்களையும் நாசம் செய்வதாகும். இதை மான்தோல், புலித்தோல், வெண்துகில், சித்திராசனம், தர்ப்பை இவைகளின் மேலிருந்து அனுபவிக்கலாம். இதில் இடை, வயிறு, கண்டம், தலை சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்ந்திருக்க வேண்டும். அன்றியும் வடமுகம் நோக்கி த்க்ஷிணாமூர்த்தமாய் எழுந்தருளியிருக்கவேண்டும். ஆத்தும ஞான குருவின் சன்னிதிக்கு நேராக உட்காரவேண்டும்,.
கிருகஸ்தனுக்கு பதுமாசனமும், சந்நியாசிக்கு சித்தாசனமும் ஹடயோக தீபிகையில் சொல்லப்ட்டிருக்கின்றன.

இரேசக் பூசக் லக்ஷணம்!

பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவென்று மேலான புத்திமான்கள் பிராணனது சலனத்தை ஜெயித்தலில் முயல்கின்றனர். ஆகையால் ராஜஸ, தாமஸ குணங்களை நீக்கி சாத்துவிக குணத்தோடு பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் வெளிவாயுவை உட்கொள்ளுவது பூரகமாம். அவ்வாயுவை நிறுத்துவது கும்பகமாம். கும்பித்த வாயுவை வெளிப்படுத்துவது இரேசகம் எனப்படும். இதுவே பிராணாயாம அங்கமாகிய இரேசக பூரக லக்ஷணம்.
சூரிய நாடியாகிய பிங்கலையால் பிராணனை இழுத்து மெள்ளமெள்ள வயிற்றை நிரப்பவிதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையால் இரேசிக்க வேண்டும்.
சந்திர நாடி, சூரிய நாடிகளுல் எந்த நாடியால் பூரிக்கிறானோ அதனாலேயே இரேசித்து நிரோதித்தலால் வேர்வை நடுக்கம் முதலியவை உண்டாகும்.
அதுவரையில் கும்பித்து எதனால் பூரகஞ் செய்யப்பட்டதோ அதற்கன்னியமான நாடியால் மெள்ள மெள்ள ரேசிக்க வேண்டும். வேகமாய் ரேசித்தால் பலக்குறைவு உண்டாகும்.
எதனால் ரேசகம் செய்யப்பட்டதோ அதனலேயே பூரகம் செய்யலாம். இடைகலையால் பிராணனைப் பூரித்து கும்பிக்கப்பட்ட பிராணனை மற்றப் பிங்கலையால் இரேசிக்க வேண்டும். பிங்கலையால் வாயுவைப் பூரித்து கும்பித்த வாயுவை இடைகலையால் இரேசிக்க வேண்டும்.
இவ்வண்ணம் சந்திரனால் பூரித்துக் கும்பித்து சூரியனால் இரேசிக்க வேண்டும். சூரியனால் பூரித்துக் கும்பித்து சந்திரனால் ரேசிக்க வேண்டும்.’
இவ்விதம் சூரிய சந்திர நாடிகளின் அப்பியாசத்தை தினமும் விஸ்தரிக்க வேண்டும். அதனால் நாடிகள் மூன்று மாதத்திற்கு மேல் சுத்தமாகின்றன.

அஜபாவின் நிலை!

இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பதுமாசனமிட்டு உட்கார்ந்து உடனே அஷ்டகந்த தூபமிட் வேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது மிக நலமாய் இருக்க வேண்டும். தான் வெளியே இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக்காலமாவது வைத்துக்கொண்டு அப்பியாசப்படுத்த வேண்டும்.
இடைகலையானது எப்போதும் வலநாசியிலும் ஹம்ஸம் என்றேயிருக்கும். ஹம்ஸம் என்பது ஆத்மாவின் பெயராகும். முதலில் வெளியே வருகிற சுவாசத்தின் சத்தமாகிய ஹம் என்பதையும் உள்ளே போகிற சுவாசத்தின் சத்தமாகிய ஸம் என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த ஹம்ஸம் என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன் இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன்.. இம்மாணாக்கன் எப்போதும் உலக ஆசையையும் குடும்பமாகிய கட்டையும் நிவர்த்திக்க வேண்டும். ஒரே காலத்தில் நீக்கக்கூடாது. ஏனெனில் ஒரு வருஷ காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடுமாகையால் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும்.
மாணக்கன் கூடிய ஆளவு மனத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாகத் தன் சுவாசத்தைக் குறித்து அதனால் உண்டாகும் ஹம்ஸம் என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும்.. இப்படி அப்பியசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் ஹம்ஸம் என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறியவேண்டும்.

உணவு முறை!

மூன்று நாடிகளைக் கண்டறியாமல் பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக்கூடாது. இந்த யோக அப்பியாசி ஜீரண சக்தியை உணர்ந்து தேகத்தை பலப்படுத்த வேண்டும்.. அதாவது அரிசி, கோதுமை, பச்சைப் பயிறு, துவரை, உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரைவயிறு அன்னமும் கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். எனெனில் உள்வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டும் என்பதை அறிக.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக் கூடாது, இத்தன்மைப் பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் கிருகஸ்தரும், செல்வர்களும், ஏழைகளும் ஜாதிபேத நிற வித்தியாசம் பார்க்க வேண்டுவதில்லை.

பலித நிலை!

எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தை செய்வார்களோ அவர்களுக்கு இது சித்தியாகும் என்பது நிச்சயம். ஒருவன் பதினெட்டு வயதில் இந்த யோகத்தை அப்பியசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். இத்தன்மையான யோகி மது மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி ராஜஸ தாமஸ குணங்களற்று தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து அதி தீவிர பக்குவியாய் வாழ்வன்.

பஞ்ச தத்துவ நிலை!

இனி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரத் தியானத்தின் ஆதாரமாகிய பஞ்ச தத்துவங்களை குரு சம்பிரதாயத்தால் அறிய வேண்டுவதும் அந்த பஞ்ச தத்துவங்களின் குறிப்புகளின் விவரமுங் கூறப்படும் அதாவது முன் சொன்ன மூன்று நாடிகளின் குணங்களையும் சுத்தமாக அறிந்து கொள்ள வேண்டும். ஒன்றை ஒன்றில் மாற்றிக் குண்டலியை அடையாமல் தத்துவங்களை அப்பியசிக்கலாகாது.
முதலில் சொல்லியிருக்கின்ற நாடிகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளாமல் யோகி தத்துவங்களை ஆரம்பிக்கக் கூடாது. போஜனம், மலம் கழித்தல் போகஞ்செய்தல் இவை மூன்றும் சூரிய நாடியில் செய்பவை. தாகம் ஜலவிருத்தி இவைகளை இடைகலையில் செய்ய வேண்டும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களும் மூன்று நாடிகளில் நிமிஷத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டே வருகின்றன. இந்தத்தத்துவங்களை கண்டறிவதற்குரிய வகையைக் கூறுவோம்.
எவர்கள் இந்த மூன்று நாடிகளை அப்பியசித்திருக்கின்றார்களோ அவர்களே இந்த யோகத்திற்குரியவர்கள். இந்த உலகம் பஞ்ச பூதங்களால் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றது. இது கண்டு கொள்பவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்கள் பூஜை முதலாகிய உபசாரங்கள் செய்யப்பெற்று மேலாவார்கள்.
இந்த ஐந்து தத்துவங்களும் சத்திய லோகம், பூலோகம், மிருத்திய லோகம் முதலாகிய இடங்களில் வியாபித்திருக்கின்றது. இவைகட்கு அன்னியமாக ஒரு வஸ்துவும் ஏற்படாது. இப்பஞ்ச தத்துவத்தை கண்டறிவதற்கு விவரம் சொல்லுவோம்!
1.தத்துவத்தின் நடை,
2.சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்,
3.சுவாசத்தில் தத்துவங்களின் அடையாளம்,
4.தத்துவங்களின் நிறம்
5.தத்துவங்களின் சுவை,
6.சுவாசத்தின் அளவு,
7.தத்துவங்களின் அசைவு,
8.தத்துவங்களின் பலன்.

இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தை கண்டறிய வேண்டும்..

மாணாக்கன் எந்த வாயுவில் எந்தத் தத்துவம் நடக்கிறதோ அதைக் கண்டறிதல் வேண்டும். மேலும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ப்ஞ்சேந்திரியங்களைச் சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு தினம் தினம் கொஞ்சங்கொஞ்சமாய் அப்பியசிக்க வேண்டும். அதிகமாக அப்பியசித்தால் அசௌக்கியம் நேரிடும். குரு எவ்வளாவு பிரமாணஞ் சொல்லுவாரோ அவ்வளவுதான் நடக்க வேண்டும்.

1.தத்துவத்தின் நடை,
இந்த சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு அப்பியசிக்குங் காலத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் பிருதிவி என்றும்
வெண்ணிறம் தோன்றினால் அப்பு என்றும்,
சிவப்பு நிறம் தோன்றினால் தேயு என்றும்,
பச்சை நிறம் தோன்றினால் வாயு என்றும்
கருப்பு நிறம் தோன்றினால் ஆகாயம் என்றும் சொல்லப்படும்.

2.சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்,
மாணாக்கன் தன் முன் கண்ணாடி வைத்துக் கொண்டு அதன்மேல் சுவாசத்தை விட்டால் அது
நாற்சதுரமாயிருந்தால் பிருதிவி என்றும்
அரையுருண்டையாயிருந்தால் அப்பு என்றும்
முக்கோணமாயிருந்தால் தேயு என்றும்,
அறு கோண உருண்டை வடிவில் இருந்தால் வாயு என்றும்
சிறு புள்ளிகள் மாதிரியிருந்தால் ஆகாயமென்றும் அறிய வேண்டும்.

3.சுவாசத்தில் தத்துவங்களின் அடையாளம்
மாணாக்கன் சுவாசம் விடும்போது
நேராகப் போனால் பிருதிவி,
கீழாகப் போனால் அப்பு,
மேலாகப்போனால் தேயு,
ஒழுங்கீனமாய்ப் போனால் வாயு,
அடங்கிப் போனால் ஆகாசமென்று அறிய வேண்டும்.

4.தத்துவங்களின் நிறம்
பிருதிவி -மஞ்சள்
அப்பு -வெண்மை,
அக்கினி -சிவப்பு,
வாயு -பச்சை
ஆகாயம் –கறுப்பு என இவைகளைக் கண்டறிய வேண்டும்.
உணரும் விதம்: ஒவ்வொரு வண்ணமுள்ள குண்டுகள் ஐந்தை தன்க்குப் பின்னால் வைத்துக் கொண்டு பதுமாசனத்தில் உட்கார்ந்து தனது எண்ணத்தைக் கூட்டி நிஷ்டையிலிருந்து கொண்டு பஞ்ச தத்துவத்தில் எதையாகிலும் ஒன்றை நினைத்துப் பின்னால் இருக்கின்ற குண்டுகளில் ஒன்றை எடுப்பானானால் அது தான் எண்னிய நிறம் போல் இருந்தால் இதை அறிந்தவன் ஆகின்றான். இவ்வண்ணம் ஒவ்வொரு குண்டையும் எடுபானானால் முற்றுமுணர்ந்தவன் ஆவான்.

5.தத்துவங்களின் சுவை,
தித்திப்பு –பிருதிவி
துவர்ப்பு –அப்பு
புளிப்பு –தேயு
உவர்ப்பு –வாயு
கார்ப்பு –ஆகாயம்

6.சுவாசத்தின் அளவு,
சுவாசம் 12 அங்குலம் நீண்டால் பிருதிவி
16 அங்குலம் நீண்டால் அப்பு,
4 அங்குலம் நீண்டால் தேயு,
8 அங்குலம் நீண்டால் வாயு,
மூக்கினுள்ளே இருந்தால் ஆகாயம்

7.தத்துவங்களின் அசைவு,
அசையாத வேளை –பிருதிவி,
அசையும் வேளை –அப்பு,
கஷ்டமான வேளை –தாயு,
துஷ்ட வேளை –வாயு,
பூசை வேளை –ஆகாயம்.

8.தத்துவங்களின் பலன்.
பிருதிவி தத்துவத்தில் ஆரம்பிக்கும் வேளை கண்டிப்பாய் இலாபத்தில் முடியும்.
ஜல தத்துவத்தில் அசையும்படியான வேலைகள் செய்யத் தக்கவை ஏனென்றல் எதாவது ஒரு முடிவான வேலையை ஆரம்பித்தால் சீக்கிரத்தில் முடியும்.
அக்கினி, வாயு, ஆகாயம் ஆகிய மூன்று தத்துவத்தில் எந்த வேலையை ஆரம்பித்த போதிலும் அது அபஜெயமாகவே முடியும்.
ஆகையால் மாணாக்கன் இவைகளை எந்தக் காலத்தில் உபயோகப்படுத்த வேண்டுமோ அந்தக் காலத்தில் தத்துவத்தை அறிந்து உபயோகப்படுத்த வேண்டும்.

இந்தத் தத்துவத்தில் புத்தியைச் சரியாகச் செலுத்த வேண்டும். ஏனெனில் வியாதி முதலாகிய ஹிம்சைகள் வரவொட்டாமலும் பலவிதக் குண்மில்லாமலும் நிரோதத்தை ஒரே குண்மாக இருந்து பார்க்க வேண்டும்.

பிராணாயம நிர்ணயம்!

அதாவது முன் சொன்ன பிராணாயாமத்தின் பிரமாணாத்தை உணர்த்துதல். அதாவது அருணோதய முதல் மூன்று நாழிகை வரையிலும் மத்தியானத்திலும் அஸ்தமிக்கிறதற்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தம், -அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும். காலம் ஒன்றுக்கு 80 பிராணாயாமம் வரையிலும் நன்றாக அப்பியசிக்க வேண்டும். நான்கு முறை செய்தால் தினந்தோறும் 320 பிராணாயாமமாகின்றன.
முகூர்த்தமென்பது இரண்டு நாழிகையளவுள்ளது.
ஒரு புருஷன் அப்பியசிக்க வேண்டுமானால் காலையில் 80ம் மத்தியானத்தில் 40ம் சாயங்காலத்தில் அர்த்த ராத்திரியில் 20ம் ஆக மெள்ள மெள்ளப் பிராணாயாமம் செய்ய வேண்டும்.
அது கைவல்யப் படும்போது முதலில் வேர்வையும் இரண்டாவது நடுக்கமும் மூன்றாவது தவளைக் கத்தும், அப்பியாசத்தால் பதுமாசனத்தில் இருக்கையில் பூமியினின்று ஆகாயத்தில் தெழும்புதலும் உண்டாகுமென்பது குருநாதரால் சொல்லப்பட்டிருக்கின்றது.

கிருகஸ்தாசிரமிகளுக்கு உபயோகம்!.

இந்தப் பிராணாயாமம் கிருகஸ்தனுக்குப் பாப சுத்தியின் பொருட்டும் யோகிகளுக்கு யோக சித்தியின் பொருட்டுமாம். கிருகஸ்தன் சங்கத்தை விட்டு ஏகாந்தத்திலிருந்து அ[ப்பியாசம் செய்ய வேண்டும் அதன் பின் ஆகாரத்தின் பொருட்டு வெளியே சங்கத்தில் பிரியமுடையவன்போல் வியவகரிக்க வேண்டும். கருமத்தால் உண்டான யாவும் கருமத்தின் படியிருக்கின்றன. நிமித்த காரணமாக இவற்றைச் செய்வதில் ஒருகாலும் தோஷமில்லை.

நல்ல விவேகி இந்த யோகத்தை அனுசரிப்பானானால் அவன் அவசியம் சித்திய்டைவான். இதிற் சம்சயமில்லை, அவன் புண்ணிய பாவங்களீனின்றும் விடுபட்டு தேகாபிமானத்தை நீக்கி கிருகத்திலிருந்தே முத்தியை அடைவான். அந்த யோகியானவன் லோக சங்கிரகம் லோக பரிபாலனமுமாகிய தனது காரியத்தில் புண்ணீய பாவங்களைச் செய்யுனும் அப்புண்ணிய பாவங்களீனால் பற்றப்படமாட்டான். கிடைத்ததில் சந்தோஷமுடையவனாயும் உள்ளே கொஞ்சமும் பற்றில்லாதவனாயும் கால வரம்புகளும் உள்ளவனாவும் யோக சாதனத்தில் பொருந்தியிருப்பான். யோகக் கிரியைகளோடு கூடிய கிருகஸ்தனுக்கு ஈஸ்வர வாக்கியமாகிய பிராணவத்தின் சத்தத்தால் சித்தியுண்டாகும். ஆனால் அவனதை செம்மையாக அப்பியசிக்க வேண்டும்.

கிருகஸ்தன் புத்திர தாராதிகளால் நிரம்பியவனாய் வீட்டில் இருந்து கொண்டு அகப்பற்றில்லாமல் யோக மார்க்கத்தில் தன்னிடத்தில் சித்தியின் அடையாளங்களைக் கண்ட பிறகு எனது ஆஞ்ஞையைச் சாதித்துக் கிரீடிப்பன் என்று சிவசங்கிதையும் கிருகஸ்தனுக்கு சித்தி உண்டாகுமென்று சாதிக்கின்றது.

மாத்திரை!

ஆரம்பத்தில் ஒரு மனிதன் ஜாக்கிரத்தில் விடும் சுவாசம் வெளிப்பட்டு உள்ளே போகிறதெவ்வளவோ அவ்வளவு பிராணாயாமத்தின் மாத்திரையாகும்.. அனுபவத்தின் பின் ஒரு புருஷன் நித்திரை செய்யும் போது சுவாசம் எவ்வளவு காலம் போய்த் திரும்புகிறதோ அவ்வளவு காலம் பிராணாயாமத்தின் மாத்திரை எனப்படும்.

அப்பியாசம்!

மாணாக்கன் அப்பியாச காலத்தில் பால், நெய் முதலியவற்றோடு கூடிய உண்வை உண்பது சிலாக்கியம். அப்பியாசம் திடமான காலத்தில் அப்படிப்பட்ட நியமம் வேண்டுவதில்லை என்றும் பிராணன் பிராணாயாமம் ரேசக பூரக கும்பக மாத்திரைகளென்றும் பிறாணன் என்பது தன் தேகத்தில் ஜீவித்திருக்கும் வாயுவென்றும் ஆயாமம் என்பது அந்த வாயுவைத் தடுப்பதென்றும் நாரதீயத்திலும் சௌரவ புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இரேசக பூரக கும்பக பேதத்தால் மூன்று விதமாயும் மூன்று வர்ணமாயும் இருப்பதால் பிரணவமே பிராணாயாமமெனப்படும். பதுமாசனத்திலிருக்கும் புருஷன் நாசி நுனியில் சந்திரபிம்பப் பிரகாசங்களால் விரிந்த அகார மூர்த்தியானது இரத்தாங்கமுடையது. அன்னவாகினி தண்டங்கரத்தில் உடைய வாலையுமாகி காயத்திரியாகின்றது. கருடவாகினி எள் வர்ணமுடையது. சக்கரத்தை கரத்தினிலுடையது. சாவித்திரியாகின்றது. மகாமுர்த்தியானது கருமையான அங்க,முடையது, இடபவாணி வயது சென்றதும் குலந்தரித்ததுமாகிய சரஸ்வதியாகின்றது. அகராதி மூன்றிற்கும் காரணம் பரஞ்சோதியாகிய ஏகாக்ஷ்ர பிரணவமாகிறதென்று தியானிக்க வேண்டும்.

இடையினால் வெளிவாயுவை மாத்திரை அளவு பூரித்து அகாரத்தைச் சிந்தித்து பூரித்த வாயுவை 64 மாத்திரை அளவு கும்பித்து உகாரத்தை தியானித்து கும்பித்ததை பிங்கலையில் 32 மாத்திரை அளவு இரேசித்து மாகாமூர்த்தியை தியானிக்க வேண்டும்.

அன்றியும் பூரகம் 12 ஓங்கார்மாகவும் கும்பகம் 16 ஓங்கார்மாகவும் இரேசகம் 10 ஓங்காரமாகவும் செய்ய வேண்டும். இது பிராணாயாமம் அப்பியாசம் எனப்படும். பிரமன், விஷ்ணு, உருத்திரன், மூவரும் பூரக கும்பக இரேசகங்களுக்கு அதி தேவதைகளென்று சொல்லப்படுவர்.

குண்டலினி சத்தி!

நித்திரை செய்யுங் குண்டலியானது குருபிரசாத மூன்றாம் வாக்கியத்தால் எப்போது விழிக்கின்றதோ அப்போது சகல பதுமங்களும் ஆறு சக்கரங்களும் பிரம கிரந்தி விஷ்ணு கிரந்தி உருத்திர கிரந்தி என்னும் மூன்று கிரந்திகளும் பேதத்தை அடைகின்றன.
அப்போது சூன்ய பதவி என்னுஞ் சுழுமுனையில் பிரணவாயு இராச மார்க்கமாக அனுசரிக்கப்படுகின்றது.
சுகமாகப் போக்குச் சம்பவித்தால் சித்தம் நிராலம்ப நிர்விஷயமாகின்றது. சித்தம் நிராலம்பமாகுங்கால் காலனை வஞ்சிக்கக் கூடும்.
சுழுமுனையென்றும் சூன்ய பதவி என்றும் பிரமாந்திரமென்றும் மகாமேருவென்றும் பெருவழி என்றும் மாயான மென்றும் சாம்பவி மத்திய பாகமென்றும் சொல்வதால் இந்த குண்டலி பேதத்தினாலேயே ஷட்சக்கர பேத முதலியவை உண்டாகின்றமையால் முழு முயற்சியோடு பிரமரந்திரத்தின் சச்சிதானந்த லக்ஷணப் பிரமத்தை அடைவதற்கு உபாயமாகிய சுழுமுனையின் வாயிலை முகத்தால் மூடிக்கொண்டு நித்திரை செய்யும் ஈஸ்வரியாகிய குண்டலியை விழிப்பிக்க மகாமுத்திரை முதலியவற்றைச் செவ்வனே அனுசரிக்க வேண்டும்.
இந்தக் குண்டலி சத்தியானது கந்தத்தின் மேல் பாகத்தில் யோகிகளுக்கு மோக்ஷத்தின் பொருட்டும் மூடர்களுக்குப் பந்தத்தின் பொருட்டுமாகத் தூங்குகின்றது. சகல யோக தந்திரங்களுக்கும் குண்டலி சத்தி ஆதிக்கியமாய் இருப்பதால் அக்குண்டலி சத்தியை எவன் அறிகிறானோ அவன் யோக வித்தாவான் என்றும் யோகிகள் தூங்கும் குண்டலியை விழிக்கச் செய்கிறவர்களென்றும் அடயோக தீபிகையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

குண்டலி ஸ்தான நிலை!

மூலாதாரத்தில் பொருந்தும் உட்பாகமாகிய குண்டலியை சூரியனால் பூரிக்க வேண்டும். குதத்திற்கு இரண்டங்குலம் மேலும் இலிங்கத்திற்கு இரண்டங்குங் கீழுமாக தேகத்தின் மத்தியானது சரீர நடுவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.
கந்தஸ்தானம் மனிதர்களுக்குத் தேக மத்திய மூலாதாரத்தினின்றும் ஒன்பதங்குலத்தின் மேல் நான்கு அங்குல அகலமும் நீளமும் உள்ளதாய் முட்டை போன்று வடிவுள்ளதாய் துவக்குத் தோல் முதலிய வற்றால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. குதத்திற்கு இரண்டங்குலமேல் தேக மத்திய பாகம் ஓர் அங்குலத்திலிருந்து ஒன்பதங்குலம் வரை கந்த ஸ்தானமாம்.
ஆகப் பன்னிரண்டு அங்குலப் பிரமாணம் அதாவது ஒரு ஜான், எழுபத்தீராயிரம் நாடிகளின் பலத்தைச் சோதிக்க வேண்டுமாயின் அதற்குச் சத்தி சலனமாகிய குண்டலி அப்பியாசமின்றி வேறு சத்தி செய்யும் உபாயமில்லை.
இந்த மத்திய நாடியாகிய சுழுமுனையானது யோகிகளுக்கு திடப்பியாசம் சுவஸ்திகா, பங்கயாசனங்களாலும் பிராணாயாமத்தாலும் மகா முத்திரை முதலிய முத்திரைகளாலும் சௌக்கியமுண்டாக்குகின்றது, ஆகிலும் சமாதியினால் அன்னிய விர்த்தி நிரோதிக்கலாகாது. ஏகாக்கிர தன்மையால் மனத்தை தாரணை செய்து அப்பியசித்து நிலைப் பெறச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால் ராஜயோகமின்றிப் பரம புருஷார்த்த பலன் சித்தியாமையால் வாயுவின் கும்பக முத்திரை விதானமாகிய சகல விதிகளையும் மனத்தோடு அப்பியசிக்க வேண்டும். புத்திமான்கள் வாயுவின் விதிக்கு அன்னியமாகிய விஷயத்தில் மனோ விர்த்தியைச் செலுத்தலாகாது. எவர் யோகிகளில் குருபாரம்பரையாகிய சம்பிரதாயத்தால் வந்த சம்பிரதாக்கியமாகிய மகா முத்திரை முதலியவற்றின் உபதேசத்தை தருகின்றாரோ அவரே ஸ்ரீகுரு. அவரே சகல குருக்களுக்கும் சிரேஷ்டரானவர். அவரே பிரபு. அவரே சாக்ஷாத் பிரத்தியக்ஷ ஈஸ்வரர் என்றும் சொல்லப்படுவார்.
அன்றியும் அக்னி மண்டலம் நாபியின் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. அது மனிதர்களுக்குத் தேகத்தின் மத்தியில் பொன்னிறமுள்ளதாய் முக்கோண்மாய் இருக்கின்றது.. அக்குண்டலியை எழுப்பும் விதமாவது சூரிய உதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் தினந்தோறும் இரண்டு முகூர்த்தம் பேதிக்க வேண்டும். சூரியனால் பூரித்து சந்திரனால் இரேசிப்பதால் அபானனும் அக்கினியை அடைந்து உஷ்ண சொருபத்தால் பிராணனை அடைகிறது.
அக்னியின் உஷ்ணத்தால் செவ்வையாகத் தகிக்கப்படுகின்றதால் தண்டத்தால் அடிபட்ட சர்ப்பத்தைப் போல் நிஸ்வாசத்தைச் செய்து நிமிர்ச்சி அடைகிறது. அதன்பின் பிலத்திற் பிரவேசித்த பாம்பைப் போலச் சுழுமுனையினுள் பிரவேசிக்கின்றது.
ஒரு புருஷன் சலனம் செய்து மூல ஸ்தானத்திலிருந்து குண்டலியை மேலே கொண்டு வருவாயின் அவன் மேற்சென்று அமிர்தத்தை அடைவான். இந்தக் குண்டலினி சத்தியை வாலைப் பிடித்து எழுப்பினால் நித்திரையை விட்டு மேலே எழும்புகின்றது. இதை குரு முகமாய் அறிய வேண்டும்.


அமிர்த நிலை!

சிகையின் மத்தியில் பரமாத்துமா பொருந்தியிருப்பதால் மேருவைப்போல உய்ர்ந்திருக்கும் சுழுமுனையானது மேல் பாகத்தின் மத்தியில் சோம ஜலம் ஒழிகிக் கொண்டிருக்கின்றது. அந்தத் துவாரமான சந்திர மண்டலத்தினின்று சரீரத்திற்குச் சாரம் ஒழுகுகின்றது.
ஒழுகும் சந்திர அமிர்தத்தின் சுவை கார்ப்பு, உவர்ப்பு. இவற்றிற்குச் சமானமாய் உள்ளதாயும் தேன், நெய், பால்களைப்போல் இரசமுடையதாயுமானால் அப்போது அவனுக்கு காயசித்து ஆகின்றது. அந்த சந்திராமிர்தம் எனும் சத்தை எவன் பானம் பண்ணுகிறானோ அந்த யோகி வியாதியில்லாதவனாய்த் தாமரைத் தண்டு போல் மிருதுவான சரீர முடையவனாய் வெகுகாலம் ஜீவிப்பான்.

சுவாசங்குலப் பிரமாண நிலை!

இந்த மனித ஜன்மத்திற்கு சாதாரணமாய் சுவாசம்
உள்ளே பத்தங்குலமும் வெளியில் பன்னிரண்டு அங்குலமும் போகும்.
இதுவல்லாமல் நடக்கும்போது 24 அங்குலமும்,
ஓடும்போது 42 அங்குலமும்,
போகஞ் செய்யும்போது 50
தூங்கும்போது 60 அங்குலமும்
சாப்பிடும்போதும் வாந்தியாகும்போதும் 18 அங்குலம் ஓடும்
சாதாரணமாக 12 அங்குலம் ஓடும் இந்த சுவாசத்தை யோக அப்பியாசிகள் கவனிக்க வேண்டும். இவ்வளவு நீளமாகப் போகிற சுவாசத்தைத் தன்னால் கூடிய அளவு சிறிதாக குறைக்க வேண்டும்.
அது ஏனென்றால் இந்த மனித ஜன்மத்திற்குக் கலைகளாகிய சுவாசம் 12 அங்குலம் ஓடி 4 அங்குலம் கழித்து 8 அங்குலந்தான் நின்ற இடத்தில் நோக்கும். இப்படிச் சாதாரணமாக 4 அங்குலம் கழிந்ததனால் 120 வயதாகின்றது. மக்கள் படிப்படியாக சுவாசத்தைப் பந்தனம் பண்ணுவதல் நீண்ட ஆயுளை உடையவர்களாக இருப்பார்கள்.
சாதாரணமாய் மனிதர்களுக்கு உண்டாகிய சுய புத்தி போதாது. ஆகையால் அனுபவமுடைய யோகிகளின் புத்தியைக் கேட்டு நடக்க வேண்டும். அல்லாவிட்டால் துன்பம் நேரிடும். இந்த மூன்று வாயுக்களையும் பஞ்ச தத்துவங்களையும் சுவாசத்தையும் குணிக்க அறிந்து கொண்டால் வரப் போவதைச் சொல்லலாம். தைரியத்தினால் சுறு சுறுப்பாய் மாணாக்கன் இந்த ராஜ யோகத்தை அப்பியசிப்பானாகில் இரண்டு மூன்று வருஷத்தில் அறியப்படுகின்றான்.

மரண நிலை அறிதல்!

இடைகலை அல்லது பிங்கலையில் ஓர் இராத்திரி சுவாசம் முழுவதும் இடைவிடாமல் நடந்தால் அம்மனிதன் மூன்று வருஷத்தில் மரணமடைவான்.
இதே மாதிரி பிங்கலையில் மாறுதலில்லாமல் இரண்டு இராத்திரி இரண்டு பகல் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ம்ரணம் இரண்டு வருஷத்தில் நேரிடும்.
இடைவிடாமல் ஒரு நாசியில் சுவாசம் மூன்று நாளைக்கு நடக்கும் மனிதனுக்கு ஒரு வருஷத்தில் மரணம் நேரிடும்.
இராத்திரி முழுவதும் இடைகலையும் பகல் முழுவதும் பிங்கலையும் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ஆறு மாதத்தில் மரணம் நேரிடும்.
பிங்கலை தொடர்ச்சியாக இடைவிடாமல் ஒரு பாகம் நடக்கும் மனிதனுக்கு பதினைந்து நாளில் மரணம் நேரிடும்.
இடைகலையானது இதே மாதிரியாக ஒரு மாதம் நடந்தால் இந்த விதிப் பிரகாரம் முடியும்.
புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு ஒன்பது நாளிலும்
காது கேளாதவர்களுக்கு ஏழு நாளிலும்,
நக்ஷத்திரம் தெரியாதவர்களுக்கு மூன்று நாளிலும்
மூக்கு நுனி தெரியாதவர்களுக்கு ஐந்து நாளிலும்
இரண்டு கண்களையும் கைகளால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்குப் பத்து நாளிலும் மரணம் நேரிடும் என்பது குரு வாக்கியம்.

யோகிகள்!

யோகிகளுக்கு மேலே கூறிய அடையாளங்கள் நேரிட்டால் உடனே வாயுவைச் சோதித்து அதைச் சரிப்படுத்திக் கொள்ளுந்தனமை உண்டு.
யோகிகளுக்கு மரணம் நேரிடுவது கஷ்டம். யோகிகள் அப்பியாசத்தால் வாயுக்களையும் தத்துவங்களையும் உணர்ந்து முத்திரையைப் பின் தொடர்வார்கள்.
பிறகு கேசரி முத்திரை எவ்வளவு காலம் ஜீவித்திருக்க வேண்டுமோ அவ்வளாவு கலம் ஜீவித்திருப்பார்கள். இந்த யோகிகள் மூன்று வாயுக்களையும் அதிகமாகக் கவனித்து ஸ்திரப்படுத்தவேண்டும்.

சாதரண மனிதர்கள்!

சாதாரணமாய் மனிதர்களுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு சுவாசம் நடக்கும் பக்ஷத்தில் 120 வருஷம் ஜீவித்திருக்கலாம். இப்போது மனிதர்கள் அறுபத்தோராயிரத்து அறுநூறு சுவாத்திற்கு மேல் விடுகின்றார்கள். எப்படியெனில் ஓடுவதினாலும், நடப்பதினாலும், தூங்குவதினாலும், போகம் செய்வதனாலும், சுவாசம் அதிகரிப்பதனால் இந்த நூற்றிருபது வயதுக்கு குறைவு நேரிடுகின்றது.
சாதாரணமாய் மனிதர் விடும் சுவாசம் எவ்வளவு குறையுமோ அவ்வளவு வயது ஏறி வரும். திடீரென்று கட்டக் கூடாது.
மக்கள் அதிக விரைவாக ஓடக்கூடது. அதிகம் சாப்பிடக்கூடாது. வேகமாய் நடக்கக் கூடாது. அதிக போகம் செய்யக் கூடாது.
இந்த விதிகள் ஒன்றும் தவறக்கூடாது.. தவறி நடப்பார்களானால் அதிக கஷ்ட நஷ்டங்களை அடைவார்கள்.

சாம்பவியின் முத்திரை!

உள்ளாதார முதல் பிரம்மரந்திரம்வரை உள்ள சக்கரங்களுள் தன்னாற் கொள்ளப்பட்ட சக்கரத்தில் லக்ஷியமும் தேகத்திற்கு வெளிப்பிரதேசத்தில் மூடுதலும் திறத்தலும் இல்லாத திருஷ்டி பார்வையுமாக இருத்தல் எதுவோ அதுவே சாம்பவி முத்திரையாம்.
அது இருக்கு முதலிய வேதங்களிலும் சாங்கிய பதஞ்சலி முதலிய யோக சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
சாம்பவிக்கு வெளித்திருஷ்டியும் கேசரிக்கு உள் திருஷ்டியும் சாமபவிக்கு இருதய்ப் பார்வையும், கேசரிக்கு புருவநடுப் பர்வையுமாம். ஸ்ரீசாம்பவிக்கும் கேசரிக்கும் ஸ்தான பேதமுண்டு. சித்தம் லயானந்தமானால் பேதமில்லை என்பது கருத்து.
ஸ்ரீசாம்பவி முத்திரையினால் ஸ்திரமனமுடையவனாய் நிஷ்பந்தத் தன்மையாலும் தேகேந்திரிய மனங்களின் நிற்சலனத் தன்மையாலும் சந்திர சூரியர்களை லயமாக்குகிறவனாய் பிராண சஞ்சாரத்தை ஸ்தம்பிக்கிறவன் எவனோ அவனே அதுவிதுவென்று சொல்லக்கூடாத பதமாகிய ஆத்தும சொரூபத்தில் நிலைத்தவனாகிறான்.

கேசரி முத்திரை!

இட வல நாடிகளிலுள்ள வாயு எந்த மத்திய தேசத்தில் செல்கின்றதோ அத்தேசத்தில் கேசரி முத்திரை ஸ்திரமடைகிறது. இதில் ஐயமில்லை. சூனியத்தில் பிராணன் ஸ்திரமாகாகவே வாயுவை விழுங்குதலெனெப்படும்.
சந்திர சூர்யர்கலென்னும் இடைகலை பிங்கலைகளின் மத்தியில் நிராலம்பமாகிய உள் ஆகாயத்திலிருக்கும் ஆகாயங்களின் சமுதாயத்தில் செவ்வையாய் பொருந்தி இருப்பது எதுவோ அம்முத்திரையே கேசரி முத்திரை எனப்படும்.

இதன் அப்பியாசம்!

முன்னமே சுழுமுனையில் பிராணனால் பூரிக்க வேண்டும். அப்போது நிச்சயிக்கப்பட்ட கேசரி முத்திரை உண்டாகிறது.
புருவமத்தி சிவமெனும் சுக வடிவமாகிய பரமாத்துமாவின் ஸ்தானமாம்.
சிவத்தில் ஒடுங்க வேண்டும். எவன் மனத்தை நிராலம்பமாக்கி ஒன்றையும் சிந்தியாதிருக்கின்றானோ அவனே கேசரி முத்திரையை உ?ணருவான். எவன் பிரமகாய விரக்தியைப் பரவைராக்கியத்தால் விடுகின்றானோ அவன் உள்ளும் வெளியும் இருக்கும் ஆகாயத்தில் கடத்தைப்போல் நிற்பான். இது நிச்சயம்.
ஒருவன் தேகத்தினுள்ளும் வெளியுமுள்ள வாயுவைத் தனக்குள் கேசரியில் எப்படி இலயமாக்குகிறானோ அப்படியே தேகத்திலிருக்கும் வாயுவையும் இலயமாக்குவான். இதில் ஐயமில்லை. அன்றியும் பிராணனது ஸ்தானத்தில் ஸ்திரத்தன்மையும் அடைவான். வேறு ஒன்றையும் சிந்தியான். அப்போது சொரூபத்தில் நிலைத்தலாகிய ஜீவன் முத்தனாவது திண்ணம்.

அஜபா காயத்திரியின் நிலை!

பூரக ரேசகம் செய்யுங்கால் ஹம்ஸம் ஸோஹம் என்று நேராகவும் தலைகீழாகவும் பிராகாசிக்கின்றன.
அஜபா மந்திரத்தினால் தத்துவமசி என்னும் மகா வாக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஜீவப் பிரம ஐக்கியம் அடிக்கடி சிந்திக்கப்படுகிறது.
இந்த ஸோ என்னும் அஜபா காயத்திரியை ஈஸ்வர நாமத்தைப்போல் ஜெபிப்பது. சித்த சுத்திக்கு ஹேதுவாகும். வெகுகாலம் வரையில் ஜெபம் செய்யின் விருத்தி அந்தர் முகப்படும்.
அப்போது சுவாசம் வெளிப்படுங்கால் சகாரமாகிறதை (ஸோ எனும் சுவாசத்தை) உட்கொள்ளுங்கால் அகாரத்தை ஹம் என்றே தியானைக்க வேண்டும்.. இந்த அகாரம் மறுபடியும் உட்செல்லுகின்றபடியால் ஹம்ஸம் ஹம்ஸம் என்றே மஹா மந்திரத்தை ஜீவன் எப்போதும் ஜெபிக்கின்ரான். குரு வாக்கியத்தினால் இந்த மந்திரத்தில் ஜெபம் சுழுமுனையில் விபரீதமாய் உண்டாகிறது.
அது ஸோஹம் ஸோஹம் என்றடையப்படுகின்றது. சகாரம் கேசரி எனப்படுகின்றது. த்வம் பதமென்று நிச்சயிக்கப்படிகின்றது. அகாரம் பரமேசுவரானிகிறான். தற்பதமென்று நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.
சகாரத்தை தியானிக்கும் ஆன்மா நிச்சயமாய் அகாரமே ஆகிறான் என்பதை யோக பீஜம், யோக சூடாமணி, உபநிஷத்து, யோக தத்துவ உபநிஷத்து முதலியவற்றால் காணக.
இது அஜபா காயத்திரியாம். இதை முக்கியமான பிரவர்த்தியுடையவன் எவனோ அவன் அதிகாரியாவான். அது சோபாதி சதியானமாம்.
இவற்றினின்றும் சகாரம் அகாரமென்னும் மெய்யெழுத்துக்களை அடக்கி எஞ்சி நிற்கும் ஓம் என்னும் அக்ஷரத்தை தியானைத்தால் நிருபாதிகமாம். ஓம் ஸோஹம் எனும் இரண்டு சத்தங்களும் பிரத்தியேகாத்துமாவோடு பின்னமாகிய பிரமமென்னும் ஒரே அர்த்தமுடையன. சுத்தமாய் இருத்தலால் நிருபாதிகமாயினும் ஓம் எனும் அக்ஷரத்தின் சகார அகாரமென்னும் உபாதிகளைச் சேர்ந்தால் ஸோஹம் என்னும் சத்தமுண்டாகிறது.
ஆகையால் சோபாதிகமெனப்படுவது விசார சகாரம் பதார்த்த மஞ்சூஷரம் முதலிய நூல்களிலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

நாதானு சந்தானம்!

இந்த நாதானுசந்தானத்தை முதலில் அப்பியசிக்கும் மாணாக்கன் சுரராஜ குமார வைரி ரந்தரத்தில் தனது கைவிரல்களிரண்டினால் நிரோதித்து உள்ளே பரவும் சமுத்திரம் போன்ற திரமான நாதத்தை சீக்கிரமாகக் கோருகின்றான். அதனால் எவனுக்குச் செவ்வையாயெழும்பிய நாதமும் வாயுவும் சுத்தமாய் ஜெயிக்கப்பட்டவைகளாகின்றனவோ அந்த மகா குணோதயமுள்ளவனுக்கு அணிமாதி குணங்களும் அளவிறந்த புண்னியமும் உண்டாகின்றன் என்பது சொல்லப்பட்டிருக்கின்றது.
சுரராஜன் இந்திரன் அவன் குமாரன் அர்ச்சுனன், அவன் வைரி கர்ணன் அந்தக்கரண ரந்தரத்தில் என்பது பொரூளாம். அனாகதம் என்னும் நாத வெளியிலுண்டாகும் சுரோத்திர துவக்காதி இந்திரியங்களுக்கு விஷயமாகிய தொனி சூழ்கின்றது. இந்த நாத அப்பியாசி ஒரு பட்சத்தில் சகல சித்த சஞ்சலங்களையும் ஜயித்து நிஜானந்த முடைய்வனாகிறான்.
முதலில் அபியசிங்குங்கால் சமுத்திரம் போலும், பேரி முதலிய வாத்தியம் போலும், நாநாவிதமாகிய நாதம் கேட்கப்படும். பின் நாதானுசந்தானம் நிவர்த்தியாகுங்கால் சூட்சம சூட்சுமமாகக் கேட்கப்படும்.. ஆதியில் வாயு பிரமரந்திரத்திற் செல்லுங் காலத்து சமுத்திரம், சச்சரம், மேகம், பேரிகை, கனக தப்பட்டை என்பனவற்றால் உண்டாகும் சத்தத்தைப் போன்ற நாதமும் அப்படியே பிரமரந்திரத்தில் வாயு ஸ்திரப்பட்டபின் மத்தளம், சங்கு, கண்டாமணி, காகளம் என்பனவற்றால் உண்டாகும் சத்தத்தைப்போன்ற நாதமும், அந்தத்தில் பிராணன் பிரமரந்திரத்தில் மிகவும் ஸ்திரமானபின் கிண்கிணி, வேணு, வீணை, தந்திரி, வண்டு என்பனவற்றின் சத்தங்களைப்போன்ற நாதங்களும் இன்னும் நாநாவிதமான நாதங்களும் தேகத்தின் மத்தியில் உள்ளனவாகக் கேட்கப்படும். மேகம், பேரி முதலியவற்றாலுண்டாகிய பெருஞ் சத்தங்கள் கேட்கப்படினும் அவற்றுள் சூட்சுமமாகிய நாதம் நெடுநேரமிருப்பதால் சித்தம் நெடு நேரம் ஸ்திரமுடையதாக நிலைக்கும்.
கன நாதத்தை விட்டுச் சூட்சுமத்திலும் அல்லது சூட்சுமத்தை விட்டு கனநாதத்திலுமாக இரம்மிப்பதாயிருக்கினும், கன சூட்சுமமென்னும் இரண்டிலொரு நாதத்தைக் கொள்ளுதல் தள்ளுதல் கூடாது. ஏனெனில் அப்படிக் கொள்ளலும் ராஜச குண இயல்பாதலல் அவ்வித ராஜச குணத்தை வரவெட்டாமல் சுத்த சாத்துவிக குணச் செய்கையான சூட்சும நாதத்தில் மனத்தை செலுத்த வேண்டும்.
அஃதேனெனில் நாதங்களில் இரம்மிக்கும் மனமே சமாதியடையும் என்பது கருத்து, அதாவது மலர்ந்த புஷ்ப ரசத்தை குடிக்கும் வண்டு கந்தத்தை விரு,ம்பாதது போல சூட்சும நாதத்தில் சித்தம் நிலைக்க வேண்டும்.. சப்தாதி விஷயமாகிய உத்தியானத்தில் சஞ்சரிக்கும் மனமென்னும் மதயானையை அடக்குவதில் இந்த அனாகதத் தொனியானது கூரிய அங்குசம் போன்ற வலிவுடையதென்பது சொல்லப்பட்டிருக்கின்”றது.

வாசியை அடக்கி அடையும் பலன்!

இந்த யோக அப்பியாசிகள் சூரிய சந்திர கலைகளின் பிராண வாயு செல்லுங்கால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, என்னும் நான்கு தத்துவங்கள் வந்து விலகும். அப்போது அப்பிராண வாயு ஆகாய தத்துவத்தில் அடையும். அச்சமயத்தில் சுவாசம் குறைந்து வரும். அக்காலத்து சுவாச பந்தனம் செய்யக்கூடும். அப்போது
ஓர் அங்குலம் குறைந்தால் இவ்வுலகத்து இச்சையினின்று சுவாதினப்படுவான்.
இரண்டங்குலம் குறைந்தால் மனம் ஆனந்திக்கப்பட்டு ஞானச் செல்வமுண்டாகும்.
மூன்றங்குலம் குறைந்தால் விவேகியாவான்,
நான்கு அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகளைச் சொல்லப்படுவான்.
ஆறங்குலம் குறைந்தால் ஆகாசத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான்.
ஏழங்குலம் குறைந்தால் சரீரம் காயசித்தி பெறுவான்
எட்டங்குலம் குறைந்தால் அணிமா சித்திகளை அடைவான்
ஒன்பங்குலம் குறைந்தால் நவகண்டங்களில் சஞ்சரிப்பான்.
பத்தங்குலம் குறைந்தால் ஒரு தேசத்தை விட்டு மற்றொரு தேசத்தில் பிரவேசிப்பான்.
பதினொரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவைக் கண்டு வசனிப்பான்,
பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருப்பதால் அந்தப் பரமயோகி நெடுங்காலம் அன்னபானாதிகளை நீக்கி அவாவற்றிருப்பான்.
சமாதியிலுட்கார்ந்து மாணாக்கன் இடைகலையைப் பிங்கலையிலும் பிங்கலையை இடைகலையிலும் மாற்றக் கற்றுக் கொண்டபின் பகல் முழுவதும் இடைகலையிலும் இரவில் அதை அடைத்துவிட்டு பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இதற்காக பழம்பருத்தியிற் கொஞ்சம் சுத்தம் பண்ணி வைத்துக் கொண்டு இடைகலையை நடத்த வேண்டியிருந்தால் வலநாசியிலும் பிங்கலை நடத்த வேண்டியிருந்தால் இட நாசியிலும் அடைத்துவிட வேண்டும். இப்படிச் சரிவர நடந்தால் மனிதர்கள் நூற்றிருபது வயது ஜீவித்திருக்கலாம்.
மற்றச் சங்கதிகளை சிந்திக்கும் பக்ஷத்தில் யோகிகளுக்கு வயதே இல்லை.
எந்த விதிகள் எப்படியிருந்தாலும் இந்த விதிகள் யாவும் கிருகஸ்தர்களுக்காகவே ஏற்பட்டிருக்கின்றன.
இதை அப்பியாசிகள் எப்போதுமிவ்விதப் பிரகாரம் நடத்துவார்கள். அப்போது தேக சௌக்கியமும் நீண்ட ஆயுளும் மன ஒடுக்கமும் சித்த சாந்தியும் உடையவர்களாய் இருப்பார்கள்.

மனோ நிலை!

பிராணவாயு சுழுமுனையாகிய மத்திய நாடியிற் செல்லுங்கால் அந்தக் கரணம் சூனிய தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத பிரமத்தில் பிரவேசிக்கின்றது. அப்போது சித்த நிரோதமுள்ள யோகவித்தானவன் பிராரத்தத்தோடு சகல கருமங்களையும் நிர்மூலமாக்குகிறான். எது வரையிலும் பிராணனும் இந்திரியங்களும் ஜீவித்திருக்கின்றனவோ அது வரையில் மனத்தில் ஞானம் எப்படி உண்டாகும்! பிராணன் மனம் என்னும் இவ்விரண்டையும் எவன் லயமாக்குகின்றானோ அவன்மோக்ஷத்தை அடைகின்றான்.
பிராண மனோலயங்களில்லாதவன் எவ்விதத்திலும் மோக்ஷம் அடையமாட்டான். நல்ல ஸ்தானத்தில் இருந்து கொண்டு சுழுமுனை என்னும் மத்திய நாடியை நன்றாய் போதிக்கும் தன்மையை குரு மூகமாய் அறிந்து பிராண வாயுவை மத்தியிற் சொலுத்துவதாகிய பிரமரந்திரத்தில் நிரோதித்தல் வேண்டும். இப்படி அப்பியசித்தால் பிராணனது அசைவிற்கு க்ஷயம் வரும். அப்போது மனம் மிகவும் சாந்தியடைகின்றது அக்காலம் நிர்வாணம் மிஞ்சுகிறது.
சூரியனும் சந்திரனும் இராப் பகல் வடிவமாகிய காலத்தைப் புசிப்பவர்களாயிருக்கிறார்கள். இது இரகசியமாய் சொல்லப்பட்டது.
இரண்டரைக் கடிகை சூரியனோடுங்கால் பகலென்றும் சந்திரனோடுங்கால் இரவென்றும் சொல்லப்பட்டிருக்கின்ற்ன. அப்போது சுழுமுனை மார்க்கத்தால் வாயு பிரமரந்திரத்தில் ஒடுங்குகின்றதோ அப்போது இராப்பகல் வடிவாகிய காலமில்லாமையால் அச்சுழுமுனை காலத்தைப் புசிப்பதாய் உள்ளது.
எந்த யோகியால் பிரண வாயு கட்டப்படுகின்றதோ அந்த யோகியால் மனமும் கட்டப்படுகின்றது.
எவனால் மனம் கட்டப்படுகின்றதோ அவனால் பிராணனும் கட்டப்படும்.
மனம் பிராணன் என்னும் இரண்டுள் ஒன்றைக் கட்டினால் மற்றொன்றும் கட்டப்படும். அதலால்
மனம் ஒடுங்காத வரையில் வாசனை நசியாது.
வாசனை நசியாத வரையில் சித்தம் நசியாது.
சித்தம் நசியாத வரையில் தத்துவ ஞானம் உண்டாகாது.
இவற்றுள் மனம் பிராணன் என்னும் இரண்டினுள் ஒன்று நசித்தால் மற்றொன்றும் நாசமாம். ஒன்றின் பிரவிர்த்தியால் மற்றொன்றும் பிரவிர்த்தியாகின்றது. இவ்விரண்டும் லயமானால் மோட்ச சித்தி உண்டாகும்.
மனம் ஸ்திரப்பட்டால் பிராணன் ஸ்திரமாகும்.
சுரோத்திரம் முதலிய இந்திரியங்களுக்கு மனம் நாதனாகிறாது.
மனதிற்குப் பிராணன் நாதனாகிறது.
பிராணனுக்கு மனோலயம் நாதனாகிறது.
அம்மனோலயம் நாதத்தை ஆசரித்திருக்கின்றது.
அதாவது மனம் நாதத்தில் ஒடுங்குகின்றது. சுவாச நிசுவாசங்கள் நஷ்டமாகிறது. சத்தாதி விஷயக் கிரகணம் நஷ்டமாகிறதும் சேட்டைகள் நீங்குகிறதும், விவகாரங்கள் இல்லாததும் மனோலயமேயாகும்.
மனோலயம் எதுவரையில் ஆகவில்லையோ அது வரையில் இந்திரிய விஷயங்கள் ஜயமாகா.
இந்திரிய விஷயங்கள் ஜயமாகாவரையில் எனதென்பது எப்படி நீங்கும்!
எனதென்பது நீங்காத வரையில் யாரென்னும் அகந்தை எப்படி நீங்கும்!
யானென்னும் அகந்தை நீங்காத வரையில் மனச் சுத்தம் எப்படி ஆகும்!
மனம் சுத்தமாகத வரையில் அபரோக்ஷ ஞானம் எப்படி வரும்!
அபரோக்ஷ ஞானம் உதயமாகத வரையில் பிரம் சைதன்யம் சமாதியின் கண் எப்படி புலப்படும்!
பிரம் சைதன்யம் சமாதியின் கண் புலப்படாத வரையில் திடஞானம் எப்படி உதயமாகும்!
திடஞானம் பெற்ற மகான்களுக்கு துவிதமேது! பேதமேது! மாய்கையேது! பந்தமேது! ஜன்மமேது! அப்போது அந்த யோகி ஜன்மாகிதனாகின்றான்.

ஆகையால் இந்த யோகத்தை அனுஷ்டிக்கும் பக்குவமுடைய மூஷுகன் முக்கியமாக கவனிக்க வேண்டியது. யாதெனில் வாசி யோகத்தைய்ன்றி மற்ற ஹடயோகம், கௌடயோகம், அம்பிகா யோகம் முதலிய யோகங்களால் சாட்சாத்காரத்தை அடைய இயலாதென்பதை உணரவேண்டும். அஃது எப்படியெனில் ஒருவன் கௌசனையால் விசாலமான விண்ணை மூடுவது போலாகும். இந்த வாசி யோகம் அப்படியன்று.. கண் மூட விண் மறையுமென்பதாம். ஆகையால் இந்த யோகத்தை அனுஷ்டித்தவர்கள் இந்த நூலை வாசித்தவர்கள், வாசிக்க கேட்டவர்கள், மனம் இவ்வாசியை நாடுவதால் சித்தம் நிலைத்து ஞானம் உதயமாய் அணிமாதி சகல ஐஸ்வரியங்களும் அடைந்து ஜீவன் முத்தர்களாய் நிரதி சயானந்தத்தில் சதா காலமும் நிலைத்து வாழ்வான் என்பது குரு வாக்கியம்.

வாழ்க நாரண தேசிகர் வான்ருள்!
வாழ்க அன்னவர் மாணவர் யாவரும்!
வாழ்க இந்நூல் படிப்பவர் கேட்பவர்!
வாழ்க இந்தச் சிவயோக சாரமே!

#############################################################################################

திங்கட்கிழமை, 01 June 2020 10:34

ஞான சரம்!

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஞான சரம்!

சந்திரன், சூரியன் கோள், நாள், பக்ஷம், கரணம், யோகம், வாரம் இவைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட சோதிட இலக்கணத்தை அறியாதவர்கள் தம் தம் மன நினைவினால் அறிந்து கொள்ளும் மார்க்கம் என்ன என்/று உமை சிவபெருமானிடம் கேட்க அவர் அருளிச் செய்த அரும் பெரும் நூல் ஞான சரம் என்ற சாஸ்திரம் இதுவாகும். இதை உயிர்கள அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற அவாவில் குருஸ்ரீ பகோரா.

பரம்பரியமாக தொடர்ந்து விருத்தியாகி வரும் நான்கு வருணாச்சிரமம் எனப்படும் பிரம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர மானிட தேகத்தில் இந்தச் சரம் நாசிகையின் வழி நின்று எருதின் ஒரு மூக்கணாங்கயிறால் ஆட்டுவிப்பதுபோல் நன்மை தீமை என்ற நஞ்சினை ஊட்டுவிக்க அப்படி ஊட்டுவிக்கப்பட்ட கொடிய காலனென்ற பாம்பு உண்ணவும் உமிழவும் உட்பட்டு இருவினைக்கிசைந்தவராய் பிறந்து இறந்து போவர். எனினும் இந்நூலை இகழாமல் குரு வழி அறிந்து அனுபவித்து அறநெறியில் நிற்பவர் யாராக இருந்தாலும் தேவர் ஆவார்கள். அவ்வாறு அறியமாட்டாதவர்கள் ஊமைக்கு சமமாவார்கள்.

சரம் என்பன காற்று, மனம், சீவன், சுவாசம், மூச்சு, பிராணன், ஆவி, உயிர், உயிர்ப்பு இவைகள் முதலாகச் சொல்லப்பட்டவை.

சரம் பார்க்க விரும்பும் சீவர்கள் நல்லவர்களாய் உத்தமராய் குருவிடம் ஆசியும் தீட்சையும் பெற்றவர்களாய் இருந்தால்தான் பலிதலாகும். அஃதன்றி படித்து தாமே கற்று பலன் சொல்ல முறப்ட்டால் சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டு துன்பத்திற்கு உள்ளாவர்கள். தன் சுய வல்லமையால் தெரிந்து கொள்ள வல்லமையற்றவர்களாய் பின் சங்கரன் அருளினால் தெரிந்து கொள்ளத்தக்க சிறப்புடைய இந்நூலை குருவருளினாற் தெரிந்து கொள்வீராக.
சரம் பார்க்கிறவனை ஒருவன் வந்தழைத்தால் அவன் சூரியகலை நடக்கும்போதே போக வேண்டும். போவதானாலும் சூரியன் இயங்கும்போதே பேச வேண்டும். மற்றபடி கூடாது. மிஞ்சி நடந்தால் மத்திம பலன்.

சரம் பார்த்துச் சொல்கிறவனுக்கு தாம்பூலம் முதலானவைகள் கொடுத்து உபசாராதிகள் செய்து பின்பு கேட்கவும்.

திதி வார நட்சத்திர காலசர பலன்!

.சரம் விடிவதற்கு ஐந்து நாழிகை (ஒருநாழிகை=24நிமிடங்கள்) இருக்கும்போது எழுந்து பார்க்க வேண்டும். சரம் பார்க்கும்போது
வளர்பிறை பிரதமை, துவிதை, திரிதியை மூன்றிற்கும் சந்திர கலை உதித்து நடக்க வேண்டும். அடுத்த மும்மூன்று திதிகளுக்கும் சூரியகலை, சந்திரகலை என மாறி மாறி நடக்க வேண்டும்.
வளர்பிறைக் காலத்தில்
பிரதமை தப்பினால் யாதேனும் ஒரு இடர் வரும்
துவிதை தப்பினால் கலகம்
திரிதை தப்பினால் பொருட்சேதம்
சதுர்த்தி சகல வித நஷ்டமுண்டாகும்.
பஞ்சமி பந்துக்களுக்கு வியாதி
சஷ்டி அத்தேசத்தாருக்கும் அரசுக்கும் வருத்தம்
சப்தமி அரசுக்கும் தேசத்தாருக்கும் நலிவு. தனக்கில்லை என்று ஏமறியிருக்கக் கூடாது.. தன்னாலே அவர்களுக்கு வருத்தம் வந்ததென்று அவதூறான பொய் பிரச்சாரத்தால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
அஷ்டமி பிழைக்கில் நோவும் சாவும் வரும்.
தேய்பிறைக்கும் இம்முறையே கொள்ளவேண்டும்.

தேய்பிறை பிரதமை, துவிதை, திரிதியை மூன்றிற்கும் சூரிய கலை உதித்து நடக்க வேண்டும். அடுத்த மும்மூன்று திதிகளுக்கும் சந்திரகலை, சூரியகலை என மாறி மாறி நடக்க வேண்டும்.

பொழுது விடிய ஐந்து நாழிகை இருக்க உதித்த சரம் மற்ற ஐந்து நாழிகையும் கலங்காது ஓட வேண்டும்.

காலசரம் சரிப்பட்டு வருமோ வராதோ. ஊழ்வினைப்படியல்லவோ நடக்கும் அதை நம் வசமாக்கல் இலகுவானதா என்று தளர்வுற்றிருக்க வேண்டியதில்லை. சரம் பார்க்கிறவன் பிராதக் காலத்தில் அருணோதயத்திற்கு முன் எழுந்து ஞாயிறு செவ்வாய் கிழமைகளுக்கு தென்புறமாய் மூன்றடி மண் (முன் சொன்னபடி) முன்னிட்டு வைத்து சாரத்தை பூரணமாக்கி அக்காலையே முன்னிட்டு போகலாம். திங்கள் வெள்ளிக்கு நாலடி வடக்கே போகலாம். புதனுக்கு இரண்டடி கிழக்கே போகவும் இப்படி போய்வந்து ஒரு திவ்விய ஆசனத்தில் அமர்ந்து சிவனை நினைத்து துதி செய்து பின்னெழுந்து எங்கே சென்றாலும் அல்லது எங்கேயிருந்தாலும் துன்பங்கள் வராது.

திதிகள் வாரங்களில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி கிழமைகளுக்கு சூரியகலையும் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளுக்கு சந்திரகலையும் உதித்தோட வேண்டும்.. இப்படி உதிக்கும் சரம் எந்தப் பூதியத்தில் உதிக்க வேண்டும் என்பதை பூதிய பலன்களில் பார்க்க வேண்டும்.

வாரங்களுக்குரிய காலசரங்களின்படி
ஞாயிறு தப்பினால் வியாதி,
செவ்வாய் தப்பினால் சண்டை, சாவு
வியாழன் தப்பினால் தன் அரசுக்கு கேடாம், தனக்கு பொருள் வராது.
சனி தப்பினால் வறுமையுடன் தன் கையிலிருப்பதும் போகும்.

திங்கள் தப்பினால் சுற்றத்தாருக்கு கேடு
புதன் தப்பினால் அவ்வூர் அதிகாரிக்கு கேடு
வெள்ளி தப்பினால் தான் வசிக்கும் பதியை விட்டுப் போக வேண்டும். அந்த எல்லையை விட்டு மற்றோர் எல்லையை மிதிக்க வேண்டும். தேக கேடு வரும்,, தன் மனைவிக்கு சண்டை பிணக்கு நோய் முதலிய வருத்தமாதல், சதிபதிகளுக்கு பொருத்தம் போதாமை ஆகும்,. புணர்ந்தோர் காதலென்றும் சாமுடி வரைக்கும் வருத்தம் வரும்.

நட்சத்திரங்களுக்கு நடக்கவேண்டிய காலசரத்தின்படி பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், உரோகிணி, சதயம், உத்திரட்டாதி, ஆகிய பன்னிரண்டிலும் சூரியன் நடக்க வேண்டும்.
மற்ற பதினைந்திலும் சந்திரன் நடக்க வேண்டும்..

சரம் பார்க்க ஆசனங்களின் விதி.-

நன்மை தரும் ஆசனங்களின் மீதிருந்து சரம் பார்க்க வெண்டும்.

மூங்கில் தடுக்கின் மேல் அமர்ந்து பார்க்கின்- வறுமை
கல்லின் மேல் அமர்ந்து பார்க்கின்- வியாதி
மணலின் மீது அமர்ந்து பார்க்கின்- துக்கம்
உடைந்த/அறுபட்ட பலகைமீது- நன்மையில்லை.
கோரை/புறபாய்கள் மீது கீர்த்தி நாசம்.
பச்சிலைத் தலைகள் மணநடுக்கம்
மான் தோல் ஞானம்
புலித் தோல் செல்வம்
தர்ப்பாஷனம் மோக்ஷம்
வெள்ளை வஸ்திரம் தீமையில்லை
சித்திராசனம்/இரத்தின கமபளம் நன்மை

பதுமாசனத்தில் இருந்து பார்க்கும்போது மனதிற்கு மிகவும் நினைவுகளினால் அல்லல் வரும். அப்படி வரும் அல்லல்களை நீக்கி வேறு நினைவில்லாமல் ஒரே மனமாகி ஒட்டியாண பந்தமெனச் சொல்லும் பிரணாயாமம் செய்து அதன் மேற்பார்க்கில் எல்லையில்லாத திருவருளுக்கு இடமாகிய உந்தியில் கீழிருக்கும் எழுத்தில் தொடங்கி எழுபத்தீராயிரம் நாடிகள் இந்தத் தேகத்திலுள் உள்ளவை தெரியும். அதனுள் பத்து நாடிகள் நல்லனவாகும். அப்பத்து நாடிகளுள் மூன்று நாடிகள் மிக நல்லன. அம்மூன்றின் வழியாய் சரம் எளிதிற் காண ஓடும். எனவே இதை அறிய பெரிதாகிய நன்மையினை அளிக்கும் அவ்வெழுத்தை பார்க்கவும்.

இதய கமலத்தின் வழி ஊடுருவிக் கொண்டு யாதொரு தீங்குமின்றி அசுவை உயிரெனப்பட்ட சரம் நாசிகை வழி நான்கு அங்குலம் போக மற்றவை போகும்போது செம்மையாய் திரும்பி வரும்போது கணகிட்டுப் பார்க்கின் இருபத்தோறாயிரத்து அறநூறு தரம் நடக்கும். இதற்கு 60 நாழிகை சேர்ந்த ஒரு நாள் காலம் ஆகும். மூலாதாரம், சுவதிட்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற பர நிலைகளின் பரிசாக வரும் இதனைக் காணும் வழி இந்நூலை மயக்கமறப் பார்ப்பது. அப்படிப் பார்ப்பவர் பரமாகவும் அபரமாகவும் இருக்கும் ஒரு பொருளினால் உண்டாகும் நன்மைதனை அறிவர்.

இடைகலை என்பது இடப்பக்க நாசியில் வரும் சுவாசம் சந்திரகலை எனப்படும் பிங்கலை என்பதுவே வலப்பக்க நாசியில் வருஞ்சுவாசம் சூரியகலை எனப்படும். யாவருக்கும் ஒக்கக் சொல்லுங்காலத்தில் சுழுமுனை என்பது நடுவாகும் அக்கினி எனப்படும். சந்திரனைச் சொல்லுமிடத்தில் அமுதம் தீர்க்கமாக எப்பொருள்களையும் உண்டாக்குபவன். அச்சுழுமுனை இரண்டு நாசிகளிலும் பரவியோடும் அதற்கு பூரணம் என்பது பெயர்.

சூரியனுடைய குணங்குறிகளைச் சொன்னால் அந்தச் சூரியன் உலகம் முழுவதும் சஞ்சரிப்பவன். பரிசுத்தமான வெண்மை நிறத்தையுடையவன். ராசியில் சர ராசி. சுழுமுனை என்ற அக்கினி சகல கருமங்களையும் அழிக்கும் பொல்லாதது. அக்கினி சிவப்பு நிறம். ராசி என்று கேட்டால் இரண்டு ராசிகளையும் உடையது. அதாவது இடைகலை என்று சொல்லப்பட்ட சந்திரன் பெண்பால். பிங்களை என்று சொல்லப்பட்ட சூரியன் ஆண்பால். சுழுமுனை எனப்பட்டது அஃறினைப் பால் அதாவது அலியாகும்,

சந்திர இலக்கணம்.

இடைகலையில் சரம் நடக்கும்போது
ஒருவரைத் தூது அனுப்புதல்,
தானே தூது போதல்,
புதிய வஸ்திரம் தரித்தல்,
ஆபரணாக்கள் அணிந்து கொள்தல்,
விவாகம்-தாலிகட்டல்
ஒருவரை அடிமையாகப் பெற்றுக் கொள்ளல்,
குணறு, குளம், ஏரி வெட்டுதல்.
வாழும் வீடு, மனை வாங்குதல்.
ஒரு வீட்டிற்கு குடி போதல்,
இரு வஸ்துவை விற்றல்,
அரசைக் காணல்,
சாந்தி கழித்தல்,
இஷ்ட தெய்வம் பிரதிஷ்டை செய்தல்,
ஒருவனைச் ச்மாதான்ம் செய்தல்,
கல்வி கேட்டு கொள்ளுதல்,
யாராயிருந்தாலும் உண்மைபக்கம் நிற்றல்,
தன்ம் தான்ய ஆஸ்தி சேர்த்து வைத்தல்,
தியாகம் செய்தல்,
பாப விமோசனஞ் செய்தல்

ஆகிய இவைகள் நன்மைகளாக முடியும் மற்றவை தீமையாய் முடிவாகும்.

சூரிய இலக்கணம்.

பிங்கலையில் வல நாசியில் சரம் நடக்கும்போது
குரு உபதேசம் பெறல்
தான் ஒருவருக்கு உபதேசம் பண்ண வித்தை பாராயணஞ் செய்தல்
வித்தை ஒருவருக்குச் சொல்லுதல்
ஒருவணை வணங்குதல்
எதிரியைத் துரத்தல்
பயிர் விளைத்தல்
வியாபரம் செய்தல்
திருடல், சூதாடல்
யாராலும் தீர்ப்பதற்கரிய வழக்கை பேசுதல்
யானை, குதிரை தேர்களில் சவாரி செய்தல்
விளங்கும்படியாக எழுத்தெழுதல்
சங்கீதம் பாடல் பேசத் தொடங்கல்
பகையை உண்டாக்குதல்
ஒருவனை பங்கம் பண்ணல்
கோள் சொல்லுதல்
பிசாசு ஓட்டுதல்
மந்திர தீட்சை சாதித்தல்
மருந்து சாப்பிடுதல்
உணவு உண்ணுதல்
நித்திரை செய்தல்
ஸ்நானஞ் செய்தல்
கொல்லுவதர்கேதுவாகிய விஷயங்களை நிவர்த்தி செய்தல்
தம்பன யோக சாதனஞ் செய்தல்

ஆகிய இவைகள் நன்மைகளாக முடியும்

சுழுமுனையில் இரண்டு சரமும் ஒத்து ஒடுகையில் சமாதி யோகஞ் செய்யலாம் அதாவது கருவி காரணங்களோடு சும்மாயிருத்தல் நன்மை ஆகும். நினைத்த காரியம் ஏதும் ஆகாது. சுழுமுனை நடக்கும்போது நன்மையே இல்லை.. கெட்ட காரியங்கள் எல்லாம் பலிக்கும். சுழுமுனை நட்க்கும்போது ஒருவன் வந்து இப்பொருள் அகப்படுமா என்றால் அகப்படாது.

சரம் எந்தப் புழையில் ஓடுகின்றதோ அந்தப்பக்கம் பூரணம் என்றும் சரம் ஓடாத பக்கம் சூன்யம் என்றாகும். குறைவிலாத பூரண பக்கம் நின்று வழக்கு பேசுகிறவர்களை தர்க்கம் பண்ணுகிறவர்களை சண்டை பண்ணுகிறவர்களை ஒருவன் சென்று காணும்போது அவ்வாறு கூறப்பட்டவர்களை இதனால் காணலாமென்று சரமோடாத சூன்ய பக்கத்தில் நிறுத்தினால் பூரண பக்கத்தில் இருப்பவன் வெல்வான்.. இப்படிபட்டவர்களை தனக்குச் சரமோடாத சூன்ய பக்கத்தில் நிறுத்தினால் அவன் பேச்சே வெல்லும்.

யாத்திரை பிரயாணம் போகும்போது சரம்!

சந்திர திசை- மேற்றிசையும் தென்றிசையும்
சூரியதிசை- வடக்கும் கிழக்கும் சூரிய திசை

யாத்திரை போக நாடியவன் சந்திரனில் சந்திர திசையில் போகவேண்டும் சூரியனில் சூரிய திசையில் போக வேண்டும். அல்லது இருபத்துநான்கு காத தூரம் போக வேண்டியிருப்பவர்கள் சந்திரனில் தொடங்கி சூரிய திசையில் பிரயணத்தை முடிக்க வேண்டும்.
அல்லாது சரம் இசகு பிசகாய் மாறி ஓடினால் அதற்கு உபாசாந்தம் அதாவது சாந்தி என்னவென்றால் சூரிய கலையில் போகவேண்டிய திக்கில் யாத்திரைக்குச் சந்திர கலையாயிருந்தால் அந்த சந்திர சுவாசத்தை ஏற உள்ளே இழுத்து பூரணமாக்கி இந்தக் காலையே இரண்டு தரம் முன்னிட்டு வைத்துப் பின்பு சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும். அப்போது சந்திரன் பலன் கெட்டுப்போகும். தீமையில்லை. போகிற காரியம் ஜெயமாகும்.
சந்திர கலையில் போக வேண்டிய திசையில் யாத்திரைக்குச் சூரிய கலையாயிருந்தால் சூரியன் சுவாசத்தை உள்ளே இழுத்து அக்காலையே மூன்றடி முன்னால் வத்து பின் சுதாவாய் நடந்து வழியில் சிறிது தூரம் நிற்காமல் போக வேண்டும்.. சூரிய பலன் கெட்டுப்போகும். தீமையில்லை. போகிற காரியம் ஜெயமாகும்.
இப்படியன்றி வடக்குத் திசையும் கிழக்குத் திசையும் சந்திரன் நடக்கும்போது யாத்திரை போனால் போகிற இடத்தில் ஒருவருக்கொருவர் விரோதப்பட்டுப் போவார்கள். திரும்பமாட்டார்.
மேற்குத் திசையும் தெற்குத் திசையும் சூரிய கலை பாயும்போது யாத்திரை போனால் சலனத்தினால் அல்லது மழையினால் இறந்து போவார்.
இரு பதினான்கு காத வழிக்கு மேற்பட்ட தூரமான இடத்திற்கு போகும்போது சந்திரகலை ஓடும்போது புறப்பட்டுச் சூரியகலை நடக்கும்போது அந்த இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும்.


நன்மை தீமை சொல்லும் வழி-

நாம் செய்யுங்காரியம் நன்றோ தீதோ கண்டறிவோம். என வந்தவன் சூர்ய கலை நடக்கும்போது பூரணப் பக்கம் இருந்தால் அவன் சொன்ன காரியங்கள் அவனுக்குச் சித்திக்கும். அப்படியன்றி வலப்பக்கத்தில் நின்றாலும் சரம் பார்க்கிறவன் மேலிருக்க வந்தவன் கீழிருந்து கேட்டாலும் நேர்நேரே பின்னிருந்து கேட்டாலும் அச்சூரிய கலைக்குரிய பலிதமே நடக்கும்.
சந்திர கலை நடக்கும்போது அவன் அப்பூரண பக்கமாயிருந்து கேட்டால் அவன் சொன்ன கரியங்கள் எல்லாம் அவனுக்குப் பலிக்கும். அப்படியில்லாமல் இடப்பக்கத்தில் நின்றாலும் நேர்நேரே முன்னே நின்றாலும், மேலிடத்தில் இருந்தாலும் அச்சந்திரக்கலைக்குரிய ஞானமே பலிதமாக வரும்.
இதைத் தவிர சரம் ஓடாத சூன்ய பக்கத்தில் நின்று கேட்பானானால் அவன் கேட்ட காரியம் பொல்லாதது ஆகும். பலிக்காது. அல்லாது அவன் வாய்திறந்து சொல்லிய முதல் வார்த்தையின் எழுத்துக்களை எண்ணினால் ஒற்றைப் படை வந்தால் சூரியன் குணம். இரட்டைப்படை வந்தால் சந்திரன் குணம்.
`இதில் மேல் கீழ் என்பது மெத்தை வீட்டையும், கிணறு முதலிய பள்ளக் குழிகளையும் குறிக்கும்.
சந்திரனுடைய திசையும் பக்கமும் பூரணமாயிருந்தாலும் பலாபலன் மத்திமமாகத்தான் இருக்கும். அதே சமயம் சூரியனுடைய திசையும் பக்கமும் சூன்யமாயிருந்தாலும் பூரணமாயிருந்தாலும் சொன்னபடி நடக்கும்.
குறி கேட்க வந்தவன் தன் காரியத்தைச் சொல்லிக்கொண்டே முன்னர் பூரணத்தில் வந்தாலும் பின்னர் சூன்யத்தில் வந்துவிடுவானாகில் அக்காரியம் தீதாம். முன்பு சூன்யத்தில் நின்று பின்பு பூரணத்தில் வருவானெனில் மத்திமம். இவ்விரண்டும் மாறுபாடில்லாமல் வந்தவன் கலங்காமல் பூரண பக்கத்திலிருந்து தான் வந்த காரியத்தைச் சொல்லி முடித்துவிடுவானெனில் அக்கருமம் நன்கினிதாகும்.

ஒருவன் வந்து நான் இதனால் கெட்டுப் போனேன் என்றாலும் நான் இதைப் பறிகொடுத்தேன் என்றாலும் பாம்பு கடித்தது என்றாலும் விஷம் குடித்தேன் என்றாலும் படுத்த படுக்கையில் இருக்கின்றான் பிராணன் போய்விடும் போலிருக்கின்றது என்று அபாய குறிகள் எவையாயிருந்தாலும் சரம் ஓடாத சூன்ய பக்கமாய் வந்து நின்றால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவன் சொல்லுவது குறை நீங்கி நிவர்த்தியாகும்.
அப்படியில்லாமல் சரம் ஓடுகின்ற பூரண பக்கத்தில் நின்று சொல்வானானால் வந்தவன் எப்படி எப்படிச் சொன்னானோ அப்படி அப்படியே நடக்கும். பறிபோன பொருள் வராது. நஞ்சு மீளாது. படுக்கையில் இருக்கும் நோயாளி தேறமாட்டான்.
சூன்யத்தில் எவனாவது வந்து எதையாவது சொன்னானாகில் அது ஒரு காலத்தில் அபத்தமான வார்த்தையானாலும் ஆகும். பூரணத்தில் சொன்ன சொல் எப்போதும் உண்மையாயிருக்கும்.
வந்தவனுடைய திசையையும் அவன் சொல்லிய முதல் வார்த்தையின் எழுத்தை எண்ணிப் பார்க்கில் அவன் திசை சந்திர கூறாகவும் முன் சொன்ன சொல் சூரியன் கூறாகவும் இருந்தால் மேற்சொன்ன காரியங்கள் மத்திமமாக இருப்பினும் மோசமாகாது,
சந்திரன் திசையானாலும் அல்லது சந்திரனேயானாலும் சூரியனேயானாலும் வந்தவன் பூரண பக்கத்தில் நின்றால் அவன் வந்த காரியம் நன்றாம்.


சண்டை வழக்கு குறி!

முன்பு சூன்யத்திலிருந்து கேட்டால் பிறக்கும் குழந்தை மரிக்கும் என்றாலும் போர், சண்டை, வழக்கு குறித்து ஒருவன் வந்து இன்னவன் இன்னவன் எவன் வெல்வான் என்றால் வந்தவன் சூன்ய பக்கத்திலிருந்து சொன்னால் முன் சொல்லப்பட்ட பெயரையுடையவன் தோற்பன். பூரணமாகில் பின் சொல்லப்பட்ட பெயரைய்டையவன் தோற்பன். சரம் பார்க்கிறவனுக்குச் சுழுமுனை நடந்தால் அந்த இருவரும் ஒருமித்து போவர்.
சண்டையின்போது வழக்கு நேர்கிறவனுக்கு சூரியகலையாய் இருந்தால் வெல்வான். சந்திர கலையாய் இருந்தால் தோற்பன். சுழுமுனையாகில் ஒருமித்து போவர். சந்திரகலை நடக்கப் பெற்றவர் சரத்தை உள்ளிழுத்து பூரணமாக்கி அச்சரம் நடக்கிற காலையே முன்வைத்து ஐந்தடிபோய் பின்பு நேர் நடந்தால் வெல்வான்.
சந்திரகலை இயங்கும்போது சென்று சூரியகலை இயங்கும்போது களத்தினேரில் எதிரி எப்படிப்பட்டவானாய் இருந்தாலும் தோற்பன். சந்திரன் இயங்கும்போது புறப்பட்டு சந்தின் இயங்கும்போது போரில் தோற்பன். சூரியன் இயங்கும்போது புறப்பட்டு அச்சூரியன் இயங்கும்போது போரில் வெல்வதனாலும் தன்மேல் ஓரு காயம் படாமல் வென்று வருவான்.

போர் வெல்லும் மார்க்கம்- அ, ஆ- பாலன் கூறு, இ, ஈ-குமரன் கூறு, உ, ஊ அரசன் கூறு எ, ஏ, ஒ, ஓ விருத்தன் கூறு எனக் கொள்க. சண்டைக்காரனுடைய முதலெழுத்து ஆவொலியாக இருந்தால் பாலன்கூறு என்வும். ஈ வொலியாக இருந்தால் குமரன் கூறாகவும், ஊ ஒலியாக இருந்தால் அரசன் கூறாகவும். மற்ற எ, ஏ, ஒ, ஓ ஒலியாக இருந்தால் விருத்தன் கூறாகவும் கொண்டு பாலன் குமரனையும் அரசனையும் வெல்வான் என்க. விருத்தன் மற்றவர்களால் படுவானெச் சொல்க. அதிலும் எ, ஏ, ஒ, ஓ விருத்தன் கூறு இவ்விரண்டு எழுத்துக் கொண்டவன் அவர்களால் படுவான்.

பஞ்ச பூதியங்கள்!

சரத்தின் ஸ்பரிசம்! இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று கலைகளையும் அவற்றின் பயன்கள் அனுபவத்தையும் பரிசார்த்த முறையில் பார்த்தால் ஒத்துவரும் அந்த நாடிகளுக்குள் பஞ்ச பூதியங்கள் நடப்பதுண்டு. அவற்றைத் தேர்ந்தறிந்து அனுபவிப்பது சிறப்பாகும்.
`
நாசியிலிருந்து வரும் சரம் வலத்திற்கும் இடத்திற்கும் ஒன்றுதான்,

மூக்குத் தண்டைச் சார்ந்து வந்தால் பிருதிவியின் கூறு
கீழ் நோக்கியோடில் அப்புவின் கூறு
மேலாகச் சென்றால் தேயுவின் கூறு
தண்டிற்கு நேராகி மற்றொரு புறத்தைச் சார்ந்து வீசினால் வாயுவின் கூறு
இப்படி நான்கு பக்கமும் கலைந்து நடந்தால் அது ஆகாயத்தின் கூறு

பஞ்ச பூதிய சரம் நடப்பதை கீழ்கண்ட முறையில் கண்டு தெளியலாம். ஒர் பூதியத்திற்கு நான்கு குறி சொல்லியிருப்பது ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்றைக் கொண்டு கண்டு பிடிக்கலாம் என்பதற்காகவே.

பிருதிவி சரம் பொன்மை
அப்புச் சரம் வெண்மை
தேயுச் சரம் செம்மை
வாயுச் சரம் கருமை
ஆகாய பூதியம் நிறம் படிகம்

அப்போது கண்டத்தில்

பிருதிவிக்குத் தித்திக்கும் உணர்ச்சி
அப்புக்குத் துவர்க்கும்
தேயுவுக்கு உவர்க்கும்
வாயுவிற்கு புளிக்கும்
ஆகாயத்திற்கு கண்டங்கசக்கும்

பிருதிவி எண்கோண வடிவம்
அப்பு எட்டு நாள் பிறைபோன்று வடிவம்
தேயு முக்கோண வடிவம்
வாயு அறுகோண வடிவம்.
ஆகாயத்திற்கு வட்ட வடிவம்

பிருதிவி 12 அங்குலம்
அப்பு 16 அங்குலம்
தேயு 8 அங்குலம்
வாயு 4 அங்குலம்
ஆகாயம் 1 அங்குலம்

இப்படி பூதியங்களின் குணா குணங்களைச் சொல்லின் பிருதிவிக்கும் அப்புவிற்கும் உத்தமம். தேயு மத்திமம். வாயுவும் ஆகாயமும் தீது.

சுட்டிக் காட்டாமல் சூன்ய பக்கத்திலிராமலும் பூரண பக்கத்திலிருந்து சண்டைக்குப் போகிறவன் ஆயுதங்களினால் காயம்பட்டு வருவான் என்க. மேலும் பூதியப்படி
பிருதிவி நடந்தால் முதுகில் படுகாயம் அடைவான்
அப்புவாகில் காலில் காயம் படுவான்
தேயுவாகில் மார்பில் காயம் படுவான்
வாயுவாகில் கையில் காயம் படுவான்
ஆகாயமாகில் தலையிலும் காயம் படுவான். விஷ்ணு தேவன் வந்து விலக்கினாலும் தப்பித்து வரமாட்டான்.

சமர் செய்கின்ற வாயு மூலை தொடங்கி அக்கினி மூலையளவாக ஒரு கயிறு பிடித்தாற்போல் சரியாகப் பாவனை செய்து அதன் மேற்கையும் தெற்கையும் சந்திரன் கூறாகவும் வடக்கையும் கிழக்கையும் சூரியன் கூறாகவும் கொண்டு போர் செய்தால், போர் செய்கிறவனுக்கு சூரியகலை இயங்கில் தான் அச்சூரியன் திசையிற் நின்று எதிரியை சந்திரன் திசையில் நிறுத்தி சமர் செய்ய வேண்டும். அப்படி செய்கையில் சந்திரனானாலும் சரி சூரியனானாலும் சரி உபயோகிக்கும் ஆயுதங்கள்
பிருத்தியாயிருந்தால் கத்தி
அப்புவாகில் வாள்
தேயுவாகில் வில்
வாயுவாகில் தண்டு
ஆகாயமாகில் கல்
கொண்டு அந்தந்த நிலத்தில் இருந்து சண்டை செய்தால் வெற்றி பெறுவர்.

ஒருபக்கத்தில் ஓடும் சரத்தில் ஐந்துவகைப்பட்ட பூதியங்களுண்டு அப்பூதியம் ஒன்றிற்குள் ஐந்து பிரிந்து நடப்பதுண்டு. அவை
பிருதிவிற் பிருதிவி
பிருதிவியில் அப்பு
பிருதிவியில் தேயு
பிருதிவியில்வாயு
பிருதிவியில் ஆகாயம்

தேயு பூதியம் நடக்கும்போது போர் அரங்கம் புரிகையில் வெல்லும். இப்போரில் வாளெடுத்து புரிவது மத்திமம்.
வாயு பூதியம் நடக்கையில் மற்போர் தொல்வியடையும்
ஆகாய பூதியம் நடந்தால் விற் போர் ஜெயிக்கும்.

சாந்தி பண்ணுதல், போக்கு கழித்தல் செய்ய் வேண்டும் என்று கேட்டால் பிருதிவி, அப்பு பூதியங்களில் ஏதாவது ஒன்று நடக்கும்போது செய்தால் பலிக்கும்.

ஒருவன் வந்து மற்றொருவன் எங்கேயிருக்கின்றான் என்று கேட்கின்
பிருதிவியாயிருந்தால் வீட்டிற்குள்ளிருக்கின்றான்.
அப்புவாகில் முற்றத்திலிருக்கின்றான்
தேயுவாகில் அந்த கிரமத்தில் எல்லைக்குள்ளேயிருக்கின்றான்
வாயிவாகில் எல்லைக்குப் புறப்பட்டான்
ஆகாயமாகில் மலையேறுகிறான் என்க.

இதவிடுத்து அடுத்த தேசம் சென்றவன் பற்றிக் கேட்டால்
முதல்பூதியமாகில் அவ்வூரிலே நிலையாயிருக்கின்றான்.
இரண்டாவது பூதியமாகில் திரும்பி வருகின்றான்.
மூன்றகில் திரும்பியவ நில்லாது வந்து கொண்டிருக்கின்றான்.
நான்காகில் அவனிருக்கும் ஊருக்குள் வந்தான்
ஐந்தாகில் ஒரு நாழிகையில் வீடு வந்து சேர்வான். என்க.

இப்படி பூதியம் இவ்வைந்துக்குள் ஐந்தோடும் இது அன்றியும் நூல்பயன் யாவையும் குரு முகாந்திரமாயிருந்து அறிந்து கொள்ளவேண்டும். அல்லாமல் தேவர்களாய் இருந்தாலும் தனியே எண்ணங்கொண்டு குருவைத் தள்ளி சுயானுபவதால் இந்நூலைக் கொண்டே அறிவது கூடாது.

சந்திரக்கலையில்
பிருதிவி நடந்தால் சிவாலயம், வீடுகட்டல், குடி புகுதல், போக்கு சாந்தி கழித்தல், மரம் வைத்தல் இவை நன்றாம்.
அப்பு நடந்தால் குளம் முதலியவை எடுத்தல், சோலை வைத்தல், நிலத்தை உழுதல், விதைத்தல், விவாகம் செய்தல் நன்றாம்.
தேயுவாகில் பிணி தீர்த்தலாம்
வாயுவாகில் குதிரை தேர், கப்பல் ஓட்டலாம்.
சூரிய கலையில் ஆகாயத்தில் மந்திரஞ் ஜெபிக்க விற்போர் செய்ய நன்று.

கருப்பக்குறி!

ஒருவன் கர்பத்தைக் குறித்துக் கேட்கும்போது வந்தவன் ஒரு சீவன்மேல் ஏறிக்கொண்டிருந்தாலும் உயிருள்ள ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாலும், ஒரு சீவனைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் அவன் நின்ற பக்கம் வலமாகவும் புரணமாகவும் இருந்தால் ஆண்பிள்ளை பிறக்கும். அல்லது இடப்பக்கமாகவும் பூரணமாகவும் இருந்தால் பெண் பிள்ளை பிறக்கும் என்க.
பூரண பக்கம் இல்லாமல் சூன்ய பக்கமிருந்து எதனை தொட்டு இருந்தாலும் வலமாகில் ஆண். இடமாகில் பெண். ஆனால் பிறக்கின்ற பிள்ளை இறக்கும்.
சரம் பார்க்கின்றவர்க்கு சுழுமுனையாயிருந்தால் பிள்ளை ஆணுருவிலும் அல்லாமல் பெண்ணுருவிலும் அல்லாமல் அலியாகும்.
வந்தவன் முதலில் வலத்தில் நின்று அவன் வந்த காரியத்தைச் சொல்லிக் கொண்டபின் இடத்தில் வந்து நின்றால் வயிற்றில் உள்ள குழந்தை வருத்தப்பட்டு பின்புதான் பிறக்கும்.

பூதிய சரங்களின்படி பிருதிவியும் அப்புவும் நன்மை தருவன. ஐந்து நாழிகைக்குமேல் நடக்கையில் இவ்விரண்டு பூதியங்கள் அதிகமாக நடந்தால் இலாபமுண்டு. ஒரு பிராணியைக் கைப்பற்றாமலும் அதன் மேல் ஊர்ந்து நில்லாமலும் தனியே வந்து சூனியத்தில் நில்லாமலும் பூரணத்தில் நின்று கர்ப்பக்குறி கேட்டால் அப்போது சரம் பிருதிவி அல்லது அப்பு நடந்தால் ஆண்பிள்ளை பிறக்கும் என்க.

தேயு பூதியம் நடக்கும்போது கர்ப்பம் பற்றிக் கேட்டால் அஃது அழிந்து போகுமாம்.
வாயு பூதியம் நடக்கையில் கர்ப்பம் பற்றிக் கேட்டால் அது பெண்ணாகும்.
ஆகாய பூதியம் நடக்கையில் கர்ப்பம் பற்றிக் கேட்டல் அலியாய் பிறக்கும். பிறந்து இறக்கும் என்க.

உபய சரங்கள் நடக்கும்போது கேட்கப்பெற்ற பிள்ளை இரட்டைப் பேறாகும்.. எப்பக்கமாயிருந்தாலும் பூரணபக்கம் ஆண். சூன்ய பக்கம் பெண்.
வைகறைப் பொழுதில் மனைவிக்குச் சரம் இடப்பக்கத்தில் நடந்து ஆணுக்கு வலத்தில் நடந்தால் உட்கொள்ளும் அப்பியாசம் செய்துகொண்டு வந்தால் மனைவி அவன் வயமாவாள். அப்படி வாங்குவது பன்னிரண்டு தரம் வாங்கியுட்கொள்க. வாரசாராங்கள் எந்தெந்த பூதியங்களில் உதிக்க வேண்டுமெனில் புதன் பிருதிவியில், ஞாயிறு அப்புவில், சனியும் திங்களும் தேயுவில், வியாழனும் செவ்வாயும் வாயுவில், வெள்ளி ஆகாயத்தில் உதிக்க வேண்டும்.

நோய்க்குறி!

புருடன் கொண்ட நோய்க்காக புருடனே வந்து இந்நோய் குணமாகுமா என்றால் அந்நோய் இலகுவாகும். சரம் பார்க்கிறவனுக்கு வலப்பக்கம் நின்று கேட்கிலும் நிவர்த்தியாகும்.
ஸ்திரீ கொண்ட நலிவிற்கு ஸ்திரீயே வந்து வினவினாலும் குணமாகும். வந்தவள் அவனுக்கு இடப்பக்கத்தில் நின்று கேட்கில் சரியாகும்
அப்படியின்று ஆணுக்குப் பெண் வந்தாலும் பெண்ணுக்கு ஆண் வந்தாலும் அவ்வியாதி தீர்வது துர்பலம்.
வலப் பக்கத்திலிருந்து குறி கேட்டுக்கொண்டு இடப் பக்கம் நின்றாலும் இடப் பக்கம் குறிகேட்டுக் கொண்டு வலப் பக்கம் வந்து நின்றாலும் நோய் போக்கு கடினமாகும். ஆனாலும் நாட்பட குணமாகும்

எப்போது தீரும் என கேட்கின் பூதியம்

பிருத்திவியாயிருந்தால் சில நாட்களில்
அப்புவாகில் விரைவில்
அக்கினியாகில் மூன்று நாட்களில் அதிகமானால் கொல்லும்
வாயுவானால் இரண்டு நாளில் அதிகமானால் கொல்லும்
வானமாகில் அன்றைக்கே நோய் பிரிந்து காணும் மிஞ்சிப் போனால் மறுநாள் மரிக்கும்.
நோயைக்குறித்து ஒருவன் கேட்கும்போது சுழுமுனை நடந்தால் அந்நோயாளி ஐந்து தினங்களுக்குள் மரிப்பான். அப்படி மரிக்காமல் தப்பினால் அவனுக்கினி ஒரு விபத்து வருமளவுஞ் சாகான்.

குறி சொல்லும் மார்க்கம்!

சரம் பார்க்கிறவன் ரேசகஞ் செய்கின்ற போது வந்து கேட்கின் கெட்ட காரியஞ் சித்தியாகாது.
பூரகத்திலெனில் நன்மை. அவன் சொல்கிறது உண்மையாயிருக்கும்.
கும்பகஞ் செய்காலத்திலாகில் நற்காரியம் சித்திக்கும்.
மலம், சலம், வாயு கழியும் போதானால் பகைவர் கெட்டுப் போவர்.

சரம் மனத்துடன் லயப்பட்டால்!

இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் மாறி மாறி நடக்கும் இச்சரம் தேகத்தினூடே லயப்பட்டு போகுமானால் பிராணணுக்கு அழிவில்லை. அப்படி வயப்பட்டு நிற்கில் மனம் முதலிய அந்த காரணங்களுக்கும் வேலையில்லை. அவை அசைவற்றிருப்பனவாகும். அதனால் யாராலும் பயமில்லை. இயமனாலும் பயமில்லை. இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறியோடும் சரம் ஒவ்வொரு பக்கத்தில் எந்நேரந்தரித்து நடக்குமெனில் ஐந்து நாழிகையாம். அதிலும் பூதியங்களின் கூறுக்கேற்றவாறு பகுப்பது எனில்
மண்ணில் ஒன்றரை நாழிகை
நீரில் ஒன்றேகால்
நெருப்பில் ஒன்றும்
காற்றில் முக்காலும்
வெளியில் அரையும் ஆக நிறைந்தோடும்.

இப்படியாகிய பூதியங்கள் கூறுகொண்ட ஐந்து கடிகைகளும் ஒவ்வொரு பக்கத்திற்கும் சிதையாதோட வேண்டும். இதைவிடக் குறைந்தாலும் வளர்ந்தாலும் தேகநலியாம். சரம் வயப்பட வழிதேட வேண்டும். தேடினால் முன் சொன்ன பயன் உண்டு. நாடியொன்றிற்கு ஐந்து நாழிகை பூதியங்களின் அளவே சிதறாமல் நடப்பிக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் தேக நலியே வரும்.

மூன்று நாடிகளின் முறைமை!- சூரியன் சந்திரன் சுழுமுனை என்னுமிம் மூன்று நாடிகளுள்ளும் வாழ்வு, கேடு, நிலைமையென்கிற மூன்று கரும நிதானப் பலன்களைச் கேட்குமிடத்தில் சூரியனாகில் நன்மையும் மிகுந்த செல்வத்தையும் அடைவார்கள். சந்திரனாகில் கேடு முதலிய கண்ணியக் குறைவாகும். சுழுமுனையாகில் முன் உள்ளபடி ஏறாமல் குறையாமல் நிறைவாகும்.
அன்றியும் தேவாதி தேவர்களாலே வசீகரிக்கப்பட்டவனாகிலும் ஜெயாபஜெயத்தில் முன்னிலையில் வருவோமென்ற உறுதியாக சொல்லினுஞ் சந்திரனே அதிகமாக இயங்கிடின் வரார். சூரியனே அதிகப்படில் வருவர் எனக் காண்க.
சந்திரன் அதிகமாக நடந்தால் நமக்குக் கேடு வருவதோடல்லாமல் பந்துக்களுக்குமதுவே வரும். சத்துருக்கள் தோன்றி வருவது தப்பாது. சந்திரனில் போக வேண்டிய காரியமல்ல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சந்திரன் நடந்தால் சரத்தை நீள வெளிவிட்டு அப்பக்க காலையே இரண்டு மூன்றடி முந்தி வைத்துகொண்டு போக வேண்டும். சூரியனில் போக வேண்டிய காரியமல்ல்லாத காரியார்த்தமாய்ப் போகும்போது சூரியன் நடந்தால் அச்சரத்தை ஏற உள்ளே வாங்கி அவ்வலக்காலை முன்னிட்டுக் கொண்டு போக வேண்டும். அப்படிப்போனால் போங்காரியம் நன்று.

சர ராசியெனப்பட்ட சூரியனையும், திர ராசியெனப்பட்ட சந்திரனையும், உப ராசியெனப்பட்ட சுழுமுனையும் மற்றவற்றின் பயன் முதலிய கூறுபாட்டையும் பங்கயாசனத்திலிருந்து பிரிவற்றுச் சிவயோகஞ் செய்தாலல்லது நன்குணர்தலரிது. உயிர்பாழ் போகாது. சீவன் முத்தனுக்கு அது மார்க்கம். இல்லையேல் அவம் போகுமென்றறிக.


பிராணனுக்கு அழிவில்லை!

கிழமை ஏழும் தவறாமல் மேற் சொன்ன நாழிகையும் கோணாமல் திக்கு நோக்கிச் செல்வதுடன் பிராணாயாமமும் மாறாமல் நிகழ்ந்து வருமானால் இயமன் வரான். பிராணனுக்கு அழிவில்லை. சீவன் முத்தனாய் வாழ்வான். அஷ்டமாசித்தியும் அவனுக்கு சித்திக்கும்.

சனி வியாழன் பலன்!

வளர்பிறை வியாழனுக்கு சந்திரனும், தேய்பிறை வியாழனுக்கு சூரியனும் தப்பாமல் நடந்து கொண்டே வந்தால் நிறைந்த பேறுண்டாகும். சீவன் முத்தனாவான். தளர்வின்றி வாழ்வான்.
சனிக்கிழமை இரவிலும் பகலிலும் சந்திர சூரிய சரங்கள் மாறுபாடில்லாமல் நடந்தால் இவ்வுலகமெங்கும் மெச்சத்தக்க கீர்த்தி வந்துறும்.

அயன சரம்!

சரம் பார்க்கிறவனுக்கு சென்ற நாட்கள் போக மற்றும் நின்ற நாட்கள் எவ்வளவு என்னும் கருத்துக் கொண்டு பார்ப்பது எவ்வாறெனில் அது அயன சரமாகும்.
தைமாத முதல்தேதியில் உத்தரயணகாலம்
ஆடிமாத முதற்தேதியில் தக்ஷிணாயன காலம்
இவ்வயன காலத்திற்கு முன்னாள் பகலில் ஒரு பொழுதன்னமுண்டு தத்துவங்களைப் பரிசுத்தமாக்கி தேகம் மெலிவதனால் மனதிற்கும் மற்ற வாயுவாதி காரணங்களுக்கும் வரும்மிடையூற்றினை ஒருவி தைமாத முதற்தேதியில் பொழுதுவிடிய ஐந்து நாழிகையிருக்கையில் பார்க்கும்போது சரம் வாரம் திதி நட்சத்திரங்களைத் தள்ளி இடப்பக்கத்திலுதித்த சரம் ஐந்து நாழிகைக்கு சிதறாமல் ஓடுவதைப் பார்க்க வெண்டும்

இதேபோல் ஆடிமாத முதல் தேதியில் பார்க்க வேண்டும் அப்போது சரம் வலப்பக்கத்திலோடும். அப்படியோடிய சரம் முன் சொன்ன வண்ணம் ஐந்து நாழிகைகளுக்குச் சிதறாமலோடினால் சரம் பார்க்கிறவன் தான் செய்யும் பிராணாயாம உதவியினால் அன்று தொட்டு நூறுவருஷ காலம் வாழ்ந்திருப்பான்.

இதுவன்றிக் குறைந்தால் அவ்வைந்து நாழிகையை நூற்றொருமா ஐந்தாக நூறாக்கி குறைந்த நாழிகை ஒருமாவோ இரண்டு மாவோ அல்லது அதன் மேற்றோகைப் பட்டவையோ அதற்கு ஒவ்வொரு வருஷத்தை கூட்டிப் பார்த்து குறைந்த ஒவ்வொரு மா நாழிகையின்மேல் கணக்காக்கிக் கொள்ளவும்.

சரம் முழுவதும் தப்பி இடத்திற்கு வலமானால் வலத்திற்கு இடமானாலும் அவனுக்கு க்ஷீண காலம் என்க.

போசன விதி!

சரம் பார்க்கிறவன் சூரியகலையியங்கி வருகிற மட்டும் போஜனம் இல்லாமல் எதற்காகவும் காக்க வேண்டியதில்லை. சந்திரன் நடக்கும்போதும் சாப்பிடலாம். உப்பு, கசப்பு, காரமாகிய பண்டங்களை வைத்துக் கொண்டு தாக பாணத்தை நிறுத்தியுண்ண வேண்டும். சொல்லியபடி சூரியன் நடந்தால் நெய், பால், புளித்தல், தித்தித்தல், துவர்த்தலான பண்டங்களை சாப்பிடலாம். தாகப்பாணம் அப்போதே செய்யலாம். சந்திரனுக்கு அப்போது கூடாதாகிலும் பின்பு சூரியன் நடக்கையில் சாப்பிட வேண்டும்.. இது மாறினாலும், ஆத்திரத்தாலும், ஆசையினாலும் சூரியனுக்காகக் காத்திராமல் அடுத்தடுத்துச் சந்திரன்தானே என தின்று வந்தாலும் நலியாம். இப்படிச் சாப்பிடுகிற உணவு அவ்வயிற்றிற்கு பாதிதானாகும். மிஞ்சலாகாது. மற்றப் பாதிக்குச் சலம் காலாகக் கொண்டு தச நாடிகளையும் பிராணாயம முன்னிலையில் சுத்தி செய்து ஏகாக்கிர சித்தனாய் சரம் பார்க்க வேண்டும்..

சரத்தை வயப்படுத்தும் மார்க்கம்!

சரம் பார்க்கிறவனுக்கு அனுபவம் இந்நூல் சொல்லியபடி வருமா! மற்ற விதிப்படி பிறழாது போஜனமுறை ஒத்துக்கொள்ளுமா! அதிகமானலும் குறைவானும் நோய் வருமா! எளிதாக சரியாய் வருமா! வராதெனில் அவனெப்படி நன்மை அடைவான்! எனக் கேள்வி எழுப்பினால் நன்றெனவும் தீதெனவும் ஊழின்படி தெறிந்தோதுவன் என ஐயமுற வேண்டியதில்லை.
சரம் பார்ப்பான் பரம்பார்ப்பான் என்பதுபோலச் சரத்தை கணக்கின்படி அறிந்து பார்க்கிறவனுக்கு எந்தக் காரியமானாலும் தப்பிப்போகாது. அவனைக் கண்ட பேர்களுக்கு நினைத்த காரியமெல்லாம் முடியும்.
பிருத்துவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதியங்களின் கூறு கூடிய வாயுவினைப் பாழ்போகாமல் மனவறிவுடனேகட்டி ஆறாதாரத்திலுள்ள பரிசினையறிந்து தசநாடிகளுக்கும் முதல் நாடியாகிய பிராண நாடியினின்று மற்றங்கிருந்து உதித்தோடும் சந்திரன் சூரியன் அக்கினி எனும் மூன்றினுடைய குணங்களையும் பார்த்தால் கைக்கனி போல் இலேசில் தெரியவரும்.

சாயா புருஷ தரிசனம்!

பூமியிலே மேடுபள்ளமில்லாத இடத்தில் ஆகாயத்தில் மேகமறைவு இல்லாமல் வெயில் காயும்போது தன்னிழல் ஐந்து முதல் பத்தடிக்குட்பட்ட தருணத்தில் தான் அந்நிழல் முகமாய் நின்று கைகளிரண்டையும் தொங்கவிட்டுக் கண்களிமையாமல் அந்நிழலைக் கழுத்து, கைகள், கால்கள் இவ்வுருப்புகளுள் ஒன்றைப் பார்த்து அப்படியே கண்கள் இமையாமல் ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே அவனுருவம் தோன்றும்.
அவனுருவம் பொன்னிறமாயிருந்தால் அவனுக்குச் செல்வம் வரும்.
வெண்மையாயிருந்தால் பிராண பயமில்லை.ஆயுள் வளரும்
செம்மையாகில் ஆயுள் தேயும். அதர்கொரு குறைவு வரும்
கருமையாயிருந்தால் நலி.
அவ்வுருவில் கைகளாவது கால்களாவது தோன்றாமலிருந்தால் ஆறு மாதங்களுக்குள் மரணம்.
தலையே தோன்றாது முண்டமாய் இருந்தால் மூன்று மாதத்தில் மரணம்.
இந்த சாயா புருஷ தரிசனத்தை இப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன்னிற்கும் அந்நிழல் தன்னுடன் பேசும். பேசினால் அதன் முகாந்திரமாய் அஷ்டமா சித்திகளைப் பெறலாம். பின்னும் சில நாட்களில் அந்நிழல் ஓர் ஆளுருவம் ஆகி தன்னுடனே திரியும். படுத்தால் படுக்கும் எழுந்தால் தானும் எழும்.. இவனுக்கு வரும் நன்மை தீமைகளை முன்னதாகவே இவனுக்கு உணர்த்தும்.

மரண இலக்கணம்!

வானிற் கலங்கமில்லாமல் சூரியன் எரிகையில் மரநிழல் வீட்டுத் தாழ்வார நிழல் இப்படிப்பட்டதொரு நிழல் தனக்கு முன்னிருக்க சரம் பார்க்கிறவன் பின்னின்று வாய் நிறைய நீர் கொண்டு அந்த நிழலருகில் துகள்கள் பறந்து அணுபோலப் பறக்க ஒரே சரமாய் உமிழ்ந்து அத்துகள்களைப் பார்த்தால் அதில் இந்திர தனுசு அமைந்து வர்ணங்களுடனே தோன்றினால் பார்க்கிறவனுக்கு அன்று முதல் ஒருவருஷம் வரை சாவில்லை. அதுவரும் வருவதில் அவ்வில் நிறம்மாறி அங்கு ஒரு பொண்ணுரு தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பான்.

சந்திர் சூரியன் பார்க்கும் இலக்கணம்!
ஒரு செம்பு அகலில் பசுவின் நெய்யை உருக்குவிட்டு அதில் பூரண சந்திரனை அலலது அமாவாசையின்போது சூரியனைப் பார்த்தால் அதில் தோன்றுகின்ற சந்திரன் அல்லது சூரியன்
வெண்மை செம்மையெணில் வாழ்வுண்டாம்.
பொன்மையாகில் கேடு
பசுமையானால் நோய்
கருமையோ சாவு வரும்
அப்படிச் சாவு வருவது எப்போது என்றால் தென்புற வட்டங்குன்றந்தால் ஆறு மாதம், வடப்புறம் மூன்று மாதம், கீழ்புறம் ஒருமாதம், நடுவே கொள்ளையாயிருந்தால் பத்து நாள்.

நிறைமதியம்,குறைமதியம் சரீர பழுது - மரண இலக்கணம்!
கை கால் நெற்றி கன்னம் இவை அடர்ந்து துடித்தால் மரணகாலம் வந்ததென்று அறிக.
கை துடிக்கில் ஒருவருஷம்
கால் ஆறு மாதம்
நெற்றி மூன்று மாதம்
கன்னம் பத்துநாள்
இதைத்தவிர காது கேளாவிட்டால் ஏழுநாளில் மரணம்
கண் பார்வை மங்கினால் மூன்றுநாள்
வாய் குழறிப் பேச்சழிந்தால் இரண்டுநாள்
இதையறிந்து கடவுளுடைய பாதங்களை நினைந்து போற்றினால் இவ்வினைகள் இராது.
சூரியன் நடக்க வேண்டிய நாளிற் சந்திரன் நடந்து, சந்திரன் நடக்க வேண்டிய நாளில் சூரியன் நடந்து இப்படியே மாறுபட்டு ஒருவாரம் முழுவதும் நடந்தால் அவன் மரித்து போவான்.

உசுவாச நிசுவாச பலன்!

உசுவாசம்- ரேசகம் உடலைவிட்டுப் போகிற வாயுவே சிவம். நிசுவாசம்-பூரகம்- உடபுகுவது சத்தி. சரம் வெளிப்பட்டு போவதெல்லாம் விடமுண்பதற்குச் சரி. சரம் உட்பட்டு போவதெல்லாம் அமுதமுண்பதற்குச் சரி.. சரம் உள்ளே போகும்போது ஒருவன் சொன்னது அல்லது நினைத்த காரியம் ஆகும். வெளிச் செல்லுகையில் ஆகாது. அந்த வாயு கும்பகத்தடங்கினால் உண்டவிடம் கெடுமெனச் சரி. நடு நாடிவழிப் போமாகில் பாவமென்பதில்லை.
ஒருவன் வந்து குறி கேட்கின் அவன் முன் சொல்லிய எழுத்தை எண்ணிப் பார்க்கையில் ஒற்றையாகில் சிவன் கூறென்றும், இரட்டையாகில் சத்தி கூறென்றும் கொள்ளவேண்டும்.
சரம் வெளியே போகும்போது ஒருவன் வந்து இன்னான் போவானோ எனில் போவான். வாரான். உட்புகையில் வருவான். சரம் போகும்போது வருவானோ என்றும் புகும்போது போவானோ என்றும் மாறுபட்டு வினவில் சரிப்படாது. போகும்போது போவானேயல்லது வாரான். புகும்போது வருவனேயல்லாமல் போகான். சரம் போகும்போது நோய் தீருமோ எனில் தீராது. புகும்போது தீரும் என்க,

இதுவுமது!

திசை, ஆண், பெண், சூன்யம், பூரணம், எழுத்து இவை முதலாய்ச் சொல்லப்பட்ட இச்சர நூலில் நுட்பப் பொருள்களைக் கண்டு இஃது இன்னதென்றும் அஃது இன்னதென்றும் நிரூபிக்க வல்லவனே சரம் பார்க்க வல்லவன்.
நல்ல பிரமண குலத்தவராய் பிறந்தாலும் அல்லது இழிந்த குலத்தவாய்ப் பிறந்தாலும் இச்சர நூலை நன்கு உண்ர்ந்து இதன் நடை தப்பாமல் பார்ப்பவரே பிராமணர். சராசரங்களினுடைய நன்மைகளை அறிந்தவராக இப்பூமியின் கண் அவரே தேவரென யாவராலும் பூசிக்கப்பட்டு வாழ்ந்து பரம் பொருளிற் சாயுச்சியடைவர். பார்க்கமாட்டாதவர் இழிந்த குலத்தினராய் புன்பிறப்பு பிறந்து கொண்டிருப்பார்கள்.
இழிந்த குலத்தில் பிறந்தவனானாலும் ஒரு முகாந்திரமாய் இச்சர நூலைச் சொல்லக் கேட்டு இதனை உணர்ந்து இவ்வழி நடப்பவன் யாவனானாலுமவன் யாமேயாவான். வேற்றுமையில்லை. நெருப்பு தன்னை அடைந்தவற்றையுந் தன்னுருவக்கிக் கொள்ளும் இயல்பைப் போல அவன் யாமே. அவமாய் பிறந்திறவான். இன்னும் விசேஷமாய் சொல்லப்போனால் சடாபாரத்தில் நாமணிந்திரானின்ற சந்திரன் போன்று ந்ம்முடி மேல் வீற்றிருப்பான்.

#####

திங்கட்கிழமை, 01 June 2020 10:31

ஞானம்!

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

ஞானம்!


ஞானம் என்றால் அறிவு. ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்கு அதைப்பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்வது ஆதார அறிவு. மேலும் அதைப்பற்றித் தீவிரமாக நுண்ணுணர்தல் ஞானம் ஆகும். ஞானத்தை அடைந்தால் அதில் வல்லவராக ஆகலாம். உயிர்கள் வாசி என்ற காற்று எப்படி உயிரின் உடலுக்கு ஜீவாதரமாய் இருக்கிறது அதை எப்படி எப்படி கையாண்டு உயிரின் உடலை பயனுள்ளதாக மற்றிக்கொள்ளமுடியும் என்பது பற்றிய ஆழமான அறிவைத் தருவெதே இந்த ஞானம் என்ற பகுதி.
கீழ்கண்ட நூல் ஒவ்வொன்றும் அரிய பெரிய முத்துக்களாகும். இதில் பயிற்சி பெற்றவர் சித்தி பெறலாம். ஜீவன் முத்தராகலாம். முடிந்த அளவு கற்ரு தேர்ந்தபின் ஒரு குரு ஆசியுடன் பயிற்சியை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும். இதை உயிர்கள் அறிந்து ஆனந்தாதி ஆனந்தம் அடைய வாழ்த்துக்களுடன் குருஸ்ரீ பகோரா.

ஞானம்!
#####
ஞான சரம்!
சிவயோக சாரம்!
நிஜானந்த போதம்!
#####

திங்கட்கிழமை, 18 May 2020 09:36

பக்குவன்!

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

பக்குவன்!

1690. வழிபாடு செய்யும் இயல்புடைய மாணவர் வேத ஆகமமுறையை உணர்ந்து குற்றம் இல்லாத மேலான குருவை நாடி அறிவர். இத்தகையவர் முத்தியை விரும்பும் அறிவுடையவர். முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழியும் வழியைத்தான் அறிவர்.

1691. இறைவா உன்னை விரும்பி என் பரபரப்பைக் கைவிட்டேன். உலக வாழ்வில் அலுத்துப் போனேன். இனி நான் எவருடனும் சேரமாட்டேன். எளியோனின் வினையைக் கெடுத்து என் கவலை நீங்கும்படி மாற்றி என்னை உடையாய் மகிழ்வுடன் என்னை ஆட்கொள்வாயாக.

1692. மாண்வன் பரபரப்புடன் இருக்கின்றபோதே மேலான ஞானத்தை அளிக்கின்ற ஒளியை ஆசாரியன் சகசிரதளத்தில் பொருந்தித் தியானைத்துச் சிதறும் மாணவனின் சிந்தையை நிலை பொறுத்தி தன்னுடன் பொருந்தும் மாணவனுக்கு உபதேசத்தை அளிக்கலாம்.

1693. நீ அடைந்தால் நல்ல குருவை அடைக. அவரிடம் உன் உடைமையாய் உள்ள பொருளையும் உடன் உடலையும் உயிரையும் காணிக்கையாகத் தருக. எவ்வளவு காலமும் இடையீடு இல்லாது அவர் காட்டிய வழியில் நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே உண்டாகும்.

1694. சுவாதி நட்சத்திரம் விசாக நட்சத்திரம் ஆகிய இரண்டும் விருச்சிக கடகமும் ஆகிய இரு ஓசைகளும் உபதேசத்திற்குரியதாக்ச் சொல்லப்பட்ட நாட்கள் அக்காலத்தில் குருமுகமாய் உபதேசத்திற்குரியவனை என்ற முறைமையை உணர்வதன்றி இதற்குரிய காரணமும் முதலும் அறிய இயலாது.

1695. நல்ல குருவினது உபதேசத்தைப் பெற்ற பெரிய மணியை போன்ர தூய சிந்தனையில் ஒளியுடைய இறைவன் எழுந்தருளிய போதே விருப்பம் உடையவரின் வலிமை மிக்க வினையானது நீங்க இறைவனின் திருவடி எனும் நாத உணர்வு அருளைப் பெறலாம்.

1696. சத்துவ குணம் உடையவனாய்ச் சிவத்தை தியானித்து ஆத்திகர்களால் ஏற்கப்பட்ட ஏதேனும் ஒரு துவைத நெறியைப் பின்பற்றியவனாய் வினையால் தொடரப்பட்ட பிறவிக்கு அஞ்சி மேன்மையுடைய அறநெறியை ஏற்பவன் நல்ல பக்குவம் வாய்ந்த மாணவன்.

1697. உலகில் நிலை பெற்றவனாய் அழியாத பொருள் எவை நிலையற்றதாய் உள்ளது எது என சிந்தித்து உணர்ந்து சிவத்தையே சிந்தித்து சிவத்தின் சத்தி பதியப் பெற்று சிவத்தை உணர்ந்த நிலையான பொருளான சிவத்திடம் சிவஞானத்தைப் பெற்றுப் பணிந்து ஆனந்த வடிவமான சிவசத்தியினது விருப்பத்துக்கு ஏற்றபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்பவனே நல்ல மாணவன்.

1698. குருநாதன் சிவபெருமான் இன்று அருள்வான் என குருவின் வடிவைத் சிரசின்மீது தியானிக்க வஞ்சமுடைய பிறவியைக் சினக்கும் அருட்சத்தியால் அருளை அடைந்த ஞானம் உடையவனே குற்றம் இல்லாத மாணவன் ஆவான்.

1699. மாணவன் சிறப்புடைய அனுபவ ஞானத்தில் விருப்பம் கொண்டு இதுவரை உணர்ந்து அறியாத காதல் குருபரனான சிவனிடம் ஏற்பட இதுவரை அமையப்பெறாத ஒழுக்கம் நோன்பு செறிவு அறிவு ஆகிய நான்கும் தன்னிடம் அமையப் பெற்றவன் திருவடி தீட்சைக்குப்பின் ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.

1700. மாணவனுக்கு உணர்த்துவது சத்தி நிபாதம் உடைய வாக்கே ஆகும். பசுக்களுக்கு உதவும் பராசத்தியை நினைத்து ஒன்றோடும் பற்றில்லாத பராபரமான சிவத்தின் எல்லைக்கு மாணவனைக் கொண்டு போய் கிழக்கு தெ’ற்கு வடக்கு மேற்கு என்ற இடங்களில் உள்ள ஐந்து முகங்களை விழிப்படையச் செய்யுங்கள்.

1701. குருவின் திருவடிகளை வணங்கி ஐந்து வகையான வணக்கங்களைச் செய்து ஆன்மாவின் குறையைச் சொல்லி அழியாத குணத்தை அளித்திடும்படி வேண்ட சிறைப்பட்ட உடலையே உண்மை என்று நம்பியிருக்கின்றவன் அகண்ட சிவம் ஆவான். என்பதை உணர்ந்து சில அறிவுடன் ஆன்ம அறிவும் ஒன்றாக்கும் வழியை அறிவிப்பவர்களே சன்மார்க்க உபதேச குரு ஆவார்.

1702. ஆசையை விடும் நெறியே வேதாந்த நெறி ஆதலால் உ;லக வாழ்க்கைக்கு ஏற்றபடி புலன் வழிச் செல்லும் பொறிகளை மாற்றி சித்தாந்த நெறியிலேபோய் விருப்பத்தை விடும் சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்கும் தலையை உடையவனே நன்கு பக்குவம் பெற்ற மாணவன்.

1703. சத்துவ குணம் உண்மை அருள் ஆராய்ச்சி அறிவு தாழ்வு குருவின் திருவடியை நீங்காமை உண்மையான் பரஞானத்தை சிந்தித்து தெளிந்து அறிதல் அற்புதம் உண்டாதல் ஆகிய தகுதியுடைவனே பக்குவம் உடையவன்.

####

திங்கட்கிழமை, 18 May 2020 09:35

அபக்குவன்!

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

அபக்குவன்!

1680. அறிவால் அறியாமையைப் போக்கும் குருவை ஏற்றுக் கொள்ளார். அறியாமையை நீக்காத குருவை ஏற்பர். இது எத்தகையது என்றால் குருடன் ஒருவன் மற்ற குருடனுடன் சேர்ந்து குருட்டுத்தனமான ஆட்டம் ஆடி இருவரும் அறியாமை குழியில் வீழ்வதைப் போன்றதாகும்.

1681. மானிடர் நினைப்பவை எல்லாவற்றையும் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண உடல். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண உடலின் நிழலைக் கூட அணுகமாட்டார். எண்ணங்க:ளால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றவும் அறியார். அறியாமையால் மீண்டும் காமவழியை விரும்பிபோய் எண்ணங்களைப் பெருக்கி கொள்கின்றனர்.

1682. மக்கள் ஏய் எனக் கூப்பிட்டால் என்ன என்று கூட விடை கூறமாட்டார். உலகத்தின் இயல்பு இது. குழந்தையின் வாயில் தாயின் மார்பகத்தை வைக்கப் பால் சுரக்கும். தாயின் மார்பில் எவ்வாறு பல் சுரக்கின்றது என்பதை நம்மவர் அறிவதில்லை. அமுதம் ஊனில் அளித்து உயிரை நிலைக்கச் செய்பவன் உருவம் இல்லாத சிவனே ஆகும்.

1683. உறுதியும் பெருந்தன்மையும் உடையவளே. வாய் ஒன்றைச் சொல்ல மனம் வேறொன்றை எண்ண நீ பிறிது ஒன்றைச் செய்யாதே. முக்கரணத் தூய்மையுடன் இருந்தால் நீ சிவாக்கினியைப் பெற்றவள் ஆவாய் என்பேன், அவ்வாறு தெளிந்தபின்பு என் சொல் பித்தனின் சொல் என யாரும் சொல்லமாட்டார்.

1684. ஐம்பெரும் பாவங்களைச் செய்பவரை அஞ்சும்படி தக்க சமயத்தில் அறிந்து ஒரு மன்னன் மிக்க தண்டனை தந்து நாட்டினின்று கடத்தாவிட்டால் நாடானது வறுமைக்குள் சிக்கி முற்றிலும் பாழாகும்.

1685. தவத்தை மேற்கொண்டவர் தாம் அனுபவிக்கும் கன்மம் சிவத்தினால் அனுபவித்துக் கழிப்பதற்காக அமைக்கப்பட்டது. தேவரும் இதை அறியமாட்டார். தவத்தில் நிலையாய் நின்று அறியாதவர் எல்லாம் பிறவித் துன்பத்தில் அகப்பட்டு வருந்துவர்.

1686. பிறரிடம் சினம் கொள்ளுதல், எதையாவது சிந்தித்தல், செயல்களைச் செய்தல், தின்னுதல், சுவைத்தல், மற்றவர்க்குத் தீமை செய்தல், குறைவு, நிறைவு படுதல், தன் பெருமையைச் சொல்லுதல் இந்த ஒன்பதும் இறைவனிடம் அன்பு கொண்டவர்க்குகு கூடாதவையாம்.

1687. அபக்குவிகள் தங்களுக்கு அனுகூலமானதை அறியமாட்டார். பரமாகாயத்தை காணமாட்டர். தமக்கு அனுகூலமான பர வெளியில் தம் பார்வையைச் செலுத்த மாட்டார். பக்குவம் அற்றவர்களே காவலோடு உள்ள கண் இமைகளை வெளி நோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அக நோக்கத்தை நோக்குங்கள். தொடர்ந்து வரும் இடையற்ற தவிர்க்கும் ஒளியாய் சிவம் உங்களுக்கு இருக்கும்.

1688. அனாதி காலம் முதல் ஆன்மாவுடன் கட்டப் பெற்றது ஆணவ மலம். அதை மாற்றும் வழியை உண்டாக்கி மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பம் உடையவனாகி உலக இயலில் மாறுபட்டு உண்மையான பொருளை நாடி மேன்மையை அடையாதபடி மனஉறுதி இல்லாதவனுக்கு ஞானத்தை தரக்கூடாது.

1689. ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் நீக்கும் வகையை ஆராய மாட்டான். பொய்கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இந்த இயல்பினன் மாணவனாய் ஏற்க்கத் தக்கவன். அல்லன் என்று விலக்கத் தக்கவன் ஆவான்.

#####

திங்கட்கிழமை, 18 May 2020 09:28

ஞான வேடம்! சிவவேடம்

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

ஞான வேடம்!

1668. உண்மையான சிவஞானம் இல்லாதவர் உண்மையான சிவ ஞானியரைப்போல் கோலம் தாங்கினால் நாதத்தை அடைவர். உண்மையான சிவஞானம் உடையவர் சிவஞானியர்க்குரிய கோலத்தைக் கொள்ளாது இருப்பினும் நல்ல முத்தர் ஆவார். சிவஞானப்பேறு உண்டாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் சிவபெருமானிடம் என்றும் நீங்காத பேரொளியை உடையவராய் இருப்பர்.

1669. இழிவான ஞானம் உடையவர் கோலத்தை தாங்கியும் அதனால் பயன் ஏதுமிலை. நல்ல ஞானம் உடையவர் இறையருளில் தோய்ந்து கோலம் ஏற்பதில் கருத்தின்றி இருப்பர். திரிபு உனர்வு கொண்டவர் சமய் காழ்ப்பு கொண்டவர் ஆகியோரிடம் பின் அனுபவ ஞானம் உடைய ஜானியர் வாதிட விரும்பமாட்டார்.

1670. ஆராயின் சிவஞானியர்க்கும் சிவயோகியர்க்கும் பயனில்லாத புறச்சாதனைகள் தேவையற்றவை. அவர்க்கு திருநீறு உருத்திராட்சம், சடைமுடி, ஐந்தெழுத்து எனும் நான்கு புறச் சாதனங்களும் வீணே. உவமை கூற இயலாத பொருளை உள்ளே பொருத்தி வாழ்வர்.

1671. செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கின்ற நாய்போல் சுற்றித் திரிவார்கள். கழுகு போல் ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள் சிவஞானியரோ ஐம்பொறிகளும் உடம்பு அனுபவத்திற்கு ஏற்றவையாக இருந்தும் இன்பங்களை விரும்பாமல் இறந்தவரைப் போல் திரிவர்.

1672. திருவருளால் முனைப்பின்றி அதன்வழி இயங்கும் சிவமெய்யுணர்வு உடையவர் உண்மை அடியார். அத்தகுதி அற்றவர் அடியவர் ஆகார். அவர் அடைந்த சிவக்கோலமும் சிறந்த சிவக்கோலம் ஆகாது. திருவடி ஞானம் பெற்றோரே உண்மை அடியார். அடியார் தன்மையில்லாதவர் ஒருபோதும் மெய்யடியார் ஆகார்.

1673. சிவ ஞானியர்க்கு அழகிய கோலமும் நல்லனவையாகும். தான் கொண்ட கோலத்தின் உட்கருத்தை உணர்ந்து அதன்படி இருந்தால் அதுவே சிவயோகம். அவ்வேடம் ஞானத்தை அளிக்கும் சாதனம் ஆகும். ஞான சாதனம் என்று உணராதவனுக்கு கோலம் மட்டும் பொருந்தும்.

1674. திருவடி உணர்வால் ஞான உ/ணர்வால் சிவன் நிலை அடைபவன் சிவஞானியாவான். நடமாடும் கோயிலினுள் ஒப்ப்பற்ற கோவில் ஆவான். வீணாய் உரையாடாது மோனம் உடையவன். வீடுபெற்ற முத்தன் ஆவான். திருவடிப்பேறு அடைந்த சித்தனும் ஆவான். உண்மைக்கோலம் அற்ற மற்ற தவத்தவர் இவனைப் பேசிட தகுதியற்றவர் ஆவர்.

1675. தன் அறிவு அற்ற தன்மையும் தான் சிவமே ஆகி விளங்குதலும் உலகில் உள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறிகின்றா ஆற்றலும் பக்குவம் வாய்ந்தவர்க்கு பார்வையினாலே அல்லது பரிசத்தினாலே ஞானத்தை வழங்குதலும் பிரண்வ சித்தியும் சிவபதவி அடைந்தவர்க்கு உரியவை ஆகும்.

#####

சிவவேடம்!

1676. சிவனது திருவருளால் அவனுக்கு அடிமையாகிய பொருளான தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்ஒளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிவான அடிமைபூண்ட சிவவேடத்தார் ஆவர்.

1677. உடலில் கொண்ட புறக்கோலங்கள் ஒளிமயமான உயிருக்குப் பயன்படாது. உடலை விட்டு உயிர் பிரிந்தபோது உடலைச் சார்ந்த அறிவற்ற சாதனங்களும் பிரிந்து நீங்கி விடும். உடல் அசத்துப் பொருள். உயிர் சத்துப் பொருள் என அறியாதவர் கடலில் சிக்கிய மரக்கட்டையைபோல் துன்புறுவர்.

1678. ஆணவ மலத்தின் காரியமாவது மயக்கம். அதைவிட்டு அதன் விளைவான இருளையும் அகற்றி உண்மையுள்ள மனம் எண்ணுவதை விட்டு கயல் மீன்போன்ற கண்ணையுடைய பெண்டிரின் கையால் தழுவப் பெறுதலையும் நீக்கி மயக்கம் இல்லாதவருடன் இணங்கித் தமக்கு எனச்செயல் அற்று இருப்பவர் சிவவேடத்தவர் ஆவார்.

1679. மானிடரே பிராண வடிவமாய் உங்களிடம் ஓடுக்கொண்டிருக்கும் குதிரையை கடிவாளம் கைபிடித்து நிறுத்துங்கள்.. கோலம் மட்டும் கொண்டு என செய்வீர். வீண் கோலத்தை கைவிட்டு தலைவனான நந்தி தங்கியுள்ள குருமண்டலத்தில் மனத்தை வையுங்கள். நீங்கள் தேடும் இன்பப் பொருளான சிவத்தை அடையலாம்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:57

தவவேடம்! திருநீறு!

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

தவவேடம்!

1661. தவத்தில் சிறந்து விளங்குபவரே முதன்மையான கோலம் கொண்டவர். பொய்யான கோலத்தைப் பூண்டவர் கொடுமையான கொலை செய்யும் கொடியவர் ஆவார். கீழான செயலையுடையவர் அக்கோலத்திற்குப் பொருத்தம் இல்லாதவர். அக்கோலம் தவத்தால் சிறந்தவர்களின்றிப் பொருந்தாது.

1662. சிவக்கோலம் கொள்வதற்கு உரிய வற்றில் சிறந்தது திருநீறு. காதில் அணிவது தாமிரத்தால் ஆன குண்டலம். கழுத்தில் அணிவது உருத்திராக்க மாலை. இவை வேத ஆகமங்கள் அறிந்தார்க்கு உடைய அடையாளாங்கள்.

1663. சிவயோகிக்கு உரியவை உள்ளாடை கைப்பை, மயில் இறகால் ஆன குல்லா.
சுற்றிய சடை. உடல் முழுவதும் அணியும் திருநீறும் கையில் மண்டையோடு. கையில் பிடிக்கும் கோல் ஆகிய கோலத்திற்குரியன ஆகும்.

1664 .செவியணியான குண்டலம், கழுத்தில் அணியும் உருத்திராட்சம், சிவசிவ என்ற ஒலி, ஊதும் வெண்மையான சங்கு, ஆறுகட்டி, மண்டையான சட்டி, குற்றம் இல்லாத பாதக்குறடு. சிவயோகத்திற்குரிய இருக்கை, குற்றமில்லாத யோகப் பட்டம், யோக தண்டம் என்ற பத்தும் சிவயோகியர்க்குரியவை.

#####


திருநீறு!

1665. பூண்நூல் சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அவற்றின் உண்மை இயல்பை மூடர்கள் அறியமாட்டார். பூண்நூல் என்பது வேதாந்தத்தை உணர்த்துவது. நுண்மையான குடுமி என்பது வேதாந்த் ஞானத்தை புலப்படுத்துவது. சிவபெருமானிடம் ஒன்றிய தனமை உடையவர் பரமும் உயிரும் ஒன்றாகும் என்று இருப்பர். ஒன்றாகாமல் நின்றவர் ஓ காரம் உச்சரித்தால் ஒன்றாவர்.

1666. எலும்பு மாலை அணிந்த சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒலியானது கெடாமல் பூசி மகிழ்சி அடைந்தால் முன் வினைகளும் உங்களிடம் தங்காது. சிவகதியும் உங்களை வந்து அடையும் ஆனந்த மயனான திருவடியை அடையலாம்.

1667. அரச மரம், ஆலமரம், அத்தி மரம் ஆகியவற்றின் சமித்துகள் வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறித் திருநீறாகும். மலம் அற்றவனான சிவத்தின் திருவடியை உணர்ந்து அணுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் உருவமும் மாற்றம் அடைந்து இறைவன் தியானத்தால் உய்ர் குலத்தவர் ஆவர்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:55

அவவேடம்!

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

அவவேடம்!

1655. ஆடமபரத்துடன் சோறு உண்பதையே பயனாகப் பயனில்லாத கோலங்களைப் பூண்டு உலக உயிர்களை மயக்கும் அறிவற்றவர்களே! பொய்யான கோலங்களை கைவிட்டுச் சிவனை நினைத்து ஆடி பாடி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்வுடன் பிதற்றி சிவபெருமானின் திருவடிகளைத் தேடிக் காணுங்கள்.

1656. சிவஞானமில்லாதார் தவத்தை மேற்கொண்டு இந்த நாட்டில் இழிவான செய்கைகளைச் செய்து பிச்சை ஏற்று உயிருடன் வாழ்ந்தாலும் அந்த நாடானது பெருமை குன்றும். இழிவுடைய அவரது கோலத்தை அகற்றுவது இன்பம் தரும்.

1657. இன்பம் துன்பம் என்ற இரண்டும் நாட்டு மக்கள் செய்த நல்வினை தீவினையால் அந்நாட்டிற்கு தகும் என சொல்லுவர். மன்னன் இதனை ஆரய்ந்து நாள்தோறும் நாட்டில் பொய்க்கோலம் கொண்டவரை வழிப்படுத்தினால் நாடு நலம் அடையும்.

1658. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் மேனமை அடையும் பொருட்டு கோலம் கொள்வர் வழிவழி அடிமை செய்யும் குலத்தவர் தெய்வநிலை எய்துவதன் பொருட்டு கோலம் கொள்வர். பழிக்கக்கூடிய செயலைச் செய்யும் குலத்தே தோன்றி பாழான சண்டாளர் கோலம் பூண்டால் கழிக்கக்கூடிய குலத்தவர் ஆவர். இத்தகையவர் நீக்கத்தக்கவர் ஆவர்.

1659. பொய்யான கோலத்தைப் பூண்டு தவம் செய்பவர் நரகத்திற்குப் போவர். பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகமாட்டார். பொய்யான தவமானது மெய்த்தவத்தைப் போன்று உலக இன்பங்களை அளிக்க வல்லது. ஆயினும் உண்மை ஞானத்தினால் மட்டுமே தவத்தின் பயன் கைகூடும்.

1660. வயிறு நிறைய உண்பது ஒன்றையே எண்ணிப் பொய்யாய் தவம் பூணுவர். உண்மையாய் தவ வேடம் பூண்டவர் உயிர் உடலை விட்டு நீங்காமல் இருக்கப் பிச்சை ஏற்பர். பொய்யான் கோலத்தை மெய்யான கோலம்போல் கொண்டாலும் கோலத்தில் உண்மை மேன்மையானவற்றால் அதுவே அவருய்ய பெருவதற்குரிய கோலமாகும்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:54

அருளுடைமையின் ஞானம் வருதல்!

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

அருளுடைமையின் ஞானம் வருதல்!

1645. சிவபெருமானின் அருளானது உண்டாகுமானால் நல்ல செல்வம் உண்டாகும். சிவபெருமானின் அருள் உண்டானால் நல்ல ஞானம் உண்டாகும். சிவபெருமான் அருளில் பெருந்தன்மையுண்டாகும் அவர் பெருந்த்ய்வம் ஆகும்.


1646. சரியை வழி நிற்பவர் தமிழ்நாடும் அதைச் சுற்றியுள்ள கன்னடம் மலையாளம், துளுவம் தெலுங்கு ஆகிய மண்டலங்களில் உள்ள பதிகளை அடைந்து வழிபடின் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என் எண்ணி அலைந்து திரிவர். இந்த உண்மையை தம் உடலில் உணர்ந்து ஒரு பொருளான சிவமே பலசக்திகளாக இருக்கின்றது என அறிந்து எங்கும் போகாமல் இருந்த இடத்திலேயே சிறந்த வழிபாட்டை ஆற்றிப் பெரும் பய்னை அடைவர்.

1647. உலகில் புண்ணியம் பாவம் என இரண்டு உள்ளன. அவை வினை காரணமாக இன்ப துன்பமாய் பொருந்துகின்றன் என்று உணர்வார் சிவஞானியர். உணர்ந்து இவற்றுக்குக் கார்ணமான வினை வேரினை அறுத்து அண்ணலை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

1648. வினைகள் முடியும் காலத்தில் சிவம் தன் சத்தியை ப்திப்பித்து ஆள்வான். அந்த நிலை வராத இடைக்காலத்தில் உயிர்க்கு உயிராய் நின்?று வினைகளை தூய்க்கச் செய்யும். உயிர்க்குப் பின் நின்று பிறவியை நீக்கும், அவன் முன் தோன்றி வீடு பேற்றை அளிப்பான்.

1649 சிவத்தின் அருள் பதிவதால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சில்லர் அவன் அருளால் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் வினை சேராது. சிவனருள் பற்றிச் சொன்னால் சொன்ன மூவரும் சிவவுலகத்தார் ஆவர்.

1650. புண்ணியத்தின் பயன் ஆனவனும் என் தந்தையுமாகிய சிவத்தின் விந்து நாதமாகிய இரு திருவடிகளைப் பொருந்திய போது விளக்கொளிபோல் ஞானம் விளங்கும். ஞானியர் ஆவதும் விண்ணுலகில் தேவ வடிவில் விளங்குவதும் அண்ணலான சிவனது அருளைப் பெற்றபோதே ஆகும்.

1651. உடல் என்ற தேரில் ஏறி மனம் என்ற பாகன் இயக்க அழியும் தத்துவ உணர்வுகளில் தலைப்பட்டு மயங்கும் உயிர்கள் உணர்வில் விளங்கும் ஒலி மண்டலத்தில் அமர்ந்து மலம் அற்ற சதாசிவ குருவின் அருளைப் பெற்றால் அடியவ்ர் கூட்டத்தில் ஒருவனாகி சிவ வடிவு அடையலாம்.

1652. சீவன் உலக ஞானத்துடன் பிறந்தால் எடுத்த உடலிலேயே சிவவுலகு சேரும் அரிய தவத்தை நாடுவர். சிவவுலகத்தில் சிவன் அடியை அடைவர். சிவ உலகத்தில் சிவ சத்தியின் ஆற்றலை அடைவர்.

1653. பகலவனைக் கண்ட சூரிய காந்தக்கல் தீயின் வடிவம் ஆகும். திங்களைக் கண்ட சந்திரக் காந்தக்கல் முத்தினைப் போன்ற நீரின் வடிவம் ஆகும். சக்கியுடன் மோதும் முக்கியைக் கொண்ட சக்கி முக்கித் தீயை உண்டாக்கும் தீயின் வடிவம் ஆகும். அக்னிமண்டலத்தை தன்னகத்தே கொண்ட சிவன் அக்கினித் தன்மையை விட்டு அழகிய சந்திரன் ஒளிமயமாய் இருப்பான்.

1654. நான் தேடும் உறவாய் குருநாதனான சிவத்தை பொருந்தி தேடுவேன். சிவபெருமான் என்று கூடுவேன். கூடி ஒலிக்கும் திருவடிக்குச் செல்வதற்கு உடலை விட்டு உயிரைப் பிரிந்து அறிகின்ற வரையிலே விடமாட்டேன்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 17 May 2020 09:51

தவதூடணம்!

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

தவதூடணம்!

1633. உயிர்க்கு உயிரான பொருளை உள்ளே கண்டபின்பு கற்று அறிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை உடலில் கண்டால் அன்பு செலுத்த வேண்டியதில்லை. தன்னை மறந்த சமாதி நிலை கிட்டிய பின் இறப்பதும் வேண்டியதில்லை. உள்ளத்தைப் புலன் வழிப் போகாது தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் உடையவர்க்கு மற்ற இடங்கள் சென்று தவம் செய்ய வேண்டியதில்லை.

1634. மெய்ப் பொருளை உணர்த்து, நூல்களின் கருத்துக்களை உணர்ந்து அடங்கினால் கற்க வேண்டிய தேவை இல்லை. மெய்ப்பொருளை அறிந்து சிவத்துடன் கூடினால் நாத சம்மீயமும் வேண்டியதில்லை. இப்படி நிற்பவர் உள்ளம் அசுத்தம் இல்லாமையால் தூய்மை செய்யும் செயல் வேண்டா. சித்தம் எண்ணுவதை விட்டபோதே சித்தமும் வேண்டியதில்லை.

1635. தவத்தின் பயனை அறிபவரே உண்மையான தவத்தைச் செய்பவர்கள் ஆவார்கள். இத்தன்மை வாய்ந்தவர்களே உண்மையை அறிந்து மாணவனுக்கு எடுத்துச் சொல்லும் உண்மையான குரு ஆவார்கள். விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சிறந்தவர்கள்.

1636. திருவருளுடன் கூடி நிற்கும் தவத்தைச் செய்து ஒலிக்கும் நாத வடிவான திருவடியை கண்டேன். நீண்டகாலம் அந்நிலையிலிருந்து தேடிச் சிவசத்தியை அடைந்தேன். பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி நிற்பதே தவம். மாறுபட்டு பொறிகள் வழி மயங்கிய் உயிர்கள் எத்தகைய தவம் உடையவர்.

1637. உள்ளத்தில் சங்கற்பத்தால் ஆன பெரிய கடலாய் உள்ள ஏழினையும் கடந்து தவத்தவர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பவர் பிறப்புக்கு வரமாட்டர். அத்தவம் உடையவர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தை தன் முகத்தின் முன் கண்டு சிவப்பேறு அடையக்கூடும்.

1638. உள்ளம் என்ற உறைக்குள் உள்ள ஞான் வாளை உருவி செருக்கு சினம் முதலியவற்றை அறுத்து உலகியலை விட்டுச் சிவத்துடன் வேறுபாடின்றிப் பொருந்தி ஞானேந்திரியங்கள் ஐந்தும் வெளிச் செல்வதை தடுத்தால் தவத்தில் காணும் சிவ ஒளி தன் ஒளியாகும்.

1639. சீவர்களின் அறிவில் பொருந்தி இருப்பவனை உணர்வது சிவபத்தியை ஏற்படுத்தும். அடியவர் நாள்தோறும் தொழுவதால் வீடுபேறும் கிட்டும். உலகியல் நோக்கை வெறுப்பவன் என்று சொல்லை உண்மையாக்குவதே தவம்.

1640. இலைகளை எடுத்து மலரைப் பறித்தும் இறைவனுக்கு ஆகும் என எண்ணி மாலை கட்டிக்கொண்டிருந்தேன். வான் கங்கையான ஒளியைக் காணவில்லை. மூலாதாரத்திலிருந்து சிரசுவரை செல்லும் சுழுமுனை நாடியைப் பார்த்து எனது உள்ளம் அடங்கியது. சிரசில் சந்திரக்கலை இருக்குமாறு செய்து தவத்தின் பொருளை உணர்ந்தேன்.

1641. இறைவன் படர்ந்த ஒளிக்கிரணத்தையுடைய அன்பர்க்கு துன்பம் வராத வண்ணம் காத்தருள்வான். துன்பம் வராதபடி செய்தவரின் தவத்தை ஆராய்ந்து உடலை மீண்டும் பெருமை சேர்ப்பது அவரது மன ஒருமைப்பாட்டால் ஆகும்.

1642. நூலைக் கற்று அறியாமல் பொறுமையுடன் தவம் செய்யாதவர் வயிற்ற்குக்கு உணவு தேடி வருந்தி அலைவது ஆற்றில் உள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் குட்டியான கரடிக்கு முன் அடைந்து வருந்துவதைப் போன்றதாகும்.

1643. சிவயோகத்தால் சிவக்கனி பழுக்குமாறும் அதை உண்ணுமாறும் உயிர் பலமுறை உலவுகின்ற உடம்பில் உயிர்காற்றை சுழுமுனையில் நிறுத்த வல்லார்க்கு மூச்சு இயங்கும் தன்மை கெட்டு மேல் முகமாக இருக்கும் சகசிரதளத்தில் ஒன்றி நின்றுவிடும்.

1644. சித்தம் இடைவிடாமல் சிவத்தை நினைத்து சிவமாவர்க்குச் செய்ய வேண்இய தவம் ஒன்றும் இல்லை. சித்தம் சிவமாகியவர் உறவு உண்டானால் அவர்களின் சித்தம் சிவமாய் சித்தியும் முத்தியும் உண்டாகும். சித்தம் சிவமாவது முன் தவத்தின் பயனாகும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17198988
All
17198988
Your IP: 162.158.78.210
2020-06-04 09:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg