Print this page
புதன்கிழமை, 16 May 2018 19:36

ஒரேநாளில் தரிசனம்

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

$$$$$

கடவுள் உண்டா! எங்கே!

கடவுள் உண்டா! எங்கே! பார்க்க முடியவில்லையே காட்டு பார்க்கலாம்! என்று வாதம் செய்வோரை என்ன வென்று சொல்வது. இந்த வாதம் அவர்களது அறியாமையை சொல்கின்றதாகும். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்று தொல்காப்பியம் பகர்கின்றது. உலகம் அறிவு நிறைந்த ஆன்றோரைக் குறிப்பதாகும். அந்த ஆன்றோர்கள் உண்டு உண்டு என்பதை இல்லை என சொல்பவனை என்னவென்று அழைப்பது! மனநிலை சரியில்லாதவன் என ஒதுக்கவேண்டும் என்று வள்ளுவம் கூருகின்றது.

கடவுள்-கடவுகின்றவன், கடவுதல்-செலுத்துதல். உடம்பை உயிர் செலுத்துகின்றது. உயிரை கடவுள் செலுத்துகின்றார். உடம்பிற்குள்ளே உயிர். உயிருக்குள்ளே கடவுள், உயிருக்கு உயிராய் உள் நின்று உயிர்களைச் செலுத்துபவன் கடவுள். ’நீராயுருக்கி என் ஆருயிரய் நின்றானே’ என்றார் மாணிக்கவாசகர்.

ஒரு கார் ஓட்டுபவனின்றி எப்படிக் கார்த் தானே ஓடும். உலகம் ஓர் நியதிக்குள் வட்டமிட்டு இயங்குகின்றது. காலம் தவறாது சூரியனும் சந்திரனும் தோன்றி தோன்றி மறைகின்றது. நட்சத்திரங்கள் வானில் உலவுகின்றன. மழை பொழிந்து அருவியாகி நீர்வீழ்ச்சியாகி ஆறாகி கடலில் சங்கமிக்கின்றது. மரம் செடி கொடிகள் இலையுதிர்த்து மீண்டும் மீண்டும் தளிர்த்து பூத்துக் குலுங்குகின்றன. எல்லா உயிர்களும் காற்றை சுவாசித்து இயங்குகின்றன. உலகில் உலவும் ஜீவராசிகளின் உயிர் யார் கண்ணுக்காவது தெரிகின்றதா. எந்தவித குழப்பமும் இன்றி இயற்கை தன் விதிகளுக்கேற்ப செயல்களைச் செய்து கொண்டே இருக்கின்றது. இந்த விதிகளை நியமங்களை யார் உருவாக்கிக் கொடுதார்கள்.

ஓர் இயந்திரத்தை தயரித்தவன் அது இயங்கும் விதத்தை நிர்ணயிக்கின்றான். ஆனால் அது பழுதடைய வாய்புள்ளதாக இருக்கின்றது. ஒரு சின்ன இயந்திரத்தின் நிலை இப்படி என்றால் இவ்வளவு பெரிய அண்டங்களை உடைய பிரபஞ்சத்திற்கு நியமங்கள் செய்து கொடுத்தவன் மிகப் பெரிய சமர்த்தியசாலியாகவும். தேவர்களுக்குத் தேவனாகவும். எல்லையில்லா சர்வ வல்லமை கொண்டவனாகத்தான் இருக்க முடியும். அவன் எல்லா உயிர்க்கும் தெய்வம். யார் கண்ணுக்கும் தெரிய வில்லையாயினும் உலக உயிர்கள் இயக்கத்திற்கு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவன். ஒப்பில்லா உயர்வான அவனை கடவுள் எனச் சொல்வதில் என்ன தவறு.

பிரமாண்டமான பிரபஞ்சத்தின் இயக்கத்தை நடத்துபவன் யார்! அந்த ஒருவன் அற்புதங்கள் செய்யும் கடவுளன்றி வேறு யாராக இருக்க முடியும். இந்த சாதாரண உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவன் எப்படி சுயநினைவுகளுடன் இருக்கின்றான் எனச் சொல்வது!

தியானம்-தூக்கம்!
பக்திமான் ஒருவர் அரசமரத்தடியில் தியானத்தில் இருந்தார். அப்பக்கம் வந்த ஒரு படித்த இளைஞன் பெரியவரே ஏன் உட்கார்ந்து கொண்டு தூங்குகின்றீர். அரசமரத்து காற்றுதான் நன்கு வீசுகின்றதே நன்றாக நீட்டி படுத்து உறங்கலாம் அல்லவா என்றான். தம்பி நான் உறங்கவில்லை. கடவுளை தியானித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். கடவுளை நீர் பார்த்திருக்கின்றீரா, கையால் தீண்டியிருக்கின்றீரா, அவர் குரலைக் காதால் கேட்டுள்ளீரா இப்படி எதற்கும் இல்லை என்று சொல்லும் அறிவற்ற மூட நம்பிக்கையுள்ளவரே! இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே என்றான்.

கறுப்பா! சிவப்பா!
அப்போது அவன் கையில் ஒரு பாட்டில் இருக்கக் கண்டவர் தம்பி உன் கையில் இருப்பது என்ன என்றார்! தேன் என்றான். அது இனிக்குமா! கசக்குமா1 என்றார். கோபங்கொண்ட அவன் உமக்கு தேன் தித்திக்கும் என்பது கூடதெரியாதா என்றான். தம்பி அது இருக்கட்டும் நீ தித்திக்கும் எனக் கூறியது கறுப்பா சிவப்பா என்றார். அவன் திகைத்தான். தித்திப்பு என்பதை என்ன நிறமென்று சொல்வது. குழம்பினான். தேனின் இனிமையை கண்டவனுக்குத் தெரியாது. அதை உண்டவனுக்குத்தான் தெரியும் என்றான்.

பௌதிகப் பொருளான தேனின் இனிமையை உண்டவனுக்குத்தான் தெரியும் என்று புரிந்த நீ ஞானப் பொருளை அனுபவத்தால்தான் உணரமுடியும் என்பதை நீ புரிந்து கொள்ள வில்லையே என்று அன்புடன் கூறினார். இதையே திருமூலர்,
தேனுக்குள் இன்பம் கறுப்போ! சிவப்போ!
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருத்தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே! என்றார்.

இதைக் கேட்ட இளைஞன் எனக்கு பசிக்கின்றது சாப்பிட்டுவிட்டு வந்து உங்களுடன் பேசுகின்றேன் என்றான். பெரியவர் தம்பி பசி என்று சொன்னாயே அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா! காதால் கேட்டிருக்கின்றாயா! அல்லது அதைத் தொட்டுத்தான் உணர்ந்திருக்கின்றாயா! இப்படி ஏதுமில்லை என்றபோது நீ பசி பசி என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய் என்று ஏன் சொல்லக் கூடாது. இப்போது புரிகின்றதா தம்பி. பசி என்பது ஓர் அனுபவப் பொருள் அதை உணரத்தான் முடியும். அதுபோன்றே இறையையும் அவரது செயலையும் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றார். அடியேன் தவம் செய்து அதை அந்த அநுபவப் பொருளை உணர முயல்கின்றேன் என்றார்.

சிவம் இல்லையேல் சவம்!

இளைஞனுக்கு பெரியவர் கூறுவதில் ஏதோ இருப்பதாக நினைத்தான் ஆனால் அதன் உண்மை புரியவில்லை. ஐயா, என்னைப் பொருத்தவரையில் நீங்கள் சொல்லும் கடவுளைக் கண்ணால் கண்டால்தான் ஒப்புக் கொள்வேன் என்றான். அப்போது அடியவர் தம்பி, 64 அடி நீளமுள்ள இரு பக்க சுவரில் பக்கத்திற்கு நான்கு ஜன்னல்கள். அதன் மேல் கூரை வேய்ந்தால் அதனைக் கூடமென்றோ அல்லது உபயோகத்திற்கு ஏற்றவாறு பெயர் பெரும். அப்படி மேற்கூரை இல்லாமலிருந்தால் அது குட்டிச் சுவர் எனப்படும். 64 அடி நீளமுள்ள ஓர் இடம் சிறுமை பெற்று குட்டிச் சுவர் என பழியடைந்தது. இதனால் அந்த இடத்திற்கு சுவர்களால் பெறுமை இல்லை. மேயே வேயப்பட்ட கூரையினால்தான் பெறுமை என்பது புரிகின்றதா என்றார்,

சிவம் என்றால் பெருமை அடையும் இச்சொல் சிவத்திலுள்ள சி-ன் கொம்பு எழுத்தை அழித்துவிட்டுப் பார்த்தால் சவம் என்றாகும். ஒரு கோடே இங்கே பெருமையாகின்றது. அக்கோடில்லாமல் அச்சொல் சவமாகி சிறுமை அடைகின்றது. உயிர்களின் உடம்பில் சிவம் இருந்தால் அது உடல் ஆன்மா எல்லாம். அஃதில்லையெனில் அது உயிரற்ற ஆன்மா இல்லாத சவம்.

குருவருள்! திருவருள்!

இளைஞனே! நீ படித்தவன். அறிவாளி. நீ உன் உடலை முழுமையாகப் பார்த்திருக்கின்றாயா என்றார். பார்த்திருக்கின்றேன் என்றான். தம்பி நீ சொல்வது தவறு! உன் கண்ணால் உன்னை முழுவதும் பார்க்க முடியாது. நீ உன் முகத்தைப் பார்த்திருக்கின்றாயா! உன் முதுகைப் பார்த்திருக்கின்றாயா! உன் ஸ்தூல உடலின் உருப்புக்களைப் பார்த்திருக்கின்றாயா. இரத்த நாளங்களைப் பார்த்திருக்கின்றாயா! இல்லையே! அப்படியென்றால் நீ சொன்னது சரியில்லைதானே! என்றார். குழம்பி நின்ற இளைஞனை நோக்கிய அடியவர், தம்பி! நீ உன் உருவை முழுவதும் பார்க்க முன்னும் பின்னும் இரு நிலைக் கண்ணாடிகள் தேவை அப்போதுதான் உன் உருவத்தை முழுமையாக கண்ணாடிமூலம் நீ பார்த்துக் களிக்கலாம் என்றார் அன்புடன். இதை ஒப்புக் கொண்டான் இளைஞன்.

உடலைப் பார்க்க இரு கண்ணாடிகளின் உதவி தேவை போன்றே கடவுளைக் காண வேதாகமத்தில் விளைந்த குருவருள் மற்றும் திருவருள் என்ற இரண்டும் வேண்டும். இவைகள் கடைகளில் கிடைப்பதன்று. இறைவனின் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதைக் குருவருள் கொண்டுதான் அடைய முயல வேண்டும். பருத்தி பஞ்சு அக்னியில் எரிவது. அதை அக்னி நட்சத்திர வெய்யிலில் வைத்தால் தீ பற்றாது. அங்கு தீ உண்டாக சூரிய ஒளியைக் குவிக்கும் சக்தியாக ஒரு கண்ணாடி தேவைப்படும். அதுபோன்றே இறையருளை குவித்து உயிர்களுக்கு வழங்க ஒரு குரு கண்டிப்பாகத் தேவை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் இறைவன் எனப் பெயர் பெற்றது. அந்தக் கடவுளை காணும் வழியைக் காண்பதுதான் அறிவுடமை. அதை விடுத்து நான் என்ற அகந்தையில் முரட்டுப் பிடிவாதமாகப் பேசுவது நீ கற்ற கல்விக்கு உகந்தது அல்ல. அது அறிவுடைமயும் ஆகாதது.

மெய்ப்பொருள் காண்பதறிவு!

எப்பொருளை எப்படி அறிய வேண்டுமோ அப்படித்தான் அறிய வேண்டும். நறுமணத்தை நாசியினாலும் இனிய ஒலியை செவியாலும் உணர்தல் வேண்டும். அதை விடுத்து மணத்தை செவியாலும் ஒலியை நாசியாலும் அறிய முற்படுதல் முட்டாள் தனத்தின் எல்லை! சுவையை-நாவினாலும், ஒளியை-கண்ணாலும், ஊறு என்பதை உடலாலும், ஓசை என்பதை செவியாலும், நாற்றம் என்பதை நாசியாலும் உணர்தலே ஐம்புலன்களின் இயற்கை நியதி. பிரபஞ்சத்தின் அதிபதி கடவுள் என்றாலும் இந்த ஐம்புலன்களால் அவரை அறிய முற்படுவது அறிவன்று.

மனத்தாலும், நூலறிவாலும் ஆண்டவனை அறிய முடியாது. அனுபவத்தால் உண்டான மெய்யுணர்வு என்ற அறிவாலேயே அறியப்படுதல் சிறப்பு. இதைத்தான் ‘வாசித்து காணாது’ ‘அறிவாலறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவேனே” என்றார் அருணகிரியார்.

தொலைவில் இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியாது. தொட்டபெட்டா சிகரத்தின் மேலிருந்து பார்த்தால் மேட்டுப்பாளையம் தெரியும். கோயமுத்தூர் தெரியாது. அதற்காக கோயமுத்தூர் தெரியவில்லை. கோயமுத்தூர் என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிட முடியுமா! ஒரு பொருளை கண்ணுக்கருகில் வைத்தாலும் தெரியாது. தொலைவில் இருந்தாலும் தெரியாது. திரைக்கு அப்பால் உள்ளதும் தெரியாது. பெரிய பொருளின் அருகில் சிறிய பொருள் தெரியாது. அதிக ஒளியில் சிறிய ஒளி வெளிச்சம் பெறாது. பாலில் கரைந்த சக்கரையும், நீரில் கலந்த உப்பும் மறைந்துவிடும். சுவைத்தால் தான் உணரமுடியும். மிக நுட்பமான பொருள்கள் புலப்படாது, உயிர்களிடமுள்ள அன்பும் அறிவும் செயல்படும் போதுமட்டுமே உணரமுடியும்.

இவைகளைப் போன்றே இறைவன் மெய்யுணர்வுக்கு மட்டுமே புலனாவார். அப்படி உணர்ந்தவர்கள் இந்த உணர்வு தன்மையால் சொல்லமுடியா நிலையில் இருப்பர். ‘உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்’ என்கிறார் சேக்கிழார் பெருமான். ’முகத்தில் கண்கொண்டு காணும் மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’, ஒருவன் அறிவாளி என்றால் அவர் முன்னோர்களும் அறிவாளியாகத்தான் இருந்திருப்பர். ஒரு மூடர் பரம்பரையில் அறிவாளி ஜெனிக்க முடியாது. நன் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள். அவர்கள் சொன்னதை நம்ப வேண்டும். ’கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன்’ என்றார் அப்பர் சுவாமிகள்.

இந்த விளக்கங்களைக் கேட்ட இளைஞன், ஐயனே நான் இதுகாறும் இறையறிவை பெற்றேனில்லை. என் அறியாமையால் தங்களிடம் பலவாறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து என் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அருளுமாறு வேண்டினான்.

கடவுள் அறிவு வடிவமானவர் என்றால் அவரை கோவில்களில் கல்லாலும் உலோகங்களாலும் ஆன சிலைகளாக வைத்து வணங்குவது ஏன்! கல்லும் செம்பும் கடவுளாகுமா! பலர் வீடின்றி தவிக்க ஊரில் பாதி இடத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது இது சரியா! சிலைகளுக்கு விலை மதிக்க முடியாத அணிகலன்கள் எதற்கு! ஆடம்பரத் தேர்த் திருவிழாக்கள் எதற்கு!

பரந்த நோக்கம்!

தம்பி, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாதிரிகர்களுக்கு உபயோகம் ஆகுமிடத்தை வீட்டு மனைகளாகப் பிரித்துக் கொடுத்தால் ஒரு சிலரே அதன் உரிமையாளர் ஆகி விடுவர். தினமும் ஆயிரக்கணக்காணவர்களுக்கு பயன் படுதல் எப்படி, ஒரு சிலருக்குச் சொந்தம் என்பது எப்படி! இதில் எது சிறந்தது நீயே முடிவு கொள்! ஒரு சிலருக்கு என்பது பறந்த நோக்கமாகாது என்பதாலேயே அக்கலத்தில் மன்னர்கள் பலரும் பயனடைய வேண்டும் என்ற பொது நோக்கில் விரிவாக ஆலயங்களைக் கட்டியுள்ளனர்.

மன்னர்களும் செல்வந்தர்களும் தனவான்களும் தங்களிடமிருந்த ஆடை ஆபரணங்களை தங்கள் உறவுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். அவ்வாறு அவர்கள் பார்த்த அழகை மற்றவர்கள் பார்ப்பது முறையன்று. ஆனால் அழகை எல்லோரும் ரசித்து பயனடைய வேண்டும் என்பதால் மன்னர்கள் தங்களிடமிருந்த விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை இறை உருவங்களுக்கு சார்த்தி அனைத்து உயிர்களும் அதைக் கண்டு களித்து ஆனந்தப்பட விரும்பி விலைமதிக்கமுடியாத அணிகலன்களை அர்ப்பணித்தார்கள்.

படித்தவன் எழுத்து என்பதை படிக்காதவன் கோடு என்பான். எழுத்தை உச்சரித்து அதன் ஒலியை கேட்கின்றான் படித்தவன். கல்லாலும் செம்பாலும் செய்த இறை உருவங்களின் மூலம் அடியார்களும், தவசிகளும் ஞானியர்களும் பக்திமான்களும் பரம்பொருளான இறைவனைக் காண்கின்றார்கள் மற்றவர்கள் கல்லாதவன் கோடு என்பதுபோல் அவற்றைக் கற்சிலை, உலோகச் சிலை என்பர்..

ஒரு விழா என்றால் அதில் பல்வகைத் தொழிலாளர்களின் உழைப்பு இருக்கும் அதற்கு கூலியாக அவர்களுக்கு கிடைக்கும் பணம் அவர்கள் இல்லறத்திற்கு சிறிதளவேனும் பயன்படும். அந்த ஊர் மக்களும் சுற்றுப்புற ஊர் மக்களும் அந்த திருவிழாவில் கலந்துகொண்டு களித்து இன்பமடைகின்றனர். முன்னோர்கள் அன்பு கொண்டு இதுபோன்ற திருவிழாக்களை ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள திட்டமே.

நம்பித்தான் ஆகவேண்டும்!

ஒருவன் மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒய்விற்காக நடந்து சென்று இயற்கையை ரசித்தான். ஆற்றில் நீரில்லை. வரண்டிருந்த்து. அடுத்த நாளும் இயற்கையை ரசிக்கச் சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஆற்றில் நீர் நொப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தது. மேற்கே மழை. அதனால் ஆற்றில் வெள்ளம் என அவனைக் கடந்தசென்ற ஒருவர் சொல்லிச் சென்றார், இவன் கண்டது வெள்ளம். காணாதது மழை. நம்பித்தான் ஆக வேண்டும். கண்ட வெள்ளத்தைக் கொண்டு காணாத மழையை நம்ப வேண்டும்.. உலகில் காணும் இயற்கையின் செயல்களிலிருந்து நாம் இதுகாறும் காணத இறையை அளவிடத்தான் வேண்டும்.

காலத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்கின்றன. பூ பூத்துக் காய்கின்றன. பனி கொட்டுகின்றது. குளிர் வந்து போகின்றது. வெய்யில் வெம்மை காட்டுகின்றது. மழை பெய்கின்றது. தென்றல் வீசுகின்றது. இயற்கையின் இந்த விலையாட்டுகளுக்குச் சொந்தக்காரன் யார். யார் இந்த விளையாட்டை புவியில் நிகழ்த்துபவன். காணும் ஒன்றிலிருந்து ஓர் அளவைக் கொண்டு காண ஒன்றை நிர்ணயித்து உணர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பௌர்ணமி நாளில் ஒருவன் கோவிலுக்குப் போகின்றான். ஒருவன் ஒருவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் தன் வாழ்வில் முன்னேற வழி என்ன என்று யோசனையிலிருக்கின்றான். இது போன்ற பல்லாயிரக்கணக்காண நிகழ்வுகள் செயல்கள் அந்த பௌர்ணமி நாளில் நடந்து கொண்டிருப்பதால் அந்த செயல்களின் நன்மை தீமைகளுக்கு அந்த நாள் எப்படி பொறுப்பாகும். ஒவ்வொரு நிகழ் செயலும் அந்தந்த உயிர்களின் ஆன்மாக்களையே சாரும் என்பதை உணர்வாய்! என  ஆசீர்வதித்தார்.!

வாழ்க்கையில் உயிர்கள் நம்பிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும். அந்த ஜீவ யாத்திரைக்கு ஆன்றோர்கள் எழுதிய அறிவு நூல்கள், உயிர்களுக்கு வழி காட்டுகின்றன.. எங்குமாய், எல்லாமுமாய் அறிவு வடிவாய் கருணையுடன் விளங்கும் இறைவனை சித்தித்து ஆன்ம லாபம் பெற்று அனைத்து உயிர்களும் ஆனந்தத்துடன் வாழ்வாங்கு வாழ ஆசீர்வாதிக்கும் அடியேன்.-குருஸ்ரீ பகோரா

$$$$$

Login to post comments