Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:24

முத்திரை பேதம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

முத்திரை பேதம்!

1892. பதினொரு கருவிகளும் சிவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை, அமுதம் சுரக்கும் பிரணவத்தில் அழுந்தச் செய்யும் யாவற்றுக்கும் மேலான சிவன் திருவடியை அடையச் செய்யும் ஆரவாரம் அடங்கி மேலான வீடு கிட்டச் செய்யும்.

1893. சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்னும் மூன்று துரியங்களும் அடங்கும் இடமாகி அருமையாய்ப் பேசும் நாவின் செயலை அடக்கிப் பொருந்திய சாம்பவியும் கேசரியும் உண்மை நெறியைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரையாம்.

1894. சாம்பவி முத்திரை குருநாதனின் அருட்பார்வையை உண்டாக்குவதால் அஃது ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து வரும் பிறவியை அகற்றி அருள் அமுதம் வழங்கும் முத்திரை. பிரணவத் தியானத்துடன் பொருந்தியிருக்கும் கேசரி சிவயோகமாகிய் நாம் பயிலக்கூடிய உண்மையான ஞான முத்திரை.

1895. ஓர் ஆதாரத்தில் விளங்குவது சதாசிவம். ஆதாரம் இல்லாமல் நிராதாரத்தில் அறிவு வடிவாய்த் திகழ்வது பரசிவம். ஆதலால் வடிவம் உடைய நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் உருவச் சதாசிவர் ஆகியவரின் நிலையைக் கடந்த மௌன நிலையே முடிவுடைய முத்தி நிலையாகும்.

1896. வாக்கு மனம் என்ற இரண்டும் தொழில் இல்லாது இருப்பது மோன நிலையாகும். வாய் பேசாமல் மட்டும் இருப்பது ஊமையாகும்.. வாக்கு மனம் ஆகியவை தொழிற்படாதவரே தூய்மை உடையவர் ஆவார். அங்ஙனம் ஆக்கும் அத்தூய்மையான நிலையை அறிபவர் யார்.

1897. யோகம் ஒருவர்க்கு வந்து அடைந்ததற்கு அடையாளம் எண் பெருஞ் சத்திகளைப் பெறுதலாம். இறைவனுடன் ஒன்றுபடும் ஞான முத்திரைகளை ஆராயும் போது வேதத்தில் கேசரியும் சாம்பவியும் சிறப்பாய் பேசப்படுவன்வாகும். யோக நிலையில் எண்ணிப் பார்க்கில் கேசரியே யோக முத்திரையாம்.

1898. ஒரு யோகியானவன் எட்டுப் பெருஞ் சித்திகளையும் பெற்று அருள் ஒலி வாசனையில் இருப்பவன். அவனே அறம் பொருள் இன்பம் வீடாகிய பொருள்களை அறிந்து அனுபவிப்பவன். அவனுக்கு ஆதார சோதனையும் நல்ல சத்தியும் அமையும். அவனே ஏகமாகிய சிவத்தைக் கண்டு அதனுடன் பொருந்தி ஒன்றாய் நிற்பவன் ஆவான்.

1899. யோக நெறியில் கூறப்படும் பன்னிரண்டு கலைப் பிரசாத நெறியே பதினாறு கலைப் பிரசாத நெறியாகும். இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் என்பவை காமம் முதலிய அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தை விட்டு நிற்கும். இதுவே கேடில்லாத வேதாந்த சித்தாந்த இயல்பாகும். இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவம் ஆகும்.

1900. முத்தார்க்கு உரிய அடையாளம் மோன முத்திரையாகும். குருவாக விளங்குபவர்களுக்குரிய அடையாளம் ஞான முத்திரையாகும். சித்தம் இனிக்கும் குண்டலினி யோகம் சித்தாந்த நெறியின் அடையாளமாகும். காற்று நிற்பதற்குரிய சமயம் கண்ட முத்திரையாகும்.

1901. தூய்மையான நெறியான கண்டத்தை இடமாகக் கொண்டு உயிர்வளி உச்சிக்குப் போகும். அது சகசிர நெறியைக் கண்டு பொன் போன்ற இதழ்களின் நடுவில் பொருந்தி நின்றது. அதன்மேல் வெண்மையான மதி மண்டலம் விளங்கியது, உயிர்வளி போகும் நெறியைக் கண்டு உள்ளம் தூயன் ஆகலாம்.

#####

Read 1569 times
Login to post comments