Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:24

ஊழ்! சிவதரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#####


ஊழ்!

2847. தம் மனத்தில் சிவத்தை அறிந்த ஞானியர் கூர்மையான வாள் கொண்டு வெட்டித் துன்புறுத்தினால் என்ன. கலவைச் சந்தனம் பூசி மகிழ்ந்தால் என்ன. தலையில் உளியை நாட்டி இறக்கும்படி செய்தால் என்ன. பேராற்றல் உடைய நந்தி அமைத்த விதிப்படியே இவையெல்லாம் நடைபெறுகின்றன என்று எண்ணித் தம் நிலையினின்று தாழ மாட்டார்கள்.

2848. உயிர்தான் முன் செய்த வினையின் வழியே இன்பமும் துன்பமும் அமையும். அவ்வாறின்றி வான் பூதத் தலைவரான சதாசிவன் முன்னம் உயிர்களுக்காக இவற்றை நியமிக்கவில்லை. ஆதலால் அத்தலைவனை நோக்கின் சிரசின் வழியே மேற் சென்று நான் முன்னம் செய்த தவமே மேலான இடத்தைத் தந்தது.

2849. ஆற்றில் இயல்பாய் வந்து அடையும் நுட்பமான மணலை அந்த ஆறே சுமக்கவில்லை. பங்கிட்டுக் கொண்டு ஆறீட்ட மேடு பள்ளங்களைத் தூர்ப்பவர் எவரும் இல்லை. அதைப்போல் நான் செய்த வினைக்குரிய அனுபவம் எனக்கே உண்டு எனச் சொன்ன நான் திருநீற்றொளியில் விளங்கும் பெருமானைப் பெரும் பேறாகக் கொண்டு அவனை விட்டு நீங்காது இருப்பேன்.

2850. வானின்று இடி விழுந்தால் என்ன. பெரிய கடல் பொங்குவதால் அழிவு உண்டானால் என்ன. காட்டுத் தீயினால் சூழப்பட்டு உடல் எரிந்து அழிந்தால் என்ன. ஊழிப்புயல் காற்று அடித்துப் பொருள் அழிவை ஏற்படுத்தினால் என்ன. நான் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எம் தலைவனையே ஒன்றியிருப்பதினின்று வழுவமாட்டேன்

2851. ஓர் மதயானை கொல்வதற்காக என்னைத் துரத்தினால் என்ன. கூரிய அம்பானது உடலில் பாய்ந்து அறுத்தல் என்ன. காட்டில் உள்ள புலி துரத்தி வளைத்தால் என்ன. ஞானபூமியில் எம் பெருமான் எனக்கு அளித்த ஞானத் தொண்டைச் செய்வதினின்றும் நான் நழுவமாட்டேன்.

2852. எடுத்த உடலுக்கு ஊறு உண்டாகுமாயின் வேறொரு உடலை வழங்குவதற்கு இரைவன் இருக்கின்றான். மிக்க மழை மழையின்மை முதலியவற்றால் நாடு கெடுமாயினும் நம்மவர் நாட்டை விட்டு வேறு நாட்டுக்குப் போய் வாழ்வர். குடியிருந்த வீட்டுக்குப் பழுது ஏற்படுமாயின் வேறு ஓர் வீட்டுக்குப் புகுவதுபோல் வேறு ஓர் உடல் வாழ்வு கிட்டும். சிவஞானம் பெற்றவர்க்கு இவ்வுண்மை நன்கு விளங்கும்.

#####

சிவதரிசனம்!

2853. சிவத்தை எண்ணிக் கொண்டிருப்பவ்ர்க்குச் சிந்தை வேறு சிவன் வேறு என்பது இல்லை. சிந்திப்பவரின் உள்ளத்தில் சிவன் வெளிப்பட்டு அருள்வான். சிவஞானத்தால் தெளிவடைந்த ஞானியர்க்கு அவர்களின் எண்ணத்திலேயே சிவன் சிறந்து விளங்கினான்.

2854. சொல்லையும் மனத்தையும் கடந்தவன் சிவன் என்று வேதங்கள் கூறும். ஆகவே அவனை அருளால் கூர்ந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கப்படும் பொருள் மிகவும் நுட்பமானது. அதற்குப் போக்கும் வரவும் கேடும் இல்லை. இவ்வாறான உண்மையை உண்ர்ந்து சிவனை ஆராய்ந்து தளிபவர்க்கு அதுவே தேடும் பொருளாகும்.

2855. எம் தலைவன் தலைக்கு மேல் விளங்கும் ஆனம் ஒளியாய் அதன் மீது விளங்கும் சிவமய் விளங்குபவன். அவன் பரவியுள்ள தன்மையைக் கடந்து பேராற்றலும் பேரறிவும் உடையவன். எதனாலும் மறைக்கப்படாத தூய்மையுடைய நுண்ணிய சுடர் வடிவானவன். தானே எலாவற்றுக்கும் ஆதாரமானவன். உயிர்கள் மனம் பொறிகளுடன் கூடித் தன் அறிவால் அறியப்படாத அரனாகவும் இருக்கின்றான். உலகத்துக்கு அருள் செய்பவனாகவும் அப்பெருமான் விளங்குகின்றான்.

#####

Read 1659 times
Login to post comments