Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:27

சிவசொரூப தரிசனம்! முத்திபேதம் கரும நிருவாணம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

சிவசொரூப தரிசனம்!

2856. சொல்லப் பெறும் மயிர்க்கால் தோறும் இன்பம் தேக்கிய வெளியேயும் உள்ளேயும் தடைப்படாத ஆனந்தமே உருவம், அருவுருவம் அருவம் என்னும் மூன்று சொருபங்களையும் கடந்து அப்பால் வேதத்தில் சொல்லப் பெறும் சிவத்தின் மேலான வடிவம் ஆகும்.

2857. சிவபெருமான் உணர்வாகவும் அவ்வுணர்வு வெளிப்படும் உயிராகவும் விளங்குபவன். அவனே ஓர் உயிர் மற்றோர் உயிரைப் புணருமாறு செய்பவன்.. பிணங்கும் படியும் செய்பவன். இங்ஙனம் ஒழுங்கு செய்யும் அவனை இன்ன தனமையன் என எண்ணத்தினால் வரையரை செய்ய முடியாது. ஆனால அவன் ஆறு ஆதாரங்களில் சுவாதிட்டான மலரில் பொருந்தியுள்ளவனாக உள்ளவன்.

2858. மேல் மந்திரத்தில் சொல்லியபடி பொருந்தி நின்ற சிவனது திருமுன் இருப்பதாக எண்ணுங்கள். அப்போது நினைப்பவரின் விருப்பைத் தானே அறிந்து நிறைவேற்றுவான். அவன் ஐயங்களைப் போக்கும் வேத வடிவுடையவன் ஆவான். பெருந்தனமையுடைய தவத்தால் உணரத்தக்கவன். ஆருயிரின் அறிவு நிலையமான தலையிலிருந்து தெளிவினைச் செய்பவனும் ஆவான்.

2859. திருவருளால் விளக்கம் பொருந்திய உள்ளக் கண்ணைத் திறந்து பார்த்தேன். பார்க்கவும் என்னில் நின்ற சோதியும் தலைவனும் ஒப்பில்லாதவனும் பொன் போன்ற திருமேனியும் சடையும் உடையவனும் ஆகிய சிவன் என்னிடம் பொருந்தினான் நீ அறிவுமயமானவன் என உணர்த்தினான்.

2860. சிவன் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் தனித்து நிற்பவன் ஆவான். சீவன் முக்குணவயப்பட்ட போது சிவானந்த்தத்தை விளைவிக்கும் பேரொளி அவனிடம் பொருந்தாது. சீவர்கள் நிர்க்குணத்தைப் பெற்றால் தூய்மையை அடைந்து பிரமதுரியத்தில் விளங்குவர். அத்தகைய துரியத்துள் பேரொளியாய் அவன் விளங்குவான்.

2861.சிவபெருமான் பரன் அல்லன். அதுபோல் உயர்ந்த பராபரனும் அல்லன். ஆர்வத்தால் மட்டும் அடையப் படுபவனும் அல்லன். தலையில் மீது விளங்கும் ஒளி மண்டலன் அல்லன். இவற்றில் உடையவன் அல்லன்,. சிவன் அவையாவையும் அவை அல்லவாயும் உள்ளவன். இன்பத்தைத் தரும் அரனும் அல்லன். அவன் ஆனந்தத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவன்.

2862. முத்தியும் சித்தியும் கைகூடிய ஞானம் உடையவர். பத்தியில் பொருந்திப் பரமம் நன்மை அடைந்து மாட்சிமையுடைய சத்தி பதிவுற்றோர்க்குச் சிவம் பொருந்தலால் கிரியையினின்று நீங்கியவர் அவர் பேரின்ப ஞானியாவர்.

2863. துரியாதீதநிலை சொல்வதற்கு முடியாத பாழ் ஆகும். அருமையான துரியாதீதத்தை அடைந்தால் பிரிதலும் குவிதலும் இல்லாமல் மனம் சிந்திப்பதின்றி விளங்கும் தத்துவச் சார்பான தன் உருவம் கெட்டுவிடும். அதன் நிலையைச் சொல்லாமல் எப்படி சொல்ல முடியும்.

#####

முத்திபேதம் கரும நிருவாணம்!

2864. மறைகளில் சொல்லப்படும் வீடு பேறானது துரிய நிலையில் முறையாய் உயிர் பரம் அவற்றோடு பிரிவின்றியுள்ள சிவன் ஆகியவை பொருந்தி நிற்கும். அவ்வமயத்தே ஆன்ம வடிவமாகிய பரம் சிவ வடிவத்தில் இலயம் அடையும். அடையக் குற்றம் அற்ற நிருவாண நிலை உண்டாகும்.

2865. உலகப் பற்றுகளை விட்டவர் பற்றி நின்ற மேலான பொருளும் கல்வியைக் கற்று அதன் முடிவான சிவஞானத்தை அடைந்தவர் விரும்பும் கண்ணுதலும் கல்வியின் முடிவினை உணர்ந்தோர் பொருந்தி நிற்கும் என் சோதியும் ஆன சிவபெருமானை அடைந்து பொருந்தியவர் பேச்சை விட்டு நிற்பவர் ஆவர்.

#####

Read 1571 times
Login to post comments