Print this page
புதன்கிழமை, 11 December 2019 06:57

உபதேசம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

உபதேசம்!

113. விண்ணுலகமான தன் உலகைவிட்டு நீங்கி உயிர்களின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றவாறு திருமேனி தாங்கி குளிர்ச்சியான தன் திருவடியை உயிர்களுக்கு பாதுகாப்பாய் தந்து உள்ளே நின்று உடலை உருகச் செய்து ஒப்பில்லாத ஆனந்தத்தை கண்ணில் காட்டி ஆணவம், கன்மம், மாயை பாசம் ஆகியவற்றை நீக்கியருளினான்.

114. நெற்றிக்கண்ணுடன் இருப்பவனான சிவன் ஆணவம், கன்மம் மாயை ஆகியவற்றை நீக்கி பாசஇருள் வந்து சேராவண்ணம் சிவசூரியனை உதிக்கவைத்து பளிங்குபோன்ற சிவனில் பவளம் போன்ற செம்மையான அருள் பேரொளியை பதியச் செய்தான்.

115. சிவன், ஜீவன், பந்தம் என்ற மூன்றில் சிவனைப்போன்றே ஜீவனும் பந்தமும் பழமையானவை. அவைகள் சிவனை சென்று அடையாது. சிவன் உயிர்களிடம் நிலைபெற்றால் பசு என்ற உயிர்தன்மையும், பாசம் என்ற பந்தமும் நீங்கிவிடும்.

116. மூங்கில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் தீயைப் போன்று உடல் என்ற கோவிலில் குடியிருக்கும் நந்தி ஒருதாய் தன் சேயின் அழுக்கை மாற்றுவதுபோல் உயிர்களின் மும்மலங்களின் அழுக்கை மாற்றும் உடலில் உதிக்கின்ற சூரியன் ஆகும்.

117. ஜீவனும் அதை மறைத்துள்ள பாசமும் சூரிய காந்தக்கல்லும் அதைச் சுற்றியுள்ள பஞ்சையும் போன்றது. சூரியகாந்தக்கல் தன்னை சூழ்ந்துள்ள பஞ்சை சுடாது. ஆனால் சூரிய ஒளியில் பஞ்சை சுட்டு எரித்துவிடுவதைப்போல் ஜீவனது அறிவு நந்தியின்முன் பாசம் நிங்கி இருக்குமே.

118. ஆணவம், கன்மம், மாயை மாயேயம், திரோதயம் ஆகிய மலப் பாசங்களை நல்ல சதாசிவன் முதலிய ஐவரும் கெடுத்து பெருவெளியில் நின்று பற்றுவன வற்றையெல்லாம் நந்தியம்பெருமான் அழித்தருளினான். உயிர்க்கு உயிராய் எழுந்தருளி இருக்கும் சிவன் உள்ளே உள்ள வாசனைகளையும் நீக்கியருளினான்.

119. உயிர் அறிவு சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களுடன் கூடிவழி அறியாது வெள்ளச் சூழலில் சிக்கியதுபோல் மயங்கி நிற்கும் போது சிற்றறிவு பேரறிவில் சென்று அடங்கியது போன்று குரு நந்தியெம்பெருமான் தெளிவைத் தந்து வழியைக் காட்டி அழைத்துச் செல்வான்.

120. பசுவின் பாலைக் கலந்த நீரை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டது அன்னப் பறவை. அதுபோன்று பெருவெளியில் ஆடும் அம்பலவாணனின் கூத்தே உயிர்களிடத்திலிருந்து வினையைப் பிரித்துவிடும். அதனால் தீமை காரணமாக கர்ம காரணங்களில் பொருந்தியுள்ள புண்ணியங்கள் ஏழு பிறவிகளிலும் வறுக்கப்பட்ட விதைபோன்று பயனை அளிக்காது.

121. பிறவிக்கு காரணமான கன்மத்தை அழித்து மேல் நிலையான விழிப்புடன் இருந்து ஒன்றையும் பற்றாமல் இருக்கும் நிலையிலே தூய நிலை அடைந்து பந்தங்களை நீங்கி புலன்கள் தம் வழி செல்லாமல் உயிர் வழி நின்று சிவயோகியர் உடல் அறிவும் செயலும் இல்லாது இருப்பர்.

122. சிவயோகம் என்பது இது அறிவுப் பொருள்கள், இது அறிவற்றப் பொருள்கள் என்பதை விவேகத்தால் அறிந்து சிரசால் அடையும் சிவராச யோகத்தை அறிந்து அங்கு இருக்கும் சிவஒளியில் புகுந்து வேறுவகையான அபயோகம் மேற்கொள்ளாமல் தன் பதியான பரமகாய மண்டலத்தில் உடம்பை வருத்தாமல் சுழுமுனை வழியாய் உணர்வை சிரசுக்கு கொண்டுவரும் நவயோக நெறிதனை நந்தியெம்பெருமான் அருளினான்.

123. பெருமான் உலகம் எங்கும் சிவமாய இருக்கும் உண்மையை எனக்கு உரைத்தான். அது தேவரும் அறியா இன்ப உலகம். பெருவெளியில் திருநடனம் செய்யும் திருஅடியை அடியேனுக்கு சூட்டினான். பேரின்பத்து பெருவெளியையும் எனக்கு அருளினான.

124. ஆகாயமான ஆன்மா பெருவெளியில் சிவனுடன் கலக்கின்ற விதத்தையும், சிவன் இச்சையில் ஆன்மாவின் இச்சை அடங்கிய விதத்தையும் சிவ ஒளியில் ஆன்ம ஒளி அடங்கிய விதத்தையும் அறிவில் கண்டவரே சிவ சித்தர் எனப்படுவர்.

125. சிவலோகத்தில் அடையத் தக்க பேரின்பத்தை சாமதி நிலையிலே இங்கேயே பெறலாம். நாதத்தையும் நாதமுடிவான நாதாந்தத்தையும் தமக்குள்ளே காணலாம். அவர்கள் ஆறிவு அற்றவர்களாய் குற்றமில்லாதவராய் தூய இன்பத்தில் இருப்பர். அந்த மேல் நிலையில் உள்ள சித்தர்கள் முத்திக்கு வழியாக உள்ளது முப்பத்தாறு தத்துவங்களே!.

126. ஆகமங்கள் கூரும் பலபடியாய் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையே முத்தி பெறும் ஏணியாகக் கொண்டு ஒப்பில்லா சிவானந்தத்தை தரும் உள்ளொளியில் புகுந்து சொல்வதற்கு அரிய பெருமையுடைய சிவத்தை தரிசித்து தான் தெளிவடைந்த உண்மையை உணர்ந்து சிவமாக விளங்குவர்.

127. சிவத் தன்மையை அடைந்தவர் எங்கும் நீக்கம் இல்லாது நிறைந்து இருப்பர். சிவனின் செயல் யாவற்றையும் பார்த்தவண்ணம் இருப்பர். மூன்று காலங்களின் இயல்பை உணர்ந்திருப்பர். தமக்கென்று ஒரு செயல் இல்லாது இருப்பர்.

128. சோம்பர் தன் செயலற்று சிவச் செயலாக இருப்பர். அவர்கள் தங்கியிருப்பது பெருவெளியான சிவவெளியில் அவர் பேரின்பம் அனுபவிப்பதும் அந்த பெருவெளியிலே. அவர் தன் உணர்வு மறைக்கும் எட்டாத முடிவிடமான சிவ வெளியில் திருமுடி உணர்வுடன் ஒன்றி அனுபவித்து மறைவான சுருதியில் நினைவு அறுதலையே காண்பர்.

129. நாதந்த நிலையில் இருந்து சிவ உலகத்தை யோகநிலையில் கண்டனர். தம்முள்ளே சிவன் பொருந்தியிருப்பதையும் அறிந்தவர். அவரே சிவயோகமான பேரின்பத்தை தன்னுள் கண்டு அனுபவிப்பவர். அவர் நிலைபற்றி அனுபவம் இல்லாதவர் கூறுவது எப்படி!

130. அறிவிற்கு எல்லாயாய் இருக்கும் சிவன் தம்மை எம்முறையில் உயிர்கள் அணுகுகின்றார்களோ அம்முறையில் அவர்களுக்கு அருள் செய்வான். பழமையான அந்த சிவன் உமையம்மை காணும்படி நடனம் ஆடுபவன். அவன் செவ்வானத்தைக் காட்டிலும் மிக்க செம்மையான ஒளிவீசும் மாணிக்கமாவான்.

131. மாணிக்கச் சிவந்த ஒளியுள் மரகதம் போன்ற பச்சைஒளி அந்தச் சிவந்த ஒளியுடன் கலந்து பச்சைநிற மண்டபமாய் மாற்றுக்குறையாத பசும்பொன் பெருவெளியில் நின்று ஆடும் கூத்தை வணங்கித் தொழும் எத்தகைய பேறு பெற்றவர்கள் சித்தர்கள்.

132. பேரொளியான பொன் ஒளியில் விளங்கும் சிவ யோகியர் உலகத்தைவிட்டுப் பிரிந்து போகாது உலகத்தில் நின்று உலகத்து உயிர்களுக்கு உதவுவதையே விரும்புவர், உலகத்தில் உலக சேவை செய்பவராக இருந்தாலும் பந்தமின்றி செய்வதால் திரும்பவும் பிறக்காத பெரும் பேறு பெற்றவற்களாயினர்.

133. பெருமானைப் போன்று பெருமை, சிறுமை, அருமை, எளிமை ஆகியவற்றை உணர்ந்து அறிபவர் யார்! அவர்கள் ஒருமைப்பாட்டுடன் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கி உள்ளுக்குள் இழுத்து கொண்டு பெருமை சிறுமை இரண்டையும் குற்றம் இல்லாமல் உணர்ந்திருப்பவரே சாதகர்.

134. குற்றம் அற்ற பாலினுள் நெய் கலந்திருப்பது போல் எண்ண அலைகளில்லா மனதில் நீக்கம் இல்லாமல் நிறைந்திருக்கும் நல்ல ஆசிரியன் சொல்லும் உபதேசத்தை உணர்வோர் உடம்பு ஒழிந்தால் அவர்கள் எல்லையற்ற அகண்ட சோதியுடன் கலந்து அதுவும் சிவம் ஆகும்.

135. சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் எனும் ஐந்து தன் மாத்திரைகள் அறிவற்ற அகங்காரத்தில் ஒடுங்கும். அறிவு மயமான ஆன்மாவிற்கு ஒடுங்க சிவனைத் தவிர வேறு இடமில்லை. பெருவெளியில் இருக்கும் சிவஒளியில் ஆன்ம ஒளிபொருந்தும். என்னை பொருளாகக் கொண்டு தன்மையை எண்ணி அருள் நீரால் எனை ஆட்கொள்க!

136. கடல் நீரில் உள்ள உப்புத் தன்மையானது சூரியன் வெப்பத்தால் உப்பாகி, உப்புக் கல்லாக மாறும். அவ்வடிவம் மீண்டும் நீருடன் சேர்ந்து நீராக மாறும். அதுபோல் சொன்னால் சிவன் சிவத்துள் அடங்கும்.

137. எல்லாவற்றையும் கொள்ளும் இயல்பான இறைவனின் எல்லையில்லாத பரப்பினுள் உயிரின் எல்லையான அண்டகோசம் பொருந்தியுள்ளது. பேரண்டத்தில் ஜீவனது அண்டகோசம் அடங்காமல் வேறு எங்கு அடங்கும். உடம்பில் நின்ற உயிர்கள் தாம் சேரும் இடத்தினை ஆராயின் எல்லாவற்றிற்கும் ஆதரமாயுள்ளது இறையின் திருவடியே ஆகும்.

138. ஒளியான திருவடியெ சிவம். நினைத்துப் பாத்தால் அந்த ஒளியே சிவம் உறையும் உலகம், மேலும் சொல்லப் போனால் அந்த ஒளியே சிவனை அடைவதற்குறிய நெறியாகும். உள் நோக்கம் கொண்டவர்க்கும் அந்த ஒளியே புகலிடம் ஆகும்.

139. சிவகுருவை பேரொளியாக சிரசின் மேல் காணுதல் தெளிவை அளிக்கும் நந்தியின் திருப்பெயரான ஐந்தெழுத்தை ஓதுதல் தெளிவைத்தரும். சிவகுருவின் உபதேசத்தை ஒலியாய் கேட்பதும் தெளிவை அளிக்கும். சிவகுருவின் திருமேனியைச் சிந்திப்பதும் தெளிவைத் தரும்.

140. உயிர்கள் தத்துவங்களை விட்டு விட்டு சிவகுருவைச் சந்திக்கின்ற பேற்றைப் பெற்றால் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் புலன்வழி ஓடும் மனம் உயிர்வழி செல்லும். அதனால் ஐம்புலன்களும் சுவை கெட்டு அவைகளே ஆன்மாவை இறைவன் வழி செலுத்தி விடும்.

141. இடைவிடாமல் சந்திப்பது நந்தியின் திருவடியைத்தான். சிந்திப்பதும் இறைவனின் திருமேனியைத்தான். நாவினால் துதித்து வணங்குவதும் அவனின் திருப்பெயரைத்தான். அடியேனின் அறிவில் நிற்பதும் நந்தியின் பொற்பாதங்களே!

142. மேன்மையான திருவடி ஞானத்தை அளிக்கும் நந்தியம்பெருமானை அறிவில் கொண்டு எண்ணிப் புண்ணியம் மிக்கவர் நாதனின் நடனத்தை கண்கள் நிறைந்து மகிழ ஆனந்திப்பர் அவர் வேத நாதம் ஒலிக்க சிவபெருவெளியில் விளங்கி இருப்பர்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1813 times Last modified on புதன்கிழமை, 04 October 2023 09:16
Login to post comments