gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

4-4.இயற்கை! நியதிப் பூக்கள்!

Written by

இயற்கை! நியதிப் பூக்கள்!                                                                                        

இயற்கை எல்லையில்லா ஓர் உலகம். என்ன இல்லை அதில். எல்லாம் இருக்கின்றது. மனித வாழ்வின் இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டது. வான்மழை பொழிகின்றது. மன்னும், மரம், செடி, கொடிகள் எல்லாம் அதை ஏற்றுக்கொள்கிறது. அதில் எல்லாவற்றிற்கும் ஓர் ஆனந்தம் இருக்கின்றது. மழையில் நனைந்து பாருங்கள் அந்த ஆனந்தம் புரியும். இயற்கையின் மழையில் எத்தனை ஆனந்தம் பொதிந்துள்ளது. அதை வாங்கி மரங்களும், செடிகளும் எவ்வாறு அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்தி பூத்து குலுங்குகின்றன. இயற்கையின் வளத்திற்கு பயன்படுகின்றது என உணரும் போது அந்த மழையில் எவ்வளவு ஆனந்தமும் சந்தோஷமும் பொதிந்துள்ளது என்ற உண்மை நமக்கு தெளிவாகிறது.
மழையிலிருந்து பெற்ற ஆனந்தத்தை அவைகள் பூத்து குலுங்கி நமக்கு காட்டும் போது அதை உணர்ந்து, பார்த்த நாமும் ஆனந்தம் அடைகின்றோம். நாம் ஆனந்தம் அடைந்தால் நம் செயல்களில் மாற்றம் தோன்றி, நம்மை சுற்றியுள்ளவர்களும் ஆனந்தம் அடையமுடியும். இப்படியே ஒன்றிடத்திலிருந்து ஒன்றுக்கு மாறி மாறி ஆனந்த அலைகள் பரவவேண்டும் என்பது இயற்கையின் நியதி!
அதை உணர்ந்து செயல்பட்டு நம்மைச் சார்ந்தவர்களையும் உலகையும் சந்தோஷப்படுத்த நாம் செயல்படவேண்டும். வெய்யிலில் வாடிய ஒருவனுக்கு நிழலில் இருக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது. தாகத்தில் இருப்பவனுக்கு நீர் ஆனந்தம் ஏற்படுத்துகின்றது. சோகத்தில் இருப்பவனுக்கும் இயற்கையின் சூழல் ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
வண்ணவண்ண மலர்கள், பறவைகள், ஊர்வன, விலங்குகள் இவைகளை எல்லாம் விதவிதமாக பார்க்கும் போது மன இறுக்கம் தளர்ந்து மகிழ்வு ஏற்படுகின்றது. தண்ணீர் ஓடும்நீர் தெரிந்ததுதான். அதையே உயரமான மலைமேலிருந்து கீழ் இறங்கும்போதும், அந்த சாரல் நம்மீது படும்போதும், அந்த தென்றலின் சுகம் மேனியில் படரும்போதும் இயற்கையின் மடியில் நம் உள்ளம் உணர்ச்சிவயப்பட்டு சந்தோஷம் காண்கின்றது.
எனவே இயற்கை நம்மை சந்தோஷிக்க, நாம் ஆனந்தமடைய தோன்றிய ஒன்று. நம் பயணத்தில் நாம் சந்தோஷம் என்ற இலக்கையடைய பயணிக்கும்போது இந்த நியதி நமக்கு மிகமிக உதவும். இயற்கையில் பழையன எதுமில்லை. எல்லாமே புதியனவே! உலகின் ஏற்படும் அதிர்வு அலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இயற்கை தன்னை புதிப்பித்துக் கொள்கின்றது.
இயற்கையின் அழகை ரசித்த கவிஞர்களும், புலவர்களும், தாங்கள் ரசித்த அந்த அழகை வாழ்வியலில் பலநிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பாடல்களும், கவிதைகளும், புனைந்துள்ளதை நாம் இன்றும் படித்தும் கேட்டும் ஆனந்தப்படுகின்றோம். அதற்கு ஓர் ரசிகத்தன்மை இருந்தால் போதும் நீங்கள் புனையவேண்டும் என்பதில்லை.
பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு. பஞ்சபூதங்களால் ஆகிய இந்த உலகத்தை அனுபவித்து அதையே வாழ்க்கை என நினைக்கின்றது. நம் உடம்பு எதன் ஆதாரத்தில் அனுபவிக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும். நீர் உலக சூழலில் பனியுமாகலாம், இன்னொரு சூழலில் ஆவியாகி மேகமாகின்றது. ஆனால் மீண்டும் ஓர் சூழலில் மழையாகி பூமிக்கு நீராக வருகின்றது. அதைப் போலத்தான் வாழ்க்கையில் உடலும் உடலின் ஆன்மாவும் எதை அனுபவித்து சந்தோஷப்பட்டாலும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு வரவேண்டும் இதுதான் நியதி!
நீர்வாழ்  உயிரினங்களுக்கு நீர்தான் ஆதாரம். நீரைவிட்டு வெளியில் வந்தால் மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகிவிடும். மண்ணில் பிறந்த உயிரினங்களுக்கு மண்ணில் தான் உணவு கிடைகின்றது. அதைவிடுத்து நீருக்கு சென்றால் அது அங்குள்ள ஜீவன்களுக்கு உணவாகிவிடும். எந்த உயிரினங்கள் எந்த பஞ்சபூதத்திலிருந்து தோன்றினவோ அதன்வழிதான் அதற்கு சரியான உணவு. இது நியதி!
மனிதனின் சேமிப்பு, பகிர்ந்து கொள்ளும் உணர்வை படிப்படியாக அழித்து விடுகின்றது. நாம் எதையும் நாமாகப் பெறவில்லை. எல்லாம் நம்மூலமாகத் தரப்படுகின்றது இது நியதி. இயற்கை தன்னிடம் இருப்பதை எல்லாம் நமக்கு தருகின்றது. அதன் மூலம் நாம் பயனடைந்து நம் சந்ததியும் வாழ வழிவகுக்க வேண்டும் என்பதுதான் நியதி. இந்த நியதியில்தான் உலகம் இயங்கி ஜீவராசிகள் அனைத்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்துள்ளன.
ஒரு குழந்தை நடக்க முயற்சிக்கும்போது தடுமாறி பின் ஓர் நிலையில் தடுமாறாமல் நிற்க, நடக்க பழகிவிடுகிறது. புவியின் ஈர்ப்பு விசையை அதன் உணர்வுகள் புரிந்து கொண்டு விட்டன. இதைப்போன்றே இயற்கையில் பல இரகசிய விதிகள் உள்ளன. அவற்றைப் புரிந்து அனுசரித்து வாழ்கை முறைகளை நெறிப்படுத்தியுள்ளனர் முன்னோர்கள். அதில் ஒன்று தர்மம். அதை நாம் காத்தல், அழித்தல் செயல்களுக்கு ஏற்ப நம் வாழ்வில் காத்தலும், அழித்தலும் இருக்கும். நட்பு/உறவு-பகை, இன்பம்/சந்தோஷம்- துன்பம்/துயரம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு, ஜனனம்/பிறப்பு-மரணம்/இறப்பு, இரவு-பகல், இல்லறம்- துறவறம், ஆண்-பெண், கருப்பு- வெண்மை என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டாலும் அந்த இரண்டும்தான் உலக இயக்கத்தின் சிறப்பாகிறது. இது இயற்கையின் நியதி அதைப் புரிந்து ஏற்று வாழ்வை இனிமையாக்கிக்கொள்ள் ஆசிகள்.-குருஸ்ரீ பகோரா.

4-3.அன்புப் பூக்கள்!

Written by

அன்புப் பூக்கள்!                                                                                                              

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” என்கிறார் திருமூலர். அன்பை கனிவு, கருணை, நட்பு, மரியாதை மூலம் உணரலாம். அன்பு நமக்கு தொடர்பு உடையவர்களிடம் நாம் காட்டும் மன நெகிழ்சியாகும். நம்மோடு யாதொரு தொடர்பும் இல்லாத அயலாரிடமும் ஜீவ ஜந்துக்களிடமும் அன்பைக் காட்டும் போது அது அருளாக மாறுகிறது. இதையே ’அருள் என்னும் அன்பின் குழலி” என்றார் பொய்யா மொழியார்.
அன்பை பெருக்குவதே வாழ்க்கை. அன்புகொள்வீர்! அனைவரிடமும் அன்பு கொள்வீர்! எல்ல உயிர்களிடத்திலும் அன்பு கொள்வீர்! தோன்றிய, பிறந்த எல்லா உயிர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுள்ளது, ஆகவே  வாழ்விற்கு தேவையானவற்றைத் தேடும் உரிமையும், அடையும் உரிமையும் உள்ளது. இதைத் தடுப்பதும், மறுப்பதும் பாவமாகும். தடுத்து பாவச் செயல்களை செய்ய எந்த ஒர் ஆன்மாவும் விழையக்கூடாது.
அதற்கு எல்லோரும் எல்லாவற்றின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். மற்ற மனிதர்களையும் நம்மைப்போலவே நேசிப்போம். மனிதர்கள் மட்டுமின்றி உலக ஜீவராசிகள் எல்லாமும் நம்மைப்போன்ற ஆன்மாக்களே என நினையுங்கள். அன்பு பிற உயிர்கள் மீது ஓர் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். அந்த உயிர்கள் மேல் வெறுப்பு தோன்றாது. அந்த வெறுப்பின்மை என்ற தன்மை, மற்ற உயிர்களின் செயல் பாடுகளில் நமது இடையூறு இல்லாமல் இருக்க உதவும்.
கன்று கொல்லப்பட்டது என நீதிகேட்ட பசுவின் நியாயத்திற்காக தன்மகன் வீதிவிடங்கனை தேரேற்றி கொன்ற மனுநீதிச்சோழனின் உணர்ச்சிகள் போற்றத்தக்கவை. எல்லா உயிர்களுக்கும் அன்பும் பாசமும் உணர்ச்சிகளும் உண்டு. எல்லாம் ஆன்மாக்களே என்ற அவரது நியாய உணர்வு இன்றும் பேசப்பட்டு வருகின்றது.
நிறம் கண்டு அன்பு வருவதில்லை. அழகு கண்டும் அன்பு வரக்கூடாது. சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் எந்நிறத்தையுடையதாக இருந்தாலும், அழகாயிருந்தாலும், அழகின்றி இருந்தாலும் அது ஓர் உயிர். ஓர் ஆன்மா வாழும் உடம்பு. அதற்கு உரிய காலத்திற்கு வாழும் உரிமை உள்ளது அதில் தலையிட மற்ற ஆன்மாக்களுக்கு உரிமையில்லை. அதை அதன் போக்கில் செயல் படவிடுங்கள். அதன்மீது அன்பைக் காட்டுங்கள்.
பிற உயிர்கள் மீதுள்ள வெறுப்புகளை அறவே நீக்கி அன்பு கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் காட்டும் அன்பு உங்களின் இந்த ஆன்மாவிற்கு அல்லது வாரிசுகளின் ஆன்மாவிற்கு பயனளிக்கும் தன்மை கொண்டது. ஒருவரைப் பற்றி எண்ணங்களால் எடைபோட்டுக் கொண்டிருந்தீர்களானால் அவரை நீங்கள் நேசிக்கமுடியாது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி நேசியுங்கள். அன்புகொள்ளுங்கள். அவ்வாறு எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு செலுத்தும் நேரமே மிகவும் அமைதியான நேரங்களாகும்.
ஓர் பஞ்சதந்திரக் கதையில் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பிற்கு இலைகளைப் பறித்து போட்ட பறவைதனை வேடன் தன் அம்பால் குறிவைக்கும்போது, கரைக்கு வந்த அந்த எறும்பு வேடன் காலைக் கடித்ததால் குறிதப்ப பறவை பறந்ததாக் கூறப்பட்டுள்ளது. எறும்பு எதேச்சையாகக் கடித்தது என்றாலும், எறும்பு பெற்ற இலை என்ற அன்பிற்கு உதவி என்ற இந்தக்கதை, அந்த பறவையின் எந்த பிறவி அன்பின் கர்மபலனோ! அது வேடனின் கணையிலிருந்து தப்ப உதவியது.
இந்தக் கதையினால் நமது உள்ளத்திற்குள் ஓர் எண்ணம் உறுவாகி பதிவாக வேண்டும். நாம் துயரப்படும்போது நம்மை, நம்மிடம் அன்பு காட்ட ஆளில்லை, நாம் தனி மனிதன், ஆதரவற்ற ஓர் அநாதை என்று வருத்த முறும் நிலையில், என்றோ, எங்கோ, எப்படியோ, யாருக்கோ, எந்தவடிவிலோ காட்டிய அன்பின் அடையாளம், உதவிக்கு வருமானால், மனம் எவ்வளவு ஆறுதல் அடையும் என்பது அனுபவம்தான் கூறும்.
அன்பு காட்ட ஆளில்லா நிலையில் ஆறுதல் வார்த்தை கேட்க முடியா நிலையில் மனம் வேதனை கண்டுள்ளபோது, இது போன்ற அன்பு எவ்வளவு ஆறுதலை தந்து மனநிம்மதி அடைந்து தன்னைத்தானே தேற்றிக்கொள்ள மிக்கஉதவி புரியும். எனவே எப்போதும் அன்பு செலுத்துங்கள் எல்லோரிடத்திலும்.
அன்பு, உடலின் உயிர் ஆன்மாவோடு ஒன்றாகக் கலந்தது. அதை பலர் மறந்துவிட்டு உலகின் இன்பமில்லா வாழ்க்கை வாழ்கின்றனர். நம்மிடையே உள்ள அன்பை வெளிப்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். நம்மிடையே இதுகாறும் இருந்த ஒருவரை பிரியும் வேளைவரும் போதுதான் அவர்மீது நாம்கொண்ட அன்பின் ஆழம் நமக்குத் தெரியவரும்.
இராமாயண காவியத்தில், கானகத்தில் ராமரின் நண்பனான குகன், ராமணைவிட்டுப் பிரியமனமில்லாமல், ராமா! நீ எங்களுடனே தங்கிவிடு, அல்லது என்னையும் உன்னுடன் அழைத்துபோ, என மன்றாட ராமர், “பிரிவுதான் அன்பை அதிகமாக்கும். நாம் மீண்டும் சந்திக்கும் நேரம் வரும், அப்போது இதை நீ உணர்வாய்” என்றார்.
கோபியர்களுடன் குரவைக்கூத்து ஆடும் கண்ணன் விளையாட்டாக திடீரென்று மறைந்து விடுவாராம். அப்போது அந்த கோபியர்களுக்கு கண்ணன்மேல் இதுகாறும் இருந்த அன்பு பலமடங்கு அதிகமாகி விட்டதாக ஸ்ரீமத்பகவதம் கூறுகிறது.
அன்பு எல்லா உயிர்களிடமும் விருப்பத்துடன், நட்புடன் வாழும் தன்மைதனை தரும். இந்த தன்மை அளவில்லாதச் சிறப்புகளைத் தரும். இந்த அன்புதான் நம் உள்ளே தோன்றும் வீரத்திற்கு வித்திடும். வாழ்வில் நீங்கள் யாரிடமும் அன்பு செலுத்தலாம். ஆனால் உங்கள்மேல் அன்பு கொண்டவரின் அன்பை நிராகரிக்காதீர்கள். அதுதான் உண்மையான அன்பு. அந்த அன்பே உங்களுக்கு ஆபத்து காலங்களில் தேவைப்படும்போது மிக மிக உதவும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து, இன்புற்றார் எய்துஞ் சிறப்பு’- அன்புடன் இயைந்த வாழ்க்கையினால் மட்டுமே, உலக வாழ்வில் இன்பம் என்ற சிறப்பை அடையமுடியும்.
வாழ்வில் அன்பு என்பது நம்மிடம் இல்லை எனில் நமக்கு மற்றவரிடமிருந்து வரும் அன்பு கிட்டாது. சூன்யமயமான வாழ்க்கையாக மாறிவிடும். வாழ்க்கையில் அன்பு குடி கொண்டிருந்தால் புண்ணியச் செயல்கள் நடக்கும். தன்னலமில்லா செயல்பாடுகளே அன்பின் அடிப்படை. முழுமையான அன்பினைச் செலுத்துவீர்களானால் உங்கள் உள்ளே ஓர் ஒளிதோன்றும். அருள் நிறைந்தவராக நீங்களிருப்பீர்.
ஆன்மா அன்புடன் செயல்பட்டால் ஐம்புலன்களும் அதன்வழி சிறப்பாக செயல்பட்டு மிகுந்த ஆனந்தத்தை ஆரோக்கியத்தை அளிக்கும். சந்தோஷம், என்றும் சந்தோஷம் என வாழ்வில் வளமாகும். அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்களின் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் பயனற்றதாகி விடும் என்கிறது வள்ளுவம்.
அன்புகொண்ட ஆன்மாக்களே, உடலின் உயிர் இருக்கும் வரைதான் உலகில் ஆதரவற்றவர்கள், ஆதரவில்லாதவர்கள் என்ற நிலைப்பாடு, எனவே மற்ற ஆன்மாக்களின்மேல் உங்களால் முடிந்த அளவு அன்பு செலுத்துங்கள். உங்கள் அன்பு நான் தனிமையானவன் இல்லை என்ற நினைவை அதற்குத் தரட்டும். இறுதிவரை அந்த அன்பு ஆறுதலையும், நம்பிக்கையும் தரும்.
ஆதரவற்ற ஓர் ஆன்மாவின் வேண்டுகோள் என்னவாயிருந்தது என்றால், “என்மீது அன்பு கொண்டு நேசித்த ஆன்மாக்களே, என்னைப்போல் எல்லா உயிர்களிடத்தும், உயிரின் ஆன்மாக்களிடமும் அன்பு செலுத்துங்கள், எல்லா உயிர்களும் சமம், அவை அன்பிற்காக ஏங்குபவை, அன்பு காட்ட தகுதியுள்ள உயிர்களே” என்பதாகும்.
 உங்கள் அன்பு அவர்களுக்கு சிறிதேனும் நம்பிக்கை உற்சாகத்தை ஏற்படுத்துமானால் அதுவே உங்கள் அன்பின் வெற்றிக்கு வெளிப்பாடு.
அவர்களின் வாழ்விற்கு வளம் சேர்க்கும் நலமுடன் வாழு. அந்த நலத்திற்காக வாழு. இவ்வாறு எல்லோரும் எல்லாரிடமும் அன்பு கொண்டால், அன்பைச் செலுத்தினால் உலகில் பல சிக்கல்கள் தீரும். பாவம், குற்றம் செய்ய தூண்டுதல் இருக்காது. அது போன்ற எண்ணங்களும் தோன்றாது. தீயவழிகளில் செல்லும் ஒருவனை அடிப்பதாலோ, திட்டுவதாலோ, மிரட்டுவதாலோ மாறுவான் என்று நினைப்பதை விட்டுவிடுங்கள். அவனிடம் அன்பு காட்டுங்கள். அவன் செயல்களில் மாறுதல் ஏற்படும்.
இதுதான் ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்விலும் செம்மைப்படுத்தும் ஆதாரம். அந்த அன்பு செலுத்தும் பண்பு ஓர் அளவிடமுடியாத பொக்கிஷம். நீங்கள் பார்த்து, பழகிய உங்களைப் பற்றி தெரிந்த, அனைவரின் அன்புக்கு நீங்கள் உடையவராவீர் என்றால், அதை நினைத்துப் பாருங்கள். மனதில் எவ்வளவு ஆனந்தம், மகிழ்வு ஏற்பட்டு உங்கள் செயலில் அதன் வெளிப்பாடு தெரிந்து, நீங்கள் வாழ்வில் பிரகாசித்து, வெற்றிப்பாதையில் நடக்க உதவும். அன்பை உணர்ந்தால், துக்கம் இருக்காது. எதையும் வெறுக்கமாட்டீர்கள். நல்ல எண்ணங்கள் பதிந்த மனதில் அன்பு தானாகவே, வற்றாத உற்று போல தோன்றிக் கொண்டேயிருக்கும்.
உங்களைப்பற்றி, உங்களின் செயல்கள்பற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் அன்புடன் நினைத்துப் பார்க்கின்றன என்ற நினைவு மிகுதியான மனவலிமையை உங்கள் உடலுக்கு, ஆன்மாவிற்கு ஏற்படுத்தும். நீங்கள் வளமுடன் இருக்க உங்கள் உணர்வில் இயற்கையாக கலந்திருக்கும்.
எனவே அன்பை மற்ற உயிர்களிடத்தும் காண்பிக்க உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இது! இவர்! என்ன இதனிடம்! இவைகளிடம் என்ன அன்பு வேண்டி இருக்கின்றது என்று உங்கள் உள்ளத்தில் கிளர்ந்தெழும் அன்பின் உணர்வுகளைத் தடை செய்யும் எண்ணங்களுக்கு முதலில் தடைபோடுங்கள்.
எப்போது நாம் நம்மிடம் இருக்கும் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லையோ, அதை நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதை புரிந்து அனைவரிடமும் அன்பு கொள்ளுங்கள். அப்போதுதான் அங்கிருந்து அன்பு உங்களுக்கு கிடைக்கும்.
உலகில் 3வகை மனிதர்களுண்டு. முதலாமவர் நிகழ்வை நடத்துபவர், நடக்க காரணமாயிருப்பவர், இரண்டாமவர் அந்த நிகழ்வு நடப்பதை, நடத்துவதை வேடிக்கை பார்ப்பவர், மூன்றாவது நபர் அந்த நிகழ்வை என்ன நடந்தது, எப்படி நடந்தது என ரசித்துக்கொண்டிருப்பவர். எப்படிப்பட்டவராயிருந்தாலும் நீங்கள் அனைவருடனும் அன்புடன் இருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வெருவரையும் புன்முறுவலோடு சந்தியுங்கள்.
உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். உங்களின் அந்த இனிய புன்முறுவல் அவர்களுக்கு ஆறுதலும், மனநிம்மதியையும் தரலாம். அதுவே அவர்களுக்கு வரப்பிரசாதமாகி நன்மைகள் பயக்கலாம். உங்கள் புன்னகையால் நீங்கள் இழப்பது ஏதுமில்லை. மற்றவர்களுக்கு நன்மைபயக்குமெனில் அதை நீங்கள் ஏன் ஏற்று புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கக்கூடாது.
மனதில், உலகில் எல்லாம் உயிர்களும். அன்பு காட்டப்பட வேண்டியவைகளே என்ற எண்ணங்களை பதிய வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே உங்களிடம் உள்ள பரிவு, பச்சாதாபம், பாசம் போன்ற உணர்வுகள் தோன்றும் போது அன்பு என்ற மந்திர செயலாக்கம் உங்களிடமிருந்து வெளிப்பட்டுவிடும். இயற்கையின் இந்த அதிசயத்தை நீங்களும் உணர்வீர்.
நீங்கள் அன்பு செலுத்தும் உயிர்களும் உணரும். இவ்வாறு அன்பு எல்லா உயிர்களுக்கும், எல்லோரிடமிருந்தும், எல்லா நிலையிலும் கிடைக்கும் போது போட்டி, பொறாமை, வஞ்சகம், ஏமாற்று, பழிக்குப்பழி போன்ற உணர்வுகளின் ஆதிக்கம் எல்லா ஆன்மா உயிர்களிடமிருந்தும் குறைய ஆரம்பித்துவிடும். ஓர் நிலையில் அவைகள் இல்லா நிலை எங்கும் உருவாகி ஆனந்தமான பரிபூரண அன்பு பரிமளித்து அன்புடன்கூடிய உயிர்கள்வாழும் உலகத்தில் நாம் இருப்போம்.
அது உடலுக்கும் ஆன்மாவிற்கும் எல்லாவிதத்திலும் எல்லையில்லா சந்தோஷம் தரும் சூழ்நிலையாக பரிமளிக்கும். இந்த சூழலில் மண்ணில் பூத்த, மலர்ந்த, பிறந்த எல்லா ஜீவன்களும் அதுஅது தோன்றியதின் பயனாக சந்தோஷத்தை முழுவதுமாக அடையும்.
இந்த சூழலை எதிர்பார்த்து அனைத்து உயிரும், ஆன்மாவும் விழையும் போது, நம்மிடையே வேறு வேறு எண்ணங்களைத் தோற்றுவிக்கும் உணர்வுகளைக் கொண்ட சகோதர, சகோதரிகளைக் கண்டு அவர்களின் சொற்களில், செயல்களில் மதிமயங்காமல், உண்மையான அன்பின் எல்லை என்னவென்று உங்கள் மனமும் ஆன்மாவும் புரிந்து கொண்டதைப் போல், அவர்களின் மனமும் ஆன்மாவும் புரிந்து கொள்ளும் வகையில் அன்புடன் அவர்களை வழிநடாத்தி செல்லுதல் உங்களின் தலையாய கடமையாகும்.
இதை செய்வீர்களானால் நீங்கள் அன்பு உலகத்திற்குள் செல்ல ஓர் ஒத்துழைப்பாளி. மற்றவர்களுக்கு உதவும் ஓர் தூதன் என்ற நினைவும் உங்களுக்கு மேலும் அன்பின் எல்லையை அடைய உதவிடும்.
உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாம், சுகம், இன்பம், நிம்மதி, சந்தோஷம், ஆனந்தம் ஆகியன எங்கே! என வாழ்வின் பாதையில் தேடிக்கொண்டு செல்கையில், அந்தந்த ஜீவன்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப அவைகளின் சிந்தனைகள் சென்று, செயல்களின் வெற்றிக்காக எதோ ஓர்வழி சென்று, எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலில், தன்னம்பிக்கை, நாணயம், அன்பு, பிற உயிர்களின் செயல்பாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டாலும், மாற்றமடைந்தாலும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், வெற்றி தன்வெற்றி என்ற வெறியில் மீண்டும், மீண்டும் தவறான பாதையில் சென்று கர்மபலன்களை சேர்த்து, பிற உயிர்களின் பாதிப்புக்களைச் சுமந்து, ஜீவனின் மீதிக் காலத்தில் துயரத்திற்கும், துன்பத்திற்கும் அடிகோலி, அதே துயரத்தையும் துன்பத்தையும் தன் வாரிசுகளுக்கு சுமத்திவைத்து விட்டு செல்வதில் என்ன பயன்?
பிற உயிர்களுக்கு பாதிப்பின்றி, சுகம், நிம்மதி, இன்பம், ஆனந்தம், சந்தோஷம் ஆகிய அனைத்தையும் அடைய, அன்பின் வழி முயற்சித்தால், துன்பமின்றி எல்லோரும் இன்புற்றிருக்க ‘அன்பு செலுத்துதலே’ அன்றி வேறொன்றுமில்லை எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள். ஆனந்தம் அடைவீர், ஜீவன்- ஆத்மா- பேரானந்தம் நிலையடையும்.
ஒவ்வொரு ஆன்மாவும் தன் மனமோ, உடலோ சோர்வினால் ஆட்கொள்ளப்பட்டு நலிவடையும் காலத்து, நோய்களினால் ஏற்படும் தாக்கத்தால் தன்னை அரவனைக்க ஓர் அன்புள்ளத்தை எதிர்பார்க்கின்றது. நோயில் இருந்து அந்த ஆத்மாவை மருந்துகள் விடுவித்து காப்பாற்றலாம், ஆனால் மாறாத அக்கறையுடன் கூடிய அன்பினை பெறும் நோயாளியே விரைவாகவும் முற்றிலும் குணமாவார்.
எனவே உடலின் ஆன்மாக்களே! அன்புடன் இருங்கள். உள்ளும், புறமும் அன்புடன் இருங்கள். அதுதான் உண்மையான மனிதநேய ஆன்மா! உள்ளே அன்பு மயமாக இருக்கவேண்டும் என நினைத்து, வெளியே அதிதீதமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, உள்ளே இருக்கின்ற அன்புக்கு அர்த்தம் இல்லாமல் செய்துவிட வேண்டாம். எப்பொழுதெல்லாம் சுயநலம் நம்மைவிட்டு அகன்று விடுகின்றதோ அப்போதெல்லாம் நம்முள் அன்பு வற்றாத ஊற்றாகி, பொது நலம் பிறக்கும்.
ஆண்-பெண் இருவரிடையே பரஸ்பரமாக இருக்கும் அன்பு பெருகி, கரைபுரண்டு, அவர்கள் சார்ந்த சமுதாயம் முழுமையின் நன்மைக்குமாக ஒடி, இறுதியில் தெய்வீக நோக்குடன் ஒன்றிப்போவதே வாழ்வின் அற்புத அம்சம்.
கிருஷ்ணர் பாண்டவதூதராக துரியோதனை சந்திக்க வந்தபோது அவரை துரோணர், திருதராஷ்டிரன், துரியோதணன் முதலானோர் தங்களின் மாளிகையில் வைத்து உபசரிக்க விரும்பினர். ஆனால் தர்மவானும், அன்பு மிகக்கொண்டவனுமாகிய திருதரஷ்டிரனின் தம்பி விதுரனின் குடில் இல்லத்திற்குத்தான் கிருஷ்ணர் சென்று தங்கி தான் தூது வந்த செயலை செய்ததாக வரலாறு பகர்கின்றது. அன்பு கொண்ட இடத்தில் தான் மனித நேயம் இருக்கும். அது எல்லோராலும் பாராட்டி போற்றப்படும். மதிக்கப்படும்.
மனிதநேயம்: நீங்கள் மனிதநேயம் கொண்டவராகத் திகழ எந்த நபரையும் எந்த காரணத்திற்காகவும் எந்த சூழலிலும் புண்படுத்தாதீர்கள், தவிர்க்காதீர்கள். இப்போது அவர்கள் அழகை இழந்திருக்கலாம், களை இழந்திருக்கலாம், பணம், வசதி இழந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ, கர்ம வினைப்பயனாலோ அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளபட்டிருக்கலாம். எவ்வளவு வசதியாய் வாழ்ந்தவர்கள், எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைக்கு வந்திருக்கலாம். உங்களுக்கும் அதைப்போன்றோ அதைவிட மோசமான நிலை வரலாம். அவர்களுடன் புன்முறுவலுடன் பழகி மனிதநேயத்துடன் இருங்கள்.
நாம் வெளியில் நடந்து செல்லும்போது முன்பின் தெரிந்திராத மனிதர் ஒருவர், எதிரே வரும்போது நம்மை மோதிவிட்டு மன்னிப்பு கேட்கின்றார். நாம் ஏதோ கவனத்தில் இருந்ததால் பொதுநோக்குடன் அதைப் பெரிது படுத்தாமல் செல்கின்றோம்.
ஆனால் நம் வீட்டில் இதே போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டாலோ, நமது செயல்களில் குடும்பத்தினரின் இடையூறு ஏற்பட்டாலோ நாம் மிகுந்த கோபம் அடைகின்றோம். தொந்தரவு செய்யாதீர் என உரக்க கூச்சலிடுகின்றோம். ஏன் இந்த நிலைப்பாடு. நம் குடும்பத்தினர் மனம் எவ்வளவு வருத்தப்படும் என நினையுங்கள்.
எப்போதும் உணர்ச்சி வயப்படாமல் ஓரே மாதிரி நடக்கப் பழகிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்றே பிரதானம். துன்பங்கள், துயரங்கள் தாண்டி அன்பு செலுத்தப் பழகுங்கள். வாழ்வு மகிழ்வுடன் வாழ்வதற்கே! தவறுதலாக கோபித்தாலும் பிறகு அதை உணர்ந்து அவர்களிடம் உங்கள் தவறான கோபத்திற்கு பரிகாரமாக அன்புகொண்டு பேசுங்கள். பழகுங்கள். உங்கள் வருத்தத்தை தெரிவியுங்கள். அவர்கள் சந்தோஷம் அடைவர். நீங்களும் அதனால் ஆனந்தப்படுவீர்கள்.
“அறிவு இருக்கும் இடத்தில் அடக்கம் இருப்பது போல, மனிதநேய அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்.”
பூவின் மென்மை அனைவரும் அறிந்ததே! அதன் வசீகரமான மணம், கவர்ச்சியான நிறங்கள் எல்லோரையும் அதன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. இதைப்போலத்தான் நமது இதயமும் மென்மையானது. அதிலே தோன்றும் உணர்வுகள் கணக்கிலடங்கா!
அந்த உணர்வுகளைப் பக்குவப்படுத்தி நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாக மாற்றினால், செயல்பட்டால் அதன் மணம், செயலாக்கம் பூவின் நிறத்தை, மணத்தை எல்லோரும் விரும்புவதுபோல அன்பு இதயத்துக்கு சொந்தமான உங்களையும் எல்லோரும் விரும்புவர். உங்கள்மேல் அன்பு கொள்வர். மனிதநேயம் பெருகும். வாழ்வில் இனியநிலை பெற்று சந்தோஷமடைவீர்.
போதனை வகுப்புகள் முடிந்ததும் குரு தன் மாணவர்களிடம், யார் என் போதனையை சரியாக நடைமுறைப் படுத்துகின்றாரோ அவரே என் சீடர் என்றார். சில நாட்களுக்குப் பின் மாணவர்களை ஓர் இடத்திற்கு வரச் சொன்னார். வழியில் முட்புதர்கள் கிடந்தன, முதல் மாணவன் யாரோ முட்டாள் வழியில் முள்ளை போட்டுவிட்டு போய்விட்டான், எனக்கு நேரமாகிவிட்டது என கடிந்து விலகிச் சென்று விட்டான்.
எத்தனை முள் இருந்தால் என்ன அப்படியே தாண்டிச் சென்று விடுவேன், என அப்படியே செய்தான் இரண்டாம் மாணாக்கன். மூன்றாமவன் பின் வருபவர்களுக்கு தொந்திரவு என் நினைத்து, முட்களை அப்புறப்படுத்தி சென்றான். மற்றவர்கள் ஞானி முன்னிருக்க, தன் தாமத்திற்கு காரணம் சொல்லி வருத்தம் தெரிவித்தான் கடைசியாக வந்தவன். உன் தாமதம் மனிதாபிமானத்தால் ஏற்பட்டது என்று கூறி அவனே தன் சீடன் என்றார். மனிதாபிமானம் போற்றப்படும் செயலாகும்.
கடிதங்கள் எழுதப்படும் அந்நாளில் இங்கு அனைவரும் நலம்! அங்கு அனைவரும் நலமா! என்று எழுதத்துவங்கியபோது, அங்கு மற்றவர்களின் நலனில் அக்கறை தென்பட்டது. அன்புடன் நலம் விசாரித்தனர். அந்தப்பகுதியில் பழகியோர், அருகிலுள்ளோர், உற்றார், உறவினர் நலன் என்று பெயர் குறிப்பிடப்படாமல் விசாரிக்கப்பட்டது. அன்பின் வயப்பட்ட சிறந்த மனிதாபிமானச் செயல்.
ஒவ்வொரு மனிதரையும் நாம் அவரவர் வட்டத்திற்குள் வைத்துதான் பார்த்து பழகியிருக்கின்றோம். நம் எல்லைக்குள் மற்றவர்களையும், அவர்களின் எல்லைக்குள் நாமும் செல்வது நமக்கு பிடிப்பதில்லை. நாம் நம் எல்லைக்குள், அவர்கள் அவரவர் எல்லைக்குள் என்று மனம் தனக்குள் ஓர் வட்டம் இட்டுக் கொள்கின்றது. இது தவறான எண்ணங்களின் நிலைப்பாடு. பொதுவான எண்ண ஓட்டங்களில் நமது சிந்தனை செல்லாததே இந்த குறுகிய எண்ண வட்டங்களுக்கு காரணம்.
எல்லோரையும் உலகில் வாழ உரிமையுள்ள ஜீவன்களாகக் கருதி, பொதுநலச் சிந்தனைகளின் அடிப்படை வடிவில் செயல் கொண்டால் இது போன்ற குறுகிய வட்ட உணர்வுகள் தோன்றாது.
பொது இடங்களில் ஏனைய ஆத்மாக்களின் மீது அன்பு மலரும். அது உங்களின் தரத்தை மேம்படுத்திக் காட்டும். இந்த நிலை கண்டால் உங்கள் வீட்டில் பொதுவாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் இலகுவாக தீர்த்துவைக்கப்படும். வெளியில் இனப்போர், சச்சரவுகள், வீண்விதண்டாவாத பிரச்சனைகள் தீர்ந்து நல்லுறவு மேம்படும். அருள் பொழிபவர்களுக்கு பிரியமானவர்களின் பட்டியல் எது என்றால் சக மனிதர்களை நேசிப்பவர்களின் பட்டியலேயாகும். மனிதநேயத்துடன் நீ ஆன்மாக்களை உன் அன்பின் வயப்படுத்தினால் உனக்கு எதிரிகளே இல்லை என்பது உனக்கு புரியும். எல்லோரும் உன் அன்பின் வட்டத்து நண்பர்களே!
தீயபழக்க வழக்கங்களும், தீயசிந்தனைகளும், பிறருக்கு தீங்குவிளைவிக்கும் செயல்களுமாக தொடர்ந்து செய்து துன்பங்களைச் சேர்த்துக்கொண்டு துயரங்களில் மூழ்கியிருக்கும் ஆன்மாவே நீ எப்போதும் இப்படி துன்பத்தின் வாயில் உழன்று கொண்டிருப்பதுதான் நரகம். பல ஆன்மாக்கள் சில சமயங்களில் இந்த நரக வேதனையிலிருந்து காப்பாற்று என குரலிடுவதை கேட்கின்றோம்.
அவர்களுக்கு ஒன்று சொல்வது என்றால், யார் என்ன சொன்னாலும் கேட்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்துவிட்டு, நீங்களே உங்களைச்சுற்றி குழி பறித்துக்கொண்டு பின் அதில் விழுந்து தள்ளாடி இந்த சமுதாயத்தின்மேல் கூக்குரலிட்டு என்ன பயன் என்பதாகத்தான் இருக்கும்.
எல்லோரும் மனித ஆத்மாக்களை நரகத்திற்கு செல்வீர்கள் என பயமுறுத்துகின்றனர். அல்லது சொர்க்கம், என்று ஆசையை தூண்டுகின்றனர். இந்த பயமும் வேண்டாம். அந்த ஆசையும் வேண்டாம். நரகம் என்பது எங்கே! அங்கே எரியும் கொப்பரை எண்ணெய் அண்டாவில் நீ செய்த குற்றங்களுக்காக போட்டு எரிப்பர் எனக்கூறுவதை கேள்விப் பட்டுள்ளேன்.
என்ன காட்டு மிராண்டித்தனமான மனித நேயமில்லா கற்பனை! தீயில் ஒருவர் கருகினால் அவர் எவ்வளவு துயரம் கொள்கின்றார் என்பதை நாம் தெரிந்துள்ளோம். இப்படியெல்லாம் சொல்லி ஒருவரை பயமுறுத்தி என்ன பயன்! என்ன செய்தால் பாவம்! எது பாவமில்லை! என்ற தடுமாற்றத்தை ஆன்மாக்களிடையே உண்டுபன்னுகின்றது. உங்களுக்கு உதவியவர்களையும், நம்பி வந்தவர்களையும் ஏமாற்றாமல் உங்களால் முடிந்த நன்மைகளை கருணையுடன் செய்ய முயலுங்கள். நீங்கள் அன்பு கொண்டு இருந்தால் அதன்பின் கர்மப்படி நடப்பது நடக்கட்டும்.
செய்த செயல்பற்றி அச்சம் கொண்டு குற்றம் செய்துவிட்டோமோ என தவிக்கும் ஆன்மாக்கள் அதிகமாகிவிட்டனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்விலேயே கவனத்தை செலுத்தி அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்கள் அதிகம். செய்ய நினைப்பவைகளைச் செய்துவிட்டு வறுத்தமுறுபவர்கள் நிறையபேர். செய்யுமுன் ஆலோசனை கொள்! செய்தது தவறு என உணர்ந்தால் விட்டுவிடு! வேறு நல்லசெயலில் கவனம் செலுத்தி செயல்படு. மனிதநேயத்துடன் உங்கள் செயல் இருந்தால் சொர்க்கம், நரகம் பற்றிய கவலை எல்லாம் வேண்டியது இல்லை.
இந்தப் பிறவியில் உங்களுக்கோ உங்கள் உடம்பிற்கோ கிடைக்காத அந்த சொர்க்கம் ஒரு ஆன்மா இறந்தபின் என்ன வேண்டியிருக்கின்றது! நீங்கள் மனிதநேயத்துடன் அன்பு கொண்டு அனைத்து உயிர்களிடத்தும் நேசமுடன் உறவாடி அவர்களை சந்தோஷம் காணவைத்து நீங்கள் போதும் என்ற உணர்வுகளுடன் தனக்குத்தானே நிறைவுகண்டு ஆனந்தம் அடைதலே ஓர் உடலின் ஆன்மாவிற்கு சொர்க்கமாகும். இது உடலின் ஆன்மா பிறந்தபின் தேடும் சொர்க்கம். இன்னொரு சொர்க்கமும் உண்டு.
உண்மையில் சொர்க்கம் என்பது ஓர் உயிர் அதன் கர்மபலன்களுக்கேற்ப பிறந்து துன்ப, துயரங்களில் உழலாமல், அதாவது பிறப்பு என்பது இல்லா ஆன்மாவாக மாறுதலேயாகும் அதாவது வீடு பேறு -என்பதாகும். இந்த சிறப்பு விழிப்பு நிலையைக்காண மனித ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் முயற்சித்து வெற்றி காண்கின் சொர்க்கம் என்பது கனவல்ல! நனவே! இப்பூவுலகில் பிறந்த ஆன்மாக்களுக்கு சொர்க்க பூமியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நீங்கள் மனிதநேயம் பூத்த முழுமலராகா இருந்தீர்களானால் நல்லது எது, கெட்டது எது என்று அவைகள் தாண்டி தீர்க்கமாக சிந்தித்து செயல்பட முடியும்.
மனித நேயத்துடன் உங்கள் ஆன்மா செயல்படின் தெய்வத்தின் அருள் உங்களிடம் சேரும். வாழ்வில் இது ஓர் அற்புதமல்லவா! அதை விட்டு ‘என்புதோல் போர்த்த உடம்பு’ போன்று நடந்து வாழ்வின் இனிய சந்தர்ப்பங்களை இழந்து விடாதீர்கள்! மனிதநேயம் கொண்டிருக்கும் ஆன்மாவே மகான் ஆகின்றது. பிறகு தெய்வங்களோடு உறவும் கொள்கின்றது.
சமுதாய பேதமின்றி ஒவ்வொரு உயிரும் மற்ற உயிர்களிடம் நேசமுடன் இருந்தால் கலவரங்களில்லை. குழந்தை தாய்-தந்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி அவர்களைச் சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் அன்பு காட்டுகிறது. இறைவனின் குழந்தையாகிய நீ அவ்வாறே அனைவரிடமும் அன்பு காட்டினால் பேதமில்லையடா! இனத்தில் ஆண், பெண் தவிர வேறுபேதமில்லை என்பதை அனைவரும் உணரவைப்பீர் ஆன்மாக்களே!
கங்கைநீர் புனிதம்தான்! காவிரி நீர் புனிதம்தான்! ஜீவநதிகளின் நீர் புனிதம்தான்! மனித நேயத்தால் பிறர் துயர் கண்டு கண்ணில் தோன்றும் கண்ணீர் எல்லாவற்றையும்விடப் புனிதமானது. அதன் வழி செயலாக்கம் மிகமிகப் புனிதமானது.
இன்றுபோய் நாளைவா என்ற பாணியில் பலமுறை அலைய விட்டு பின் உண்ணாவிரதமிருந்து மன உறுதியுடன் சோதனைகளைக் கடந்து வேறு எவருக்கும் மூலமந்திரத்தின் உட்பொருளை சொல்லக் கூடாது என்ற சத்திய உத்திரவாதத்தின் பேரில், திரு எட்டெழுத்தின் உட்பொருளை திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து உபதேசமாக பெற்ற ஸ்ரீராமனுஜர், கோபுரத்தின் மீதேறி திரண்ட ஊர் மக்களுக்கு மந்திரத்தையும் அதன் பெருளையும் கூறினார்.
“சத்தியத்தை மீறிய சண்டாளா! சத்தியம் தவறிய நீ நரகம் போவாய்” என கோபத்தின் உச்சநிலையிருந்து கூறிய குருவைப் பார்த்து, “நான் ஒருவன் நரகம் சென்றாலும், இந்த மந்திரத்தின் பொருளை அறிந்த அயிரக்கணக்கானோர் வைகுந்தம் செல்வர், அந்த மகிழ்வு எனக்குப் போதும்” எனக் கூறிய ஸ்ரீராமனுஜரின் மனிதநேய பண்பு எவ்வளவு சிறந்தது.
பிறவியின் உடல்: பெற்றோரின் தூய அன்பில் கிடைத்த உடலிது. இதை மாசுமருவற்ற நிலையில் பேணிக்காத்து கொடுத்த பெற்றோர்கள் அதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள். எத்தனை பிரார்த்தனைகள் செய்திருப்பார்கள். என்ன என்ன வேண்டுதல்கள் செய்திருப்பர் குழந்தை நலமுடன், வளமுடன் வளரவேண்டும் என்று. அப்படி சீராட்டி, பாராட்டி பேணப்பட்ட இந்த உடம்பை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
அதற்கு தெளிவான தூயசிந்தனை, பிறருக்கு ஊறுவிளைவிக்காத செயல்பாடுகள் கொண்ட எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். அன்பே பிரதானம் என அன்பின் மகத்துவத்தை புரிந்து கொண்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுமென்ற எண்ணங்களோடு வாழவேண்டும். பெற்றோர்களின் அன்பில் கிடைத்த இந்த பிறவியின் பயனம் எப்போது முடியும் எனத்தெரியாது. இடைப்பட்ட காலத்தில் உடல், உயிர், ஆன்மாவிற்கு சந்தோஷம் வேண்டி பயனிக்க வேண்டும். அந்த சந்தோஷம் எப்படி அடையவேண்டும் என வரைமுறை கொள்ளல் வேண்டும்.
ஒவ்வொரு உயிரும் உலகில் அவதரிக்கும்போது அதற்கென தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன. அந்த திறமைகளை புரிந்து அதை மலரவைத்து அதனதன் தனித் தன்மைதனை காக்க வேண்டும். மற்ற உயிர்களுடன் ஒப்பிட்டு அந்ததிறமை உங்களிடம் உள்ளதா என ஆராயாமல் உங்களிடையே மறைந்திருக்கும் அற்புதமான திறமையை காணமுயலுங்கள்.
எந்தவிதமான போட்டிகளின்றி, எந்த ஆத்மாவுடனும் ஒப்பிடப்படாமலும், செய்யும் செயல்களை அதனதன் தன்மைகளுடன் செய்து ஆனந்திக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஓர் ஊக்கசக்தி உண்டு. ஏனெனில் அதிலிருந்து நமக்கு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் செயல்பாடுகள் இருக்கின்றன. எல்லா விருப்பங்களுக்கும் இலக்கு அன்பாகத்தான் இருக்க வேண்டும். எனவே நீங்கள் அன்பு சக்தி கொண்டவராக இருந்தால் வேரொன்றும் வேண்டியது இல்லை.
வேண்டும்போது: அன்பேசிவம். அன்பினால் எல்லாம் சாதிக்க முடியும் என உறுதிப்பாடு வேண்டும். உறுதிப்பாட்டுடன் செயல்பட நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவு உங்கள் செயலை செம்மைப்படுத்தும். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தை நினைவாகக் கொண்டால் அந்த எண்ணங்கள் ஒரு சக்தியாக உருவாகி, சக்தி அலைகளாக உங்களிடம் மற்றவர்களை கொண்டு வந்து சேர்க்கும்.
நீங்கள் அந்த அன்பின் வட்டத்திற்குள் இருப்பீர். உங்களைச் சுற்றி அந்த வட்டம் மிளிரும். வாழ்க்கை சுமையாக இருக்காது. சுகமாக இருக்கும். அன்பின் அலையில் நீங்கள் இனிது பயனம் செய்வீர்கள். நீங்கள் வாழ்வில் முன்னேறி உங்களைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றி அழைத்துச் செல்வீர்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைவு கொள்ளுங்கள். அந்த சூழ்நிலையை மீண்டும் மீண்டும் நினைத்து சந்தோஷமடையுங்கள். இப்படி உங்கள் மனம் பழகிவிட்டால் நீங்கள் நினைத்தபோது சந்தோஷம் உங்களை வந்தடையும். தனது அனுபவத்தில் தெரிந்ததை புரிந்ததை உண்மை என மனம் நம்பத் தொடங்கிவிட்டால் அதன்பிறகு மாறுபாடான வாதங்களை எண்ணங்களை அவ்வளவு விரைவில் ஏற்றுக்கொள்ளாது. எனவே அன்புடன் பேசி, அன்பாக செயல்பட்டு வாழ்வை சந்தோஷமாக்கிக் கொள்ளுங்கள்- அன்பே சிவம் என்பதை உணர்வீர் ஆசிகளுடன்-குருஸ்ரீ பகோரா.

4-2.ஆனந்தப் பூக்கள்!

Written by

ஆனந்தப் பூக்கள்!                                                                                                        

அழகிய உடல் கொண்ட ஆன்மாவைப் பார்த்தாலும், அழகு நிறம்பிய எதைப் பார்த்தாலும், இளம் பெண்ணைப் பார்த்தாலும், குழந்தைகளைப் பார்த்தாலும், மழலை அல்லது பருவத்து குறும்புகளைப் பார்த்தாலும் கேட்டாலும், ஒருவருக்கு உதவி செய்வதாலும், உதவி ஒருவருக்கு நன்மை பயத்து அதை அவர் நம்மிடம் சொல்லும் போதும், இயற்கையின் ஏற்ற தாழ்வுகளைப் பார்த்து ரசிக்கும் போதும், நீரின், உயிர்களின் பலப்பல ஓசைகளைக் கேட்கும்போதும், இயற்கையின் அசைவுகளை கானும் போதும், நீராக ஒடி நீர்வீழ்ச்சியாகும் அழகைக் கானும் போதும், மரம் செடி கொடிகள் முளைக்கும் போதும், வளர்ந்து மொட்டு பூவாகப் பூக்கும் போதும், காயாகிக் கனியாகும்போதும், கல்லிலே கலை வண்ணம் கானும்போதும், சிந்தனை கவரும் செயல்களையும், சிற்பங்களை பார்க்கும் போதும், சுவைமிக்க வார்த்தைகளை கேட்கும்போதும், ஒருவரை ஏமாற்றி விட்டேன் என்று அவரை ஏமாற்றியவிதம் பற்றி அவரிடமே கூறி ஒருவர் வர்ணிக்கும்போது அவரின் வெகுளிதன்மையைக் கண்டபோதும், நண்பர்களுடன் உரையாடும் போதும், நேரங்களை அவர்களுடன் கழிக்கும்போதும், பழய பசுமை எண்ணங்களை நினைக்கையிலும், சுத்தமான ஜில்லென்ற காற்றை நுகரும் போதும், மழைச்சாரல் பொழியும்போதும், நம் செயல் நம் சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, மற்றவர்களுக்கு ஆனந்தம் தரும் என்ற நினைவிலும், நம் செயலால் அவர்கள் ஆனந்தம் அடைந்ததைப் பார்த்தபோதும், இனிப்பு, விரும்பிய உணவு வகைளை உண்ணும்போதும், இனிய மனதை மயக்கும் பாடல், இசை, ஒலி கேட்கும்போதும், மனதைக் கவரும் நடன, நாட்டிய நிகழ்வுகளைக் காணும்போதும், நல்ல பண்புள்ள செயல்களைக் கானும்போதும், செய்யும்போதும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும்போதும் என்று வரிசைப்படுதிக் கொண்டே போனால்..

இவ்வுலகில் அளவிடமுடியா எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவையாக அமைந்துள்ளது. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம்! சந்தோஷம்! ஆனந்தம் நிரம்பிருக்கும் இடத்தில்தான் அன்பும் கருணையும் இருக்கும். பூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும். அந்த மிருதுவான உணர்ச்சி ஆன்மாவிற்கு ஓர் புதிய உற்சாகத்தை அளிப்பதாக இருக்கக்கூடும். வளமுடன் வாழ்வது என்றால், ஆனந்தமாக வாழ்வது எனப்பொருள். வளமுடன் என்பது உங்களிடம் என்னென்ன உள்ளது என்பதில் இல்லை! எப்படி இருக்கின்றீர்கள் என்பதில்தான் இருக்கின்றது.
நம் எல்லாவகைச் செயல்களும் நமது ஆனந்தத்தைக் குறிவைத்தே! ஒவ்வொரு நாளும் படுக்கைக்குமுன் இன்று எவ்வளவு ஆனந்தத்தை அனுபவித்தீர்கள் என நினையுங்கள். ஏன் இன்று இல்லை. அல்லது நேற்றைய தினத்தைவிட எப்படி குறைந்தது என யோசியுங்கள். விடைகாணுங்கள். அடுத்தநாள் முழு ஆனந்தத்தை அடைய முற்படுங்கள். ஆனந்தவாழ்வின் தாரகமந்திரம்இதுவே!
இப்படி அளவில்லா வளமுள்ள ஆனந்த சந்தோஷத்தை தரும் நிகழ்வுகளைப் புறக்கணித்து துன்பத்தில் துவளாமல், இந்த இனிய சந்தோஷத்தை அடைய எல்லோரும் அவரவர் எண்ணங்களை உணர்வுகளை பதப்படுத்திக் கொண்டு ஆனந்த சந்தோஷமடைய முயலுங்கள்.
வாழ்வில் பணம், புகழ், கௌரவம், வசதி வாய்ப்புக்கள்தான் முக்கிய நோக்கங்கள் என்று ஆக்கிக்கொண்டவர்களுக்கு ஆனந்தம் தொலைந்துவிடும். வாழ்வு சந்தோஷம், அமைதி, அன்பு என்பதை நினையுங்கள். ஆன்மா ஆனந்தத்தின் உயிராக வளரவேண்டும். அதற்கு முயற்சியுங்கள். வாழ்வியலில் இதுவரை என்னென்ன சேர்த்தீர்கள் என்பது முக்கியமில்லை. அனுபவிக்க ஏகப்பட்டது இருந்தும் கிடைக்காத ஒன்றிற்காக ஏக்கம் கொண்டு செயல்பட ஆரம்பித்த மனநிலைதான் நம் துயரங்களுக்கு காரணமாகிவிடும். எவ்வளவு சந்தோஷமான ஆனந்த வாழ்கையை அனுபவித்து மகிழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கியமான ஒன்றாகும்..
எல்லா உடலின் ஆன்மாக்களுக்கும் இவ்வுலகில் சந்தோஷத்தை தேட உரிமையுண்டு, ஆனால் கவலையை பரவச்செய்ய யாருக்கும் உரிமையில்லை. எனவே சந்தோஷத்தைத் தேடுங்கள்! ஆனந்தத்தை ஏற்படுத்தும், உள்ளமும், உள்ளத்தின் உணர்வுகளும், உடலும், உடலின் ஆன்மாவும் ஆனந்தத்தால் சந்தோஷமடையும். இந்த சந்தோஷம் எல்லா நிலையிலும் நிதானம், பொறுப்பு, சீரிய சிந்தனைகளை வழங்கி வாழ்வில் வெற்றியை காண வழிவகுக்கும். எனவே எல்லோரும் இந்த ஆனந்த நிலையடைதலே சந்தோஷத்தின் சந்தோஷம்.
ஓர் ஆன்மாவுடைய உடல் இன்னொரு ஆன்மா உள்ள உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது ஒரு பெரியதானம் அளிப்பது போன்றது. ஓர் ஆன்மா மலர்ந்திருந்தால் அதனுடைய உடலின் முகம் மகிழ்வோடு காணப்படுவதை கண்ணுற்ற மற்ற உதடுகளிலும் ஓர் புன்னகை தவழும். இந்த புன்னகைகள் கஷ்டமான வேலைகளை மிகமிக எளிதாக்கிவிடும். அது உங்களுக்கு மகிழ்வு, மற்றவர்களுக்கும் ஆனந்தம். ஆனந்தம் கொண்ட உயிராக நீங்கள் இருந்தால் ஓர் அற்புத அழகு மிளிரும். மனித உயிர்கள் என்றன்றி உலகத்தின் எல்லா உயிர்களும் கவரப்பட்டு உங்களை நோக்கிவரும்.
சந்தோஷத்தை மற்றவர்களுக்கு அளிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் ஆனந்தம் பெரிது. அதுவும் ஒருசில காரணங்களால் மறுக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு அதை நீங்கள் அளித்தல் என்பது ஓர் உன்னதமானச் செயல்.
நிகழ் வாழ்வின் இனிமைதனை சுவைக்க கடந்தகால கசப்புகளை மறக்கப் பழகுங்கள். உங்கள் செயல் வெற்றிபெற அதில் கவனம் செலுத்துங்கள். அது அடுத்தவர் பற்றி வேண்டாத எண்ணங்கள் தோன்றி தேவையற்ற செயல்களால் உங்களைச் சோர்வடையச் செய்யாமலிருக்கும். மனதிற்கு இஷ்டமான செயல்கள் உங்களை புத்துணர்ச்சியுடன் இயக்கும் தன்மை கொண்டவை. புத்துணர்ச்சியிருந்தால் நீங்கள் மற்றவர்களால் போற்றப்படுவீர்கள். எந்த சூழலிலும் ஓர் நிலைப்பாட்டில் சமநிலையில் இருக்க பழகவேண்டும். அது ஆனந்தம்.
ஆனந்தம் அடைய ஓர் வழி, உழைக்க வேண்டும். உடல் உழைப்பு செய்தால்தான் வாழ்வின் முழுச் சந்தோஷத்தையும் உணரமுடியும். உழைக்கத் தெரியாதவனுக்கு மகிழ்வின் சுகம் புரியாது. உழைப்பு உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரும் செயலாகும். அதிலும் அவரவர் வேலையை அவர்களே செய்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. உழைப்பு உற்சாகத்தையும் இளமையையும் தரும் ஒப்பற்ற தன்மையுடையது. உழைப்பதால் ஒருவரது சக்தியேதும் விரையமாதில்லை. உடலும் மனமும் பலமடைந்து பொலிவுடன் விளங்கும். அது அளவில்லா ஆனந்தம் தரும்.
ஆனந்தம்பற்றி தெரியாமல் இருப்பது நம் உள்ளே என்ன இருக்கின்றது என்ற அறியாமைதான். வெளியே இருப்பவைகள்தான் நம் உணர்வுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாம் செய்யும் செயலுக்கு அவர் என்ன சொல்வாரோ, இவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணங்களால், வெளி மனித உலக ஆக்கிரமிப்பால் நம்மால் விரைவில் முடிவு எடுத்து செயல்பட முடிவதில்லை. வெளிமனிதர்கள் எதையும் சொல்லலாம். ஆனால் செயல்பாடு, பாதிப்பு என வந்தால் அவர்கள் ஒதுங்குவர். அப்படியிருக்கும்போது நாம் ஏன் அவர்களை நினைத்து நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும்.
நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு நாமே எஜமான். அதனால் அடையும் பலாபலன் நம்முடையதே! அதை சிந்தித்து நாம் செயல்பட வேண்டுமே ஒழிய, அடுத்தவரின் நிலைக்காக, வேண்டுதலுக்காக, குறிக்கோளுக்காக நம் செயலை மாற்ற முடியாது, ஒருமனித ஆன்மாவிற்கு உட்புற நிகழ்வுகள் நிகழ்ந்தால்தான்  உண்மையான ஆனந்தம் உணரமுடியும்.
அது எல்லையற்ற உணர்வுகளுடையது. சூழ்நிலைக்கேற்ப நம்மை பதப்படுத்திக் கொள்வது உண்மையான ஆனந்தம். பிறஆன்மாக்களிடம் அன்புடனிருப்பது, துயரத்தில் துடிப்பவர்களுக்கு ஆறுதலலிப்பது, பரிதாபத்துக்குரியவர்களை பரிவுடன் கவனிப்பது, பொதுவாக மனிதநேயத்துடன் செய்யும் இதயபூர்வமான செயலாக்க சேவை ஆனந்தமானது.
உலகத்தின் இன்பங்களை எல்லாம் நுகர்ந்து அனுபவித்து ஆனந்தப்பட நினைக்கும் ஆன்மாக்களே! தனு என்ற உடல், கரணம் என்ற உடற்கருவிகள், புவனம் என்ற அந்தந்த ஆத்மாக்கள் வாழும் உலகம், போகம் என்ற அனுபவம் என இந்த நான்கும் குறைவின்றி ஓர் ஆன்மாவின் உடலின் உயிருக்கு கிடைத்தால்தான் அந்த ஆன்மா ஆனந்தப் படமுடியும். அளவற்ற முறையற்ற இன்பம் துன்பத்தைதான் தரும். அளவுடன் முறையுடன் அனுபவிப்பவனுக்கே இன்பங்கள் நீடித்து இருக்கும்.
நாம் ஆசைப்பட்டதை அடைவதில், அடைந்ததில் ஆனந்தப்படுகின்றோம். உண்மை என்ன வென்றால் இதுகாறும் மனதில் உழன்றுவந்த, உங்கள் எண்ணங்களில் திரண்டிருந்த, கண்மூடித்தனமான ஆசை, மனதிலிருந்து பல தடங்கல்களுக்கிடையே வெளியேறி மனது நிம்மதி அடைந்ததால் ஏற்பட்டதே அந்த ஆனந்தம்.
என்றும் ஆசைப்படுவதில் ஆனந்தமில்லை. ஆசையை விடும்போதுதான் அமைதி ஏற்பட்டு ஆனந்தம். ஆனால் மனித ஆன்மாக்களுக்கு ஆசைப்படத்தான் தெரிகிறது. ஆசைகளை விட்டுவிடத் தெரிவதில்லை. எப்படியிருப்பினும் மனம் ஆனந்தத்தை மட்டும் தேடிக்கொண்டிருக்கின்றது.
அந்த நாடு அப்போதுதான் விடுதலைப் பெற்றிருந்தது. அதன் அதிபராக பொறுப்பேற்றவர் நாட்டில் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி, கல்வியுடன் விளையாட்டுகளையும் பயில்விக்க திட்டம் போட்டார். அதன்படி ஒரு பயிற்சியாளர் அந்த கிரமத்து இளைஞர்களை இரு குழுக்களாகப் பிரித்து அந்த விளையாட்டின் சட்டதிட்டங்களை போதித்தார். எந்த அணி என்னென்ன தவறுகள் செய்தது, எத்தனைப்புள்ளிகள் என்று கணக்கிட ஆரம்பித்தார். முடிவில் இந்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள் அடுத்த அணிக்கு இவ்வளவு புள்ளிகள். குறைவாக புள்ளிகள் எடுத்த அணி தோற்ற அணி என்று கூறி நாளை அனைவரும் நன்றாக விளையாடி போட்டி போட்டு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அங்கும் இங்குமாக ஆனந்தத்துடன் விளையாடி மகிழ்வு கொண்டோம். வெற்றியும் தோல்வியும் எங்களுக்கு வேண்டாம். விளையாடிய அந்த சந்தோஷம் மட்டும் போதும் என்றனர்.
இதேபோன்று வாழ்வை ஆனந்தம் தரும் விளையாட்டாக கருதினால் அது இன்பம். போட்டியாக கருதினால் அது சூதாட்டம். இன்பமும், துன்பமும் வரலாம். அதனால்தான் குழந்தைகள் விளையாட்டை விளாயாட்டாக விரும்புகின்றன. தெரிந்த மனிதன் அதை ஒரு போட்டியாக புரிந்து கொள்கின்றான்.
ஓர் யோகிடம் மூன்று வரங்கள் பெற்றான் ஒருவன். அவைகளை ஒருமுறைதான் உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் எதை விரும்பினாலும் உடனே நடக்கும் என்பது வரம். வீட்டிற்குச் சென்றான். அன்று அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து மோதல் அதிகமாயின. மனம் வெறுத்து இனி இவளுடன் வாழ்வது சரியில்லை என நினைத்தான். அவள் இறப்பதேமேல் என நினைத்தான். அந்த வரத்தின் படி அவள் இறந்துவிட்டாள். ஊரார் கூடி அவளின் பெருமைகளைப் பற்றி பேச தான் அவசரப்பட்டு விட்டோமோ எனநினைத்து வருந்தினான்.
அவள் மீண்டும் உயிருடன் வந்தால் போதும் என நினைத்தான். அப்படியே வரத்தின்படி அவள் உயிர் பிழைத்தாள். அப்போது இன்னும் ஒருமுறைதான் வரம் கேட்க வேணும் என்ற நினைவு வந்தது எதைக் கேட்பது, ஒன்னும் புரியவில்லை.
ஆனாலும் அவன் மனம் இறைவா, வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் கிடைக்க, வரம் எனக்குத் தா என்றான். இறைவன் சொன்னான் இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழக் கற்றுக்கொள். ஆனந்தத்துடன் வாழ்வாய் என்றார்- உயிர்களே போதும் என்பதே பொன் செயும் மருந்து என எப்போதும்  நினைவுகொண்டு இருக்க ஆசிகள்-குருஸ்ரீ பகோரா.

4-1.பயணம்! யாத்திரைப்பூக்கள்!

Written by

பயணம்! யாத்திரைப்பூக்கள்!                                                        

பொதுவாக யாத்திரை, பயணங்கள் பலவகைப்படும். யாத்திரை என சொன்னால் அருள் நோக்கோடு புண்ணியத் தலங்களுக்கு செல்வது என்றே பொருள் கொள்கின்றனர். பயணம் என்பது ஒரிடத்திலிருந்து வேறு ஓரிடத்திற்கு ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு செல்வது ஆகும்.
இங்கே சொல்லப்படும் பயணம், யாத்திரை, முதலாவது வாழ்க்கைப் பாதையில் ஒர் ஆத்மாவின் உடலின் செயலாக்கங்களால் பயணிப்பது, மற்றது நமது உடலின் உள்ளே நரம்பு மண்டலத்தில் எண்ணங்கள், செயலாக்கங்கள் பயணித்தல் பற்றியதாகும்.
முதலாவதுவெளிப்பயணம்: உலகம் நம்மிடம் இருக்கக்கூடாது. ஆனால் உலகத்தில் நாம் இருக்கலாம். குடும்பம் நம்மிடம் இருக்கக்கூடாது. ஆனால் குடும்பத்தில் நாம் இருக்கலாம். வண்டி நம்மேல் ஏறக்கூடாது. நாம் வண்டியில் ஏறி பயணம் செய்யலாம். கப்பல் கடலில் இருக்கலாம். கடல்நீர் கப்பலில் புகக்கூடாது. உலக வாழ்க்கை உன்னிடம் கூடாது. ஆனால் எப்படியிருந்தாலும் வாழ்க்கையில் நீ பயணம் சென்றாகவேண்டும். அமைதியாக சந்தோஷமாக பயணித்து ஆனந்தம் காணவேண்டும்.
தினம் தினம் விடியல், சூரிய உதயம் கான்கிறது இவ்வுலம். இது எல்லா உயிரணங்களுக்கும் அதிசயமிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் போது மனித ஆன்மாக்கள் மட்டும் குதூகலமின்றி அந்த நாளை நோக்குகின்றது. ஏன்! அதற்கு சுதந்திரம் வேண்டும். எண்ணங்களில் சிறைப்பட்ட மனிதனால் சுதந்திரமாக இருக்க முடியாது. அதன் ருசியை அறியாமல் பயனித்து அவதிப்படுகிறான். சுதந்திரம் ஓர் ஆன்மாவின் உயிருக்கு கிடைத்துவிட்டால் ஆனந்தம் வந்துவிடும். அப்போது உதிக்கும் ஒவ்வொரு விடியலும் அழகுடனும் ஆனந்தத்துடனும் இருப்பதை உணரமுடியும்.
அடுக்கு மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நீச்சல் குளம். மொட்டை மாடியிலிருந்து அந்த பகுதியின் வனப்பை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கீழே இருந்து ஒருவர், அப்புசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான் என்ற அலறும் சப்தம் கேட்ட உடன் ஏதும் சிந்தியாமல் கீழே குளத்தை நோக்கி குதித்தான். சில மாடிகள் கடந்தபின் கீழே விழுபவன், திடிரென்று சிந்தனை வயப்பட்டான். நமக்குத்தான் மகனே கிடையாதே, நாம் ஏன் கீழே குதித்தோம் என நினைத்தவனுக்கு, உதயமானது திருமணமே தனக்கு ஆகவில்லை என்ற நினைவு. அதன்பின் சப்தம் போட்டவன் அப்புசாமி என்றுதானே சப்தம் போட்டான். நம் பெயர் அப்புசாமி இல்லையே, பின் ஏன் நான் குதித்தேன் என நினைக்கும்போது திடிரென்று கண்விழித்துப் பார்த்தான்.
அது கனவானதால் அவன் நீச்சல் குளத்தில் இல்லை. தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து விழித்திருந்தால் குளத்தில் விழுந்திருப்பான். அதற்கு முன் அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. தான் அப்புசாமி இல்லை என்பதும் தான் யார் என்பதும் புரிந்தது.
இது போன்றே நமது வாழ்வுப் பயணத்தில் நீங்கள் யார் என்பதை புரியாமலே, உச்சியிலிருந்து கீழே விழுவதைப்போல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பயத்தில் தேவையற்ற பதற்றங்களும் நிம்மதி இன்மையும் நிறைந்து வாழ்வு துன்பமுடையதாகின்றது. கடைசி நேரத்தில் விழிப்பு வருவதற்குப் பதிலாக நீங்கள் யார் என ஆரம்பதில் உணர்ந்தால் அது ஆனந்தமான பயணமாக இருக்கும். வாழ்வில் நீங்கள் விழிப்பு கொண்ட நேரமே உங்களுக்கு விடியலாக இருக்கும்.
வாழ்வின் இலக்கை நிர்ணயிக்காமல் பயணத்தை தொடரக்கூடாது. பயணத்தில் செயல் முடிவடையும் இடமே இலக்கு என நின்றுவிடக்கூடாது. அதற்கு மேலும் பயணிக்க முயற்சிகள் வேண்டும்.
இரயில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூட்டம் நிரம்பியிருந்தது. அடுத்த இரயில் நிலையத்தில் சீட்டு பரிசோதகர் ஏறினார். எல்லாருடைய சீட்டுகளையும் பரிசோதித்துக் கொண்டு வந்தார். ஒவ்வெருவரும் தங்களது சீட்டுகளை காண்பித்த வண்ணம் இருந்தனர். ஒருவர் மட்டும் அதைத் தேடிய வண்ணம் இருந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டார்.
அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். வேறு சீட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றனர். நான் அதற்காக அழவில்லை. எங்கு போகவேண்டும் என்று அந்த சீட்டில் தான் எழுதியிருந்தார்கள் என்றார். பல மனிதர்களின் பயணங்கள் இப்படி இலக்கில்லாமல் எங்கு செல்ல வேண்டும் எனத்தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றது.
வாழ்க்கைப் பயணம் என்பது பிறப்பிலே தொடங்கி மரணத்திலே முடிகின்ற பயணம் அல்ல, ஒரு ஆன்மாவின் வாழ்க்கை நான் என்பதிலே தொடங்கி நாம் என்பதிலே முடிந்தால்தான், அந்த உடலின் உயிர்ப் பயணம் சிறப்பான பயணமாக இருக்க முடியும். விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்க நிலை என 3 நிலைகளில் மாறிமாறி நம் உடலின் உயிர்ப்பயணம் நடைபெறுகின்றது.
உடலின் உள்ளே பவனிவருவது ஆன்மா! அதை இயக்குவது புத்தி! அதைக் கட்டுப் படுத்துவது மனம்! அதற்கு உதவி புரிவது உடலின் ஐம்புலன்கள்!
ஓர் ஜீவன், ஆன்மா, மனம், புத்தி, ஐம்புலன்கள் ஆகியவற்றோடு ஒன்றி பயனிக்கின்றது, ஜீவன் செயல் இழந்து விட்டால் ஆன்மா பிரிந்து விடுகின்றது. பிரிந்த ஆன்மா எங்கே செல்கின்றது?
ஜீவன் கர்மத்தின் விதிப்படி தோன்றுகிறது. ஜீவன் தான் ஜீவிக்க என்ன, என்ன செய்தாலும், செயல்கள் கர்மத்தின் நியதிப்படி நடந்து முடிகின்றது. ஓரிரு சமயங்களில் நியதிகள் மாறலாம். அது அந்த ஜீவனின் நடைமுறை, நல்ல செயல்களைப் பொறுத்தது. அப்போது கர்மத்தின் விதியில்கூட சில நிகழ்வுகளில் மாற்றம் ஏற்படலாம். அது இறையருளுக்கு உட்பட்டது. ஜீவன் கர்மத்தின் வழியில் செயல்பட வேண்டும். தோன்றியபின் என்ன செய்ய வேண்டும். வாழ முயற்சிக்க வேண்டும். வாழ சந்தோஷம் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். தன் கர்மபலன்களின் முடிவுக்குள்ளேயே சந்தோஷங்களை அடைய வேண்டும்.
ஜீவனின் ஆன்மா நிறைவு பெறவேண்டும். சந்தோஷங்கள்தான் நிறைவு தரும். துன்பங்கள், கெட்ட நிகழ்வுகள், துயரங்கள் ஒரு போதும் நிறைவு தராது. இந்த துன்ப, துயர நினைவுகள் இன்பங்களை தந்தால் அந்த ஜீவனின் ஆன்மா ஒருபோதும் நிறைவுபெற வாய்ப்பில்லை. பிறரின் துன்பங்களும், துயரங்களும் இன்பங்களாகவும், சந்தோஷங்களாகவும் இருந்தால் அந்த ஜீவனின் கர்மபலன்கள் மீண்டும் மோசமாக அமைய வாய்ப்பு உண்டு.
ஓர் கல் நதியில் வீசப்பட்டால், அதன் கணத்தின் தன்மையால், அடிப்பகுதிக்கு சென்று தங்கி மெதுவாக நீரின் வேகத்திற்கு தக்கவாறு தடையேதும் இல்லா நிலையில் சிறிது சிறிதாக நகர்கிறது, அல்லது அங்கேயே தங்கி விடுகின்றது. ஆனால் ஒரு பூவோ, இலையோ, அதன் இலேசன தன்மையால், நதியின் அலைகளில் ஆனந்தமாக தன் பயணத்தை தொடர்ந்து எங்கோ ஓர் இடத்தில் கரையை அடைகிறது.
இதைப்போன்றே, மனதில் கல்லாகி ஆசைகளோடு கணக்கும் மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேற்றம் இன்றி ஒரே இடத்தில் கல்லாக அமுங்கி கிடக்கின்றான். மனம் பூவைப்போல, இலையைப்போல லேசாக இருப்பனின் ஆன்மாவின் உடல், இறுதி வரை இன்பத்துடன், ஆனந்த சந்தோஷத்துடன் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றது.
உரிமை: ஓர் ஜீவன் அதன் பிறவியில் சந்தோஷப்பட முயற்சிக்க வேண்டும். அதற்கு முழு உரிமையும் ஒவ்வோரு ஜீவனுக்கும் உண்டு. அவ்வாறு சந்தோஷப்பட அதன் செயல்பாட்டை தடுக்க மற்ற எந்த ஜீவனுக்கும் உரிமையில்லை. ஓர் ஜீவன் மற்றொரு ஜீவனை துன்புறுத்தாமல் நியதிக்குண்டான வழியில் சந்தோஷத்தை நாடும் போது, சிறு, சிறு மாற்றங்கள், துன்பங்கள் எந்த ஜீவனுக்கும் நேரிடும்.
பிற உயிர்களை வேதனைப் படுத்தவோ, நம்மை நாமே வேதனைப்படுத்திக் கொள்ளவோ நமக்கு எந்தவித உரிமைகளும் கிடையாது. அதனால்தான் தோல்விகளைக் கண்ட மனிதன் வாழ்வு வெறுத்து தன் உடலில் இருந்து ஆன்மாவை கட்டாயமாக நீக்க முயலும் செயலை நாம் தவறு என சொல்கின்றோம்.
சிறிய துன்பங்களை ஏற்றுக் கொள்ளவும், பெரிய துன்பங்களைத் தவிர்க்கவும் ஆற்றல் கொள்ளல் நல்லது, அதை மீண்டும் நினைவு கொள்ளாமல், துன்பத்தை கண்டு துவளாமல், இன்பத்தை சந்தோஷிக்க செயல்பட்டால் சந்தோஷத்தை சந்தோஷிக்கலாம்.
வயதிற்கு ஏற்ப சந்தோஷம் மாறும். சிறுவயதில் எதுவும் புரியாமல், தெரியாமல் செய்யும் செயலில் எல்லாம் எத்துனை சந்தோஷம். இளவயதில் இன்பத்தில் சந்தோஷம், துள்ளலில் சந்தோஷம், விருப்பத்தை அடைவதில் சந்தோஷம், செயல்களை செய்து முடிப்பதில் சந்தோஷம். முதுமையில் உண்மையில் சந்தோஷம். மூலம்தேடின், அருள்தேடின், நிம்மதி தேடின் சந்தோஷம்.
மனம் செயல் பட்டு, புத்தியின் யோசனைப்படி ஆன்மா செயல் செய்யும்போது சாதகபாதக நிகழ்வுகள் ஏற்படும். பாதக நிகழ்வுகள் துயரத்தையும், சாதக நிகழ்வுகள் சந்தோஷத்தையும் கொடுக்கும். எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் காரணமாக செயல்கள் நடைபெறும். பின் அதன் செயல் தொடர்ச்சி பயணத்தில் தொடரும்.
ஒரு தம்பதியருக்கு ஓர் குழந்தை பிறக்கின்றது. அல்லது கிடைக்கின்றது. அதனை சீராட்டி, பாராட்டி மிகமிக அன்பு செலுத்தி வளர்க்கலாம். வளர்ந்தபின் நாம் வளர்த்த குழந்தை, நம்மீது மிக அன்புகொண்டிருக்கும், எல்லோரையும்விட மிகவும் பிரியமாக இருக்கும், நம் சொல் கேட்கும், நம் ஆலோசனையை நாடும், நம் விருப்பு இல்லாமல் ஏதும் செய்யாது என நமக்குள் ஓர் கோட்பாட்டினை, வளர்த்த பாசத்தின் விளைவாக, நாம் உரிமை கொண்டாடுவது தவறு.
உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் ஓர் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளல் வேண்டும், அது உங்களால் உருவாக்கப்பட்ட குழந்தையன்று. உங்கள் மூலமாக பிறந்த குழந்தை. முன்னோர்களுடன் உங்களையும் சேர்த்து ஏழு தலைமுறையினரின் பகுதிகளை கொண்டு உருவாகிய கரு. உங்கள் மூலமாக பிறந்த ஓர் ஆன்மாவின் உயிர்- உடல்தானே தவிர வேறுஒன்றுமில்லை. அந்த உயிர்- ஆன்மா அதன் கர்ம பலன்களுகேற்ப பிறந்துள்ளது. அது வளரும், அதன் முடிவுகளை அதன் வினைக்கேற்ப அது தேடும்,
இடையில் நீங்கள் வளர்த்த உரிமை கொண்டாடி அதன் உரிமைகளை உங்கள் கையில் எடுத்து அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது முற்றிலும் சரியில்லை. அன்பின் உறவில் நீங்கள் ஆலோசனைக் கூறலாம். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அதன் விருப்பம்- கர்ம பலன். அதைச் செய்தாயா! இப்படி ஏன் செய்தாய்! என மாறி மாறி மிரட்டுவதால் அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மைதனை இழந்து விடுகின்றனர். சந்தோஷம் இல்லா மனநிலையைப் பெற்றிருப்பார்கள்.
அவ்வாறில்லாமல் அன்புடன் கூடிய ஆனந்தமான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். உங்கள் குழந்தை சுயசிந்தனை கொண்டவனாக, யாரும் கற்பனை செய்து பார்க்க முடியா உயர்நிலையை அடைய இயலும்.
குழந்தை ஓர் பொருள் வேண்டி அழுது அடம் பிடிக்கையில், அதன்மேல் அன்பு மிகுதி கொண்டதால், அந்த பொருள் குழந்தைக்கு வேண்டாத ஒன்று என அதன் தன்மையை நீங்கள் உணர்ந்திருந்தாலும், நீங்கள் குழந்தையின்மேல் கொண்ட பாசத்தால், குழந்தையை சமாதானப்படுத்த அதை வாங்கிக் கொடுக்கின்றீர்கள். குழந்தை சமாதானம் அடைந்தபின் பொருளினால் பாதிப்பு ஏற்படாமல் செய்யலாம் என நம்புகின்றீர்கள்.
இதுபோன்று பல நிகழ்வுகள் இருந்தாலும், இது ஒன்றே போதும், முடிவுகள் குழந்தையுடையது என்பதற்கு! ஆனால் இது போன்ற முடிவுகளை, குழந்தைகள் பெரிதாகிவிட்டதும் நீங்கள் கடைப்பிடிக்க மறுக்கின்றீர்கள். உங்கள் ஆலோசனைகளை அது ஏற்றுக் கொள்ளவேண்டும் என கட்டாயமில்லை. ஆனால் கட்டாயப் படுத்துகின்றீர்கள். குழந்தைகளாய் இருந்தபோது நீங்கள் காண்பித்த அன்பு, பாசம் பெரியவர்களானபின் குறைந்து விட்டதா!.
குழந்தை வளர்ந்து பெரிதாகி அதன் வாழ்க்கையை அது வாழ்ந்து முடிக்கின்ற கடைசி கட்டம் வரைக்கு இருந்து நீங்கள் செயல்படமுடியுமா? முடியாது என்கின்றபோது, ஏன் இப்போதுமட்டும் இந்தப் பிடிவாதமான எண்ணம்! கட்டாயப்படுத்தும் விதத்தில் இப்படிச்செய், இதைச்செய் என குழந்தை வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் அவ்வப்போது உங்கள் எண்ணங்களைச் செயல்படுத்த நினைக்கின்றீகள். இது முறையான செயல் பாடில்லை.
உங்கள் எண்ணங்களின் முடிவுகள் மாறுபடும்போது வேதனைப்படுகின்றீர்கள். வீண் மன உளைச்சலையடைந்து, நிம்மதியிழந்து, சோர்வுற்று, விரக்தியுடன் உங்கள் செயல் பாடுகளை முடக்கிச் சந்தோஷப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றீர்கள். இது எதனால் ஏற்பட்டது. உங்களின் குழந்தையின் உரிமையைப் பிடிவாதமாக உங்கள் கைகளில் எடுத்து செயல்பட்டதால் வந்தது. அடுத்தவர் உரிமைதனை அவர் முடிவிற்கு விட்டுவிடுங்கள். இது அனைவருக்கும் பொதுவான நியதி.
உற்றார், உறவினர், சார்ந்தவர் யார் குழந்தையாயிருந்தாலும் சரி அமைதியுடன் சிந்தித்து சிறந்தயோசனையை வழங்குங்கள். ஆலோசனைக் கூறுவதுதான் உங்களுக்கு விதிக்கப்பட்ட விதி. அதைவிடுத்து விருப்பங்களை நிர்பந்திக்காதீர்கள். இதே நிலைப்பாடுதான் எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.
உங்கள் ஆலோசனை அவரவர் விதிப்படி கர்மபலன்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படலாம், ஏற்றுக்கொள்ளப்படாமலும் போகலாம். வருத்தப்படாதீர்கள். இது இயற்கை என நினைத்துக் கொள்ளுங்கள். அமைதியடையுங்கள்.
எல்லா குடும்ப உறுப்பினர்களுடனும் சேர்ந்து வாழுங்கள். முடிந்தவரைக்கும் சேவை செய்யுங்கள். தெரிந்த, புரிந்த, அனுபவித்த ஆலோசனைகளை வழங்குங்கள். உதவி செய்யுங்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு சொந்தம் என்ற உரிமையில் செய்யாதீர்கள். அவர்களுக்குச் செய்வது கடமை என மனதில் கொள்ளுங்கள்.
செயலைத் துறக்காமல் செயலின் விளைவைத் துறந்து வாழ்வதே உண்மையான வாழ்வாகும். அறத்திற்கு புறம்பின்றி, பற்றுதனை எதன் மீதும் கொள்ளாமல், கடமைதனைச் செய்து தாமரை இலைமேல் நீர் போல் வாழும் வாழ்வே சிறந்த வாழ்வு. உன்குடும்பத்தில் “இல்லறத்தின் கடமைதனைச் செய், மனதை இறைவனிடம் வை. தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பது போல்.”
மறுகரையில் இருக்கும் துர்வாசமுனிவரிடம் நிவேதனப் பொருளை கொடுத்துவரச் சொன்னார் கிருஷ்ணர். வெள்ளம் அதிகமாக இருக்க திகைத்த ருக்மணியிடம் ‘கண்ணன் நித்ய பிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக் கண்ணன் கூறிவாறு சொல்லி ஆற்றைக் கடந்தாள். துர்வாசரிடம் நிவேதனப் பொருளைக் கொடுத்து திரும்பும் போது நதியைக் கடக்க துர்வாசர் கூறியபடி,துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக்கூறி நதியைக் கடந்தாள்.
திரும்பிவந்த ருக்மணி கண்ணனைப் பார்த்து, என்னுடன் குடும்பம் நடத்தும் நீங்கள் நித்ய பிரம்மச்சாரி என்கிறீர்கள், நான் கொடுத்ததை உண்டுவிட்டு துர்வாசர் நித்ய உபவாசி என்கிறார் இது எப்படி சரி என்று கேட்க, கண்ணன், ‘எங்கள் இருவருக்கும் எதன் மீதும் பற்று இல்லை. அதனால் இல்லறத்தில் இருந்தாலும் நான் பிரம்மச்சாரி, நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசி என்றார். பற்று இன்றி, அனைத்தும் இறைவனது என எண்ணி வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்,
ஒருபொருள் தன்னுடையது என உரிமையுடன் எண்ணுபவர்க்கு அந்த பொருள் தன்னை விட்டு விலகும்போது வீண்கவலைகள் அதிகரிக்கும். எனவேதான் “உங்கள் மூலம் பிறந்த குழந்தை, உங்களால் உருவாக்கப்பட்ட குழந்தையில்லை, சொந்தம்/ உரிமை கொண்டாடுவதற்கு.” என்பதை புரிந்து செயல் படுங்கள்.
ஓர் ஆன்மா உடலைத்தேடி உடல்கண்டு, உயிர்கொண்டு உங்கள்மூலம் பிறந்துள்ளது. உங்கள் மூலம் பிறந்துள்ளதால் உங்கள் முதல் எழுத்தை உபயோகிக்கலாம். சொத்தை அனுபவிக்கலாம். ஆனால் மற்றதெல்லாம் கர்மப்படி நடக்கும்.
எனவே குழந்தைகளை நல்வழியில் நடத்துங்கள். நல்ல ஆலோசனை வழங்குங்கள். முடிவு அந்த ஆன்மாவினுடையதாய் இருக்கட்டும். உங்கள் குழந்தைக்கு என பிரியமுடன் நீங்கள் வாங்கிய விளையாட்டுப்பொருள், நீங்கள் அதிகம் நேசிப்பதால், உங்கள்மூலம் பிறந்த குழந்தை விரும்ப வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. விளையாட்டுப் பொருளே இப்படி என்றால் வாழ்வியல் நிகழ்வுகளைப் பற்றி யோசியுங்கள்.
இப்பூவுலகில் உங்கள் மூலம் பிறந்த குழந்தையின் காலநிலைகளை, பருவங்களை உங்கள் வாழ்வின் சுவைகளாக்கி, அவர்கள் எண்ணத்திற்கு முன்னுரிமையளித்து, வாழ்வில் சந்தோஷத்தை அடையமுயலுங்கள். அதிகாரம் செலுத்தி, உரிமை கொண்டாடி அவஸ்தை படாதீர்கள். விட்டுக்கொடுத்து, அவர்கள் கருத்தைக் கேட்டு ஆலோசனை வழங்கி ஆனந்தப்படுங்கள். “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன்”- ஒருவன் எந்தப்பொருளில் பற்றற்றவனாக, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அதனால் அந்தபொருளினால் அவன் எப்போதும் துன்பமடைவதில்லை என்றருளியுள்ளார் வள்ளுவர். ஆசையை ஒவ்வொன்றாக விடும்போது படிப்படியாக துன்பங்களும் விலகிவிடும்.
குழந்தை பிறந்தவுடன் சந்தோஷப்படுங்கள், கூடவே இது என் குழந்தையில்லை, என்மூலம் பிறந்த குழந்தை, இதை வளர்க்கும் உரிமை என்னுடையது, அதன் கருத்து செயலாக்கத்தில் தலையிடமாட்டேன், நல் ஆலோசனைகளை மட்டும் வழங்குவேன் என்று உறுதி கொள்வீர்களானால் குழந்தையின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் அதன் கர்மவினைப்படி. உங்கள் வாழ்வில் சந்தோஷங்களை அவ்வப்போது குழந்தையின் ஆசை, நிராசை, பருவ மாற்றங்களுக்கு ஏற்ப அனுபவித்து ஆனந்தித்து சந்தோஷப்படலாம். உங்களுடய கட்டாய முடிவுகளால் தன்வாழ்க்கை பாதித்தது என பிற்காலத்தில் அவர்கள் நினைக்க வாய்ப்பிருக்காது.
மண்ணில் பிறந்த உயிருக்கு அன்பு, அறிவு, ஆற்றல் உண்டு. வளர்ச்சியில் அவைகள் வளமாகின்றன. வளர வளர தன்னைச் சுற்றியுள்ள உருவங்களை மனதில் பதித்து பயமின்றி அவைகளின் செயல்பாடுகளை விகல்பமின்றி வித்தியாசமின்றி அன்புடன் நோக்குகின்றது.. அதைப் பழகுகின்றது. ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகின்றது.
மற்றவர்கள் அதை புரிந்தும் புரியாமலும் உணர்கின்றனர். வளர்ந்தவர்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ளும்போது தன்நிலையிலிருந்து மாறுபட்டு வித்தியாசங்களை பின்பற்றத் தொடங்குகின்றது. அதைப்போற்றிப் பாராட்டி, தங்களது ஆற்றாமையுடன் விமர்சனம் செய்து மகிழ்வு அடைகின்றனர்.
அந்தக் குழந்தை மனம் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது, நட்பு, பகை, குரோதம் எல்லாவற்றையும் ஏற்று தம்மை சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு தன் மனதை மாற்றிச் செயல்படத் தொடங்குகின்றது. ஆணவம், கன்மம்(வினைச்செயல்), மாயை மூன்றும் சேர்ந்து எண்ண அலைகளில் ஓட சுற்றியுள்ளவர்களின் ஆசாபாசங்கள் அதன் மனதில் பலமாற்றங்களை உருவாக்குகின்றது.
எண்ணங்களும் மனநிலை சுற்றுசூழலுக்கு ஏற்ப மாறி அதன் வளர்ச்சி, செயல்பாடுகள் மாறுகின்றன. தனக்கு எனத் தேடும்போது அன்பு, வினை, மாயை சூழலில் சிக்கி, தனக்கு தெரிந்த அதற்குமுன் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தன் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றது, அதற்கு மனம் ஒரு நிலைப்படல் வேண்டும். ஓர் நிலையில்தான் அமைதிகாணமுடியும். அதில்தான் தெளிவு பிறக்கும். சிந்தனைகள் மூலம் சிறந்த செயல்பாடுகள் வந்து சேரும். பெருமையடைவாய்.
மதம்பிடித்த யாணையைப்போல உன்மத்தம் பிடித்த உன்மனதின் செயல் எண்ணங்களை ஓர் நிலைப்படுத்துதல் ஆரம்பத்தில் சற்று சிரமாக இருக்கும். மனம் நினைத்ததை வெற்றியடைய விரும்பும்போது, உன்னால் முடியும் எனநினை. மனமும் எண்ணங்களும் ஒத்துப்போகும். அது முதல் வெற்றி.
மனநிலையின்றி செயல்கள் நடைபெற்றால் நாளடைவில் சலிப்பு, வெற்றியின்மை, கஷ்டங்கள் தோன்றும்போது அடிமனதில் பதிந்துள்ள தீய நிகழ்வுகள் கொடிய செயல்களுக்கு அடிப்படையாகிறது. மனித நேயம் முற்றிலும் மறைந்து விடுகின்றது. பிறர் நலம் பேன நினைவில்லை. தன் நலம்காக்க எதையும் செய்யத் துணியும் மனம், தவறான மனிதர்களையும் தவறான நிகழ்வுகளையும் சந்திக்கின்றது, மண்ணில் கொடிய நிகழ்வுகளை சந்திக்க உணர்வுகள் வித்தியாசமடைகிறது. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. நிம்மதி குறைந்து கொடிய செயல்கள் தொடர் கதையாகிறது. முடிவு எங்கே! எப்போது!
வேகம் குறைந்து பார்வை தடுமாறி, மனவளம் குன்றியபின் கடந்துவந்த பாதையை நினைத்து இவ்வாறு செய்திருக்கலாமோ என வருந்தி என்ன பயன். நம் பயணத்தில் எந்த நிகழ்வுகள் நம்மை இவ்வாறு இழுத்துக் கொண்டு வந்தது. மனம் ஏன் அதை நாடியது என்ற கேள்வி பிறந்து, அதற்கான பதிலை கண்டும் உபயோகமுண்டா! கடந்த வாழ்க்கை முடிந்த கதை.
ஆன்ம பயணத்தில் தினமும் காலை/மாலை சிறிது நேரம் ஒதுக்கு. ஆரவாரமில்லாச் சற்று அமைதியான இடத்தில் அமர்ந்து மாலையென்றால் அன்று செய்த செயல்களையும், காலையென்றால் முதல்நாள் நடந்த செயல்களையும் நினைவுகூர். அவற்றுள் எவை அன்பு, வினை, ஆற்றலுக்கு சேர்ந்தன எனயோசி. அன்பு ததும்ப நீ செய்த செயல்களை நினைத்து பெருமிதம் கொள். அவை மனதிற்கு நிறைவைத்தரும். அன்பு இல்லா செயல்கள் இனி செய்யக்கூடாது எனநினைத்தால் அது மனதிற்கு ஆறுதல் தரும்.
உனக்குத் தெரியாமல் வந்திட்ட செயல்பாடுகளில், வரிசைப்படுத்தாத நிகழ்வுகளை ஏன், எப்படி வந்தது எனயோசி. வினைபடி வந்ததா! அதுபோன்றவற்றிலிருந்து விடுபட இனி என்ன செய்யவேண்டும் எனயோசி. வரும்காலத்தே எப்படிவந்தாலும் அதன் பயன் உனக்கு ஏற்றவாறு மாற்ற செயல்களை செய்ய தீர்மான எழுச்சிகொள். ஆற்றலைச் சேர்த்து செயல்படு.
உடலின் ஆற்றலுக்கு ஓய்வுதேவை. தேவையான ஒய்வு அளி. உள்ளத்தின் ஆற்றலுக்கு ஓர்நிலைப்பட்டு மனம் அமைதியாவதே சிறப்பு. உடல், உள்ளம் இரண்டின் ஆற்றல் அதிகமானால், பயிர்களுக்கிடையே களைகள் முளைப்பதுபோல் தோன்றும் ஆணவம், செருக்கு இவைகளை உங்கள் பிடியில் வைத்துக் கொள்ளமுடியும். இல்லையெனில் அவைகள் உடல், உள்ளங்களின் செயல்பாடுகளை மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்லும். நீங்கள் நினைத்திருக்கும் நேர்வழியில் செல்லமுடியாது. ஓர் செயலை செய்துமுடிக்க முனைப்படும்போது எல்லாநிலைகளிலும், சதக பாதக எண்ணங்கள் தோன்றி மறையும். குழப்பங்கள் அதிகரிக்கும்.
எப்போதும் என்னால் முடியும் என்ற சரியான எண்ணம்தான்  உங்களை நிலைப் படுத்த முடியும், என்னால் ஏன் முடியாது, செய்தே தீருவேன் என்பது உங்கள் செயல் பாடுகளை பலசிக்கல் நடுவில் நிறுத்திவிடும். முடியும் என்பது சாதனை எண்ணம். ஏன் முடியாது என்பது அசாதாராண எண்ணம்.
மனிதா ஆசைகொள்! ஆசை நியாயமான உன்சக்திக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். சிந்தித்த செயலாற்றல் சிறப்பான பயனைத் தரும். உன்னால் சிந்திக்க இயலா குழப்பத்திலிருந்தால் ஆன்றோர்களை அனுகி அறிவுரை பெறவேண்டும். அனுபவங்கள் என்றும் உதவும். அனுபவத்தின் கண்டுபிடிப்பு, விடாமுயற்சியே இன்றைய உலகம். குழந்தையாயிருந்த போது எதிர்காலமறியாமல் எல்லோரிடமும் பழகியதுபோன்று, வளர வளர மனிதநேயத்துடன் அன்பு செலுத்தி, நற்றோரை அனுகி அனுபவ வழி முறைகளைக்கேட்டு, சுயமாக சிந்தித்து தெளிவுபெற்று, செயல்படின் நாடும், வீடும் வளம் பெறும். நீயும் கீர்த்தியடைவாய். வாழ்வின் நிம்மதியை அடைவாய். போராட்டமில்லா அமைதியான வாழ்வுப் பயணம் நடைபெறும்.
பாரதப் போரில் துரியோதணன் துணையாக வந்த வருணராஜகுமரன் ‘கதாயு’ தன் தந்தை தந்த சிறந்த வஜ்ராயுதத்தை அர்ச்சுனனை அழிக்க அனுப்ப, அதைத் தடுக்க தனயஞ்சன் பல பாணங்களைவிட்டும் ஒன்றும் செய்ய இயலா நிலையில், அர்சுனனை நோக்கி வந்த ஆயுதத்தை, கிருஷ்ணர் தன்கையிலிருந்த சாட்டைக் கோலினைக்கூட கீழேபோட்டுவிட்டு, நிராயுதபாணியாக நெஞ்சைக் காட்ட அங்கு மோதிய கதாயுதம் செயலிழந்தது. கதாயு மண்டை வெடித்து சிதறினான்.
இதைப்பற்றி கண்ணனை வணங்கி அர்ச்சுனன் கேட்டபோது, ‘நிராயுதன் மீது இந்த கதையை விட்டால் உன் தலை வெடிக்கும்’ என அதை அவனுக்களித்த அவன் தந்தை கூறியுள்ளார் என்றார். இதை சரியான நேரத்தில் கண்ணன் நினைவு கூர்ந்ததால் அர்ச்சுனன் உயிர் தப்பினார். எனவே குழந்தைகள் தன்மீது பாசம், அன்பு வைத்துள்ள பெற்றோர்கள், பெரியோர்களின் செயல்களில் உரிய நம்பிக்கை வைத்து, அவர்களின் அனுபவ அலோசனைகளை முடிந்தவரையில் ஏற்று பயணிப்பது அனைவருக்கும் சிறப்பு. அமைதி, ஆனந்தம், சந்தோஷம் உண்டாகும். பெரியோர்களின் செயல்பாடுகள் உங்கள் நலனுக்காவே இருக்க வாய்ப்பு அதிகம்.
இரண்டாவது உள்பயணம்: ஒருமனித வாழ்க்கை காலம் சராசரியாக 80 ஆண்டுகளிலிருந்து 90 ஆண்டுகள் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தகாலத்தில் எந்த ஆத்மாவாவது தன் மனதின் சக்தி என்ன என தனக்கு கிடைத்த 1000-க்கணக்காண சந்தர்ப்பங்களில் ஒருமுறையாவது எண்ணிப் பார்த்துள்ளாதா என்றால் இல்லை, இருக்காது என்ற பதில்தான் வருகின்றது. உங்களுள்ளே உள்ள சக்திமிக்க மனத்தை நினைந்து பாருங்கள். உங்களின் சக்தி மிகுந்த எண்ணங்கள் எல்லாம் அங்கே குவிந்து கிடக்கின்றது. அங்கிருந்து தொடர்ச்சியாய் வெளிவரும் எண்ணங்களெல்லாம் உங்கள் தலைமுதல் பாதம்வரை உங்களுள்ளே பரவுகிறது.
உங்கள் வாழ்க்கையில் சிறந்த செயல்களை செய்ய நீங்கள் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தால், உங்கள் மனதின் குரலைக்கேட்டு  செயலாக்கம் கொள்வீர். ஓர் செயல் சம்பந்தப்பட்ட மனதின் குரலை, சிலநாட்கள் அதாவது 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து கேளுங்கள். உங்கள் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படுவதை கவனியுங்கள். ஒரு சிறந்த திருப்தியுடன்கூடிய உணர்வு உங்களுள் ஏற்பட்டிருப்பதை அறிவீர்கள். அங்கே நீங்கள் முழுமையான ஆனந்தத்தை அடைந்தது போன்ற திருப்தி தோன்றும்.
ஓரு ஆன்மா உங்களிடம் உதவி கேட்கும்போது, நீங்கள் தேவை ஏற்பட்டுள்ள அந்த ஆன்மாவின் உடலுக்கு, எந்தவித சுய எதிர்பார்ப்பும் இல்லாமல், தேவையான சமயத்தில் உதவி செய்வதாக வைத்துகொள்ளுங்கள். சில நாட்கள் கழித்து அந்த அன்பர் உங்களிடம் வந்து, அவர் யார் என்பது உங்களுக்கு நினைவில் இல்லாநிலையில், நீங்கள் எப்போதோ அவருக்கு உதவி செய்ததை நினைவுகூர்ந்து, அதனால் அவர் நன்மையடந்ததற்காக, எப்போதும் அவரால் அந்த நிகழ்வை மறக்கமுடியாது என நன்றி உணர்வை தெரிவிக்கும்போது, உங்கள் அகம் மகிழ்ந்து முகமும் மலர்ச்சியடையும். உடல் முழுவதும் அந்த அகமுக மலர்ச்சியின் பயண யாத்திரை தெரியும்.
நன்றி கூறிய மனித ஆன்மாவின் மனத்தின் குரலை, உடனடியாக உங்களின் மனம் ஈர்த்துக்கொண்டு, ஒரு வித்தியாசமான உணர்வுகொண்ட முழுமையான மகிழ்வை, ஆனந்தயாத்திரையை தொடங்கி உடல்முழுவதும் பரவகாரணமாகிறது. அந்த மகிழ்வு யாத்திரையின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் சந்தோஷமடைந்து சுகமடைகிறது.
தற்போதுள்ள நிலையில் மனித ஆன்மாக்கள் தங்கள் வாழ்கை முறையை சீர்தூக்கிப் பார்க்க நேரம் ஒதுக்குவதில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற நினைவில் அதன் வேகத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றனர். எந்திர வாழ்விற்கு தன்னை தயார் படுத்திவிடுகின்றனர். வழ்க்கை முறையை அலசிப் பார்க்க நேரம் ஒதுக்காமல் எந்திர கதியில் இயங்கும் ஆன்மாவின் உடல் நலம் சீரழிக்க படுகிறது.
நாளடைவில். வாழ்வின் குறிக்கோளின்றி, ஓருவித வேகத்துடன் பொருள்களை வாங்கி குவிக்கச் செயல்பட்டு, புரியாமல் தேவையில்லாவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கி, முடிவில் ஒய்வின்றி அலைந்து வாழ்வை நரகமாக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட முதலில் மனதிற்கு பிடித்த எண்ணங்களை உருவாக்குங்கள். எண்ணங்கள் எப்போதும் விருப்பத்திற்கு ஏற்றபடி உருவாகும் தன்மையுடையது.
கண்ணால் பார்ப்பது எல்லாம் மூளையின் திரையில் படங்களாக பதியக்கூடியவை. அவைகளை வரிசைப்படுத்தி ஒன்வொன்றாக மனத்தால் பார்த்து ரசித்தால், அதன் சந்தோஷம் உடல் முழுவதும் பரவும். அதுவும் துக்கம் சாரா சரியான நிகழ்வுகள் என்றால் சந்தோஷத்திற்கு அளவு கோளில்லை. எந்த நிகழ்வாயிருந்தாலும் அது தன் யாத்திரையை தொடங்கி அதன் பதிவுகளை உடல் உறுப்புகளுக்கு அளிக்கின்றது.
துயர எண்ணங்களின்றி, சந்தோஷ எண்ணங்களுக்கு அதிக வாய்ப்பளித்தால் உடலில் சந்தோஷ எண்ண யாத்திரை அதிகமாகி, ஆனந்தனாக ஆத்மா இருக்கும். எப்படியிருப்பினும் உடலின் உள்ளே நடக்கும் இந்த அற்புதமான யாத்திரையை நமக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட நினைவுகள் ஏற்படவேண்டும்.
பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம், ஓர் ஊரின் பெயரைச் சொல்லி, அந்த ஊருக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு அவர் அது உங்களைப் பொறுத்தது என்றார். இதைக்கேட்ட நபர், பொறுமையிழந்து இதென்ன பதில், இப்படிச் சொன்னால் எப்படி புரிந்து கொள்வது என்றார்.
அதற்கு அன்பரே நீங்கள் அந்த ஊரைத்தாண்டி வந்து விட்டீர்கள். அங்கு சரியாக விசாரனை செய்யாமல் இங்கு வந்து கேட்கிறீர்கள். இப்படியே பயனித்தால் சுற்றிச் சேரவேண்டும். திரும்பி பயணித்தால் விரைவில் சென்றடையலாம். திரும்பி பயணம் செய்ய எண்ணம் உண்டா! என அறியவே கேட்டேன் என்றார்.
இதைப்போன்றே நாம் திரும்பிப் பார்க்கத் தயாராக இருக்கின்றோமா! நமது துயரங்களை மறக்க உலகைச்சுற்றி பயணம் போக முயற்சிக்காமல் திரும்பி நம்முள் பயணித்து தியானம் மூலம் நமது துக்கங்களை வெல்லலாம்.
வாமனனாக வந்த பெருமாளிடம், ஆராயாமல் ‘எதைக்கேட்டாலும் தருகிறேன்’ என வாய்ச்சொல் விட்டுக் கெட்ட மகாபலியையும், தூதுவந்த பரந்தாமனிடம், ‘ஊசி முனையளவுக்கு கூட நிலம் பாண்டவர்களுக்குத் தரமுடியாது’ என மண்ணாசையை விடமுடியாமல் கெட்ட துரியோதணனையும், ‘யார் தலையில் நான் கைவைத்தாலும் உடன் அவர் சாம்பலாக வேண்டும்’ எனத்தான் பெற்ற வரத்தினைச் சோதிக்க வரம்தந்த சிவனின் தலையை தொடமுயன்று, மோகினியாகமாறிய திருமாலின்மேல் கொண்ட மோகத்தால், தன் தலையையே தொட்டுக் கெட்ட பஸ்மாசூரனையும், ‘பிறன் மனைவியை தொட்டால் அழிவு நிச்சயம்’ என்ற வேதவதியின் சாபத்திற்கு அஞ்சி, இறுதி வரை சீதையைத் தொடாமல் கெட்ட இராவணனையும் போல இல்லாமல் இருப்பவனுக்கே வாழ்வு ருசிக்கும்.
எனவே வாழ்வில் நாம், விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்டவனையும், தொடாமல் கெட்டவனையும்’ புரிந்து தெளிந்து பயணித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாக இருக்கும்.
ஒரு ஞானியிடம் பயிற்சி பெற வந்தான் இளைஞன். நீ விழிப்புணர்வு பெற திடீர் திடீரென்று தடியால் தாக்குவேன், அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும் என்றார். அதன்படி அவர் தாக்குதலில் பலமுறை அடிபட்டான். நாளடைவில் அறிவு கூர்மையாகி அவரது காலடி ஓசையை துல்லியமாகக் கணித்து அவரின் அடியிலிருந்து தப்பினான்.
ஞானி முதல் பயிற்சி முடிந்தது. அடுத்த பயிற்சி உறங்கும்போது எனக்கூறி தாக்கினார். பலமுறை அடிவாங்கி, எப்போது தாக்குவார் என்ற நினைவில் தூக்கத்தை இழந்தான். நாட்கள் செல்லச் செல்ல தூக்கத்தில் விழிப்புணர்வு அடைந்து, ஞானி தாக்கவருவதை அறிந்து தடுத்தான். ஞானி இனி உனக்கு அடுத்த பயிற்சி வாளில், கொஞ்சம் அசந்தால் உயிர் போய்விடும் என்றார்.
விழிப்புணர்வுக்காக தாக்கும் குருவை நாம் ஏன் அவர் உறங்கும் போது தாக்கக்கூடது என எண்ணினான். ஞானத்தால் மனதில் நினைப்பதை அறிந்த ஞானி, அவனைக் கண்டித்தார். ஞானியிடம் மன்னிப்புக் கோரினான், மனதில் நினைப்பதை அறியும் அளவிற்கு விழிப்புணர்வு அடைய உறுதி கொண்டு பயிற்சிகளை செய்தான். விரைவில் தேர்ச்சியடைந்து முழு விழிப்புணர்வு நிலை அடைந்தான், யாத்திரைப் பயணத்தில் விழிப்புணர்வு அடையுங்கள் அந்த பயணம் இனிமையானதாக இருக்க ஆசிகள்    -குருஸ்ரீ பகோரா.

3-18.பாவம்-தீவினை!

Written by

பாவம்-தீவினை!                                                                                                          

வலி, மனவலி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்தால் அதன் வேதனைதனை உணர்ந்தால் நாம் மற்றவருக்கு வலி ஏற்படும்படி செய்யமாட்டோம். இது நல்ல உள்ளத்தின் பண்பு. அந்த மனம் பிறருக்கு தீங்குநேர எந்த பாவச்செயலும் செய்யவிழையாது. குழந்தைகள் விளையாடும்போது ஒன்று மற்றொன்றை அடித்துவிட அதனால் பாதிக்கப்பட்ட குழந்தை அழ ஆரம்பிக்கின்றது, அடித்த குழந்தைக்கு அக்குழந்தை ஏன் அழுகின்றது என்பது புரிவதில்லை. தன் செயலின் தாக்கத்தால்தான் அழுகின்றது எனத்தெரிவதுமில்லை.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்கள் ஏன் அடித்தாய்! வலியில் அது அழுகின்றதல்லவா! என்றபோது, வலி என்றால் என்ன என்று கேட்ட குழந்தைக்கு, அது புரிந்து கொள்ளும் பொருட்டு ஓர் அடி கொடுக்க, அது வலியின் தன்மைதனை புரிந்து கொண்டது. அடித்தால் வலிக்கும், இனிமேல் யாரையும் அடிக்காது. அடிக்கவும் முயற்சிக்காது. “தீப்பாலதான் பிறர்கண் செய்யற்க நோய்ப்பால் தன்னை அடையவேண்டாதான்”- தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன் தானும் பிறர்க்கு தீமை செய்ய நினைத்தல் கூடாது என்கிறது வள்ளுவம்.
தவறு செய்யாத உயிரினங்களைத் துன்புறுத்தி, அந்ததுன்பத்தை பார்த்து அனுதாபப்படாமல், களிப்படைதல் என்பது அறியாமல் செய்த தவறு என்றாலும், பிற உயிர்களுக்கு துன்பம் நேர காரணமாயிருந்த பாவம் உங்களை வந்தடையும். தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். பாவகர்ம பலன் அனுபவிக்காமல் குறையாது. மாண்டவ்யர் என்ற முனிவர் தான் செய்யாத திருட்டுக்குற்றம் சாற்றப்பட்டு கழுவில் ஏற்றப்பட்டார். அது பற்றி தர்மதேவதை கூறியது என்னவென்றால் சிறுவயதில் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்பதாகும்.
வழிப்போக்கர்களை கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருந்தான் ஒருவன். அவன் ஒரு நாள் ஞானி ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவர் அவனிடம் பிறரைக் கொள்ளையடித்தல் கொடூரமான செயல் என்றார். குடுப்பத்தை பராமரிக்க வேறு வழி இல்லாததால், இது எனது கடமை, என் குடுப்பத்தைக் காப்பாற்றுவது என வாதிட்டான். களவாடுவது பாவம், நீ களவாடிய செல்வத்தை அனுபவித்த உன் குடுப்பத்தாரைவிட அந்த பாவம் உனக்குத்தான் அதிகம். அவர்களுக்காக அந்த பாவத்தையும் சேர்ந்து நீ சுமக்க வேண்டும் என்றார். அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டிற்கு சென்று தன் குடும்பத்தாரிடம் தன் கொள்ளையில் அவர்கள் வாழ்வதால் அந்த பாவங்களிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு எனக் கூறினான். குடும்பத்தினர் அனைவரும் எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதற்காக நீ திருடுவதால் ஏற்படும் பாவங்களை நாங்கள் பங்கு போட்டு ஏற்கமாட்டோம் என்றனர். கடமையானாலும் தான் செய்யும் செயல்களின் பாவங்கள் தனக்கு என அறிந்தவன் மனம் திருந்தினான். அப்படி மாறியவரே இராமகாவியம் எழுதிய வால்மீகி முனிவர்.
இதைப்போன்றே இறையும், நம் செயல்களினால் மற்றவர்கள் பாதிக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக நமக்கும் துன்பங்கள் வந்து சேரும்படி செய்கிறார். அது நமக்கு ஓர் பாடம். அனுபவம். அதை படித்து பெற்றுக்கொண்ட அனுபவத்தால் அதைப்போன்று வேறு ஒருவருக்கு நாம் செய்ய நினையாமலிருத்தலே நம்மை பாவத்திலிருந்து விலக்கிவைக்கும். மீறி செயல்பட்டால் ஓர்நாள் பாதகமாகிவிடும். பாவம் நம்மையும் நம்சந்ததியும் சூழ்ந்து தொடரும் வினைகளை ஏற்படுத்தும். துன்பங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். மறந்துகூட பிற உயிர்க்கு தீங்கு நினையாமல் நல்லன செய்ய பழகவேண்டும்.
தீச்செயல்கள் தீங்கினை விளைவிக்கும் தன்மையுடையதலால், அதை தீயினும் கொடியது என்று நினைவுகொள்ளல் வேண்டும். தீவினைபற்றி தெரிந்த நல்ல எண்ணம் கொண்ட நல்லோர்கள் அதை செய்ய அஞ்சுவார்கள். தீய எண்ணம் கொண்டோர் அதன் தன்மை உணராமல் பாவம் செய்கின்றனர். பிறருக்கு கேடுதரும் தீயச்செயல்களை, தமக்கு வருத்தத்தை ஏற்படுத்திய கொடியவர்களுக்கும் செய்யாமலிருத்தலே ஒருவனின் அறிவு சார்ந்த சிறந்த செயலாகும். அவன் எல்லோரிலும் சிறந்தவன் ஆகின்றான்.
எவ்வளவு பகையிருந்தாலும் அதிலிருந்து நம் தப்பித்து வாழ வழியுண்டு. தீய வினைகளினால் ஏற்படும் பகையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. நிச்சயம் அதன் தாக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டிவரும். எல்லோரும் அவர்தம் வாழ்க்கையை விரும்பி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் தீயசெயல்கள் எவ்வளவு சிறியதாகினும் செய்யாமல், பாவம் அது என விட்டு விட முயற்சிக்க வேண்டும்.
தெரியாமல் தவறான வழியில் சென்றுவிட்டாலும், தீயசெயல்களை செய்யாமலிருந்தால் அவன் கேடு இல்லா நல்ல செயல்களை செய்பவன் ஆகின்றான். நம் நலத்திற்கு நம் செயல்களே காரணம் என உணர்வது அவசியம். இதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால் என்றும் துன்பமில்லை இன்பமட்டுமே!
நாம் செய்யும் செயல்தான் வினை என்றால் அதுவே பின்பு விதியாகின்றது. நம் செயலுக்கேற்ற விளைவுகள் வினையாக வந்து சேரும் என்பதால், தீய செயல்கள் செய்யாமல், நற்செயல்களை செய்தால் நல்ல வாழ்வு வாழலாம் என்பது விதி. பிறகு ஏன் நாம் அந்த விதிக்குப் பயப்படவேண்டும். நல்ல செயல்வினை விதிகளுடன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அப்பிறவிகளிலும் நம் நற்செயல்களின் பலன் தொடரும் என்பது அனைத்து பிறவியிலும் ஆனந்தமே தரும்.
ஓர் ஆத்மா எத்தனை ஆண்டுகள் உடலுடன் உறவு கொண்டது என கணக்கிடக் கூடாது. எத்தனை நல்ல காரியங்களை உடலுடன் சேர்ந்து செய்தது என மதிப்பிட வேண்டும். உலக நிகழ்வுகள் இறையருளின் இசைவுப்படி நடைபெறுகிறது. அதில் எது எது அந்த ஆன்மாவிற்கு பயன்பட்டது. அதைப் பயன்படுத்தி அந்த ஆன்மா உடலுடன் சேர்ந்து எத்தனை நல்ல செயல்கள் தீவினையகற்றி பாவமில்லாமல் செய்தது என்பதே முக்கியம்.
நல்லெண்ணம், நற்செயல்கள் செய்பவர்கள் அன்பு, ஈகை, உண்மை, நேர்மை, கருணை, போற்றுதல் ஆகிய குணநலன்கள் கொண்டவர்களாக இருப்பர். தீய எண்ணம், தீச்செயல் செய்ய விழைபவர்கள் பொறாமை, கோபம், வெறுப்பு, ஏமாற்று, சுயநலம், பேராசை, பொய்மை, தூற்றுதல் ஆகிய குணநலன்களை கொண்டிருப்பர்.
உங்களைச் சார்ந்த யாரும் உங்கள் பாவங்கள், தீவினைகளில் பங்கு ஏற்க விரும்பமாட்டார்கள். உங்கள் பொருட்களை அடைவதற்கு விருப்பம் உள்ள சுயநல அன்புடன் கூடியவர்கள்கூட, நீங்கள் செய்த பாவத்தில் பங்கேற்க விரும்புவதில்லை. எனவே விழிப்புணர்வு கொண்டு பாவங்களும் தீவினைகளும் செய்யாதிருக்க முயலுங்கள்.
ஓர் வியாபாரி வெளியூர் சென்று திரும்ப நேரம் ஆகிவிட்டது. எப்படியும் ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நடந்தவருக்கு திடீரென்று பெய்த மழை தடையை ஏற்படுத்த அந்த கிராமத்தில் இருந்த ஓர் குடிசை வீட்டின் கதவைத் தட்டி மழைக்கு ஒதுங்க இடம் கோரினார். இடம் தரப்பட்டது. அது உணவு வேளையாததால், மழையில் நனைந்து குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தவருக்கு உணவு தரப்பட்டது. அப்போது அந்த குடிசைவாசி உணவு தந்த இறைவனுக்கு நன்றி கூறினார்.
வியாபாரியோ நான் உங்களுக்குத் தான் நன்றி கூறுவேன் ஏனெனில் எனக்கு கடவுளிடம் நம்பிக்கை கிடையாது என்றான். அன்புடனிருந்த குடிசைவாசி இதைகேட்டதும் கோபங்கொண்டு கொடுத்த உணவை பிடுங்கி அந்தவியாபாரியை வெளியில் அனுப்பிவிட்டார். அது அந்த குடிசைவாசியின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
அன்று இரவில் அந்தக் குடிசைவாசிக்கு ஓர் கனவு வந்தது. அதில் ஓர் சந்யாசி, இவ்வளவு காலமும் கடவுளை இல்லை என்று சொன்னவனுக்கு பட்டினி என்று இல்லாமல் உணவு கிடைக்க இறைவன் அருள் புரிந்திருக்கின்றான். ஆனால் நீ இன்று அந்த இறைவனைக் காரணம் காண்பித்து பட்டினி போட்டாய், பாவத்தை தேடிக்கொண்டாய் என்றார். திடுக்கிட்டு முழித்த குடிசைவாசி தன் தவறை உணர்ந்தான்.
கொடுத்த உணவை திரும்ப பெற்றதற்காக வருந்தினான். கடவுள் இல்லை என்றால் அது அவன் கர்மம். பலன்களை அவன் அனுபவித்துப் போகட்டும். அதற்கு நாம் ஏன் பாவம் செய்ய வேண்டும் என தன் எண்ணங்களைத் திருத்திக் கொண்டான்-குருஸ்ரீ பகோரா.

3-17.பிரச்சனைகள்!

Written by

பிரச்சனைகள்!                                                                                                              

வாழ்க்கை இனியது. கரும்பின் சுவையைவிட தித்திப்பானது. தடைகள் பலவரலாம். இந்த இனிய ரசனைமிகுந்த வாழ்வை பலர் சுகமற்றதாக கருதுகின்றனர். மகிழ்வை தொலைத்து விடுகின்றனர். பொறுப்புடன் ஒரு ஆன்மா இருப்பது வேறு. கவலையுடன் இருப்பது வேறு. கவலைப்படாமல் பொறுப்புடன் இருத்தல் நன்மை பயக்கும்.
துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானது. அளவில் மாறுபட்டிருக்கும். ஏற்றுக் கொள்ளும் விதத்தில் மாறுபட்டிருக்கும். துன்பங்களையும், துயரங்களையும் விட்டொழியப் பழகவேண்டும். பிரச்சனைகளின் அடிப்படையில் ஏற்படும் துயரங்களை பிரச்சனைகளைக் கொண்டே தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவுபவரின் உதவியை நாடுங்கள்.
அப்போதும் முடியவில்லை எனில் பிரச்சனையை விட்டுத்தள்ளுங்கள். அதை பெரிது படுத்தி அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நடப்பது நடக்கட்டும் என விட்டு விடுங்கள். பிரச்சனை சிறியதாகத் தோன்றும். நடந்து முடிந்தபின்னும் அதன் தாக்கத்தை பெரிது படுத்தாதீர்கள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர்.
உபாதைகள், பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். உங்களால் தீர்க்க முடியாதது, உங்கள் நண்பர்களால் உதவி செய்யமுடியாத பிரச்சனைகளை நீங்கள் மனதில் போட்டுக் குளப்பி மன உலைச்சலால் துயரம் அடைவதைத் தவிர வேறு என்ன பயன்! எனவே அதை விட்டு விட்டால், ஒதுக்கி தள்ளி விட்டால் அது சிறிய பிரச்சனையாகிவிடும். மனதிற்கு சிறிதளவாவது நிம்மதி கிடைக்கும்.
கழிந்து போனவற்றிற்காக அழுது கொண்டு, நிகழ்காலத்தின் வாய்ப்புகளை கோட்டை விடுகின்றனர் பலர். நிகழ்காலத்தில் கண்ணீர்விட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளும் துயரமானவையாகத்தான் இருக்கும். கசப்பான கடந்தகால நினைவுகளை ஒதுக்கி நிகழ்காலத்தை ஏற்று, அதன் செயலாற்றலைப் பெற்று சந்தோஷத்துடன் வாழ முயல்க! இதுதான் நேர் சிந்தனை.
நாம் இதுகாறும் செலவழித்தது நம்மிடம் இருந்தது ! நாம் கொடுத்ததுதான் நம்மிடம் இருப்பது! நாம் விட்டுச் சென்றது நாம் இழந்தது ! சிலருக்கு வறுமையே பிரச்சனை. சிலருக்கு வளமையே பிரச்சனை.
ஓர் வாத்ய கருவியிலிருந்து ஒலிக்கும் இசைக்கும், பல வாத்யங்களை ஒன்று சேர்ந்து பெறும் இசைக்கும் வேறுபாடு உண்டு. ஒரே தாளத்தில் பல வாத்தியங்கள் இசைக்கும் பொழுது இனிமைதனை நாம் உணருகின்றோம். அதைப்போலவே மனிதகுலத்தில் நாம் ஓர் அங்கம். நம்மால் தனியே செயல்பட முடிந்தாலும் நம்மை சூழ்ந்த உற்றார் உறவினர் நண்பர்களோடு சேர்ந்து செயல்பட்டால் அந்த வாழ்க்கை மிகவும் சுவராஸ்யமான சந்தோஷமுடையதாக இருக்கும்.
நம் செயல்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வுகான நாம் நம்மைவிட வயதானவர்களை, மூத்தவர்களை, பெரியவர்களை நாடுகிறோம். அவர்கள் சொல்வதன் பொருள் விளங்கா விட்டாலும் அவர்கள் திரும்ப திரும்ப சொல்வதால் அதில் ஏற்படும் நன்மைகள் நமக்கு முன்பே தெரியாது. செயல் நடந்து முடிந்தபின்னோ அல்லது அதற்குபின் பலநாட்கள் கழித்துதான் அதன் பலன் தெரியவரும்.
இதற்கு ஒர் புராணச்சான்று. “இலங்கை மன்னன் இராவணனுக்கு, எல்லா நவக்கிரகங்களும் உலக மக்களை ஆட்டிப்படைக்கின்றன, அவர்களை ஏன் நாம் அடக்கி வைக்கக்கூடாது என்ற எண்ணத்தால், சிறந்த சிவபக்தனும் வீரனுமான அவன் எல்ல நவக்கிரகங்களையும் அடக்கி தன் சிம்மாசனத்தின் படிக்கற்களாக மாற்றினான்.
இதைக்கேள்விப்பட்ட நாரதமுனிவர் இலங்கை வேந்தனிடம் சென்று, ஏன் இவ்வாறு செய்தாய்! இது உன் வீரத்திற்கு அழகா! நவக்கிரக நாயகர்களை குப்புறப்போட்டு அவர்மீது அரியணை ஏறலாமா! அவர்களைத் திருப்பிப்போட்டு அவர்கள் மார்பில் கால்வைத்து ஏறுதல்தான் உன் வீரத்திற்கு அழகு என வஞ்சப் புகழ்ச்சியாக சொன்னார்.
இந்த யோசனை இராவணனை மிகவும் கவரவே, அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது, முதல் படியில் சனியிருந்ததால் அவர் நெஞ்சில் கால்வைத்தும் அவரின் வக்ரபார்வையில் இராவணனன் சிக்கினான். அன்று பிடித்த சனி அவன் இறப்புவரை நீடித்தது. விளைவுகள் என்னென்ன என்பதை அனைவரும் அறிவோம். ஓர் ஞானி, முனி சொன்ன சொல் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நல்லவர்களுக்கு நன்மைகளும், தீயவர்களுக்கு துயரமும் அளித்த அந்த நிகழ்வுகளை இராமயணம் தெளிவு படுத்துகின்றது.
பிரச்சனைகளை நேருக்கு நேர் பொறுமையுடன் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அதிலிருந்து மீளவழி தெரியும். மனதின் பிரச்சனைகளை தீர்த்து வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அதன் தாக்கம் பலரை சிந்திக்கும் திறனற்றவர்களாக்கிவிடும்.
துன்பம் என நினைப்பவன் அதிலே உழன்று வாழ்வை வீனாக்குகிறான். நம் பிரச்சனைகளை விட்டு வெளியே வந்து பார்க்கவேண்டும். பழக்கத்தில் இது சரியாக வரும். பிரச்சனைகளுக்கு அடிமையாகாதீர். உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துங்கள். எல்லா வழி முறைகளையும் தீவிரமாக நிதானமாக யோசனை செய்யுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நிதானமாக செயல் படுங்கள். பிரச்சனைகளை வென்று மகிழ்வை காணுங்கள். ஆனந்தம் அடையுங்கள்.
ஓர் புதிய இடத்தில் உறங்க முடியாமல் தவிக்கின்றீர்கள். எதோ ஒரு சத்தத்தைகேட்டு விழித்து மீண்டும் தூங்கமுடியாமல் இருப்பது ஏன்! இது புதிய இடம், இந்த சப்தம் ஏன் என்பது போன்ற தேவையில்லா எதிர்மறை எண்ணங்களில் சிக்கிக் கொள்கின்றீர்கள். எந்த இடமாயிருந்தால் என்ன! என்ன சப்தமாக இருந்தால் என்ன!
நீங்கள் தூங்க வேண்டும் என நினைவு கொள்ளுங்கள். அந்த இடத்தையும், சப்தத்தையும் பற்றிய உங்கள் முதல் எண்ணங்களை விலக்கிவிடுங்கள். அந்த இடத்தையும் புதிய சப்தங்களையும் நீங்கள் ரசித்தால் மனது ஏற்றுக்கொள்ளும். பிரச்சனைகளிலிருந்து வெளியே வாருங்கள். உள்ளே செல்லாதீர்கள். நிம்மதி கிடைக்கும் அமைதியுடன் தூங்குவீர்கள். ஆனந்தம் காண்பீர்.
கலங்கிய குளத்து நீர் அடங்கி தெளிவாக சிறிது நேரம் கொள்ளும். அதுபோலவே மனதில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அவைகள் அமைதியாகும் தருணம் வரை பொறுமை காத்தல் வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

3-16.மாயை!

Written by

மாயை!                                                                                                                      

இப்பூவுலகில் எல்லாமே மாயை! எதுவும் நிலையானது இல்லை. இன்று மலையாக இருந்தது ஒரு காலத்தில் மடுவாகவும், மடுவாக உள்ளது மலையாகவும் மாறும் மாயையானது. புல், பூண்டு, மரம், செடிகள், கொடிகள், ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாம் அழியக்கூடியவையே! ஆனால் மீண்டும் தோன்றக்கூடிய மாயையை பெற்றுள்ளது. உள்ளே குமுறும் நெருப்புத்தனலை மூடிமறைக்கும் எரிமலை போன்று.
தனல்களை மறைக்கும் சாம்பல்களையும், கத்தியை மூடிய வாள் உறைகளையும், செம்பை மூடிய களிம்பையையும், நம்முள் உயிர்த்த ஆன்மாவை மூடியிருக்கும் உடலையும் நம்மால் காணமுடிகின்றது. சாம்பலை ஊதினால் சுடர்விடும் தனலும், வாள் உரையை நீக்கினால் பளப்பளக்கும் வாளையும், களிம்பைப் போக்கினால் களிப்பூட்டும் செம்பையும் காண்கின்றோம். இவைகளைப்போலவே மனித ஸ்தூல உடலை நீக்கி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆன்மாவை நாம் புரிந்துணரவேண்டும்.
சாம்பல், களிம்பு, வாள் உரை இவைபோன்று மனித ஆன்மாவை உடலான மாயை மூடிமறைத்திருக்கின்றது. என்றோ ஓர்நாள் அது உடலைவிட்டு வெளிவந்து விடும். அதை நாம் உணர்ந்து நம் அறியாமை என்னும் மாயை நீக்கி ஆன்மா சீராக சிறப்பாக செயல்பட வழிவகுக்க வேண்டும். தியானிக்க வேண்டும். அது ஓர் இன்பம். நம் ஸ்தூல உடலுக்கு சிறப்பான வழிகாட்டும்.
பாலைவனத்தில் பயணம் செய்யும்போது வெப்பத்தின் மிகுதியால் தாகம் எடுக்கின்றது. அதேசமயம் அருகில் மணற்பாங்கான பகுதியில் நதி ஓடுவதுபோல தோற்றம் தெரியும். அருகில் செல்ல செல்ல நதி தெரிந்துகொண்டேதான் இருக்கும். நதியை நெருங்க முடியாது. இது பாலைவனத்தின் மாயை. இதைக் ‘கானல்நீர்’ என்கிறோம். மாயையான கானல் நீரைத் தேடியவன் அதை அடைந்ததாக, ஒரு நிகழ்வு நடந்ததாக கூறப்படவேயில்லை. அதைப்போலத்தான் இவ்வுலகிலும் மாயை நிறைய உண்டு. கண்ணுக்கு தெரிந்தாலும், மாயைகள் நிஜமாகாது.
உலகில் எல்லாம் மாயை. இன்பமும், துன்பமும் மாயை. இன்பத்திற்கு இன்பப்படாமலும், துன்பத்திற்கு துன்பப் படாமலும், மாயைக்கு ஆட்படாமல் ஒரு ஆத்மாவின் உயிர் வாழ்ந்தால் அதன் வாழ்வு வெற்றி பெற்றதாகிவிடும்.
அந்த மாளிகையில் திருடன் ஒருவன் உள்புகுந்தான். அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த படுக்கை அறை அருகிலேயே இருந்த அறையின் கதவு திறந்தே இருந்தது. சப்தமில்லாமல் அங்கு சென்றவன், அங்கு பணப்பீரோ இருப்பதைக் கண்டான். நல்லவேளை எல்லோரும் நன்றாக தூங்குகின்றார்கள். எந்த பிரச்சனையும் இன்றி சுலபமாக திருடிக் கொண்டு போய்விடலாம் என நினைத்தான்.
அப்போது அந்த பணப் பெட்டியின் கைப்பிடியில் ‘பீரோவை திறக்க கஷ்டப்பட வேண்டாம். பூட்டப்படவில்லை, கைபிடியை திருகினால் பீரோவைத் திறந்து விடலாம்’ என்று எழுதியிருக்கக்கண்டு அதி ஆனந்தம் கொண்டான். இது மாயை! இப்படி யாராவது எழுதி வைப்பார்களா என்று நினைக்காமல், உற்சாகத்துடன் மெதுவாக கைப்பிடியைத் திருகி பீரோவின் கதவை திறக்க முற்பட்டான். கைப்பிடித் திருகியதும் அதன்மூலம் இனைக்கப்பட்டிருந்த நெம்புகோல்பிடி வேலைசெய்து ஒரு மண் மூட்டை மேலிருந்து தள்ள, அது கீழே இவன் தலைமேல் விழுந்தது.
ஆ என்று ஓலமிட்டான். அனைவரும் உறக்கத்திலிருந்து விழித்தனர். விளக்குகள் எரிந்தன. பிடிபட்ட திருடன், இப்படி மனிதர்கள் மாயை செய்தால், எப்படி இவர்களை நம்பி தொழில் செய்வது என வருந்தினான். எல்லோரும் எத்தனை காலத்திற்கு ஏமாந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்-குருஸ்ரீ பகோரா.

3-15.புகழ்!

Written by

புகழ்!                                                                                                                          

எப்படியாவது தன் பெயர் வரவேண்டும், ஒலிபெருக்கியில், தொலைகாட்சித் திரையில், பத்திரிக்கைகளில் என விரும்புவபர்கள்தான் அதிகம். எதற்கு இந்த புகழ் பரபரப்பு. அதனால் உங்களுக்கு என்ன நன்மை. ஆன்மாவிற்கு என்ன பயன். சிந்தியுங்கள். கோவிலில் தொங்கும் திரைச்சீலையில்கூட இது இன்னார் உபயம் என எழுதி வைக்கின்றார்கள். அவர்களுக்கு ஓர் கேள்வி! நீங்கள் கோவிலில் ஆன்மீகத்திற்கு உதவுவதற்கு கொடுத்ததா! அல்லது அங்கு வரும் அன்பர்கள் அனைவரும் உங்கள் பெயரை படித்து தெரிந்துகொள்ள எழுதப்பட்டதா! ஆன்மீகத்தின் புனிதத்தன்மையை கெடுக்காதீர்கள்.
உலகில் உற்பத்தி ஓர் அதிசயம். அதை உருவாக்கிய இறை நமக்கு  எவ்வளவோ செய்துள்ளார். உணவுக்கு, உடைக்கு, உறங்குவதற்கு, உறவுக்கு, உல்லாசத்திற்கு, இரசிப்பதற்கு, நேசிப்பதற்கு எவ்வளவோ தந்துள்ள இறைவன் இதையெல்லாம் தான் கொடுத்து என எங்கும் எழுதிவைக்கவில்லை.
ஆன்மாக்கள் இதுபோன்ற யாருக்கும் உதவாத செயல்களில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றது. நோக்கங்கள் ஓர்முனைப்பட்டிருப்பதில்லை. பயன் மட்டும் எப்படி எதிர்பார்த்தவாறு கிடைக்கும். எவ்வளவு பெரிய கோவில்கள், எவ்வளவு கலைநயமிக்க சிற்பங்கள், தூண்கள், கட்டிடங்கள் இவ்வளவு காலமாகியும் தங்கள் பெருமைதனை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதை வடித்த சிற்பியையோ அதை உருவக்க முயற்சிகள் மேற்கொண்டவர்களையோ கீழே ஏன் எழுதிவைக்கவில்லை. அவர்கள் நோக்கம் ஓர்முனைப்பாடு கண்டிருந்தது. காலங்காலமாய அழியாமல் இருப்பவைகளை பற்றிய செய்திகள் செப்புத்தகட்டில் கல்வெட்டுக்களில் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கின்றது.
அதை நாம் தேடிச்சென்று பார்த்து, கேட்டுத் தெரிந்து மகிழ்வு கொள்கின்றோம். ஆச்சரியமடைகின்றோம். விரைவில் அழியக்கூடிய ஒளிதரும் விளக்குகள், மின்விசிறி, திரைச்சீலையில் கூட உபயம் எழுத்துக்கள் தற்போதைய மனிதனின் ஆர்பரிக்கும் புகழ் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. தன் புகழுக்காக பெயர்களை எழுதிவிட்டு தானம் செய்தேன் என பறைசாற்றி என்ன பயன் சொல்! அதன் பலன் என்ன காண்பீர்!
நீங்கள் செய்யும் செயல்களால் புகழ் பரவவேண்டும். அது உங்களைத்தேடி வரவேண்டும். அதைவிடுத்து தீய வழிகளில் பொருள் சேர்த்து அதை சுயவிளப்பரத்திற்குப் பயன் படுத்தி அதன் மூலம் புகழ்தேட நினைப்பதால் எந்தவித பயனும் இல்லை. யாருக்கும் அதன் பலன் போய்ச்சேராது. உங்கள் அமைதிக்குகூட சிறிதும் அது உதவாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வறியவர்களுக்கு கொடுத்தலால் புகழ் உண்டாகவேண்டும். தானங்களை புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ செய்யக்கூடாது. புகழுக்காக அன்றி, இல்லாதவருக்கு உதவுவதே இருப்பவனின் கடமை.
ஒருவர் முகத்திற்கு முன்னாள் சொல்லப்படும் புகழ் அர்த்தமற்றவை. அதுவே அவருக்குப் பின்னால் பேசப்படுமானால் அதில் ஆழமான அர்த்தங்கள் உண்டு. மேலும் ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது தற்புகழ்ச்சி எனப்படும். தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம். இதையே ஒருவர் தன்னை, சாகாமல் சாகடித்துக் கொல்வது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே மறைமுகமாககூட தற்புகழ்ச்சி பாராட்டக்கூடாது. மூடரின் மனதில் உங்களைபற்றிய பொய்யான எண்ணங்கள் உண்டாக இடம்போடாதீர்கள்.
ஒரு துறையில் முன்னேறி வெற்றியுடன். புகழுடன் நிலைத்திருக்க வேண்டும். பூத உடல் அழிந்தபின்னும் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயலகள் இருக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

3-14.கவலை!கடுஞ்சொல்!

Written by

கவலை!                                                                                                                      

கஷ்டம், துன்பம், கவலை அதிகம் என வருந்துபவர்கள் மேலும் துன்பங்கள் சேர்ந்து துயரங்கள் அதிகமாகும்போது கடைசியாக சேர்ந்த துன்பம் விலகினால்கூட அது ஒரு பெரிய ஆறுதலாகிவிடும். எப்போதும் உள்ள கவலைகளுக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்கின்றான்.
மனித ஆன்மாவிற்கு தீராத ஒன்று கவலை. நினைவு தெரிந்த நாள்முதல் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்படுவதே அதன் நிலை. இதனால் தொடர்ந்து கவலைமேல் கவலைகள் அடைந்து அதிதீவிரமாகும்போது அவனின் தசைகள், நரம்புகள், மூளை, ஐம்புலன்கள் ஆகியவைகள் அந்த நினைவுகளால் பாதிக்கப்படுகின்றன.
உடலில் இரத்த உற்பத்தி குறைந்து சோகை ஏற்படும். அதன் ஜீரணசக்தி குறைகின்றது. ஜீவசக்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டுவருகின்றது. கவலை மிகுதியினால் அதனுள் ஓர் பயம் ஏற்படுகின்றது. அது கோபத்தைத் தூண்ட அதனால் அவனின் செயல்கள் எல்லாவகையிலும் பாதிக்கின்றன.
உறுப்புக்கள் பாதிக்கின்றன. பலவிதமான நோய்களால் அவன் பீடிக்கப்படுகின்றான். எனவே கவலையை விடமுயற்சி செய்யுங்கள். எது நடந்தாலும் கவலைப்படாதீர்கள். பல துக்க அனுபவங்களை கண்டு கேட்டு அனுபவித்து அவன் புத்தி தெளிகின்றான். அந்த அனுபவம் அறிவுக் கண்ணைத் திறக்கின்றது. தொடர்ந்த இடர்களை வேறுவழியின்றி பொறுத்துக் கொண்டதால் மன உறுதி உண்டாகிறது. அகத்தினுடைய பாவம் ஒழியும். இடரைக் கண்டு கலங்காதே! ஒவ்வொரு இடரும் மன உறுதியைக் கொடுக்கும் சாதனமாகும். உறுதியுடன் எதிர்த்து நின்று சாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுங்கள். உங்கள் ஆலோசனைபடி எது நடைபெறுகின்றது? நடக்கின்ற விஷயங்களில் உங்களுக்கு சாதகமானவைகளைத் தேடுங்கள். ‘தேடுங்கள் கிடைக்கும் என்றார் ஏசுபிரான்’. கிடைக்காத ஒன்றுக்காக, நடக்காத ஒன்றுக்காக மனம் ஏங்கி, தவித்து, கவலைகொண்டு வாழ்வில் கிடைத்துள்ள பொன்னான நேரங்களை வீணடிக்காதீர்கள். கிடைத்த நிகழ்வில் சந்தோஷப்படுங்கள். கவலையை மறந்து அந்த சிறிய சந்தோஷம் உங்கள் உணர்வுகளுக்கு, உறுப்புகளுக்கு, உள்ளத்திற்கு தரும் சிறிய ஆறுதலை அனுபவியுங்கள்.
வாழ்நாளில் ஒவ்வொரு விநாடியும் ரசியுங்கள். பார்ப்பதை, பேசுவதை, செயலை, உண்பதை எல்லாவற்றையும் அங்குலம், அங்குலமாக ரசியுங்கள். வாழ்நாள் கடைசிவிநாடி வரைக்கும் முழுமையாக ரசித்துக்கொண்டிருங்கள். சந்தோஷமான தருணங்களை கவலையில் துரத்திவிட்டு வருந்தாதீர்கள். எந்தசூழலிலும் கவலையை நினைக்காமல் அந்த சூழலின் வயப்படுங்கள்.
விரும்பாதது வந்தாலும் துயரம், விரும்பியது விலகினாலும் துயரம், விரும்பியதை அடைந்தபின் அதை இழந்தாலும் துயரம். நிலையில்லா மறையும் உலகவாழ்வில், நம்மிடம் உள்ளவைகளினால் கிடைக்கும் இன்பத்தைவிட, அவைகளை இழந்துவிடுவோமோ என்ற நினைவுகளினால் ஏற்படும் அச்சத்தின் துயரமே, ஆன்மாவை கவலை கொள்ளவைக்கின்றது.
இன்சொற்கள்: உன் உள்ளத்தில் கவலைகள் ஏற்பட்டால் அதை நீக்க முயற்சி செய். அந்த கவலைகள் உன் முகத்தில் தெரியும். அதாவது “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” கவலையை நீக்கி ஆனந்தத்துடன் கூடிய சந்தோஷமான முகத்துடன் வெளியில் வா! உன் துக்கம், கவலை உன்னுடன் போகட்டும். மற்றவர்களுக்கு அதை தொற்றவிடாதே! மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கின்றாய், என உன்னை நலம் விசாரிக்கும்படி செய்யாதே! அதனால் அவர்கள் மனம் வாடக்கூடும். அகத்தின் இருளை வெளி உலகுக்கு சுமந்து செல்லாதே!
பிரச்சனைகள், கவலைகள், துன்பங்கள் யாருக்குத்தான் இல்லை! அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதே! வெற்றியா! தோல்வியா! என நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்காதே! நீ வெற்றி பெறவேண்டும் என நினைப்பது மனம். அந்த எண்ணங்கள் பிறந்த மனம் உறுதியோடு செயல்பட உதவு. விடாமுயற்சியுடன் செயல்படு!
ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு. நம் வாய் வழி வார்த்தைகளைப் பொறுத்தே நமக்கு மதிப்பீடு இடப்படுகின்றது. மனம் வழி எண்ணி செயல்கள் ஆரம்பித்தால் அதுவே நம் விதிக்கு ஆரம்பம். மும்மரமான சூழலில் வெற்றியின் இரகசியத்தை காண, கண்டுபிடித்து சந்தோஷிக்க முயலுக. நீங்கள் எப்போதும் மற்றவர்களால் பாராட்டப் படுகின்றீர்களா! இல்லையே!
பொறுப்பான அக்கறையுடன் சமூக நலனைக்கருத்தில் கொண்டு சில ஆன்மாக்கள் செய்யும் எத்தனையோ சேவைகள் கண்டுகொள்ளப்படாமல், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒதுக்கப்படுதல் கண்டு மனம் தளராதே! ஓர் ஆன்மாவால் கவனிக்கப்பட்டு போற்றப்படவேண்டும் என்ற நினைவில் நீ எதுவும் செய்யாதே!
கவலை கொள்ளாமல் துணிந்து பிறர் நலன் கருதி உங்கள் செயலை செய்து கொண்டிருங்கள். பாராட்டுகள் எல்லாம் தானாக உங்களை வந்து சேரும். அது ஆரோக்கியத்தின் முதற்படி. எனவே கவலை மறந்து சந்தோஷத்தை எங்கும் எதிலும் தேடுங்கள். கண்டுபிடியுங்கள், கிடைக்கும்... சந்தோஷப்படுங்கள்.
வசதி, மதம், கல்வி கொண்டிருக்கின்றீர்கள் எனக் கர்வப்படாதீர்கள். உங்களைப்பற்றிய கர்வமில்லா உயர்வான எண்ணம் போதும். வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சொற்களின் விளைவுகளைப் புரிந்து அவைகளை உபயோகித்தல் சிறப்பு. கடுஞ்சொல் கூறாதீர்கள்.
அச்சொற்கள் ஒருவரின் மனதை எவ்வளவு புண்படுத்த முடியும், வேதனைப்படுத்த முடியும், கோபம் கொள்ளவைக்க முடியும் என்றால், ஏன் ஓர் இனிமையானசொல் சாந்தபடுத்தி அமைதியை ஏற்படுத்தாது. அதனால் ஏன் அவர் சந்தோஷமாயிருக்க முடியாது. முடியும். எனவே அன்பான ஆதரவான இன்சொற்களை உபயோகியுங்கள். அது வாழ்வில் வளமூட்டும். வாழ்வின் உயர்வும் தாழ்வும், ஆன்மாக்களின் உறவும், பிரிவும் வார்த்தைகளால்தான் ஏற்றம் இறக்கம் காண்கிறது.
பேசு மனிதா! பேசு, அளவுடன் பேசு! இனிமையாகபேசு! பயனுள்ளதாக பேசு! என ஆன்றோர்கள் கூறியுள்ளதைப்போல அளவுடன், பயனுள்ளவற்றை அன்புடன் பேச வேண்டும். இதை சரியாக யாரும் கடைபிடிப்பதில்லை. கடுமையான சொற்களையும், வன்சொற்களையும் தமது பேச்சில் அதிகம் பயன்படுத்துகின்றனர். சுடு சொற்கள் அடுத்தவர், கேட்பவர் மனத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தி அவர்களின் செயல்பாட்டின் திறனை இழக்கச்செய்யும் என நினைத்துப் பாருங்கள். உங்களை வேறொருவர் கடுஞ்சொற்களால் மனதை புண்படுத்திவிட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு நேரம் உங்களை ஆக்கிரமித்து, உங்களின் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தி, உங்களை முடக்கி வைக்கின்றது என்பது புரியும்.
பஞ்சவடியில் ராம, இலக்குமண, சீதை இருந்தபோது, மாரீசன் மாயமானாக பொன்னிறத்தில் வந்ததை பார்த்து மயங்கிய சீதை, அது வேண்டும் என ராமனிடம் கேட்க, ராமன் சீதையை பார்த்துக்கொள்ள சொல்லி காட்டிற்குள் சென்றுவிட, சீதா, இலக்குமணா’ என வஞ்சகமாக மாரீசன்  இராமன் குரலில் அலற, சீதை இலக்குமணனை உடனே சென்று பார்க்கச் சொன்னபோது, அவர் சீதையை தனியே காட்டில் விட்டுச்செல்ல தயங்க, விதியின் செயல்பாட்டால், அதை தவறாக எடுத்துக் கொண்டு தகாத கடுமையான வார்த்தைகள் கூறியதே, இலக்குமணன் மனம் வேதனையடைந்து சீதையை தனியே விட்டுச் செல்லவும், சீதையை இராவணன் தூக்கிச்செல்லவும் வழிவகுத்தது.
கடுஞ்சொற்கள் எவ்வளவு வறட்சியை அந்த இதயத்தில் தோற்றுவிக்கும் என்பத புரிந்து கொள்ளுங்கள். “தீயினாற் சுட்ட புண் உள்ளாரும், ஆறாதே நாவினால் சுட்டவடு” என வள்ளுவர் கூறியது மிகையாகாது. பல வருடங்கள் சென்றபின்னும் சொல்லடிபட்ட இதயம் ஆறாத காயங்களை, இரணங்களை கொண்டிருக்கின்றது.
தான் இறக்கும் தருவாயில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்போது, தன் பேரன் யுதிஷ்டிரர், பீஷ்மர் வாழ்வில் அடைந்த வெற்றியைப்பற்றி கேட்டபோது ‘உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்’ என்று பீஷ்மர் கூறியதாக புராணத்திலிருந்து நாம் அறிகிறோம்.
உங்களைவிடப் பெரியவர் ஒருவரை மரியாதையுடன் நீங்கள் எனச்சொல்வதற்குப் பதிலாக நீ என்று அழைத்தால் அவரை கொல்லாமல் கொன்றதற்குச் சமம் என்கின்றது சாஸ்திரங்கள். மகாபாரதபோரில் கர்ணனால் மயக்கநிலையடைந்த தர்மர், கர்ணனை கொல்லாமல் வந்ததைப்பார்த்த கோபத்தில், அர்ஜுனனையும் அவன் காண்டீபத்தையும் இகழ்வாகப்பேச, காண்டீபத்தை இகழ்ந்தவரை கொல்வேன் எனசபதம் செய்திருந்த அர்ஜுனன், தர்மரை கொல்ல வாளை உருவினான்.
அண்ணனை கொல்வது அதர்மம் எனத்தடுத்த கிருஷ்ணன் அர்ஜுனனின் சபதம் நிறைவேற, ‘அர்ஜுனா. மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும் ஒருமையில் திட்டினாலும் அவரை கொலை செய்ததற்கு சமம்’ எனக்கூறினார். அர்ஜுனன் அப்போதைக்கு அதுபோன்று நடந்து தமையனை திட்டித்தீர்த்தான்.
அண்ணனை இகழ்ந்தவனை கொல்ல சபதம் செய்திருந்த அர்ஜுனன் தன்வாளால் தன் தலையை வெட்ட முயலும்போது கண்ணன் தடுத்து, தற்கொலைசெய்வது பாவம் எனக்கூறி, தற்பெருமைபேசுவது தற்கொலைக்குச் சமம், எனவே நீ உன்னையே புகழ்ந்துபேசி உனது சபதத்தை நிறைவேற்றிக்கொள் என அறிவுரைகூறினார்.
எனவே வாழ்வில் உயர்வான ஒருவரை ஒருமையில் பேசுவதும், இகழ்ந்து பேசுவதும், அவரை கொல்லாமல் கொல்வதற்கு சமம். மேலும் தன்னைபற்றி தாமே சொல்லும் தற்பெருமை தற்கொலைக்கு சமமானதாகும். ஒருவரிடத்தில் நாம் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தால் அவரிடம் நம்மால் சுடு சொற்களால் பேசமுடியாது. ஆகவே ஒவ்வொருவருக்கும் தேவை, எல்லா உயிர்களிடத்தும் மதிப்பு, மரியாதை கொண்டு நேசிக்க பழகவேண்டும். அப்போது அந்த உயிர்களை நோக்கி நாம் கடுஞ்சொற்களை வீசமாட்டோம்.
இராமாயணத்தில் அரக்கி அயோமுகியின் மூக்கை லட்சுமணன் அறுக்க, அவள் அலற, அந்த அலறலைக்கேட்ட ராமர், அவளைக் கொன்றுவிட்டாயா? என கேட்கிறார். ‘பெண்ணைக் கொல்வேனா?’ எனக் கூற நினைத்த லட்சுமணன், ராமன் தாடகையை கொன்ற நினைப்புவர, அப்படிச்சொன்னால் அண்ணன் வருத்தமடையக்கூடும் என நினைத்து, ‘இல்லை, அண்ணா! அவள் அலறினாள், விட்டுவிட்டேன்’ எனக்கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. அண்ணனிடம் லட்சுமணன் கொண்டிருந்த அன்பின் காரணமாக, ராமர் செய்ததைக்கூட சொன்னால் அவர்மனம் வருந்தும் என நினைத்த தம்பியின் பக்குவமான மனம், பண்பு நமக்கு வேண்டும்.
நாவினால் பேசமுடியும் என்பதால் எதை வேண்டுமாலும் எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. நாவினால் பேச முடியுமோ தவிர அதன் பாதிப்புகளை களைய முடியவே முடியாது. பொய் பேசுவதை தவிர்த்து, உண்மை பேசவேண்டும், இனிமையாக பிறர் மனம் புண்படுத்தாதவாறு பேசவேண்டும். உண்மை சுடும் என்பதற்காக கேட்பவர்கள் நெஞ்சம் பாதிக்கும் வண்ணம் கடுஞ்சொற்களை உபயோகிக்ககூடாது. யாருடன் பேசினாலும் அவரை மீண்டும் நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என்பதற்கு உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எந்த உத்திரவாதமும் கிடையாது. எனவே எந்த எதிர்பார்ப்பில்லாமல் நட்புரிமையுடன் பேசுங்கள். அவரின் மனதை காயப்படுத்தாமல் உரையாடுங்கள்.
ஓர் ஏழை கூலித் தொழிலாளி. நல்லவன். பரோபகாரி. ஓருநாள் கரும்புத் தோட்டத்திற்கு வேளைக்குச் சென்றான். வேலை முடிந்ததும் அவனுக்கு கரும்பு கட்டு ஒன்றையே கூலியாக அளித்தனர். அதைப் பெற்று வரும்போது பள்ளிச் சிறுவர்களைக் கண்டான். அவர்களுக்கு ஒவ்வொரு துண்டாக கொடுத்து ஆனந்தப்பட்டான். கடைசியாக ஒரே துண்டுதான் மீதியானது. அதை எடுத்துக் கொண்டு வீடுதிரும்பினான்.
அன்றைய சம்பாத்தியத்தில் மீதி அந்த ஒரு துண்டுக் கரும்பே என்றதும், அவன் மனைவி அளவிற்கு அதிகமான கோபமடைந்தாள். கையில் கிடைத்த அந்த துண்டு கரும்பால் அந்த தொழிலாளியை அடித்தாள். கரும்பு இரண்டானது. அடி வாங்கி வேதனையைக் காண்பிக்காமல் அன்பே.. ஒரு துண்டுக் கரும்பை இருவர் எப்படிச் சாப்பிடுவது எனக் குழம்பியிருந்தேன். நல்லவேளை நீ அதை இரண்டாக்கினாய். வா! ஆளுக்கு ஒன்றாக கரும்பைத் ருசிக்கலாம் என்ற அவனின் இனிய அன்பு மொழிக்கேட்டு மனம் வருந்தினாள். மனம் திருந்தினாள். அன்பு கொண்டாள். அன்பு மனைவியினால் கரும்பின் சுவை அதிகரித்தது.
உண்மையை இனிமையாக அளவோடு பேசவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இதயங்கள் நம்மிடமிருந்து குளிர்ந்த, பிரியமான, இதமான, இனிய சொற்களுக்காக ஏங்கிக் கிடக்கின்றது. அந்த சொற்கள் அந்த இதயங்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தி ஓர் மலர் பூத்ததுபோன்ற இனிய சுகத்தை தரும். சந்தோஷம் பிறக்கும். பிறர் சந்தோஷமாயிருத்தல், நம்மை சுற்றியுள்ளோரை சந்தோஷப் படுத்துதல் நம்கடமை. அது சந்தோஷக் கூட்டமாகட்டும்.
அதுசரி! கடுஞ்சொற்கள் உங்களை நோக்கி வீசப்பட்டால் என்ன செய்வது. ஒருவர் ஒரு பொருளை உங்களுக்கு அன்புடன் கொடுத்தார் என்றால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிடில் அது அவரையே சேரும். அதைப்போன்றே உங்கள்மேல் வீசப்பட்ட கடுஞ்சொற்கள், நீங்கள் குற்றமற்றவர் என்றால், அதை முற்றிலும் மறுத்து நிராகரித்தால், அதே சொற்கள் பயனின்றி போகும். உபயோகித்தவருக்கே அது சேரும்.
எனவே கடுஞ்சொற்களற்ற இன்சொற்களையே உபயோகிக்க பழகுங்கள். அன்பு இல்லாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக, பொருள் காரணமாக ஒருவர் பேசுகின்ற இனியசொல் அதைக் கேட்பவனுக்கு துன்பத்தைத் தரக்கூடியதாகும்.
ஒருவரை வார்த்தைகளால் சுட்டால், அது அந்த மனதில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி பகைமை வளர்த்துக் கொண்டே இருக்கும். பின்னாளில் அது பழிவாங்க தயாராக இருக்கும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் கர்ணன் கலந்துகொள்ள, ஓரு தேரோட்டியின் மகனை ஒருநாளும் மணக்கமாட்டேன், என கூறிய சொற்கள் கர்ணன் மனதில் பதிந்துவிட்டன. தர்மவாணாகிய கர்ணன், பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தபோது, அமைதியாக இருந்ததற்கு இதுவே  காரணம்.
துரோணரும், துருபதனும் நண்பர்கள். நட்பில் நான் அரசனனால் அரசில் பாதி தருகிறேன் என்றான். பின்னாளில் மிகுந்தகஷ்டங்கள் ஏற்பட்டபோது நண்பன் கூறிய வார்த்தைகளை நம்பி துரோணர், துருபதனிடம் செல்ல அவரை கடுஞ்சொற்களால் மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கினான். துரோணர், அர்ஜுனனின் ஆசிரியரானபோது குரு தட்சனையாக துருபதனை கைதுசெய்து, துரோணர் முன் நிறுத்தினான். அப்போது துரோணர் துருபதனிடம், நீ இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டாய். உன் நாடு என்னிடம். அதில் பாதியை உனக்கு தானமாகத் தருகிறேன். நாம் இருவரும் சமம் என துரோணரைக் கூறவைத்தது, அன்று துருபதன் விதைத்த கடுஞ்சொற்களின் விளைவே.
அதைப்போன்றே சிசுபாலன் தகாத கடுஞ்சொற்கள் கூறவே, அவைகளைப் பொறுமையுடன் கேட்ட கிருஷ்ணன், அந்த வார்த்தைகள் 1000க்கு அதிகமாகவே இனியும் பொறுமை காட்டலாகாது என அவனை சக்ராயுதத்தால் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வுப் பயணத்தில் கடுஞ்சொற்களைவிட இன்சொற்கள் மிகவும் பயனளிப்பவை என்பதை புரிந்து கடுஞ்சொற்களை தவிர்த்து, இன்சொற்களை உபயோகிக்கப் பழகுங்கள். அவைகள் உங்கள் நிலையை உயர்த்தும்.
ஒரு கோவில் யாணை இயல்பாகவே சாதுவான குணமுடையது. யாணைப் பாகனின் சொல்லுக்கு கீழ்படிந்து இருந்தது. கயவர்கள் பலர் யாணக்கூடத்தின் அருகே இரவில் சந்தித்து தங்களின் செயல்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இரக்கம் அற்றவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி அடிக்கடி கேட்ட யாணையின் செயல்களில் மாறுபாடு தெரிந்தது. ஒருநாள் திடிரென்று அது யாணைப்பாகனைத் தாக்கியது. பலத்த காயம் அடந்தான்.
அதிகாரி மேலதிகாரியின் ஆலோசனையைக் கேட்டார். விசாரனை நடந்தது. முடிவில் நல்ல இயல்பான சாது குணமுடைய யாணை தொடர்ந்து தீவினைச் சொற்களை கேட்டதால் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து, இரவில் காவல் பலப்படுத்தப்பட்டது. யாணை தொடர்ந்து தீச்சொற்களை கேட்காததாலும், கோவிலில் நடந்த ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் பஜனை போன்றவைகளையே கேட்டதாலும் அதன் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. எனெவே எந்த ஆன்மாவாயிருந்தாலும் தொடர்ந்து துர்போதனைகளையும் கடுஞ்சொற்களையும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்த ஆத்மாவின் செயல்பாடுகளில் வக்ரம் தென்படும். இன்சொற்களே நல்ல பலன் தரும்.
ஒவ்வொரு மொழியிலும் இனிய சொற்கள் நிறைந்து கிடக்கும்போது, கடுமையானச் சொற்களைக் கூறுவது என்பது, கனிகள் நிறைந்திருக்கும்போது காய்களைத் தேடுபவன் செயலாகும். எல்லோருக்கும் துன்பம் தரும் கடுஞ்சொற்களைத் தவிர்த்துக் கூறும் இனிய சொற்கள், இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரவல்லது-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911788
All
20911788
Your IP: 198.41.231.169
2021-04-13 09:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg