gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

3-9.தேவை நிம்மதி!

Written by

தேவை நிம்மதி!                                                                                                          

கனகம்-செல்வம், காமினி-பெண் ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடையவேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும்.
ஒருவரை உனது வாழ்வின் தேவைகளை எழுதிக்கொடு என்றதும், மனதில் தோன்றிய ஆசைகளையெல்லாம் வரிசைப்படுத்தி மனைவி, பணம், புகழ், மதிப்பு... இப்படி எழுதியவனுக்கு ஓர் சந்தேகம் வந்தது! எல்லாமும் எழுதி விட்டோமா என்று? அனைவரிடமும் காண்பித்தான். அனைவரும் ஒப்புக் கொள்ளும்படியாக எழுதியிருந்தான்.
சந்தோஷத்துடன் அந்த தேவைகளை இறைவனிடம் கொடுக்க நினைத்தவன் ஒரு பெரியவரை சந்தித்தான். அவரிடமும் காண்பித்தான். அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட்டு, எல்லாம் சரி! இதில் எழுதியிருப்பதையெல்லாம் அடைந்தபின் நீ என்ன செய்யப் போகின்றாய்? என்ற கூற்றிற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போது அவர் எல்லாவற்றையும்விட மன அமைதியை நாடு! அதைத் தேடு! அது கிடைத்தால் நீ எல்லாவற்றிலும் வெற்றியடைவாய்! அப்படியின்றி எல்லாம் கிடைத்து விட்டால் உனக்கு மன நிம்மதியிருக்காது என்றார். பாற்கடலை கடைந்தபோது கிடைத்த லட்சுமியின் அதி அழகால் ஸ்ரீமன்நாராயனுக்கு நிம்மதியும் உறக்கமும் பறிபோயின. பொன்னாசை அளவுக்கு மீறினால் நிம்மதிபோகும் என்பதை எடுத்துரைகின்றது ஸ்ரீநாராயணனின் அனந்த சயன காட்சி.
எனவே நிம்மதி, மனநிம்மதிதான் ஒருவருக்கு கிடைக்க முயற்சிக்க வேண்டும். மற்றவை கர்ம வினைப்படி அவரை வந்து சேரும். ஆன்மாவின் தன்மை உணர்ந்து அதற்கு உடல் ஒத்துழைப்பு அளித்தால் நிம்மதி நெஞ்சினுள்ளே இருப்பதை உணரலாம். தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான செல்வம் அடைந்தவன், ஆபத்தை நெருங்கியவன் ஆகியோருக்கு நிம்மதி கெட்டுவிடும். உறக்கம் வராது.
மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றி தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்தான். அவர் தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக்கூடாத ரகசியங்களை தெரிந்து கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது. நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டபின் ஒரு படுக்கையை காண்பித்து படுக்கச் சொன்னார்.
அவனிடம் ஒரு கதை சொன்னார் பெரியவர். "ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடிவந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப்பட்டது. ஆனால் அவன் தன் தலையிலிருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை. அருகிலிருந்தவர் அதை கீழே இறக்கி வைக்கச் சொன்னார். அவன் வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் என்றான்.
இந்தக் கதையைக் கேட்டவன் சிரித்துவிட்டு, 'பைத்தியக்காரன், இரயிலை விட்டு இறங்கும் போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா என்றான்'. உன்னைப்போல் அவனுக்கும் அது தெரியவில்லை என்றார் பெரியவர். என்ன சொல்கிறீகள் என்றவனிடம், 'வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழமுடியாது, தேவை படுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்'. என்று அவர் கூறியபோது அவனுக்கு புரிய ஆரம்பித்தது, தூக்கம் வந்தது. சுகமாக தூங்கினான்.
காலையில் எழுந்திருக்கும் போது பெரியவர் அருகில் இருக்கக் கண்டான். எழுந்து அந்த தலையணையை தூக்கு என்றார். அவ்வாறே செய்தவன் ஆ! வென்று அலறினான். தலையணை அடியில் ஓர் நாகம் சுருண்டிருந்தது. ஐயா, என்றவனிடம் நீ! உன் தலைக்கு அருகில் பாம்பு இருக்கிறது என்ற இரகசியம் உன் மனதிற்கு தெரியாது! அதனால் நிம்மதியாய் தூங்கினாய். இப்போது நிம்மதி எங்கிருக்கிறது என புரிந்து கொண்டிருப்பாய்." என்றார். இரகசியங்கள் இல்லா மனமே நிம்மதி கொள்ளும்.
வாழ்க்கையில் முன்னேற்றம், வெற்றி, அதனால் பணம் வசதி, வாய்ப்புகள் பெருக அதிகாரம் அவசியமாகும். எது இருந்தும் அங்கே நிம்மதி வேண்டும். உடல் ஆரோக்கியம் வேண்டும். மனிதநேயம்கொண்டு பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
கோடீஸ்வரர் ராக்பெல்லர் அமெரிக்க மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டதற்கு காரணம், தான் வாழ்வில் முன்னேற, தன் செயல் அனைத்திலும் வெற்றி பெற, சாம, தான, பேத, தண்டம் என அனைத்து கொடிய வழிகளையும் பின்பற்றியதே. சுமார் ஐந்துலட்சம் டாலர் ஆண்டு வருமானம் பெற்ற அவருக்கு 53வயதில் உடல்நிலை மோசமானது.
மருத்துவர் ஆலோசனைப்படி கஞ்சியும் பாலும் சாப்பிட்டார். எவ்வளவு இருந்து என்ன பயன். ஆனால் அவர் சுவாமி விவேகானந்தரை சந்தித்தபின் மாற்றம் கொண்டார். கறை படிந்த பணம் என பலரும் வாங்க மறுத்தும், கலங்காமல் தொடர்ந்து மக்களுக்கு மனித நேயத்துடன் தொண்டு செய்தார். மனநிம்மதி கொண்டார். உடல் ஆரோக்கியம் அடைந்து 92வயது வரை வாழ்ந்துள்ளார்.
மோசமான ஓர் பணக்காரராயிருந்தவருக்கு, மனிதநேயம் கொண்டு கருணைஉள்ள பரோபகாரி என்ற நிலைக்குவந்த அந்த மனித ஆன்மாவிற்கு கிடைத்தது மனநிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம். எனவே உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது அறிவாக இருந்தாலும் சரி, பணம், பொருளாக இருந்தாலும் சரி. அந்த மனிதநேயம் நீங்கள் கொண்டால், ஆன்மா நிம்மதி கொள்ளும்.
ஒரு ஞனியிடம் வந்த செல்வந்தர் தனக்கு நிம்மதியில்லை என்றார். உங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கலாமே என்றார் ஞானி. செல்வந்தர் எனக்குத் தேவை மகிழ்ச்சி அதை எப்படி வாங்கமுடியும் என்றார்.
ஞானி அவரை ஓர் விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தார். பலர் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஞானி ரசித்தார். செல்வந்தர் பந்து என்னைப்போல உதை படுகின்றது எனக் கவலை கொண்டார்.
ஞானி, செல்வந்தரை ஓர் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார் அங்கு புல்லாங்குழலின் நாதம் இசையாக அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்கடித்தது. சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. நிகழ்ச்சி முடிந்தது இருவரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.
ஞானி செல்வந்தரைப் பார்த்து பந்துக்கும், புல்லாங்குழலுக்கும் என்ன வித்தியாசம் என்றார். செல்வந்தர் அது பந்து, இது புல்லாங்குழல் என்றார்.
பந்துக்கும், புல்லங்குழலுக்கும் தேவை காற்றுதான். பந்தின் உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் அது உதை படுகின்றது. புல்லாங்குழலில் அது அவ்வப்போது வெளியே வந்து விடுவதால் அது இனிமையைத் தருகிறது. மனதிற்கு நிம்மதி அளிக்கின்றது என்றார் ஞானி.
செல்வந்தருக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. செல்வந்தர் நினைத்தார். பந்தின் காற்றுபோல் செல்வம் நம்மிடம் இருந்தால் அதில் இன்பங்களைவிட துன்பங்கள்தான் அதிகம். புல்லாங்குழல் காற்றுபோல் செல்வம் அவ்வப்போது வெளியேறினால் அது நிம்மதியும் இன்பமும் தரும் என்பதை உணர்ந்தார்-குருஸ்ரீ பகோரா.

3-8.குற்ற உணர்வு!

Written by

குற்ற உணர்வு!                                                                                                              

செய்த பிழைகளுக்கு, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற்றாலும் குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும். இல்லையெணில் அது பிணியாக அவனைக் கொல்லும். அதனால்தன் கிருத்துவ அன்பர்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டுப் பெறுகின்றனர். பொதுவாக கடவுள் செய்த பிழைகளை மன்னிக்கும் உள்ளம் கொண்டவர். எத்தனையோ சரித்திர சான்றுகள் உள.
கடவுள் மன்னிப்பார் என நினைத்து தீய காரியங்களில் ஈடுபடுதலுக்கு மன்னிப்புகள் வழங்கப்பட மாட்டாது. குற்றம் செய்தவன் தன் தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும், அந்த உணர்வுகளால் அவன் சித்திரவதை படுவான் என்பதற்காகவே கடவுள் மன்னிப்பார் என்ற நிலை உறுவானது. மன்னிப்பார் என்று குற்றங்கள் செய்வதும், மன்னிக்கமாட்டார் என புலம்புவதும் தவறான நம்பிக்கைகள்.
ஒருவன் செய்த தவறை மன்னிக்கிறவன் தேவனாவான், அவனும் மன்னிக்கப்படுவான். எனவே பிறர் குற்றங்களை மன்னிக்கப்பழகு! நீ தேவனாகு! அவன் குற்றங்களுக்கு கர்மபலன் உண்டு! நீ அவனைபற்றிக் கவலைபடாதே! உன்வாழ்வை நினை! உன் ஆன்மா மேனிலையடையட்டும்!
ஒவ்வொரு ஆன்மாவும் பிறந்தபின் குழந்தை, இளமைப்பருவம், ஆண், பெண், கணவன், மனைவி, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முதிர்ந்த பருவம் என அடையாளங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உடலின் உள்ளே உள்ள ஆன்மாவிற்கு எந்த அடையாளமும் இல்லை. அது எந்த நிலையிலும் ஆன்மாதான். மாயையான உடலுக்கு எத்தனைவித அடையாளங்கள். ஆன்மாவிற்கு ஏதுமில்லை. அந்த ஆன்மா உடல்வழி எப்போதும் சந்தோஷத்தை நாடி அடைய வேண்டும் என்பதே நியதி.
இளமையில் ஏதுமறியாமல் நம் விருப்பத்திற்கு செயல்பட்டு சந்தோஷ மடைகின்றோம். ஆண், பெண் என்ற நிலையில் ஒருவர் ஒருவருக்கு துணையாகி கணவன் மணைவி என சந்தோஷம் கான்கின்றோம். பின் குழைந்தைகள் மூலம் அப்பா, அம்மா என்றாகி தாத்தா, பாட்டி என்றும் ஆகிக் களிப்படைகின்றோம். வாழ்க்கையின் சுழற்சியிது. அந்தந்த காலங்களில் அதுஅது முறைபடி சரியாக நடந்தேறினால் வழ்வில் துன்பம் ஏதும் இல்லை!
ஆனால் உரியகாலத்தில் நடக்காமலும், துணைகிடைக்காவிடினும் மனம் துயரம் காண்கின்றது. அப்படியிருக்கலாம், இப்படிவாழலாம் என்ற கனவுகள் சிதைகின்றன. எப்படியாவது மணம் நடந்தால் போதும் என்ற பலரின் சூழ்நிலையில் மணம் நடந்தால் அப்போதைக்கு அது இனிப்பாக தெரிகின்றது. ஆசையும், மோகமும் தெளிந்த நிலைவரும்போது அங்கே குறைகள் நிறைவாக இருப்பதாக கண்டு மனம் மயங்குகின்றது.
வீன்குழப்பங்கள், பழைய நினைவுகளின் தாக்கத்தால் அதிகமான எதிர்பார்ப்புகள் கொஞ்சம்கூட நிறைவேறவில்லை என்ற ஏமாற்றத்தினால் மனம் சோர்வடைகின்றது. புத்தி பேதலிக்கின்றது. என்ன செய்கின்றோம்! என்ன சொல்கின்றோம்! என அறியாமல் தப்புத் தப்பாக சிந்தித்து செயல்படும் மனப்பாங்கு வந்தடைகின்றது.
குழைந்தைகளின் வளர்ச்சிகூட மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. பொறுப்புகளை வரவைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையில் அவர்களின் முழுகவனம் சென்று விடுகின்றது. அதிலிருந்து மீளவேண்டும் என்ற நினைவில்லாமல் செயல்படுகின்றனர். வாழ்வு பயணத்தை முடித்துக்கொள்ள நினைப்பவர் சிலர். போராடிப் பார்க்கலாம் எனச்சிலர். மனம் போனபோக்கிலே செல்லலாம் எனச்சிலர்.
ஆனால் யாரும் எதனால் வந்தது இந்தநிலை என்பதைக் கண்டு அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயலுவதில்லை. அடுத்த நிலைக்கு வேகமாகத் தாண்ட நினைப்பதால்தான் தற்கொலைகளும், வேறுமணங்களும் அதிகமாகின்றன. ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து மணம்புரிந்த ஆன்மாக்கள்கூட இதற்கு விலக்கு இல்லை.  
மயங்கும் மனத்தைக் கட்டுப்படுத்துங்கள். குற்றமாக எதையும் கருதாதீர்கள். சின்ன விஷயங்களைப் பெரிது படுத்தாமல், அன்றைய சூழலில் என்னவென்று அறியாதநிலையில் கற்பனைசெய்து பார்த்தவைகளுக்காக இப்போது கிடைத்திருக்கும் இந்த வாழ்வின் பயணத்தை திசைதிருப்பி வெற்றி பெறமுடியுமா என சிந்தியுங்கள். எல்லா ஆன்மாவும் சந்தோஷத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. நீங்கள் சிந்திக்கும் வழி, செல்ல இருக்கும் வழி, உங்களுக்கு இனியாவது நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷங்களக் கொடுக்கும் என நீங்கள் முழுமையாக நம்பினால் நடைபோடுங்கள் புதிய பாதையில்.
ஒருமுறைக்கு பலமுறை, குறைந்த பட்சம் மூன்று முறையாவது யோசனைசெய்து செயல்படுங்கள். புதிய பாதையின் நல்லவை கெட்டவைகளை சிந்தியுங்கள். இந்த மாற்றம் தேவைதான என உங்களை உங்கள் மனதை ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். இறைவனை நாடுங்கள். அமைதியுடன் இருந்து மீண்டும் யோசித்து இறுதி முடிவிற்கு வாருங்கள். அமைதியுடன் குற்ற உணர்வின்றி செயல் பட்டு ஆனந்தம் அடைவீர்!
துன்பங்கள் துன்பம் செய்தவரையேச் சாரும், ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ, பிறருக்குத் துன்பம் செய்வதை நினைக்கமாட்டார். வாழ்வில் துன்பம் என்று நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களுக்குச் சொல்லி எச்சரிக்கை செய்தால் உங்கள் ஆத்மாவிற்கு குற்ற உணர்வும் ஏற்படாது-குருஸ்ரீ பகோரா.

3-7.மண்ணேஆதாரம்! மண்ணின் மைந்தர்கள்!

Written by

மண்ணேஆதாரம்! மண்ணின் மைந்தர்கள்!                                                  

பூ உலகில் மண் இருப்பதால் இது மண்ணுலகம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் மண்ணால் ஆனவையே என்கின்றது வேதம். இதை உணர்த்த நம் முன்னோர்கள் உயிரின் ஆன்மா உடலைவிட்டு வெளியேறியதும் காற்றில் அப்படியே அழுகி மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகிவிடும் சூழலில் உடல்களை மண்ணில் புதைத்து மண்ணோடு சேர்த்தார்கள். அதனால் தான் “அரசனும், ஆண்டியும் மண்ணோடு மண்ணாவான் ஓர்நாள்” என்றார்கள்.
காலப்போக்கில் சில மாற்றங்களுக்குட்பட்டு சிதைமூட்டி எரித்தார்கள். எரித்து சாம்பலை நீரோட்டத்தில் கரைத்து அதையும் மண்ணோடு சேர்த்தார்கள். இது நம் உடல் மண்ணோடு சேர்ந்த கலவை என உணர்த்தவே! நாம் உட்கொள்ளும் உணவுகளும் இந்தமண்ணில் உற்பத்தியாகி நாம்வாழும் பொருட்டு வாழ்நாள் முழுவதும் நம் உடலின் பகுதியாகின்றது.
ஆனால் மண்ணின் நிறம் வேறு. மணம் வேறு. நம் உணவு, உடை, இயக்கம் எல்லாம் இந்த மண்ணை, பூமியைச் சார்ந்ததே! இது சார்ந்த புராணவரலாறு நிகழ்வு ஒன்று. “கிருஷ்ண அவதாரத்தில், அவர் குழந்தையாக இருந்தபோது மண்ணை அள்ளி உண்டதை பார்த்த தாய் யசோதை, கண்ணனை வாயைத் திறக்கச் சொல்லி, அங்கே அவள் கண்டது என்ன? வாயில் மண்ணா? இல்லை! மண்ணுலகம் முழுவதும் தெரியக்கண்டாள். உலக உயிர்கள் அனைத்தும், மரம், செடி, கொடி, மலைகள், நதிகள் எல்லாம் கண்டாள்.
மண்ணைக் காணகேட்டவளுக்கு மண்ணுலகத்தைக் காண்பித்து மண்ணே எல்லாவற்றிற்கும் ஆதாரம் எனத் தெரியவைத்து உள்ளார்.” பாலும், பழமும் விழுங்கிய வாய், ஆன்மா உயிர் நீங்கியபின் மண்ணையும் விழுங்கும்! மறக்கலாமா!
இந்த உடல் மண்ணின் தன்மைகொண்டது. ஓர்நாள் கண்டிப்பாக முழுவதுமாக மண்ணாகும்.  இடையே உயிர்வாழும் நாட்களில் உணர்ச்சிக்காக பேதங்கள் ஏற்பட்டு உடல் அடையும் துயரங்களும், துன்பங்களும் அதிகம் அதிகம். எல்லாம் மண் என்பதைப் புரிந்து கொண்டால் உடலின்- மண்ணின் உணர்ச்சிகளை விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டால் சரியாய்விடும்.
எது? யாருக்கு? எப்படி? என்றெல்லாம் நினையாமல் அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்து சந்தோஷமாக வாழவிழையும் தருணத்தில், எல்லோரும் மண்ணுக்குச் சொந்தமானவர்கள், உடம்பினர்- “மண்ணின் மைந்தர்கள்” என்பதைப்புரிந்து விட்டுக் கொடுத்து அந்தந்த உயிர்கள்- ஆன்மா- உடல் சந்தோஷப்படுவதற்கு வழி கொடுத்து, அதனால் தானும் சந்தோஷமடைந்து அனைவரும் ஓர்நாள் நம் பயணம் முடித்து இவ்வுடலை மண்ணுக்குத் தரலாம் சந்தோஷ ஆனந்தத்துடன்! மண்ணோடு மண்ணாவதற்கு!
நாம் பிரபஞ்சத்திலிருந்து அனைத்தையும் பெற்று வாழ்கின்றோம். கார்பன், கழிவு எனத்திருப்பித் தருகின்றோம். கொடுக்கல் வாங்கலில் தடை ஏற்பட்டால் அது மரணநிலை. எந்த பூமி உங்களுக்கு உண்பதற்கு எல்லாம் வாரிவழங்கிக் கொண்டிருக்கின்றதோ அப்பூமி ஓர்நாள் நீங்கள் சாய்ந்தவுடன்- உடலிலிருந்து ஆன்மா பிரிந்தவுடன்- தனக்கு உணவாக்கிக் கொள்ளப்போகின்றது. நம் உடல் பிரபஞ்ச அக்னியில் சமர்ப்பணமாகிறது. இந்த இயற்கை நியதி மாற்றமுடியாத ஒன்று. மனித ஆன்மா மட்டுமே இதை உணரும்-குருஸ்ரீ பகோரா.

3-6.நம்பிக்கை!

Written by

நம்பிக்கை!                                                                                                                  

உங்கள் மனம் உங்களுக்கு உதவும் என நம்பிக்கை கொள்ளுங்கள். மனம் வேறொருவரின் எண்ணங்களுக்கு செயல்படாது. சிந்திக்காது. எனவே உங்கள் எண்ணங்களின் செயல்பாட்டினை வடிக்க உங்கள் மனம் உதவும் என்று நம்புங்கள். இந்த விழிப்பு உணர்வுதான் உங்கள் திறமைதனை வெளிக்கொணரும் சக்திமிக்க ஆயுதம்.
சந்தோஷமாக இருப்பதாக நினைவு கொள்ளுங்கள். இதற்குத் தூண்டுதலாக உங்களின் நினைவிலிருந்து உங்களுக்கு சந்தோஷம் அளித்த நிகழ்வுகளின் ஒன்றை நினைத்து அதில் ஆழ்ந்து ஆனந்தப்படுங்கள்.
நீங்கள் ஓர் விஷயத்தை உங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சொல்ல தயங்கக் கூடிய செய்தியை நன்றாக தீர்மானமாக முடிவு செய்து, இப்படி நடந்தால் நன்மைமயம், இப்படி செய்தால் நல்லது என நினைத்து அவ்வாறே நடக்க வேண்டும் என மனதில் நினைவு கொள்ளுங்கள்.
இதையே திரும்ப திரும்ப நீங்கள் நினைத்தால் அந்த உறுதியான எண்ண அலைகளின் அதிர்வுகள் இயற்கையில் உள்ள கடந்த, நிகழ், எதிர்கால அதிர்வுகளில் கலந்துவிடும்.
ஓர் நிலையில் இந்த அதிர்வுகள் அவரைச் சென்று அடைந்திருக்கும். அந்த ஓர் குறிப்பிட்ட செயலில் அவரின் முடிவு உங்கள் எண்ணங்களை சார்ந்ததாக இருப்பதைக் காண்பீர்கள். சிலசமயங்களில் பலர், “நான்கூட நினைத்தேன் இப்படி செய்தால் நல்லது என்று! நீங்கள் கூறிவிட்டீர்கள்” என இயல்பான மனநிலையில் கூறுவதைக் காண்கின்றோம்.
இப்படி எண்ணங்களை சொல்லமுடியா நிலையிலும்கூட ஒருவருக்கொருவர் அதிர்வலைகள் மூலம் பரிமாறிக் கொள்கின்றோம். இதைத்தான் ஒரே எண்ண அதிர்வலையில் அடுத்த மனதை இயக்குவது கட்டுப்படுத்துவது என்ற செயல்பாடாகும். ஒருவரை ஒருவர் சந்திக்காமல்கூட ஒரே அதிர்வுகளின் தாக்கத்தில் இருவர் ஒரே சிந்தனையில் செயல்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
காற்றின் அதிர்வலைகளாக அனுப்பப்படும் பேச்சு, பாடல் ஒலி, ஒளிக்காட்சிகள் அதை எதிர்பார்க்கும் நபர்களை சென்று அடைதலை விஞ்ஞான வளர்ச்சியில் காண்கிறோம். இந்த அரிய செயலை நம் உடம்பின் புலன்களும் செய்கின்றது. மனம் செயல்பட்டு சிந்தனையில் பதிய வைத்த விஷயங்கள் அனைத்தும் கனவுகளாய் மலர்கின்றது. பல கனவுகள் நனவாய் மலர்கின்றது. இந்த இடத்திற்கு இதற்கு முன் வந்தது போல ஓர் நினைவு, இவரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு,
இது எல்லாம் காற்றின் அதிர்வுகளை நம் உடல், மனம் வாங்கி செயல் படும்போது ஏற்படுவது. இதில் கடந்த கால அதிர்வுகளை நம் உடல், மனம் ஒன்றி கிரகிக்கும் போது நமக்கு அந்த இடம் பழக்கப் பட்டது போலவும், அதற்கு முன் அந்த இடத்திற்கு வந்தது போலவும் உணருகிறோம்.
நம்மைச்சுற்றி எல்லா அதிர்வுகளும் நிறைந்திருக்கின்றன. நாம் நல்ல நினைவுடன், சந்தோஷமான நிலையில், ஆழ்ந்து தெளிந்த நிலையில் அதிர்வுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டால் நமக்கு பல விபரங்கள் தெளிவாகும். அதில் பல நம் வாழ்விற்கு மிகச் சிறந்த வழிகாட்டிடும். ஒருவர் இப்படிச்செய் எனச்சொல்லித்தர வேண்டியது இல்லை.
உங்களால் இது முடியும். உங்கள் மனத்தால் இதைச் செய்யமுடியும். சந்தோஷமடைந்து வாழ்வின் வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஓர் செயலுக்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும். யோசனையின் முடிவில் தோன்றும் கருத்துக்களின்மேல் நம்பிக்கைகொண்டு செயல்படவேண்டும்.
ஒருவன் நல்லவன் என்றால் நம்பவேண்டும். தீயவன் என்றால் விலகிவிடவேண்டும். ஒருவனைவிட்டு விலகிவிட்டு அவன் கூறுவதை நம்பக்கூடாது. அதேபோன்று நம்பியவர்களை விட்டு விலகிச் செல்லக்கூடாது. ஒரு இனியகாலையில் இன்றைய பொழுது நன்றாயிருக்கும். நன்றாயிருக்க வேண்டும் என நம்பவேண்டும். செய்கின்ற செயல் நன்றாயிருக்கும் என்ற நம்பிக்கையை முதலில் அடையவேண்டும். முடியாது என்று நினைவு கொள்ளாமல், முடியும் என நினைப்பவனின் மனம் தான் நன்கு செயல் படும்.
உன்னால் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை! உன்னால் மட்டும்தான் செய்ய முடியும் என்பது கர்வம்! அதை வெளியில் சொல்வது திமிர்! ஒருவர் நம்பிக்கை கொள்ளலாம். கர்வமும், திமிரும் கொள்ளக்கூடாது! அது மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனித்து பிரித்து வேதனையில் ஆழ்த்தும். துன்பத்தில் உழலுவீர்கள்!
எந்தப் பாறையிலும் இடையே புகுந்து படரும் தன்மையுடையது சல்லிவேர்கள். அதைப் போன்றதுதான் மனத்தின் நம்பிக்கை. அமைதியாக சிந்தித்து நம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்த செயலிலும் வெற்றி உறுதி.
நம்பிக்கை, மகத்தான செயல். ஒவ்வெருவருக்கும் தேவையான ஒன்று. அது மனத்தின் உறுதியை, வலிமையைக் காட்டும். செயலின் வெற்றி நம்பிக்கையின் அடிப்படையில்தான். நம்பிக்கைக்கு ஊக்கம், உற்சாகம் வேண்டும். இவை எல்லாம் எங்கிருந்து பெறப்படுகின்றது? நம் உடலிருந்துதான். உடல், மன ஆரோக்கியம் தான் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் அடிப்படை.
மகாபாரதத்தின் சூத்திரதாரியாக ஸ்ரீகிருஷ்ணர் விளங்குகின்றார். அந்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்திருந்தால் தர்மன் சூதாட்டத்தில் தோற்றிருக்க முடியாது. இந்தக்கதை சூதாட்டத்தின் பாதிப்புக் கதையாகவும் இருந்திருக்காது. கர்மபலன்படி தர்மன் தான் சூதாடுவது கண்ணனுக்கு தெரியக்கூடாது என நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை. சூதாட்டத்தின் தாக்கம் ஏற்பட்டபோது அவரின் உதவியும் கிடைக்கவில்லை.
துரியோதனன் தனக்கு சூதாடவராது என்பதால் சகுனியை தனக்கு பதிலாக நியமித்த போதும், தருமன் கண்ணன்மேல் நம்பிக்கை வைக்கவில்லை. தன்மேல் தனக்குத் தெரியாத ஒன்றின்மேல் நம்பிக்கை கொண்டான். தவறு செய்தான். அவனோடு சேர்ந்த அனைவரும் தண்டனை அடைந்தனர்.
திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்க முற்படும்போது அவள் தன் உடைகளைப் பற்றிக் கொண்டு கண்ணா! என்று அழைத்தாள். அப்போது அவள் தன் கரங்களை நம்பினாள்! நிலைமை மோசமானபோது தன் கரங்களை உயர்த்தி உள்ளார்ந்த நம்பிக்கையுடன் மனதின் அடித்தளத்திலிருந்து அழைக்க கண்ணன் வந்தான் உதவி கிடைத்தது.
எனவே எந்த செயலும் நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். ஆத்மார்த்தமான நம்பிக்கையே வெற்றி பெற உதவிடும்! உதவி கிடைக்கும். நம்பிக்கை விதையை மனதில் ஆழமாக ஊன்றி, எண்ணங்களை வார்த்தால் அதிசயங்களாக விளையும் அற்புதம்-நம்பிக்கை.
ராமர் இலங்கைக்குச் செல்ல வானர சேனையின் உதவியுடன் அணைகட்ட வேண்டியிருந்தது. ஆனால் அவரின் பக்தன் அனுமன் தன்னம்பிக்கையால் சமுத்திரத்தை தாண்டினான். நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது.
அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் துளையிட்ட ஓர்காசு கிடைக்க அதிர்ஷ்டம் மிகுந்தது என நம்பி அதை தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என் நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான்.
தினமும் பணிக்குப் போகும்போது அந்த நாணயம் தன் சட்டைபையில் மனைவி வைத்துவிட்டாளா, இருக்கின்றதா என தடவிப்பார்த்து உறுதி செய்து நம்பிக்கை மகிழ்வுடன் சென்றான். வாழ்வில் பலபடிகள் முன்னேறினான்.
ஒருநாள் தன் சட்டைப்பையில் உள்ள நாணயத்தை. தனக்கு வாழ்வில் முன்னேற உதவிய அதிர்ஷ்டத்தை எடுத்துப் பார்க்க விரும்பினான். அவன் மனைவி தடுத்தும் கேளாமல் எடுத்துப் பார்த்தான். அப்போது அந்த நாணயத்தில் துளையில்லை.
அதிர்ந்து போனான். அதைப்பற்றி மனைவியிடம் கேட்டபோது, பலநாட்களுக்கு முன்னால் அந்த சட்டையை எடுத்து உதறியபோது அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் வருத்தப்படுவான் என நினைத்து ஓர் துளையில்லா நாணயத்தை சட்டைப் பையில் மற்றி மாற்றி வைத்துள்ளாள் என தெரியவந்தது.
துளையிட்ட நணயம்- அதிர்ஷ்டமானது அது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்த பலம்தான் அவன் வெற்றிக்குக் காரணம். நாணயத்தில் ஏதுமில்லை! நம்பிக்கைதான் வேலை செய்திருக்கின்றது.
இந்த நிகழ்வு நம்பிக்கை என்பது நீங்கள் ஒன்று உங்கள் மேல் வைப்பது, மற்றொன்று மற்றவர்கள் மேல் வைப்பது. உங்கள்மேல் நம்பிக்கையிருந்தாலும், உங்கள் செயலில் உறுதியான நம்பிக்கை இருந்தாலும் சூழ்நிலை என்ற ஒன்று உங்களை சிக்கலில் சிக்கவைத்திட வாய்ப்புண்டு.
நீங்கள் எவ்வளவு திறமையும், உறுதியும், உற்சாகமும் உடைய நம்பிக்கையாளர் என்றாலும் உங்களைச் சுற்றியுள்ள சூழலைக் கணிக்கும் திறமை, நம்மிடமிருந்தோ அல்லது நமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடமிருந்தோ பெற்றுக் கொண்டால்தான் நம் நம்பிக்கையில் முழுவதுமாக வென்றிட முடியும். நாம் கவனக் குறைவினால் விட்ட சின்ன விபரங்களால் தாக்கம் ஏற்படாமலிருக்க இந்த ஆலோசனை உதவி தேவை.
நமது நம்பிக்கைக்குப் பத்திரமானவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்கள் நாம் நம்பிக்கையுடன் செய்யும் செயலை ஊன்றிக் கவனித்து நமக்கு அன்புடன் கருத்துக்களைக்கூறி உதவி செய்யவேண்டும். அந்த அன்புக்கு நாமும் அவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும். அன்பு மட்டும் போதாது. நமது வேண்டுகோளும் வேண்டும். இன்னவிதமான உதவி, இன்ன நோக்கத்திற்கு வேனும் என்று தெளிவான வேண்டுகோளை வைக்க வேண்டும்.
காலம் கடந்த வேண்டுகோள், உதவி பலன் அளிக்காது. முன்பே சொல்லியிருக்கலாம் என்ற மன உலைச்சல் இருவருக்கும் தோன்றக்கூடாது. யார் தவறாக இருந்தாலும் காலம் கடந்த உதவி அன்பர்மேல் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை, அன்பை கெடுத்துவிடும்.
எனவே முறையான வேண்டுகோள், சரியான காலத்தில் கிடைத்தால் தான் நாம் கொண்டிருந்த நம்பிக்கை வெற்றி பெற நம்பிக்கையாளர் உதவிட முடியும். கர்மவினை செயல்பட ஆரம்பித்து நம்பிக்கையாளர் நம் மேல் அன்பு இல்லாதிருந்தாலும், குறைந்திருந்தாலும் அவரின் உதவி காலத்தே கிடைக்காமல் உங்கள் வெற்றி தடைபட வாய்ப்புகள் உண்டு.
ஏற்றத்தாழ்வு எதுவரினும், உண்மை, தர்மம், நியாயம் எது என அறிந்திருந்தாலும் நண்பனின் அன்புக்காக, நண்பன் தன்மீது கொண்ட நம்பிக்கைக்காக தன்னை, தன் உயிரை தியாகம் செய்தான் “கர்ணன்”. அது அவன் கர்மவினைப்படி நடந்தேறியது என்கிறது மகாபாரதம்.
கர்ணன் தன் நண்பனுக்கு உண்மை, தர்மத்தை எடுத்துக்கூறி அன்பின்வழியில் துரியோதனனை மாற்ற முயற்சிக்காமல், அவன் தன்மீது கொண்ட நட்பின் நம்பிக்கை காரணமாக செயல் பட்டது அவன் வினைப்பயன்.
எனவே நம்பிக்கையின் வெற்றி, நமக்குமட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்நிலையைப் பொறுத்தது. அதே சமயம் வெறும் நம்பிக்கைகள் மட்டும் வெற்றி தராது. பல விஷயங்களில் கர்மவினைப்படிதான் நடக்கும் என்பதற்குச் சான்றுகள் ஏராளம். வாழ்வில் எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும்போதுதான் இதன் உண்மை நமக்குப் புரியவருகின்றது.
மனதின் சத்தத்தை கேளாதீர்! அது நம்மை ஏமாற்றிவிடும்! ஆன்மாவின் குரலை கேளுங்கள்! அது நம்மை கைதூக்கி லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நம்பிக்கை குலைக்கும் பேச்சுக்களை கேட்காதீர். அவைகளை மீண்டும் நினையாதீர். உறுதியில்லா நம்பிக்கையில் எதையும் சாதிக்க முடியாது. அசைக்கமுடியா நம்பிக்கைதான் வெற்றியின் ரகசியம். சந்தோஷத்தின் அடிப்படை.
நீங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நீங்கள் கூறுவது வேதவாக்காகிவிடும். முற்றிலும் அன்பின் வயப்பட்டு அன்பு உலகில் இருதோமானால் இந்த வினைகளின் செயல்பாடுகளின் பாதிப்பு நம்மை அவ்வளவாக பாதிக்காது. நமக்காக பல நல்ல அன்பு உள்ளங்கள் இருக்கின்றன. நம்மைச்சுற்றி அன்பு அலைகள் அதிகம் இருக்கும் போது கர்மவினை அலைகளின் தாக்கம் குறைந்து போகும்.
ஓர் படகு நிறைய பொருள்கள் ஏற்றி அக்கரை சொல்கின்றோம். அந்தப்படகு இத்தனை பாரங்களைச் சுமக்கின்றோமே என வருத்தப்படக்கூடாது. அது தன் கடமை என உணரவேண்டும். அதேசமயம் படகு ஓட்டையானால் அதில் சரக்கு ஏற்றமாட்டார்கள். ஓட்டை படகு என ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
இதைப்போல்தான் மனித உடம்பும், உயிரும் குடும்ப பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். அதைவிடுத்து பொருப்புகளையும் கடமைகளையும் கண்டு வருந்தி உங்களுக்குள்ளே ஓட்டை போட்டுக் கொண்டால் படகுபோல் ஒதுக்கித் தள்ளி வைக்கப்படுவீர்கள்.
உன்னால் முடியும் என்ற நம்பிக்கையில்தான் சமூகத்தில் பொறுப்புகள் உன்னிடம் சேர்கின்றன. அதை திறம்பட உன் செயல்களால் செய்து வெற்றிபெறுவதற்கு முயலவேண்டும். அதுதான் நம்பிக்கையுடன் கூடிய வாழ்வு. அந்த நம்பிக்கை முழுவதும் அன்புடன் கூடியிருந்தால் வெற்றிச் செயல்கள் அதிகமாகி வாழ்வு ஆனந்தமாக நிறையும். சந்தோஷம் நிலைக்கும். அந்த நம்பிக்கையை வியாபாரமாக்காதீர்கள்.
சரணாகதி: சரணடைதல் பெரும்பாலும், தன் இயலாமையை ஒப்புக்கொள்வது, வலிமையின்மையை தெரிவிப்பது ஆகியவையாகும். ஆனால் சரணாகதி என்பது அன்பின் உயர்ந்தநிலை..ஆன்மா சக்தியுடன் சேரும் உச்சநிலை அது.
நீங்கள் சரணடைந்துவிட்டால் உங்கள் செயல்கள், மனநினைவுகள் அர்ப்பணமாகிவிடும். மனதில் சுதந்திரமான எழுச்சி ஏற்படும். அன்பு, அழகு, கருணை, மகிழ்வு இயல்பாக உங்களுக்குள் ஏற்படும்.
ஒருவரிடம் சரணாகதி என்பது நம்மை நமது மனதை ஒழுங்குபடுத்தி ஓர்நிலைப் படுத்தலுக்கு பெயர். ஓர் நிலைப்பட்ட மனமே எதையும் சீர்தூக்கி பார்க்கமுடியும். சிந்தித்து செயலாற்றமுடியும். தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்படும் போதுதான் நம்மிடம் தன்னம்பிக்கை பிறக்கின்றது.
தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்களில் குறைகள் தோன்றினாலும் நம் கவனம் சிதறாமல் குறைகளைந்து வெற்றி காணமுடியும். எனவே சரணாகதி என்பது நமக்கு நாமே தன்னம்பிக்கையை நமக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ள என நினைக்க வேண்டும். மாறுபாடற்ற பூரணத்துவமான முழு நம்பிகையே சரணாகதி.
ஆனால் பொதுவாக எல்லோருக்கும் சரணாகதி என்பதைவிட தன்னம்பிக்கை பிடித்தமானதாக இருக்கின்றது. நம்மால் முடியாத ஒன்றை நம் நம்பிக்கைக்கு உற்ற ஒருவரிடம், இயலாமையை வெளிப்படுத்தி, அவரால் அந்த நிகழ்வில் நமக்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையில், செயலில் வெற்றிகானும் வழியே சரணாகதி.
எனவே சரணாகதியும் ஒருவகை நம்பிக்கையே! நம்மில் பலருக்கு நம்மால் முடியாது, இன்னொருவரின் உதவிதேவை, என்ற சரணாகதி நினைப்பை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருப்பதில்லை. சரணாகதிக்கு சுயமுயற்சி தேவை.
மகாபாரத்தில், அர்ஜுனன் வீரனாயிருந்தபோதும் போர்க்களத்தில் தன்னால் செயல்பட இயலவில்லை என்ற நிலையில் கிருஷ்ணனிடம் சரணடைந்து, அவரின் கீதா உபதேசத்திற்குப்பின் திறம்பட அவர் ஆலோசனைப்படி செயல்பட்டு வெற்றிகண்டான். துச்சாதனன் துகில் உரியும்போது தன்னால், தன்கைகளால் அதை தடுக்க முடியா நிலையில் கண்ணனிடம் சரணடைந்து தன் மானத்தைக் காத்துக் கொண்டாள் பாஞ்சாலி. இயலாநிலையில் சுயமுயற்சியுடன் கூடிய சரணாகதியே வெற்றிதரும்-குருஸ்ரீ பகோரா.

3-5.உதவி!

Written by

உதவி!  


ஹிரோயிசம் என்பது ஓர் கவர்ச்சி. ஓர் எதிர்பார்ப்பு. துன்பப்படும் ஜீவன்களுக்கு ஆறுதல் அளித்து நல்வழிகாட்டுதல் ஒர் நல்ல பண்பு. கதைகளாயிருந்தாலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி, எந்த ஆத்மா இதை செய்தாலும் பாராட்டப்படுவர். போற்றப்படுவர். வீர, தீர சாகசங்களாக புகழப்படும்.

சரித்திர சான்றுகளாக்கப்பட்ட நிகழ்வுகள் பல எடுத்துக் காட்டாக சொல்லப்படுவதுமுண்டு. அவைகளை முன்னுதாரனமாக ஏற்று வெற்றி பெற்றவரும் உண்டு. துவண்டு போனவர்களும் உண்டு.
நாம் ஓர் செயல் செய்கின்றோம். அது நாம் எதிர்பார்த்த விளைவு கொடுக்காமல் மாறான பயன் ஏற்படுத்தினால் அதன் தாக்கம் நம் மனதைப் பாதிக்கின்றது. அப்போது நாம் இவ்வாறு செய்து இது போன்று தவறு நடந்து விட்டதே என வருத்தப் படுவதோடு அல்லாமல் வேறுவிதமாக செய்திருந்தால் இந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது என மனம் நினைக்கும்.  
அல்லது நமக்கு இந்த செயலில் ஹீரோ போன்று யாராவது உதவி செய்திருந்தால் ஆதரவு, பாதுகாப்பு அளித்திருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்காது என அங்கலாய்ப்பு கொள்ளும்.
அந்த உதவி நண்பர்கள், உறவினர் மூலமாகவோ  கிடைத்தால் மிகமகிழ்வு. எதிர்பாராமல் முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து கிடைத்தால், புளங்காதிதம் அடைந்து,  தெய்வம்போல் வந்து உதவி என அகமகிழ்கின்றான். முகம் தெரியாத ஆன்மாக்களுக்குச் செய்யும் உதவியானது இறைவனுக்கு செய்யும் அரும்பணி போன்றது.
பிறரின் உதவி என்றால் அதற்கு நம் உற்றார், உறவினர், சொந்தபந்தங்கள், நண்பர்கள் அனைவரிடமும் நாம் பழகும் தன்மையைப் பொருத்தே, அதுவும் நல்ல சகஜமான நேர்மையான தூய உறவுகளாக இருந்தால் மட்டுமே, நமக்கு வேண்டும்போது கிடைக்கும். நாம் உதவி கேட்கு முன்பேகூட கிடைக்கும். அதற்காக மற்ற ஆன்மாக்களோடு உறவாடு!  அவர்களுக்கு பயன் உள்ளவனாக உன்னை மாற்றிக்கொள்! இதுவே உன்னால் உனக்கு முடிந்த உதவி.
நம் கர்மவினைகள் பொறுத்து உதவிகளின் தன்மைகள் குறையலாம், அதிகமும் ஆகலாம். ஆனாலும் கர்மவினைகளின் பாதிப்பு இருந்தாலும், கிடைக்கும் சின்ன சின்ன உதவிகள்கூட மிகப்பெரிய பலத்தைக் கொடுத்து நமக்கு நல்செயல்வழி கிடைக்கும்.  
ஆகவே பின்னால் நினைத்து பயனில்லை. எல்லோரையும் சினேக பாவத்துடன் பாருங்கள், பேசுங்கள். உங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குங்கள். உதவிகளைச் செய்யுங்கள்.
நீங்கள் பலன் கருதாமல் செய்த உதவி, ஆலோசனைகள் நீங்கள் எதிர்பாரா சமயத்தில் எவர் மூலமாகவாவது உங்களுக்கு தேவைப்படும்போது தானாக உதவிக்கரமாக வந்துசேரும். மனிதநேய மனத்துடன் கடுஞ் சொற்களில்லாமல் கனிவுடன் பேசி, செயல் பட்டால், உங்கள் மதிப்பு உயர்ந்து, எல்லோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாய் உதவுவீர்கள்.
உங்கள்மேல் உங்களுக்கும் தன்னம்பிக்கையும், மற்றவர்களுக்கு ஓர் நம்பிக்கையும் மலரும். மலரும் மலர்ச்சிகள் எல்லாம் சந்தோஷம் தருபவையாக அமையும். வாழ்வில் சதோஷம்தான் சந்தோஷிக்கத்தான்.
ஒரு பையன் படிக்கும் பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் திட்டம் ஒன்றினை தயாரித்து விளக்க அவர்தம் ஆசிரியர் கூறுகிறார். எல்லோரும் அவரவர் கற்பனைக்கேற்ப கூறுகின்றனர். ஒருவன், நாம் முகம் தெரியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்லவேண்டும்.
அப்படி அவர்கள் இதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால், இரண்டு வாரங்களில் 47லட்சத்து, 82ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். என்பதாகும். இந்த திட்டத்தை மாணவர்கள் கேலி செய்ய, ஆசிரியர் பாராட்டுகின்றார்.
அந்த மாணவன் இதை செயல்படுத்த முயற்சிக்கின்றான். உதவும் கரங்களின் சங்கிலி உருவாகின்றது. அம்மாவிற்கு இந்த செயல்கள் பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி பல துன்பங்களுக்கு ஆளாகின்றான்.
ஆனால் இந்த சங்கிலி அமைப்பினால் பலனடைந்த பத்திரிக்கையாளன் ஒருவன் எளிமையான இந்த திட்டத்தை புகழ்ந்து எழுதத் தொடங்க, திட்டம் வெற்றிபெற ஆரம்பிக்கின்றது. ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்பதே என்பதே இதன் கருத்து. இந்தமுறையில் உதவிகள் அனைவருக்கும் கிடைத்தால் அதன் செயலாக்கம் சிறப்பல்லவா!
நீங்களும் முடிந்தால் ஒரு 3பேருக்காவது ஏதாவது உபயோகரமான உதவியைச் செய்திடுங்கள். உங்களின் உதவிபெற்றவர்களையும், நண்பர்களையும், உங்கள் சொந்தங்களையும், அவர்களால் முடிந்தளவிற்கு உதவிதனைச் செய்யச் செயலாக்கம் கொள்வீர்.
உள்ளூர் பேருந்தில் பயனித்துக் கொண்டிருந்தேன். நடத்துனர் அனைவருக்கும் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன் தன் சட்டையின் மேல் பகுதியிலும், கீழ் ஆடையிலும் தேடினான். ஏதும் கிடைக்காத நிலையில் பதட்டமடைந்தான்.
அழுது விடும் நிலைக்கு வந்து விட்டான். அவனை தினமும் அதே ஊர்தியில் பார்த்து பழகிய நடத்துனர் அவனிடம் அவன் போகவேண்டிய இடத்திற்கானச் சீட்டைப் பத்திரமாக வைக்கச் சொல்லிக் கொடுத்தார்.
தினமும் மீதி பணம் பெற்று அதை தனக்கு வேண்டிய திண்பண்டம் வாங்கி பழக்கப்பட்ட அவனுக்கு, சட்டென்று அதே நினைவில் மீதியைக் கேட்டான் நடத்துனரிடம்.  
சீட்டு வாங்கப் பணமில்லாததால், இறக்கிவிடுவதற்குப் பதிலாக, தினமும் வருபவன் எனக் கருணைக் கொண்டதற்கு, பலன் இதுவா என்ற குழப்பத்தில் இருந்தான். இனி இது போன்ற உதவி செய்ய மனம் வருமா நடத்துனருக்கு! உதவி செய்தவர் மனம் வருந்தும்படி நம் சொல்லும் செயலும் இருக்கக்கூடாது-குருஸ்ரீ பகோரா.

3-4.அடக்கம்!

Written by

அடக்கம்!                                                                                                                  

“அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்”-அடக்கம் ஒருவனை தேவர்கள் நிலைக்கு உயர்த்தும். அடக்கம் இல்லாதிருந்தால், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் சேர்த்துவிடும்-வள்ளுவம்.
அடக்கத்தில் நாவடக்கம், வாயடக்கம், புலன் அடக்கம் முக்கியமானவைகள். இந்த அடக்கங்கள் உடலுக்கும், உடலால் உள்ளத்திற்கும், உள்ளத்தால் ஆன்மாவிற்கும் நன்மைபயக்கும்.
சுவை உணர்ந்து வாயின் நா உட்கொள்ளும்போது, போதும் என்ற அடக்கம், உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் மூலம் ஆனந்தத்திற்கும் எல்லை வகுக்கும்.
மேலும் சொற் குற்றத்தில் அகப்படாத நாவடக்கம் வேண்டும். தீய சொற்களின் பொருளால் விளையும் தீமைகளினால் மற்ற நண்மைகள் நடைபெறாமல் போகும். சூழ்நிலை அறிந்து, பெருளுணர்ந்து பேசுவதால் நமக்கும் மற்றோருக்கும் பயக்கும் நன்மையிலும் ஆனந்தமுண்டு.
புலன்களை அடக்கும் போது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியமும் ஆனந்தமும் தோன்றும். ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்க முடிந்தால் அதன் பயனை எல்லாப் பிறவியிலும் ஒருவன் பெறமுடியும்.
ஆக அடக்கமானது எல்லாவகையிலும் நமது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு ஆரோக்கியத்தையும் அதனால் ஆனந்தத்தையும் தரவல்லது, அது மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. அதை கடைப்பிடிக்க நாம் நம் புலன்களை, உணர்வுகளைப் பழகிக் கொள்ளவேண்டும்.
கட்டுப்பாடுள்ள வாழ்க்கை சீரானதாக இருக்கும். கட்டுப்பாடு என்பது பிறரின் தலையீடு இன்றி நமக்கு நாமே விதித்துக் கொண்டதாக இருக்கவேண்டும். அதில் கானும் இன்பம் நிலையானது, துன்பமில்லாதது. சீரான சந்தோஷத்திற்கு ஓர் படி.
மனித ஆத்மாக்களே மற்ற ஆன்மாக்களிடம் குறைகள் கண்டுபிடிக்காதீர்கள். அடுத்தவரிடம் ஒரு குறை கண்டு பிடிப்பதற்கு முன்னால் உங்களிடம் அந்தக்குறை உள்ளதா என்பதை கண்டு அதை நீக்க முயலுங்கள். இது சிறந்த அடக்க உணர்ச்சியாகும். எத்தனை குறைகள் மற்றவர்மீது கண்டு என்ன பயன். நீங்கள் அந்தக்குறைகளை உணர்ந்து நீக்கி நிறைவுடன் குறையில்லா வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்.
குறையில்லா உயிர்கள் ஏதுமில்லை. அந்தந்த சூழலுக்கு ஏற்ப குறைகள் கொண்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தி அதில் வெற்றிபெற நினைப்பது தவறாகும், அதே குறை உங்களிடம் இருந்தால் அதே முடிவுதான் என நினைத்து பாருங்கள். மனமாற்றம் கொள்ளுங்கள். அடுத்தவர் குறைதனை வெளிப்படுத்தாத அடக்கம் வேண்டும்.
அடக்கம் கொண்ட பணிவுடன் வாழ்பவர்கள் அவர்கள் காலத்தில் உலகம் கவனிக்கத் தவறினாலும், சரித்திரம் அவர்கள் பெயரை சுமந்திருக்கும். பணிவு உள்ளவர்கள் தங்களைத் திருத்தி மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் செயலாக்கம் கொள்ளமுடியும். பணிவும் இன்சொல்லும், எளிமையும் மனித ஆன்மாவிற்கு மலர்ச்சியை தரும்-குருஸ்ரீ பகோரா.

3-3.உலகுக்கு அழகு!

Written by

உலகுக்கு அழகு!  


இந்த உலகுக்கு எது அழகு! உலகில் எல்லாம் மலர்ந்து அதனதன் தன்மைகளை எந்த விருப்பும் வெறுப்பும் அற்று தன் கடமையாக செய்யும் செயலின் விதவிதமான வடிவங்களே! எதை நோக்கிலும் அழகு! எங்கும் எதிலும் அழகு! அழகோ அழகு! இந்த அழகை எல்லாம் ரசிக்க ரசிகத்தன்மை மட்டும் போதாது. அமைதியான மன நிலை வேண்டும். ஆர்வம் வேண்டும்! இயற்கையின் தன்மைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்! அப்போதுதான் அந்த சிலிர்ப்பான ரசனை நம்முள் தோன்றும். அதை நாம் உணர்வு பூர்வமாக உணர வேண்டும்! அந்த நிமிடங்களில் தான், இயற்கை நமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அதனிடத்தே கொண்டுள்ள பாடங்களை, நம்மால் கற்க முடியும்.

ஆன்மாக்களே! உங்களுக்கு ரசிக்கத் தெரியும். நீங்கள் அதற்காக பிறந்தவர்கள். எனவே இவ்வுலகின் ஒவ்வொன்றையும் ரசித்து மகிழுங்கள். சந்தோஷம் அடையுங்கள். ஒரு மலர் பூத்திருக்கின்றது. அதன் வண்ண அழகை, நறுமணத்தை ஒருவன் ரசிக்கின்றான். நுகர்ந்து அனுபவிக்கின்றான். பின் அதைப் பறித்து தன் வயமாக்கப் பார்க்கின்றான்.
ஒர் மலர் மலர்ந்து, இந்த உலகின் அழகை, அது எடுத்த பிறவியின் இடம் இவற்றை ஆவலாக கண்டு மகிழ்வு கொள்கின்றது. அதைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது நமக்கு அதன் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மலர்ந்த மலரை பறித்து அதன் தன்மைதனை இழந்து வாடி வதங்க வைக்கும் நம் செயல் நன்றன்று. மலர் தன் பிறவிப் பயன், கடமையாக தன் அழகாலும் நறுமணத்தாலும் தன் பிறப்பிடத்தையும் அல்லது தான் சேருமிடத்தையும் அழகும் நறுமணமும் கமழவைத்து, தானும் உலகின் அழகில் பங்கெடுத்து, வசந்தத்தில் வாழ்ந்து பலமணி நேரங்கள் தன் செயலை செய்கின்றது.
மலர்கள் கோர்த்து மாலைகள் ஆக்கி நற்காரியங்களுக்கு பயன் படுத்துதல் சிறப்பு. அவைகளின் பிறப்பின் பயனை நாம் உயர்த்துகின்றோம். அருள் புரியும் இறைக்கு சமர்ப்பிக்கின்றோம். இந்த செயல்கள் சிறப்பு என்ற நிலை கொள்கின்றது. ஆனால் அந்த மலரின் பிறவிக்கடமையை தடுத்து அது அழகும், மணமும் தரும் காலத்தைக் குறைத்து, நம் மலர் பறிக்கும் ஆசையால் இயற்கையின் சூழலுக்கு ஊறு விளைவிக்கின்றோம்.
நம் மனதிற்கு அழகு காட்டி ஆனந்தம் அளித்து மனம் பரப்பி வசந்த உணர்வுகளை மீட்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தும் அந்த இயற்கையின் அழிவுக்கு நாம் காரணமாக இருக்காமல், பார்த்தும், ரசித்தும், நுகர்ந்தும் அனுபவிக்கும் நினைவுகள் மட்டும் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் ‘மலர்களைப் பறிக்காதீர்கள்’ என்ற பலகை அறிவிப்பை பொது இடங்களில் காண்கின்றோம்.
நம் எல்லோருக்கும் ரசிக்கும் திறமையும், நுகரும் திறமையும் உண்டு. ஒருவரின் மலர் பறிக்கும் ஆசை, அந்த அழகை ரசிக்கும் பலரின் சந்தோஷங்களை வீனடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். பொதுவாக இயற்கையின் வனப்பை அழிக்காமல் அதன் அழகை ரசித்து உணர்ந்து சந்தோஷம் அடையும் நினைவுகளை எப்போதும் கொண்டால் அது மனித குலத்தின் சந்தோஷத்திற்கு வாய்ப்பாகும்-குருஸ்ரீ பகோரா.

3-2.இனிமையான பாடம்!

Written by

இனிமையான பாடம்!  


மழையில் நனையும்போது சந்தோஷமடையும் நாம், மழை எவ்வளவு சந்தோஷங்களை உள்ளடக்கி பூமியை நனைக்கின்றது என்பதை பெற்றோரின் அரவனைப்பில் புரிந்து கொள்ளல் வேண்டும். மழை அடக்கி வைத்திருக்கும் ஆனந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு நீர்த்திவலைகள். அதில் ஒரு பகுதியை கண்டு நாம் அடையும் ஆனந்தமே அளவிட முடியாதது.

சந்தோஷங்களை உள்ளடக்கிய மழைத் துளிகளை பூமி எவ்வளவு ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்கின்றது. அதன் வெளிப்பாடே மரம், செடி, கொடிகள், இன்னும் பல ஜீவராசிகள். ஆனால் அந்த சந்தோஷத்தை மரம், செடி, கொடிகள் பூத்து பூவாய் மலர்ந்திருந்து வெளிப்படுத்துகின்றபோது மனித ஆன்மாவும், மனமும் பூத்து குலுங்குகின்றது. அதன் அழகில், வண்ண நிறங்களில் சந்தோஷம் கண்டு மயங்கும் நாம் அந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் எவ்வளவு சந்தோஷத்துடன் பூக்களை மலரவைக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்பது இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை. எந்தவித பரபரப்பின்றி நம்மைச்சுற்றி நடக்கும் இயற்கையான அற்புத நிகழ்வுகளை கவனியுங்கள். புரிந்து ஆனந்தப்படுங்கள்.
இயற்கையில் பல பாடங்கள் நம் வாழ்விற்கு சொல்லப் பட்டுள்ளது. இயற்கையின் தீவிர உறுப்பினர்களாகிய தாவரங்களும், உயிரினங்களும் தானும் சந்தோஷமாயிருந்து மற்றவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தம் கடமையாற்றுகின்றன. இதைப்போன்றே நம் முன்னோர்கள் வழிவழியாக சந்தோஷங்களில் தோய்ந்திருந்திருப்பதால்தான் மனித குலம் வழி வழியாக தோன்றுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு பரஸ்பர ஆர்வமில்லை என்றால் அடுத்த தலைமுறை இருக்கவே இருக்காது. இது போதை தரும் இயற்கையின் தீராத விளையாட்டு.
ஆனால் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்ற ஒர் உன்னத கருத்து மறக்க விடப்படுகின்றது. உண்மையான அன்பு இன்றி கணவனாக- மனைவியாக வெறும் உறவு முறைகளுக்காக மட்டும் வாழ்வது மிகவும் சித்தரவதையான துன்பம் இருவருக்கும். இணைந்து வாழ்வதில் சுகம் உண்டு. மதிப்பு, அன்பு, ஆசை காரணமாக சேர்ந்திருப்பது சரி. சமூக நிர்பந்தத்திற்காக சேர்ந்து வாழுவது கொடுமை. உறவுகள் புரிந்து கொள்வதற்கு மட்டுமில்லை. ஒன்றோடு ஒன்றாக இனைந்து அன்பு கொள்வதற்குத்தான்.
ஓர்நாளில் சில மணிகள் மட்டுமே, அவசியமாண நேரங்களில் மட்டும் நீங்கள் ஆணாகவும்/ பெண்ணாகவும் நினைத்தால் போதும். எப்போதும் அந்த எண்ணங்களோடு இருக்க வேண்டியதில்லை. மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் சமம், எல்லாம் உயிர்களே என்ற உணர்வுடன் செயல்படுங்கள். அன்பு நிறைந்த வாழ்க்கையை அடையாளம் காண்பீர்.
முன்னோர்கள் வழித்தோன்றலாக நாமும் தோன்றி அன்பு கொண்டு சந்தோஷத்தை நாடவேண்டும். நம் முன்னோர்கள், பெற்றோர்கள் அடைந்த ஆனந்தம் நாமும் அடையவேண்டும். மலர்கள் போல், மழையைப்போல் தானும் சந்தோஷம் அடைந்து தன்னுடன் சேர்பவர்களையும் சந்தோஷப் படுத்துதல்தான் நியதி. குழந்தையாக இருந்தபோது ஒவ்வொருவரும் தன்னை சுற்றியிருந்தவர்களைச் சந்தோஷப் படுத்தியது போல் எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
பசிப்பிணிமருந்து: தமிழ் மீது பற்றுகொண்ட ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்க்க மதுரகவிராயர் சென்றபோது அவர் வயல் வெளியில் சிந்திக்கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கவிராயரை சிறிது இருக்கச்செல்லி தன் செயலை தொடர்ந்து செய்தார்.
பொறுமையிழந்த கவி, தன் பரபரப்பை உணர்த்தவே, ஏன் பறக்கின்றீர்கள்? என்ற பிள்ளையின் வார்த்தைகள் கவியின் மனதை தைக்க அவர், 'கொக்கு பறக்கும்! புறா பறக்கும்! குயில் பறக்கும்! நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்! நான் ஏன் பறப்பேன் நராதிபனே! திக்கு விசயம் செலுத்தி, உயர் செங்கோல் நடத்தும் செய்துங்கன் பக்கல் இருக்க, ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேன்! எனப் பாடினார்.
பாடலின் சுவையை ரசித்த பிள்ளை அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் முன் தலைவாழை இலை போட, பசியுடனிருந்த கவி சாப்பிட தயாரானார். ஆனால் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை கொண்டுவந்து இலையில் போட்டார் பிள்ளை. தங்கம் உயர்வுதான். ஆனால் அப்போது பசியை போக்குமா!
விழித்த புலவரிடம், வயல் வெளியில் உதிர்ந்த நெல்மணிகளை நான் பொறுக்கிய போது அற்பமாக பார்த்தீர்கள்! அது நெல் அல்ல! பசிப்பிணி மருந்து என்றார். கவிராயர், வள்ளலே! பசியின் கொடுமை தாங்காமல் அவசரப்படுத்திவிட்டேன் என்றார். ஆனந்தரங்கம் பிள்ளை கவிராயருடன் உணவருந்தி அந்த பொற்காசுகளை அவருக்கு தந்து சந்தோஷத்துடன் வழி அனுப்பினார்.
சோதனைகள், தடைகள் வரலாம். அவைகளைத் தாண்டி வெற்றி கண்டு சந்தோஷிக்க முயல வேண்டும். சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம்! எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று நினைவு கூடாது. சரியான முறையான செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை அடைய முயல வேண்டும்.
நமக்கு என்ன செய்கிறோம் என புரியாத மழலைப் பருவத்தில் நம் செயல்கள் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுக்கும். உறவும் சுற்றமும் ஆனந்தமடையும். அதே பருவம் கடந்து சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் அடைந்தபின் நாம் செய்யும் தவறுகளை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
எனவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக, சந்தோஷப்படும் வடிவில் செயல் அமையவேண்டும். அந்த வழி செயல்பாடுகளை நாம் தெரிந்து, செயல்பட்டு, நாமும் சந்தோஷித்து, நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சந்தோஷிக்கும் வகையில் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.
மலர்கள் எங்கு மலர்ந்தாலும் இருக்கும், வளர்ந்த, பிறந்த சூழலினின்று வேறுபட்டு தன் பிறவிக்குண்டான மனத்தையும் அழகையும் அனைவருக்கும் தறுதல் போன்று, நாமும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நம்மை தோன்றுவித்த பெற்றோர்கள், முன்னோர்கள் வழி பெருமைகளை வெளிப்படுத்தி நாமும் சந்தோஷம் கண்டு, அனைவரிடமும் காணவேண்டும்.
வாழ்வில் என்னென்ன சோதனைகள், குழப்பங்கள் வந்தடைந்தாலும் மலர் போன்று தெளிந்து மணம் பரப்ப கற்றுக் கொள்ள வேண்டும். மனம் மணந்தால் முகம் மலரும். அந்த மலர்ந்த முகம், நமக்கு முன்னேற்றப் பாதையில் மிகவும் உதவியளித்து வாழ்வில் வெற்றிதந்து சந்தோஷமாக பயணம் செய்ய உதவும்-குருஸ்ரீ பகோரா.

3-1.வேதம்!

Written by

வேதம்!


வேதம் என்பது கடைபிடிக்கமுடியாத ஒன்றும், செயல் படுத்த முடியாதது ஒன்று மில்லை. உயரத்தில் உள்ளது, எட்டிப்பிடிக்க முடியாதது, இருக்கும் இடம் தெரியவில்லை, கண்டுபிடிக்க முடியாதது என எதையும் நினைக்கக்கூடாது. எதையும் சாதிக்க முடியும், எட்டிப்பிடிக்க முடியும், கண்டு கொள்ள முடியும் என்ற உறுதி வேண்டும்.

ஒன்றை வேறொன்று என புரிந்துகொண்டபோது, அதை ஆரய்ந்துபின் உண்மையில் அது என்னவென்று தெரிந்துகொள்ள, நமது அறியாமையை அகற்றும் வெளிச்சமாகத் திகழ்வது வேதம். சாதாரண கயிறுகூட இருட்டில் பாம்பாகத் தெரிவது, விளக்கை ஏற்றியபின் உண்மைதனை அறிகிறோம். இந்த உண்மைகளை விளக்கி அச்சம், பயம் நீக்கும் பணியை வெளிச்சம்போல் வேதம் செய்கின்றது.
எந்த இதிகாசத்திலும், புராணத்திலும் நல்ல சிந்திக்கும் திறன் கொண்டவன், தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவன், பாசமும் நேசமும் கொண்டவன், மன உறுதியுடன் செயல் படுபவன் கொண்ட லட்சியங்கள் தோற்றதாக இல்லவே இல்லை.
அதற்கான மன உறுதி, முயற்சியை செயலாக்கும் திறன், கொஞ்சம் கர்மபலன் இருந்தால் வெற்றிக்காண வழி கிடைக்கும். அந்த பாதையில் செயலாக்கம் நடந்தால் சிறப்பாகும். நமது ஆன்மா சிறப்பானது, தூய்மையானது. ஞானத்துடன் சிந்தித்தால் எல்லாம் சிறப்பாகும். பிரபஞ்சத்தின் முந்தைய ஆற்றல்களெல்லாம் நம் முன்னோர்கள் உறுதியுடன் செயல் பட்டது.
நம்மைச்சுற்றி இருள் ஏதுமில்லை, நீங்கள் பிரகாசித்தால். நம்மில் யாரும் எதிலும் பலவீனமானவர்கள் இல்லை. எல்லா வகையிலும் திடகாத்திரமானவர்களே! தவறு என நீங்கள் நினைப்பதை, மற்றவர்கள் அவ்வறு சொல்லக்கூடும் எனத் தோன்றினாலும் செய்யாதீர்கள். திறன் உங்களிடம் இல்லை என்ற நினைவை கொள்ளாதீர். அந்த தீய கருத்தை உங்களுள் பரவாமல் முற்றிலும் அழித்து விடுங்கள்.
நல்லது செய்ய உண்மையில் விரும்பினால் தான் நமக்கு நிறைய சிந்தனைகள், செயல் வழிமுறைகள், காலம் எல்லாம் கிடைக்கும். பல லட்சியங்களை மனதில் கொள்ளலாம். நாம் செய்யும் தவறுகளை கண்டு ஒன்றும் சொல்லாமல், நமக்கேன் என என்னும் உறவினர்கள், நண்பர்களை நாம் பெற்றததுதான் நமது கர்ம பலன். முதலில் ஒன்றைச்சொல்லி அடுத்து அதை சூழ்நிலைக்கேற்ப சந்தர்ப்பவாதமாக மாற்றிச் சொல்லும் ஆன்மாக்கள் நம்மைச்சுற்றி அதிகம்.
நமது லட்சியத்திற்கு இவைகள் இலக்கணமானது இல்லை. எனவே நடைமுறை வாழ்க்கையில் நமது லட்சியத்தை இனைக்க வேண்டும். அந்த ஒன்றை எப்போதும் சிந்தித்தால் சிறப்பாகும். நமக்கு இருப்பது ஒரே உலகம், ஒரே வாழ்க்கை, ஒரே லட்சியம் வெற்றி கொள்வதுதான், சந்தோஷப்படுவதுதான், எல்லாமே சந்தோஷம் என்ற ஒன்றுக்குத்தான் நாம் செயல் படுகின்றோம். செயல் படவேண்டும்.
வேறுபாடுகள் தோன்றினாலும் உயர்ந்த நோக்கில் வேறுபாடுகள் களையப்பட்டு மறைந்தே தீரும் என்பது திண்ணம். உயர்ந்த லட்சிய நோக்கில் எல்லாமே வேறுபாடுகளற்றுத் தெரியும். வானிலிருந்து பார்த்தால் மலையும் மடுவும், மரமும் புல்லும், மாடியும் குடிலும் உயர வேறுபாடுகளின்றி தெரியும்.
அந்த வேறுபாடற்ற உயரத்திற்கு உங்கள் லட்சியங்கள் உயரவேண்டும். உயர்ந்த லட்சியங்கள்கொண்டு நோக்கின் எல்லாவற்றையும் வேறுபாடின்றி பார்க்கமுடியும். இதுவே வேதத்தின் கூற்று. முதலில் தாவரங்களும் பின் மனித இனமும் தோற்றிவிக்கப்பட்டது என்கின்றது வேதம். தாவரங்களின் தோற்றம் ஜீவராசிகளுக்கு உணவாவதே! அதாவது உணவை படைத்தபின் உண்பவனை தோற்றுவித்தவனின் அருள் அது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்குமுன் அதற்கு தாய்ப்பால் தயாராகிவிடும் என்பது வேதங்கள் கூறும் உண்மை.
மனதிற்கு மனம் எண்ண வேறுபாடுகளிருந்தாலும், உடலின் ஆன்மா, ஆன்மாவின் உடல் ஓர் அற்புதம். அதன் உழைப்பு சிறப்பு. அதன் செயல் பாடுகள் சிறப்பு. உழைப்பின் அருமை புரிந்தால்தான் வெற்றியின் சந்தோஷம், மழையின் அருமை வெய்யிலும், வெய்யிலின் அருமை மழையிலும் தெரிவதுபோல் தெரியும். புரியும். சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். நம் பெற்றோர்கள் ஒற்றுமையில், உழைப்பில் உறுவான இந்த உடலின் அருமை நமக்கு புரிய வேண்டும். அதன் உள்ளே உள்ள ஆன்மாவை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் அதன்வழி சென்று அதன் செயல்களை நன்முறைப் படுத்த முடியும்.
புராண, இதிகாச, இலக்கியங்களை, நீதி நூல்களை, இலக்கணங்களை படிப்பதால் வாழ்வில் உன்னத நிலைக்கு வரமுடியாது. இதைத்தான் வாசக ஞானத்தால் சுகம் வருமோ? என்றார் தாயுமானவர். எல்லாவற்றையும் படித்தலின் மூலம் நம்மை நாமே படிக்கவேண்டும். உன்னை அறிந்துகொள் என்பதே ‘உபநிடதங்களின் அடிப்படை உபதேசம்’.
தனிமை: என்ன என்ன சொல்லி ஊட்டமளித்து ஊக்கத்துடன் பெற்றோர்கள் வளர்த்த உடல், அந்த உடலின் ஆன்மா இது. அவர்களிடம் ஒன்றி வளர வேண்டும். வளர்ந்த பின்னும் ஒன்றிப் போகவேண்டும். அப்போதுதான் தனிமை என்ற எண்ணம் எந்நாளும் தோன்றாது, ஓர் நம்பிக்கையான தன்னம்பிக்கை கிடைக்கும். ஆதரவான அரவனைப்பு எல்லா நிலையிலும் எல்லா சுற்றத்திலிருந்தும் கிடைக்கும். ஒவ்வொரு ஆன்மாவும் தன் பயணத்தில் தன்மீது படிந்துள்ள எல்லா அடையாளங்களிலும்- தந்தை, தாய், கணவன், மனைவி, நடுத்தரவயது ஆண்/பெண், இளைஞன், இளைஞி ஆக எந்த அடையாளத்திலும் அந்த அரவனைப்பைப் பெறமுடியும்.
தெடரும் சந்தோஷம்: மனமும் உடலும் ஆக்க சக்தியைத்தான் வெளிப்படுத்தும். உங்கள் சிந்தனை அதன் வழி சென்றால் அந்த சக்தி வெற்றி சக்தியாக மாறவாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு மனமும் உடலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மனது சந்தோஷப்பட்டால் உடலும் சந்தோஷிக்கும்.
அதற்கு நாம் நம் வாழ்வில் இதற்கு முன் நமக்கு சந்தோஷம் கிடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளை நினைவில் கொண்டு வந்தால், அதன் மூலம் ஓர் ஊமை சந்தோஷம் மனதிற்குள் தோன்றி அது உடல்வழி பரவி, உடலும் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிடும். அதே போன்று சந்தோஷங்களை ஏற்படுத்தும் விஷயங்களை திட்டமிடுங்கள், செயல் படுங்கள். பிறகு எங்கும் எப்போதும் சந்தோஷம், சந்தோஷம் என்ற ஆனந்தம் என்றும் நம்முடன் தொடரும். நாம் நாடுவது சந்தோஷம்தான்.
ஆனாலும் நாம் எதிர்பார துன்பங்கள் இடைஇடையே வரும். அப்போதுதான் சந்தோஷத்தின் அருமை தெரியவரும். தொடர் சந்தோஷங்களும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் துயரமாகிவிடும். எதிர்பார்த்து கிடைக்காமல் துயரங்களுக்கிடையே நாம் தேடியடைந்த சந்தோஷங்களே நிறைவான சந்தோஷத்தை தொடர்ந்து தரும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

20911954
All
20911954
Your IP: 172.69.247.18
2021-04-13 10:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg