gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
புதன்கிழமை, 15 March 2023 15:18

தெய்வ படங்கள்!

Written by

ஓம்நமசிவய!


தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டதுகுறையென்றெண்ணி
புழைநெடுங்கரத்தாற் பற்றிப்பொற்புற இனைந்துநோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.


#*#*#*#*#

 

32.தெய்வ படங்கள்!

 

பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும். அது ராஜ அலங்காரம்,

வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.

மகா சொர்ணாகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.

லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம“ என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

#*#*#*#*#

ஓம்நமசிவய!


முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்கவெண்கோடொன்றுமேசிதையாநிற்கும்வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.


#*#*#*#*#


31.அர்ச்சனைக்கு ஏற்றது எது!

 

மலர்களில் மாலதி பூஜைக்கு மிகவும் ஏற்றது.

இறையை மரிக்கொழுந்தால் அர்ச்சித்தல் ஆனந்த வாழ்விற்கு அடிகோலும்.

மல்லிகையால் அர்ச்சித்தால் பாவங்களிலிருந்து விடுபடலாம்.

ஜாதிப்பூ, மலைஅத்தி, குருக்கத்தி, அலரி, செவ்வந்தி ஆகிய மலர்களின் அர்ச்சனை முக்தி கிட்டும்.

புங்க மலர் அர்ச்சனை புனிதம் பெறுவர். தாமரை, கேட்டகி, குந்தம், அசோகம் ஆகியவை அமோக பலன்களைத் தரும்.

கணபதியை அருகம் புல்லால் அர்ச்சித்தல் பலன். துளசியால் அர்சிக்கக்கூடாது.

திருமாலை துளசி கொண்டு அர்ச்சித்தால் அவர் அருகில் இருக்கும் பாக்கியம். காஞ்சனம், ஊமத்தம், மலைக்கர்ணிகை ஆகிய மலர்களால் அர்ச்சிக்கக்கூடாது.

அருக்கம், மந்தாரம், தும்பை, வில்வ இலைகள், கொன்றைப்பூ இவைகள் சிவனுக்கும் மிகவும் பிடித்தது. கேதகி, கர்கடி, நிம்பம் ஆகிய மலர்களால் சிவனை அர்ச்சிக்கக்கூடாது.

பொதுவாக கசங்கிய மலர்கள், அசுத்தமான மலர்கள், காய்ந்த மலர்கள் ஆகியவற்றால் இறையை அர்சிக்கக்கூடாது.

சொந்த தோட்டத்திலிருந்தோ அல்லது மாற்றான் தோட்டத்திலிருந்தோ பறித்த பூக்களைவிட வனப்பகுதியிலிருந்து பறித்த மலர்களே இறையின் விருப்பம்.

தங்கத்தால் அர்ச்சிப்பதைவிட மலர்கள் அர்ச்சனையே நூறு மடங்கு பலன் தர வல்லது.

பலவித வண்ண மலர்களால் அர்ச்சிப்பதைவிட எட்டுவித மானஸ மலர்களால் அர்ச்சிப்பது மகோன்னத பலன்களைத் தர வல்லது.

முதல்மலர்- ஜீவஹிம்சை செய்யாமல் அஹிம்சையை கடைப்பிடிப்பது
இரண்டாம்மலர்- சுயக்கட்டுப்பாடு
மூன்றாம்மலர்- எல்லப்பிராணிகளிடமும் அன்பு பூண்டிருப்பது.
நான்காம்மலர்- பேராசையின்றி உள்ளதைக் கொண்டு திருப்தி அடைதல்
ஐந்தாம்மலர்- இறைவனிடம் மாறாத தெய்வ பக்தி.
ஆறாம்மலர்- சதா இறைவனை நினைத்து தியானம்
ஏழாம்மலர்- வாய்மை
எட்டாம்மலர்- பற்றற்று இருப்பது

இந்த எட்டு மலர்களால் தினமும் இறையை பக்தியுடன் ஆராதிப்பவர்கள் எல்லாவிதமான நற்பலன்களையும் அடைந்து முடிவில் இறையின் அடியை அடைவர்.

#*#*#*#*#

 

ஓம்நமசிவய!


அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.


#*#*#*#*#

 

30.பூஜையில் வாழைப்பழம் தேங்காய் ஏன்!

 

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்! எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.

மேலும் கோவிலுக்குப் போகும்போது வெறும் கையுடன் செல்லாமல், இறை அருளால் நன்றாக இருப்பேன் அதற்கான காணிக்கை என்பதற்கான சம்பிரதாயமாக எதையாவது கொண்டு செல்ல வேண்டும். அந்த வழக்கப்படி தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றோம். கொண்டு செல்லும் பொருளில் நானே கெட்டியானவன் என நினைத்த தேங்காய் உள்ளே உடைபடுகின்றது. இனிமையானவன் மென்மையானவன் என நினைத்த வாழைப்பழம் பூஜை முடிந்தபின் உரிக்கப்படும். அமைதியாக இருந்த கற்பூரம் தீபம் ஏற்றப்பட்டதும் கரைந்து காணமல் போனது. இதில் பக்தர்களுக்குச் சொல்லப்படும் உண்மை நிலை என்றால் தேங்காயைப்போல் கர்வத்துடன் இருந்தால் ஒருசமயம் உடைக்கப்படுவீர். மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கின்றோம் என தற்பெருமை பேசிக்கொண்டிருந்தால் ஒருநாள் கிழிக்கப்படுவோம். கற்பூரம்போல் அமைதியாக மணம் வீசிக்கொண்டிருந்தாலும் இறுதியில் கரைந்து ஒன்றுமில்லாமல் இறைவனோடு கலந்து விடுவோம் என்பதை உயிர்கள் உணர்ந்துகொள்ளவே!

ஆண்டுதோறும் நடைபெரும் விழாக்கள் மகோத்சவம் அல்லது பிரமோத்சவம் எனப்படும். கொடியேற்றமே திருவிழாவின் முதல் நாளாகும். இதன் மூலம் விழாவிற்கு வருமாறு தேவர்களுக்கு அழைப்பு விடுத்து திருவிழா முடியும் வரை கொடிமரத்தில் இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படும். ஒன்று / பத்து / இருபத்தோரு நாட்கள்வரை நடைபெறும். மும்மலத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர், தளைகளை நீக்கிக் கொண்டால் இறைவன் திருவடியை அடையலாம் என்பதை கொடியேற்ற நிகழ்ச்சி காட்டுகின்றது.

கொடிமரம் பதியையும், கொடிச்சீலை உயிர்களையும், தர்ப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கும். உலகை உடலுக்குள் காணும் யோகிகள் கொடிமரத்தை முதுகுத் தண்டாகவும், கொடி சீலையை மூலாதாரத்தில் சுருண்டிருந்து யோக சாதனத்தால் சுழுமுனையை நோக்கி மேலேறும் குண்டலினி எனும் சக்தியாகவும் கருதுவர்.

ஆசமனம் ஏன்!

இறைவனை ஒருவன் பூஜை செய்து வழிபடவேண்டுமென்றால் ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் என்பது நீரால் தன்னை சுத்தி செய்து கொண்டு பக்தியால் உள்ளத்தை சுத்தி செய்வதாகும். அவ்வாறு ஆசமனம் செய்பவனே தூய்மையடைவான். உடலும் உள்ளமும் தூயமையுடன் இருக்கும்போது தான் அவனுள் பக்தி தலைதூக்கும்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.


#*#*#*#*#

 

29.பூஜை எப்படி செய்ய வேண்டும்!

 

எட்டு அங்குல உயரத்திற்குமேல் விக்ரகங்களை வீட்டில் வைத்து விக்ரக பூஜை செய்யக்கூடாது.

இறைவனை வழிபட பத்ரம்(இலை), பலம்(பழம்), புஷ்பம்(பூ), தோயம்(சுத்தமான நீர்) ஆகியவை கொண்டு எளிய முறையில் பூஜை செய்து இறைவனை வழிபட வேண்டும். இலை என்றால் சிவனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு துளசியும், அம்பாளுக்கு வேப்ப இலையும், கணபதிக்கு அருகம் புல்லும் என வரையறை செய்துள்ளார்கள். இவற்றைக்கொண்டு அந்தந்த தெய்வங்களை வீட்டில் பூஜை செய்தும் ஆலயத்தில் வழிபட்டும் பெரும் பலன்களை அடைந்துள்ளார்கள்.

பசுஞ்சாணியால் பூஜை நடத்தும் இடத்தை மெழுகி கோலமிட்டு ஸ்நானம் செய்த பின் முதலில் முதுகை துவட்டி பின் மற்றபாகங்களைத் துடைத்து விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, விளக்கேற்றி, புனித மந்திரங்களை ஜபித்து பிரதிமை என வழிபடும் சிலைக்கு நெய் முதலிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்வித்து நெய்வேத்தியத்தை படையலிட்டு தூப தீபம் காண்பித்து மனதால் நிறைவுடன் நினைந்து வழிபட வேண்டும். இனிய பாடல்களால் பாமாலை சூட்டி கண்களில் திருவடியை நிறைத்து சிந்தை முழுவதும் இறை எண்ணங்களை நிறைத்து செவியில் இறை கீர்த்தனைகளை மட்டும் கேட்கும்படி உடலும் உள்ளமும் ஒன்றி உயிர் உருக இறைவனை வழிபாடு செய்வது ஆகும்.

தூய்மையற்ற பொருட்களையோ மது, மாமிசங்களையே உண்டு பின்னர் பூஜை செய்யக்கூடாது. மாயான பூமியிலிருந்து வந்து பூஜை செய்யக்கூடாது. தூய்மையற்ற ஆடைகளை அணிந்து கொண்டோ அல்லது மற்றவர் ஆடைகளை அணிந்து கொண்டோ பூஜை செய்யக்கூடாது. கோபம் மற்றும் வெறுப்பு ஆகிய உணர்வுகளின்றி சாந்தமான அமைதியுடன் பூஜை செய்யவேண்டும்.

சாதாரண மனிதர்கள் தங்களின் துக்கங்களைக் குறைக்க, சுகத்தைப் பெருக்க வீட்டில் சாந்தி, போஷாக்கு பெற யாகங்கள் செய்யலாம். சுத்தமில்லாதவர்கள் வீட்டிலோ தீட்டு உள்ள வீட்டிலோ ஹோமம் செய்யக்கூடாது.

தெய்வ வழிபாட்டை செய்யாமல் இருப்பதும் தெய்வ நிந்தனை செய்வதும் மது அருந்துவதற்குச் சமம்.

காயத்திரி மந்திரம், ஓம் என்ற பிரணவ மந்திரம், ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம், ஓம் நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை உச்சரிப்பவனை எந்த பாவங்களும் அணுகாது. கடவுள்களுக்கு பிரியமான மந்திரத்தைக் கூறி மனதால் தியானிப்பது ‘மனோஸ்நானம்’ ஆகும்.

பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கப்படும் லுங்கிகள் அணியக்கூடாது. ஆண்கள் மேலாடையின்றி இடுப்பில் உடுத்தியிருக்கும் ஆடையின்மேல் ஓர் துண்டைக் கட்டிக்கொள்ளுதல் சிறப்பு.

துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி வழிபடுபவன் சொர்க்கம் செல்வான்.

கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் நித்ய பூஜைகள். அவைகள் கோவில்களின் நிதி நிலை வசதியைப் பொருத்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஆறு காலங்கள் என நடைபெறும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய விசேஷ காலங்களில் நடைபெறும் பூஜைகள் நைமித்திக பூஜைகள் எனப்படும்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்யப்படுவது காம்யபூஜை.

ஓம்நமசிவய!


வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!


#*#*#*#*#

 

28.திருமுழுக்கு- அபிஷேகம்!

 

பண்டைக்காலத்தில் 26 திரவியங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது 18 ஆகி அதுவும் குறைந்து 12 ஆகிவிட்டது. முக்கியமாக எள் எண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற முறைப்படி அபிஷேகம் செய்தால் அந்த விக்ரகத்தின் ஆற்றல் மந்திர யந்திரங்கள் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யும். அபிஷேகங்களில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் மூன்றும் மிகச் சிறந்ததாகும். எந்த அபிஷேகம் செய்தாலும் குறைந்தது ஒரு நாழிகை அளவிற்கு செய்வது சிறப்பு. ஆகம விதிப்படி மூலவிக்ரகத்திற்கு நடத்தப்படும் அபிஷேகங்களில் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும்தான் பக்தர்கள் பர்க்க அனுமதிக்க வேண்டும். கற்சிலையாக இருக்கும் விக்ரகங்கள் அபிஷேகம் செய்யப்படுவதால் பிரபஞ்ச சக்திகளை ஒருங்கே ஈர்த்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பரவச் செய்கின்றது. அந்த ஆற்றலை நாம் அடைந்து புத்துணர்ச்சி பெறுதல் வேண்டும் என்பதற்காகவே இறைக்கு அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

#*#*#*#*#

 

புதன்கிழமை, 15 March 2023 09:40

கருவறை சிறியது ஏன்!

Written by

ஓம்நமசிவய!


இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக்கணபதியே போற்றியென போற்றுகின்றேன் !


#*#*#*#*#

 

27.கருவறை சிறியது ஏன்!


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.

இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.

நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.

பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவி பரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி எனப்படும்.

இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.

கருவறை இதயம் போன்றது. மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை மட்டும் வட்ட வடிவில் இருக்கின்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.

கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.

இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். ஐந்து நாட்களில் முளைத்தால் மத்திமம். ஐந்து நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.

சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்..

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.
கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.

கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள். கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு பரவச் செய்கிறது.

தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.

கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கி நிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதால் நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.

பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறையில் இறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

#*#*#*#*#

 

ஓம்நமசிவய!


பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில்
போற்றுகின்றேன்உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!


#*#*#*#*#

 

26.கோவில்- எப்படி நடந்து கொள்ள வேண்டும்!


கோவில்களில் நுழைந்ததும் அல்லது அதற்கு முன்பாகவே இருக்கும் விநாயகருக்கு முதல் மரியாதை அளித்து அவரை வழிபட்டு உள்ளே செல்லுங்கள். அரச மரத்தடியில் விநாயகர் இருந்தால் கண்டிப்பாக சுற்றி வாருங்கள். அரச மரத்தின் வேர்ப்பகுதியில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும் மேலே சிவனும் இருப்பதால் அந்த நினைவுடன் சுற்றுங்கள்.

பலிபீடம்: மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்றது. ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட தலங்களில் உள்ள பலிபீடங்கள் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாகும். பலி பீடத்தின் அருகில் சென்றதும் ஆன்மாவில் உள்ள ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களையும் நான் என்ற அகங்காரத்தையும் பலியிட வேண்டும் மேலும் அந்த இடத்தில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை பலியிடவேண்டும் என்பதாகும். இது ஆலயவழிபாட்டில் மிகவும் முக்கியமானது.

மனித உள்ளங்களில் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, ஆகிய குணங்கள் நீக்க முடியாதவனவாக இருக்கலாம். இக்குணங்கள் ஒருவரின் மனதில் இருந்தால் அதனால் வேண்டாத எண்ணங்கள் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து விடுபட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மனம் தெளிவாக இருத்தல் வேண்டும். அப்போது தான் கோவிலில் நிறைந்துள்ள இறை அதிர்வுகள் நம்மீது பரவி நம் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண இயலும். எனவே மனதில் உள்ள தீய குணங்களை வெளியேற்ற அந்த பலிபீடத்தில் தீய குணங்களை எண்ணங்களை பலிகொடுக்க வேண்டும் என்று நிறுவப்பட்டுள்ளது.

பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதன், அசுரபத்தி, பத்மம் என்று பலவகை பலிபீடங்கள் இருந்தாலும் அவைகள் பத்ர லிங்கம் என்றழைக்கப்படும்.

மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்போதோ நைவேத்தியம் படைக்கும் போதோ பலிபீடத்தை வழிபடக்கூடாது.

பலி பீடத்தை வணங்கியபின் நம் மனதில் தீயவைகளை பலியிட்டு விட்டதால் நம் மனதில் மேலான சிறப்பான எண்ணங்கள் இருப்பதாக நினைவு கொள்ளல் என்பது முக்கியம். அதே நல்ல மனநிலையுடன் இறைவனை வழிபடும்போது அவர் அருள் நம்மை கண்டிப்பாக நம்மை ஆக்ரமித்து ஆசீர்வதிக்கும்.

பிறப்பி இறப்பு எனும் மாயச் சக்ரமாக பலிபீடத்தைக் கருதி வழிபடும் போது ஸ்தூல சூட்சம காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவித்துவிடு என்பதற்குச் சமமாகும்.

பலிபீடத்தில் உப்பும் மிளகும் போட்டு வழிபடுவது உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதன் அடையாளம். இதனால்தான் மாரியம்மன் திருவிழாவில் தேருக்கும், கம்பத்திற்கும், உப்பும் மிளகும் போடுவது வழக்கமானது.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளிலும் எட்டு பலிபீடங்கள் வைப்பது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற எட்டு திக் பாலகர்களைக் குறிக்கும்.

பலிபீடங்கள் அருகில் நின்று நிதானமாக வழிபடுங்கள். மனித குணங்களை மேம்படுத்துவை பலிபீடங்கள்.

ஸ்வாமிக்கும் அதற்கு முன் இருக்கும் வாகனத்திற்கும் இடையில் செல்லக்கூடாது. ஆடவர்கள் மேலாடையின்றி இறைவனுக்கு வலது பக்கமும் பெண்கள் இறைவனுக்கு இடது பக்கமும் நின்றுதான் வழிபடவேண்டும். அப்படி மாறி நிற்பவர்களை அர்ச்சகரும் ஒன்றும் சொல்வதில்லை. தங்களுடைய வருமானம் கருதி இதுபோன்ற முறைகளை அவர்கள் சொல்லுவதில்லை. இறை சன்னதியில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனத் தெரியாதவர்களுக்கு அவற்றைச் சொல்லித் தருவதில் தவறேதுமில்லை. யாராயிருந்தாலும் நமது இறை வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்த தெரிந்த ஒருவர் தெரியாத யாருக்கும் சொல்லலாம். அது அனைவருக்கும் நல்லது.

மணக்கோலத்தில் இருப்பவர்களை இறைவனுக்கு இடப்பக்கம் மணப்பெண்ணை நிறுத்தி அவர் அருகில் மணப்பையனை நிறுத்தி அர்ச்சனை செய்து மானசீக ஆசீர்வாதம் வேண்டி வழிபடவேண்டும். ஆண்கள் இருகைகளை உயர்த்தி தலைக்குமேல் கரம் குவித்து வணங்கவேண்டும்., பெண்கள் இரண்டு கையையும் நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்க வேண்டும்.

விநாயகர் சந்நிதியில் ஆண்கள் தோப்புக் கரணம் போடுவதைப் பார்த்த பெண்களெல்லாம் அதுமாதிரி செய்கின்றார்கள். அது தவறு. பெண்கள் தலையில் இரு கைகளாலும் குட்டிக் கொண்டால் போதுமானது.

கோவிலில் தரப்படும் சிட்டிகை விபூதி மற்றும் குங்குமத்தை அவரவர் நெற்றியில் இடவேண்டும். மீதியிருந்தால் அதை ஒரு பேப்பரில் வைத்து பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு சென்று கோவிலுக்கு வர முடியாத நிலையில் இருக்கும் பெரியவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்கவும். உடனே அடுத்த கைக்கு மாற்றிக்கொளவது, அருகில் இருக்கும் தூண்களின் இடுக்கில் போடுவது எல்லாம் தவறு. இறைவனுக்கு தீபராதனைக்காட்டி கொணர்ந்த விபூதியைப் பிரசாதமாகப் பெற்று அதை முறையாக உபயோகிக்க வேண்டும். ஒரு சிட்டிகை விபூதி உலகத்து செல்வம் எல்லாம் தரவல்லது என்பதால்தான் கோவிலில் பூஜை முடிந்ததும் ஒரு சிட்டிகை விபூதி பிரசாதம் தரப்படுகின்றது. அதை உபயோகிக்கும் பக்தர்களைப் பொருத்தது அதன் மகிமை. ஈசன் குபேரனை மன்னித்து ஒரு சிட்டிகை விபூதி அளிக்க அதை அவன் ஓர் சிமிழில் வைத்து பூஜை செய்து வந்தான். உரிய காலம் வந்ததும் உலகத்து செல்வம் எல்லாவற்றிற்கும் அவனே அதிபதி ஆனான்.

கோவிலுக்கு வந்தால் ஆண்களாயிருந்தாலும் சரி பெண்களாயிருந்தாலும் சரி சொந்தங்களை, நண்பர்களைப் பார்த்து நலம் விசாரித்து உலக விசயங்களை பேச ஆரம்பித்து விடுகின்றோம். தற்போது அது மூல ஸ்தானத்தில் நிற்கும்போதுகூட நடைபெறுகின்றது. அது தவறு. எதற்காக கோவிலுக்கு வந்தீர்களோ அந்தக் கடமைதனை செவ்வனே செய்து இறையருளை வேண்டி வழிபட்டபின் கோவிலில் அமர்ந்து செல்லச் சொல்லியிருக்கின்றார்கள் நம் பெரியோர்கள். அப்போது உங்கள் சொந்தங்களை நட்பை உங்கள் நேரம் அறிந்து உணர்ந்து அளவளாவுங்கள். அதுவே சிறந்தது. அதைவிடுத்து கோவிலின் மற்ற இடங்களில் யாரைப் பார்த்தாலும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். கோவிலின் ஆன்மீக அமைதி சந்நித்யம் ஆகியவற்றிற்கு கேடு செய்யாதீர்கள். மேலும் பூஜை மற்ற கோவில் நிகழ்வுகளில் தலையிடாதீர்கள். அதற்கு கோவில் நிர்வாகிகள் இருக்கின்றார்கள். அப்படி தலையிட்டால் உங்கள் பக்தியின் தரம் தாழ்ந்துவிடும். இறைவனை சேவிக்க வந்தவர்கள் தங்கள் நோக்கத்தில் கருத்தாக இருந்து தெய்வ தரிசனம் செய்தால் போதுமானது.

கோவிலைச் சுற்றி வரும்போது அவசரகதியில் ஓடிவருபவர்களைப் போல் சிலர் பிரதட்சனம் செய்வர். அது தவறு. கோவிலுக்கு வருபவர்கள் அதற்கு என்று நேரத்தை ஒதிக்கிவிட்டு வாருங்கள். கோவிலில் பிரஹாரத்தை சுற்றும்போது நிதானமாக இறை சிந்தனையுடன் முறையாக இறைவனுக்கு வலமிருந்து ஆரம்பித்து இடப்பக்கமாக சென்று ஒருமுறை அல்லது மூன்றுமுறை சுற்றவும்.

எல்லா சுற்றும் வழிபாடும் முடிந்தபின் துவஜ ஸ்தம்பம் அருகில் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்கார முறையில் முழுமையாக விழுந்து வணங்க வேண்டும். பெண்கள் மண்டியிட்டு வணங்க வேண்டும். துவஜஸ்தம்பம் அருகில் தவிர வேறு எங்கும் விழுந்து வணங்க கூடாது.

துவஜஸ்தம்பத்தின்முன் வணங்கியபின் கோவிலில் ஓர் பகுதில் சிறிது அமர்ந்து பின் உங்களது இருப்பிடத்திற்குச் செல்லுங்கள்.

#*#*#*#*#

 

ஓம்நமசிவய!


அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!


#*#*#*#*#

 

25.குற்றங்கள்-தண்டனை-அரச தர்மங்கள்!

 


ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால் மனமுருகிப் பிராயச்சித்தம் மேற்கொள்ள வேண்டும். தவறு செய்தவனுக்கு அவன் செய்த குற்றங்களின் தீவிரம், அதனால் ஏற்பட்ட இழப்புகளின் தன்மை, நஷ்டம் அடைந்தவர்களின் பாதிப்பு, சமுதாயத்தின் நிலை என பலவகைகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதால் அதை தீர விசாரனை செய்து தண்டனை வழங்க வேண்டும்.

பிறரைக் கொல்வது, கொல்ல நினைப்பது, மது அருந்துவது, தங்கத்தை திருடுவது, பிறர் மனைவியுடன் சேர்வது ஆகிய குற்றங்கள் மகா பாதகச் செயல்களாக கருதப்படும்.

உண்மையை மறைத்து பொய்யான தீர்ப்பைச் சொன்னால் அது கொலை பாதகத்திற்குச் சமம்.

பசுவைக் கொல்வது, கோவில் காரியங்களுக்கு இடையூறு செய்தல், விபசாரத்தொழில் செய்வது, பெற்றோரை கைவிடுதல், வேதம் படித்தவர்கள் ஓதாமலிருப்பது,

பெண்களைக் கொல்வது, எளியவர்களை அழிப்பது, சிசுவதை ஆகியவைகள் குற்றங்கள்.

கருச்சிதைவு பிரமஹத்தி தோஷமாகும்

பொய் சாட்சி சொல்வது குற்றம். அவன் சொத்தில் எட்டில் ஒரு பகுதி அரசுக்கு சொந்தமாக்க வேண்டும். நீதி ஸ்தலத்தில் பொய் சாட்சி சொல்பவனுக்கு இரட்டை தண்டனை வழங்க வேண்டும்.

தான் சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கு மக்களின் பொது நலனுக்காக அரசுக்கு செலுத்தாமலிருப்பது குற்றம்.

பிறரால் ஒப்படைக்கப்பட்ட அல்லது பொது சொத்தை தனதாக்கியவனுக்கு அந்த சொத்தின் மதிப்பைப்போல் இரண்டு மடங்கு தொகை அபராதம்.

முன் பணம் பெற்று வேலைக்கு வரவில்லை என்றால் அதற்கு தண்டனை உண்டு.

வார்த்தை தவறி நடப்பவனுக்கும் தண்டனை உண்டு.

குறிப்பிட்ட காலம் வர வேலை செய்ய ஒருவரை அமர்த்திவிட்டு இடையில் நீக்கம் செய்வது தண்டனைக்குரியதாகும்.

வரப்பு மற்றும் எல்லைகளை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளுதல் தண்டனைக்குரியது.

ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்குமாறு பேசினாலும் தண்டனை அளிக்க வேண்டும்.

இயற்கையை அழிப்பதும் நல்ல கனி தரும் மரங்களை அழிப்பதும் குற்றமே.

பெண்களை இழிவு படுத்துதல் கற்பை சூறையாடுதல் ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனைகள்.

அளவுகளிலும் தரத்திலும் தில்லு முல்லு செய்தல் குற்றம்.

அரசு உத்தரவுகளை நிறைவேற்றாமல் மீறுவது குற்றம்.

குற்றம் செய்தவர்களை தப்பவிடுதல் குற்றமோ குற்றம்

நியாமற்ற முறையில் நீதிபதிகள் ஒருவருக்கு தண்டனை அளித்து விட்டால் அதற்கான தண்டனை அவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.

அபராதங்களை செலுத்த தவறினால் அதற்குப் பதிலாக வேறு தண்டனைகள் வழங்கப் படவேண்டும்.

#*#*#*#*#

 

புதன்கிழமை, 15 March 2023 09:20

நீராடல் எப்படி!

Written by

ஓம்நமசிவய!


மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 


#*#*#*#*#

 

24.நீராடல் எப்படி!


மனித உடல் மிகவும் அழுக்கானது. தோல் துவாரங்களிலிருந்து உடல் கழிவுகள் வெளியேறி தோலின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். உடலின் ஒன்பது துவாரங்களிலும் ஒன்பது விதமான மலங்கள் இருக்கும். இந்த மல சுத்திக்காக விடியற்காலம் ஸ்நானம் செய்து உடலை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என நியமிக்கப்பட்டுள்ளது. புணரக் கூடாத உறவுகளுடன் புணர்ந்த பாபமும், தானம் வாங்குவதால் விளையும் பாபமும், ரகசியச் செயல்களால் விளையும் பாபமும் ஸ்நானம் செய்வதால் நீங்கி விடும். குளிக்காமல் அழுக்கு, பாவச் சுமைகளுடன் செய்யும் அன்றாட கர்மங்கள் யாவும் பயனற்றதாக மாறிவிடும்.

தினசரிக் கடமைகளில் ஒன்றான குளியல் –நித்தியம் எனப்படும்.

தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்க நீராடுவது நைமித்திகம்.

விழாக்களுக்காக நீராடுவது காமியம்.

சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றிற்காக நீராடுவது கிரியாங்கம்.

உடல் சுத்திக்காக நீராடுவது மலாபகர்ஷ்ணம்.

புண்ணிய நதிகளில் நீராடுவது க்ரியா ஸ்நானம்.

நீராடுமுன் சிறுநீர் கழிக்க அதற்கென்றிருக்கும் இடத்தில் சிருநீர் கழித்துவிட்டு வந்து நீராடல் வேண்டும். நீராடும்போது எல்லா உறுப்புகளும் நீரில் நனைய குளிக்கவேண்டும்.

நதிகளில் நீராடினால் நீரில் உடல் அமுங்கி மறையும்வரை நீராடல் சிறப்பு. ஆற்றுக்குப் போனோம் இரண்டு முங்கு முங்கி எழுந்தால் போதும் என்றவாறு குளியல் இருக்கக் கூடாது. பொதுவாக சூரிய உதயத்திற்குமுன் அருணோதய வேளையில் நதிகளில், தீர்த்தங்களில் குளிப்பது சிறப்பு. நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று நீராடல் வேண்டும். நீரில் இறங்கியதும் உடனேயே தலை முழுவதும் நனையும்படி மூழ்கி எழுதல் சிறப்பு. அவ்வாறு மூன்று முறை செய்தபின் கைகளால் நீரை எடுத்து இறைவனை நினைத்து ஆதித்தனை நோக்கி நீரை கீழே விட வேண்டும். இதுவே அர்க்கியம்-மந்திர நீரிறைத்தல் விடும் முறை எனப்படும். பிதுர்களை நினைத்துக் கொண்டு இதை செய்யலாம். தண்ணீரில் நின்றபடியே நம் குறைகளை நிவர்த்திக்க இறைவனிடம் வேண்டுதல் செய்யலாம். நீராடி முடிந்ததும் நீரைக் கைகளில் நிரப்பிக் கொண்டு என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி தோஷம் செய்திருக்கின்றேன். அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் எனச் சொல்லி கையில் உள்ள நீரை விட்டுக் கரை ஏறவும்.

தீர்த்தயாத்திரை செய்வது நமது கலாசாரத்தின் அரிய உயர்ந்த பண்பாகும். புண்ணிய தலங்களுக்குச் சென்று புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட வேண்டும். புண்ணிய நதிகளில் நீராடும்போது தியானம் செய்தல் கூடுதல் நலன். நதிகளிலும் குளங்களிலும் நீராடிய பின் அந்தக் கரையினிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்து ஆசமனம், பிராணாயாமம் செய்து தியானம், ஜபம் செய்யலாம். முறைப்படி கர நியாசம், அங்க நியாச முறைகளால் இறைவனை ஆராதித்து வணங்கி பின் முத்திரைகளைக் காட்டி உபசாரம் செய்ய வேண்டும்.

மழை நீரில் நீராடும்போது இரண்டு கைகளை உயரத்தூக்கி மழைவரும் திசை நோக்கி மழைச்சாரல் மேனியில் படும் வண்ணம் கண்களை மூடியபடி இருக்கும்போது மழைச்சாரல் ஸ்பரிசம் மேனியில் படுவது தேகத்திற்கு சில சக்திகளைத் தரவல்லது. இந்த மழை ஸ்நானத்தை ‘அக்னைக’ ஸ்நானம் என்கிறது சாஸ்திரம்.

உடம்மை மண்ணைக் கொண்டு தூய்மை செய்வது ‘மலஸ்நானம்’ எனப்படும். இதற்குப்பின் நீரில் நீராடவேண்டும். இது ‘விதிஸ்நானம்’ எனப்படும். கோதூளி கொண்டு ஸ்நானம் செய்வது மிகப்புனிதமாதாகும். இது ‘மகேந்திரஸ்நானம்’ எனப்படும்.

பொதுவாக எந்தக் குளியலாக இருந்தாலும் குளித்தபின் ஆடையணிந்து நெற்றியில் விபூதி, ருத்திரம் தரிக்க வேண்டும் நெற்றி வெறுமனே இருக்கக்கூடாது. காணப்படாததைக் காண்பதாலும், கேட்கப்படாததைக் கேட்பதாலும், முகரப்படாததை முகர்வதாலும், உண்ணப்படாததை உண்பதாலும், சொல்லத்தகாதை சொல்வதாலும் செய்யத்தகாததை செய்வதாலும், எண்ணக்கூடாதை எண்ணுவதாலும், நடக்கக்கூடாததை நடத்துவதாலும், கொடுக்கக்கூடாததை கொடுப்பதாலும் ஏற்படும் பாவ பேதங்கள் எல்லாம் ருத்திராட்சம் அணிவதால் தொலைந்து போகும்.

வேதங்கள், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், பண்பாடு எல்லாம் ஆத்மவின் உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக்கும் நல்லுரைகளை வழங்குபவை. எத்தனை உயிர்கள் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோம். கலியுகத்தில் உயிர்கள் அவைகளை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்தால் ஆடம்பர வாழ்கை முறைகளை தன் வாழ்க்கையில் புகுத்திக் கொண்டாலும் துன்பம் நேரிடும்போது ஆத்மா வேதங்களின் பாதையில் செல்ல விழைகின்றது.

குளம், குட்டை, ஆறுகளில் சிறுநீர் மலம் கழித்தல் தவறு, ஆடையில்லாமல் நீர் நிலைகளில் நீராடாதே. இது வேதம் சொல்வது.

நீர் வாழ் இனங்கள் நச்சுப் பிராணிகள் நமது உடல் உறுப்புகளை தீண்ட வாய்ப்புண்டு. அது அந்த உயிர்க்கு ஊறு விளைவிக்கும். ஊனக் கண்களினால் ஊனத்தை பார்க்கும் நாம் அறிவுக் கண்ணால் ஞானத்தைப் பார்க்க வேண்டும்.

நீராடி ஈர உடையுடன் இல்லங்களில் பூஜை செய்தல் கூடாது. உலர்ந்த தூய ஆடையுடன்தான் வழிபடல் வேண்டும். முன்னோர் வழிபாடு மற்றும் பித்ரு காரியங்கள் செய்யும் போதுதான் ஈர ஆடையுடன் இருக்கவேண்டும்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 09:18

யாகத்தின் பலன்!

Written by

ஓம்நமசிவய!


திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!


#*#*#*#*#

 

23.யாகத்தின் பலன்!


அக்னியில் பசு நெய் விட்டால் உடனடியாக சில வாயுக்கள் தோன்றும். அது காற்றில் கலந்து தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும். யாகசாலையில் இருப்போருக்கும் அருகில் சுற்றியிருப்போருக்கும் இந்த காற்று அவர்களது சுவாசத்தினால் உள்ளே சென்று பக்க விளைவுகள் இல்லாமல் அதிகப் படியான கொழுப்புச்சத்துகள் ஏற்படாமல் வேலை செய்யும். நெய் கலந்த அரிசி மற்றும் பொருள்களை யாகத்தீயில் போடும் போது இரசாயண மாற்றம் ஏற்பட்டு எத்தலீன் ஆக்ஸைடு, ப்ரொப்பிலின் ஆக்ஸைடு, பார்மால்டிஹைடு, ப்யூடா ப்ரோபியோ லாக்டான், அசெட்டிலின் போன்ற வாயுக்கள் தோன்றி யாகக் குண்டத்தை சுற்றி பரவும். இந்த வாயுக்களின் சுவாசம் உடலில் சில ஆரோக்கியத் தன்மைக்கு உகந்ததாக செயல்படும். மன உளைச்சல், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் புண், தலைவலி போன்றவைகளின் பாதகங்களை குறைக்கும் திறன் கொண்டவை. ஆல்பா அலைகள் உண்டாகி மூளை அழுத்தங்களை போக்கும். ஆகையால்தான் முன்னோர்கள் யாகம் வளர்த்து அந்த பலன்கள் மக்களுக்கு சேரவேண்டும் என நினைத்து செயல்பட்டுள்ளனர்.

பசு-விராட்டி!

வீட்டின் செடிகளில் பூச்சிகள் வந்தால் பெரியவர்கள் விராட்டி சாம்பலைத் தெளிப்பார்கள். அவைகள் போய்விடும். இதே சாம்பலை தொடை இடுக்கிலே வரும் ஸ்கின் பங்கஸ்க்கு தடவினால் அவைகள் இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும்.

#*#*#*#*#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27424239
All
27424239
Your IP: 44.211.26.178
2024-06-22 15:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg