gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

4-1.பயணம்! யாத்திரைப்பூக்கள்!

Written by

பயணம்! யாத்திரைப்பூக்கள்!                                                        

பொதுவாக யாத்திரை, பயணங்கள் பலவகைப்படும். யாத்திரை என சொன்னால் அருள் நோக்கோடு புண்ணியத் தலங்களுக்கு செல்வது என்றே பொருள் கொள்கின்றனர். பயணம் என்பது ஒரிடத்திலிருந்து வேறு ஓரிடத்திற்கு ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு செல்வது ஆகும்.
இங்கே சொல்லப்படும் பயணம், யாத்திரை, முதலாவது வாழ்க்கைப் பாதையில் ஒர் ஆத்மாவின் உடலின் செயலாக்கங்களால் பயணிப்பது, மற்றது நமது உடலின் உள்ளே நரம்பு மண்டலத்தில் எண்ணங்கள், செயலாக்கங்கள் பயணித்தல் பற்றியதாகும்.
முதலாவதுவெளிப்பயணம்: உலகம் நம்மிடம் இருக்கக்கூடாது. ஆனால் உலகத்தில் நாம் இருக்கலாம். குடும்பம் நம்மிடம் இருக்கக்கூடாது. ஆனால் குடும்பத்தில் நாம் இருக்கலாம். வண்டி நம்மேல் ஏறக்கூடாது. நாம் வண்டியில் ஏறி பயணம் செய்யலாம். கப்பல் கடலில் இருக்கலாம். கடல்நீர் கப்பலில் புகக்கூடாது. உலக வாழ்க்கை உன்னிடம் கூடாது. ஆனால் எப்படியிருந்தாலும் வாழ்க்கையில் நீ பயணம் சென்றாகவேண்டும். அமைதியாக சந்தோஷமாக பயணித்து ஆனந்தம் காணவேண்டும்.
தினம் தினம் விடியல், சூரிய உதயம் கான்கிறது இவ்வுலம். இது எல்லா உயிரணங்களுக்கும் அதிசயமிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் போது மனித ஆன்மாக்கள் மட்டும் குதூகலமின்றி அந்த நாளை நோக்குகின்றது. ஏன்! அதற்கு சுதந்திரம் வேண்டும். எண்ணங்களில் சிறைப்பட்ட மனிதனால் சுதந்திரமாக இருக்க முடியாது. அதன் ருசியை அறியாமல் பயனித்து அவதிப்படுகிறான். சுதந்திரம் ஓர் ஆன்மாவின் உயிருக்கு கிடைத்துவிட்டால் ஆனந்தம் வந்துவிடும். அப்போது உதிக்கும் ஒவ்வொரு விடியலும் அழகுடனும் ஆனந்தத்துடனும் இருப்பதை உணரமுடியும்.
அடுக்கு மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நீச்சல் குளம். மொட்டை மாடியிலிருந்து அந்த பகுதியின் வனப்பை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கீழே இருந்து ஒருவர், அப்புசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான் என்ற அலறும் சப்தம் கேட்ட உடன் ஏதும் சிந்தியாமல் கீழே குளத்தை நோக்கி குதித்தான். சில மாடிகள் கடந்தபின் கீழே விழுபவன், திடிரென்று சிந்தனை வயப்பட்டான். நமக்குத்தான் மகனே கிடையாதே, நாம் ஏன் கீழே குதித்தோம் என நினைத்தவனுக்கு, உதயமானது திருமணமே தனக்கு ஆகவில்லை என்ற நினைவு. அதன்பின் சப்தம் போட்டவன் அப்புசாமி என்றுதானே சப்தம் போட்டான். நம் பெயர் அப்புசாமி இல்லையே, பின் ஏன் நான் குதித்தேன் என நினைக்கும்போது திடிரென்று கண்விழித்துப் பார்த்தான்.
அது கனவானதால் அவன் நீச்சல் குளத்தில் இல்லை. தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து விழித்திருந்தால் குளத்தில் விழுந்திருப்பான். அதற்கு முன் அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. தான் அப்புசாமி இல்லை என்பதும் தான் யார் என்பதும் புரிந்தது.
இது போன்றே நமது வாழ்வுப் பயணத்தில் நீங்கள் யார் என்பதை புரியாமலே, உச்சியிலிருந்து கீழே விழுவதைப்போல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பயத்தில் தேவையற்ற பதற்றங்களும் நிம்மதி இன்மையும் நிறைந்து வாழ்வு துன்பமுடையதாகின்றது. கடைசி நேரத்தில் விழிப்பு வருவதற்குப் பதிலாக நீங்கள் யார் என ஆரம்பதில் உணர்ந்தால் அது ஆனந்தமான பயணமாக இருக்கும். வாழ்வில் நீங்கள் விழிப்பு கொண்ட நேரமே உங்களுக்கு விடியலாக இருக்கும்.
வாழ்வின் இலக்கை நிர்ணயிக்காமல் பயணத்தை தொடரக்கூடாது. பயணத்தில் செயல் முடிவடையும் இடமே இலக்கு என நின்றுவிடக்கூடாது. அதற்கு மேலும் பயணிக்க முயற்சிகள் வேண்டும்.
இரயில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூட்டம் நிரம்பியிருந்தது. அடுத்த இரயில் நிலையத்தில் சீட்டு பரிசோதகர் ஏறினார். எல்லாருடைய சீட்டுகளையும் பரிசோதித்துக் கொண்டு வந்தார். ஒவ்வெருவரும் தங்களது சீட்டுகளை காண்பித்த வண்ணம் இருந்தனர். ஒருவர் மட்டும் அதைத் தேடிய வண்ணம் இருந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அழ ஆரம்பித்து விட்டார்.
அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். வேறு சீட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றனர். நான் அதற்காக அழவில்லை. எங்கு போகவேண்டும் என்று அந்த சீட்டில் தான் எழுதியிருந்தார்கள் என்றார். பல மனிதர்களின் பயணங்கள் இப்படி இலக்கில்லாமல் எங்கு செல்ல வேண்டும் எனத்தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றது.
வாழ்க்கைப் பயணம் என்பது பிறப்பிலே தொடங்கி மரணத்திலே முடிகின்ற பயணம் அல்ல, ஒரு ஆன்மாவின் வாழ்க்கை நான் என்பதிலே தொடங்கி நாம் என்பதிலே முடிந்தால்தான், அந்த உடலின் உயிர்ப் பயணம் சிறப்பான பயணமாக இருக்க முடியும். விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்க நிலை என 3 நிலைகளில் மாறிமாறி நம் உடலின் உயிர்ப்பயணம் நடைபெறுகின்றது.
உடலின் உள்ளே பவனிவருவது ஆன்மா! அதை இயக்குவது புத்தி! அதைக் கட்டுப் படுத்துவது மனம்! அதற்கு உதவி புரிவது உடலின் ஐம்புலன்கள்!
ஓர் ஜீவன், ஆன்மா, மனம், புத்தி, ஐம்புலன்கள் ஆகியவற்றோடு ஒன்றி பயனிக்கின்றது, ஜீவன் செயல் இழந்து விட்டால் ஆன்மா பிரிந்து விடுகின்றது. பிரிந்த ஆன்மா எங்கே செல்கின்றது?
ஜீவன் கர்மத்தின் விதிப்படி தோன்றுகிறது. ஜீவன் தான் ஜீவிக்க என்ன, என்ன செய்தாலும், செயல்கள் கர்மத்தின் நியதிப்படி நடந்து முடிகின்றது. ஓரிரு சமயங்களில் நியதிகள் மாறலாம். அது அந்த ஜீவனின் நடைமுறை, நல்ல செயல்களைப் பொறுத்தது. அப்போது கர்மத்தின் விதியில்கூட சில நிகழ்வுகளில் மாற்றம் ஏற்படலாம். அது இறையருளுக்கு உட்பட்டது. ஜீவன் கர்மத்தின் வழியில் செயல்பட வேண்டும். தோன்றியபின் என்ன செய்ய வேண்டும். வாழ முயற்சிக்க வேண்டும். வாழ சந்தோஷம் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். தன் கர்மபலன்களின் முடிவுக்குள்ளேயே சந்தோஷங்களை அடைய வேண்டும்.
ஜீவனின் ஆன்மா நிறைவு பெறவேண்டும். சந்தோஷங்கள்தான் நிறைவு தரும். துன்பங்கள், கெட்ட நிகழ்வுகள், துயரங்கள் ஒரு போதும் நிறைவு தராது. இந்த துன்ப, துயர நினைவுகள் இன்பங்களை தந்தால் அந்த ஜீவனின் ஆன்மா ஒருபோதும் நிறைவுபெற வாய்ப்பில்லை. பிறரின் துன்பங்களும், துயரங்களும் இன்பங்களாகவும், சந்தோஷங்களாகவும் இருந்தால் அந்த ஜீவனின் கர்மபலன்கள் மீண்டும் மோசமாக அமைய வாய்ப்பு உண்டு.
ஓர் கல் நதியில் வீசப்பட்டால், அதன் கணத்தின் தன்மையால், அடிப்பகுதிக்கு சென்று தங்கி மெதுவாக நீரின் வேகத்திற்கு தக்கவாறு தடையேதும் இல்லா நிலையில் சிறிது சிறிதாக நகர்கிறது, அல்லது அங்கேயே தங்கி விடுகின்றது. ஆனால் ஒரு பூவோ, இலையோ, அதன் இலேசன தன்மையால், நதியின் அலைகளில் ஆனந்தமாக தன் பயணத்தை தொடர்ந்து எங்கோ ஓர் இடத்தில் கரையை அடைகிறது.
இதைப்போன்றே, மனதில் கல்லாகி ஆசைகளோடு கணக்கும் மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேற்றம் இன்றி ஒரே இடத்தில் கல்லாக அமுங்கி கிடக்கின்றான். மனம் பூவைப்போல, இலையைப்போல லேசாக இருப்பனின் ஆன்மாவின் உடல், இறுதி வரை இன்பத்துடன், ஆனந்த சந்தோஷத்துடன் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றது.
உரிமை: ஓர் ஜீவன் அதன் பிறவியில் சந்தோஷப்பட முயற்சிக்க வேண்டும். அதற்கு முழு உரிமையும் ஒவ்வோரு ஜீவனுக்கும் உண்டு. அவ்வாறு சந்தோஷப்பட அதன் செயல்பாட்டை தடுக்க மற்ற எந்த ஜீவனுக்கும் உரிமையில்லை. ஓர் ஜீவன் மற்றொரு ஜீவனை துன்புறுத்தாமல் நியதிக்குண்டான வழியில் சந்தோஷத்தை நாடும் போது, சிறு, சிறு மாற்றங்கள், துன்பங்கள் எந்த ஜீவனுக்கும் நேரிடும்.
பிற உயிர்களை வேதனைப் படுத்தவோ, நம்மை நாமே வேதனைப்படுத்திக் கொள்ளவோ நமக்கு எந்தவித உரிமைகளும் கிடையாது. அதனால்தான் தோல்விகளைக் கண்ட மனிதன் வாழ்வு வெறுத்து தன் உடலில் இருந்து ஆன்மாவை கட்டாயமாக நீக்க முயலும் செயலை நாம் தவறு என சொல்கின்றோம்.
சிறிய துன்பங்களை ஏற்றுக் கொள்ளவும், பெரிய துன்பங்களைத் தவிர்க்கவும் ஆற்றல் கொள்ளல் நல்லது, அதை மீண்டும் நினைவு கொள்ளாமல், துன்பத்தை கண்டு துவளாமல், இன்பத்தை சந்தோஷிக்க செயல்பட்டால் சந்தோஷத்தை சந்தோஷிக்கலாம்.
வயதிற்கு ஏற்ப சந்தோஷம் மாறும். சிறுவயதில் எதுவும் புரியாமல், தெரியாமல் செய்யும் செயலில் எல்லாம் எத்துனை சந்தோஷம். இளவயதில் இன்பத்தில் சந்தோஷம், துள்ளலில் சந்தோஷம், விருப்பத்தை அடைவதில் சந்தோஷம், செயல்களை செய்து முடிப்பதில் சந்தோஷம். முதுமையில் உண்மையில் சந்தோஷம். மூலம்தேடின், அருள்தேடின், நிம்மதி தேடின் சந்தோஷம்.
மனம் செயல் பட்டு, புத்தியின் யோசனைப்படி ஆன்மா செயல் செய்யும்போது சாதகபாதக நிகழ்வுகள் ஏற்படும். பாதக நிகழ்வுகள் துயரத்தையும், சாதக நிகழ்வுகள் சந்தோஷத்தையும் கொடுக்கும். எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் காரணமாக செயல்கள் நடைபெறும். பின் அதன் செயல் தொடர்ச்சி பயணத்தில் தொடரும்.
ஒரு தம்பதியருக்கு ஓர் குழந்தை பிறக்கின்றது. அல்லது கிடைக்கின்றது. அதனை சீராட்டி, பாராட்டி மிகமிக அன்பு செலுத்தி வளர்க்கலாம். வளர்ந்தபின் நாம் வளர்த்த குழந்தை, நம்மீது மிக அன்புகொண்டிருக்கும், எல்லோரையும்விட மிகவும் பிரியமாக இருக்கும், நம் சொல் கேட்கும், நம் ஆலோசனையை நாடும், நம் விருப்பு இல்லாமல் ஏதும் செய்யாது என நமக்குள் ஓர் கோட்பாட்டினை, வளர்த்த பாசத்தின் விளைவாக, நாம் உரிமை கொண்டாடுவது தவறு.
உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் ஓர் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளல் வேண்டும், அது உங்களால் உருவாக்கப்பட்ட குழந்தையன்று. உங்கள் மூலமாக பிறந்த குழந்தை. முன்னோர்களுடன் உங்களையும் சேர்த்து ஏழு தலைமுறையினரின் பகுதிகளை கொண்டு உருவாகிய கரு. உங்கள் மூலமாக பிறந்த ஓர் ஆன்மாவின் உயிர்- உடல்தானே தவிர வேறுஒன்றுமில்லை. அந்த உயிர்- ஆன்மா அதன் கர்ம பலன்களுகேற்ப பிறந்துள்ளது. அது வளரும், அதன் முடிவுகளை அதன் வினைக்கேற்ப அது தேடும்,
இடையில் நீங்கள் வளர்த்த உரிமை கொண்டாடி அதன் உரிமைகளை உங்கள் கையில் எடுத்து அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது முற்றிலும் சரியில்லை. அன்பின் உறவில் நீங்கள் ஆலோசனைக் கூறலாம். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அதன் விருப்பம்- கர்ம பலன். அதைச் செய்தாயா! இப்படி ஏன் செய்தாய்! என மாறி மாறி மிரட்டுவதால் அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மைதனை இழந்து விடுகின்றனர். சந்தோஷம் இல்லா மனநிலையைப் பெற்றிருப்பார்கள்.
அவ்வாறில்லாமல் அன்புடன் கூடிய ஆனந்தமான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். உங்கள் குழந்தை சுயசிந்தனை கொண்டவனாக, யாரும் கற்பனை செய்து பார்க்க முடியா உயர்நிலையை அடைய இயலும்.
குழந்தை ஓர் பொருள் வேண்டி அழுது அடம் பிடிக்கையில், அதன்மேல் அன்பு மிகுதி கொண்டதால், அந்த பொருள் குழந்தைக்கு வேண்டாத ஒன்று என அதன் தன்மையை நீங்கள் உணர்ந்திருந்தாலும், நீங்கள் குழந்தையின்மேல் கொண்ட பாசத்தால், குழந்தையை சமாதானப்படுத்த அதை வாங்கிக் கொடுக்கின்றீர்கள். குழந்தை சமாதானம் அடைந்தபின் பொருளினால் பாதிப்பு ஏற்படாமல் செய்யலாம் என நம்புகின்றீர்கள்.
இதுபோன்று பல நிகழ்வுகள் இருந்தாலும், இது ஒன்றே போதும், முடிவுகள் குழந்தையுடையது என்பதற்கு! ஆனால் இது போன்ற முடிவுகளை, குழந்தைகள் பெரிதாகிவிட்டதும் நீங்கள் கடைப்பிடிக்க மறுக்கின்றீர்கள். உங்கள் ஆலோசனைகளை அது ஏற்றுக் கொள்ளவேண்டும் என கட்டாயமில்லை. ஆனால் கட்டாயப் படுத்துகின்றீர்கள். குழந்தைகளாய் இருந்தபோது நீங்கள் காண்பித்த அன்பு, பாசம் பெரியவர்களானபின் குறைந்து விட்டதா!.
குழந்தை வளர்ந்து பெரிதாகி அதன் வாழ்க்கையை அது வாழ்ந்து முடிக்கின்ற கடைசி கட்டம் வரைக்கு இருந்து நீங்கள் செயல்படமுடியுமா? முடியாது என்கின்றபோது, ஏன் இப்போதுமட்டும் இந்தப் பிடிவாதமான எண்ணம்! கட்டாயப்படுத்தும் விதத்தில் இப்படிச்செய், இதைச்செய் என குழந்தை வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் அவ்வப்போது உங்கள் எண்ணங்களைச் செயல்படுத்த நினைக்கின்றீகள். இது முறையான செயல் பாடில்லை.
உங்கள் எண்ணங்களின் முடிவுகள் மாறுபடும்போது வேதனைப்படுகின்றீர்கள். வீண் மன உளைச்சலையடைந்து, நிம்மதியிழந்து, சோர்வுற்று, விரக்தியுடன் உங்கள் செயல் பாடுகளை முடக்கிச் சந்தோஷப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றீர்கள். இது எதனால் ஏற்பட்டது. உங்களின் குழந்தையின் உரிமையைப் பிடிவாதமாக உங்கள் கைகளில் எடுத்து செயல்பட்டதால் வந்தது. அடுத்தவர் உரிமைதனை அவர் முடிவிற்கு விட்டுவிடுங்கள். இது அனைவருக்கும் பொதுவான நியதி.
உற்றார், உறவினர், சார்ந்தவர் யார் குழந்தையாயிருந்தாலும் சரி அமைதியுடன் சிந்தித்து சிறந்தயோசனையை வழங்குங்கள். ஆலோசனைக் கூறுவதுதான் உங்களுக்கு விதிக்கப்பட்ட விதி. அதைவிடுத்து விருப்பங்களை நிர்பந்திக்காதீர்கள். இதே நிலைப்பாடுதான் எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.
உங்கள் ஆலோசனை அவரவர் விதிப்படி கர்மபலன்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படலாம், ஏற்றுக்கொள்ளப்படாமலும் போகலாம். வருத்தப்படாதீர்கள். இது இயற்கை என நினைத்துக் கொள்ளுங்கள். அமைதியடையுங்கள்.
எல்லா குடும்ப உறுப்பினர்களுடனும் சேர்ந்து வாழுங்கள். முடிந்தவரைக்கும் சேவை செய்யுங்கள். தெரிந்த, புரிந்த, அனுபவித்த ஆலோசனைகளை வழங்குங்கள். உதவி செய்யுங்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு சொந்தம் என்ற உரிமையில் செய்யாதீர்கள். அவர்களுக்குச் செய்வது கடமை என மனதில் கொள்ளுங்கள்.
செயலைத் துறக்காமல் செயலின் விளைவைத் துறந்து வாழ்வதே உண்மையான வாழ்வாகும். அறத்திற்கு புறம்பின்றி, பற்றுதனை எதன் மீதும் கொள்ளாமல், கடமைதனைச் செய்து தாமரை இலைமேல் நீர் போல் வாழும் வாழ்வே சிறந்த வாழ்வு. உன்குடும்பத்தில் “இல்லறத்தின் கடமைதனைச் செய், மனதை இறைவனிடம் வை. தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பது போல்.”
மறுகரையில் இருக்கும் துர்வாசமுனிவரிடம் நிவேதனப் பொருளை கொடுத்துவரச் சொன்னார் கிருஷ்ணர். வெள்ளம் அதிகமாக இருக்க திகைத்த ருக்மணியிடம் ‘கண்ணன் நித்ய பிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக் கண்ணன் கூறிவாறு சொல்லி ஆற்றைக் கடந்தாள். துர்வாசரிடம் நிவேதனப் பொருளைக் கொடுத்து திரும்பும் போது நதியைக் கடக்க துர்வாசர் கூறியபடி,துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக்கூறி நதியைக் கடந்தாள்.
திரும்பிவந்த ருக்மணி கண்ணனைப் பார்த்து, என்னுடன் குடும்பம் நடத்தும் நீங்கள் நித்ய பிரம்மச்சாரி என்கிறீர்கள், நான் கொடுத்ததை உண்டுவிட்டு துர்வாசர் நித்ய உபவாசி என்கிறார் இது எப்படி சரி என்று கேட்க, கண்ணன், ‘எங்கள் இருவருக்கும் எதன் மீதும் பற்று இல்லை. அதனால் இல்லறத்தில் இருந்தாலும் நான் பிரம்மச்சாரி, நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசி என்றார். பற்று இன்றி, அனைத்தும் இறைவனது என எண்ணி வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்,
ஒருபொருள் தன்னுடையது என உரிமையுடன் எண்ணுபவர்க்கு அந்த பொருள் தன்னை விட்டு விலகும்போது வீண்கவலைகள் அதிகரிக்கும். எனவேதான் “உங்கள் மூலம் பிறந்த குழந்தை, உங்களால் உருவாக்கப்பட்ட குழந்தையில்லை, சொந்தம்/ உரிமை கொண்டாடுவதற்கு.” என்பதை புரிந்து செயல் படுங்கள்.
ஓர் ஆன்மா உடலைத்தேடி உடல்கண்டு, உயிர்கொண்டு உங்கள்மூலம் பிறந்துள்ளது. உங்கள் மூலம் பிறந்துள்ளதால் உங்கள் முதல் எழுத்தை உபயோகிக்கலாம். சொத்தை அனுபவிக்கலாம். ஆனால் மற்றதெல்லாம் கர்மப்படி நடக்கும்.
எனவே குழந்தைகளை நல்வழியில் நடத்துங்கள். நல்ல ஆலோசனை வழங்குங்கள். முடிவு அந்த ஆன்மாவினுடையதாய் இருக்கட்டும். உங்கள் குழந்தைக்கு என பிரியமுடன் நீங்கள் வாங்கிய விளையாட்டுப்பொருள், நீங்கள் அதிகம் நேசிப்பதால், உங்கள்மூலம் பிறந்த குழந்தை விரும்ப வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. விளையாட்டுப் பொருளே இப்படி என்றால் வாழ்வியல் நிகழ்வுகளைப் பற்றி யோசியுங்கள்.
இப்பூவுலகில் உங்கள் மூலம் பிறந்த குழந்தையின் காலநிலைகளை, பருவங்களை உங்கள் வாழ்வின் சுவைகளாக்கி, அவர்கள் எண்ணத்திற்கு முன்னுரிமையளித்து, வாழ்வில் சந்தோஷத்தை அடையமுயலுங்கள். அதிகாரம் செலுத்தி, உரிமை கொண்டாடி அவஸ்தை படாதீர்கள். விட்டுக்கொடுத்து, அவர்கள் கருத்தைக் கேட்டு ஆலோசனை வழங்கி ஆனந்தப்படுங்கள். “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன்”- ஒருவன் எந்தப்பொருளில் பற்றற்றவனாக, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அதனால் அந்தபொருளினால் அவன் எப்போதும் துன்பமடைவதில்லை என்றருளியுள்ளார் வள்ளுவர். ஆசையை ஒவ்வொன்றாக விடும்போது படிப்படியாக துன்பங்களும் விலகிவிடும்.
குழந்தை பிறந்தவுடன் சந்தோஷப்படுங்கள், கூடவே இது என் குழந்தையில்லை, என்மூலம் பிறந்த குழந்தை, இதை வளர்க்கும் உரிமை என்னுடையது, அதன் கருத்து செயலாக்கத்தில் தலையிடமாட்டேன், நல் ஆலோசனைகளை மட்டும் வழங்குவேன் என்று உறுதி கொள்வீர்களானால் குழந்தையின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும் அதன் கர்மவினைப்படி. உங்கள் வாழ்வில் சந்தோஷங்களை அவ்வப்போது குழந்தையின் ஆசை, நிராசை, பருவ மாற்றங்களுக்கு ஏற்ப அனுபவித்து ஆனந்தித்து சந்தோஷப்படலாம். உங்களுடய கட்டாய முடிவுகளால் தன்வாழ்க்கை பாதித்தது என பிற்காலத்தில் அவர்கள் நினைக்க வாய்ப்பிருக்காது.
மண்ணில் பிறந்த உயிருக்கு அன்பு, அறிவு, ஆற்றல் உண்டு. வளர்ச்சியில் அவைகள் வளமாகின்றன. வளர வளர தன்னைச் சுற்றியுள்ள உருவங்களை மனதில் பதித்து பயமின்றி அவைகளின் செயல்பாடுகளை விகல்பமின்றி வித்தியாசமின்றி அன்புடன் நோக்குகின்றது.. அதைப் பழகுகின்றது. ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகின்றது.
மற்றவர்கள் அதை புரிந்தும் புரியாமலும் உணர்கின்றனர். வளர்ந்தவர்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ளும்போது தன்நிலையிலிருந்து மாறுபட்டு வித்தியாசங்களை பின்பற்றத் தொடங்குகின்றது. அதைப்போற்றிப் பாராட்டி, தங்களது ஆற்றாமையுடன் விமர்சனம் செய்து மகிழ்வு அடைகின்றனர்.
அந்தக் குழந்தை மனம் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது, நட்பு, பகை, குரோதம் எல்லாவற்றையும் ஏற்று தம்மை சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு தன் மனதை மாற்றிச் செயல்படத் தொடங்குகின்றது. ஆணவம், கன்மம்(வினைச்செயல்), மாயை மூன்றும் சேர்ந்து எண்ண அலைகளில் ஓட சுற்றியுள்ளவர்களின் ஆசாபாசங்கள் அதன் மனதில் பலமாற்றங்களை உருவாக்குகின்றது.
எண்ணங்களும் மனநிலை சுற்றுசூழலுக்கு ஏற்ப மாறி அதன் வளர்ச்சி, செயல்பாடுகள் மாறுகின்றன. தனக்கு எனத் தேடும்போது அன்பு, வினை, மாயை சூழலில் சிக்கி, தனக்கு தெரிந்த அதற்குமுன் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தன் செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றது, அதற்கு மனம் ஒரு நிலைப்படல் வேண்டும். ஓர் நிலையில்தான் அமைதிகாணமுடியும். அதில்தான் தெளிவு பிறக்கும். சிந்தனைகள் மூலம் சிறந்த செயல்பாடுகள் வந்து சேரும். பெருமையடைவாய்.
மதம்பிடித்த யாணையைப்போல உன்மத்தம் பிடித்த உன்மனதின் செயல் எண்ணங்களை ஓர் நிலைப்படுத்துதல் ஆரம்பத்தில் சற்று சிரமாக இருக்கும். மனம் நினைத்ததை வெற்றியடைய விரும்பும்போது, உன்னால் முடியும் எனநினை. மனமும் எண்ணங்களும் ஒத்துப்போகும். அது முதல் வெற்றி.
மனநிலையின்றி செயல்கள் நடைபெற்றால் நாளடைவில் சலிப்பு, வெற்றியின்மை, கஷ்டங்கள் தோன்றும்போது அடிமனதில் பதிந்துள்ள தீய நிகழ்வுகள் கொடிய செயல்களுக்கு அடிப்படையாகிறது. மனித நேயம் முற்றிலும் மறைந்து விடுகின்றது. பிறர் நலம் பேன நினைவில்லை. தன் நலம்காக்க எதையும் செய்யத் துணியும் மனம், தவறான மனிதர்களையும் தவறான நிகழ்வுகளையும் சந்திக்கின்றது, மண்ணில் கொடிய நிகழ்வுகளை சந்திக்க உணர்வுகள் வித்தியாசமடைகிறது. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. நிம்மதி குறைந்து கொடிய செயல்கள் தொடர் கதையாகிறது. முடிவு எங்கே! எப்போது!
வேகம் குறைந்து பார்வை தடுமாறி, மனவளம் குன்றியபின் கடந்துவந்த பாதையை நினைத்து இவ்வாறு செய்திருக்கலாமோ என வருந்தி என்ன பயன். நம் பயணத்தில் எந்த நிகழ்வுகள் நம்மை இவ்வாறு இழுத்துக் கொண்டு வந்தது. மனம் ஏன் அதை நாடியது என்ற கேள்வி பிறந்து, அதற்கான பதிலை கண்டும் உபயோகமுண்டா! கடந்த வாழ்க்கை முடிந்த கதை.
ஆன்ம பயணத்தில் தினமும் காலை/மாலை சிறிது நேரம் ஒதுக்கு. ஆரவாரமில்லாச் சற்று அமைதியான இடத்தில் அமர்ந்து மாலையென்றால் அன்று செய்த செயல்களையும், காலையென்றால் முதல்நாள் நடந்த செயல்களையும் நினைவுகூர். அவற்றுள் எவை அன்பு, வினை, ஆற்றலுக்கு சேர்ந்தன எனயோசி. அன்பு ததும்ப நீ செய்த செயல்களை நினைத்து பெருமிதம் கொள். அவை மனதிற்கு நிறைவைத்தரும். அன்பு இல்லா செயல்கள் இனி செய்யக்கூடாது எனநினைத்தால் அது மனதிற்கு ஆறுதல் தரும்.
உனக்குத் தெரியாமல் வந்திட்ட செயல்பாடுகளில், வரிசைப்படுத்தாத நிகழ்வுகளை ஏன், எப்படி வந்தது எனயோசி. வினைபடி வந்ததா! அதுபோன்றவற்றிலிருந்து விடுபட இனி என்ன செய்யவேண்டும் எனயோசி. வரும்காலத்தே எப்படிவந்தாலும் அதன் பயன் உனக்கு ஏற்றவாறு மாற்ற செயல்களை செய்ய தீர்மான எழுச்சிகொள். ஆற்றலைச் சேர்த்து செயல்படு.
உடலின் ஆற்றலுக்கு ஓய்வுதேவை. தேவையான ஒய்வு அளி. உள்ளத்தின் ஆற்றலுக்கு ஓர்நிலைப்பட்டு மனம் அமைதியாவதே சிறப்பு. உடல், உள்ளம் இரண்டின் ஆற்றல் அதிகமானால், பயிர்களுக்கிடையே களைகள் முளைப்பதுபோல் தோன்றும் ஆணவம், செருக்கு இவைகளை உங்கள் பிடியில் வைத்துக் கொள்ளமுடியும். இல்லையெனில் அவைகள் உடல், உள்ளங்களின் செயல்பாடுகளை மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்லும். நீங்கள் நினைத்திருக்கும் நேர்வழியில் செல்லமுடியாது. ஓர் செயலை செய்துமுடிக்க முனைப்படும்போது எல்லாநிலைகளிலும், சதக பாதக எண்ணங்கள் தோன்றி மறையும். குழப்பங்கள் அதிகரிக்கும்.
எப்போதும் என்னால் முடியும் என்ற சரியான எண்ணம்தான்  உங்களை நிலைப் படுத்த முடியும், என்னால் ஏன் முடியாது, செய்தே தீருவேன் என்பது உங்கள் செயல் பாடுகளை பலசிக்கல் நடுவில் நிறுத்திவிடும். முடியும் என்பது சாதனை எண்ணம். ஏன் முடியாது என்பது அசாதாராண எண்ணம்.
மனிதா ஆசைகொள்! ஆசை நியாயமான உன்சக்திக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். சிந்தித்த செயலாற்றல் சிறப்பான பயனைத் தரும். உன்னால் சிந்திக்க இயலா குழப்பத்திலிருந்தால் ஆன்றோர்களை அனுகி அறிவுரை பெறவேண்டும். அனுபவங்கள் என்றும் உதவும். அனுபவத்தின் கண்டுபிடிப்பு, விடாமுயற்சியே இன்றைய உலகம். குழந்தையாயிருந்த போது எதிர்காலமறியாமல் எல்லோரிடமும் பழகியதுபோன்று, வளர வளர மனிதநேயத்துடன் அன்பு செலுத்தி, நற்றோரை அனுகி அனுபவ வழி முறைகளைக்கேட்டு, சுயமாக சிந்தித்து தெளிவுபெற்று, செயல்படின் நாடும், வீடும் வளம் பெறும். நீயும் கீர்த்தியடைவாய். வாழ்வின் நிம்மதியை அடைவாய். போராட்டமில்லா அமைதியான வாழ்வுப் பயணம் நடைபெறும்.
பாரதப் போரில் துரியோதணன் துணையாக வந்த வருணராஜகுமரன் ‘கதாயு’ தன் தந்தை தந்த சிறந்த வஜ்ராயுதத்தை அர்ச்சுனனை அழிக்க அனுப்ப, அதைத் தடுக்க தனயஞ்சன் பல பாணங்களைவிட்டும் ஒன்றும் செய்ய இயலா நிலையில், அர்சுனனை நோக்கி வந்த ஆயுதத்தை, கிருஷ்ணர் தன்கையிலிருந்த சாட்டைக் கோலினைக்கூட கீழேபோட்டுவிட்டு, நிராயுதபாணியாக நெஞ்சைக் காட்ட அங்கு மோதிய கதாயுதம் செயலிழந்தது. கதாயு மண்டை வெடித்து சிதறினான்.
இதைப்பற்றி கண்ணனை வணங்கி அர்ச்சுனன் கேட்டபோது, ‘நிராயுதன் மீது இந்த கதையை விட்டால் உன் தலை வெடிக்கும்’ என அதை அவனுக்களித்த அவன் தந்தை கூறியுள்ளார் என்றார். இதை சரியான நேரத்தில் கண்ணன் நினைவு கூர்ந்ததால் அர்ச்சுனன் உயிர் தப்பினார். எனவே குழந்தைகள் தன்மீது பாசம், அன்பு வைத்துள்ள பெற்றோர்கள், பெரியோர்களின் செயல்களில் உரிய நம்பிக்கை வைத்து, அவர்களின் அனுபவ அலோசனைகளை முடிந்தவரையில் ஏற்று பயணிப்பது அனைவருக்கும் சிறப்பு. அமைதி, ஆனந்தம், சந்தோஷம் உண்டாகும். பெரியோர்களின் செயல்பாடுகள் உங்கள் நலனுக்காவே இருக்க வாய்ப்பு அதிகம்.
இரண்டாவது உள்பயணம்: ஒருமனித வாழ்க்கை காலம் சராசரியாக 80 ஆண்டுகளிலிருந்து 90 ஆண்டுகள் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தகாலத்தில் எந்த ஆத்மாவாவது தன் மனதின் சக்தி என்ன என தனக்கு கிடைத்த 1000-க்கணக்காண சந்தர்ப்பங்களில் ஒருமுறையாவது எண்ணிப் பார்த்துள்ளாதா என்றால் இல்லை, இருக்காது என்ற பதில்தான் வருகின்றது. உங்களுள்ளே உள்ள சக்திமிக்க மனத்தை நினைந்து பாருங்கள். உங்களின் சக்தி மிகுந்த எண்ணங்கள் எல்லாம் அங்கே குவிந்து கிடக்கின்றது. அங்கிருந்து தொடர்ச்சியாய் வெளிவரும் எண்ணங்களெல்லாம் உங்கள் தலைமுதல் பாதம்வரை உங்களுள்ளே பரவுகிறது.
உங்கள் வாழ்க்கையில் சிறந்த செயல்களை செய்ய நீங்கள் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தால், உங்கள் மனதின் குரலைக்கேட்டு  செயலாக்கம் கொள்வீர். ஓர் செயல் சம்பந்தப்பட்ட மனதின் குரலை, சிலநாட்கள் அதாவது 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து கேளுங்கள். உங்கள் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படுவதை கவனியுங்கள். ஒரு சிறந்த திருப்தியுடன்கூடிய உணர்வு உங்களுள் ஏற்பட்டிருப்பதை அறிவீர்கள். அங்கே நீங்கள் முழுமையான ஆனந்தத்தை அடைந்தது போன்ற திருப்தி தோன்றும்.
ஓரு ஆன்மா உங்களிடம் உதவி கேட்கும்போது, நீங்கள் தேவை ஏற்பட்டுள்ள அந்த ஆன்மாவின் உடலுக்கு, எந்தவித சுய எதிர்பார்ப்பும் இல்லாமல், தேவையான சமயத்தில் உதவி செய்வதாக வைத்துகொள்ளுங்கள். சில நாட்கள் கழித்து அந்த அன்பர் உங்களிடம் வந்து, அவர் யார் என்பது உங்களுக்கு நினைவில் இல்லாநிலையில், நீங்கள் எப்போதோ அவருக்கு உதவி செய்ததை நினைவுகூர்ந்து, அதனால் அவர் நன்மையடந்ததற்காக, எப்போதும் அவரால் அந்த நிகழ்வை மறக்கமுடியாது என நன்றி உணர்வை தெரிவிக்கும்போது, உங்கள் அகம் மகிழ்ந்து முகமும் மலர்ச்சியடையும். உடல் முழுவதும் அந்த அகமுக மலர்ச்சியின் பயண யாத்திரை தெரியும்.
நன்றி கூறிய மனித ஆன்மாவின் மனத்தின் குரலை, உடனடியாக உங்களின் மனம் ஈர்த்துக்கொண்டு, ஒரு வித்தியாசமான உணர்வுகொண்ட முழுமையான மகிழ்வை, ஆனந்தயாத்திரையை தொடங்கி உடல்முழுவதும் பரவகாரணமாகிறது. அந்த மகிழ்வு யாத்திரையின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் சந்தோஷமடைந்து சுகமடைகிறது.
தற்போதுள்ள நிலையில் மனித ஆன்மாக்கள் தங்கள் வாழ்கை முறையை சீர்தூக்கிப் பார்க்க நேரம் ஒதுக்குவதில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற நினைவில் அதன் வேகத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றனர். எந்திர வாழ்விற்கு தன்னை தயார் படுத்திவிடுகின்றனர். வழ்க்கை முறையை அலசிப் பார்க்க நேரம் ஒதுக்காமல் எந்திர கதியில் இயங்கும் ஆன்மாவின் உடல் நலம் சீரழிக்க படுகிறது.
நாளடைவில். வாழ்வின் குறிக்கோளின்றி, ஓருவித வேகத்துடன் பொருள்களை வாங்கி குவிக்கச் செயல்பட்டு, புரியாமல் தேவையில்லாவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கி, முடிவில் ஒய்வின்றி அலைந்து வாழ்வை நரகமாக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட முதலில் மனதிற்கு பிடித்த எண்ணங்களை உருவாக்குங்கள். எண்ணங்கள் எப்போதும் விருப்பத்திற்கு ஏற்றபடி உருவாகும் தன்மையுடையது.
கண்ணால் பார்ப்பது எல்லாம் மூளையின் திரையில் படங்களாக பதியக்கூடியவை. அவைகளை வரிசைப்படுத்தி ஒன்வொன்றாக மனத்தால் பார்த்து ரசித்தால், அதன் சந்தோஷம் உடல் முழுவதும் பரவும். அதுவும் துக்கம் சாரா சரியான நிகழ்வுகள் என்றால் சந்தோஷத்திற்கு அளவு கோளில்லை. எந்த நிகழ்வாயிருந்தாலும் அது தன் யாத்திரையை தொடங்கி அதன் பதிவுகளை உடல் உறுப்புகளுக்கு அளிக்கின்றது.
துயர எண்ணங்களின்றி, சந்தோஷ எண்ணங்களுக்கு அதிக வாய்ப்பளித்தால் உடலில் சந்தோஷ எண்ண யாத்திரை அதிகமாகி, ஆனந்தனாக ஆத்மா இருக்கும். எப்படியிருப்பினும் உடலின் உள்ளே நடக்கும் இந்த அற்புதமான யாத்திரையை நமக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட நினைவுகள் ஏற்படவேண்டும்.
பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம், ஓர் ஊரின் பெயரைச் சொல்லி, அந்த ஊருக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு அவர் அது உங்களைப் பொறுத்தது என்றார். இதைக்கேட்ட நபர், பொறுமையிழந்து இதென்ன பதில், இப்படிச் சொன்னால் எப்படி புரிந்து கொள்வது என்றார்.
அதற்கு அன்பரே நீங்கள் அந்த ஊரைத்தாண்டி வந்து விட்டீர்கள். அங்கு சரியாக விசாரனை செய்யாமல் இங்கு வந்து கேட்கிறீர்கள். இப்படியே பயனித்தால் சுற்றிச் சேரவேண்டும். திரும்பி பயணித்தால் விரைவில் சென்றடையலாம். திரும்பி பயணம் செய்ய எண்ணம் உண்டா! என அறியவே கேட்டேன் என்றார்.
இதைப்போன்றே நாம் திரும்பிப் பார்க்கத் தயாராக இருக்கின்றோமா! நமது துயரங்களை மறக்க உலகைச்சுற்றி பயணம் போக முயற்சிக்காமல் திரும்பி நம்முள் பயணித்து தியானம் மூலம் நமது துக்கங்களை வெல்லலாம்.
வாமனனாக வந்த பெருமாளிடம், ஆராயாமல் ‘எதைக்கேட்டாலும் தருகிறேன்’ என வாய்ச்சொல் விட்டுக் கெட்ட மகாபலியையும், தூதுவந்த பரந்தாமனிடம், ‘ஊசி முனையளவுக்கு கூட நிலம் பாண்டவர்களுக்குத் தரமுடியாது’ என மண்ணாசையை விடமுடியாமல் கெட்ட துரியோதணனையும், ‘யார் தலையில் நான் கைவைத்தாலும் உடன் அவர் சாம்பலாக வேண்டும்’ எனத்தான் பெற்ற வரத்தினைச் சோதிக்க வரம்தந்த சிவனின் தலையை தொடமுயன்று, மோகினியாகமாறிய திருமாலின்மேல் கொண்ட மோகத்தால், தன் தலையையே தொட்டுக் கெட்ட பஸ்மாசூரனையும், ‘பிறன் மனைவியை தொட்டால் அழிவு நிச்சயம்’ என்ற வேதவதியின் சாபத்திற்கு அஞ்சி, இறுதி வரை சீதையைத் தொடாமல் கெட்ட இராவணனையும் போல இல்லாமல் இருப்பவனுக்கே வாழ்வு ருசிக்கும்.
எனவே வாழ்வில் நாம், விட்டுக் கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டுக் கெட்டவனையும், தொடாமல் கெட்டவனையும்’ புரிந்து தெளிந்து பயணித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாக இருக்கும்.
ஒரு ஞானியிடம் பயிற்சி பெற வந்தான் இளைஞன். நீ விழிப்புணர்வு பெற திடீர் திடீரென்று தடியால் தாக்குவேன், அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும் என்றார். அதன்படி அவர் தாக்குதலில் பலமுறை அடிபட்டான். நாளடைவில் அறிவு கூர்மையாகி அவரது காலடி ஓசையை துல்லியமாகக் கணித்து அவரின் அடியிலிருந்து தப்பினான்.
ஞானி முதல் பயிற்சி முடிந்தது. அடுத்த பயிற்சி உறங்கும்போது எனக்கூறி தாக்கினார். பலமுறை அடிவாங்கி, எப்போது தாக்குவார் என்ற நினைவில் தூக்கத்தை இழந்தான். நாட்கள் செல்லச் செல்ல தூக்கத்தில் விழிப்புணர்வு அடைந்து, ஞானி தாக்கவருவதை அறிந்து தடுத்தான். ஞானி இனி உனக்கு அடுத்த பயிற்சி வாளில், கொஞ்சம் அசந்தால் உயிர் போய்விடும் என்றார்.
விழிப்புணர்வுக்காக தாக்கும் குருவை நாம் ஏன் அவர் உறங்கும் போது தாக்கக்கூடது என எண்ணினான். ஞானத்தால் மனதில் நினைப்பதை அறிந்த ஞானி, அவனைக் கண்டித்தார். ஞானியிடம் மன்னிப்புக் கோரினான், மனதில் நினைப்பதை அறியும் அளவிற்கு விழிப்புணர்வு அடைய உறுதி கொண்டு பயிற்சிகளை செய்தான். விரைவில் தேர்ச்சியடைந்து முழு விழிப்புணர்வு நிலை அடைந்தான், யாத்திரைப் பயணத்தில் விழிப்புணர்வு அடையுங்கள் அந்த பயணம் இனிமையானதாக இருக்க ஆசிகள்    -குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27439897
All
27439897
Your IP: 3.236.116.27
2024-06-25 13:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg