Print this page
வியாழக்கிழமை, 04 April 2019 08:56

முதன் முதல் வேலை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#

முதன் முதல் வேலை!
ஒரு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இந்த வேலைக்குப்பின் இருக்கும் நிலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.

வேலை கிடைப்பதற்கு ஒருவரது திறமை அல்லது படித்த படிப்போ அல்லது இராண்டுமோ காரணமாயிருக்கலாம். முதன் முதலில் வேலைக்குச் செல்லும்போது நரம்புகளில் ஓர் உணர்ச்சி, ஆர்வம் எதிர்பார்ப்பு எல்லாம் தோன்றி என்ன வென்று தெரியாத ஒருவித பயம் கலந்த நிலை உருவாகும்.

மரியாதையுடன் கூடிய பொறுப்பு, வேலை பளு ஆகியவை முன்பு இருந்த நிலையிலிருந்து விடுபட்டு உங்களை ஒரு மாற்று நிலைக்கு பொறுப்புள்ள புதிய சூழ்நிலைக்குத் தள்ளும்.
சின்ன சின்ன கஷ்டங்கள் தவிர்க்க முடியாவிட்டாலும் ஒரு வேலையை முதன் முதலில் ஆரம்பிக்க சிறிதளவாவது சிரமப்பட வேண்டியிருக்கும். அதற்காக உணர்ச்சி வசப்படாதீர்கள். உடனடியாக எங்கும் எதுவும் நடந்து விடாது. சாதாரணமாக முயற்சி செய்யுங்கள். ஒரு சிறந்த வழியைக் கண்டு தேர்ந்து எடுங்கள்.

உங்களைப் பற்றி நல்ல நினைவுகள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தோன்றும் வண்ணம் உங்கள் நடையுடை பாவணைகளை மாற்றிக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வந்து பழகுங்கள். ஆடம்பரமில்லா ஆடையுடன் வந்து எல்லோர் மனதையும் எல்லா நேரத்தில் கவரும் வண்ணம் புன்னகை முகத்துடன் பேசிப் பழகுங்கள். மேலே சொன்ன சிறந்த சரியான பழக்கங்களுடன் உங்களது கடந்தகால நினைவுகள், பழக்கங்கள் எல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு எதையும் திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்ற உயரிய நினைவுகளுடன் பணியைத் தொடருங்கள்.

சாதகமான எதிர்கால நோக்குதலும், சரியான வேலைத் தத்துவமும் இருக்கும் ஒருவரை யாரும் குறைகூற முடியாது. அவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள வேலைதனை திறம்பட முடித்து நல்ல பெயர் எடுப்பர். அந்த நிர்வாகமும் அவர்களால் நல்ல பயன் பெறும். ஒருவரின் இந்த முறையானது முன்னேற்ற பாதைக்கு சரியான எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் கட்டுப் படாத வழியாக அமையும்.

நீங்களும் உங்கள் செயல்பாடுகளும் யாராவது ஒருவரால் கவனிக்கப் படலாம். உங்கள் கவனக் குறைவு நீங்கள் சார்ந்த நிர்வாகத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல் படுங்கள். கடுமையாக உழையுங்கள். உங்கள் முழுத் திறமையையும் வெளிபடுத்தும் வண்ணம் செயல் படுங்கள்.

உங்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்குமுன் நீங்கள் தவறு செய்தால் அது உங்களை மட்டும் பாதிக்கும். ஆனால் தற்போது நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் நிறுவனத்தைப் பாதிக்கும். ஆகவே எதையும் நன்றாகக் கவனியுங்கள். குறைவாக பேசுங்கள். யோசித்து முடிவு எடுங்கள்.

நீங்கள் தற்போதுதான் உள்ளே சென்றிருக்கின்றீர்கள். அந்த நிர்வாகத்தின் நடை முறைகளை நன்றாக கேட்டு, கவனித்து, கற்றுக் கொள்ளவும். உடனே எல்லாவற்றையும் யாராலும் அறிந்து கொள்வது என்பது முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக சக தோழர்களை திரும்ப திரும்ப கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள். வழி முறைகளையும் உதவியையும் கேட்பதற்கு எந்த வித தயக்கமும் கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு நன்றாகப் புரியும் வரைக்கும் விளக்கமாகக் கேளுங்கள். ஒரு வேலையைத் தவறாகச் செய்துவிட்டு திரும்ப மீண்டும் அதே வேலையை செய்வதைவிட திரும்பவும் ஒருமுறைக்கு இருமுறை விளக்கம் கேட்பதில் தவறொன்றுமில்லை.

உங்களுக்குமேல் உள்ள மேற்பார்வையாளர் அல்லது நிர்வாகி ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பது உங்கள் வேலையை நீங்கள் நன்றாக அடித்தளம் வரை புரிந்து கொள்ள உதவும். நீங்கள் சாதனை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து உங்கள் அதிகாரியுடன் உங்கள் வேலை செயல் முறைகளை கலந்து ஆலோசிக்கவும். எல்லா விஷயங்களையும் சந்தேகங்களையும் பரிமாறிக் கொள்வது என்பது உங்களுக்கு எப்போதும் உதவி புரியும்.

உங்களுடன் பணி புரியும் சகதோழர்களுடன் அன்புடனும் நேசமாகவும் பழகுங்கள். உங்களின் பழகும் உறவுமுறை வேலையில் ஒரு புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். நல்ல நட்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டுமுயற்சி, ஒட்டுமொத்த செயல்பாடுகள், நன்றி கலந்த வேலை ஆகியவை உங்களை குறிப்பிட்ட காலங்களில் உயர்ந்த இடத்தில் உங்களைச் சேர்க்க வழிவகுக்கும்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்ற ஓர் அபிப்ராயம் மற்றவர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வேலையில் வாழ்க்கைக்கு ஓர் புதிய திறவு கோல். திறம்பட செயல்பட்டு வெற்றிகரமாக முடித்தபின் ஓர் மகிழ்வு உங்களுக்குள் தோன்றி உங்கள் முகத்தை பிரகாசிக்கச் செய்யும். முதன் முதலில் தொடங்கிய வேலை வெற்றிகரமாக முடிந்ததால் அது நம்மாலும் முடியும் என்ற ஒரு தன்னம்பிக்கையை உங்களுக்குள் ஏற்படுத்தும். அது தொடர் சங்கிலியாகி உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர் வெற்றியாகி வாழ்க்கை வளமுடன் இருக்க உதவும். எனவே அதுபோன்ற ஓர் உன்னத செயல் முறைக்கு உங்களைத் தயார் எய்து கொள்ளுங்கள்.

எதிர்ப்புகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு அதை முதன்மை படுத்திவிட்டு அதிலிருந்து விடுபட்டு சுமூகமாக தீர்வு காணுங்கள். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் சரி செய்ய வெண்டும் என்ற உத்வேகத்துடன் செயலிறங்குங்கள். உங்கள்மேல் தன்னம்பிக்கை கொண்டு உங்கள் திறமைகளை நிரூபிக்க காலத்தை விரயம் செய்யாமல் உங்களது சக்தியை உபயோகித்து உங்கள் செயலை சிறப்பாக உங்களுக்கு சாதகமாக முடிக்க முயற்சி செய்யுங்கள்

உங்களிமிருந்து வெளிப்படும் செயல் எல்லாம் திறமையுடன் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களது பணியில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது. மேலும் மேலும் நல்ல உயர் நிலையை அடைவீர்!.. வாழ்த்துக்களுடன்! --குருஸ்ரீ பகோரா.

Login to post comments