Print this page
புதன்கிழமை, 15 March 2023 09:03

பித்ருக்கள் வழிபாடு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும்
மற்றவன்தாள்நண்ணுவதும் நல்லார் கடன்!


#*#*#*#*#

 

19.பித்ருக்கள் வழிபாடு!

 

முண்டம், தண்டம், பிண்டம் என மூன்று வகை.

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் முன்னோர்களை நினைத்து நீராடி முடியை களைந்து வழிபடுதல் முண்டம்.

கங்கையில் நீராடி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வழிபடுவது தண்டம்

நதி அல்லது கடலில் நீராடி முன்னோருக்குப் பிடித்த பண்டங்களைச் செய்து வாழை இலையில் படையலிட்டு பக்கத்தில் மூன்று உருண்டைகளை வைத்து அதில் எள்ளும் தண்ணீரும் விட்டு வழிபடுதல் பிண்டம். இம்முறையே மிகவும் சிறப்பானது.

தாய், தந்தையர் உலக வாழ்வை நீத்த தினத்தன்று புத்திரன் செய்யும் சிரார்த்தத்தைவிட அந்த மனிதப் பிறவிக்கு நன்மை அளிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை. அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய, சந்திர கிரஹணங்கள், மற்றும் மஹாளயபட்சம் எனப்படும் மகத்தான புண்ணிய காலங்களில் செய்யும் தர்ப்பணம், தானம் ஆகியவற்றால் பித்ருக்கள் அளவற்ற திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர். அந்த திருப்தியும் ஆனந்தமுமே உலகில் காலம் தவறாத மழையாகவும் பசு, தன, தான்ய அபிவிருத்தியாகவும் மக்களுக்கு கிடைக்கின்றது.

பித்ருக்களுக்கு என்ன செய்ய வேண்டும்!

உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் மூன்று கடமைகளுடனே பிறக்கின்றன. கல்வியறிவைத் தந்து அகக்கண் திறந்த ரிஷிகள், பருவத்தில் மழை பொழியவைத்து பயிர் வளம் பெருக்கி உயிர்களின் உணவிற்கு வழி வகுக்கும் தேவர்கள், ஒவ்வொருவரின் வம்ச பரம்பரையை வளர்த்து அறத்தைக் காப்பாற்றி சங்கிலித் தொடர்போல் வாரிசுகளை நிலை கொள்ள அருள்பவர்களான பித்ருக்கள் ஆகியவர்களை நினைவில் இருத்தி, அவர்கள் மூவருக்கும் பணிவிடை செய்தல் சிறப்பு.

ஒரு ஆத்மா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு செயலில் சித்த சுத்தி அளித்து பிறப்பின் இலக்கை தடையின்றி எட்டவைத்து மகிழும் தன்மைக்கு உதவி புரிபவர்கள் இவர்கள். இவர்களை அன்றாட அலுவல்களில் ஆத்மாவிற்கு ஒத்துழைக்கும் நபர்களுடன் சேர்த்து விடக்கூடாது. அவர்களை வியாபார நோக்கில் பார்க்கக்கூடாது.

பிரம்மாவின் படைப்பில் முதலானது பித்ருக்கள். பிறகு தேவர்கள், மனிதர்கள். மனிதர்கள் இறந்தபின் பித்ருக்கள் வரிசையில் சேர்த்து உயர்ந்த நிலையில் வைக்கின்றது வேதம். எனவே பித்ருக்களுக்கு நேரடையாக ஏதும் அளிக்க இயலாது. பித்ருக்கள் நித்ய பித்ருக்களான வஸுருத்ர ஆதித்தியர்களுடன் இருப்பதால் நாம் அளிப்பது அவர்களுக்குச் சென்று அவர்கள் மூலமாக பித்ருக்களுக்குச் சொல்லும். இதனால் பித்ருக்கள் திருப்தி கொள்வர்.

இறந்த முன்னோர்களுக்கு சிரத்தையுடன் நீத்தர்கடன் செய்யப்படுவதால் சிரார்த்தம் என்றழைக்கப்படும். சிரார்த்தம் விட்டிலும் அதற்கென்று இருக்கும் சிறப்பு இடங்களில் செய்யலாம். சிரார்த்த கருமங்களுக்கு எள், தர்பை உபயோகிக்க வேண்டும். எள் முக்கியமான தூய்மையான தான்யம். கருப்பு எள்ளினால் சிரார்த்தம் செய்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவர். தர்பை ஆகாயத்திலிருந்து தோன்றியது என்றும் இதன் ஒரு முனையில் பிரம்மாவும் மறுமுனையில் சிவனும் நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம்.

இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்கள் சூட்சும வடிவில் அவரை சென்றடைவதைப்போல் சிரார்த்தத்தில் நாம் அளிப்பவை எல்லாம் சூட்சுமமாக பித்ருக்களை அடையும் என்கிறது வேதம். மஹாளயபட்சத்தில் பித்ருக்கள் பூமியில் 15 நாளுக்கு வாசம் செய்வார்கள். அப்போது சிரார்த்தம் செய்வது சிறப்பு. அப்போது பூனூல் இடமாக இருக்க வேண்டும். தேவர்களுக்கு பணிவிடை செய்யும்போது வலமாகவும் சித்தர்களுக்கு பணிவிடை செய்யும்போது மாலையாகவும் பூனூல் இருக்க வேண்டும் என்பதே சாஸ்திரம்.

பித்ருக்களின் ஆராதனை தினமும் நடத்தலாம். தினமும் நீராடியவுடன் தேவர்களுடன் சேர்த்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் என்றால் திருப்தி படுத்துதல் என்று பொருள். பித்ருக்களின் செல்களிலிருந்து உருப்பெற்றவர்கள் அவர்களின் வாரிசுகள். மூன்று தலைமுறை செல்களில் தொடர்பு அதிமாக இருப்பதால் ஆராதனைக்குப் போதுமான நெருக்கத்துடன் இருக்கும். அதன் பிறகு பிருக்கள் செல்களின் தரம் நெருக்கம் குறையும். பித்ருக்களின் ஆராதனையிலும் பித்ருக்கள் திருப்தி அடைவர்.

#*#*#*#*#

 

Read 378 times
Login to post comments