Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:51

வணிக வேடம் மூன்று!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் போற்றி!
தழைசெவி எண்தோள் தலைவ போற்றி!
திங்கட் சடையோன் செல்வ போற்றி!
எங்கட்கு அருளும் இறைவா போற்றி!
ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி!
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

வணிக வேடம் மூன்று!

1.வைசியர் வேடங்கொண்டு மாணிக்கம் விற்றமை:மதுரை மன்னன் வீரபாண்டியன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் கொல்லப்பட்டான். மன்னனின் காமக்கிழத்தியர் புதல்வர்கள் அரண்மணையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடினர். இளவரசனுக்கு முடி சூட்ட அமைச்சர் பொருள்கள் வைப்பறையைத் திறந்தபோது மணிமுடியும் முக்கிய பொன்னும் பொருளும் இல்லாமல் வருந்தி சொக்கநாதரிடம் முறையிட்டனர். பெருமான் இரத்தின வியாபாரியாக உருவெடுத்து முடிசூட்டிட வேண்டியதற்குரிய இரத்தினங்களை அளித்தார். அந்த இரத்தினங்கள் எல்லாம் வலன் என்ற அசுரனின் உடல் உறுப்புகளாகும் என்றார். 

எவராலும் என் உடல் பிளவு பட்டுக் கிடக்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் ஊழ்வினையால் இறந்தால் துறவிகளும் விரும்பும் நவரத்தினங்களாக என் உடல் மாற வேண்டும் என்ற வரத்தினை பெருமானிடம் பெற்றவன். அவனை வெல்ல முடியாத இந்திரன் நட்பாக பேசி தான் செய்யும் யாகத்திற்கு வேள்விப் பசுவாக வர சம்மதிக்க வைத்தான். அப்படிவந்த வலனை கட்டிவைத்து மூச்சடக்கி கொன்றனர். வலன் இந்திர விமானத்திலே பிரம்மனின் சத்யலோகத்தை அடைந்தான். வேள்விப் பசுவாய் வந்து உயிர் நீத்த வலனின் இரத்தம்-மாணிக்கம், பற்கள்-முத்துக்கள், ரோமம்- வைடூரியம், எலும்பு-வைரம், பித்தம்-மரகதம், வெள்ளை நிணமே-கோமேதகம், தசை-பவளம், விழிகள்- நீலம், கோழை-புஷ்பராகம் என்றானது.

நவரத்தின்ங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து அபிஷேகப் பாண்டியன் எனப் பெயர் சூட்டினார் வணிகர். இளவரசர் முன்பு நின்றிருந்தவர் அந்தர் மயமானார். விடைமீது தோன்றி ஆசிர்வதித்தார். மகுடம் தயார் செய்து முடி சூட்டப்பட்டது.

2.வளையல் விற்கும் வணிகர்: பெருமானின் பிட்சாடனர் கோலத்தைக் கண்ட தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர் கற்பு நிலையிலிருந்து மாறியதால் முனிவர்கள் இட்ட சாபப்படி மதுரையில் வணிக குலப்பெண்களாகப் பிறந்தனர். அவர்கள்மீது கருணை காட்டிட வளையல் விற்கும் வணிகர்போல் உருமாறி வணிக மங்கையரின் கரங்களைப் பற்றி வளையல் இட்டு அவர்களின் சிந்தை கவர்ந்தார்.

3.தனபதி செட்டியாராக மாமனாகி வழக்குரைத்தமை: வனிகர் குல தனபதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் தன் தங்கையின் புதல்வனை தனது அபிமானப் புத்திரனாக ஏற்று வளர்த்தார். தங்கையுடன் ஏற்பட்ட சண்டையால் தன் செல்வம் அனைத்தையும் தன் வளர்ப்பு புதல்வனுக்கு உரிமையாக்கி காட்டில் தவம் செய்ய சென்றார். தனபதியின் தாயதியர் வம்பு வழக்கு செய்து வளர்ப்பு மகனிடமிருந்து செல்வம் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். தனபதியும் வளர்ப்பு மகனும் சோமசுந்தரரிடம் முறையிட்டனர். பெருமான் வனம்சென்ற தனபதி உருக்கொண்டு தரும சபையில் நடைபெற்ற வழக்கில் தனபதியின் மருமகனுக்கு ஆதரவாக வழக்குரைத்து தாயாதிகள் பறித்த செல்வம் அனைத்தையும் மீட்டுக் கொடுத்தார்.

#####

Read 15571 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:28
Login to post comments