gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நீ வலிமையுடையவன், காலம் உன்னைவிட வலிமையானது!

விரதங்கள்! (13)

திங்கட்கிழமை, 07 May 2018 10:14

பங்குனி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

&&&&&

பங்குனி மாத விரதங்கள்!

பங்குனி பௌர்ணமி- பங்குனியில் பளிங்குகல் லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசமிருந்து சிவபூஜை செய்து இரவில் சாமை உணவு உண்ணுதல்.

பங்குனிமாத அஷ்டமி-மாரி-மகாதேவன்-வணங்கினால் இராஜயோக பலன்.

பங்குனி உத்திரம் - எல்லாப் பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் முழுநிலவு நாள் குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும். பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் எனப்படும். அன்று சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளையும் பொழிந்து காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம். ஜோதிடரீதியாக ஆரோக்யகாரகனாகிய சூரியனும், மனோகாரகனான சந்திரனும் சம பலத்துடன் அமைவதால் உடலுக்கும் மனதிற்கும் அன்றைய தினம் வலிமை அளிக்கக்கூடிய நாள.

பங்குனி உத்திரம் விரதம்- அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை நினைத்து நீராடி நெற்றியில் இட்டுக்கொண்டு வீட்டில் உள்ள கடவுள்களின் படங்களுக்கு பூமாலை அல்லது மலர்கள் அணிவித்து அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பொதுவாக சிவ-பார்வதி, முருகன்-வள்ளி-தெய்வானை படத்தை வைத்து வழிபடவும். காலையில் பால் பழங்கள் சிறிதளவு உண்டு மதியம் எதுவும் உண்ணாமல் இருத்தல் நலம். உடல் நலம் இல்லாதவர்கள் பாலன்னம் சிரிதளவு உண்ணலாம். தயிர், மோர் சேர்த்தக் கூடாது. பின் கோவிலுக்குச் சென்று உற்சவங்கள் ஆராதனை அபிஷேகங்களில் பங்கேற்க வேண்டும். முடிந்த அளவு தானங்கள் செய்யவும். இரவு கோவில் பிரசாதத்தை உண்ணலாம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழுந்து நீராடி ஜபித்து இறைவனை வணங்கி வழிபட்டு வழக்கப் படியான உணவை உண்ண வேண்டும். இன்று அனுஷ்டிக்கப்படும் விரதத்தை திருமண விரதம் என்றும் சொல்வர், கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மணப்பேறு கிட்டும். தம்பதியர்க்கு வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையுடன் வாழ அருள் கிட்டும். இந்த விரதத்தால் அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். பங்குனி உத்திரம் விரதமிருந்துதான் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். இந்த விரத மகிமையால்தான் பிரம்மன் சரஸ்வதி தன் நாவை விட்டு நீங்காமல் இருக்கச் செய்தது.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அந்த வாரம் அசைவ உணவு அருந்தக்கூடாது. தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் பலன்கள் அதிகம். நல்ல கல்வி, தகுதிற்கேற்ப வேலை, நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட் செல்வம் அனைத்தும் தவறாது தருவது பங்குனி உத்திர விரதம்.

பங்குனி மாத சிறப்புகள். சிறப்புமிக்க நன்னாளான பங்குனி உத்திரத்தன்றுதான் 1.உமை சதாசிவனை வணங்கும் இமாவான் மகளாக ஹேமாவதியாக அவதரித்தார். 2.சிவ சாபத்திற்கு ஆளாகி கடுந்தவம் இருந்த காமாட்சி- மலைமகளை ஈசன் மணந்த நாள், 3. பெண்ணுக்குப் பிறக்காத பெண்களால் வளர்க்கப்படாத சிவ அம்சத்தால் தான் அழிய வேண்டும் என வரம் வாங்கிய மகிஷியை அழிக்க சாஸ்தா அவதாரம் நிகழ்ந்தது. 4. முருகன் தெய்வானையை மணந்தது. 5. மீனாட்சி சுந்தரேசரை மணந்தது, 6. ஆண்டாள் ரங்கமன்னாரை மணந்தது. 7. வெற்றிக்கு வழிகாட்ட முருகனுக்கு உகந்தது. 8. பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது வலது பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்தன்று திருவாரூரில் தரிசித்துள்ளனர். 9. மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இந்த மாதத்தில் நடக்கும் விழாக்கள் வசந்த விழா எனப்படும்

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 09:59

மாசி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

&&&&&

மாசி மாத விரதங்கள்!

மாசி பௌர்ணமி- மாசியில் சூரியகாந்த லிங்கம் வழிபாடு சிறப்பு, பகல் உபவாசமிருந்து சிவபூஜை புரிய வேண்டும்.

மாசிமாத அஷ்டமி-அம்பிகை-ஈஸ்வரன்- வணங்கினால் 100 கோமேதக யாகபலன்.   

த்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.

சங்கட சதுர்த்தி விரதம்- மாசிமாத தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓராண்டு காலம் விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகை முன் விழித்து விதிப்படி சங்கற்பித்துக் கொண்டு புண்ணிய நதியில் நீராடி சிவ சின்னங்களை அணிந்து விநாயகரை தியானித்து அவருடைய ஓரெழுத்து அல்லது ஆறெழுத்து மந்திரத்தை அல்லது அவரின் திருநாமத்தை விடாமல் தொடர்ந்து நாள் முழுவதும் உபவாசம் இருந்து ஜபிக்க வேண்டும். இரவு உறங்காமல் விநாயகர் புராணத்தை பாராயணம் செய்தல் நன்று. மன உறுதியுடன் ஓராண்டு செய்தால் கூன் குருடு நீங்கப் பெற்று உடல் நலமுறுவர். அறிவு செறிவர். எல்லா இன்பங்களும் வந்தடையும். கடன் தொல்லை பகை நீங்கப் பெறுவர்.

செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல் என்று தமிழ் நாட்டில் பெண்கள் தை செவ்வாய், ஆடி செவ்வாய் எனத் துவங்கி இத்தனை செவ்வாய் என விரதமேற்கொள்வர். இவ்விரதத்தால் ஏற்படும் சப்தம் ஆண்களுக்கு கேட்க கூடாது. அப்படிக் கேட்டால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் உறங்கிய பின் அல்லது ஊருக்குச் சென்றிருந்தால் மற்ற பெண்களுடன் கூடி ஒவ்வொருவரிடமிருந்தும் சேரும் நெல்லை குத்தி அரிசியாக்கி ஊறவைத்து களைந்து இடித்து மாவாக்கி தேங்காய் சிறு துண்டுகளைச் சேர்த்து வேகவைப்பர். மாவில் உப்பு கிடையாது. இதுவே நிவேதனம். ஈனாக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலைகளை பரப்பி அதன் நடுவெ பிள்ளையாரை எழுந்தருளச் செய்து விநாயகர் புராணம் சொல்லி தீப ஆராதனை காட்டி வழிபட்டு அங்கிருக்கும், அனைவருக்கும் வினியோகிப்பர். அங்கேயே சாப்பிட்டு புங்கன் தழை புளியந்தழை பூஜித்த மலர்கள் சாணிப் பிள்ளையார் ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட்டு நீராடி புனித மஞ்சள், குங்குமம் அணிந்து இல்லம் செல்வர். அன்று யாருக்கும் காசு, தானியம் தரமாட்டார்கள். செவ்வாய் கிரகமும் பிள்ளையாரும் இணைந்த விரதமே சங்கட சதுர்த்தி விரதம்.

மாசிக் கயிறு பாசி படியும் என்பர். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டால் அவர்களது கணவனின் ஆயுள் பாசிபடியும் வரை பலகாலம் நீடிக்கும் என்பது வழக்கமானது.

சிவராத்திரி விரதம்.-புனித நீராடி பக்தி சிரத்தையுடன் உபவாசமிருந்து மனதில் இறைவனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டு சிவராத்திரி கண்விழித்தல் என்பது, நான் அழிவற்ற ஆன்மா, பரமாத்மாவின் குழந்தை, எந்த ஒரு பாவமும் செய்யாமல் புண்ணிய செயல்களையே செய்வேன் என்ற உறுதியான உணர்வுகளோடு இருக்கும் உணர்விலிருத்தல் நிகழ்வாகும். தீய விகாரமான எண்ணங்களை எக்காலமும் அளிக்காமல் இருக்கவே இந்த விரதம்.

சிவராத்திரி சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி ஆகும். சைவத்தின் பெருவிழா- சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி. சிவராத்திரி- நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, முக்கோடி சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, யோக சிவராத்திரி எனப்படும்

நித்ய சிவராத்திரி-தினமும் ஈசனைப் பணிந்து மாலை நேரத்தில் வழிபடுதல்.
பட்சசிவராத்திரி-அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி வரும்போது பிரதோஷமும் வரும் அப்போது நடத்தப்படும் மாலைநேர அபிஷேக ஆராதனைகள் பட்ச சிவராத்திரி.
மாத சிவராத்திரி-மாதந்தோறும் சுக்கிலபட்ச தேய்பிறை சதுர்த்தசி/ கிருஷ்ணபட்ச பிரதோஷம் முடிந்த உடன் அன்றைய இரவு தேய்பிறை சதுர்தசி-மாத சிவராத்திரி.
மகாசிவராத்திரி விரதம்: மாசிமாத கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி விரத தினம். இந்நாளில் இரவு 1130 முதல் 0100 மணிவரை உள்ள காலம் லிங்கோத்பவ காலம். இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் தோன்றி முழுமுதற் கடவுள் என உணர்த்தினார். பன்னிருகோடி லிங்க தரிசனம் தரும் பலனை சிவராத்திரியன்று ஒரு லிங்கத்தை பூஜிப்பதால் பெறலாம். நான்கு யுகத்திலும் உலகம் தோன்றிய தினம். ஜோதிர்லிங்கத்தல வழிபாடு கோடி புண்ணியம்.
முக்கோடி சிவராத்திரி- மாசிமாத தேய்பிறை சதுர்தசி செவ்வாய் அல்லது ஞாயிறு அன்று அமைந்தால் அது முக்கோடி சிவராத்திரி என்பர்.
உத்தம சிவராத்திரி-மார்கழி மாத சதுர்தசி திருவாதிரை நாளில் அமைந்தால் அது உத்தம சதுர்தசி சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி- அமாவாசையும், சோமவாரமும் கூடிய தினம்- திங்கட்கிழமையில் தேய்பிறை சதுர்தசி அமைந்தால் அல்லது அன்று 60 நாழிகை இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். திங்கள் சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய் காலை சூரிய உதயம் வரை வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி-3கோடி விரதபலன்.

சிவராத்திரி நாளில் சிவன் நாமங்கள்
1.பவாயநம, 2.ருத்ராயநம, 3.உக்ராயநம, 4.பசுபதயேநம, 5.பீமாயநம, 6.மகாதேவாயநம, 7.சர்வாயநம, 8.சிவயநம, 9.ஈசனாயநம, 10.சம்புவேநம, 11.சதாசிவயநம.

சிவராத்திரியன்று சிறப்பு
1வதுஜாமம்- படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் பூஜை செய்வதாக ஐதீகம். அம்பிகை சிவபூஜை செய்த அடையாளமாக பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை, பச்சைப்பயறு, பொங்கல், பால்சாதம், நிவேதனம் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தல். நெய் தீபம், ரிக்வேத பாராயாணம. சந்தன தூபம். பலன் – முன்வினை மற்றும் பிறவிப் பிணிகளில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடையலாம்.
2வதுஜாமம்-காக்கும் தெய்வம் விஷ்ணு செய்வதாக ஐதீகம். முருகன் வழிபட்ட காலம்-சர்க்கரை, பால், தயிர், நெய்கலந்த ரஸபஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம். தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயாசம், வெண்பட்டு ஆடை அணிவித்தல். நல்லெண்ணெய் தீபம். யஜூர்வேத பாராயணம். குங்கிலிய தூபம். பலன்–தனதான்ய சம்பத்துக்கள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் நிலவும். அன்ன பஞ்சம் ஏற்படாது.
3வதுஜாமம்- அம்பிகை இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். கணபதி பூஜித்த காலம்- தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ/அறுகு அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சிவப்பு வஸ்திரம். இலுப்ப எண்ணெய் தீபம். சாமவேத பாராயணம். சாம்பிராணி தூபம். இது லிங்கோத்பவகாலம் எனப்படும் சிறப்பு பெற்றது. இந்த காலத்தில்தான் சிவபெருமானின் திருமுடி, திருவடி காணப் பிரம்மனும் விஷ்ணுவும் முயற்சித்தது. பலன்– எந்தவித தீய சக்தியும் அண்டாமல் இருப்பதோடு சிவசக்தி அருள் கடாட்சம் கிட்டும்.
4வதுஜாமம்- முப்பத்தி முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் மற்றுமுள்ள அனைத்து ஜீவராசிகளும் பூஜிப்பதாக ஐதீகம். மகாவிஷ்னு சிவபூஜை காலம். கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர், அல்லி, நீலோற்பல மலர் அலங்காரம், அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், தீப ஆராதனை அதர்வணவேத பாராயாணம். அகில்புகை தூபம். பலன் – மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரவல்லது.
நாள் முழுவதும் உண்ணாமலிருந்து வில்வ இலைகொண்டு அர்ச்சனை செய்து சிவ தோத்திரங்களை சொல்வது என்பது தான தர்மங்கள் செய்வது, யாத்திரை செல்வது, நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்களை விடவும் மேலான புண்ணியங்களும் நற்பலன்களும் கிட்டும் என்கின்றது வேதங்கள்.

சிவராத்திரி சிறப்புகள்-
1.ஒவ்வொரு கல்பத்திலும் பிரளயத்தின்போது உயிர்கள் அனைத்தையும் தன் வயப்படுத்திக் (ஒடுங்குதல்) கொள்ளும் சிவன் யோக சமாதியில் ஆழ்ந்துவிட அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு சக்தி தியானம் மற்றும் பூஜை செய்து வழிபட தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்த வேளை-சிவராத்திரி.
2.பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு தியாகராஜராக தோன்றிய காலம்-சிவராத்திரி.
3. பார்வதி கண்ணை மூடியதால் ஒளி இழந்த சூரியன், சந்திரன், அக்னி மூவரும் ஒளி பெற்ற இரவு-சிவராத்திரி.
4.வில்வ இலைகளை லிங்கத்தின் மேல் உதிர்த்ததால் குரங்கு-முசுகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருள் பாலித்த இரவு-சிவராத்திரி.
5. ஜோதிவடிவாக லிங்கோத்பவமூர்த்தியாக ஈசன் தோன்றியநாள்.
6. பரமனின் பாதி இடத்தை பார்வதி பிடித்தநாள்.
7. உமா மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றநாள்.
8. வேடன் தனது கண்ணை லிங்கத்திற்கு அப்பி கண்ணப்பநாயனார் ஆனநாள்.
9. பகீரதனால் கங்கை பூமிக்கு வந்தநாள்.
10. மார்க்கண்டேயனுக்காக ஈசன் எமனை உதைத்தது மார்கண்டேயன் என்றும் 16 என வரம் பெற்றநாள்.
11. கிருஷ்னர் நரகாசுரனை வதம் செய்த நாள்.
12. கிரகங்கள் இயங்கத் தொடங்கிய நாள். குருதீட்சை பெற்றிட சிறந்த நாள்.
13. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் பெற்ற நாள்.

மகாசிவராத்ரியன்று வழி படவேண்டிய தலங்கள்
1.முதல்காலம்-குடந்தைகீழ்க்கோட்டம்(144)-நாகேஸ்வரர், 
2.இரண்டாம்காலம்-திருநாகேச்சுரம்(146)-நாகநாதர், 
3.மூன்றாம்காலம்-திருபாம்புரம்-பாம்புரேஸ்வரரையும், 
4.நான்காம்காலம்-நாகூர் நாகேஸ்வரரையும்-உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

சிவராத்திரியன்று சிறப்பு தரிசன தலங்கள்
1.ஓமாம்புலியூர், 2.காஞ்சிபுரம், 3.காளஹஸ்தி, 4.கோகர்ணம், 5.திருக்கடவூர், 6.திருக்கழுக்குன்றம், 7.திருவண்ணாமலை, 8.திருவைகாவூர், 9.ஸ்ரீசைலம், 10.தேவிகாபுரம்

மகாசிவராத்திரி விரதம்
விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி விரதம். விரதம் இருப்போர் சிவராத்திரிக்கு முதல் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து காலை ஸ்நானம் செய்து, சிவசிந்தனையுடன் கண் விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடும் முறைப்பட் செய்தல் வேண்டும். சிவபுராணம் படித்தல், கேட்டல், சொல்லுதல், துதிகளைச் சொல்லுதல், பஞ்சாட்சரம் ஓதுதல், எழுதுதல் சிறப்பு. அடுத்த நாள் காலை நீராடி சிவ தரிசனம் செய்து அடியவர்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.

மாசிமகம்

மாசி மாதத்தில் புண்ணிய தலங்களுக்குச் சென்று நீராடுவது சிறப்பு. அதிலும் மாசிமாத மக நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிறவிப் பெருங்கடலில் முழுமைப் பேறாகியவீடுபேறு என்ற நிலையை அடைய செய்யும் வழிபாடுகள், விரதங்கள், பூஜைகள் ஆகியவற்றைவிட பெரும் பலன்தருவது மாசிமகத்தில் புண்ணிய நீராடுவதாகும். இதை மாசி மகக்கடலாடு தீர்த்தநாள் என்றும் ஆலயங்களில் தீர்த்தவாரி எனவும் சிறப்பித்துக் கூறுவர்.

தீர்த்தவாரி என்பது கடவுள் திருவடிவங்களை நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று அங்கே திருமஞ்சனம் செய்து ஆரதனை செய்வதாகும். மாசிமகத்தன்று புகழ்மிக்கத் தலங்களில் பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவருவார்கள்.

நவகிரக குருபகவான் சிம்மராசியில் இருக்கும்போது மகநட்சத்திரத்தில் சந்திரன் பௌர்ணமி அன்று இணைவதும் கும்பராசியில் இருக்கும் சூரியன் அனைவரும் நேருக்குநேர் பார்க்கும் அமைப்பான நாள் மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுவதால் மகாமகம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த விரதம் இருப்போர் வீட்டில் / புண்ணிய நதிகளில் நீராடி, உலர்ந்த ஆடை அணிந்து இறை சிந்தனையுடன் வீட்டில் வழிபாடுகளை முடித்து காலை அல்லது மாலை அருகிலுள்ள சிவன், விஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் மதிய உணவு உண்ன வேண்டும். இரவு உணவை தவிர்க்கவும். இயலாதவர்கள் பால் பழம் அருந்தலாம்.

 பித்ரு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களது பரிபூரண ஆசிகிட்டி இடையூறுகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெற, குருவின் தீட்சை பெற ஏற்றநாள்.


&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 03:16

தை மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

&&&&&

தை மாத விரதங்கள்!

தை பௌர்ணமி- தைமாதம் புஷ்பராக லிங்கம் வழிபாடு சிறப்பு பூரண உபவாசம் இருந்து தான தர்மங்கள் செய்து சிவ பூஜை செய்தல்.

தைமாத அஷ்டமி-சர்வானி-சம்பு(எ)ருத்திரன்- வணங்கினால் யாகபலன்.       

தைப்பூச விரதம்- பாரம்பரிய பழக்கம் உள்ளவர்கள் மார்கழிமாதம் முதல் நாள் குளித்து பூஜை செய்து மாலை அணிந்து கொள்ளல் வேண்டும். பின் தினமும் காலையும் மாலையும் குளித்து முருகனை பாடல்களால் துதிக்க வேண்டும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று வழிபடவும். தைப்பூசத்தன்று பாத யாத்திரையாக முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தை பூசத்தன்ரு மட்டும் விரதம் இருந்து வழிபட்டும் விரத்த்தை முடித்துக் கொள்ளலாம்.

இறைவனும் இறைவியும் தங்களது தலையில் சூடிய பிறைகள் அவர்கள் ஐக்கியமாகும்போது ஒன்று சேர்ந்து முழு நிலவாகத் தோன்றும். அப்படித் தோன்றிய ஒருநாள் தைப்பூசம்.

சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் தோன்றுவதால் இருவரும் சமபலத்துடன் இருக்கும்நாள் தைப்பூசம். ஈசனின் வலதுபுற விழி சூரியன், அன்னையின் இடதுபுற நயன விழி சந்திரன் இரண்டும் நேர் கோட்டில் இருப்பது சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கும். சிவனும் சக்தியும் சமபலத்துடன் இருக்கும் நாள் தைப்பூசம்

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..

தை அமாவாசை- நிம்மதியான குறையிலா வாழ்வு பெற மக்கள் நீத்தோர் நினைவு செய்தல் அவசியம். இறந்த முன்னோர்களுக்கு நீரும் எள்ளும் விடுத்து செய்யும் பித்ரு வழிபாட்டை தை அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி அதன் கரைகளில் அமர்ந்து செய்வித்தால் குடும்ப ஒற்றுமை நீடித்து குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், பண்பும் வளரும்.

தேவர்களின் பகல் பொழுது தொடக்கமான உத்ராயணாயன காலத்தின் ஆரம்ப மாதமான தைமாத அமாவாசை பிதுர்களின் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும். நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள்- பிதுர் தேவர்களை நினைத்து நாம் சிரத்தையுடன் வழிபாடு செய்வதால் அது சிரார்த்தம் எனப்படும். அவரவர் வழக்கப்படி சிரார்த்தம், திவசம், படையல் என வழிபடலாம். இந்த வழிபாட்டினால் பூர்வ தோஷங்கள், முன்னோர் சாபங்கள் போன்றவை நீங்கி புண்ணியம் கிடைக்கும். திருமணப்பேறு குழந்தைகள்பேறு ஆகியவையும் கிட்டும். நாம் எள்ளும் தண்ணீர் விட்டு அர்க்கியம் செய்வது போன்றவைகளையும் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகள் வழிபாடுகள், ஆராதனை உற்சவம் எல்லாம் நம்மிடமிருந்து பெற்று நம் பிதுர்களுக்கும் அந்தந்த தேவதைகளுக்கும் சேர்க்கும் பொறுப்பு சூரியபகவானைச் சேர்ந்தது. அதனால்தான் முன்னோர்களை வழிபட்டபின் முழங்கால் அளவு நீரில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று மூன்று முறை நீரை இரு கைகளினாலும் எடுத்து விடுகின்றோம். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம் குலதெய்வம் தனக்கு முன்னுள்ள மூன்று தலைமுறை தந்தை பெயர்களைக் கூற வேண்டும். பின் வீட்டில் முன்னோரின் படம் இருந்தால் தெற்கு முகமாக வைத்து அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து வழிபடவேண்டும். அவர்கள் விரும்பியவற்றை சமைத்து / வைத்து இலையில் பரிமாறி படைத்து ஆரத்தி காட்டி வழிபட்டு காக்கைக்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும். இதற்குத்தான் தென்புலத்தார் வழிபாடு எனப்பெயர்.

இருவேறு தன்மைகள் கொண்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்த நாளில் எந்த ஒரு கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. மற்ற எல்லா திதிகளிலும் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் பெற்றிருக்கும். அமாவாசைய்னறு எந்த கிரகமும் தோஷம் அடைவதில்லை. அமாவாசை, பௌர்ணமி என்ற இரு நாட்களும் விரத நாட்களாக கருதப்படுவது இதனால்தான். அமாவாசையன்று தந்தை மற்றும் தாயை இழந்தவர்கள் வழிபாடு செய்யும் முறை பிதுர் தர்ப்பணம் / சிரார்த்தம் ஆகும். ”பித்ரு தேவதா நமஹ, மாத்ரு தேவதா நமஹ” என வேதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரதசப்தமி விரதம்

தை அமாவாசிக்குப்பின் சுக்லபட்ச சப்தமி அன்று வரும் ரதசப்தமி விரதம் சூரியனுக்கு மிகவும் பிரியமானது. ஒளி ஆயுள், ஆரோக்கியம், புகழ் ஐஸ்வர்யம் அனைத்தையும் அளித்து, நல்ல விளைச்சலால் செல்வமும் மகிழ்ச்சியும் இல்லங்களில் மிகுந்திருப்பதால் அது நீடித்து இருக்க சூரிய கடவுளுக்கு நன்றி கூறி விரதமிருந்து தான தருமங்கள் ஆலயவழிபாடு செய்து வழிபடும் நாள் ரதசப்தமி. சூரியன் ஒளிப்பிளம்பாய் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் வலம் வருவதால் திதிகளில் ஏழாவதுநாள் சப்தமி திதி வரும்.

அன்று சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் ஆண்கள் எருக்கன் இலைகள் ஏழை எடுத்து அதனுடன் சிறிது அட்சதை-பச்சரிசி விபூதி இரண்டையும் வைத்து ஒன்றின்மேல் ஒன்றாக ஏழையும் வைத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு நதி, குளம், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் நீராட வேண்டும். பெண்கள் அட்சதையுடன் மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்வது சிறப்பு. அன்று ஆதித்தியஹ்ருதயம் அல்லது சூர்ய காயத்ரி செல்வது நல்லது. (தமிழில்-ஏழு ஜென்மங்களில் என்ன பாவம் செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட கர்ம தாக்கங்களை இந்த ரதசப்தமி ஸ்நானம் போக்கி அருள வேண்டும் எனச் சொல்லி நீராடல் சிறப்பு.) அன்று சூர்ய உதயம் காண்பது நல்லது. வீட்டில் வாசலில் பூஜை அறையில் சூரியன் தேர் போன்று கோலமிடலாம். சக்திக்கேற்ற அன்னதானம் செய்யவும்,

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 03:12

மார்கழி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

&&&&&

மார்கழி மாத விரதங்கள்!

மார்கழி பௌர்ணமி- மார்கழியில் வைடூர்ய லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசம் இருந்து சிவ பூஜை புரிதல் வேண்டும்.

மார்கழி மாத அஷ்டமி- பவானி-மகாசங்கரை வணங்கினால் யாகபலன்.

மார்கழி சிறப்புகள்- மார்கழி அதிகாலைப்பொழுதான தேவர்களின் சந்தியா கலாத்தில்தான் தான் திருவெம்பாவாய், திருபூம்பாவாய் என சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பள்ளி எழுச்சி நடைபெறும். பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனியும் நடரஜர் நடனம் ஆடும்போது அவரது இடது பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்தில் தரிசித்துள்ளனர்.

திருவெம்பாவை நோன்பு. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி கடைப்பிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடி தூய ஆடையுடன் கோவிலுக்குச் சென்று சிவ பார்வதியை தரிசித்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும். அன்று ஒரு வேளை மட்டும் அவித்த உணவு உண்ண வேண்டும். பின்னர் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை பாடல்களைப் பாட / படிக்க வேண்டும். கன்னிப் பெண்களுக்குச் சிறந்தது. நிவேதனமாக பிட்டு வைப்பதால் இப்பூஜையை பிட்டு பூஜை என்பர். ஒன்பது நாள் முடிந்ததும் திருவாதிரை அன்று வழக்கம்போல் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்க வேண்டும். நோன்பிற்கு நைவேத்யமாக திருவாதிரைக் களியும் ஏழுவகைக் காய்கறிகளும் செய்து வழிபட்டு பூஜை செய்து அனைவருக்கும் அளித்து விரதம் இருந்தோர் உண்ணலாம். தொடர்ந்து பத்து நாட்கள் விரதமிருக்க இயலாதவர்கள் திருவாதிரை அன்றாவது விரதமிருந்து பூஜை செய்து வழிபடவும். இதனால் இந்தப் பிறவியிலே புகழ், செல்வம், நீடித்த ஆயுள், நோயின்மை, குடும்ப நலம் போன்றவை பெற்றுச் சிறப்புடன் வாழ்வர்.

வைகுண்ட ஏகாதசி விரதம்! ஆண்டுக்கு 25 ஏகாதசி வந்தாலும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்பானது. மாதம் முழுக்க இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இம்மாதத்தை பீடுடைய மாதம் என்றனர். அது காலப்போக்கில் பீடை மாதம் என்றானது. அது தவறு.

ஏகாதசி திதி- திதிக்குரிய விநாயகர்- ஹேரம்ப கணபதி. பால் ஆகாரம் சாப்பிடவும்-நிதிபதியான குபேரனை பிரம்மா தோற்றுவித்த நாள். பழம் மட்டும் உண்டு குபேர பூஜை. வைகுண்ட ஏகாதசி விசேடமானது- விஷ்ணுவிற்குரியது.

ஏகாதசி-மார்கழி-வளர்பிறை-வைகுண்டஏகாதசி பலன்- ஜாங்காசுரன் என்ற முரன் பெண்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைத்து வந்தான். அவனது துன்பங்கள் தொடரவே மாகாவிஷ்னுவிடம் முறையிட அவருக்கும் அசுரன் முரனுக்கும் 1000 ஆண்டுகள் வரை போர் நீடித்தது. ஒருநாள் களைப்படைந்தது போல் நடித்த திருமால் அருகில் இருந்த பத்ரிகாசிரமத்தில் ஓய்வெடுப்பது போல் பாசாங்கு செய்தார். அவர் உறங்குவதாக நினைத்த முரன் வாளால் வெட்டவர விஷ்ணுவின் உடலிலிருந்த சக்தி வெளிப்பட்டு தன் பார்வையாலேயே அசுரனை எரித்தது. அது தனுர்மாத சுக்லபட்ச ஏகாதசியில் நீ என்னுள்ளிருந்து அவதரித்ததால் இந்த திதி உனக்குரியதாகும். உன்பெயர் இனி ஏகாதசி என்பதாகும். தூக்கமின்றி விழிப்புடன் பெருமாளைக் காத்ததுபோல் கண்விழித்து பெருமாள் நாமத்தை ஏகாதசியன்று உச்சரித்து விரதம் இருப்போர்க்கு வைகுண்ட முழுபலன்.

சொர்க்கவாசல்- திரேத யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வயில் காப்போர்களான ஜெயனும் விஜயனும் வைகுண்ட வாயிலை மூடி கலியுகம் பிறந்துவிட்ட்தால் பொய் புரட்டு வஞ்சம் ஆகியன நிறைந்து உயிர்கள் ஏதும் வைகுண்டத்திற்கு வராது என்பதால் கதவை மூடிவிட்டோம் என்றனர். கலியுகத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானிகளும் அவரைப் பின்பற்றி பக்தர்களும் வருவார்கள் அவர்களுக்குகாக கதவை திறந்து வையுங்கள் என்றார் விஷ்ணு. வைகுண்ட ஏகாதசியன்று உங்களது அர்ச்சாவதார மேனியுடன் சொர்க்கவாசல் புகுந்து வருபவர்களுக்கு வைகுண்டத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். இதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என ஜெய, விஜயர்கள் வேண்ட அவர்கள் விருப்பபடி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதால் ஏகாதசி விரதமிருந்து சொர்க்கவாசல் வழி சொல்வோர் வைகுண்ட பாக்கியம் பெறுவர்.

அம்பாரீஷன் என்ற மன்னன் ஏகாதசியன்று இரவெல்லாம் கண்விழித்து பகலில் ஹரி நாமத்தை உச்சரித்து ஏகாதசி விரதம் இருந்து வந்தான். இந்த பக்தியைக் கண்ட திருமால் தன் சுதர்சன சக்கரத்தை அவனது மாளிகையில் வைத்தார். ஒரு ஆண்டில் வரும் 25 ஏகாதசியிலும் அம்பாரீஷன் விரதமிருக்க உறுதி பூண்டு அப்படியே தொடர்ந்து இருந்து கடைசி ஏகாதசியான மோட்ச ஏகாதசிக்கும் வழக்கம்போல் விரதமிருந்து மறுநாள் அனைவருக்கும் போஜனம் செய்து தானங்கள் வழங்கி விட்டு சாப்பிடும்போது அங்கே துர்வாசர் வந்தார். அவரை வணங்கி நீங்கள் போஜனம் செய்து எங்களுக்கும் பிரசாதம் வழங்க வேண்டும் என வேண்ட, ஸ்நானம் செய்துவிட்டு வருகின்றேன் என்று சென்ற துர்வாசர் வெகுநேரமாக வராததால் ஏகாதசி நேரம் முடிவுரும் தருவாயில் என்ன செய்வது என்று தவித்து அருகிலிருந்த சான்றோர்களின் அறிவுரைப்படி ‘ஒரு உத்தாணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசிதளமிட்டு ஆசமனம் செய்து’ அதனை பகவானின் அருட்பிரசாதமாக உட்கொள்ளச் சொன்னபடி அம்பாரீஷன் செய்ய முயலும்போது துர்வாசர் அங்கு வந்து என்னோடு சேர்ந்து உணவருந்துவதாகக் கூறிவிட்டு இப்போது பாரணை செய்கின்றாய். என்று கோபித்து தன் ஜாடாமுடியிலிருந்து ஒரு பூதத்தை வரவழைத்து அம்பாரீஷன் மேல் ஏவினார். அங்கிருந்த சக்கரத்தாழ்வார் இதை உணர்ந்து துரிதமாக செயல்பட்டு பூதத்தை அழித்துவிட்டு துர்வாசரை நோக்கி வர, பயந்த துர்வாசர் விஷ்ணுவிடம் தஞ்சம் புக, அவர் அம்பாரீஷன்தான் உங்களை மன்னிக்க வேண்டும் அவனிடமே செல்லுங்கள் என்றார். துர்வாசர் அம்பாரீஷனிடம் வந்து மன்னிப்புகோர அவர் பெருமாளை வணங்கி சுதர்சனத்தை திரும்ப பெற்றார். இந்த நிகழ்வே ஏகாதசி விரதத்தின் மகிமைக்கு சான்று.

ருக்மாங்கதன் என்ற அரசன் தன் நாட்டு மக்கள் இக, பர வாழ்வு இரண்டிலும் நிம்மதிகாண வேண்டும் என்று ஆவல்கொண்டு அதற்கு வழி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது என்று முடிவுகொண்டு தன் நாட்டு மக்கள் மாதா மாதம் ஏகாதசி விரதமும், வைகுண்ட ஏகாதசி விரதமும் கண்டிப்பாய் அனுஷ்டிக்க வேண்டும் என்று சட்டம்போட்டான். அதனால் மக்கள் அனைவரும் விரதமிருந்ததால் பூமியில் மக்கள் அனைவரும் வைகுண்டம் சென்றனர். முன் ஜன்ம கர்ம வினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரவர் தலை யெழுத்தை எழுதுகின்றேன். ஆனால் இங்கு அனைவரும் விரதமிருந்து அந்த வினைகளைக் களைந்து விடுகின்றனர். ஒருவர்கூட நரகத்திற்கு செல்லவில்லையாததால் பூமியின் சமநிலை இவ்வாறு பாதிப்பது நல்லதல்ல என்று பிரம்மன் விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு ருக்மாங்கதனிடம் உன் எண்ணம் நன்மையானதுதான். ஆனால் யாருக்கு சொர்க்கம் செல்ல வேண்டும் என்றிருக்கின்றதோ அவர்கள் மட்டும் விரதங்களை அனுஷ்டிக்குமாறு நீ சட்டத்தை மாற்று என்றார். மக்கள் அவரவர் விருப்பப்படி விரதமிருந்து சொர்க்கம் சென்றதால் பூமியில் சமநிலை ஏற்பட்டது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஏகாதசி விரதங்கள் கடைபிடிப்போருக்கு வெற்றி, செல்வம், ஆரோக்கியம், நிம்மதி கிடைத்து பாவ வினைகள் அழிந்து வைகுண்டப் பதவி கிட்டும்.


&&&&&

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்


&&&&&

கார்த்திகை மாத விரதங்கள்!

கார்த்திகை பௌர்ணமி- கார்த்திகையில் பவளலிங்கம் வழிபாடு சிறப்பு, பகற் பொழுது உபவாசம் இருந்து ஈசனை வழிபட வேண்டும்.

கார்த்திகைமாத அஷ்டமி மனோன்மணி-மகேஸ்வரன்-வணங்கினால் விரும்புவன் கிட்டும்

மேலும் கார்த்திகை பௌர்ணமியில் ஸ்ரீ துளசியின் ஜன்ம தினம் என்பதால் துளசி மாடத்திற்கு பூஜை செய்து வழிபடுதல் அவரது குறை தீர்ந்து நல்ல விருப்ப நோக்கங்கள் எல்லாம் அடையப் பெறுவர். துளசி என்றால் தன்னிகரில்லாதவள் எனப் பொருள். துளசியை வைணவத்தில் திருத்துழாய் என்பர். லட்சுமி தேவியானவள் தர்மத்வஜன் - மாதவி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்து பிரம்மாவை நோக்கி தவமிருந்து துளசிச் செடியாக மாறி விஷ்ணுவுக்குப் பிரியமாகி விஷ்ணு பிரியை என்று அழைக்கப் படுகின்றாள். துளசி மந்திரத்தில் வரும் எட்டு நாமங்களும் காரணப் பெயர்களாகும். கண்ணுவ சாகையில் உள்ளது அஸ்வமேத யாக பலனைத் தரும். அதை தினமும் சொல்லி பூஜை செய்து துளசியை தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்பு. துளசி பூஜைக்கு துளசி விருட்சமே முக்கிய உருவம். ஆவாகனம் செய்யாமலே சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் முதலியவற்றால் துளசி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். துளசி பதிவிரதை, புஷ்பசாரமானவள், எல்லாவற்றையும் தூய்மை செய்பவள். பாவ வினைகளைச் சுட்டெரிக்கும் அக்னி ஜுவாலையாக இருப்பாள்.

கார்த்திகை விரதம்- கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரத்தில் பன்னிரண்டு மதங்கள் தொடர்ந்து இருப்பது சிறந்த பலனைத் தரும். விரதம் இருந்து முருகனை வழிபடுவோருக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய பேறுகள் கிட்டும்.

திருக்கார்த்திகை விரதம் முருகப் பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் உகந்தது. இந்த விரதம் இருக்க பரணி நட்சத்திரத்தில் பகலில் உணவு உண்டு இரவு உண்ணாமல் மறுநாள் கார்த்திகை முழுவதும் விரதமிருந்து நாமாவளிகள், துதிகள் பராயணம் என்று இறை சிந்தனையுடன் இருந்து உறக்கம் தவிர்த்து மாலை மீண்டும் நீராடி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து இரவில் பிரசாதங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த நாள் ரோகிணியன்று விரதமிருந்து பகல் உணவு உண்டு உறக்கம் தவிர்த்து பராயணம் செய்து மாலையில் ஆலயம் சென்று வழிபட்டு இரவு உணவைத் தவிர்த்து பால் பழம் அருந்தி இறை சிந்தனையுடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பரணி, கார்த்திகை, ரோகிணி என்று மூன்று நாட்களும் இவ்விரதத்தைக் கடைபிடித்தால் குமரன் அருளையும் சிவபெருமான் அருளையும் பரிபூரணமாகப் பெறுவர். அதன் பலனாக நிறைவான அறிவு, செல்வம், ஆயுள், ஆரோக்கியம் என அனைத்தும் பெறுவர்.

பிரதிபத (எ) பிரதமை விரதம்- பிரம்மன் பிரமாண்டத்திலிருந்து பூமி, ஆகாயம், திசைகள், உபதிசைகள், தேவர்கள், அசுரர்கள் என எல்லாவற்றையும் உறபத்திசெய்த முதல் திதி என்பதால் பிரதமை என்றானது. பிரதமையன்று பிரம்மா அக்னியை தோற்றுவித்ததால் அக்னி பூஜைக்கு உரியது. முன்னால் வரும் சதுர்த்தசியன்று இந்த விரதத்திற்கான சங்கல்பம் மேற்கொண்டு பிரதமை விரதத்தை கார்த்திகை பௌர்ணமி முதல் தொடங்கி ஓராண்டு தொடர்ந்து செய்வது விசேடமானது. பிரம்மனுக்கு விரதமிருந்து பூஜைசெய்து பிரம்ம தேவரே எனக்கு அருளாசி தர வேண்டும் என வேண்டவும். பாலைத் தவிர்க்கவும். விரதம் முடிந்தபின் பாலை அருந்தி விரதத்தினை முடிவு செய்ய வேண்டும்-

த்விதீய / துவிதையை விரதம்- அஸ்வினி குமார்களுக்கு தேவர்கள் என்ற அங்கீகாரமும் அவிர்பாகமும் கிடைத்த நாள் இது. தேவலோக மருத்துவர்கள் அசுவனி தேவர்கள் பூஜைக்குரிய நாள். கார்த்திகை மாதம் சுக்லபட்சம் த்வீதியை அன்று துவங்கி ஒருவருட காலம் தொடர்ந்து அனுஷ்டிக்கவும்- உப்பைத் தவிர்க்கவும்

சாந்தி விரதம்- கார்த்திகை மாத சுக்லபட்ச பஞ்சமி திதியில் சாந்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் நீங்கி சாந்தி நிலவும். நியதி என்னவென்றால் ஓராண்டு காலத்திற்கு சூடான உணவைத் தவிர்த்தல் நன்மை பயக்கும். விரத நாள் முடிவில் பாம்பு-சேஷன் பிரதிமை செய்து தானம் வழங்க வேண்டும். மிகச் சிறந்த நாகங்களான வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், த்ருதராஷ்ட்ரன், கார்க்கோடன், அனந்தன், தனஞ்செயன் ஆகியவை சர்ப்ப வடிவிலிருந்து அபயம் தருவதுடன் செல்வங்களை வாரிவழங்கும். நாக தோஷங்கள் நீங்கும்.

சப்தமி விரதம்- கார்த்திகை சுக்ல சப்தமியில் விரதத்தை துவங்கலாம். நான்கு மாதம் அனுஷ்டிக்க வேண்டும். மாசி சப்தமி- விசேஷ பலன்களைத் தரும். வளார்பிறை சப்தமியிலோ அல்லது சங்கராந்தி கிரகணம் முடிந்த பிறகோ விரதத்தை தொடங்கி அக்னியை சூரிய ஜோதியாக பாவித்து ஹோமம் செய்யவும். 12 மாதங்களில் 12 ஆதித்தியர்களைப் பூஜை செய்தால் வருடம் முழுவதும் சூரியனைப் பூஜித்த பலன், சூரியனுக்கு பூஜை- ரதசப்தமி- மாசிமாத சுக்ல பக்ஷ பஞ்சமியன்று ஒரு பொழுது விரதமிருந்து மறுநாள் சஷ்டியன்று இரவு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, அடுத்த நாள் சப்தமியன்று பாரணை செய்து சூரிய நாராயணருக்கு பூஜை செய்து எளியோர்க்கு உணவு அளித்திடல் வேண்டும். சூரியனுக்குகந்த நளான இன்று பாயாச நெய்வேத்தியம். வில்வ ஆகாரம் செய்யவும்.

கார்த்திகை மாத சிறப்புகள்- கார்த்திகைத் தீபம்: அருட்பெரும் ஜோதி என்றார் வள்ளலார். அலகில் சோதியன் என்றார் திருநாவுக்கரசர். நெருப்பை அக்னி தேவன் என்றும் திருவிளக்கை தீப லட்சுமி என்றும் வழி படுகின்றோம். அத்தகைய நெருப்பை ஜோதியை போற்றும் நாள் கார்த்திகை தீபத் திருநாள். ஜோதி ஸ்தம்பமாய் நின்ற இறைவனை அடிமுடி காண பிரம்மன், விஷ்ணு புறபட்ட நிகழ்வு நடந்த தலம் திருவண்ணாமலை. அந்த நாளே கார்த்திகைத் தீபத்திருநாள்.. இறைவன் இங்கு தீயாக சோதிப் பிளம்பாக வெளிப்பட்டமையால் திருவண்ணாமலை ஐம்பூதத்தலங்களுள் அக்னி(தீ)த் தலமாக வணங்கப் பெறுகின்றது. கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் சிவபார்வதி இருவரும் ஒளிவடிவத்தில் இருப்பதால் அன்று தீபமேற்றி வழிபடுகின்றோம். இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே வீட்டை விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகைத் தீபத் திருநாளில் இறைவனை வணங்கும் பழக்கம் பல யுகங்களாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் சேர்ந்தால்தான் விளக்காகும் அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கும் வாழ்வின் அம்சமாகும். மாயை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் அறிவில் அடக்கம். இந்த அறிவொளியைத்தான் நாம் தீப தேவதையாக வழிபடுகின்றோம். கார்த்திகை திருநாளன்று வீடு முழுவதும் தீபமேற்றினால் செல்வமும் செழிப்பும் வீடுதேடி வரும், மகாலட்சுமி வாசம் செய்வாள்.

பரணி தீபம்: கார்த்திகைப் பெண்கள் வளர்த்த குழந்தைகளைப் பார்க்கச் சென்ற உமை ஆறு குழந்தைகளையும் ஒன்றுசேர எடுத்து அணைக்க சண்முகனார் தோன்றிய நாள் கார்த்திகை மாதம் பரணித் திருநாள். பரணி நட்சத்திரம் கார்த்திகை மாதம் எமனுக்குரியது. ஒரு உடலிலிருந்து விடுபட்ட ஆன்மா இரு வழிகளில் தன் பயணத்தை மேற்கொள்கின்றது. புண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒளியும் நறுமணமும் மிகுந்த நல்ல வழியில் பயணிக்கும். பாவம் செய்தவர்கள் இருள் நிறைந்த பாதையில் பயணம் செய்வர். பரணி தீபம் ஏற்றுவதால் அந்த இருள் சூழ்ந்த பாதையில் பயணம் செய்யும் ஆன்மாக்களுக்கு சிறிது வெளிச்சம் கிடைக்கும் அது அந்த பரணி தீபம் ஏற்றியவர்களுக்கு புண்ணியமாகும். அதனால் பரணி தீபம் ஏற்றி அதை வான் நோக்கி காண்பிப்பது வழக்கமானது. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றி அதன் சுடரிலிருந்துதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

சொக்கப்பனை: தீபத்திருநாளன்று கோவில் வாயிலில் பனை மற்றும் தென்னை ஓலைகளை குவித்து அதனைக் கொளுத்துவர். இந்தச் சுடரிலிருந்து நெருப்பு பெறப்பட்டு வீட்டின் விளக்குகளில் ஏற்றப்படும். இந்த நிகழ்வே சொக்கப்பனை எனப்படும். இதன் தத்துவம் என்ன வென்றால் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா ஒளிவடிவானவராக நெருப்புப் பிழம்பாக காட்சியளித்த கார்த்திகைத் திருநாளன்று அந்நிகழ்வை நினைவுகூற செக்கப்பனை ஏற்றப்படுவதால், பிரம்மனின் ஆணவம் அன்று அழிந்ததுபோல்; ஒவ்வொரு ஆன்மாவின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் அந்த தீபஒளியின் நெருப்பில் சாம்பலாகும் என்பதாகும். சொக்கனாகிய சிவபெருமானை குறிப்பதால் சொக்கப்பனை எனப்பட்டது. மேலும் இறைவனின் அருள் எனும் ஒளி இருந்தால் வீட்டில் தீய வினை, தீயசக்திகள் அகன்று நல்ல வெளிச்சம் பிறக்கும் என்பதையும் விளக்குகின்றது. இந்த வசதி கிடைக்காதவர்கள் வீட்டிலுள்ள சாமி படத்தின் விளக்கிலிருந்து நெருப்பைப் பெற்று அகல் விளக்குகளைப் பற்றவைக்கலாம். சொக்கப்பணை ஏற்றுவது என்பது மக்களின் அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் பிறக்கச் செய்யும் ஒரு குறியீடாகும்.

ஆந்திராவில்- சிவபெருமான் உண்ட விஷம் அவரை ஒன்றும் செய்யாதிருந்தால் தான் தீக்குளிப்பதாக பார்வதி வேண்டிக்கொண்ட நிகழ்வாக கொண்டாடப் படுகின்றது. மூங்கில், பனை ஓலை கொண்டு கட்டி வாயில் ஏற்படுத்தி தீயிட்டு அத்தீயிலே பார்வதியின் திரு உருவத்தை மூன்று முறை கொண்டு செல்வர். ஜ்வாலா தோரண விழா என்பர். இந்தச் சாம்பலை எடுத்துச் சென்று வயல்களில் தெலித்தால் நோய்கள் பயிரை அண்டாது என்ற ஐதீகம்.

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 03:01

ஐப்பசி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

&&&&&

ஐப்பசி மாத விரதங்கள்!

ஐப்பசி பௌர்ணமி- ஐப்பசியில் கோமேதக லிங்கம், வழிபாடு சிறப்பு பூஜித்து மிஞ்சிய சாதத்தை மட்டும் உண்டு சிவபூஜையை முடிக்க வேண்டும்.

ஐப்பசிமாத அஷ்டமி காந்த-ஈஸ்வரன்-வணங்கினால் 1000 யாகபலன். 

ஐப்பசி சிறப்பு- அன்னாபிஷேகம்! உயிர்கள் உயிர்களுக்குப் பல தான தருமங்களைச் செய்யச் சொல்லியிருந்தாலும் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றே சாஸ்திரங்கள் பகர்கின்றன. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார் என இலக்கியங்களும் போற்றும் உயர்ந்த நிலையில் உள்ள அந்த அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.

அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் என்கிறது சாமவேதம். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதி அந்தமில்லா இறைவன் அன்னத்தின் வடிவிலும் இருக்கிறார் என்பதே இதன் பொருள். சிவசக்தி ஐக்கியமாக கருதப்படும் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் தம்பதியினர் ஒற்றுமை ஓங்கும். குலம் தழைக்கும். பௌர்ணமி தினத்தன்று சிவபெருமான் சந்திரனின் பதினாரு கலைகளுடன் கூடிய பூரண அம்சமாக ஆழ்ந்த யோக நிலையில் ஆனந்தமாக இருப்பார். அதனால்தான் மிக உயர்ந்த மகா அபிஷேகமெனப்படும் சுத்த அன்னத்தால் செய்யப்படும் அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமியில் நட்த்தப்படுகின்றது. அன்னாபிஷேகத்தில் இருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமாக கருத வேண்டும். அந்த சிவதரிசனம் பலகோடி சிவதரிசனத்திற்கு சமமானது.

ஐப்பசி காலையில் பெருமானின் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் லிங்கத் திருமேனி மூவதும் மறையும்படி சுத்த அன்னம் சாத்தப்படுகின்றது. இரண்டாம் காலம்-மாலை 1800 மணியிலிருந்து இரவு 2030 வரை அன்னாபிஷேக மூர்த்தியாக இருந்து இரண்டாம் கால பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்படும். பாணப்பகுதியில் உள்ள அன்னம் வெப்பம் மிகுந்து இருக்கும் அதனால் அதை திருக்குளத்திலோ கடலிலோ அல்லது நீர் நிலைகளிலோ விட்டுவிடுவர். பாணப் பகுதி தவிர மற்றப் பகுதியில் உள்ள அன்னம் தயிருடன் சேர்த்து மக்களுக்கு பிரசதமாக வழங்கப்படும்.

சிவன் பிம்ப ரூபமாக இருக்கிறார். உயிர்கள் அனைத்தும் அவரது பிரதி பிம்ப ரூபம். உயிர்கள் உணவு உண்டு பிரதி பிம்பத்தை திருப்தி செய்கின்றது. பிம்பம் திருப்தியானால் மட்டுமே பிரதி பிம்பத்தால் இயங்க முடியும். எனவே பிம்பத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து திருப்தி படுத்த முயல்கின்றோம். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாரக இருக்கும் பருவகாலம் ஐப்பசி. அப்போது அந்த புதிய நெல்லைக் குத்தி அந்த அரிசி கொண்டு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு

சுக்கிரவார விரதம்- முருகனுக்கு உகந்த சுக்கிரவார விரதம் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பக்தி சிரத்தையுடன் தொடர வேண்டும். குடும்பத்தில் நலம் நிலைக்கும். செல்வம் பெருகும். இந்த விரதம் விநாயகர், உமாதேவி, முருகன் என மூவருக்கும் உகந்தது.

சஷ்டி விரதம்- ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வளர்பிறையில் பிரதமை திதி முதல் சஷ்டிதிதி வரை உள்ள ஆறு நாட்களும் சஷ்டி விழா விற்குரியது. சஷ்டி திதியில் வரும் விரதம் என்பதால் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருக்க முடியாதவர்காள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் அருந்தி ஆறாவது நாளன்று பூரண விரதம் இருக்க வேண்டும். 

வளர்பிறை தினத்தன்று வைகறையில் துயிலெழுந்து ஆற்றின் எதிர்முகமாக நின்று முக்கோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரத்தின் நடுவில் ஓம் என்று எழுதி முருகனை சிந்தையில் நிருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும். கிணறு குளத்திலும் இது போன்றே குளிக்க வேண்டும். பின்னர் வழ்க்கமான பூஜைகளை முடித்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். முருகனுக்கு உகந்த துதிகளைச் சொல்ல வேண்டும். தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறு ஆண்டுகள் இருந்தால் நல்லது. ஒரு வேளை அரிசி உணவு எடுத்துக் கொண்டு காலையும் இரவும் பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். சஷ்டியில் உபவாசம் இருந்தால் கருப்பையில் கரு உண்டாகும்- ஐப்பசி வளார்பிறை சஷ்டியில் ஷண்முகனை நினைந்து விரதம்- உப்பு இல்லாத உணவை உட்கொண்டு நியமத்துடன் கடைபிடித்தால் கந்தனின் அருளால் சந்தான பாக்யம் கிடைக்கும். சர்வமங்களம் சேரும். சட்டியில் இருந்தால் அகப்பையில் தானே வரும் என்பது பழமொழி- விரதத்தின் பலன் அகமாகிய ஆன்மாவில் பதியும். அது பிறவிகள் பல எடுக்கும்போது புண்ணியமாக வளரும் என்பதே சூட்சுமம்.

கேதார கௌரி விரதம்- விகட நாட்டியத்தைக் கண்ட தெய்வீக தம்பதி சிவபார்வதியினரை அங்கிருந்த அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டுருவம் எடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்தார். கோபம் கொண்ட பார்வதியை, பிருங்கி முனி வீடு பேற்றை மட்டும் விரும்புகின்றார். பூவுலகில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் யாவும் இல்லை. ஆகையால் இகவாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கவில்லை என்று ஈசன் சமாதானம் கூறியும் அதனை ஏற்காமல் தன் சக்தியை பிருங்கியிடமிருந்து எடுத்துவிட்டார். வலுவிழந்து தள்ளாடிய முனிவருக்கு கோல் ஒன்றைக் கொடுத்து அவர் தடுமாறாமல் நிற்கச் செய்ய பிருங்கி சிவனை வணங்கி சென்றார்.

தன் கணவர் தன்னை மதிக்க வில்லை என்று கூறி உமை கோபங்கொண்டு சிவனைப் பிரிந்தார். பூவுலகில் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து ஈசனை மீண்டும் அடைய கௌதம முனிவரின் ஆலோசனைப் படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டார். 21 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஈசனுடன் சேர்ந்தார். ஈசன் தன்னில் பாதியை பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி. கேதாரம் எனும் சேத்திரத்தில் பார்வதி விரதம் இருந்ததால் கேதார கௌரி விரதம் என்றானது.

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் கேதார விரதம் அனுஷ்டிக்கப் படுகின்றது. அந்நாளே தீபாவளித் திருநாள். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசைப்படுத்தும் நாள் தீபாவளி.

தீப ஒளித் திருநாள்! -ஐப்பசி திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் நந்தி தேவருக்கு விசேஷமானது. மற்றும் யமனுக்குரிய நாள். அன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை பிரதோஷ வழிபாட்டை செய்து வழிபட்டு யம தீபம் ஏற்றி உயரமான இடத்தில் வைத்து எள்ளும் நீரும் அதன் பக்கத்தில் வைத்தால் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது ஐதீகம். எமதீபம்- பெரிய வட்டமான மண் விளக்கில் நல்லெண்ணெய் மட்டும் ஊற்றி பருத்தி துணியால் ஆன திரி போட்டு வடக்கு அல்லது மேற்கு நோக்கி வைத்து விட்டு பின் விளக்கேற்றவும் அருகில் எள், நீர் வைக்கவும். எமனே, தர்ம ராஜனே, எங்கள் முன்னோர்களுக்கு எங்களை அறியாமல் ஏதாவது குறை வைத்திருந்தால் அதை நீக்கி அவர்களுக்கு நிம்மதி கிட்டச் செய்வீராக என வணங்கி வழிபடவும். மேலும் தீயவை அழிந்து நல்லவை நிலவுவதற்கு அடையாளமாக விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றோம்.

அமாவாசைக்கு முதல் நாள் ஐப்பசி- நரக சதுர்தசி தீபாவளியாக கேரளம், தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றது. பூமாதேவியின் மகன் நரகாசூரனை சத்யமாவின் துணையுடன் கிருஷ்ணர் வதம் செய்த நாள். மகாவிஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்வுடன் பாதாளலோகம் செல்லுமுன் பலி ஒர் வரம் கேட்டான். தங்களால் ஆட்கொள்ளப்பட்ட இந்நாளை மக்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, தீபமேற்றி மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதே அது. அதன்படியும் ஐப்பசி சதுர்த்தசி அன்று தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

நீரில்-கங்கை, எண்ணெய்யில்-லட்சுமி, அரப்பில்-சரஸ்வதி, ஆடைகளில் விஷ்ணு ஆகியோர் எழுந்து அருளுவதால் அவைகளை உபயோகிக்கின்றோம் நரகன் என்ற அசுரன் அழிந்து உலகிற்கு ஒளி கிடைத்தநாள் என்பதால் தீபங்களை ஏற்றி வழிபடுதலும் உண்டு.

ஆந்திரம் மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களில் முதல்நாள் தன திரயோதசியும், 2ம் நாள் நரக சதுர்த்தசியாகவும், 3ம் நாள் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடப்படுகின்றது.

மஹாராஷ்டிராவில் துவாதசியன்று ஆரம்பித்து ஐந்து நாள் விழாவாக கொண்டாடப் படுகின்றது. 1ம்நாள் பசுவிற்கும் கன்றுவிற்கும் பூஜை. 2ம் நாள் தந்தேரஸ்- தன் திரயோதசி-லட்சுமிக்கு உகந்த நாள்- பொன் பொருள் வாங்க ஆர்வம். 3ம் நாள் நரக சதுர்த்தசி- கிருஷ்ணருக்கு பூஜை. 4ம் நாள் லட்சுமி பூஜை. 5ம் நாள் பாலி பிரதிபாதா- வாமன ரூபத்தில் விஷ்ணு மகாபலிச் சக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தும்போது இந்த நாளில் பூலோகத்தில் மக்களின் சந்தோஷங்களைப் பார்த்து செல்வதாக ஐதீகம்.

குஜராத்தில் கிருஷ்ணபட்ச துவாதசியன்று ஆரம்பித்து ஆறு நாள் விழாவாக கொண்டாடப்படுகின்றது. 1ம்நாள் பசுவிற்கும் கன்றுவிற்கும் பூஜை- வாக்பரஸ். 2ம் நாள் தந்தேரஸ்- தன் திரயோதசி-லட்சுமிக்கு உகந்த நாள்- பொன் பொருள் வாங்க ஆர்வம். 3ம் நாள் லட்சுமி பூஜை. இந்த நாளே இங்கு தீபாவளி. லட்சுமியுடன் குபேரனுக்கும் பூஜை. விளக்கு ஏறி லட்சுமியை வரவேற்கின்றனர். 4ம் நாள் காளி சௌடாஸ் விளக்கு ஏற்றி அலங்காரம். 5ம் நாள் போர்டுவர்ஷ்- குஜராத்திகளின் புது வருடம் தொடக்கம். இதை லாப்பன்சம் என்பர். 6ம் நாள் பாயி தூஜ்- சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்தல்- யமனின் சகோதரி யமுனை தன் சகோதரனுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்த நாள்.

மேற்கு வங்காளம்- தீபாவளி கொண்டாட்டங்கள் காளி பூஜா எனப்படும். திரியோதசி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. நிஷாபூஜா, ஷியாமாபூஜா எனப்படும். மகா காளி அரக்கர்களோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள். மண்ணால் ஆன காளி உருவத்திற்கு அரக்கு வளையல், சங்கு வளையல், குங்குமம் வைத்து புத்தாடை உடுத்தி இனிப்பு வழங்கி வழிபட்டு இறுதிநாள் கடலில் கரைக்கின்றனர்.

கொங்கன், கோவா- நரகாசூரன் மடிந்த நாளே இங்கு தீபாவளி. நரக சதுர்தசிக்கு முதல் நாள் காகித்தாலும் சணலாலும் நரகாசூரன் உருவம் செய்து மறுநாள் காலை பட்டாசுகள் மூலம் அவற்றை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்து இனிப்பு சாப்பிட்டு எண்ணெய் ஸ்நானம் செய்தால் தீங்கு நீங்குவதாக ஐதீகம். அன்று வீடுகளில் சிறப்பு பூஜை.

உத்ரபிரதேசம், ராஜஸ்தான், உத்ராஞ்சல், மத்தியபிரதேசம், ஆகிய மாநிலங்களில் அமாவாசையை ஒட்டிய நாள் மாலை நேரத்தில் தொடங்குகிறது தீபாவளி. ராம- ராவண யுத்தம் முடிந்து ராமர் வெற்றி வீரராக அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது. வரணாசியில் அன்னபூரணிக்கு லட்டு தேர் செய்து பூஜிக்கின்றனர்.

பீகார், இமாசலப் பிரதேசம்- பசுவிற்கும் கன்றுவுக்கும் பூஜை செய்கின்றனர். தீபாவளிக்கு மறுநாள் பாயிதூஜ் எனப்படும் சகோதரப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

கங்கோத்ரி, யமுனோத்ரியில் முதல்நாள் தீபாவளி. 2ம் நாள் யமதுவிதியை பண்டிகை. 3ம் நாள் தேவியை தாய் வீடிற்கு அனுப்பும் பண்டிகை. யமுனோத்ரி அம்மனை கடுமையான குளிர்காலத்தில் கர்சாலி மலைகிராமத்திற்கு எடுத்துச் சென்று உனியால் என்ற வம்சத்தினர் பூஜை செய்து வருவர்.

&&&&&

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

&&&&&

புரட்டாசி மாத விரதங்கள்!

புரட்டாசி பௌர்ணமி- புரட்டாசியில் மரகத லிங்கம் வழிபாடு சிறப்பு ஹோமத்திற்கு ஊபயோகித்த மிஞ்சிய சாதத்தை மட்டும் உண்டு சிவபூஜை செய்ய வேண்டும். சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் காலம் புரட்டாசி. கன்னி ராசிக்கு அதிபதி புதன். அதனின் அதி தேவதை பெருமாள், புதன் நட்புக் கிரகம் சனி. அதனால்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை பூஜித்து விரதமிருந்து வணங்குதல் மிகச் சிறப்பு.

புரட்டாசிமாத அஷ்டமி யேஷ்மா-திரியம்பகேஷ்வர்-வணங்கினால் 7தலைமுறை பலன்.

த்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.

சதுர்த்தி விரதம்- பிள்ளையார் பிறந்த இந்ததிதி விநாயகர் பூஜைக்குரிய நாள். சுக்லபட்ச சதுர்த்தியன்று விரதமிருந்து தொடர்ந்து ஒருவருடம் செய்யவும். பால் ஆகாரம் சாப்பிடவும். எள் தானம் செய்து எள்சாதம் சாப்பிடவும். புரட்டாசி சுக்ல சதுர்த்தியன்று செய்யும் பூஜை சிவா-க்ஷேமம் என்றும், மாசி சுக்ல சதுர்த்தியில் செய்யும் பூஜை சாந்தா என்றும், செவ்வாய்கிழமையுடன் இனைந்துவரும் சுக்ல சதுர்த்தியை சுகா என்றும் சதுர்த்தி விரதம் மூன்று வகைப்படும்.

புரட்டாசி மாத சிறப்புகள்- 1.சூரியன் கன்னி ராசியில் நுழையும் காலத்தில் எமதர்மராஜன் பித்ரு லோக உயிர்களை அவர்தம் சொந்தங்களை காண சூட்சும உருவில் பூமிக்கு அனுப்புகின்றார். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இந்த நாட்களில் உரிய முறையில் நீத்தார் கடன்களை செய்வது நற்பலன்கள் தரும். வறியவர்க்கு அன்னதானம், பசுக்களுக்கு உணவு அளித்தல் சிறப்பு. அன்னதானம் செய்வோர் அன்னதானம் முடிந்தபிறகே உணவருந்த வேண்டும்.

பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் எனப்பெயர். நமக்கு இந்த உடலைக் கொடுத்த தாய், தந்தையர் தங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நம்மை ஆளாக்கியதற்குப் பிராயச்சித்தமாக செய்ய வேண்டிய முறைகள் நிறைந்தது மஹாளய தர்ப்பணம். இந்த பதினைந்து தினங்களும் அவர்கள் இங்கே தங்கியிருப்பதாக ஐதீகம். அவர்களின் பசியாற அன்னமாகவோ-திதி அல்லது எள்ளும், தண்ணீருமாக-தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் திருப்தி அடைந்து நமக்கு அருளாசி வழங்குவர். தாய் தந்தையர் இறந்த தினத்தில் திதி வழங்காதவர் கூட இந்த மஹாளயத்தை செய்வது சிறப்பு.

முறைப்படி செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைகாய், தட்சிணை போன்றவற்றை கொடுத்தாவது பித்ருக்களைத் திருப்தி செய்யலாம். சிறிது செய்தாலும் மனப்பூர்வமாக செய்ய வேண்டும். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யாயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்ச்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் இந்த மஹாளயத்தை முறைப்படிச் செய்து புண்ணியம் அடைந்தவர்கள்.

இனம் புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடை, குழப்பம், பெற்றோர்களை அவர்களது காலத்தில் கவனிக்காமல் விட்ட குறை ஆகியவைகளுக்கு ஒர் சிறந்த பரிகாரம் மஹாளயபட்ச நாளில் பித்ருபூஜை செய்வது.

மஹாளயபட்ச தர்ப்பண பலன்கள்-யஜுர் வேத ஆபஸ்தம்ப தர்பணம்.

பிரதமை: செல்வம்பெருகும் (தனலாபம்)
துவிதியை: வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
திருதியை: திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன் அமையும்)
சதுர்த்தி: பகைவிலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
சஷ்டி: தெய்வீகத்தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
சப்தமி: மேலுலகோர் ஆசி
அஷ்டமி: நல்லறிவு வளரும்
நவமி: ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி: தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி: வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறப்படைவர்
துவாதசி: தங்கம், வைர ஆபரணங்கல் சேரும்
திரியோதசி நல்ல குழைந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்டஆயுள் கிட்டும்
சதுர்த்தசி: முழுமையான இல்லறம்(கணவன்-மனைவி ஒற்றுமை)
அமாவாசை மூதாதையர்,ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

2. மஹாளய அமாவாசை- பித்ருக்கள் காரியம் செய்யாமலிருப்பதே வீட்டில் கவலை நிம்மதியில்லாமை கவனச் சிதறல் போன்றவைகளுக்கு காரணம், மஹாளய அமாவாசையன்று ஒரு நீர் நிலைக்குச் சென்/று நீரில் மூழ்கி எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு விடவும். வீட்டில் தயாரித்த பொருளை வறியவர்களுக்கு தானாமாக வழங்கிய பின்னர் குடும்பத்தினர் உண்ண வேண்டும். முன்னோர் பசி தாகம் தீர்ந்து ஆசீர்வதிப்பர்,

3.கேதார விரதம்- புரட்டாசிமாத சுக்ல பட்ச தசமியில் ஆரம்பித்து ஐப்பசி மாத அமாவாசையில் முடியும் 21 நாட்கள் விரதம் மேற்கொண்டு தூய்மையுடன் மண்ணாலான லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிரசாதங்கள் ஒருவேளை மட்டும் உண்டு விரதம் இருக்கவும். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத உணவினை எடுத்துக் கொள்ளலாம். நிவேதனங்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அப்பம், வடை, புளியோதரை, பாயாசம், பொங்கல் போன்ற பிரசாதங்களும் செய்யலாம். ஒவ்வொரு நாளும் மஞ்சள் தடவிய சரடு ஒன்றில் 21 முடிச்சுகள் போட்டு இறுதி நாளன்று புஜங்களுக்கு கீழ் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் கட்டலாம். நினைத்த காரியம் கைகூடும். திருமகள், கலைமகள், மலைமகள் அருள் கிட்டும். ஆனந்தம் பிறக்கும்.

கேதார கௌரி விரதம்.- விகட நாட்டியத்தைக் கண்ட தெய்வீக தம்பதி சிவபார்வதியினரை அங்கிருந்த அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டுருவம் எடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்தார். கோபம் கொண்ட பார்வதியை, பிருங்கி முனி வீடு பேற்றை மட்டும் விரும்புகின்றார். பூவுலகில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் யாவும் இல்லை. ஆகையால் இகவாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கவில்லை என்று ஈசன் சமாதானம் கூறியும் அதனை ஏற்காமல் தன் சக்தியை பிருங்கியிடமிருந்து எடுத்துவிட்டார். வலுவிழந்து தள்ளாடிய முனிவருக்கு கோல் ஒன்றைக் கொடுத்து அவர் தடுமாறாமல் நிற்கச் செய்ய பிருங்கி சிவனை வணங்கி சென்றார்.எட்டுக்குடி இறைவி ஆனந்தவல்லிக்கு கேதாரீஸ்வர விரதத்தின் பெருமையை விளக்கிய திருத்தலம் எட்டுக்குடி.

தன் கணவர் தன்னை மதிக்க வில்லை என்று கூறி உமை கோபங்கொண்டு சிவனைப் பிரிந்தார். பூவுலகில் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து ஈசனை மீண்டும் அடைய கௌதம முனிவரின் ஆலோசனைப் படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டார். 21 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஈசனுடன் சேர்ந்தார். ஈசன் தன்னில் பாதியை பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி. கேதாரம் எனும் சேத்திரத்தில் பார்வதி விரதம் இருந்ததால் கேதார கௌரி விரதம் என்றானது.

4.புரட்டாசி சனிக்கிழமை- பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஏழ்மை நிலையிலிருந்தாலும் நீதியும் நாணயமும் தவறாமல் இருந்து வந்தார். அவருக்கு ஏழரை சனி பீடிக்கும் காலம் வந்தபோது பெருமாள் அவரை ஏழரை ஆண்டுகளுக்குப் பதிலாக ஏழரை நிமிடங்கள் பீடிக்கச் சொன்னார். கன்னி ராசியின் அதிபதி புதனின் நட்புக் கிரகமான சனிபகவானின் ஆதிக்கத்தை குறைக்க பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வழிபடுகின்றோம்.

5.வாமன ஏகாதசி- புரட்டாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி வாமன ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி எனப்படும். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் வாமன ஏகாதசியில் விரதமிருந்தால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும். மற்ற ஏகாதசி விரங்களைப் போலவே புரட்டாசி முழுவதும் சைவ உணவு உண்ண வேண்டும். ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவில் வெறும் பால் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கஞ்சி உண்டு விரதம் இருக்க வேண்டும். மோர் தயிர் சேர்த்தக் கூடாது. காபி, டீ இவைகளையும் தவிர்க்கவும். ஏகாதசி அன்று பெருமாளின் பெருமைகளைப் பாடி பஜனைகளில் ஈடுபடலாம். அடுத்த நாள காலையில் துவாதசியில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிக்கவும். இன்றைய உணவில் அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் கட்டாயம் சேர்க்க வேண்டும். லட்சுமி, மலைமகள், கலைமகள் ஆகியோரின் அருள் கிட்டும் விரதம் இது.

5.அஜா ஏகாதசி- புரட்டாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி. என்ன காரணம் எனத் தெரியாமல் வரும் துன்பங்கள், மனக்கிலேசம், பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு முன் ஜென்மத்து வினைப் பயன்களே காரணம். அவைகளை அதன் பாதகங்களைக் குறைக்கக்கூடிய சக்தி கொண்டது இந்த அஜா ஏகாதசி விரதம். அரிசந்திரன் நாட்டை இழந்து, மனைவியை விற்று, சுடுகாட்டில் பிணங்களை எரித்து வாழ்ந்ததின் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே என்பதை அறிந்த கௌதம முனிவர் அரிச்சந்திரனை இந்த அஜா ஏகாதசி விரதம் கடைபிடிக்கச் சொன்னார். அப்படியே 9 வருடங்கள் இந்த விரதத்தை கடைபிடித்த அரிசந்தந்திரன் தன் கஷ்டங்களை எல்லாம் தீர்ந்து தன் நாட்டையும் மனைவி மக்களையும் மீண்டு பெற்று நிம்மதி அடைந்தான். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவே இதனையும் கடைபிடிக்க வேண்டும். பெருமாள் தோத்திரங்களைச் சொல்லும்போது ‘என் முன் வினைப்பயனை அறுப்பாய் ஐயனே’ எனவும் வேண்டிக் கொள்ளவும்.

6.நவராத்திரி விரதம்- அன்னை சக்தி கடும் தவமிருந்து சண்ட முண்டர்களையும் ரக்த பீஜனையும், சும்ப நிசும்பர்களையும் தன் மூன்று அம்சங்களால் அழித்தாள். அன்னைக்குச் சக்தி கொடுத்த அனைத்து தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் எல்லாம் சக்தியை கொடுத்துவிட்டு பொம்மைபோல் நின்ற நிகழ்வைச் சித்தரிக்கும் விதமாகவே கொலு வைக்கும் பழக்கம் வந்தது. புரட்டசி சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. நவம்–புதுமையான, ராத்ரம்-மங்களம். வாழ்வில் பழைய வினைகளைப் போக்கி தற்போதைய செயல்களுக்கு ஏற்ப மங்களமான நன்மைகளைப் பெறுவதற்காக அம்பிகையை வழிபடும் அந்த இரவுகளே நவராத்திரி. தன்னை வணங்கிடும் பக்தர்களின் மனதில் இருந்து தாமஸ குணத்தினால் ஏற்படும் தீவினைகளை நீக்கும் இச்சா சக்தி துர்க்கை வடிவாக முதல் மூன்று நாட்களும், அடுத்த 3 நாட்கள் பொன்னும் பொருளும் ரஜோ குணத்தினள் கிரியா சக்தி மகாலட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் ஞானத்தின் திருவுருவமாக சாத்வீக ஞானசக்தி சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகின்றோம்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..

ஐம்பூதங்களின் ஒன்றான மண்ணால் ஆன பொம்மைகளை வைத்து என்னை பூஜித்தால் சகல சுகங்களையும் சௌபாக்யங்களையும் அருள்வேன் என்ற அம்பிகையின் வாக்கிற்கிணங்க கொலுவைத்து படையலிட்டு நிவேதனம் செய்த பொருளை கொலுவிற்கு வந்தவர்களுக்கு வழங்குகின்றோம்.
1-ம்படி- ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்
2-ம்படி- இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு
3-ம்படி- மூவறிவுடைய கரையான், எறும்பு போன்ற பொம்மைகள்
4-ம்படி- நான்கு அறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள்
5-ம்படி- ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள்
6-ம்படி- ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள்
7-ம்படி- மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின், மகான்கள் பொம்மைகள்.
8-ம்படி- நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், தேவர்கள். பொம்மைகள்.
9-ம்படி- பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளின் பொம்மைகள்

கலசம் வைத்து வழிபடலாம். காலையில் சர்க்கரைப் பொங்கல், பருப்புப் பாயாசம், பால் பாயாசம் அகியவற்றில் ஒன்றை நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் சுண்டல் நிவேதனம் மிகவும் முக்கியம். கொண்டைக் கடலை, தட்டைப் பயிறு / காராமணி, பச்சைப் பயிறு, பட்டாணி. வேர்க்கடலை, கடலைப் பருப்பு போன்றவைகளை நளுக்கொன்றாக நிவேதனம் செய்து கொலுவிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவற்றுடன் நிவேதனப் பொருளையும் கொடுக்கவும். பாட்டு, நடனம் தெரிந்தவர்கள் அன்னை முன் நிகழ்த்தலாம். விரதம் இருப்பவர்கள் ஒன்பது நாளும் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். பூஜை முடிந்தபின்னரே வீட்டில் அனைவரும் உணவு அருந்த வேண்டும். சரஸ்வது பூஜையன்று நிவேதனப் பொருள் மட்டுமின்றி இரவு பால் நிவேதனம் செய்ய வேண்டும். மூன்று சக்திகளையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து பூஜை முடித்தால் எல்லா நன்மைகளும் ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

நவராத்ரி ஆறாவது/ ஏழாவது நாள் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்வது முறை. இது தேவியின் அவதார நாள். திருவோணம் நடசத்திரம் உச்சமாகும்போது நிறைவு பெறும் அன்றே விஜயதசமி கொண்டாடப்படும்.

சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை மகிசாசூரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் விஜயதசமி. நவராத்திரியில் வரும் தசமியே விஜயதசமி. இந்நாளில் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களும் வெற்றியுடன் முடியும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது வித்யாப்யாசம் எனும் எழுத்தறிவிக்கும் சடங்கினை செய்யலாம்.

வசதி வாய்பினைப் பொருத்து கீழ்கண்டவாறு வழிபாட்டு பொருட்களை உபயோகிப்பது சிறப்பு:
முதல் நாள்- மல்லிகைப்பூ, வில்வம் தளம், வாழைப்பழம், வெண்பொங்கல்- நிவேதனம், தோடி ராகத்தில் பாட்டு- பலன் வறுமைநீங்கும்.
இரண்டாம் நாள்- முல்லைப்பூ, மரு தளம், மாம்பழம், புளிசாதம்- நிவேதனம், கல்யாணி ராகத்தில் பாட்டு- பலன் தனம் தான்யம் பெருகும்.
மூன்றாம் நாள்- சம்பங்கிப்பூ, துளசி தளம், பலாபழம், சர்க்கரைப் பொங்கல்- நிவேதனம், காம்போதி ராகத்தில் பாட்டு- பலன் பகை விலகும்.
நான்காம் நாள்- ஜாதிமல்லிப்பூ, கதிர்பச்சை தளம், கொய்யாப் பழம், கதம்பசாதம்- நிவேதனம், பைரவி ராகத்தில் பாட்டு- பலன் கல்வி பெருகும்.
ஐந்தாம் நாள்- பாரிஜாதப்பூ, விபூதி தளம், மாதுளை பழம், தயிர்சாதம்- நிவேதனம், பந்துவராளி ராகத்தில் பாட்டு- பலன் துன்பம் அகலும்.
ஆறாம் நாள்- செம்பருத்திப்பூ, சந்தன இலை, நாரத்தைப் பழம், தேங்காய் சாதம்- நிவேதனம், நீலாம்பரி ராகத்தில் பாட்டு- பலன் செல்வம் கிட்டும்.
ஏழாம் நாள்- தாழம்பூ, தும்பை இலை, பேரிட்சை பழம், எலுமிச்சை சாதம்- நிவேதனம், பிலஹரி ராகத்தில் பாட்டு- பலன் சுகம் உண்டாகும்.
எட்டாம் நாள்- ரோஜாப்பூ, பன்னீர் இலை, திராட்சைப் பழம், பால்சாதம்- நிவேதனம், புன்னகவராளி ராகத்தில் பாட்டு- பலன்- அச்சம் நீங்கும்
ஒன்பதாம் நாள்- தாமரைப்பூ, மரிக்கொழுந்து இலை, நாவல் பழம், அக்கார வடிசல்- நிவேதனம், வசந்த ராகத்தில் பாட்டு- பலன் நல்ல எண்ணங்கள் நிறைவேறும்.

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 02:36

ஆவணி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

&&&&&

ஆவணி மாத விரதங்கள்!

ஆவணி பௌர்ணமி- ஆவணியில் நீல லிங்கம் வழிபாடு சிறப்பு, பகலில் உபவாசம் இருந்து சிவபூஜை செய்யவேண்டும்.

ஆவணிமாத அஷ்டமி உமாதேவி-சர்வன்-வணங்கினால் 8மாத அஷ்டமி பூஜாபலன்.

கோகுலாஷ்டமி விரதம்!- அஷ்டமி, நவமி திதிகள் நல்லதல்ல என்று ஒதுக்கி வைப்பதால், அந்த திதிகளும் நன்மை தருபவை என்று புரியவைக்க கோகுலாஷ்டமி- கிருஷ்ணன் பிறந்தநாள், ராமநவமி-ராமர் பிறந்த நாள் போன்ற ஜெயந்தி தினங்கள் அழைக்கப் படுகின்றன. கிருஷ்ணரது அவதாரம் 5222 ஆண்டுகளுக்கு முன்னால் ஆவணி மாதத்தில் தேய்பிறை பகுளஅஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப லக்னத்தில் நடைபெற்றுள்ளது. தன்னை நம்பியவர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கிருஷ்ணர் தன்னை கடவுள் என்றே அறிவித்து அவதாரம் செய்துள்ளார். தன்னை வணங்குபவருக்கு மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வையும் அளித்துள்ளார். அவரது எட்டு வடிவங்கள் பிரபலமானவை.
1.சந்தான கோபாலன். யசோதையின் மடியில் குழந்தைக் கண்ணன் அமர்ந்திருப்பது -வழிபடின் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம்.
2.வெண்ணெய்பானை அருகே அமர்ந்திருக்கும் கண்ணன். மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்களை அகற்றுவதன் மூலம் நல்லறிவை ஏற்படுத்தி மன நிம்மதி சுக வாழ்வு ஏற்படும்.
3.காளிங்கன் தலைமீது நடனமாடும் கோலம்- பகைவர்கள் தொல்லை தீரும்,
4.கோவர்த்தன கிரிதாரி-கோவர்த்தன மலையை குடையாக பிடித்திருக்கும் கோலம்- நெருக்கமானவர்களிடம் கூட பகிர முடியாத பிரச்சனைகள், கடன் தொல்லைகள் பனிபோல் விலகும்.
5.ராதாகிருஷ்ணர்-ராதை அருகில் புல்லாங்குழல் ஊதியபடி நிற்கும் மோகன கோலம். திருமணத்தடை நீங்கும் இல்வாழ்வில் நிம்மதி கிட்டும்.
6.முரளிதரன்.ருக்மணி சத்யபாமாவுடன் நிற்கும் கோலம். வாழ்வில் துன்பம் வராது
7.மதன கோபாலன்.அஷ்டபுஜ கண்ணன். தீமைகளையும் தீய சக்திகளையும் தமது எட்டு கரத்தால் தூள் தூளாக்குவார்.
8.பார்த்தசாரதிபெருமாள்- குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு நல்லுபதேசம் செய்த கோலம். வாழ்வில் எந்த தடை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியமும் அறிவாற்றலும் வெற்றியும் கிட்டும்.

கண்ணன் பாதம் வரைவது ஏன்! ஆயர்பாடியில் வெண்ணெய் திருடுவது யார் என்பதைக் கண்டுபிடிக்க யசோதையும் கோபியரும் ஒன்று சேர்ந்து அவரவர் வீட்டு வாசலில் அரிசிமாவை போட்டு வைத்தனர். அதில் கால் பதித்து சென்றால் கண்டு பிடிக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அனைத்து வீடுகளிலும் கால்தடம் அரிசி மாவுடன் இருந்தது. அவர்கள் வீடு செல்வ செழிப்புடன் இருந்தது. கண்ணன் மதுராபுரியில் இருந்தபோது அவரது வருகைக்காக ஏங்கிய கோபியர்கள் அவரிடம் முறையிட நீங்கள் முன்பு என்னை கண்டுபிடிக்க செய்த அரிசி மாவினால் என் பாதங்களை வரைந்தால் நான் சூட்சம வடிவில் உங்கள் வீட்டிற்கு வருவேன் என்றார். இந்த முறையைப் பின்பற்றியே கண்ணன் பாதம் அரிசி மாவில் வரைகின்றோம்

அவரது பிறந்த நாளன்று கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், திரட்டுப்பால், மற்றும் உப்பு பட்சணங்களை நிவேதனம் செய்து வழிபட்டால் அவர்களுக்கு குழைந்தைகளால் எந்தக் கவலையும் மேலும் புத்திர சோகமும் இருக்க கூடாது என்று சாந்தீபனி முனிவர் வரம் கேட்டு பெற்றார்.

பூஜை செய்வது எப்படி!- கண்ணன் நடுநிசியில் பிறந்தவர். அந்த நேரத்தில் வழிபடும் வழக்கம் நம்மிடையே இல்லையாதலால் மாலை முதிரும் நேரம் பூஜை செய்ய சிறப்பானது. கோகுலாஷ்டமியன்று பாலகிருஷ்ணன் வடிவத்தில் வணங்க வேண்டும். எந்த படமாக இருந்தாலும் பாலகிருஷ்ணராக சங்கல்பம் செய்து கொண்டு மலர் மாலை பூக்கள் அணிவிக்கவும். வீட்டைச் சுற்றி அரிசி மாவினால் கண்ணனின் பாதங்களை வரைய வேண்டும். பொதுவாக வாசலில் இருந்து பூஜை அறைவரை வரைந்தால் போதும். பூஜை செய்யும் இடத்தில் நீர் கொண்டு சுத்தம் செய்து கோலம் போடவும். ஓர் இலை போட்டு அதன்மேல் செய்த பட்சணங்கள், நாவல் பழங்கள் இவற்றை வைக்க வேண்டும். கிருஷ்ணாட்சகம் சொல்லலாம். தெரிந்த கீர்த்தனைகள் பாடலாம். பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டவும் இயன்றவர்கள் விரதம் இருக்கவும், காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் மாலயில் நிவேதனப் பொருட்களை உண்ண வேண்டும். மாலை வீட்டில் பஜனை செய்யலாம். நிவேதனப் பொருட்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டி அனைவருக்கும் கொடுக்கவும்.

ஆவணி சதுர்த்தி விரதம்- விநாயகர் சதுர்த்தி விரதம்- பார்வதிதேவி தான் குளிக்கும் வாசனைப் பொடிகளால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்த நாள் ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில். அந்த நாளே பிள்ளையார் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுகின்றது. பிள்ளையாரை அலங்காரம் செய்வது என்பது அவரவர் வழக்கப்படி என்பது இப்பூஜையின் சிறப்பு.

நைவேத்தியப் பொருள்கள் யானைக்கு பிடித்தமான அரிசி வெல்லம் கொண்டு தயாரித்த கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள் என வைத்து வழிபடலாம். வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி பூஜை அறையில் மாகோலம் போட்டு புதிய பிள்ளையாரை அங்கு வைத்து அலங்கரித்து துதிகள் பாடி தீப ஆராதணை காட்டி வழிபடவும். மாலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டு சந்திரனைப் பார்க்க வேண்டும். பிறகு பழ ஆகாரங்கள் எடுத்துக்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளவும்.

&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 02:26

ஆடி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

&&&&&

ஆடி மாத விரதங்கள்!

ஆடி பௌர்ணமி- ஆடிமாதம் முத்து லிங்கம் வழிபாடு சிறப்பு, ஒருவேளை மட்டும் உணவூண்டு சிவ பூஜை செய்தல். கடுந்தவமிருந்து அன்னை ஈசனை அடைந்த நாள். சங்கரன் கோவில் ஆடித்தபசு விழா சிறப்பானது. விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு மனதுக்கேற்ற மணாளன் கிடைப்பர். கல்யாணமானவர்களுக்கு சீரான இல்வாழ்வு அமையும்.

ஆடிமாத அஷ்டமி மணோன்மணி-ருத்திரன்-வணங்கினால் இராஜசூய யாகபலன்.

ஆடிமாத சிறப்புகள்-சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் ஆடிமாதம். கிராமங்கள், நகரங்களின் கோவில்களில் உற்சவங்கள், விசேஷங்கள் அதிக அளவில் நடக்க இருப்பதால் அதில் மக்கள் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு மற்ற காரியங்களை நிறுத்தி வைத்தனர் முன்னோர்கள். ஆடிமாதம் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மாதம். ஆடியில் தொடங்கும் தட்சிணாயணக் காலம் தேவர்களுக்கு மாலைக் காலமாகும். அது பூவுலகிற்கு மழைக் காலம். பருவம் மாறி மழை பெய்வதால் மழைக் காலத்தில் வரும் நோய்கள் மக்களை வருத்தமலிருக்க அம்மன் வழிபாடு ஏற்படுத்தினர். வேம்பு, மற்றும் மஞ்சளை அந்த நோய்கள் நீங்க கிருமி நாசினியாக பயன்படுத்தினர்.

ஆடிச் செவ்வாய்- ஆடிச் செவ்வாயில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து மஞ்சள் பூசி நீராடவேண்டும். மஞ்சளுடன் வேப்பிலை சேர்த்தும் நீராடுவது மேலும் நலம் பயக்கும். விரதமிருக்க குளித்து நெற்றிக்கு இட்டு பாலைத்தவிர எதுவும் அருந்தாமல் இருந்து மாலை நேரத்தில் உப்பு இல்லாத கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு நிவேதன்ம் செய்து பெண்கள் மட்டும் உண்ணுவது மரபாகும். விரதத்தை அனுசரிப்பவர்களுக்கு கணவனின் மாறாத அன்பு கிட்டும். மழைக்கால நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

ஆடி வெள்ளி- சுக்கிரவாரம் எனப்படும் இந்நாளில் அவரது ஆராதனைக்குரிய அம்மனை வழிபடுதல் சிறப்பு. சுமங்கலிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விளக்குபூஜை செய்து வழிபட்டால் சகல சௌபாக்யங்கள் பெறுவர். சத்து மிகுந்த கேழ்வரகு கூழ் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்து மக்களுக்கு வழங்குதல் மிகுந்த நன்மை தரும். பெண்களுக்கு வரும் ரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது கேப்பங்கூழ். அதனால் ஆடி வெள்ளியன்று மட்டுமின்றி ஆடி மாதம் முழுவதும் கேப்பங்கூழ் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு நிவேதனம் செய்து வினியோகிக்கப்படுவது சிறப்பு. பௌர்ணமிக்கு முன்னால் வரும் ஆடி வெள்ளிக்கிழமை வரங்கள் தரும் லட்சுமியை வழிபடும் வரலட்சுமி விரதத்திற்குரிய சிறப்பான நாளாகும். இந்த விரதம் கடை பிடிப்பவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக கணவன் மனதில் நீங்க இடம் பெற்றிருப்பர்.

வரலட்சுமி விரதம்!- ஆடி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் ஆடி வெள்ளிக்கிழமை வரங்கள் தரும் வரலட்சுமி விரதம் இருக்கச் சிறந்த நாள். பூஜை செய்வோருக்கும் அந்த வீட்டில் வசிப்போருக்கும் சகல சௌபாக்யங்களும், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக கணவனின் மனதில் நீங்கா இடமும் பெற்று வாழ்வர். லட்சுமி தூய்மையை விருப்புவளாதலால் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. வரலட்சுமி நோம்பிற்கு மூன்று நாட்கள் முன்பாகவே வீட்டை சுத்தப்படுத்தி துய்மையை பேண வேண்டும். பூஜைக்கு அம்மன் முகத்தை வைத்து பூஜிப்பது வழக்கமாதலால் பூஜைக்கு முந்தைய நாளில் வெள்ளியில் அம்மன் முகம் அல்லது சந்தனம் மற்றும் மஞ்சள் கொண்டு அம்மன் முகத்தை அழகாகச் செய்து கொள்ள வெண்டும். வீட்டில் உள்ள மூத்த சுமங்கலியின் ஆலோசனையின் பேரில் விரதத்தினை அனுசரித்தல் நலம். வீட்டில் தென் கிழக்கு மூலையில் பெரிய மணப்பலகை வைத்து ஒரு சிறிய மண்டபம் போல் அமைக்கவும். மாவிலை பூச்சரங்களை தோரணமாக கட்டவும். வெள்ளி / பித்தளை / வெண்கலத்தால் ஆன செம்பில் கல், துரும்பு இல்லாத பச்சரிசியை பாதியளவு நிரப்பி பின் அதில் பொன் நகை அல்லது நாணயங்கள் போட்டு நீரினால் நிரப்பி ஒரிரு ஏலம் போட்டு, சாதிபத்ரி, ஒன்றிரண்டு கிரம்பு, சிறிதளவு பச்சைக் கற்பூரம் போட்டு அம்மன் முகத்தை கலசத்தில் பதிக்கவும். பின்னர் கருகமணி, காதோலை, வளையல் ஆகிய வற்றை அம்மன்மேல் சார்த்தவும். (வரலட்சுமி பூஜைக்கென்றே மொத்தமாக கடைகளில் கிடைக்கும்) கலசத்தின் வாயை மாவிலைகளால் அலங்கரித்து கோணல் இல்லாத தேங்காயை எடுத்து மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைத்து கலசத்தின் வாயிற்பகுதியை மூடவும். சந்தனத்தாலும் மஞ்சளாலும் தயர் செய்த அம்மன் முகத்தை தேங்காயின் மீதும் பொருத்தலாம், கவசத்தின்மேலும் பொருத்தலாம். வெள்ளி முகம் வைத்திருப்பவர்கள் அதனை தேங்காய் அல்லது கலசத்தின் மீது சந்தனம் அப்பி பொருத்தலாம். தயாரான கலசத்தினை மணப்பலகையின் நடுவில் கோலமிட்டு வைக்கவும். அம்மன் முகதிற்கு மலர்மாலை மலர்கள் சூட்டவும். சுத்தமான பட்டு அல்லது புதிய வஸ்திரத்தினை அம்மனுக்கு சார்த்தவும் நோன்பு சரடு தேவைக்கேற்ப ஒற்றைப்படை எண்ணில் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கொழுக்கட்டை நிவேதனத்திற்குரிய அரிசிமாவை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பூஜைக்கு வந்துள்ள சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், இவற்றுடன் இயன்ற அளவிற்கு புடவை அல்லது ரவிக்கையைப் பிரசாத பொருட்களுடன் வைத்துக் கொடுப்பதற்கு வேண்டியதை தயார் செய்து கொள்ளவும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பூஜைக்கு முந்தைய நாளன்றே செய்து முடிக்கவும்.

பூஜையன்று அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து உள்ளத் தூய்மையுடன் உடலையும் தூய்மைப் படுத்த நீராடி மாற்று ஆடை அணிந்து பூஜை அறையில் கோலம்போட்டு, விளக்கேற்றி சாம்பிரானி தூபமிட தயார் செய்யவும். ஐந்து வகை ஆரத்தி தட்டுகளை தயார் செய்யவும். 1.மலர்கள் ஆரத்தி, 2.ஜவ்வரிசி முத்து ஆரத்தி, 3.மஞ்சள் கலந்த அரிசி அட்சதை ஆரத்தி, 4.பழவகைகள் கொண்ட பழ ஆரத்தி, 5.கோலம் போட்ட ரங்கோலி ஆரத்தி என தெரிந்த ஆரத்திகளை தயார் நிலையில் வைக்கவும். நிவேதனமாக கொழுக்கட்டை, பச்சைப்பயிறு கலந்த பொங்கல், பாயாசம் ஆகியவற்றில் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். 

பூஜைக்குரிய நல்ல நேரத்தில் முதல் நாள் தாயாரான மணைப் பலகையை அம்மன் முகத்துடன் அப்படியே மெல்ல தூக்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கவும். அதன்முன் தலை வாழை இலை ஒன்றை வைத்து அதில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி வெற்றிலை பாக்கு பழத்துடன் தயாராக இருக்கும் மஞ்சாள் சரடுகளை வைக்கவும். நல்ல நேரத்தில், ’மங்களங்கள் அருளும் மகாலட்சுமித் தாயே, எங்கள் இல்லம் செழித்திட அழைக்கின்றோம், அன்புடன் எழுந்தருள்வாய்! என அனைவரும் மனதார வேண்டிக்கொள்ளவும். தெரிந்தவரை தேவியை பற்றிய பாடல்கள் (லட்சுமி அஷ்டோத்திரம், மலாலட்சுமி அஷ்டகம், கனகதார ஸ்தோத்திரம்) பாடி மலர்கள் அருகம்புல்லால் அர்ச்சனை செய்யவும். இந்த பூஜையில் சுமங்கலிகள் கன்னிப் பெண்கள் கலந்து கொள்ளலாம். முத்த சுமங்கலிகள் மாகலட்சுமியின் பேரருளை விளக்கும் கதையைச் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு பூஜை முக்கியமோ அந்தளவிற்கு கதை கேட்பதும் முக்கியம். கதை முடிந்த பின்னரே ஆராத்தி காண்பிக்க வேண்டும்.

விரதக்கதை- பல்லாண்டுகளுக்குமுன் வாழ்ந்த பத்திரசிவன் என்ற அரசனின் மனைவி சுசந்திரிகா நல்ல குணங்களும் அழகும் அடக்கமும் நிரம்பியவள். லட்சுமியை தியானித்து வழிபடுபவள். அவள் மகள் சியாமா மாகாலட்சுமியின் பக்தை, அவர்களது பக்திக்கு அருள் செய்ய வயதான சுமங்கலி கோலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று வந்தபோது அரசி சுசந்திரிகா நன்றாக உணவருந்தி தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அந்த வயதான மூதாட்டி அன்னை மகலட்சுமியின் பிறந்த தினமான இன்று இப்படி உண்டு தாம்பூலம் தரித்திருக்கின்றாயே இது நல்லது அல்ல என்று சொல்லக் கேட்டவள் உடனே வயாதான மூதாட்டியின் கன்னத்தில் அறைந்து விட்டாள். மனம் நொந்த மூதாட்டி வருத்தத்துடன் திருப்பிச் செல்கையில் மகள் சியாமா பார்த்து விபரம் கேட்டாள். முக்கியமான பூஜைமுறை ஒன்றை உபதேசிக்க வந்த தன்னை உன் அன்னை அவமானப் படுத்தி விட்டாள் என்றவுடன், சியாமா மூதாட்டியை வணங்கி அந்தபூஜை முறையை தனக்கு உபதேசிக்க வேண்டினாள். அந்தமுறைகளை கேட்டறிந்த சியாமா அன்று முதலே வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க ஆரம்பித்தாள் சுசந்திரிகா மூதாட்டியை அவமானப் படுத்தியாதால் நாட்டின் செல்வம் குறையலாயிற்று. நாடு கைவிட்டுப் போகுமுன் மகளின் திருமணத்தை நடத்தினான் பத்திரசிவன். புகுந்த வீட்டிலும் தன் விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தாள் சியாமா. அவள் கணவன் மாலாதரனின் இல்லத்தில் செல்வம் குவிந்தது. சியாமா வசதியாக இன்பமாக வாழ்ந்தாள். தன் தாய் தந்தையர் நாடிழந்து வீடிழந்து ஏழைகளாக வனத்தில் வாழ்வதை அறிந்த சியாமா அவர்களுக்கு ஒரு கூடையில் பொன்னும் பொருளும் வைத்து அணுப்பினாள். ஆனால் சுசிந்திரிகா அதை தொட்டவுடன் கரியாக மாறின. இதைக் கேள்விப்பட்ட சியாமா முன்பு தன் தாய் மூதாட்டியாக வந்த அன்னை மகாலட்சுமியை அவமானப் படுத்தியை நினைவுகூர்ந்து அதற்கு பரிகாரமாக தன் அன்னையையும் வரலட்சுமி விரதம் இருக்க அறிவுறுத்தினாள். சுசிந்திரிகாவும் சியாமாவின் ஆலோசனைப்படி விரதம் இருந்துவர படிப்படியாக அவர்கள் நிலை உயர்ந்து மீண்டும் அரசன் ஆனான் பத்திரசிவன்.

ஆரத்தி காண்பித்து அன்னையை வணங்கியபின் மூத்த சுமங்கலி ஒரு சரடினை எடுத்து அம்மனுக்கு கட்டவேண்டும் பின்னர் அவர் கையிலிருந்து மற்ற சுமங்கலிகள் சரடைப் பெற்று கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளவும். சரடு கட்டிக் கொண்டபின் வயதில் மூத்தோரை வணங்கவும். பூஜைக்கு வந்துள்ள சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், இவற்றுடன் இயன்ற அளவிற்கு புடவை அல்லது ரவிக்கையைப் பிரசாத பொருட்களுடன் வைத்துக் கொடுக்கவும். விரதம் இருக்கும் பெண்கள் அன்று முழுவதும் நிவேதனப் பொருட்களையே உண்ண வேண்டும்.

மறுநாள் காலையில் நீராடி தீபமேற்றி தூப தீபம் காட்டி பின்னர் பால்பாயசம் அல்லது கற்கண்டு கலந்த பால் நிவேதனம் செய்து மகாலட்சுமியே என்றும் நீங்காதிரு என்று பிரார்த்தித்துக் கொண்டு மங்கள ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டவும். ராகு காலம், எமகண்டம் இல்லாத நல்ல நேரம் பார்த்து அல்லது மாலையில் மண்டபத்தை பிரித்து கலசத்தில் பதித்த அம்மன் முகத்தினை எடுத்து சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தவும், அலங்காரத்தை கலைத்து பூக்களையும், மஞ்சள் சந்தனம் கலசநீர் ஆகியவற்றை ஓடும் நீரில் அல்லது கிணறு குளத்தில் விடவும். வெள்ளி முகம் அம்மனுக்கு அணிவித்த வஸ்திரங்களை எடுத்து சுத்தப்படுத்தி அடுத்த முறைக்கு பயன் படுத்த வைத்துக் கொள்ளவும். கலசத்தில் இருக்கும் அரிசியை நீர் ஊற்றாமல் இருந்தால் அதனுடன் இலையில் இருக்கும் பச்சரியையும் வீட்டில் இருக்கும் மற்ற அரிசியுடன் கலந்து சக்கரைப் பொங்கல், அல்லது பால்பாயாசமாக உபயோகிக்கவும். ஏற்கெனவே பூஜிக்கப்பட்ட அரிசியாதலால் அதுவே பிரசாதம். மறுபடியும் நிவேத்தியத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது. தொடர்ந்து இந்த விரதம் மேற்கொள்பவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று விரதம் இருக்க வாய்ப்பில்லை என்றால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்யலாம். வேண்டுமென்று தவிர்த்துவிட்டு அடுத்த வெள்ளிக் கிழமை விரதம் மேற்கொள்ளக் கூடாது.

ஆடிக் கிருத்திகை- முருகனுக்கு உகந்த நாள். ஆறுமுகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆடிக்கிருத்திகையில் முருகனை வணங்கி விரதமிருந்து வழிபட்டால் பூவுலக வாழ்விற்குத் தேவையான அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்யம் ஆகியவற்றுடன் மோட்சம் கிட்டும் என அருள் புரிந்தார் ஈசன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பொதுவான விரத முறைகளை கடைபிடிக்கலாம். பொதுவாக உப்பைத் தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதக் கிருத்திகையில் விரதத்தை முடிப்பது சிறப்பு. முருகன் செவ்வாயின் அம்சம். எனவே இவ்விரதத்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கிட்டும்.

ஆடி ஏகாதசி- வளர்பிறை ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் தேய்பிறை ஏகாதசி யோகி ஏதாதசி என்றும் சொல்லப்படும். குபேரனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் ஹேமமாலி என்பவன் மனைவியின் அழகில் மயங்கி எப்போதும் செய்து வரும் பணியை மறந்ததால் அவனை குஷ்டம் பீடிக்க ஈசனை வழிபட்டு ஆடிமாத தேய்பிறையில் ஏகாதசி விரதமிருந்து பூர்த்தி செய்தபோது அவன் நோய் நீங்கியதால் யோகி ஏகாதசி எனப்பட்டது. தேய்பிறை ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வழிபடுவோர்க்கு நோய்கள் தீரும். மகாபலியை பாதாளத்தில் அழுத்தியபின் மகாவிஷ்ணு பாம்பனையில் சயனம் கொண்ட வளர்பிறை நாள் சயனி ஏகாதசி. விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவோர்க்கு அனைத்து வளங்களும் கிட்டும், எதிரிகள் தொல்லை இல்லை.

ஆடிப் பூரம்- கோதை என்ற ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது ஆடிமாத பூர நட்சத்திரத்தில். இந்த விரதம் இருந்து திருமாலை வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும். இறையருள் சித்திக்கும். ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு கைநிறைய வளையல்களை அடுக்கி மூன்று நாட்களுக்கு முன்பு ஊறவைத்த முளைவிட்ட தானியங்களை நைவேத்தியமாக வைப்பர். வளையல்களை குழந்தை வரம் வேண்டியவர்களுகு பிரசாதமாக கொடுக்கலாம்.

ஆடி அமாவாசை- நிம்மதியான குறையிலா வாழ்வு பெற மக்கள் நீத்தோர் நினைவு செய்தல் அவசியம். இறந்த முன்னோர்களுக்கு நீரும் எள்ளும் விடுத்து செய்யும் பித்ரு வழிபாட்டை ஆடி அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி அதன் கரைகளில் அமர்ந்து செய்வித்தால் குடும்ப ஒற்றுமை நீடித்து குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், பண்பும் வளரும்.

இருவேறு தன்மைகள் கொண்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்த நாளில் எந்த ஒரு கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. மற்ற எல்லா திதிகளிலும் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் பெற்றிருக்கும். அமாவாசைய்னறு எந்த கிரகமும் தோஷம் அடைவதில்லை. அமாவாசை, பௌர்ணமி என்ற இரு நாட்களும் விரத நாட்களாக கருதப்படுவது இதனால்தான். அமாவாசையன்று தந்தை மற்றும் தாயை இழந்தவர்கள் வழிபாடு செய்யும் முறை பிதுர் தர்ப்பணம் / சிரார்த்தம் ஆகும். ”பித்ரு தேவதா நமஹ, மாத்ரு தேவதா நமஹ” என வேதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவர்களின் இரவுப் பொழுது தொடக்கமான தட்சிணாயன காலத்தின் ஆரம்ப மாதமான ஆடிமாத அமாவாசை பிதுர்களின் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும். நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள்- பிதுர் தேவர்களை நினைத்து நாம் சிரத்தையுடன் வழிபாடு செய்வதால் அது சிரார்த்தம் எனப்படும். அவரவர் வழக்கப்படி சிரார்த்தம், திவசம், படையல் என வழிபடலாம். இந்த வழிபாட்டினால் பூர்வ தோஷங்கள், முன்னோர் சாபங்கள் போன்றவை நீங்கி புண்ணியம் கிடைக்கும். திருமணப்பேறு குழந்தைகள்பேறு ஆகியவையும் கிட்டும். நாம் எள்ளும் தண்ணீர் விட்டு அர்க்கியம் செய்வது போன்றவைகளையும் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகள் வழிபாடுகள், ஆராதனை உற்சவம் எல்லாம் நம்மிடமிருந்து பெற்று நம் பிதுர்களுக்கும் அந்தந்த தேவதைகளுக்கும் சேர்க்கும் பொறுப்பு சூரியபகவானைச் சேர்ந்தது. அதனால்தான் முன்னோர்களை வழிபட்டபின் முழங்கால் அளவு நீரில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று மூன்று முறை நீரை இரு கைகளினாலும் எடுத்து விடுகின்றோம். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம் குலதெய்வம் தனக்கு முன்னுள்ள மூன்று தலைமுறை தந்தை பெயர்களைக் கூற வேண்டும். பின் வீட்டில் முன்னோரின் படம் இருந்தால் தெற்கு முகமாக வைத்து அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து வழிபடவேண்டும். அவர்கள் விரும்பியவற்றை சமைத்து / வைத்து இலையில் பரிமாறி படைத்து ஆரத்தி காட்டி வழிபட்டு காக்கைக்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும். இதற்குத்தான் தென்புலத்தார் வழிபாடு எனப்பெயர்.

ஆஸ்தீக முனிவர் ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தி நாக இனத்தை காத்த ஆடி அமாவாசைக்குப் பின்வரும் சதுர்த்தி நாகசதுர்த்தி- நாக பஞ்சமி என கொண்டாடப்படுகின்றது.


&&&&&

திங்கட்கிழமை, 07 May 2018 02:05

ஆனி மாத விரதங்கள்!

Written by

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

&&&&&

ஆனி மாத விரதங்கள்!

ஆனி பௌர்ணமி- ஆனிமாதம் மரகத லிங்கம் வழிபாடு சிறப்பு, பகலில் சிவபூஜை செய்து இரவிமட்டும் உணவு உண்ணவேண்டும்.

ஆனிமாத அஷ்டமி பார்வதி-பசுபதி-வணங்கினால் கோமேதக யாகபலன்.

சாவித்ரி விரதம்- காரடையான் நோன்பு- ஆனி மாதம் திரியோதசி நாள் ஆரம்பித்து தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் சாவித்ரி விரதம்- காரடையான் நோன்பு கடைபிடித்தால் சர்வ நலனும் வளமும் தரக்கூடியது, பிரம்ம லோகம் அடைவர். விரதத்தின் போது 14 வகை பழங்கள் நைவேத்தியம் செய்து தானம் செய்யவேண்டும்

அன்னை உமை ஈசனைப் பிரிய நேர்ந்த போது பெருமானை அடைய வேண்டும் என விரதம் கடைபிடித்த மூன்றாவது நாள் சிவன் தோன்றி அழகிகளில் அழகி என்ற பொருளில் காமாட்சி என்றழைத்து ஏற்றுக் கொண்டார். தேவருலகப் பெண்கள் தங்களின் கணவர்களின் கண்களுக்கு தாங்கள் எப்போதும் அழகிகளாக இருக்கவும் அவர்களுக்கு எந்த உடல் நலக்குறைவும் ஏற்படக்கூடாது என்று அன்னையிடம் வேண்ட உமை இந்த காரமடையான் நோன்பை கடைபிடித்தால் சகல பாக்கியங்களும் கிட்டும் என்றருளினார்.

சாவித்ரி விரத பலன்:பாராசர முனிவர் ஆலோசனைப்படி மாத்ர நாட்டு மன்னன் அசுவபதி சாவித்ரி விரதம் செய்ய அவன்முன் தோன்றிய சாவித்ரி மன்னன் மனைவி மாலதிக்கு தன் அம்சமாக ஒர் மகளாக ஜனிக்க அருள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சாவித்ரி மணப் பருவத்தில் துயிமதிதேசன் மகன் சத்யவானின் குணவிசேஷங்களைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்காமலேயே காதல் கொண்டாள். அவன் அற்ப ஆயுள் உள்ளவன் என நாரதர் சொல்லியும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்து நாட்டையும் இழந்து காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்திருக்க அவர்களுடன் சாவித்ரியும் வாழ்ந்திருந்தாள். தேவகன்னியருக்கு அன்னை உமா உபதேசித்த காமாட்சி விரதத்தை நாரதர் சொல்லியபடி தொடர்ந்து மூன்று பகல் மூன்று இரவு உறங்காமல் இறைவனை வழிபட்டு ஒருமுறை மட்டும் உணவு உண்டு கடினமான விரத முறைகளை மேற்கொண்டாள்.
காட்டில் தனக்கு கிடைத்த அறுகம்புல், அரச இலைகள் ஆகியவற்றைப் பூவாகவும், காட்டில் விளைந்த கார் அரிசியையும் அவரையும் கொண்டு செய்த அடையையே நெய்வேத்தியமாக வைத்து நோன்பிருந்தாள். இதனை மக்கள் மங்கள கௌரி விரதம் என்பர்.
நான்காம் நாள் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றபோது சத்தியவான் மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தான். சாவித்ரிதேவியின் உண்மையான பக்தையான சாவித்திரிக்கு யமன் சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டுச் செல்வது தெரிந்தது. அம்பாளின் அருளினால் யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியிடம் நான் எடுத்துச் செல்லும் உயிரைத் தவிர யாரும் என்னுடன் வரக்கூடாது என யமன் சொல்லியும் ஏதேதோ பேசிக் கொண்டே சாவித்ரியும் உடன் சென்றாள். சாவித்ரியின் வேண்டுகோளைக் கேட்ட யமன் சத்யவானின் உயிரைத் தவிர வேறு 3 வரங்கள் கொடுப்பதாகக் கூற, என்னுடைய தாய் தந்தையர் நாட்டை ஆள ஒர்மகனும், மாமனார் மாமியார் இழந்த பார்வையை மீண்டும் பெற்று ராஜ்யத்தை ஆள வேண்டும் எனச் சொல்லி மூன்றாவதாக எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்றாள்.
மூன்று வரங்களையும் சிறிதும் யோசியாமல் அளித்த யமன் இன்னும் ஏன் என் பின்னால் வருகின்றாய் எனக் கேட்க, தர்ம சீலரே, வாக்குத் தவறாத உத்தமரே நீங்கள் வாக்களித்தபடி கற்புடைய மகளிரின் உத்தம குணப்படி என் கணவருடன் வாழ்ந்தால் தானே எனக்கு குழந்தை பிறக்கும். ஆனால் என் கணவரின் உயிரை நீங்கள் கவர்ந்து செல்கின்றீர்களே என்றாள். அப்போது தான் தான் யோசியாமல் வாக்களித்து விட்டது புரிந்த யமன் வாக்குத் தவறாமல் இருக்க சத்தியவானின் உயிரை திரும்பி அளித்தான்.

சாவித்ரி நோன்பு பூஜை முறை- காரமடையான் நொன்பு அன்றுமற்ற விரதங்களைப் போல் அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்தாலும் அந்த விரதம் கடைபிடிக்க வேண்டிய நேரத்திற்கு முன்பாக நீராடி பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மனையில் காமாட்சி அம்மன் படத்தை கலசத்துடன் வைத்து குங்குமம் சந்தனம், மலர் சாத்தி அம்மனுக்கு எதிரே ஒரே நுனி (தலைவாழை) இலை வைத்து வீட்டில் உள்ளோருக்குத் தகுந்தவாறு 2, 4, 6 என்று நுனி-தலைவாழை இலையைப் போட்டு பூஜைக்கு செய்தவைகள் வைக்கவும். ஒரு மஞ்சள் நூலில் நடுவில் இரண்டு பூக்களைக் கட்டி அதில் கொஞ்சம் குங்குமம் இட்டு வீட்டில் உள்ளவர்களின் எணிக்கைக்குமேல் அம்மனுக்கு ஒன்றும் கூடுதலாக ஒன்றுமாக நோன்புச் சரடு எடுத்துக் அம்மனுக்கு முன் வைக்க வேண்டும். நைவேத்தியப் பொருள்களுடன், உருகாத வெண்ணெய் கொஞ்சம் இலையில் வைக்கவும். பழங்கள் வெற்றிலை பாக்கு, கார அடை என்ற உப்பு அடை, வெல்ல அடை எனும் இனிப்பு அடை ஒவ்வொன்றையும் தயாரித்து இலைக்கு இரண்டாக வைக்க வேண்டும். சிறிய மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து குங்குமம் வைத்து வெற்றிலையில் வைக்கவும். சாப்பிராணி காட்டி தேங்காய் உடைத்து காமட்சியம்மன் படம் முன்னே இருபுறமும் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பின் கணவர் கையால் மனைவி நோன்புச் சரடை கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். கணவர் அங்கு இல்லையெனில் மற்ற மூத்த சுமங்கலி பெண்களை கட்டச் சொல்லி கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரத நேரம் வரும் வரை பெண்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து நோன்பு முடிந்து அடையையே உணவாக உட்கொள்ள வேண்டும். நோன்பு நேரம் அதிகாலை அல்லது இரவு என்று எந்த நேரத்தில் வந்தாலும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால். கஞ்சி, பழம் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

நோன்பு சரடினை கட்டிக் கொள்ளும்போது என் கணவர் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்காக நான் மேற்கொண்ட விரத்தை காமாட்சி அன்னையே உன் அருளால் வெற்றிகரமாக முடித்து நோன்பு சரடினை அணிந்து கொண்டேன். என் கணவரை காத்தருள்வாய் அம்மா என மனதரா வேண்டிக் கொள்ளவேண்டும்.

நோன்பு சரடு கட்டிக் கொண்டபின்னர் அருகில் உள்ள சுமங்கலிகளுக்கு தாம்பூலம், காரடை, உப்புடை ஆகிய பிரசாதங்கள் கொடுத்து ஆசி பெற்றுக் கொள்ளலாம். நடு நிசி, விடியற்காலை ஆகிய நேரங்களில் நோன்பு அமைந்தால் மறுநாள் பிரசாதம் வழங்கலாம்.

உத்திரப்பிரதேசப் பெண்கள் கர்வா சவுத் என்று இவ்விரதத்தை கணவன் நல்ல ஆயுளோடும், செழிப்போடும் வாழ வேண்டுமென நிலாவினைக் காணும் வரை நீர்கூட அருந்தாமல் உபவாசம் இருக்கின்றனர். சிந்தி பெண்கள் தீஜ்ரி என்று நோன்பாக கொண்டாடுகின்றனர்.

பெண்கள் சாவித்திரி விரதம் கடைபிடித்து காமாட்சி அம்மன் அருளால் தீர்க்க சுமங்கலிகளாக சகல சௌபாக்யங்களுடன் வாழ வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா

ஆனிமாதச் சிறப்புகள்-தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். அந்நாளில் பெருமாளுக்கு நடைபெறுவதால் ஜேஷ்டாபிஷேகம், பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கும் இருகோள்களான சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப்படும். சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.
ஆனித் திருமஞ்சனம் சிவனுக்கு உரியதானாலும் நடராஜருக்கே முக்யத்துவம். நடராஜர் உள்ள எல்லா சிவாலாயங்களிலும் ஆனித்திருமஞ்சனம் நடைபெற்றாலும் சிதம்பரத்தில் ந்டைபெறும் ஆனித் திருமஞ்சனமே சிறப்பானதாகும். திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நடராஜரும் சிவகாமியும் தங்களது தாண்டவ கோலத்தை பக்தர்களுக்கு காட்டி அருள்கின்றனர். அணுவில் இருக்கும் நுன் துகல்களைக்கூட ஆட்டுவிப்பது இறையின் திருநடனம். நுண் துகல்களின் இயக்கம் ஒரு நடனத்தை ஒத்திருப்பதாக அறிவியலார் கண்டறிந்திருக்கின்றனர்

ஆலகால விஷத்தை உண்ட சிவனின் கண்டத்தில் பர்வதியால் அது நிறுத்தப்பட்டபோது சிவன் உடலில் அதிக உஷ்ணம் பரவியது. அந்த வெப்புத் தன்மையை தவிர்க்கவே ஈசன் -நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இது தேவர்களால் நடத்தப்பெறும் மாலைநேர அபிஷேகம்- இதை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடுகின்றோம். இந்த உற்சவம் ஆனி உத்திரத் திருவிழா எனப்படும். சூரிய உதயத்திற்கு முன் நடராஜருக்கு அபிஷேகம் முடிவுறும். ஏனெனில் தேவர்களுக்கு மாலைப் பொழுது ஆனிமாதம். அவர்களுக்கு வைகறை-மார்கழி, காலை-மாசி, உச்சி-சித்திரை, மாலை-ஆனி, இரவு-ஆவணி, நடுஇரவு-ஐப்பசி என்பதாகும்.

ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படும். வியாசர் தருமருக்கு ஏகாதசி விரதம் பற்றி கூறியபோது அங்கு வந்த பீமன் தன் வயிறில் விருகம் என்ற அக்னி உள்ளதால் அளவில்லா உணவு உண்டால்தான் என் பசி அடங்கும். எல்லா ஏகதசியன்றும் விரதம் அனுஷ்டிக்க முடியாது என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை விரதம் அனுஷ்டிக்க எளிய முறையைச் சொல்லுங்கள் என்று கேட்டான். நிர்மலா ஏகாதசி அன்று நீர் அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்குமாறு வியாசர் கூரினார். எனவே இந்த ஏகாதசி- ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி- நிர்ஜலா ஏகாதசி- பீம ஏகாதசி எனப்படும்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..

&&&&&

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17066497
All
17066497
Your IP: 172.69.63.79
2020-05-28 03:16

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg