gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. எனவே எல்லோரும்

சாதனபாதம்

Written by

2.சாதன பாதம் 
2-1 தப ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியா யோக.

தவம், ஆன்மீகக் கல்வி, ஐயங்கள், அதன் பயன்களை இறைவனுக்கு அளித்தல் ஆகியவை கரும யோகம் ஆகும். தவம்- ஐந்து புலன்கள்வழியாக ஆசைகளினால் வெளிச்செல்லும் மனத்தை தடுப்பது. ஸ்வாத்யாய- ஆன்மா தன்னை அறிவதாக சாத்திரங்களில் உள்ளவற்றைப் படித்து அறிதல். இந்த தவம், ஸ்வாத்யாய இரண்டாலும் வைராக்யமும் ஞானமும் கிடைக்கும். யோகம் செய்ய இவைகள் உதவும். ஈஸ்வரப்பணி- தவம், ஸ்வாத்யாய மூலம் நாம் செய்யும் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது ஆகும். உடலிலிருந்து விடுபட்டு, ஆத்மா உடம்புக்கு அந்நியம் என்பதை உணர்ந்தால் இறைவனிடம் சரணாகதியாக வசதியாகும். நம் உடலின் அடுக்குகள் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்தபடி இருக்கிறது. அவற்றை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபட முனையவேண்டும். உடல் உணர்வு அறுந்தபின் ஆத்மா வீடுபேறு பெறும். யான், எனது என்ற செருக்குகளை ஞானம் கொண்டு கைவிட வேண்டும். இது கரும யோகம்-கிரியா யோகம்.

2-2 ஸமாதி பாவனார்த்த கிலேசதனூ கரணார்த்தச்ச.

உடம்பினாலும், அதனுள்ள கருவிகளாலும் ஏற்படும் சித்த விருத்திகளை (கிலேசம்) குறைப்பது சமாதி பாவனைக்கு தேவையானது. கரும யோகம் உடல்(தனு), அதன் பொறிகள்(கரணம்) மூலமாக மனத்தை அடக்ககூடிய மார்க்கமாகும். கரும யோகம்- கிரியா யோகம் பயிலப் பயில சமாதி யோகம் கைகூடும்.

2-3 அவித்யாஅஸ்மிதா ராகத்வேஷாபி நிவேசா க்லேசா.

அறியாமை (அவித்யா), அகங்காரம் (அஸ்மிதா), விருப்பம் (ராகம்), வெறுப்பு (துவேஷம்), உயிர்பற்று (அபினிவேசா) ஆகிவை கிலேசங்கள். இவைகள் ஆன்மாவின் ஆனந்தத்தை மாற்றித் துன்பமயமக்குகின்றது.

2-4 அவித்யாக்ஷேத்ரமுத்தரேஷாம் ப்ரஸுப்த தனுவிச்சின்னோ தாராணாம்                அறியாமை காரணமாயிருப்பதால் பிரஸுப்தம், தனு, விச்சின்னம், உதாரம் ஆகிய நான்கு கிலேசம் எனப்படும் துன்பங்களும் வரும். உள் மனத்தில் பதிவாகி சித்த விருத்தியாக முளைவிட காத்திருப்பது பிரஸுப்தம் ஆகும். எண்ண முளைகள் இனி விருத்தியடைய முடியா நிலையாக அடக்கப்பட்டது ஸம்ஸ்காரங்கள் தனு ஆகும். எண்ண முளைகள் சூழ்நிலை வலிமையான நிலையில் முளைத்து, வழுவிழந்த நிலையில் மறைந்தும் நிலையற்றதாக மறிக்கொண்டிருக்கும் ஸம்ஸ்காரம் விச்சின்னம் ஆகும். ஸம்ஸாரங்கள் ஒன்றைஒன்று முந்திவர முயலும்போது பிற எண்ண முளைகளை பின்தள்ளி தானே வலிமையுடைதாக இருப்பது உதாரம் ஆகும். இந்த நான்கு அறியாமைகளும் ஈச்வர ப்ரணிதானா மூலம் அழியும்.

2-5 அநித்யாகசி துகானாத்மஸு நித்ய  சுசி ஸுகாத்மக்யாதிர வித்யா.                      அறியாமை எனப்படுவது யாதெனில் நிலையற்றதை நிலையானதாகவும், தூய்மையற்றதை தூய்மையானதாகவும், துன்பத்தை இன்பமாகவும், ஆத்மா அல்லாததை ஆத்மாகவும் ஏற்றுக் கொள்வதாகும். ஒன்றை மற்றொன்றாக எதிர்மறையாகவும் உணரும் போதை தருவது அறியாமை. அநித்யா- நிலையற்றது, நித்யம்- நிலையானது, அசுசி- தூய்மையில்லாதது, சுசி- தூய்மையானது, துக்கம்- துன்பம், சுகம்- இன்பம், அநாத்மா- ஆத்மா இல்லாதது,

2-6 த்ருக்தர்சனசக்த்யோரேகாத்மதைவாஸ்மிதா.                                               அகங்காரம் என்பது காண்பவனையும் காண்பதற்கு துணையாக இருக்கும் கருவியையும் ஒன்றாக கருதுவதாகும். வாஸ்மிதா- அகங்காரம். காண்பவன்- ஆத்மா, கருவி- இந்திரியங்கள். உடலின் உள்ளே உள்ள ஆத்மாவையும் வெளியே இருக்கும் கருவிகளையும் எப்படி ஒன்றாக நினைக்க முடியும் அது அறியாமை எனும் அகங்காரம். பிரபஞ்சம் முழுவதும் பரவிய ஒருபொருளான ஆத்மா அதை உணராதவர் உடம்பில் இருக்கும்போது அதன் ஞானம் மறைக்கப்படுகிறது.

2-7 ஸுகானுசயீ ராகா.

ராகம் என்பது இன்பங்கள் தருவதை தானே விருப்பத்துடன் வைத்திருக்கும் செயலாகும். மண், பெண், பொன் முதலிய ஆசைகளை அனுபவித்ததில் சித்தத்தில் பதிவு செய்யப்படுவதால் அதை நினைப்பதாலும் மீண்டும் தேடுவதாலும் ஆசை என்ற சித்த விருத்திகள் மேலும் மேலும் உண்டாகும்.

2-8 துகானுசயீ த்வேஷ.

வெறுப்பு என்ற துவேஷம் துக்கம் தருவதை அடிக்கடி மனத்தில் எண்ணுவதால் ஏற்படும். அதை இனிமேல் அனுபவிக்க தயாராக இல்லாததால் அப்படிப்பட்ட துக்கம் நமக்குள் வந்ததே என்ற வருத்த நிலை உண்டாகும். எண்ணியதால் வெறுப்பில்லை. மீண்டும் எண்ணுவதே வெறுப்பாகும்.

2-9 ஸ்வரஸவாஹீ விதுஷோஅபி ததாரூடோஅ பிநிவேச.

உயிர் வாழும் பற்று எல்லா அறிவாளிகளிடமும் பரந்துள்ளது. ஆத்மா அழியாதது. உடல் மட்டுமே அழியாதது. ஆத்மாவும் உடலும் வேறு வேறான பொருள்கள் என்ற எண்ணம் இல்லாப் பெரியவர்கள், குழைந்தைகள், விலங்குகள் எல்லாவற்றின் இயல்பானது மரணத்திற்கு அஞ்சுவதாகும். அதிலிருந்து தப்பி பிழைக்கவே நினைக்கின்றனர். இந்த எண்ணத்தை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அழிக்க முடியும்.

2-10 தே ப்ரதி ப்ரஸவஹேயா. ஸூக்ஷ்மா.

கிலேசங்களை அதனுடைய லயம்- காரணத்தில் இணைக்கும்போது அது அழிக்கப்படும். எப்போதும் சித்த விருத்திகள் அடக்க அடக்க முளைக்கும். மூலவிதையை அடக்கி நீக்கும்போது விருத்திகள் தோன்றாது. அதேபோல் சித்தத்தை அதனின் காரணமாகிய அகங்காரத்தில் இனைத்தால் சித்தமும் இருக்காது. விருத்திகளும் தோன்றாது. இது காரணத்தில் காரியத்தை இனைத்தலாகும். சித்தம்- காரியம், காரணம் –அகங்காரம்.

2-11 த்யானஹேயாஸ்த த்வ்ருத்தய.

விருத்திகளின் தூலத்தை தியானத்தின் மூலம் அழிக்கமுடியும். எதிலிருந்து எது தோன்றியதோ அதை அதில் அடக்குவதாகும். காரணத்தில் காரியத்தை இணைப்பதற்கு அகங்காரத்தில் சித்தம் அடங்குவதாக தியானம் செய்ய வேண்டும்.

2-12 க்லேசமூல கர்மாசயோ த்ருஷ்டஜன்ம வேதநீய.

இப்போதும் எப்போதும் எடுக்கும் பிறவிகளிலும் பயன் கொடுக்கும் கர்மங்கள் கிலேசங்களின் மூல விதையாகும். கிலேசங்கள் விதையாகி மனதில் இருந்து, மனிதன் இறந்த பிறகும் மடியாமல் சூக்குமமாக உலவி மறுபிறவியிலும் முன்பிறவியின் கர்மத்தோடு அம்மனமே வரும். நாம் செய்த வினைச் செயல் முடிந்தபின்னும் அதன் கர்மாவின் விதைகள் மீண்டும் முளைப்பதற்காக சூக்குமமாக நம்மிடமே இருக்கும். மனம், புத்தி, சித்தம் ஆகியன நம் உடலில் எந்த உறுப்பிலும் சேர்ந்திருக்கவில்லை. அவ்வப்போது உள்ளும் வெளியும் சென்று வரும் சூக்கும தன்மையுடையது.

2-13 ஸதி மூலே ததிவபாகோ ஜாத்யாயுர் போகா.

கர்ம விதை அழியாது முளைத்தால் அது பலப்பல பிறவிகளிலும் முளைத்து தரும் பயன்கள் காரணமாக இன்ப, துன்ப, ஆயுள் அனுபவங்களாக வளர்ந்து கொண்டே இருக்கும். மரம்- விதை –மரம் மீண்டும் விதை எனத்தொடரும்.

2-14 தே ஹ்லாதபரிதாபபலா புண்யாபுண்ய ஹேதுத்வாத்.

புண்ணியமான செய் வினைகளால் இன்பமும் பாபமாகினால் நம் அறிவு, திறமை, வாழ்க்கை எல்லாம் முன்பிறவியினால் துன்பமாகி பிறவிப் பயனாகிறது.புண்ணிய பாவங்களைக் காரணமாக பெற்றிருப்பதால் இன்ப துன்பங்களைத் தருகின்றன்.

2-15 பரிணாம தாப ஸ்ம்ஸ்கார து. கைர் குணவ்ருத்தி விரோதச்ச து.கமேவ ஸர்வ விவேகின.

பரிணாமம், துன்பம், தாபம், ஞாபகம், மாறும் குண விருத்தி, வாழ்க்கை எல்லாம் விவேகம் உடையவர்க்கு வேதனையைத் தரும். காலம் மாற, மாற இன்பமும் துன்பமும் அதற்கேற்றவாறு மாறுவது பரிணாமம் என்பதாகும். ஸம்ஸ்காரமானது சித்தத்தில் வினைகள் பதிவானால் அதுவே மறுபிறவிக்கும் துன்பமான காரணமாகும். இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அது முடிவுறும் என்ற நினைப்பே தாபம் என்பதாகும். மூன்று குணங்களாகிய சத்துவம்- நற்குணம், ரஜோ- ஆசைகாரணமான செயல், தாமஸம்- மோகம் காரணமான குழப்பம் ஆகியவைகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செயல்பட விழைவதால் ஏற்படும் துன்பம் குணவிரோதம் ஆகும்.

2-16 ஹேயம் துக்கமனாகதம்.

சென்ற பிறவி துன்பங்கள் இனி வரா. நிகழ் துன்பங்கள் அனுபவத்தில் உள்ளது. எஞ்சியுள்ளது இனி எப்போதும் வரும் துக்கம் தவிர்க்கப்பட வேண்டியது. அதற்கான நெறியில் நடந்து தவிர்க்க வேண்டும்.

2-17 த்ருஷ்ட த்ருச்யயோ. ஸம்யோகோ ஹேயஹேது.

காண்பவன் – ஆத்மா, காணப்படுவது- பிரபஞ்சம். இரண்டிற்கும் நடுவே காண்பதற்கு துணையாக இருக்கும் தனு- இந்திரிய கரணங்களே துன்பத்தின் துக்கத்திற்கு காரணமாகும். ஒரு பொருளைக்காண ஆத்மாவுடன் 5 தன்மாத்திரைகள், 10 இந்திரியம், 4 அந்தக்காரணம் ஆகிய 19 தத்துவங்களும் தொடர்பு கொள்ள வேண்டும். அதனால் ஆத்மா மாயை வசமாகி சிற்றறிவு போன்ற சிறுமைகள் தோன்றுவதால் துன்பம் அடைகிறது.

2-18 ப்ரகாச கிரீயா ஸ்திதி சீலம் பூதேந்திரியாத்மகம் போகாபவர்கார்த்த த்ருச்யம்.
நுண் பூதங்களாகிய தன் மாத்திரைகளாலும் பரு வடிவப் பூதங்களாலும் உடலும் இந்திரியங்களும் ஆகி மூலப் பிரகிருதியில் வந்த உடலான பிரகிருதி பிரகாசமான செயல்படும் வடிவமாகவும் உணர்வுகளற்ற சடப் பொறுள்களாகவும் காணப்படுகின்றது. அவை மூன்று குணங்கள் ஓளி- சத்துவ குணம், செயல்- ரஜோ குணம், உறக்கம்- தாமச குணம் ஆகிய வற்றால் கட்டப்பட்டுள்ளனவாகையால் இன்ப துன்ப போகங்கள் தோன்றும். அதில் பற்று கொள்ளாமல் வீடுபேறு அடைய முயலுதல் வேண்டும்.

2-19 விசேஷாவிசேஷ லிங்காமாத்ரா லிங்கானி குண பர்வாணி.

சத்துவ, ராஜச, தாமஸ குணங்கள் விளக்கம் உடையதாவும் விளக்கப் படாததாகவும், வடிவம் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கின்றது. இயல்பு, தன்மை, நிறம் ஆகியனவும் குணமாகும். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது. கடவுளுடன் ஓரளவு தொடர்பு கொண்டுள்ள மூலப்பிரகிருதி முதல் அண்டம் பிண்டம் வரை விரிந்துள்ளது.
பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவை சமஷ்டி - தொகுதி என்றும் அதே பொருள் எல்லா உயிர்களுக்கும் தனித்தனியே இருப்பது வியஷ்டி- விகுதி எனப்படும். பரமாத்மா- புருஷனிலிருந்து- மூலப்பிரகிருதி எனப்படும் மூலப்பகுதியிலிருந்து அவ்யக்தம் வெளிப்படாத ஆத்மா முக்குணம் கலப்பிலிருந்து வியக்தம் வெளிப்படுவதாகிய முக்குணப்பிரிப்பிலிருந்து அகங்காரத்திலிருந்து மஹத் எனும் புத்தியிலிருந்து சித்தம் எனும் மனத்திலிருந்து தன்மாத்திரைகளிலிருந்து இந்திரியங்களிலிருந்து பஞ்சபூதங்களிலிருந்து உடலிலிருந்து பிரபஞ்சம் என் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதை காட்டுகிறது. கடவுளுடன் தொடர்பு கொண்டுள்ள கடவுள் தன்மை உடைய பிரம்மம், புருஷன், ஆத்மா தனித்து சுத்தப் பகுதியாகி மூலப்பிரகிருதி முதல் அண்டம் பிண்டம் வரை விரிந்துள்ளது. இது மனத்தால் உணரலாம். சமஷ்டி- தொகுதி, வியஷ்டி- விகுதியாக உள்ளவை அகங்காரம் குணங்களோடு கலந்ததுபோல் எல்லாவற்றிற்கும் பொதுவாக உள்ள அகங்காரம் சமஷ்டி தொகுதியாகும். இதன் அணு அளவு உயிர்கள் ஒவ்வொன்றிலும் வியஷ்டி இருக்கும். பிரபஞ்சம் உண்டாகவும், காக்கப்படவும், அழிக்கப்படவும் பயன்படும் புத்தி சமஷ்டி மஹத்திலிருந்து உயிர்களுக்கு அணு அளவாகப் பிரித்தது வியஷ்டி மஹத் எனப்படும். பிரபஞ்சப் பொருளகளினமைப்பில் மாபெரும் அறிவு அடங்கியிருந்து அது தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் பிரபஞ்சத்தை அறிவினால் தான் படைத்திருக்கமுடியும்.
பிரபஞ்சம் முழுவதையும் தம் அறிவின் எல்லைக்குள் மனம், சித்தப் பகுதியில் அடக்க முடியுமாதலால் வடிவமற்ற அறிவு வடிவமுள்ள பிரபஞ்சத்தையும் உடல்களையும் உண்டாக்கிருப்பதாலும் அந்த பிரபஞ்சம் வடிவமற்ற புத்தியுனுள் அடங்கும். புத்தி படைப்பு தொழிலைச் செய்ததால் அதே புத்தியின் அணு அளவு நம்மிடையே இருப்பதால் விரிந்த பிரபஞ்சத்தை அதற்குள் அடக்க முடியும்.
ஜடப்பொருள்களால் நிறைந்த பிரபஞ்சத்தை நம் உள்மனத்தில் வைக்கமுடியும். சூக்கும நிலையிலிருந்து தூல நிலைக்கு வருவதை சூக்கும தியானத்தால் உணரலாம். புருஷன் அழிவற்றது, எதனாலும் தோற்றுவிக்கப் படாதது. தூய அமிர்தவடிமானதின் அணுத் தன்மையே நம் ஆத்மாவாகும். தான் கடவுளின் ஒருபகுதி, பிரபஞ்சம் முதல் உடல் வரை தனக்கு அன்னியமானது என உணர்ந்தால் சமாதி நிலை உண்டாகும். இதற்கு நுண்பூதங்கள் ஆகிய தன்மாத்திரைகள்-5, பருவடிவமான – பஞ்சபூதங்கள்-5, ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அந்தக் காரணங்கள்-4 ஆக மொத்தம் 24 தத்துவங்கள் உண்டு.

2-20 த்ரஷ்டா த்ருசி மாத்ர சுத்தேதோஅ பிப்ரத் யயானுபச்ய.

சுத்தமான ஆத்மா ஞானமடைந்து பொருள்களை காணும்போது புத்தியின் இயல்புகளில் கட்டுபட்டு அடங்கும். ஆத்மா காண்பவன் – இந்திரியங்கள் வாயிலாக காண்பது மனம். மனமும் புத்தியும் கருவிகளே. ஆத்மா போன்ற ஞானம் புத்திக்கு இல்லாததால் முன்பிறவித் தொடர்புகள் புத்தியை மயக்க அது ஆத்மாவின் மயக்கமாகிறது. முக்குணங்களுக்கு கட்டுப்படும் புத்தி அது கலக்காத ஆத்மாவை கலங்கச் செய்கிறது.

2-21 ததர்த்த ஏவ த்ருச்யஸ்ய ஆத்மா.

ஆத்மாவின் அனுபவத்திற்காகவே காணப்படும் எண்ணற்ற பொருள்களுடன் இந்த உலகம் உள்ளது. உலக இன்பங்களை வெளியில் தெரியுமாறு வைத்து, கடவுள் இன்பத்தை தெரியாததாக வைத்து ஜீவாத்மா ஆரய்ந்து பார்க்க அறிவும் உணர்வுடன் படைத்து பிறவியிலிருந்து விடுதலையடைய முயற்சிக்க வேணும் என்ற அனுபவத்திற்காக படைப்பு நிகழ்வுகள்.

2-22 க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்ய னஷ்ட ம் ததந்ய ஸாதாரணத்வாத்.

கடவுள், ஆத்மா தவிர மற்றெல்லாமாகிய பிரகிருதி முக்தியடைந்தவர்களுக்கு மறைந்தும், முக்தியடையாதவர்களுக்கு தெரிந்தவாறும் இருக்கும். பிரகிருதியிலிருந்து வேறுபட்டதாக உணரும்போது அதன் தேவை ஆத்மாவிற்கு இல்லை. அதனால் பிரிந்து மறைகிறது. இதை உணராதவர்களுக்கு அது –பிரகிருதி மறைவதில்லை. அநாதி என்றால் தனித்துவம் பெற்றது. கடவுள், ஆத்மா, பிரபஞ்சம் மூன்றும் அநாதி ஆகும்.

2-23 ஸ்வஸ்வாமி சக்தயோ. ஸ்வரூபோபலப்தி ஹேது. ஸம்யோக.

ஸம்யோகம் –இணைப்பு. புருஷனுக்கும் பிரகிருதிக்கும் தனித்தனியே சக்திகள் இருப்பதால் அவைகளின் சக்திகளை அறிவதற்கு இறைவன் மற்றும் பிரகிருதி இரண்டும் கூடுவது தேவையாகும். சூரிய சக்தி ஒளி, காற்று, உணவு ஆகியன மூலம் நம் உடம்பினுள் இணைவதும் ஸம்யோகமாகும்.

2-24 தஸ்ய ஹேதுர் அவித்யா.

ஸம்யோகத்திற்கு காரணம் அவித்தை என்ற அறியாமையாகும். சிறியதுடன் பெரியதை ஒப்பிடாமல் பிரபஞ்ச சக்தியைவிட தெய்வ சக்தி பெரியது என்பதை சொல்லமுடியாது. அதற்காக இணைய வேண்டும் என்றும், ஆத்மா பிரபஞ்ச சக்தியோடு இணையும்போது அறிவில் குறைவு ஏற்படுவதால் நான் எனது உடம்பு என்று தவறாக நினைக்கிறது. அது அறியாமையாகும். சுகம், துக்கம், நன்மை, தீமை எனப் பகுத்து உணரும் அறியாமை ஏற்பட்டு இன்ப துன்பங்களில் சிக்க நேரிடும். ஒரே உணர்வில் இருக்கும்போது இதுபோலத் துயரமில்லை, தெய்வத்தை நோக்கி தியானத்தில் ஈடுபட்டதால் சுண்ணம்பு களவாய் சுடவில்லை, விஷம் தீண்டவில்லை, யானை இடறவில்லை, கடலும் அவரும் வேறல்ல என்பதால் கல்லால் கட்டியபின்னும் மூழ்கவில்லை. இவை ஆத்ம உணர்வும் இறை உணர்வும் ஒன்றென உணர்ந்த நிலைகளாகும். மற்றவை அறியாமை நிலைகளாகும்.

2-25 ததபாவாத் ஸ்ம்யோகாபாவோ ஹானம் தத்ருசே கைவல்யம்.

அறியாமை அகலும்போது பிரகிருதி- ஸ்ம்யோகத்தின் தொடர்பு அறுபட்டு ஆத்மா வேறு எதையும் தன்னுடைய பற்றாக கொள்ளாது தனித்திருக்கும் நிலை கைவல்யம். ஸம்யோகம் ஹானம்- ஹானி- அழிவு ஏற்பட்டு உடல் உணர்வு அற்றுப் போகும். பல பிறவிகளினால் தொடர்ந்த வினை வலிமையால் வந்த அறியாமையால் பிரகிருதியாகிய உடல் தொடர்பில் ஆத்மா சிறைப்படுவதை நம் மனத்தால் உணர்ந்து அறிவால் அகற்றி நிற்கும் வேலையில், பிரகிருதி உடல் நிலை நம்மை அடிமையாக விடாமல் தானே அடங்கிப்போதல் ஆகும். முதன் முதலில் தோன்றிய பிறவிக்கு முன்பிறவி அறியாமை இருக்காது. பல ஆத்மாக்களாக பரமாத்மா பிரிந்து அணு அளவில் இருக்கும்போது சக்தி குறைந்து அறிவும் குறைந்து அறியாமை வந்தது. பல அணுக்களாகப் பிரிந்த நாம் இணைந்தால் அது பரமாத்வின் இயற்கை நிலை என உணர்தல் ஞானமாகும்.

2-26 விவேக க்யாதிரவிப்லவா ஹானோபாய.

அறியாமை அகல இடைவிடாமல் அறிவை கையாளவேண்டும். அதற்கு நான் ஆத்மா, அந்தக் கரணங்கள் அல்ல, உடல் இல்லை, ஐம்பெரும் கோசங்கள் இல்லை, சூக்கும, காரண உடலும் இல்லை, பிரம்மமாக இருக்கிறேன் என மனத்தால் கூறவேண்டும். அப்போது எல்லாம் சூன்யமாகவும், நான் என்ற உணர்வுடனும், உருவமற்றதாகவும் உணர வேண்டும். நான்- தனி ஆத்மா உணர்வு, அஹம்- பிரபஞ்சமாக விரிந்த ஆன்ம உணர்வு என கருதவேண்டும். எனவே நான் எங்கும் இருக்கின்றேன், எல்லாமுமாய் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் தியானம் செய்ய வேண்டும். கண்களால் காட்சிகளைப் காணும்போது தானே அவைகளாக இருப்பதான அஹம் என்ற உணர்வும் கொள்ளல் வேண்டும். தான் பிரம்மம் என்றும், பிரபஞ்சம் அல்ல என்றும், பிரபஞ்சம் தனக்குள் அணு அளவாக அடங்கியுள்ளதாகவும், தானும், பிரம்மமும், பிரபஞ்சமும் இணைந்திருப்பதாகவும் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றாகத் தியானம் செய்வது அறியாமை அகல்வதற்குரிய வழிகளாகும்.

2-27 தஸ்ய ஸப்ததா ப்ராந்த பூமி. ப்ரக்ஞா.

விவேகத்தைக் கைவிடாமல் இடைவிடாது பயிற்சி கொள்வதால் ஆறு ஆதாரங்களும் ஸகஸ்ரரம் ஆகிய ஏழு வகயான ஞான பூமிகள் தனித் தனியாக யோக உணர்வு கொள்ளச் செய்யாமல், ஏழுத் தாமரைகளைத் விழிக்கச் செய்து ஞானம் பெறலாம். நிராதார யோகத்தால் ஆதார யோகத்தைச் செய்யலாம்.

2-28 யோகாங்கானுஷ்டானாத்அ சுத்திக்ஷயே ஞான தீப்திராவிவேகக்யாதே.

யோக அங்கம்- யோகத்தின் படிகள், அசுத்தம்- சித்தத்தின் மலம், ஞானம்- தெய்வீக அறிவு பெருவதற்குரிய அறிவு, ஆகிய அங்கங்களைப் பயிற்சி செய்தால் அசுத்தம் நீங்கி ஞானம் பெறுவற்குரிய அறிவு வளரும்.                                                                            2-29 யம நியமாஸன ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணா த்யான ஸ்மாதய அஷ்டா வங்கானி.

இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் யோக உறுப்புக்கள். முதலிரண்டும் மேல் மனம், ஆசனம் –இருக்கை, உடல்- ப்ராணாயாமம், உடலில் மூச்சு- ப்ரத்தியாஹாரம், பொறிபுலன்- தாரணை, ஆழ்மனத்தை நாட்டல்- தியானம், மனம் ஒருநிலைப்படுத்துதல்- சமாதி எனக் கருதவேண்டும்.

2-30 அஹிம்ஸா- ஸத்யஸ்தேய ப்ரஹம்சர்யஅ பரிக்ஹா யமா.

கொல்லாமை-கொலைசெய்யாமை, வாய்மை-பொய்பேசாதிருத்தல், திருடாமை-களவுபுரியாமை, ப்ரஹம்ச்சரியம்-காமத்தை நீக்கல், இரவாமை- பிறரிடம் பொருள் கொள்ளாமையால் பொறாமை ஆகிய பாவம் செய்வதற்குரிய ஐந்தும் இமயமாகும். இவை நீங்கினால் சிறு பாவங்கள் செய்யக்கூட மனம் வராது. எந்த ஆத்மாவுக்கும் அடிமையாகா நிலையாகும்.
2-31 ஏதே ஜாதி தேச கால ஸமயானவச்சின்னா. ஸர்வபௌம மஹாவ்ரதம்.

இமயத்திற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மொழி, ஒழுக்கம் எதுவும் தடையில்லை. சாதி, நாடு, காலம், சமயம் ஆகியவைகளால் விட்டுவிடாமல் எல்லார்க்கும் பொதுவானதாகையால் மஹா விரதம் எனப்படும்.

2-32 சௌச ஸந்தோஷ தப ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி நியமா.

மனம், உடல், சூழல் ஆகியவை கொண்ட தூய்மை, தான் மகிழ்சியாய் இருப்பதால் சூழ இருப்பவர்களுக்கும் உண்டாகும் மகிழ்சி, புறத் தூய்மையால் ஏற்படும் சூழல் தூய்மை, வேதசஸ்திரங்களை அறிந்து படித்தல், தடைகளைப் பொருட்படுத்தாமல் இறைவழிபடுதல் ஆகிய ஐந்தும் நியமங்கள் ஆகும்.

2.33 விதர்கபாதனே ப்ரதிபக்ஷபாவனம்.

நேர் மாறான எண்ணங்கள் யோகத்திற்கு தடையான எண்ணங்களைப் போக்கும். அன்பு, பொதுநலம் ஆகிய எண்ணங்களால் கோபம், சுயநல எண்ணங்கள் தோன்றாமல் பார்க்க வேண்டும். கோபம் கொண்ட காரணத்தை நம்மை நாமே விசாரனை செய்தால் அது கோபத்தின் கடுமைதனைக் குறைக்கும். மித உணவு, பச்சை காய்கறிகள், உண்ணாவிரதம் ஆகியன குணமறுதல்கள் குறைய உதவி செய்யும். எண்ணெய் குளியல், குளிர் நீராடல், பிரணவஜபம், பிரார்த்தனை, 108 முறை இறை பெயரை எழுதல், சொல்லுதல் ஆகியன யோகத்திற்கு உதவி புரியும்.

2.34 விதர்கா ஹிம்ஸாதய. க்ருதாகாரிதானுமோதிதா லோப க்ரோத மோஹ.   பூ ர்வகா ம்ருது மத்யாதி மாத்ரது. க்காஞானானந்தபலா இதி ப்ரதி பக்ஷ பாவனம்.

அளவற்ற அறியாமையால் பெரிய, சிறிய, நடுத்தர வகைகளாகப் பிரிக்கப்பட்டு அற்ப மனத்தாலும், பேராசையாலும், கோபத்தாலும் செய்யப்படும் கொலை, பொய் முதலிய செய்கைகளைச் செய்ய மனத்தால் நினைப்பதும், செய்யவைப்பதும், செய்வதும் தவறாகும். இவை மனத்தைச் சிறுகச் செய்யும். அதனால் அடுத்தடுத்து எதிர்மறையாக சிந்தித்து கொண்டே இருக்குமாதலால் மனத்தை அடக்கமுடியாது. எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் நல்ல மனம் கிடைக்காது.

2.35 அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸந்நிதௌ வைரத்யாக.

அஹிம்சையை மனதில் நன்கு நிலை நிறுத்தியவன் முன் பகைமை தோன்றாது. யோகியின் உணர்வை அடைந்தால் கொடிய விலங்குகள் அந்த உணர்வைப் புரிந்து விலகிப்போகும். பாம்பை கண்டவுடன் மனிதன் அதன் விஷத் தன்மையால் கடித்துவிடும் என்ற நினைப்பில் அதைக் கொல்லவே நினைக்கின்றான். இது போன்ற கொலை உணர்ச்சிகள் வெளிப்படாதவனிடம் எதுவும் பகைமை கொள்ளாது. அதாவது வைரத்தை தியாகம் செய்வது என்பதாகும். வைரம்- பகைமை.

2-36 ஸத்ய ப்ரதிஷ்டாயாம் க்ரியபலாச்ரய த்வம்.

தன்னை சத்யத்தில் நிலை நிறுத்தி வாழும் ஒருவன் ஏதும் செய்யாமலே தன் மனத்தால் நினைப்பதுவே எல்லோருக்கும் பலனாக அமையும். ஒருவரை வாழ்த்தினாலும், திட்டி சாபம் கொடுத்தாலும் அது பலிக்கின்றது என்பதைக் கேட்டுள்ளோம். வாயால் அப்படிச் செய்வதை விட்டு மனத்தால் நினைத்துச் செய்யக் கூடியவர்கள் சத்யவான்கள். சத்யம், அஹிம்சை ஆகிய குணங்கள் உலகில் பரவியுள்ள கடவுளுக்கு நிகரான பிராணன் என்ற சக்தியை மனத்தின் மூலம் இயக்கி எதுவும் செய்யும் ஆற்றல் பெற்றவை. சத்யத்தைக் கடைபிடித்தால் இது சாத்யம்.

2-37 அஸ்தேய ப்ரதிஷ்டாயாம் ஸம்வரத்னே பஸ்தானம்.

பிறர் பொருளைக் களவு செய்யாத குணத்தில் நிலைத்து இருந்தால் அந்த நற்செய்கைகளை உணர்ந்து பல ஆத்மாக்களும் போற்றுவதால் செல்வம் தானாக வந்து சேரும். இயற்கையில் உள்ள எதையும் வேண்டும் என்று ஆசைப் படாதவனிடம் அது தன் பொருள்களையும் சக்தியையும் ஒப்படைக்கும்.

2-38 ப்ரஹ்மசர்ய ப்ரதிஷ்டாயாம் வீர்யலாப.

பிரம்மச்சரியத்தில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் அவனுடைய மனம், உடல் பலமுற்று ஆற்றல் மிகுதியாகும். அடித்தளமாகிய பால் உணர்வுகளை விட்டால் பிறவியில் ஏற்பட்ட மாயையின் மயக்கங்களும், ஆணவமாகிய மலமும் இல்லாமல் போவதால் அவனின் ஆற்றல் அதிகமாகிறது.

2.39 அபரி க்ரஹஸ்தைர்யே ஜன்மகதந்தா ஸம்போத.

பிறரிடமிருந்து எதையும் பெறாத குணமே அபரிக்கிரஹம். பிறரிடம் எதை பெற்றாலும் அவருக்கு நாம் கடன் பட்டவராவதால் அவருடைய நற்குணமும் தீயகுணமும் நம்மைத் தொடரும். பிச்சை எடுத்தல் விருப்பமுடன் தருவது. அவர்கள் உயர்ந்த உணவை எதிர்பார்ப்பதில்லை. அதனால் அவர்கள் ஆணவம் அழியும்.

2-40 சௌசாத் ஸ்வாங்க ஜூகுப்ஸ பரைர்ஸம்ஸர்க.

தூய்மையில் திலைத்திருப்பவனுடைய மேனியில் அபிமானம் இருக்காது, மேலும் பிறர் மேனியை கலவாமையும் ஏற்படும். மனதளவில் தன்னை நினைப்பதும் நேசிப்பதும் மனத்தின் அழுக்காகும். நீரில் குளித்தலால் புறத்தூய்மையும், உண்மை போசுவதால் அகத் துய்மையையும் உண்டாகும். உலக முழுவதுமுள்ள பிரகிருதியில் பரமாத்மா உள்ளதால் தானும் பிறரும் அந்த ஆத்மா என நினைப்பதால் பிற உடலின்மேல் விருப்பம் ஏற்படாது. இது வாய்மையில் சிறந்தது. அந்நியமானதாக உணர்ந்தால் விருப்போ வெறுப்போ வரக்கூடும் ஆதலாலும் பிற உடலால் இன்பம் காண நினைவு வராது.

2-41 ஸ்த்வ சுத்தி ஸௌமன்ஸ்யைகாகர்யேந்த்ரிய ஜயாத் மதர்சன யோக்ய்த் வானிச.

சௌசம் என்ற தூய்மையை கடைப்பிடைப்பதால் சத்துவ குணம் மேலோங்கும். மனத் தூய்மையாலும், மனத் தெளிவினாலும், மனம் குவிதலாலும், இந்திரியங்களைச் செயலிழக்கச் செய்வதாலும் ஆத்மாவை உள்நோக்கும் தகுதி வந்தடையும். அப்போது முறையற்றுத் திரிதலையும், விரிவதையும் நிறுத்தி ஒரே பொருளினால் ஈர்க்கப்படும். ஆத்மா ஆனந்தமயமானது. இக்குணங்களாலும் ஆனந்தம் வரும். மேலும் மேன்மையடையும். மனம் ஆனந்தமடைந்தால் பிரபஞ்சம் முழுவதும் இன்பம் என்ற உணர்வு மேலோங்கும்.

2-42 ஸ்ந்தோஷாதனுத்ம ஸூகலாப.

மகிழ்ச்சியின் பயனாக ஆனந்தம் உண்டாகும். உலகப் பொருள்களின் இயல்பினால் உண்மையான மகிழ்ச்சி தோன்றும்.

2-43 காயேந்த்ரிய ஸித்திர சுத்தி க்ஷயாத் தபஸ.

தவம் செய்வதால் உடலும் பஞ்ச இந்திரியங்களான பொறி புலன்களும் தூய்மையாகி சித்திகள் உண்டாகும். பிராண சக்தி பல வடிவம் கொண்டு செயல்படுவதால் எல்லாச் சித்திகளும் உண்டாகும். எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளை உணர்தல், ஒலிகளைக் கேட்டல் ஆகியன சித்திகளின் செயல்கள். பயிற்சிகள் ஆரம்பித்த சிலநாட்களில் நம் இந்திரியங்கள் தூய்மையடைந்து சரியாக செயல்படுவதை நாமே உணரலாம்.

2-44 ஸ்வாத்யாயாதிஷ்ட தேவதா ஸம்ப்ர யோகம்.

ஒரு மந்திரத்தில் எவ்வளவு ஒலிகள் உண்டோ அவ்வளவு இலட்சம் முறை உச்ச அளவாகவும், குறந்த அளவாக ஒரு லட்சம்முறை ஜபம் செய்தால் அம்மந்திரத்திற்குரிய தேவதையின் அருள் கிடைக்கும். ஸ்வாத்யாயம்- ஜபம் எனப்படும் உருச்சொல்லை தேவதையை மனதில் நிறுத்தி அதன் உடல் தம் உடல் என நினைத்து மந்திரத்தை உரு ஏற்ற வேணும்.

2-45 ஸமாதி ஸித்திரீச்வர ப்ரணி தானாத்.

நன்மை தீமை இரண்டையும் அதன் பலன்களையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதால் மனத்தில் எண்ணங்கள் எதுவும் உருவாகாமல் சமாதி நிலையை அடையும். சர்வ சங்கர்ப்ப தியாகம் என்றால் கடவுளைத் தவிர வேறு எதுவும் உலகில் இல்லை என்று உணரும் உணர்வே சமாதியைத் தரும். இது கடவுளிடம் சரணாகதியாகும்.

2-46 ஸ்தி ர ஸுக மாஸனம்.

ஸ்திரத் தன்மையை ஆசனப் பயிற்சிகளால் அடையமுடியும். ஆசனத்தால் நம் உடல் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வருவதால் மனம் நிலையாகி ஸ்திரத்தன்மை கிடைக்கிறது. வசப்படும் உடலின் எண்ணங்கள் குறைந்து மனதின் திரியும் பழக்கமும் குறைகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் புதிய வாயுக்கள் புகுந்து சுறுசுறுப்பாக்கி மனதில் தீவிர உணர்வு உண்டாகி உடல் ஓய்வு பெறுவதை உணரலாம்.

2-47 ப்ரயத்ன சைதில்யானந்த ஸமா பக்தி ப்யாம்.

ஆசனப் பயிற்சியால் மனம் திரிவதைத் தடுத்தும், ஒரு பொருளுலியே மனம் ஈடுபடும் பலன் கிடக்கும். உடலின் எண்ணம் குறைவதால் அதை சுற்றியுள்ளவை பற்றிய எண்ணங்களும் குறைந்து மனம் சிறிய தன்மையை விட்டு மேன்மையான பரந்த உணர்வை அடைகிறது. பரந்த உணர்வுகள் பரந்த பொருளான கடவுள் அங்கு வாசம் செய்ய வாய்ப்பு அளிக்கின்றது.

2-48 த்தோ த்வந்த வானபிகாத.

தீவிர ஆசனப் பயிற்சி மேற்கொண்டவருக்கு இரட்டைச் சிக்கல்கள் எனப்படும் விருப்பும் வெறுப்பும், நன்மை தீமை, இன்ப துன்பம், குளிர் வெப்பம் முதலியவைகளால் தடைகள் உண்டாகாது. ஆசனம் செய்வதால் இரட்டைச் சிக்கல்களின் நடுப்பகுதியில் நிலை கொள்வதால் அவைகளின் பாதிப்பு இல்லை.

2-49 தஸமின் ஸதி ச்வாஸ ப்ரச்வாஸயோர் கதி விச்சேத.ப்ராணாயமா.

ஆசனத்தால் உடலை நிலைப்படுத்திய பின் மூச்சை இழுத்து விடுவதும் ஆகிய செய்கையை முறைப்படுத்துதல் பிராணாயாமம் எனப்படும். கடவுளுக்கு அடுத்து உலகில் எங்கும் பரந்துள்ளது உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராணன் சக்தி மூலாதாரத்தின் முக்கோணத்தின் உச்சியில் இந்த சக்தி ஹம்ஸ மந்திரமாக வெளிப்படும். சுழுமுனை நாடியில் இயங்கி மூளை, நரம்பு மண்டலம் எங்கும் வியாபித்து செயல்களுக்கு காரணமாகிறது. மூச்சுப் பழக்கத்தினால் பிராணன் வீணாக செலவாகாமல் கட்டுப்படுகிறது.

2-50 பாஹ்யாப்யந்தர ஸ்தம்ப விருத்திர் தேசக ல ஸம்க் யாபி, பரித் ருஷ்டொ தீ ர்க ஸூக்ஷ்ம.

பாஹ்ய விருத்தி- மூச்சை உள்ளே வாங்கும் முறை, அப்யந்தர விருத்தி- வாங்கிய மூச்சை வெளியேற்றும் முறை, ஸ்தம்ப விருத்தி- நுறையீரலுக்குள்ளேயோ அல்லது வெளியேயோ மூச்சை நிறுத்திவைப்பது ஆகிய மூன்றும் பிராணாயாம வகைகளாகும், காலம், இடம், எண்ணிக்கையால் நீண்ட அல்லது குறுகிய பயிற்சியாக மேற்கொள்ளப்படும். உடலில் இயங்கும் பத்து வாயுக்களில் பழையன அழிந்து புதியதாகவும், பிராணாயாமத்தால் முறை செய்யப் பட்டு உடல் மனம் நலன்கள் மேன்மையடைகின்றது.பிராணன் மனத்தோடும், வாயுவோடும், குண்டலினி சக்தியோடும் தொடர்பு கொண்டுள்ளது. பிராணனும், குண்டலினியும் ஒன்றாக இனைந்தவை. மனம் ஒரு முகமாகும்போது வெளிவிடும் மூச்சு மெல்லியதாக இருக்கும்.

2-51 பாஹ்யாப்யந்தர விஷயாக்ஷேபி சதுர்த்த.

ஒருப் பொருள் மனத்திற்குள்ளேயோ வெளியிலோ எங்கிருந்தாலும் அதைச் சிந்தித்திக்கொண்டு பயிற்சி செய்வதும் பிராணாயாமம். மனம் ஒரு முகமாகும்போதும் ஒன்றைப்பற்றிச் சிந்திக்கும்போதும் வெளிவிடும் மூச்சு மெல்லியதாக இருக்கும்.

2-52 தத க்ஷீயதே ப்ரகா சாவரணம்.

சித்தம் எப்போதும் ஞானமாயிருப்பது. அதிலுள்ள மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மலங்கள் இருள் சம்பந்தமானவை. பிராணாயாமம் செய்வதால் உள்மனத்தில் உள்ள இருள் மலங்கள் நீங்கி, உள் ஒளித் தோன்றுவதால் சித்தியடைவதற்குரிய ஒளியை மூடி இருக்கும் இருள் நீங்கிப் போகும்.

2.53 தாரணாஸுச யோக்யதா மனஸ.

பிரணாயாமம் செய்து மலங்களின் இருள் நீங்கி ஒளி தோன்றினால் அடுத்ததாக தாரணை யோகப் பயிற்சி செய்ய மனம் தகுதியுடையதாகும். மனதை ஒரு முகப்படுத்தும் தாரணைக்கு பிராணாயாமம் துணை புரியும்.

2-54 ஸ்வஸ்வவிஷயா ஸம்ப்ரயோகே சித்தஸ்வ ரூபானுகார இவேந்த்ரியாணம் ப்ரத்யாஹார.

ஐம்புலன்களுக்கும் உரிய பொருள்களை நீக்கிவிட்டு அவை மனத்தோடு ஒன்றியிருப்பது பிரத்தியாஹாரம். இந்திரியங்களிலிருந்து மனத்தை பிரித்து எடுக்கும் பயிற்சி பிரத்தியாஹாரம், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உறுப்புகள் பொறிகளாகும். புலன்கள் என்பது இந்த பொறிகளிலிருந்து பொருளை உணரப் பயன் படும் அறிவு ஆகும். பொறிகளும் புலன்களும் தங்கள் செயலைச் செய்தாலும் மனம் அங்கு பதியாவிட்டால் அவைகள் உணர்த்துவதை நாம் உணருவதில்லை.
ஒருவரை கூர்ந்து தேடும்பொழுது வேறு ஒருவர் கண்ணெதிரில் நடந்தால்கூட கண்கள் மூலம் மனம் உணருவதில்லை. சாக்கடைத் தொழிலாளிக்கு பழகிய காரணத்தால் அவர் மூக்கு மூலம் உணருவதில்லை. இந்திரியங்கள் செய்வது எல்லாம் மனத்தில் இருந்தாலும் மனம் அவற்றை உற்றுப் பார்க்காவிடில் நாம் அதை உணருவதில்லை. இது இந்திரிய செயல்களிலிருந்து மனத்தைப் பிரித்து எடுப்பது பிரத்தியாஹாரம் ஆகும். புறத்தில் உள்ள எந்த பொருள்களிலும் இந்திரியங்கள் பதியாமல் மனம் வேறு ஒன்றை உணருவது.

2-55 தத. பரமா வச்யதேந் த்ரியாணாம்.

வெளியில் காணும் எந்தப் பொருளின் வடிவமும் அதனின் உணர்வும் இந்திரியங்களால் மேற்கொள்ளப்படாமல் தடுத்து ஒடுக்கி இந்திரியத்தை வசப்படுத்துவதால் தசநாடிகள், தசவாயுக்கள் அனைத்தும் வசப்படும்.

உடலை உடலால் ஆசனத்தினால் வசம் செய்கிறோம்.
உடலை மனத்தால் பிரத்தியாஹாரத்தினால் வசம் செய்கிறோம்.

வசம் செய்யாமலிருக்கும் போதுள்ள உணர்வுக்கும் வசம் செய்யப்பட்ட போதுள்ள உணர்வுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

உடலும் மனமும் இந்திரியமும் வசமாகும்போது ஆத்மா முதன் நிலையடைந்திருக்கும்.                                                                                   

                                             ******

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19373520
All
19373520
Your IP: 162.158.78.122
2020-10-25 16:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg