gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பிழைப்பது வேறு, வாழ்வது வேறு, வாழ்ந்து காட்டவேண்டும்!
திங்கட்கிழமை, 07 May 2018 02:26

ஆடி மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

&&&&&

ஆடி மாத விரதங்கள்!

ஆடி பௌர்ணமி- ஆடிமாதம் முத்து லிங்கம் வழிபாடு சிறப்பு, ஒருவேளை மட்டும் உணவூண்டு சிவ பூஜை செய்தல். கடுந்தவமிருந்து அன்னை ஈசனை அடைந்த நாள். சங்கரன் கோவில் ஆடித்தபசு விழா சிறப்பானது. விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு மனதுக்கேற்ற மணாளன் கிடைப்பர். கல்யாணமானவர்களுக்கு சீரான இல்வாழ்வு அமையும்.

ஆடிமாத அஷ்டமி மணோன்மணி-ருத்திரன்-வணங்கினால் இராஜசூய யாகபலன்.

ஆடிமாத சிறப்புகள்-சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் ஆடிமாதம். கிராமங்கள், நகரங்களின் கோவில்களில் உற்சவங்கள், விசேஷங்கள் அதிக அளவில் நடக்க இருப்பதால் அதில் மக்கள் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு மற்ற காரியங்களை நிறுத்தி வைத்தனர் முன்னோர்கள். ஆடிமாதம் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மாதம். ஆடியில் தொடங்கும் தட்சிணாயணக் காலம் தேவர்களுக்கு மாலைக் காலமாகும். அது பூவுலகிற்கு மழைக் காலம். பருவம் மாறி மழை பெய்வதால் மழைக் காலத்தில் வரும் நோய்கள் மக்களை வருத்தமலிருக்க அம்மன் வழிபாடு ஏற்படுத்தினர். வேம்பு, மற்றும் மஞ்சளை அந்த நோய்கள் நீங்க கிருமி நாசினியாக பயன்படுத்தினர்.

ஆடிச் செவ்வாய்- ஆடிச் செவ்வாயில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து மஞ்சள் பூசி நீராடவேண்டும். மஞ்சளுடன் வேப்பிலை சேர்த்தும் நீராடுவது மேலும் நலம் பயக்கும். விரதமிருக்க குளித்து நெற்றிக்கு இட்டு பாலைத்தவிர எதுவும் அருந்தாமல் இருந்து மாலை நேரத்தில் உப்பு இல்லாத கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு நிவேதன்ம் செய்து பெண்கள் மட்டும் உண்ணுவது மரபாகும். விரதத்தை அனுசரிப்பவர்களுக்கு கணவனின் மாறாத அன்பு கிட்டும். மழைக்கால நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

ஆடி வெள்ளி- சுக்கிரவாரம் எனப்படும் இந்நாளில் அவரது ஆராதனைக்குரிய அம்மனை வழிபடுதல் சிறப்பு. சுமங்கலிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விளக்குபூஜை செய்து வழிபட்டால் சகல சௌபாக்யங்கள் பெறுவர். சத்து மிகுந்த கேழ்வரகு கூழ் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்து மக்களுக்கு வழங்குதல் மிகுந்த நன்மை தரும். பெண்களுக்கு வரும் ரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது கேப்பங்கூழ். அதனால் ஆடி வெள்ளியன்று மட்டுமின்றி ஆடி மாதம் முழுவதும் கேப்பங்கூழ் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு நிவேதனம் செய்து வினியோகிக்கப்படுவது சிறப்பு. பௌர்ணமிக்கு முன்னால் வரும் ஆடி வெள்ளிக்கிழமை வரங்கள் தரும் லட்சுமியை வழிபடும் வரலட்சுமி விரதத்திற்குரிய சிறப்பான நாளாகும். இந்த விரதம் கடை பிடிப்பவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக கணவன் மனதில் நீங்க இடம் பெற்றிருப்பர்.

வரலட்சுமி விரதம்!- ஆடி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் ஆடி வெள்ளிக்கிழமை வரங்கள் தரும் வரலட்சுமி விரதம் இருக்கச் சிறந்த நாள். பூஜை செய்வோருக்கும் அந்த வீட்டில் வசிப்போருக்கும் சகல சௌபாக்யங்களும், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக கணவனின் மனதில் நீங்கா இடமும் பெற்று வாழ்வர். லட்சுமி தூய்மையை விருப்புவளாதலால் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. வரலட்சுமி நோம்பிற்கு மூன்று நாட்கள் முன்பாகவே வீட்டை சுத்தப்படுத்தி துய்மையை பேண வேண்டும். பூஜைக்கு அம்மன் முகத்தை வைத்து பூஜிப்பது வழக்கமாதலால் பூஜைக்கு முந்தைய நாளில் வெள்ளியில் அம்மன் முகம் அல்லது சந்தனம் மற்றும் மஞ்சள் கொண்டு அம்மன் முகத்தை அழகாகச் செய்து கொள்ள வெண்டும். வீட்டில் உள்ள மூத்த சுமங்கலியின் ஆலோசனையின் பேரில் விரதத்தினை அனுசரித்தல் நலம். வீட்டில் தென் கிழக்கு மூலையில் பெரிய மணப்பலகை வைத்து ஒரு சிறிய மண்டபம் போல் அமைக்கவும். மாவிலை பூச்சரங்களை தோரணமாக கட்டவும். வெள்ளி / பித்தளை / வெண்கலத்தால் ஆன செம்பில் கல், துரும்பு இல்லாத பச்சரிசியை பாதியளவு நிரப்பி பின் அதில் பொன் நகை அல்லது நாணயங்கள் போட்டு நீரினால் நிரப்பி ஒரிரு ஏலம் போட்டு, சாதிபத்ரி, ஒன்றிரண்டு கிரம்பு, சிறிதளவு பச்சைக் கற்பூரம் போட்டு அம்மன் முகத்தை கலசத்தில் பதிக்கவும். பின்னர் கருகமணி, காதோலை, வளையல் ஆகிய வற்றை அம்மன்மேல் சார்த்தவும். (வரலட்சுமி பூஜைக்கென்றே மொத்தமாக கடைகளில் கிடைக்கும்) கலசத்தின் வாயை மாவிலைகளால் அலங்கரித்து கோணல் இல்லாத தேங்காயை எடுத்து மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைத்து கலசத்தின் வாயிற்பகுதியை மூடவும். சந்தனத்தாலும் மஞ்சளாலும் தயர் செய்த அம்மன் முகத்தை தேங்காயின் மீதும் பொருத்தலாம், கவசத்தின்மேலும் பொருத்தலாம். வெள்ளி முகம் வைத்திருப்பவர்கள் அதனை தேங்காய் அல்லது கலசத்தின் மீது சந்தனம் அப்பி பொருத்தலாம். தயாரான கலசத்தினை மணப்பலகையின் நடுவில் கோலமிட்டு வைக்கவும். அம்மன் முகதிற்கு மலர்மாலை மலர்கள் சூட்டவும். சுத்தமான பட்டு அல்லது புதிய வஸ்திரத்தினை அம்மனுக்கு சார்த்தவும் நோன்பு சரடு தேவைக்கேற்ப ஒற்றைப்படை எண்ணில் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கொழுக்கட்டை நிவேதனத்திற்குரிய அரிசிமாவை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பூஜைக்கு வந்துள்ள சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், இவற்றுடன் இயன்ற அளவிற்கு புடவை அல்லது ரவிக்கையைப் பிரசாத பொருட்களுடன் வைத்துக் கொடுப்பதற்கு வேண்டியதை தயார் செய்து கொள்ளவும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பூஜைக்கு முந்தைய நாளன்றே செய்து முடிக்கவும்.

பூஜையன்று அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து உள்ளத் தூய்மையுடன் உடலையும் தூய்மைப் படுத்த நீராடி மாற்று ஆடை அணிந்து பூஜை அறையில் கோலம்போட்டு, விளக்கேற்றி சாம்பிரானி தூபமிட தயார் செய்யவும். ஐந்து வகை ஆரத்தி தட்டுகளை தயார் செய்யவும். 1.மலர்கள் ஆரத்தி, 2.ஜவ்வரிசி முத்து ஆரத்தி, 3.மஞ்சள் கலந்த அரிசி அட்சதை ஆரத்தி, 4.பழவகைகள் கொண்ட பழ ஆரத்தி, 5.கோலம் போட்ட ரங்கோலி ஆரத்தி என தெரிந்த ஆரத்திகளை தயார் நிலையில் வைக்கவும். நிவேதனமாக கொழுக்கட்டை, பச்சைப்பயிறு கலந்த பொங்கல், பாயாசம் ஆகியவற்றில் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். 

பூஜைக்குரிய நல்ல நேரத்தில் முதல் நாள் தாயாரான மணைப் பலகையை அம்மன் முகத்துடன் அப்படியே மெல்ல தூக்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கவும். அதன்முன் தலை வாழை இலை ஒன்றை வைத்து அதில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி வெற்றிலை பாக்கு பழத்துடன் தயாராக இருக்கும் மஞ்சாள் சரடுகளை வைக்கவும். நல்ல நேரத்தில், ’மங்களங்கள் அருளும் மகாலட்சுமித் தாயே, எங்கள் இல்லம் செழித்திட அழைக்கின்றோம், அன்புடன் எழுந்தருள்வாய்! என அனைவரும் மனதார வேண்டிக்கொள்ளவும். தெரிந்தவரை தேவியை பற்றிய பாடல்கள் (லட்சுமி அஷ்டோத்திரம், மலாலட்சுமி அஷ்டகம், கனகதார ஸ்தோத்திரம்) பாடி மலர்கள் அருகம்புல்லால் அர்ச்சனை செய்யவும். இந்த பூஜையில் சுமங்கலிகள் கன்னிப் பெண்கள் கலந்து கொள்ளலாம். முத்த சுமங்கலிகள் மாகலட்சுமியின் பேரருளை விளக்கும் கதையைச் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு பூஜை முக்கியமோ அந்தளவிற்கு கதை கேட்பதும் முக்கியம். கதை முடிந்த பின்னரே ஆராத்தி காண்பிக்க வேண்டும்.

விரதக்கதை- பல்லாண்டுகளுக்குமுன் வாழ்ந்த பத்திரசிவன் என்ற அரசனின் மனைவி சுசந்திரிகா நல்ல குணங்களும் அழகும் அடக்கமும் நிரம்பியவள். லட்சுமியை தியானித்து வழிபடுபவள். அவள் மகள் சியாமா மாகாலட்சுமியின் பக்தை, அவர்களது பக்திக்கு அருள் செய்ய வயதான சுமங்கலி கோலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று வந்தபோது அரசி சுசந்திரிகா நன்றாக உணவருந்தி தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அந்த வயதான மூதாட்டி அன்னை மகலட்சுமியின் பிறந்த தினமான இன்று இப்படி உண்டு தாம்பூலம் தரித்திருக்கின்றாயே இது நல்லது அல்ல என்று சொல்லக் கேட்டவள் உடனே வயாதான மூதாட்டியின் கன்னத்தில் அறைந்து விட்டாள். மனம் நொந்த மூதாட்டி வருத்தத்துடன் திருப்பிச் செல்கையில் மகள் சியாமா பார்த்து விபரம் கேட்டாள். முக்கியமான பூஜைமுறை ஒன்றை உபதேசிக்க வந்த தன்னை உன் அன்னை அவமானப் படுத்தி விட்டாள் என்றவுடன், சியாமா மூதாட்டியை வணங்கி அந்தபூஜை முறையை தனக்கு உபதேசிக்க வேண்டினாள். அந்தமுறைகளை கேட்டறிந்த சியாமா அன்று முதலே வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க ஆரம்பித்தாள் சுசந்திரிகா மூதாட்டியை அவமானப் படுத்தியாதால் நாட்டின் செல்வம் குறையலாயிற்று. நாடு கைவிட்டுப் போகுமுன் மகளின் திருமணத்தை நடத்தினான் பத்திரசிவன். புகுந்த வீட்டிலும் தன் விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தாள் சியாமா. அவள் கணவன் மாலாதரனின் இல்லத்தில் செல்வம் குவிந்தது. சியாமா வசதியாக இன்பமாக வாழ்ந்தாள். தன் தாய் தந்தையர் நாடிழந்து வீடிழந்து ஏழைகளாக வனத்தில் வாழ்வதை அறிந்த சியாமா அவர்களுக்கு ஒரு கூடையில் பொன்னும் பொருளும் வைத்து அணுப்பினாள். ஆனால் சுசிந்திரிகா அதை தொட்டவுடன் கரியாக மாறின. இதைக் கேள்விப்பட்ட சியாமா முன்பு தன் தாய் மூதாட்டியாக வந்த அன்னை மகாலட்சுமியை அவமானப் படுத்தியை நினைவுகூர்ந்து அதற்கு பரிகாரமாக தன் அன்னையையும் வரலட்சுமி விரதம் இருக்க அறிவுறுத்தினாள். சுசிந்திரிகாவும் சியாமாவின் ஆலோசனைப்படி விரதம் இருந்துவர படிப்படியாக அவர்கள் நிலை உயர்ந்து மீண்டும் அரசன் ஆனான் பத்திரசிவன்.

ஆரத்தி காண்பித்து அன்னையை வணங்கியபின் மூத்த சுமங்கலி ஒரு சரடினை எடுத்து அம்மனுக்கு கட்டவேண்டும் பின்னர் அவர் கையிலிருந்து மற்ற சுமங்கலிகள் சரடைப் பெற்று கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளவும். சரடு கட்டிக் கொண்டபின் வயதில் மூத்தோரை வணங்கவும். பூஜைக்கு வந்துள்ள சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், இவற்றுடன் இயன்ற அளவிற்கு புடவை அல்லது ரவிக்கையைப் பிரசாத பொருட்களுடன் வைத்துக் கொடுக்கவும். விரதம் இருக்கும் பெண்கள் அன்று முழுவதும் நிவேதனப் பொருட்களையே உண்ண வேண்டும்.

மறுநாள் காலையில் நீராடி தீபமேற்றி தூப தீபம் காட்டி பின்னர் பால்பாயசம் அல்லது கற்கண்டு கலந்த பால் நிவேதனம் செய்து மகாலட்சுமியே என்றும் நீங்காதிரு என்று பிரார்த்தித்துக் கொண்டு மங்கள ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டவும். ராகு காலம், எமகண்டம் இல்லாத நல்ல நேரம் பார்த்து அல்லது மாலையில் மண்டபத்தை பிரித்து கலசத்தில் பதித்த அம்மன் முகத்தினை எடுத்து சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தவும், அலங்காரத்தை கலைத்து பூக்களையும், மஞ்சள் சந்தனம் கலசநீர் ஆகியவற்றை ஓடும் நீரில் அல்லது கிணறு குளத்தில் விடவும். வெள்ளி முகம் அம்மனுக்கு அணிவித்த வஸ்திரங்களை எடுத்து சுத்தப்படுத்தி அடுத்த முறைக்கு பயன் படுத்த வைத்துக் கொள்ளவும். கலசத்தில் இருக்கும் அரிசியை நீர் ஊற்றாமல் இருந்தால் அதனுடன் இலையில் இருக்கும் பச்சரியையும் வீட்டில் இருக்கும் மற்ற அரிசியுடன் கலந்து சக்கரைப் பொங்கல், அல்லது பால்பாயாசமாக உபயோகிக்கவும். ஏற்கெனவே பூஜிக்கப்பட்ட அரிசியாதலால் அதுவே பிரசாதம். மறுபடியும் நிவேத்தியத்திற்கு உபயோகப்படுத்தக் கூடாது. தொடர்ந்து இந்த விரதம் மேற்கொள்பவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று விரதம் இருக்க வாய்ப்பில்லை என்றால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்யலாம். வேண்டுமென்று தவிர்த்துவிட்டு அடுத்த வெள்ளிக் கிழமை விரதம் மேற்கொள்ளக் கூடாது.

ஆடிக் கிருத்திகை- முருகனுக்கு உகந்த நாள். ஆறுமுகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆடிக்கிருத்திகையில் முருகனை வணங்கி விரதமிருந்து வழிபட்டால் பூவுலக வாழ்விற்குத் தேவையான அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்யம் ஆகியவற்றுடன் மோட்சம் கிட்டும் என அருள் புரிந்தார் ஈசன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பொதுவான விரத முறைகளை கடைபிடிக்கலாம். பொதுவாக உப்பைத் தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதக் கிருத்திகையில் விரதத்தை முடிப்பது சிறப்பு. முருகன் செவ்வாயின் அம்சம். எனவே இவ்விரதத்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கிட்டும்.

ஆடி ஏகாதசி- வளர்பிறை ஏகாதசி சயனி ஏகாதசி என்றும் தேய்பிறை ஏகாதசி யோகி ஏதாதசி என்றும் சொல்லப்படும். குபேரனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யும் ஹேமமாலி என்பவன் மனைவியின் அழகில் மயங்கி எப்போதும் செய்து வரும் பணியை மறந்ததால் அவனை குஷ்டம் பீடிக்க ஈசனை வழிபட்டு ஆடிமாத தேய்பிறையில் ஏகாதசி விரதமிருந்து பூர்த்தி செய்தபோது அவன் நோய் நீங்கியதால் யோகி ஏகாதசி எனப்பட்டது. தேய்பிறை ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வழிபடுவோர்க்கு நோய்கள் தீரும். மகாபலியை பாதாளத்தில் அழுத்தியபின் மகாவிஷ்ணு பாம்பனையில் சயனம் கொண்ட வளர்பிறை நாள் சயனி ஏகாதசி. விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவோர்க்கு அனைத்து வளங்களும் கிட்டும், எதிரிகள் தொல்லை இல்லை.

ஆடிப் பூரம்- கோதை என்ற ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்தது ஆடிமாத பூர நட்சத்திரத்தில். இந்த விரதம் இருந்து திருமாலை வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும். இறையருள் சித்திக்கும். ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு கைநிறைய வளையல்களை அடுக்கி மூன்று நாட்களுக்கு முன்பு ஊறவைத்த முளைவிட்ட தானியங்களை நைவேத்தியமாக வைப்பர். வளையல்களை குழந்தை வரம் வேண்டியவர்களுகு பிரசாதமாக கொடுக்கலாம்.

ஆடி அமாவாசை- நிம்மதியான குறையிலா வாழ்வு பெற மக்கள் நீத்தோர் நினைவு செய்தல் அவசியம். இறந்த முன்னோர்களுக்கு நீரும் எள்ளும் விடுத்து செய்யும் பித்ரு வழிபாட்டை ஆடி அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி அதன் கரைகளில் அமர்ந்து செய்வித்தால் குடும்ப ஒற்றுமை நீடித்து குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், பண்பும் வளரும்.

இருவேறு தன்மைகள் கொண்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்த நாளில் எந்த ஒரு கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. மற்ற எல்லா திதிகளிலும் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் பெற்றிருக்கும். அமாவாசைய்னறு எந்த கிரகமும் தோஷம் அடைவதில்லை. அமாவாசை, பௌர்ணமி என்ற இரு நாட்களும் விரத நாட்களாக கருதப்படுவது இதனால்தான். அமாவாசையன்று தந்தை மற்றும் தாயை இழந்தவர்கள் வழிபாடு செய்யும் முறை பிதுர் தர்ப்பணம் / சிரார்த்தம் ஆகும். ”பித்ரு தேவதா நமஹ, மாத்ரு தேவதா நமஹ” என வேதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவர்களின் இரவுப் பொழுது தொடக்கமான தட்சிணாயன காலத்தின் ஆரம்ப மாதமான ஆடிமாத அமாவாசை பிதுர்களின் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும். நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள்- பிதுர் தேவர்களை நினைத்து நாம் சிரத்தையுடன் வழிபாடு செய்வதால் அது சிரார்த்தம் எனப்படும். அவரவர் வழக்கப்படி சிரார்த்தம், திவசம், படையல் என வழிபடலாம். இந்த வழிபாட்டினால் பூர்வ தோஷங்கள், முன்னோர் சாபங்கள் போன்றவை நீங்கி புண்ணியம் கிடைக்கும். திருமணப்பேறு குழந்தைகள்பேறு ஆகியவையும் கிட்டும். நாம் எள்ளும் தண்ணீர் விட்டு அர்க்கியம் செய்வது போன்றவைகளையும் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகள் வழிபாடுகள், ஆராதனை உற்சவம் எல்லாம் நம்மிடமிருந்து பெற்று நம் பிதுர்களுக்கும் அந்தந்த தேவதைகளுக்கும் சேர்க்கும் பொறுப்பு சூரியபகவானைச் சேர்ந்தது. அதனால்தான் முன்னோர்களை வழிபட்டபின் முழங்கால் அளவு நீரில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று மூன்று முறை நீரை இரு கைகளினாலும் எடுத்து விடுகின்றோம். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம் குலதெய்வம் தனக்கு முன்னுள்ள மூன்று தலைமுறை தந்தை பெயர்களைக் கூற வேண்டும். பின் வீட்டில் முன்னோரின் படம் இருந்தால் தெற்கு முகமாக வைத்து அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து வழிபடவேண்டும். அவர்கள் விரும்பியவற்றை சமைத்து / வைத்து இலையில் பரிமாறி படைத்து ஆரத்தி காட்டி வழிபட்டு காக்கைக்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும். இதற்குத்தான் தென்புலத்தார் வழிபாடு எனப்பெயர்.

ஆஸ்தீக முனிவர் ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தி நாக இனத்தை காத்த ஆடி அமாவாசைக்குப் பின்வரும் சதுர்த்தி நாகசதுர்த்தி- நாக பஞ்சமி என கொண்டாடப்படுகின்றது.


&&&&&

Read 2025 times Last modified on புதன்கிழமை, 06 November 2019 10:17
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19619416
All
19619416
Your IP: 162.158.78.142
2020-11-24 23:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg