gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஞானதீப யோகம்

Written by

            ஓம் நமசிவாய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்

ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்

கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்

நண்ணுவதும் நல்லார் கடன்!

                          ******

ஞானதீப யோகம்

எல்லா தத்துவங்களையும் கலைகளுடன் ஞானமாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானதீப யோகம் பயின்றால் நலமாகும். இங்கு ஞானதீப யோகம் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள முயல்வோம். இந்த யோகத்தை ஞானமாலை யோகம், ஞானசட்க யோகம், ஞானஅகவல் யோகம் பயின்றபின் பயிலவும்.

உலக உயிர்கள் முக்தி அடைவதற்காகச் சிவபெருமான் தன் கருணையால் வகுத்த ஆகமங்களின் ஞானத்தை - சிவ ஞானத்தை சொல்வதற்கு யானைமுகக் கடவுளை மனதில் வணங்குகின்றோம்.

குண்டலினி, அசபை

வெண்கமல நாலிதழாம் மூலா தாரத்தின்

மிகநாப்பண் ஊன்றி விருத் தாகாரச் சர்ப்பம்

அங்கதுபோல் எழுந்திருக்கும் குண்டலியின் நடுவே

அரவிந்த நூல்போல் அங்கு எழுபத்து ஈராயிரமாம்

எண்படு நாடிகளுக்கும் மூல மதமாம் பிரமம்

எனும்நாடி மத்தியத்தின் அசபைமன ஓங்காரத்து

ஒண்பயிலும் நிறம் மின்னின் ஒளியாகி எழுந்தங்கு

உயர்நாடி அடி அறவாய் உறும்விரல் பன்னிரண்டே.

மூலாதாரத்தில் வெள்ளையான இதழ்களையுடைய நான்கு இதழ் தாமரையின் நடுவே உறங்குவதும் விழித்து எழுவதுமான குண்டலினி சக்தி 72 ஆயிரம் நாடிகளுடன் இணந்துள்ளது.. நாடிகளின் உள்ளே இச்சக்தியே நுழைந்து செயல் படும். எல்லா நாடிகளுக்கும் மூலமான நாடி சுழுமுனை நாடி. பிரம்மரந்திரம் வரை செல்வதாலும் பிரம்ம சக்தி குண்டலினி ஏற இடம் தருவதாலும் பிரம்ம நாடி எனப்படும், அதன் நடுவே அசபை என்ற பிராண இயக்கம் உள்ளது. அதன் கீழே ஓங்காரம் மின்னல் போல் ஒளிர்வதாகும். அசபை, ஓங்காரம் உள்ள இடத்திலிருந்து மணிப்பூரகம் 12 விரல். நாபிக்கு கீழ் மூலாதாரத்திற்கும் 12 விரல், அசபை மூச்சை இழுக்கவும் விடவும் துணை செய்யும் சக்தியாகும்.

சுழுமுனைநாடி

வருநாபிக் கீழ்க்கோணம் மூன்றாஅகும்; நிறம்பால்

வலக்கோணத்து ஓங்காரம் மருவும் இடக் கோணில்

ஒருவாத ரீங்காரமாம்; அதன்மேல் கோணத்து

ஒள்ளிதழ் ஆறாயமரைக் கர்ணிகையுள் நடுவே

பெருநாடி பொருந்தும்; அதற்கு இருபுறமும் விருத்தம்

பேசிடும் வேணு எனப் பிரிவுறும் வீணாதண்டு

உருவாதியாய்ப் பிரம ரந்திரம் மட்டாக உறும்;

இடக்கோண் உதித்த உயர் இடை நாடியதும்.

நாபி-உந்தி-தொப்புள் கீழ் உள்ள பால் நிறமான முக்கோணத்தின்(இது சிவப்பு நிற முக்கோணம்- நெருப்புத்தானம்- மணிபோலும் நிறம் உடையது) வலது மூலையில் ஓங்காரமாகிய பிராணவமும் இடது மூலையில் ரீங்காமாகிய ஹ்ரீம் மந்திரம் பொருந்தியுள்ளது.

ஆறு இதழ் சுவாதிட்டானத்தின் நடுவிலிருந்து வந்து சுழுமுணைநாடி மேல் கோணத்தில் பொருந்தியிருக்கும். மணிபூரகத்திற்கு வந்த சுழுமுனைநாடியின் வலமும் இடமும் இடா பிங்களா நாடிகள் விந்து- வட்டம்போல் ஒளிரும். மூங்கில் போன்ற வீணாத்தண்டில் சுழுமுனை நாடி பிரம்மந்திரம் வரை செல்லும். இங்கு நாபியிலிருந்து ஓம் என்பதை உச்சரிக்கும் யோகமாகும்.

இடை பிங்களை நாடிகள்

உற்றவலக் கோண் உதித்த பிங்கலை நாடியதும்

உளக்கமலம் முதல் ஐந்தில் உறுவதும் நீங்குவதாம்

பிற்றையும் அந்நாடி புரு மத்தியமவ் வளவாய்ப்

பிரிவறவே வந்திரண்டு நாசியினில் பிறங்கும்

முற்றரும் அக்கோணத்தின் இரண்டெழுத்தின் நிறந்தான்

முதிரும் அனல்சிகை ஒளியாய் மூலமுதல் நாபி

மற்றளவும் வியாத்தம்; அனாகத சிவமாம் என்பர்;

வருநாபி அதன்மேல் எட்டங்குலமாம் அவையுள்

இடது கோணத்தில் உதித்த இடாநாடியும், வலது கோணத்தில் உதித்த பிங்கள நாடியும், இதயம் தொண்டைக்குழி மற்றும் கீழ் உள்ளதுமாகிய ஐந்து இடங்களில் உள்ள ஆதார கமலங்களை தமக்குள் இடம் வலம் மாறிமாறிக் கடந்து புருவ மத்தியளவு செல்லும். இரண்டு மூக்குத்துளைகளிலும் அடையாளம் காட்டி இடது மூக்கில் மூச்சு செயல் படும்போது இடாநாடியும் வலது மூக்கில் மூச்சு செயல் படும்போது பிங்கள நாடியும் வெளிப்படும்.

முக்கோணத்தின்நடுவில் தொடங்கும் இரண்டெழுத்து மந்திரமாகிய ‘ஹம்சம்’ என்பதன் நிறம் எரியும் நெருப்பு கொழுந்து போன்றது. மூலாதாரம் முதல் மணிப்பூரகம் வரை இந்த ஒளி பரவியிருக்கும். இந்த ஹம்ஸம் மந்திரத்திற்கு அநாகத சிவமே தெய்வமாவார்.

‘ஓம்’–சைவப் பிரணவம், ‘ஹ்ரீம்’–சக்திப் பிரணவம், ‘ஹம்ஸம்’ –சிவசக்திப் பிரணவம்.

1.அகரக்கலை-மேதை.

அகாரகலை நிறம் உரைக்கும் சொரிதழல்போல் ஒளியாம்

அக்கலை எங்கும் விரவி அமர்ந்திருக்கும் அதுவும்

பகர்தருமாத் திரை மூன்றால் அளவிடப் பட்டிருக்கும்

பகரும் அகாரத்தில் மண்முதல் அறுநான்காக

நாகாவசுத்த தத்துவங்க ளோடும் வியாபகமாய்

நண்ணு சடத்துவாக் களுக்கு  நாயகமுமாகி

விகாதமுறும் பல பிரபஞ்சங்கள் தமை விரிக்கும்

வித்தான காரணமாய் விரைப்பதுமா சனத்தில்.

மேவியிடும் நான்முகன் அங்கு அதிபதியாய் இருப்பான்;

அகரக்கலையின் நிறம் எரியும் நெருப்பு போன்றது. அது எங்கும் பரவிய ஒளியாகும். மாத்திரை மூன்றாகும். நிலம் முதலிய 24 ஆன்ம தத்துவங்களாகிய அசுத்த மாயா தத்துவங்களோடு பரவியும் ஆறு அத்வாக்களோடு தலையான பிணைப்பு பெறும். பல பிரபஞ்சங்கள் விரிவதற்கு விதை போன்று காரணமாய் இருக்கும். யாவும் தோன்றுவதற்கு காரணமாய் இருப்பதால் பிரம்மா இதன் அதிதேவராவார்.

2.உகாரக்கலை-அருக்கீசம்,

மிக இதயாதி கண்டம் வியாபகம் அவ்வளவாய்த்

தாவிடும் எண்விரல் பிரமாணத்தில் உறும் உகாரம்

சசி இரவு கூடு ஒளிபோல் தயங்கிடும் மாத்திரைதான்

பாவிரண்டால் அளவிடப்பட்டுப் புருடன் முதலாப்

பகர் அறு தத்துவத்துடனும் பற்று கடத்துவாக்கட்கு

ஒவிடும்; மால் அதிகார முதலாகி இருப்பன்

உகரக்கலையானது இதயத்துக்கும் கண்டத்திற்கும் எட்டு விரல் அளவாகும். நிறம்- நிலமும் சூரியனும் கூடியது போன்ற ஒளியாகும், ஏழு வித்யா தத்துவங்களில் புருடன் நீங்கி மற்ற ஆறோடும் பொருந்தும், அத்துவாக்களின் தொடர்பு பெறும். திருமாலே அதிபர்.

3.மகாரக்கலை, 4.விந்துக்கலை

உயர் கண்டம் முதல்தாலு அங்குலம் ஓர் நான்கே.

விடகலையாம் மகாரம்; நிறமின் ஒளி மாத்திரையே

விளம்பியிடில் ஒன்றாகும்; மிகுமாயா தத்துவத்

துடன் மருவி எங்கும் வியாபகம் அவ் ஆறத்து வாகட்

குயர்தேவர் உருத்திரன் அங்கு உவந்திருப்பன் தாலு

நடுமுதலாகப் புருவநடு அளவாய் அங்குலமும்

நவில்நாலாம் விந்து; நிறம் தீபம்; அரை மாத்திரை

சுடர்மருவும் சுத்தவித்தை ஈசன் இருதத்துவத்

துடன் மருவி வியாபிக்கும் ஒளிகொள் அத்வாக்களுக்கே.

தொண்டைக் குழியிலிருந்து நாக்கின் அடிவரையில் 4 அங்குலம் மகரமாகிய விடக் கலையாகும். அது மின்னல் போல் ஒளிரும். மாத்திரை ஒன்றாகும். சுத்தமாயா தத்துவத்துடன் பொருந்தி எங்கும் பரவி நிற்கும். ஆறு அத்துவாக்களுடன் கலந்து இருக்கும். அதிதெய்வம் உருத்திரன் ஆகும். நாவின் அடி முதல் புருவ மத்திவரை 4 அங்குலம்வரை விந்துக்கலையாகும். விளக்குச் சுடர் நிறம், மாத்திரை அரை நொடி. சிவ தத்துவத்தில் சுத்த வித்தையும் மகேசுவரனும் ஆகிய இரு தத்துவங்கள் பொருத்தியிருக்கும். அத்துவாக்களுக்குரிய மகேசுவரன் இதன் தெய்வமாகும்,

5.அர்த்தசந்திரன், 6.நிரோதினிக்கலை

முன்னிலையாய் நீடு மகேசுரன் இருப்பன்; புருவம்

முதலாக நெற்றி அந்தம் மொழி மூன்று அங்குலத்தில்

மன்னும் அர்த்தசந்திரன்; வாள் ஒளியாம்; மாத்திரைக்கால்

வருங்கலைகள் ஐந்து அதனில் அத்துவாக்கள் கூடிப்

பின்னும் அற நிற்கையினால் ஞானம் தூலப்

பெயராகும்; அர்த்தசந்திரன் மேல் மூன்றங்குலத்தில்

பன்னியிடும் நிரோதி; திரிகோணம்; நிறம்புகையாம்;

பயில்வுறு மாத்திரை அரைக்காலாகும் எனப்பகரும்

புருவம் முதலாக நெற்றிவரை 3 அங்குலம் அர்த்தசந்திரக்கலையகும், வாளின் ஓளிபோல் நிறம். மாத்திரை கால். இதுவரை கூறிய கலைகள் ஐந்தும் ஆறு அத்துவாக்களில் பின்னமில்லாமல் பொருந்தி யிருப்பதால் இவைகள் தூலப் பிரசாதம் எனப்படும். அர்த்த சந்திரனுக்குமேல் 3 அங்குலம் நிரோதினிக்கலையின் பரப்பு ஆகும். வடிவம் முக்கோணம், புகை நிறம், மாத்திரை அரைக்கால்.

7.நாதக்கலை, 8.நாதாந்தக்கலை

நிகழும் நிரோதினியின் மேல் மூன்று அங்குலத்தின் அளவில்

நீடிய தண்டதுபோல் நாதம் இருமருங்கும்

புகழும் இருவிந்துவதாம் நாதமும் மாணிக்கப்

பொங்கொளியாம்; விந்து நிறம் படிகம்; எனப்புகல்வர்

இகழ்வறு மாத்திரையானது மாகாணி என இசைப்பர்

இக்கலைக்கு மேல் பிரம்ம ரந்திரம் மட்டாகத்

திகழ்மூன்றங் குலமதனில் நாதாந்தம் கலப்பை

சேர்வலத்து விந்துவுடன் செறியும்நிறம் உரைப்பாம்.

மின் இரண்டு போல் ஒளியாம் விந்து நிறம் கறுப்பாம்

மிகு மாத்திரை அரைமாவே அரைக்காணியாகும்

நிரோதினியின்மேல் 3 அங்குலம் வரை நீண்ட தண்டுபோல் நாதம் இருக்கும். இரு பக்கமும் இரு விந்துகள்- புள்ளி வட்டம் இருக்கும். நிறம்- மாணிக்க ஒளியாம். மாத்திரை மாகாணியாகும். விந்துவின் நிறம்- படிகம். நாதக்கலைக்குமேல் 3 அங்குலம் பிரம்மரந்திரம் வரை நாதாந்தக்கலைக்குரியது. ஒரு கலப்பையின் ஒருபக்கம் புல்லி வட்டத்துடன் இருக்கும். நிறம்- இருமின்னல் போன்றது. விந்துவின் நிறம் கறுப்பு. மாத்திரை அரைமாவே அரைக்காணியாகும்.

பன்னிடும் இம்மூன்றும் சூக்குமமாம் முன்னம்

பகர்ந்த கலை ஓர் ஐந்தும் பரிந்திவையில் கூடில்

அன்னதனை அட்டகலாஞானம் என்பர்

அரியசதா சிவம் சக்தி சிவதத்துவத் தினுக்கும்

மன்னும் அர்த்த சந்திரனே முதல் கலை நாலினுக்கும்

வழுத்தியிடும் சதாசிவனைக் கர்த்தா வாய்த்துதியே.

நிரோதி, நாதம், நாதாந்தம் ஆகிய மூன்றும் சூக்குமப் பிரசாதம் என்பர். மேதை, அருக்கீசம், விடம், விந்து, அர்த்தசந்திரன் ஆகிய தூலஞானக்கலைகள் ஐந்துடன் நிரோதி நாதம் நாதாந்தம் ஆகிய மூன்றும் சேர்த்து ‘அட்டகலா ஞானம்’ ஆகும். முதல் ஐந்தும்- தூல ஞானம், பின் மூன்றும்- சூக்கும ஞானம், இவை எட்டும்- அட்டகலா ஞானம்.

9.சக்திக் கலை, 10 வியாபினிக்கலை

ஓங்கிடும் பிரமரந்திரமேல் ஓர் அங்குத்தில்

உறும் சக்தி; விந்து இடத்துறை கலப்பை போலாம்

தீங்கில்நிறம் ஒருநூறு கதிர்ப்பிரகாசம்தாம்;

திகழ்விந்துப் பச்சை நிறம்; தீதறு மாத்திரைதான்

ஆங்கது ஐம் முந்திரிகையதாம்; அதன்மேல் அங்குலம் மூன்று

அதனில் வியாபினி; சூலமாகும்; விந்து வலமாம்

நீங்கரிய நிறமது ஓராயிரமாய் உதிக்கும்

நிகழ் இரவி யொளி; விந்த நிறம் இரத்த மாமே.

அகலரும் மாத்திரையது அரைக்காணியின் கீழ் அரையா

அறைந்திடும்; கீழ்க்கலைகளெல்லாம் அமைவுடன் வியாபகமாய்

புகலுகையால்; வியாபினிய தென்பர்; இவையிரண்டும்

போந்தகலை இருநான்கும் பொருந்தல் தசகலையாம்

பிரமரந்திரத்தின்மேல் ஓர் அங்குலம் சக்திக் கலையாகும். கலப்பையின் இடப்பக்கம் விந்து இருக்கும், நிறம் நூறு சூரிய ஒளீயாகும், விந்து நிறம் பச்சை, மாத்திரை மாகாணியில் பாதி ஐந்து முந்திரிகை. சக்திக்கலையின்மேல் 3 அங்குலம் வியாபினிக்கலை. வலப்பக்கம் விந்துவுடன் சூலம் இருப்பது வடிவம், நிறம் ஓராயிர சூரிய ஒளியாகும், விந்துவின் நிறம் இரத்தம் போன்ற சிவப்பு. இதன் கீழ் உள்ள எல்லா கலைகளுடனும் வியாபித்து இருப்பதால் இது வியாபினி எனப்பட்டது, சக்திக்கலையில் பாதி அரைக்காணியின்கீழ் அரை மாத்திரை. அட்டக்கலா ஞானமாகிய எட்டுக்கலைகளுடன் சக்தியும், வியாபினியும் சேர்ந்து தசகலா ஞானம் எனப்படும். அகரக் கலையை உச்சரிக்கும்போதோ அல்லது ஓம் –பிரணவம் உச்சரிக்கும்போதோ வியாபினிக்கலையில் வியாபகத்தால் இந்த ஓசை மேல் நோக்கி பரவும்.

11.சமனைக்கலை

இகல் அருவ வியாபினிக்கு மேல்நால் அங்குலத்தில்

இருஞ்சமனை; இரு குச்சி நடு இரண்டு விந்துப்

பகரும்நிறம் ஒரு கோடி சூரியர் போல் எறிக்கும்

பகல் விந்து நீலம்; முந்திரிக் கீழ்க்கால் மாத்திரையே.

கீழ்வரைக் கூறிப்போந்த கலைகளும் மாத்திரையும்

கிளர்ந்திடச் செய்கையினால் சமனை எனப் பேராம்

வியாபினிக்கலைக்குமேல் 4 அங்குலத்தில் இருப்பது சமனைக்கலை, இரு குச்சிகள் நடுவே இரு விந்துகள் இருப்பது இதன் வடிவம். நிறம் ஒருகோடி சூரிய ஒளியாம். விந்துவின் நிறம் நீலம், மாத்திரை வியாபினியில் பாதியாகிய முந்திரி கீழ்க்கால் ஆகும். இதன் கீழ் கூறிய பத்து கலைகளையும் மாத்திரைகளையும் சமன் செய்து இயங்கச் செய்வதால் இது சமனை எனப்படும். இது அதி சூக்கும ஞானம் ஆகும்.  

12.உன்மனைக்கலை

நீள்சமனை தனக்குமேல் அங்குலம் நாலதனில்

நிகழ்ந்திடும் உன்மனை வடிவு வட்டம்; நிறம் இருளாம்

தாழ்வறு மாத்திரையது கீழரையது அரைக்காலாம்

தரும் இரண்டும் அதிசூக்கம்; சாற்றிடும் முற்கலைகள்

கோள்பெறவே பொருந்திடுதல் துவாதச நற்கலையாய்க்

கொண்டிடுவர்; மேலும் மகா சூக்குமத்தைக் குறிப்பாம்,

சமனைக்கு மேல் 4 அங்குலத்தில் உன்மனையின் பரப்பாகும், இதுவே இறுதிக் கலையாகும், வடிவம் வட்டமாகும், நிறம் இருள், சமனையில் பாதி மாத்திரை அளவாகிய கீழரையது அரைக்காலாம், இது அதி சூக்குமஞானம் ஆகும்.

13.வியோமரூபினி, 14.அனந்தை, 15.அனாதை,     

சொற்றிடும் சமனையாம் உன்மனைக் கீழ்சரத்தில்

சூழ்ந்திடும் நால் விந்துவுக்கும் தொகுநாமம் சொல்லில்

விற்றருநல் வியோமரூபை; அனந்தை; அனாதை

மேவும் அனாசிருதை என்றுன்னும் கலைநாலாம்

மற்றதனில் வியோமரூபினி ஞானாகாய

மாயிருக்கும் என்றபடி; மருவியிடும் அனந்தை

உற்று அயன்மால் உருத்திரர்க்கும் அளவிட ஒண்ணாதாம்;

ஒளிகொள் அனாதையும் அதற்கோர்முதல் இலை என்றதுவே,

உன்மனை, சமனைக்கு கீழ் வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை ஆகிய 4 கலைகள் இருக்கும், வியோம ரூபினி –ஆகாயம் என்றும், அனந்தை –மும்மூர்த்திகளும் அளவிடமுடியாததால் கடல் என்றும், அனாதை- தனக்கு முதலாக எதுவும் இல்லாததால் கண்ணாடி என்றும் (கண்ணாடியில் தோன்றும் உருவத்துக்கு தாய் தந்தை இல்லாததுபோல்) கொள்க,

16.அனாசிருதை

அனாசிருதை என்றதுமுன் கலைகளிலும்; தேகம்

ஆதி பிரபஞ்சத்தும் தோன்றிடும் அதுவாம்

மனாதிகளுக்கு அணுகாத ஞான ஆகாயமும்மேல்

வளர்ஞான சமுத்திரம் ஞான தருப்பணமும்

பனாதசரக் காலத்தில் ஒரு நூறாயிரமால்

பகர்கோடி இந்து வெளிப் பரப்பு எனவும் வகுப்பர்

தனாதுகலை நாலும் ஆதி சூக்குமப் பிராசாதத்

தானாம் முற்கலை பொருந்தில் சோடசமாய்ச் சாற்றும்.

முன் சொல்லிய கலைகளிலும், உடல் முதலிய பிரபஞ்சப் பொருள்களில் புலப்படத்தக்க தாக இருப்பதால் அனாசிருதை எனப்பட்டது. மனம் புத்தி முதலிய அந்தக்காராணங்களுக்கு அகப்படாத ஞான ஆகாயமும், அதன் மேல் ஞானக் கடலும், ஞானக் கண்ணாடியும் பனிக்காலத்தில் ஒரு லட்சம் கோடிச் சந்திரர்கள் போல் ஒளிர்வதாகும். வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை ஆகிய 4 கலைகளும் அதி சூக்கும ஞான கலைகள் ஆகும், முதல் கூறிய 12 கலைகளுடன் இந்த நான்கும் சேர்ந்து பதினாறுகலைகள் ஆவதால் இவை சோடச கலா ஞானம் எனப்படும்.

சூன்ய தரிசனம்   

மூலாதாரம் முதலாய் பன்னிரண்டு கலையில்

முறைமையதாய் உள்ளடங்கும் ஞான மனுவை

மேலான பரமா சாரியானாலே கண்டு

விளம்பியிடு மாத்திரை பேதங்களையும் மிக அறிந்து

மாலற உச்சரிக்கும் இடத்துமுற்சொல்மூலம்

வரும் பிரம் நாடியதின் மத்தியத்தில் நின்றும்

சாலாக மேல்துவாத சாந்தம் வரை நிற்கும்

கருதரும் சூனியம் ஆறும் காரணத் தியாகமதும்

மூலாதாரம் முதல் உன்மனை வரை உள்ள 12 கலைகளை உள்ளடக்கிய பிரசாத யோகத்தை அதன் எல்லைகள், வடிவங்கள், நிறங்கள், மாத்திரைகள் ஆகியவற்றை முற்றிலும் அறிந்து மானசமாக உச்சரிக்கும்போது சுழுமுனைநாடி வழி செல்லும்போது ஆறு சூன்யப்பகுதிகளையும் முறையாக கூறுவதே தியானிப்பதாகும். பிரசாத நூல்களில் நாபிக்கமலமாகிய மணிப்பூரகத்திலிருந்து உச்சரிக்க சொல்லும்படி உள்ளது. முன்னோக்கி எழும் விசை தனக்குபின் உள்ளதையும் இழுத்துச் செல்லும். ‘ஓம்’ என்பதும் ‘ஹம்ஸ’ மந்திரமும் மூலாதார முக்கோணத்தில் இடம் வலமாக இருப்பதால் ஓங்காரம் மணிப்பூரகத்திலிருந்து இயக்கும்போது மூலாதாரத்துடன் தொடர்பு ஏற்படும், நாபிவரை 12விரல் குண்டலியின் பரப்பு என்பதால், மணிப்பூரகம் முதல் துவாதசாந்தம் வரை முன்னோக்கிச் செலுத்தப்படும் ஓசை வாயு ஆகிய முயற்சிகளால் மூலாதாரம் முதல் மணிப்பூரகம் வரை உள்ள 12 அங்குல அளவு உணர்வு பெறும் என்பதாகும். ஓம் என்பதை நாபி முதல் புருவ நடுவரை நீட்டி அதன்நாதம் உன்மனைவரை (துவாத சாந்தம்) செல்லுமாறு 108 உருத்திராட்சமாலை வழி ஓம் சொல்வதற்கு 12 நிமிடம் 36 நொடிகள். இந்தக் கால அளவே ஒரு தியானம், இப்படி 12 தியானங்கள் செய்வது சமாதி அனுபவத்தைக் கொடுக்கும்,

பரமாவத்தைகள் ஐந்து

யோகமதாய் விடுகன்மம் அத்தனையும் உணர்ந்து அங்கு

உச்சரிக்கும் இடத்து அகரம் முதக் மூன்று அக்கரத்தைப்

பாகமதாய் உச்சரிக்கும் இடம் பரம சாக்கிரம்;

பகர்விந்து தனில் ஊன்றல் அதுபரம சொப்பனம்;

மாகமுறும் அர்த்தசந்திரன் முதல்நாதம் நாலில்

வந்துநுதல் அதுபரம சுழுத்தியதாம்; சக்தி

சேகருவ்யாபினி சமனை உன்மனையாம் சக்தி

சொறிகலை நாலிலும் பரம்மிகக் கூடியதே துரியம்,

அட்டாங்க யோகத்தை தெரிந்து பழகியபின் இந்த ஞானயோகத்தை செய்யும் பயிற்சியில் 5 அவத்தை நிலைகள் உண்டு, 1.அகரம், உகரம், மகரம் ஆகிய 3 கலைகளின் எல்லையளவு மட்டும் ஊன்றி நிற்பது ‘பரமசாக்கியம்’ என்ற விழிப்பு நிலை அவத்தை. 2. விந்துக்கலையில் மட்டும் ஊன்றி நிற்பது ‘பரம சொப்பனம்' என்ற கனவு நிலை அவத்தை, 3.அர்த்தசந்திரன், நிரோதினி, நாதம் நாதாந்தம் ஆகிய4 கலைகளில் எல்லையில் ஊன்றி நிறப்து ‘பரமசுழுத்தி’ என்ற உறக்க அவத்தை. 4.சக்தி, வியாபினி, சமனை, உன்மனை ஆகிய 4 கலைகளின் எல்லையில் ஊன்றி நிற்பது பரம துரியம்’ என்ற பேருறக்க அவத்தை. தருமபுரம் மடத்தில் 16 கலைகளின் எல்லையில் ஊன்றி பயிற்சி செய்ய 16 ஒடுக்கம் உள்ளது. குறைந்த அளவு எல்லை ஒரு கலையில் 12 நி, 36 வி குறையாது நிற்பது. அதிக அளவு இப்படி 12 மடங்கு செய்வது ஆகும்.

பிறிவிலரும் வியோமரூபினி அனந்தை அனாதை

பேசும் அனா சிருதை எனும்நாலு சிவ கலையில்

மறுவறவே ஞானசக்தி இடமாக ஒடுங்கில்

வரும்பரமா தீதமதாம் ஐந்து அவத்தை வினவிய

நெறி திகழும் உன்மனையின் அந்நியத்தில் அனாதி

நிகழ்ந்துசிவன் மகா கற்பத் தொரு கோடி இரவி

செறிகதிர்போல் விளங்கிடுவன் அவ்வொளியைக் காணும்

திறமதனை உரைத்திடுவன் சிவாகமத்தின்படியே,

சிவகலை- சிவாகமம் என்றாலும் எல்லாச் சமயத்தாரும் தம் கடவுள் அருளிய கலை என்று இந்த யோகத்தை பயில வேண்டும், ஞானம்- பொதுச் செயல். வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை ஆகிய நான்கில் ஒடுங்கிய ஞான சக்தியை உணரும்போது அந்த நிலை பரமதுரியாதீதம் எனப்படும், இந்நிலை ஐந்தாம் அவத்தை. உம்மனைக்குமேல் அனாதியாகிய சிவம் ஊழிக்கால முடிவில் எரிக்கும் சூரியர்போல் ஒரு கோடிச் சூரியர்கள் கூடிய ஒளியுடன் விளங்கும், ஐந்து பரம அவத்தைகளை அனுபவித்தபின் பேரொளியை உணரும் திறத்தை சிவாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது,

ஐந்து நின்மலா அவத்தைகள்

நின்மலமாம் ஐந்தவத்தை நீங்கும்வகை உரைக்கில்

நிகழும் அகாரமும் மனமும் இந்திரியம் ஈரைந்தும்

சொன்மையதாம் இதயமதில் கிரியாசக்தி யினால்

துகளற நீக்கிக்கண்டால் நின்மல சாக்கிரமாம்

வன்மையுறும் உகாரமொடு புத்தியும் மாத்திரைகள்

வருபத்தும் கண்டத்தில் ஞான சக்தியாலே

புன்மையற நீங்கிக் கண்டிடலே சொப்பனமாம்

புகலும் மகாரத்தினுடன் ஆங்காரமதுவும்.

அகரக்கலையையும், மனத்தையும், ஞான இந்திரியம், கர்ம இந்திரியம் ஆகிய பத்தையும், கிரியா சக்தியையும் இதயத்தில் வைத்துத் தியானிக்கும் தியானத்தால் கடக்கும்போது தோன்றூம் உள்ளொளி காணுதல் ‘நின்மல சாக்கிரம்’ ஆகும், உகரக் கலையையும், புத்தியையும் (பத்து மாத்திரைகளாகிய இந்திரியங்களால் உணரப்படும்) பூர்வ வாசனைகள் பத்தையும், ஞான சக்தியையும் கண்டத்தில் வைத்து தியானிக்கும்போது தோன்றும் அனுபவமே நின்மல சொப்பனம்’ ஆகும்,

அடிநாவில் இச்சாசக்தி யினாலே நீக்கி

அவ்வொளியைக் கூட்டுகின்ற அவதாரமே சுழுத்தி

வடிவான விந்துவும் சித்தமும் புருவ நடுவில்

மன்னுதிரோ தான சக்தி யதனாலே மறித்து

நெடிதாக அதில் கூடிக் கலத்தலது துரியன்;

நிகழ்நாதம் உளத்தோடு பிரம்மரந்தர மீதில்

அடியான பரையாலே நீங்கி அதில் கலத்தல்

அவ்வறிவு மிகக் கெடல் நின்மல துரியதீதம்.

நாவின் அடியில் மகரக்கலயும், அகங்காரமும், இச்சா சக்தியும் கூடித்தியானித்தால் ஏற்படும் ஒளியைக் காண்பதே ‘நின்மல சுழுத்தி’ என்பதாகும். விந்துக்கலையும் சித்தமும் புருவ நடுவில் திரோதான சக்தியுடன் கூடித்தியானித்தால் வரும் அனுபவமே நின்மல துரியம்’ என்பதாகும். நாதக்கலையும், உள்ளமும், பிரம்மரந்திரத்தில் பரையினோடும் கூடிக் கலந்தால் அறிவு மிகவும் கெடுவது ‘நின்மல துரியாதீதம்’ எனப்படும், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, திரோதான சக்தி, பரையாகிய பரா சக்தி ஆகியவற்றோடு கூடித்தியானம் செய்தால் மனம் முதலிய அந்தக் கராணங்களும் இந்திரியங்களும் இல்லாது போகும், அதுவே நின்மலத் தியான வழியாகும்.

ஆன்ம லயம்

இவ்விடத்தில் தன்னது ஞாதுரு ஞானஞேயம்

இவை நாடாது உன்மனைக்கும் அப்பாலாய் இருக்கும்

செவ்விய பூரண ஞானானந்தத்தைப் பெறுதல்

திகழ்சுவானு பூதியெனும் ஆன்ம லயமதாம்

அவ்விதியின்படியே சோட்சகலைகள் எல்லாம்

அருஞ்சோபனமாக அகற்றி அதன் முடிவில்

திவ்வியமாம் பரவத்துத் தெரிசனம் தள்ளத்

தெரிந்த பிரசாதத்தில் அத்வாக்கள் தனிலும்

இந்தத் துரியாதீத நிலையில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் இவை முறையே ஞாதுரு, ஞானம், ஞயம் என்ற மூன்றையும் வேறு வேறாக உணராமல் ஞயத்தை மட்டும் அதாவது அறியப்படும் பொருளை மட்டுமே அறிந்து உன்மனைக்கும் அப்பால் நின்று நிறைவான அறிவால் இன்பத்தை அனுபவிப்பதே ‘சுவானுபூதி’ இதுவே ஆன்மலயம் எனப்படும். இப்படி 16 கலைகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து இறுதியில் பரம் பொருளைக் காண்பது ‘பரவஸ்து தரிசன’ மாகும்

அந்தரங்க சொரூபமதாய் நின்றிடும் ஆகமத்தில்

அரிய பொருள் தனைப் பிண்டம் ஆக்கிய தேகத்தும்

பந்தமுறும் அண்டமதாம் பிரம்மாண்டம் தனிலும்

பகர்ந்த சரா சரங்கள் என்னும் பல்லுயிர்க்கும் உயிராய்ச்

சந்தமுறும் சகசிருட்டி காரணமும் ஆகிச்

சச்சிதா னந்தமதாம் பரவத்து அதனை

எந்தையென நாள்தோறும் அனு சந்தானம் செய்து

ஏத்திடுவர் இருவினைகள் அகன்ற இருந்தவரே.

எல்லாப் பொருளிலும் உள்ளீடாய் நிற்பதும், ஆகமங்களில் சொல்லப்படும் அரிய பொருளும், சராசரங்களில் பல உயிர்க்கும் உயிரானதும், படைத்தல் முதலிய ஐந்து தொழில்களை செய்யக் காரணமாய் இருப்பதும், சத்சித் ஆனந்தமாகிய வடிவை உடையதுமான பரவஸ்துவை பரம் பொருளை, அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக அறிந்து, பிண்டமாகிய உடலிலும் பிரம்மாண்டமாகிய அண்டப் பகுதிகள் அனைத்திலும் வைத்து நாள்தோறும் இடைவிடாது தியானிப்பவர்கள் எல்லா வினைகளும் நீங்கப் பெற்ற யோகிகள் ஆவார்,

விம்சத் கலா ஞானம்

ஆதி அகாரம், உகாரம், மகாரம், விந்து

அர்த்தசந்திரன், நிரோதி, நாத நாதாந்தம்

சோதில் சக்தி வியாபினியே, வியோமரூபை,

குலவனந்தை, அனாதை, அனாசிருதையுடன் சமனை,

நீதமுறு சமனாந்தம்; உன்மனையின் அந்தம்

நிறைபரை, அப்பராந்தமுடன் நீடுசிவம், அந்தம்

பேதமுறு சமனையுடன் சமனாந்த மாகப்

பேசும் அவற்றுட் சமனாந்தம் சமனை பிறங்கும்.

உன்னிடும் உன்னாந்தம் உன்மனையதனில் ஒடுங்கும்

ஓதுபராந்தம் பரையில் உறும்; சரணாந்தம்தான்

மன்னுசர ணங்களிலும் அடங்கி நின்ற கலைகள்

மருவிடும் நால் ஐந்தாக மதித்திடுவர்; அவற்றுள்

முன்னுரைத்த அகாரம் உகாரம் மகாரம் விந்து

மொழிஅர்த்த சந்திரன் என்னும் கலைகள் முறையே

சொன்ன நிவிர்த்தாதி பஞ்சகலை எனப்பேர் பெற்றுச்

சொலும்மேத அருக்கீசம் விட விந்துக்கலையே.

அகரம் முதலாக உன்மனை வரை கூறிய 16 கலைகளுடன் சமனாந்தம், உன்மனாந்தம், பரை, பராந்தம் ஆகிய கலைகளும் சேர்ந்தால் விம்சத்- இருபது கலாஞானம் ஆகும். இவற்றுள் சமானந்தம் சமனையுள்ளும் உன்மானந்தம் உன்மனையிலும், பராந்தம் பரையிலும் அடங்கும், பரை என்பது பராசக்தி ஆகையால் அது கலைகளில் அடங்காது. கீழுள்ள வியாபினி முதலிய கலைகள் 4ம் சக்தி, வியாபினி, சமனைகளில் அடங்கும். அடங்கிய கலைகளை விரிக்கும்போது 20 கலாஞானம்- விம்சக் கலாஞானம் என்பர். நிவர்த்தி –அகாரத்திலும், பிரதிட்டை- உகாரத்திலும், வித்தை- மகாரத்திலும், சாந்தி-விந்துவிலும், சந்தியாதீதை- அர்த்தசந்திரனிலும் அடங்குவதை காண்க. ஐந்து கலைகளும் பஞ்ச கலைகளில் அடங்குவதால் அகாரம் முதலிய கலைகள் பஞ்சகலைகள் எனப்படும். மேதை என்பது பிரம்மாவையும், ஹரிகேசன்- அருக்கீசம் என்பது திருமாலையும், முடிந்து விடுவதால் விஷம் என மகரத்தையும் (ருத்திரன்), ஒளியால் விந்து எனவும் இவைகளுக்கு பெயர்.

பஞ்ச கலைகளும் பஞ்சாக்கரங்களும் ஒன்றாய்.

அருத்த சந்திரன் எனவும் பெயராகி நிற்கும்

அக்கலை ரூபங்களில் அடங்கும் எழுத்தறையில்

விரித்த அகாரத்தினிலே நகாரம்; உகாரத்தில்

மேவுமகாரமதாகும்; மகாரத்தில் சிகாரம்

திருத்தமிகு விந்துவிலே வகாரமும்; நாதத்தில்

செறிந்துயகாரமதாகச் செப்பிடும்; இங்கு இவற்றுள்

பெருத்த நகாரத்தில் இருநூற்றிருபத்து நான்கு

பிரிவில் அரும் புவனாத்வாப் பிறந்திடும் என்றுணரே.

பஞ்ச அட்சரங்களும் பஞ்ச கலையில் அடங்கும், பஞ்சாக்கரமே பஞ்ச கலை எனப்பட்டது. ‘அ’ கலையில் ‘ந’ வும், ‘உ’ கலையில் ‘ம’ வும், ‘ம்’ கலையில் ‘சி’ யும், விந்துக்கலையில் ‘வ’ வும், அர்த்தசந்திரக் கலையில் ‘ய’ வும் அடங்கும்

ஐந்து எழுத்தில் ஆறு அத்வாக்கள்

எண்ணும் மகாரத்தில் எண்பத்தொருபதமும் சிகாரத்து

எய்திடு தத்துவம் முப்பத்தாறும்; வகாரத்தில்

நண்ணிடும் அகங்காரம் ஐம்பத்தொன்றும் யகாரத்தில்

நாட்டுப் மனுப் பதினொன்றும் நவிலரும் ஓங்காரத்து

உண்ணிலவு நிவிர்த்தாதி கலை ஐந்தும் உதித்திங்கு

ஓத சடத்துவாக்கள் உயர்சதாசிவத் தேவர்க்கங்கு

அண்ணுதிரு மேனியுமாய் இருக்கும்; இனிக்கலைகள்

ஐந்தாம் என்ற சரியை கிரியையும் வரும் என்று அறியே.

இங்கு இவற்றுள் பெருத்த நகாரத்தில் இருநூற்றிருபத்து நான்கு

பிரிவில் அரும் புவனாத்வாப் பிறந்திடும் என்றுணரே

மகாரத்தில் எண்பத்து ஒன்றாகிய பதங்களாகிய பத அத்துவாவும், இகாரத்தில் முப்பத்தாறு தத்துவம் எனும் அத்துவாவும், வகாரத்தில் ஐம்பத்தொன்றாகிய எழுத்து ஓசை வன்னங்களில் வரும் வன்ன அத்துவாவும், யகாரத்தில் பதினொன்றாகிய மந்திரங்கள் மந்திர அத்துவாவும், பிரணவமாகிய ஓங்காரத்தில் உள்ள பஞ்சகலா அத்துவாவும், ஓம் நமசிவாய என்ற மந்திரத்தில் அடங்கின. சடத்வா-சட்-ஆறு, அத்வா- வழி.

இறைவன் நிறைந்துள்ள 224 புவங்களை தியானிப்பதாகிய வழியிலும், 81 தெய்வீகமான சொற்கள் சொல்வதாகிய வழியிலும், 36 தத்துவங்களை உணர்ந்து அவற்றை நிக்கிரகம்-நீங்கி நிற்கும் வழியாலும், 51 எழுத்தோசைகளைப் பயன்படுத்தும் வண்ண்ங்களாகிய நிறங்களைத் தியானிப்பதாலும், 11 மந்திரச் சொற்களை சொல்லும் வழியாலும், பிரணவக் கலை- பஞ்சகலைகளை உடலில் எழுப்பி தியானிக்கும் வழியாலும், கடவுளை அடையலாம் என்பதால் இவை ஆறு அத்துவாக்கள்- 6 வழிகள் எனப்பட்டன. எல்லாக் கலைகளிலும் பஞ்சகலை, 6 அத்துவா, பஞ்சாட்சரம் முதலிய யாவும் அடங்கும்போது அந்த யோகப்பலன் சதாசிவ மூர்த்தியாகவே இருக்கும். அகாரம் முதலிய கலைகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மோட்சம் எனும் பகுதிகளாக அடங்கும்.

அங்கு அவற்றில் சமயமொடு விசேடம் நிருவாணம்

அருள்வழிச் சாம்பவம் அதன்மேல் அபிடேகம் என்னும்

பங்கமிலாத் தீக்கைகளும் அடங்கின என்று உணர்க

பகர் நிரோதி, நாதமுடன், நாதாந்தம் மூன்றில்

தங்கும் ஐம்பத்தோர் எழுத்தும் ஆகம வேதங்கள்

சாத்திரங்கள் தோன்றியிடும்; தருவிந்து நாதம்

பொங்கிடு நாதாந்தமதில் நால்வாக்கு ஏழ்கோடி

போற்றுமனு உற்றடங்கி நிற்கும் பொற்புறவே.

1.அ, உ, ம, விந்து, அர்த்தசந்திரன்- சமயம், விசேடம், நிர்வாணம், சாம்பவி, அபிடேகம் எனும் தீட்சை முறைகள் அடங்கும். 2. நிரோதினி, நாதம், நாதாந்தம் -51 எழுத்துக்கள், ஆகமவேத சாஸ்திரங்கள் யாவும் அடங்கும். 3. விந்து, நாதம். நாதாந்தம் -நான்கு வாக்குகள், ஏழுகோடி மந்திரங்கள் இவை அடங்கும். எல்லாம் இதனுள் அடங்கின என்பதால் ஞானயோகம் மட்டுமே யோகம் என்பது ‘ஞானம்’ என்பதன் பொருளாகும். தீட்சைகள் யாவும் இவையாகவே இருப்பதால் யோகத்தீட்சை இதற்குத் தரப்பட வேண்டாம்.

ஞானக்கலைகள்

பன்னியிடும் மேதை, அருக்கீசம், விடகலையே

பயில்விந்து, அர்த்தசந்திரன், நிரோதி நாதம்

மன்னியிடும் நாதாந்தம்; சக்தி வியாபினியே

வருசமனை உன்மனை, பன்னிருகலையாம் மருவும்

மின்னிலகு சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே

வியோமரூபினி அனந்தை அனாதை அனாசிருதை

என்னும் ஒரு நாலுகலை பொருந்தியிடக் கலைகள்

ஈரெட்டாய் உரைக்கும் அரன் இணையடிக்கீழ் இவையே.

துவாதசக் கலைகள் 12 ம் அவைகளுடன் இனைந்து சோடசக் கலைகள் 16 ஆவதற்கு சேர்ந்த 4 கலைகள் ஆக எல்லா கலைகளும் இறைவன் திருவடி கீழ் நிற்பன. உடலின் ஓசையால் ஏற்படும் இக்கலைகள் இறைவன் அருளால் வந்தவை,

கலைகளின் மாத்திரை

அரைந்திடும் பன்னிரு கலைக்கு மாத்திரைகள் வகுக்கில்

அருமேதை மூன்றாகும்; அருக்கீசம் இரண்டாம்    

உறைந்த விடகலை ஒன்றாம் விந்துகலை அரையாம்

உயிர்அர்த்தசந்திரன்கால்; நிரோதி அரைக்காலாம்

குறைந்த மாகாணியதாம் நாதம்; நாதாந்தம்

குலவரை மா அரைக்காணி; சக்திஐம் முந்திரிகை

நிறைந்த வியாபினியும் அதில்பாதி அதாம்சமனை

நேராம் உன்மனையது கீழரையது அரைக்காலே.

அகரம்-3, உகரம்-2, மகரம்-1, விந்து-0.5, அர்த்தசந்திரன்-0.25, நிரோதினி-0.125, நாதம் 0.13125, நாதாந்தம்- 0.15625, சக்தி-0. 0078125, வியாபினி 0.0039062, சமனை-0.009531, உன்மனை-0.0009765

கலைகளுக்குரிய இடங்கள், அளவுகள்

ஆதாரம் முதல் உந்தியளவும் கோடகலை;

அதனிலுறும் இதயாந்தம் மேதைக்கலை;இதயம்

மீதாரும் கண்ட அளவு அருக்கீசம்; கண்ட

மேல்தாலு அளவும் விடகலை; புருவம்விந்து

ஓதாரும் நெற்றிநடுப் பிரம்ம ரந்திரம் ஈறா

ஒளிகொள் அர்த்தசந்திரனே; நிரோதி; நாதம்

நாதாந்தம்; பிரம்மரந்திரமேல் துவாதசாந்தம்

நடுச்சக்தி; வியாபினியும்; சமனையும் உன்மனையாம்.

புருவநடு வரைவிந்துத் தானம் நால்விரலாம்

புகல்புருவ நடுப்பிரம்மரந்திரம் மட்டாகப்

பெருகும் அர்த்தசந்திரனே முதல்புகல் நாலினினுக்கும்

பிறங்கிடும் ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று விரலாம்

வருபிரம்ம ரந்திரத்தில் சக்தி ஓர் அங்குலம்மேல்

மருவு வியாபினி ஒரு மூன்றாம்; சமனை நான்காம்;

அருவம் உறும் உன்மனைக்கும் ஒரு நான்காய்த் தானம்

அவை ஒன்பான்; அங்குலங்கள் அறுபது என அறியே.

1. கோட கலை- மூலாதாரம் முதல் உந்தி வரை-12 அங்குலம், 2. மேதை கலை- உந்தி முதல் இதயம் வரை-8 அங்குலம், 3. அருக்கீசக் கலை- இதயம் முதல் கண்டம் வரை    -8 அங்குலம்

4. விட கலை - கண்டம் முதல் நாக்கு அடி வரை-4 அங்குலம், 5. விந்துக் கலை- நாக்கு அடிமுதல் புருவமத்தி வரை 4 அங்குலம், 6. அர்த்தசந்திரன், 7.நிரோதினி, 8. நாதம், 9.நாதாந்தம்  - நடு நெற்றி முதல் பிரம்மரந்திரம்வரை-12 (4x3), 10. சக்தி -பிரம்மரந்திரத்திற்கு மேல்-1 சக்திக்கு,

11. வியாபினி - அதற்குமேல் -3, 12 .சமனை- அதற்குமேல்-4, 13. உன்மனை- அதற்குமேல்-4,

கலைகளின் வடிவம், அதிதெய்வம், தத்துவம், நிறம்   

அவ்வுடன் உகார மகாரம் பிறங்கும் விந்து

அர்த்தசந்திரன் திரிகோணம் ஆகியிடும்; இதன்மேல்

எவ்வமிலா இருமருங்கு சுழி நடுத்தண்டு ஒன்றே

இயல்வலத்து விந்துவுடன் கலப்பையது ஒன்றாகும்

செல்விவிந்து இடம் படித்த நல் அலமும் ஒன்றே;

தெரிவலத்து விந்துவுடன் திரிசூலம் ஒன்றாம்;

அவ்வையதில் இருவிந்து நடு இரண்டு ரேகை

அருதியிடும் குடிலம் இவை கலை பனிரண்டினுக்கே.

பதுமலர் அயன்மேதைக்கு அருக்கீச கலைக்குப்

பகர்திருமால்; விடகலைக்குப் பரவும் உருத்திரனாம்

சிதைவில் பெரு விந்துவுக்கு மகேசுரனே தெய்வம்

திருத்தும் அர்த்தசந்திரன் முதல் ஒருநான்கினுக்கும்

முதிய சதாசிவன் தெய்வம் சக்திமுதல் நாலாம்

முதல்கலைக்குச் சிவன் எனவே மொழிந்திடுவர் முதியோர்

வரன் முறையாய் இருப்பரென வழுத்திடும் ஆகமமே.

பிருதிவிமுதல் பிரகிருதி பரியந்தம் மேதை

பேசருக்கீசம் பொருந்தும் பிரிவில் கலையாதி

மருவும் விடகலை மாயைபொருந்தியிடும்; விந்து

வளர்சுத்த வித்தையுடன் ஈகாரத்தின் வகையாம்

உருவமுறும் அர்த்தசந்திரன் முதல் ஒரு நான்கினுக்கும்

ஓங்கு சதாசிவன் சக்தி; சக்திமுதல் நாலாய்

மருவுகலை நாலுக்கும் சிவமாம் தத்துவமாம்

வருமுறையில் வியாத்தம் என வழுத்திடும் ஆகமமே.

உற்றசொரி; தழல் ஒன்று; மதி இரவி கூடும்

ஒளி ஒன்று; மின்னொளி ஒன்று; உறுதீபம் ஒன்று

பற்றிவரும் வாள் ஒளி ஒன்று; புகை நிறம் ஒன்றாகும்

மணிதிகழும் மாணிக்கம் ஒளிநாதம் ஒன்று;

குற்றமில் மின் ஒளி இரண்டாம்; நாதாந்தம் ஓன்று

கூறுரவி நூறுசக்தி; வியாபினி ஆயிரமாம்

சொற்றிடும் அச்சமனை ஒரு கோடி கதிர் ஒளியாம்

சூழ் அனந்த சூரியர் போல் தோன்றிடும் உன்மனையே. 

1.மேதை -அ - பிரம்மா- பிரகிருதி முதல் நிலப்பூதம் வரை - எரியும் நெருப்பு , 2.அருக்கீச -உ- திருமால்- ஏழு வித்யாதத்துவத்தில் மாயை தவிர– நிலவும் சூரியனும் கூடியஒளி, 3.விட -ம- உருத்திரன்-மாயா (அசுத்தமாயை) - மின்னல் ஒளி, 4.விந்து -0 – மகேசுவரன்-சிவதத்துவத்தில் சுத்தவித்தை ஈச்வரம்-விளக்குச்சுடர் , 5.அர்த்தசந்திரன்-0-சதாசிவன்- சதாசிவனும் சக்தியும்-வாளின் ஒளி, 6.நிரோதினி-0- சதாசிவன்- சதாசிவனும் சக்தியும்-புகைநிறம், 7.நாதம் -0- சதாசிவன்- சதாசிவனும் சக்தியும்-மாணிக்க ஒளி, 8.நாதாந்தம்-0- சதாசிவன்- சதாசிவனும் சக்தியும்-இரு மின்னல் ஒளி, 9..சக்தி -0- சிவன்- சிவதத்துவம்-100  சூரிய ஒளி, 10.வியாபினி-0 -சிவன்- சிவதத்துவம் -1000 சூரிய ஒளி, 11.சமனை-0- சிவன் - சிவதத்துவம்-கோடி சூரிய ஒளி, 12.உன்மனை-0- சிவன் - சிவதத்துவம்- எண்ணற்ற சூரிய ஒளி   

காரியம் இல்லா கலைகளின் வடிவம், நிறம்

ஓதுகலை காரியங்கள் பொருந்தியிடாக் கலைகள்

உறவியோம ரூபானந்தை அனாதை அனாசிருதை

தீதில் உறு விந்து அந்த நான்கினுக்கும் நான்காம்

திகழ்ஞான ஆகாயம் ஞானசா கரம்பின்

ஏதமிலா ஞான தருப்பணமும் மகாகோடி

இந்து ஒளி இவைதியானம் என்பர்கள் உன்மனைக்கு

தீதமுற உரைக்கில் அது சமானாந்தம் பாசம்;

நிகழ்த் துவாத சாந்தமேல் உன்மனைக்கப் பாலாம்.

எல்லாகலைகளும் வெளிப்படையானவை. வியோமரூபினி முதலிய நான்கு கலைகளும் செயல் செய்வதற்கு அல்லாத மிகவும் சூக்குமமானவை, வியோமரூபினி- ஞான ஆகாசம், அனந்தை- ஞானக்கடல், அனாதை- ஞானக் கண்ணாடி, அனாசிருதை- மகா கோடி நிலவு ஒளி, இந்த 4ம் வடிவமும் நிறமும் கொண்டு தியானித்து உணர்வதாகும், பார்க்க முடியாத ஒளிகளை நினைத்தால் போதும்,

ஆறு சூன்யங்கள்

மிகுமேதை முதல் மூன்ரு கலை முடிவில் ஒன்றாம்

விந்துமுதல் மூன்றுகலை முடிவில் விளைவொன்றாம்

தகுநாதம் முதல் மூன்று கலைமுடிவில் ஒன்றாம்

சக்தி வியாபினிக்கும் ஒன்றாம்; சமனையதற்கு ஒன்றாம்

தொகு ஞான உன்மனைக்கும் ஒன்றாகப் பேத

சூனியம் ஆறாகும்; இதன்மேல் பரமாம் விசுவம்

புகுவிராணன் மனுநாடி பிராசாந்தம் சக்தி

புகல்காலம் தத்துவம் என ஏழாகப் புகலும்.

மேதை-அகாரம், அருக்கீசம்-உகாரம், விட-மகரம் இம்மூன்றுக்கும் அடுத்து முதல் சூன்யம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதினி இம்மூன்றுக்கும் அடுத்து இரண்டாம் சூன்யம், நாதம், நாதாந்தம் சக்தி இம்மூன்றுக்கும் அடுத்து மூன்றாம் சூன்யம், சக்திக்கு அடுத்து நான்காம் சூன்யம், சமனைக்கு அடுத்து ஐந்தாம் சூன்யம், உன்மனைக்கு அடுத்து ஆறாம் சூன்யம்.

இதன் இறுதியில் அண்டம் ஆகிய பிரபஞ்சமும், பிண்டம் ஆகிய நம் உடல்களும், பிராணன், மந்திரம்-மனு, நாடிகள், பிரசாந்தம்-பேரமைதி, சக்தி, காலம், தத்துவம் ஆகிய ஏழு வகைகளில் தொடர்புடையவை. விசுவம்-பிரபஞ்சம், பிராணன்-ஆகாயசக்தி. இதுவும் பிற சக்திகளுமே நாடிகளில் ஓடுகின்றன, மந்திரம் அந்தசக்திகலை மேலேறச் செய்து விரியச் செய்கிறது, காலமும், தத்துவமும் இம்முயற்சிக்கு சீதோஷ்ணம்- பருவ செய்கைகளால் பிண்டத்திற்கும் அண்டத்திற்கும் துணையாக செயல் படுகின்றது, மாயையான இவ்வுடம்பில் தெய்வச் சார்பாகிய இந்த கலைகளை ஆன்ம முயற்சியில் உந்தச் செய்து மாயையை முழுவதும் விலகச் செய்து பரம் பொருளைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்பதே முன்னோர்களின் அவா.

                                 &&&&&&

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879749
All
26879749
Your IP: 34.230.84.106
2024-03-19 11:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg