gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 01 June 2020 10:45

சிவயோக சாரம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சிவயோக சாரம்!

சிவயோக சாரம் என்ற ராஜ யோக மார்க்கத்தை உணர்ந்து பல நூலகளில் உள்ள கருத்துக்களோடு சேர்த்து பூரணானந்தர் எழுதிய இந்நூலைப் படித்து உயிர்கள் பயன் பெற வேண்டும் குருஸ்ரீ பகோரா.

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்!

இந்த ராஜயோகத்தை அப்பியசிக்கும் ஆசிரியன் தெளிந்த ஆத்ம ஞானியாய் அடுத்தவர்களை ஆதரித்துப் போதிக்கத் தக்கவனாய் இருக்க வேண்டும்.. சின்முத்திரையாகிய மௌன நிலை ஈதென்றும், அதைக் கைவல்யப் படுத்துவதற்குரிய ஆசனம் முதலிய விதிகள் இவையென்றும், சாம்பவி முதலிய மகா முத்திரை இவையென்றும், குண்டலி சக்தி ஈதென்றும், அதை விழிப்பிக்கும் மார்க்கம் ஈதென்றும், இதுவே சிவராஜ யோகம் என்றும் இந்த யோகம் செய்யத் தக்கவர் பெறத்தக்க நாதாந்தம் இதுவென்றும், இது வசமுற்றால் ஒரு மயக்கந் தோன்றுமென்றும் அது நீங்கும் வரையில் நின்றால் அருள் தரிசனம் உதயமாகு மென்றும் அவ்வனுபவம் அவ்வனுபவம் கிடைக்க காண்பானாதிகள் இறக்கு மென்றும் அங்ஙனம் இறக்கின் மனம் அசையாதிருக்குமென்றும் அப்போது அந்நாதாந்தத்தில் பஞ்சாக்ஷர முதலியவைகள் தோன்றாதொடுங்குமென்றும் இத்தன்மைப்பட்ட சுவானுபவ சாக்ஷாத்காரத்தை உணர்ந்த ஆத்ம ஞானாசாரியனாய் இருக்க வேண்டும்.

மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும்!

உத்தம ஜென்மமாயும், வித்தைக்கு உடையவனாயும், சாந்த சற்குண முடையவனாயும், பற்றில்லாதவனாயும், காம சங்கற்பம் இல்லாதவனாயும், கோபத்தை வென்றவானாயும், சத்திய தருமத்தை விரும்பியவனாயும், குரு பணிவிடையில் பிரியமுள்ளவனாயும், மாதா பிதாக்களை உபசரிப்பவான்யும், தனது கிருகத்தில் இருப்பவனாயும், நல்லொழுக்கமுடையவனாயும், சற்சீடனெனும் பக்குவமுடையவனாயுமுள்ள மாணாக்கனே இவ் இராஜயோகத்திற்கு உகந்தவனாவான்.
இத்தன்மைப்பட்ட நற்சீடன் சாக்ஷாத்காரத்தை உணர்ந்த ஞானாசிரியனைக் கண்டெடுத்து அவன் திருவடிகளில் பணிந்து அவன் மனங்களிகூறும்படி நடந்து உடல் பொருள் ஆவி மூன்றும் அச்சற்குருவின் திருவடியில் தத்தஞ் செய்து அநுக்கிரகிக்கும் திருவடித் தீக்ஷையையும் பிராணாயாமத்துக்குரிய் மூல மந்திரத்தில் முதல் வாக்கியத்தையும் இந்த யோகத்தின் விதிகளையும் உபதேசிக்கப்பெற்று குருவின் சன்னதியிலிருந்து சற்குரு சொல்லாமற் சொல்லும் முதல்வாக்கியத்தை உண்ணாமல் உன்னி யோக சாதனை செய்து வருங்காலையில் சுவானுபவத்தின் கண் அடையா நின்ற சம்சயங்களனைத்தும் தீரும்படி அவ்வாசிரியரிடத்தில் விண்ணப்பம் அடிக்கடி செய்து கொண்டு அந்தச் சங்கற்பம் நசிக்கும்படி கேட்டுக்கொள்ளல் வேண்டும்.

பிராண வாயுவின் நிலை!

மாணாக்கன் ஆரம்பத்தில் கவனிக்க வேண்டிய விதிகள் யாதெனில் அவை சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று நாடிகளை நடைகளின் நடைகளெனப்படும் மூன்று நாடிகளின் சுவாத்தினாலுண்டாகும் சத்தத்தைக் கண்டறிய வேண்டும். அச்சத்திற்கு அஜபா என்று பெயர்.
அந்தச் சத்தத்தைக் கண்டுபிடிக்கச் சில விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
வாயுக்கள் மூன்று அவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்பவவாகும். இடைகலை என்பது இடநாசியிலும், பிங்கலை என்பது வலநாசியிலும் சுழுமுனை என்பது இரண்டு நாசியிலும் வரவும் போகவும் இருக்கிற சுவாசம். இதற்கு அஜபா ந்ன்பது பெயராம் இடைகலை என்பது சந்திரனும் பிங்கலை என்பது சூரியனும் சுழுமுனை என்பது அக்கினியுமாம்.
அன்றியும் இடைகலையானது சுக்கிலபட்சமாகிற அமாவாசையின் பிரதமை, முதல் மூன்று நாளைக்கு காலையில் தொடர்ச்சியாய் வர வேண்டும். சதுர்த்தி முதல் மூன்று நாளைக்கு பிங்கலை நடக்க வேண்டும். இதே மாதிரியாக சுக்கில பட்சம் முழுமையும் மூன்று நாளக்கு இடைகலையும் மூன்று நாளைக்கு பிங்கலையுமாய் நடக்க வேண்டு
இவ்வண்ணம் சுக்கில பட்சத்தில் சந்திரக்கலை வராவிடில் அவனுக்குத் தேக அசவுக்கியப்பட்டு கவலை மேலிடும்மென்றறிக. அதைச் சரிப்படுத்த வேண்டிய விசயத்தை பற்றி பின் வரும் வாக்கியத்தில் காண்க.
கிருஷ்ணபக்ஷம் அதாவது பௌர்ணமி பிரதமை முதல் மூன்று நாட்களும் பிங்கலை நடக்க வேண்டும். பின் மூன்று நாளைக்கும் இடைகலை நடக்க வேண்டும்
இத்தன்மையாக இரண்டு கலைகளும் மும்மூன்று நாளைக்கொரு முறை மாறிமாறி நடக்க வேண்டும். இதை மாணாக்கன் குறிப்பாக தினம் தினம் கவனிக்க வேண்டும்.
சுழுமுனை கூடுவது கஷ்டமாதலால் அதைச் சாக்கிரதையாய் அப்பியசித்துப் பழக வேண்டும்.
மாணாக்கனுக்கு முக்கியச் வேலை இடைகலையும் பிங்கலையும் திதிக்குத் தவறி நடந்தால் அத மாற்ற வேண்டிய விசயத்தைபற்றிக் குருமூலமாகக் கேட்டுத் கொள்ளுதலே.

இடைகலையின் பலன்!

இடைகலை நடக்கும் காலம் தாகம், ஜலவிருத்தி, தீர்மானம் செய்ய, வேலை செய்ய, நகை செய்ய, நகை அணிந்து கொள்ள், அன்னிய தேசத்திலிருந்து யாத்திரை போக, வீடு, சத்திரம், கோவில் கட்ட, திருமணஞ் செய்ய, வஸ்திரம் கட்ட,, தருமஞ் செய்ய, சாமான் சேகரம் செய்ய, கிணறு குளம் வெட்ட, கலியாணம் செய்ய, வஸ்திரம் கட்ட, வைத்திய சாஸ்திர அப்பியாசம், மருந்து கற்பங்கள் முதலியன செய்ய, சினேகிதனைக் காண, வியாபாரஞ் செய்ய, தானியம் இருப்புச் செய்ய, வீட்டிற்கு குடிபோக, விதை விதைக்க, சமாதானஞ் செய்ய, அன்னிய பாஷை அப்பியாசஞ் செய்ய, உபதேசஞ் செய்ய, பலனைப் பற்றி யாத்திரைபோக, எஜமானன் ஆக, ஆடல் பாடல் கற்க, ஒரு புதிய ஊருக்குப் போக, பந்துக்களைக் காண ஆகிய நடவடிக்கைகளுக்குப் பயன்படும்.

இடைகலை சரிவர நடந்தால் தேகம் சௌக்கியமாக இருக்கும்.. இதில் ஆகாசத்தில் அம்சமிருக்குமானால் முன் சொன்ன நடவடிக்கைகள் ஒன்றும் செய்யக் கூடாது. இரவாய் இருந்தாலும் பகலாய் இருந்தாலும் மேற்சொன்ன வேலைகலை இடைகலையிலேயே நடத்த்ல் வேண்டும்.

பிங்கலையின் பலன்!

வலநாசியில் உண்டாகிற பிங்கலையில் அதாவது சூரிய நாடிக் காலத்தில் கஷ்டமான வேலை எதுவும் அப்பியசிக்க , எவ்விதக் கொடூரமான செய்கையும் செய்ய, மலம் கழிக்க, போகம் செய்ய, கடல்யாத்திரை போக, சண்டை செய்ய, படை எடுக்க, கஷ்டமான சாஸ்திரம் கற்க, குதிரை முதலிய நாற்கால் ஜீவன்களை வாங்க, விற்க, மட்டமான மலை ஏற, குதிரை மல்யுத்தம் முதலியன பழக்கம் செய்ய, ஆறு, குளம், க்டல் முதலிய இடங்களில் நீந்த, உலோகங்கள் குறித்த சாஸ்திரம் கற்க, பாடம் எழுத, பணம் வாங்க கொடுக்க, எஜமானத்துவமான வேலை பார்க்க, அரசைக் காண, இரண வைத்தியத்திற்கு மருந்து செய்ய கடினமான் ஆகாரம் ஜீரணிக்க ஆகியவற்றை முயற்சி செய்யலாம்.


சுழுமுனையின் பலன்!

சுழுமுனை இரண்டு நாசியிலும் வரும் சுவாசம். அதை அதன் நடவடிக்கை காலத்திலேதான் அறியலாம். ஒரு கணத்தில் இடநாசியிலும் ஒரு கணத்தில் வலநாசியிலும் வரும் வாயுவானது இரண்டு நாசியில் வரும்போது சுழுமுனையாம்.
இந்தச் சுழுமுனை நடக்கும்போது உலக நடவடிக்கைகளை நிறுத்தி விட வேண்டும் தவறி நடந்தால் அபஜயமாம்.
எண்ணத்திற்கு விரோதமாய் நடக்கும் இந்தவாயுவின் காலத்தில் ஆத்துமத் தியானமும் பூஜையும் செய்யலாம். இந்த வாயு நடக்குங் காலத்தில் சுவாச பந்தனம் செய்யக்கூடும். இந்தச் சுவாசம் கட்டுவதனால் மனத்திற்கும் தேகத்திற்கும் இன்பம் உண்டாகின்றது.

நாடிகளின் நிலை!

மனிதர்களுக்கு எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் இருக்கின்றன். அவற்றுள் முக்கியமானவை இருபத்து நான்கு இவை எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கின்றது. இவைகளைக் குண்டலினி சக்தி என ஆதிநாதர் அருளியுள்ளார்.
குண்டலி சக்தி மத்திய ஸ்தானத்தில் இருக்கின்றது. பத்து நாடிகள் மேலாகவும் பத்து நாடிகள் கீழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் மற்ற இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன.
இந்தக் குண்டலினி சக்தி பாமபைப் போலச் சுற்றிக் கொண்டு சுவாதிஷ்டானத்திற்கு மேலாகவும் மணி பூரகத்திற்குக் கீழாகவுமிருக்கின்றது.
இந்த இருபத்து நாடிகளுல் பத்து நாடிகளை முக்கியமாக எடுத்துள்ளனர், இந்த பத்து நாடிகளின் முன் சொல்லிய மூன்று நாடிகளை முக்கியமாக எடுத்திருகின்றபடியால் அவற்றுள் இடைகலையானது தேகத்தின் இடப்பக்கத்திலும், பிங்கலையானது தேகத்தின் வலப்பக்கத்திலும் சுழுமுனையானது தேகத்தின் மத்தியிலுமிருக்கின்றன.

ஆசன விதிகள்!

பத்திரம், வீரம், பதுமம், கோமுகம், குக்குடம், ஆகிய ஐந்தும் ஞான சாதனத்திற்குரிய ஆசனங்கள் ஆகும்.
இவற்றுல் பதுமாசனமாவது இரண்டு தொடைகளில் இரண்டு பாதங்களையும் செவ்வையாய் வைத்து உட்காருதல். இது சகல பாவங்களையும் நாசம் செய்வதாகும். இதை மான்தோல், புலித்தோல், வெண்துகில், சித்திராசனம், தர்ப்பை இவைகளின் மேலிருந்து அனுபவிக்கலாம். இதில் இடை, வயிறு, கண்டம், தலை சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்ந்திருக்க வேண்டும். அன்றியும் வடமுகம் நோக்கி த்க்ஷிணாமூர்த்தமாய் எழுந்தருளியிருக்கவேண்டும். ஆத்தும ஞான குருவின் சன்னிதிக்கு நேராக உட்காரவேண்டும்,.
கிருகஸ்தனுக்கு பதுமாசனமும், சந்நியாசிக்கு சித்தாசனமும் ஹடயோக தீபிகையில் சொல்லப்ட்டிருக்கின்றன.

இரேசக் பூசக் லக்ஷணம்!

பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவென்று மேலான புத்திமான்கள் பிராணனது சலனத்தை ஜெயித்தலில் முயல்கின்றனர். ஆகையால் ராஜஸ, தாமஸ குணங்களை நீக்கி சாத்துவிக குணத்தோடு பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமத்தில் வெளிவாயுவை உட்கொள்ளுவது பூரகமாம். அவ்வாயுவை நிறுத்துவது கும்பகமாம். கும்பித்த வாயுவை வெளிப்படுத்துவது இரேசகம் எனப்படும். இதுவே பிராணாயாம அங்கமாகிய இரேசக பூரக லக்ஷணம்.
சூரிய நாடியாகிய பிங்கலையால் பிராணனை இழுத்து மெள்ளமெள்ள வயிற்றை நிரப்பவிதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையால் இரேசிக்க வேண்டும்.
சந்திர நாடி, சூரிய நாடிகளுல் எந்த நாடியால் பூரிக்கிறானோ அதனாலேயே இரேசித்து நிரோதித்தலால் வேர்வை நடுக்கம் முதலியவை உண்டாகும்.
அதுவரையில் கும்பித்து எதனால் பூரகஞ் செய்யப்பட்டதோ அதற்கன்னியமான நாடியால் மெள்ள மெள்ள ரேசிக்க வேண்டும். வேகமாய் ரேசித்தால் பலக்குறைவு உண்டாகும்.
எதனால் ரேசகம் செய்யப்பட்டதோ அதனலேயே பூரகம் செய்யலாம். இடைகலையால் பிராணனைப் பூரித்து கும்பிக்கப்பட்ட பிராணனை மற்றப் பிங்கலையால் இரேசிக்க வேண்டும். பிங்கலையால் வாயுவைப் பூரித்து கும்பித்த வாயுவை இடைகலையால் இரேசிக்க வேண்டும்.
இவ்வண்ணம் சந்திரனால் பூரித்துக் கும்பித்து சூரியனால் இரேசிக்க வேண்டும். சூரியனால் பூரித்துக் கும்பித்து சந்திரனால் ரேசிக்க வேண்டும்.’
இவ்விதம் சூரிய சந்திர நாடிகளின் அப்பியாசத்தை தினமும் விஸ்தரிக்க வேண்டும். அதனால் நாடிகள் மூன்று மாதத்திற்கு மேல் சுத்தமாகின்றன.

அஜபாவின் நிலை!

இந்த யோகத்திற்குரிய ஏகாந்த ஸ்தானத்தில் பதுமாசனமிட்டு உட்கார்ந்து உடனே அஷ்டகந்த தூபமிட் வேண்டும். இந்த யோகத்திற்காக ஏற்படுத்திய அறையானது மிக நலமாய் இருக்க வேண்டும். தான் வெளியே இருக்க வேண்டும். இதில் சொல்லிய நான்கு காலங்களில் எந்தக்காலமாவது வைத்துக்கொண்டு அப்பியாசப்படுத்த வேண்டும்.
இடைகலையானது எப்போதும் வலநாசியிலும் ஹம்ஸம் என்றேயிருக்கும். ஹம்ஸம் என்பது ஆத்மாவின் பெயராகும். முதலில் வெளியே வருகிற சுவாசத்தின் சத்தமாகிய ஹம் என்பதையும் உள்ளே போகிற சுவாசத்தின் சத்தமாகிய ஸம் என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த ஹம்ஸம் என்கிற சத்தத்தைக் கண்டறிந்தவன் இந்த அப்பியாசத்தில் முதற்படி தெரிந்தவன்.. இம்மாணாக்கன் எப்போதும் உலக ஆசையையும் குடும்பமாகிய கட்டையும் நிவர்த்திக்க வேண்டும். ஒரே காலத்தில் நீக்கக்கூடாது. ஏனெனில் ஒரு வருஷ காலம் வரையில் மனக்கலக்கமும் பலவிதக் கவலையும் நேரிடுமாகையால் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வேண்டும்.
மாணக்கன் கூடிய ஆளவு மனத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இதே மாதிரியாகத் தன் சுவாசத்தைக் குறித்து அதனால் உண்டாகும் ஹம்ஸம் என்ற சத்தத்தை கண்டறிய வேண்டும்.. இப்படி அப்பியசித்து மூன்று நாடிகளின் குணத்தையும் ஹம்ஸம் என்ற சத்தத்தையும் கண்டறிந்தவுடன் தத்துவத்தை அறியவேண்டும்.

உணவு முறை!

மூன்று நாடிகளைக் கண்டறியாமல் பஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கக்கூடாது. இந்த யோக அப்பியாசி ஜீரண சக்தியை உணர்ந்து தேகத்தை பலப்படுத்த வேண்டும்.. அதாவது அரிசி, கோதுமை, பச்சைப் பயிறு, துவரை, உளுந்து, கம்பு, கேழ்வரகு, நெய், பால், தயிர், மோர் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும். இந்த யோகி அரைவயிறு அன்னமும் கால் வயிறு ஜலமும் சாப்பிட வேண்டும். எனெனில் உள்வாயு மற்ற ஒரு பாகத்தில் சஞ்சரிக்க வேண்டும் என்பதை அறிக.
புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு முதலியவை அதிகமாகச் சேர்க்கக் கூடாது, இத்தன்மைப் பட்ட யோகி சன்னியாசியாக வேண்டியதில்லை. எல்லாக் கிருகஸ்தரும், செல்வர்களும், ஏழைகளும் ஜாதிபேத நிற வித்தியாசம் பார்க்க வேண்டுவதில்லை.

பலித நிலை!

எவர்கள் திரிகரண சுத்தமாக இந்த யோகத்தை செய்வார்களோ அவர்களுக்கு இது சித்தியாகும் என்பது நிச்சயம். ஒருவன் பதினெட்டு வயதில் இந்த யோகத்தை அப்பியசித்தானானால் ஐம்பதாவது வயதில் அந்தக் கேசரி முத்திரையை அடைவான். இத்தன்மையான யோகி மது மாமிசங்களைக் கண்டிப்பாய் நீக்கியிருப்பதன்றி ராஜஸ தாமஸ குணங்களற்று தத்துவத்தைக் கொண்டு சுறுசுறுப்பாக அப்பியசித்து அதி தீவிர பக்குவியாய் வாழ்வன்.

பஞ்ச தத்துவ நிலை!

இனி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரத் தியானத்தின் ஆதாரமாகிய பஞ்ச தத்துவங்களை குரு சம்பிரதாயத்தால் அறிய வேண்டுவதும் அந்த பஞ்ச தத்துவங்களின் குறிப்புகளின் விவரமுங் கூறப்படும் அதாவது முன் சொன்ன மூன்று நாடிகளின் குணங்களையும் சுத்தமாக அறிந்து கொள்ள வேண்டும். ஒன்றை ஒன்றில் மாற்றிக் குண்டலியை அடையாமல் தத்துவங்களை அப்பியசிக்கலாகாது.
முதலில் சொல்லியிருக்கின்ற நாடிகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளாமல் யோகி தத்துவங்களை ஆரம்பிக்கக் கூடாது. போஜனம், மலம் கழித்தல் போகஞ்செய்தல் இவை மூன்றும் சூரிய நாடியில் செய்பவை. தாகம் ஜலவிருத்தி இவைகளை இடைகலையில் செய்ய வேண்டும்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து தத்துவங்களும் மூன்று நாடிகளில் நிமிஷத்திற்கு ஒரு முறை மாறிக் கொண்டே வருகின்றன. இந்தத்தத்துவங்களை கண்டறிவதற்குரிய வகையைக் கூறுவோம்.
எவர்கள் இந்த மூன்று நாடிகளை அப்பியசித்திருக்கின்றார்களோ அவர்களே இந்த யோகத்திற்குரியவர்கள். இந்த உலகம் பஞ்ச பூதங்களால் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றது. இது கண்டு கொள்பவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்கள் பூஜை முதலாகிய உபசாரங்கள் செய்யப்பெற்று மேலாவார்கள்.
இந்த ஐந்து தத்துவங்களும் சத்திய லோகம், பூலோகம், மிருத்திய லோகம் முதலாகிய இடங்களில் வியாபித்திருக்கின்றது. இவைகட்கு அன்னியமாக ஒரு வஸ்துவும் ஏற்படாது. இப்பஞ்ச தத்துவத்தை கண்டறிவதற்கு விவரம் சொல்லுவோம்!
1.தத்துவத்தின் நடை,
2.சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்,
3.சுவாசத்தில் தத்துவங்களின் அடையாளம்,
4.தத்துவங்களின் நிறம்
5.தத்துவங்களின் சுவை,
6.சுவாசத்தின் அளவு,
7.தத்துவங்களின் அசைவு,
8.தத்துவங்களின் பலன்.

இந்த எட்டு விதங்களினால் பஞ்ச தத்துவத்தை கண்டறிய வேண்டும்..

மாணாக்கன் எந்த வாயுவில் எந்தத் தத்துவம் நடக்கிறதோ அதைக் கண்டறிதல் வேண்டும். மேலும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ப்ஞ்சேந்திரியங்களைச் சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு தினம் தினம் கொஞ்சங்கொஞ்சமாய் அப்பியசிக்க வேண்டும். அதிகமாக அப்பியசித்தால் அசௌக்கியம் நேரிடும். குரு எவ்வளாவு பிரமாணஞ் சொல்லுவாரோ அவ்வளவுதான் நடக்க வேண்டும்.

1.தத்துவத்தின் நடை,
இந்த சண்முகி முத்திரையால் மூடிக்கொண்டு அப்பியசிக்குங் காலத்தில் மஞ்சள் நிறம் தோன்றினால் பிருதிவி என்றும்
வெண்ணிறம் தோன்றினால் அப்பு என்றும்,
சிவப்பு நிறம் தோன்றினால் தேயு என்றும்,
பச்சை நிறம் தோன்றினால் வாயு என்றும்
கருப்பு நிறம் தோன்றினால் ஆகாயம் என்றும் சொல்லப்படும்.

2.சுவாசத்தினால் தத்துவங்களை அறிதல்,
மாணாக்கன் தன் முன் கண்ணாடி வைத்துக் கொண்டு அதன்மேல் சுவாசத்தை விட்டால் அது
நாற்சதுரமாயிருந்தால் பிருதிவி என்றும்
அரையுருண்டையாயிருந்தால் அப்பு என்றும்
முக்கோணமாயிருந்தால் தேயு என்றும்,
அறு கோண உருண்டை வடிவில் இருந்தால் வாயு என்றும்
சிறு புள்ளிகள் மாதிரியிருந்தால் ஆகாயமென்றும் அறிய வேண்டும்.

3.சுவாசத்தில் தத்துவங்களின் அடையாளம்
மாணாக்கன் சுவாசம் விடும்போது
நேராகப் போனால் பிருதிவி,
கீழாகப் போனால் அப்பு,
மேலாகப்போனால் தேயு,
ஒழுங்கீனமாய்ப் போனால் வாயு,
அடங்கிப் போனால் ஆகாசமென்று அறிய வேண்டும்.

4.தத்துவங்களின் நிறம்
பிருதிவி -மஞ்சள்
அப்பு -வெண்மை,
அக்கினி -சிவப்பு,
வாயு -பச்சை
ஆகாயம் –கறுப்பு என இவைகளைக் கண்டறிய வேண்டும்.
உணரும் விதம்: ஒவ்வொரு வண்ணமுள்ள குண்டுகள் ஐந்தை தன்க்குப் பின்னால் வைத்துக் கொண்டு பதுமாசனத்தில் உட்கார்ந்து தனது எண்ணத்தைக் கூட்டி நிஷ்டையிலிருந்து கொண்டு பஞ்ச தத்துவத்தில் எதையாகிலும் ஒன்றை நினைத்துப் பின்னால் இருக்கின்ற குண்டுகளில் ஒன்றை எடுப்பானானால் அது தான் எண்னிய நிறம் போல் இருந்தால் இதை அறிந்தவன் ஆகின்றான். இவ்வண்ணம் ஒவ்வொரு குண்டையும் எடுபானானால் முற்றுமுணர்ந்தவன் ஆவான்.

5.தத்துவங்களின் சுவை,
தித்திப்பு –பிருதிவி
துவர்ப்பு –அப்பு
புளிப்பு –தேயு
உவர்ப்பு –வாயு
கார்ப்பு –ஆகாயம்

6.சுவாசத்தின் அளவு,
சுவாசம் 12 அங்குலம் நீண்டால் பிருதிவி
16 அங்குலம் நீண்டால் அப்பு,
4 அங்குலம் நீண்டால் தேயு,
8 அங்குலம் நீண்டால் வாயு,
மூக்கினுள்ளே இருந்தால் ஆகாயம்

7.தத்துவங்களின் அசைவு,
அசையாத வேளை –பிருதிவி,
அசையும் வேளை –அப்பு,
கஷ்டமான வேளை –தாயு,
துஷ்ட வேளை –வாயு,
பூசை வேளை –ஆகாயம்.

8.தத்துவங்களின் பலன்.
பிருதிவி தத்துவத்தில் ஆரம்பிக்கும் வேளை கண்டிப்பாய் இலாபத்தில் முடியும்.
ஜல தத்துவத்தில் அசையும்படியான வேலைகள் செய்யத் தக்கவை ஏனென்றல் எதாவது ஒரு முடிவான வேலையை ஆரம்பித்தால் சீக்கிரத்தில் முடியும்.
அக்கினி, வாயு, ஆகாயம் ஆகிய மூன்று தத்துவத்தில் எந்த வேலையை ஆரம்பித்த போதிலும் அது அபஜெயமாகவே முடியும்.
ஆகையால் மாணாக்கன் இவைகளை எந்தக் காலத்தில் உபயோகப்படுத்த வேண்டுமோ அந்தக் காலத்தில் தத்துவத்தை அறிந்து உபயோகப்படுத்த வேண்டும்.

இந்தத் தத்துவத்தில் புத்தியைச் சரியாகச் செலுத்த வேண்டும். ஏனெனில் வியாதி முதலாகிய ஹிம்சைகள் வரவொட்டாமலும் பலவிதக் குண்மில்லாமலும் நிரோதத்தை ஒரே குண்மாக இருந்து பார்க்க வேண்டும்.

பிராணாயம நிர்ணயம்!

அதாவது முன் சொன்ன பிராணாயாமத்தின் பிரமாணாத்தை உணர்த்துதல். அதாவது அருணோதய முதல் மூன்று நாழிகை வரையிலும் மத்தியானத்திலும் அஸ்தமிக்கிறதற்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தம், -அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும். காலம் ஒன்றுக்கு 80 பிராணாயாமம் வரையிலும் நன்றாக அப்பியசிக்க வேண்டும். நான்கு முறை செய்தால் தினந்தோறும் 320 பிராணாயாமமாகின்றன.
முகூர்த்தமென்பது இரண்டு நாழிகையளவுள்ளது.
ஒரு புருஷன் அப்பியசிக்க வேண்டுமானால் காலையில் 80ம் மத்தியானத்தில் 40ம் சாயங்காலத்தில் அர்த்த ராத்திரியில் 20ம் ஆக மெள்ள மெள்ளப் பிராணாயாமம் செய்ய வேண்டும்.
அது கைவல்யப் படும்போது முதலில் வேர்வையும் இரண்டாவது நடுக்கமும் மூன்றாவது தவளைக் கத்தும், அப்பியாசத்தால் பதுமாசனத்தில் இருக்கையில் பூமியினின்று ஆகாயத்தில் தெழும்புதலும் உண்டாகுமென்பது குருநாதரால் சொல்லப்பட்டிருக்கின்றது.

கிருகஸ்தாசிரமிகளுக்கு உபயோகம்!.

இந்தப் பிராணாயாமம் கிருகஸ்தனுக்குப் பாப சுத்தியின் பொருட்டும் யோகிகளுக்கு யோக சித்தியின் பொருட்டுமாம். கிருகஸ்தன் சங்கத்தை விட்டு ஏகாந்தத்திலிருந்து அ[ப்பியாசம் செய்ய வேண்டும் அதன் பின் ஆகாரத்தின் பொருட்டு வெளியே சங்கத்தில் பிரியமுடையவன்போல் வியவகரிக்க வேண்டும். கருமத்தால் உண்டான யாவும் கருமத்தின் படியிருக்கின்றன. நிமித்த காரணமாக இவற்றைச் செய்வதில் ஒருகாலும் தோஷமில்லை.

நல்ல விவேகி இந்த யோகத்தை அனுசரிப்பானானால் அவன் அவசியம் சித்திய்டைவான். இதிற் சம்சயமில்லை, அவன் புண்ணிய பாவங்களீனின்றும் விடுபட்டு தேகாபிமானத்தை நீக்கி கிருகத்திலிருந்தே முத்தியை அடைவான். அந்த யோகியானவன் லோக சங்கிரகம் லோக பரிபாலனமுமாகிய தனது காரியத்தில் புண்ணீய பாவங்களைச் செய்யுனும் அப்புண்ணிய பாவங்களீனால் பற்றப்படமாட்டான். கிடைத்ததில் சந்தோஷமுடையவனாயும் உள்ளே கொஞ்சமும் பற்றில்லாதவனாயும் கால வரம்புகளும் உள்ளவனாவும் யோக சாதனத்தில் பொருந்தியிருப்பான். யோகக் கிரியைகளோடு கூடிய கிருகஸ்தனுக்கு ஈஸ்வர வாக்கியமாகிய பிராணவத்தின் சத்தத்தால் சித்தியுண்டாகும். ஆனால் அவனதை செம்மையாக அப்பியசிக்க வேண்டும்.

கிருகஸ்தன் புத்திர தாராதிகளால் நிரம்பியவனாய் வீட்டில் இருந்து கொண்டு அகப்பற்றில்லாமல் யோக மார்க்கத்தில் தன்னிடத்தில் சித்தியின் அடையாளங்களைக் கண்ட பிறகு எனது ஆஞ்ஞையைச் சாதித்துக் கிரீடிப்பன் என்று சிவசங்கிதையும் கிருகஸ்தனுக்கு சித்தி உண்டாகுமென்று சாதிக்கின்றது.

மாத்திரை!

ஆரம்பத்தில் ஒரு மனிதன் ஜாக்கிரத்தில் விடும் சுவாசம் வெளிப்பட்டு உள்ளே போகிறதெவ்வளவோ அவ்வளவு பிராணாயாமத்தின் மாத்திரையாகும்.. அனுபவத்தின் பின் ஒரு புருஷன் நித்திரை செய்யும் போது சுவாசம் எவ்வளவு காலம் போய்த் திரும்புகிறதோ அவ்வளவு காலம் பிராணாயாமத்தின் மாத்திரை எனப்படும்.

அப்பியாசம்!

மாணாக்கன் அப்பியாச காலத்தில் பால், நெய் முதலியவற்றோடு கூடிய உண்வை உண்பது சிலாக்கியம். அப்பியாசம் திடமான காலத்தில் அப்படிப்பட்ட நியமம் வேண்டுவதில்லை என்றும் பிராணன் பிராணாயாமம் ரேசக பூரக கும்பக மாத்திரைகளென்றும் பிறாணன் என்பது தன் தேகத்தில் ஜீவித்திருக்கும் வாயுவென்றும் ஆயாமம் என்பது அந்த வாயுவைத் தடுப்பதென்றும் நாரதீயத்திலும் சௌரவ புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இரேசக பூரக கும்பக பேதத்தால் மூன்று விதமாயும் மூன்று வர்ணமாயும் இருப்பதால் பிரணவமே பிராணாயாமமெனப்படும். பதுமாசனத்திலிருக்கும் புருஷன் நாசி நுனியில் சந்திரபிம்பப் பிரகாசங்களால் விரிந்த அகார மூர்த்தியானது இரத்தாங்கமுடையது. அன்னவாகினி தண்டங்கரத்தில் உடைய வாலையுமாகி காயத்திரியாகின்றது. கருடவாகினி எள் வர்ணமுடையது. சக்கரத்தை கரத்தினிலுடையது. சாவித்திரியாகின்றது. மகாமுர்த்தியானது கருமையான அங்க,முடையது, இடபவாணி வயது சென்றதும் குலந்தரித்ததுமாகிய சரஸ்வதியாகின்றது. அகராதி மூன்றிற்கும் காரணம் பரஞ்சோதியாகிய ஏகாக்ஷ்ர பிரணவமாகிறதென்று தியானிக்க வேண்டும்.

இடையினால் வெளிவாயுவை மாத்திரை அளவு பூரித்து அகாரத்தைச் சிந்தித்து பூரித்த வாயுவை 64 மாத்திரை அளவு கும்பித்து உகாரத்தை தியானித்து கும்பித்ததை பிங்கலையில் 32 மாத்திரை அளவு இரேசித்து மாகாமூர்த்தியை தியானிக்க வேண்டும்.

அன்றியும் பூரகம் 12 ஓங்கார்மாகவும் கும்பகம் 16 ஓங்கார்மாகவும் இரேசகம் 10 ஓங்காரமாகவும் செய்ய வேண்டும். இது பிராணாயாமம் அப்பியாசம் எனப்படும். பிரமன், விஷ்ணு, உருத்திரன், மூவரும் பூரக கும்பக இரேசகங்களுக்கு அதி தேவதைகளென்று சொல்லப்படுவர்.

குண்டலினி சத்தி!

நித்திரை செய்யுங் குண்டலியானது குருபிரசாத மூன்றாம் வாக்கியத்தால் எப்போது விழிக்கின்றதோ அப்போது சகல பதுமங்களும் ஆறு சக்கரங்களும் பிரம கிரந்தி விஷ்ணு கிரந்தி உருத்திர கிரந்தி என்னும் மூன்று கிரந்திகளும் பேதத்தை அடைகின்றன.
அப்போது சூன்ய பதவி என்னுஞ் சுழுமுனையில் பிரணவாயு இராச மார்க்கமாக அனுசரிக்கப்படுகின்றது.
சுகமாகப் போக்குச் சம்பவித்தால் சித்தம் நிராலம்ப நிர்விஷயமாகின்றது. சித்தம் நிராலம்பமாகுங்கால் காலனை வஞ்சிக்கக் கூடும்.
சுழுமுனையென்றும் சூன்ய பதவி என்றும் பிரமாந்திரமென்றும் மகாமேருவென்றும் பெருவழி என்றும் மாயான மென்றும் சாம்பவி மத்திய பாகமென்றும் சொல்வதால் இந்த குண்டலி பேதத்தினாலேயே ஷட்சக்கர பேத முதலியவை உண்டாகின்றமையால் முழு முயற்சியோடு பிரமரந்திரத்தின் சச்சிதானந்த லக்ஷணப் பிரமத்தை அடைவதற்கு உபாயமாகிய சுழுமுனையின் வாயிலை முகத்தால் மூடிக்கொண்டு நித்திரை செய்யும் ஈஸ்வரியாகிய குண்டலியை விழிப்பிக்க மகாமுத்திரை முதலியவற்றைச் செவ்வனே அனுசரிக்க வேண்டும்.
இந்தக் குண்டலி சத்தியானது கந்தத்தின் மேல் பாகத்தில் யோகிகளுக்கு மோக்ஷத்தின் பொருட்டும் மூடர்களுக்குப் பந்தத்தின் பொருட்டுமாகத் தூங்குகின்றது. சகல யோக தந்திரங்களுக்கும் குண்டலி சத்தி ஆதிக்கியமாய் இருப்பதால் அக்குண்டலி சத்தியை எவன் அறிகிறானோ அவன் யோக வித்தாவான் என்றும் யோகிகள் தூங்கும் குண்டலியை விழிக்கச் செய்கிறவர்களென்றும் அடயோக தீபிகையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

குண்டலி ஸ்தான நிலை!

மூலாதாரத்தில் பொருந்தும் உட்பாகமாகிய குண்டலியை சூரியனால் பூரிக்க வேண்டும். குதத்திற்கு இரண்டங்குலம் மேலும் இலிங்கத்திற்கு இரண்டங்குங் கீழுமாக தேகத்தின் மத்தியானது சரீர நடுவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.
கந்தஸ்தானம் மனிதர்களுக்குத் தேக மத்திய மூலாதாரத்தினின்றும் ஒன்பதங்குலத்தின் மேல் நான்கு அங்குல அகலமும் நீளமும் உள்ளதாய் முட்டை போன்று வடிவுள்ளதாய் துவக்குத் தோல் முதலிய வற்றால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. குதத்திற்கு இரண்டங்குலமேல் தேக மத்திய பாகம் ஓர் அங்குலத்திலிருந்து ஒன்பதங்குலம் வரை கந்த ஸ்தானமாம்.
ஆகப் பன்னிரண்டு அங்குலப் பிரமாணம் அதாவது ஒரு ஜான், எழுபத்தீராயிரம் நாடிகளின் பலத்தைச் சோதிக்க வேண்டுமாயின் அதற்குச் சத்தி சலனமாகிய குண்டலி அப்பியாசமின்றி வேறு சத்தி செய்யும் உபாயமில்லை.
இந்த மத்திய நாடியாகிய சுழுமுனையானது யோகிகளுக்கு திடப்பியாசம் சுவஸ்திகா, பங்கயாசனங்களாலும் பிராணாயாமத்தாலும் மகா முத்திரை முதலிய முத்திரைகளாலும் சௌக்கியமுண்டாக்குகின்றது, ஆகிலும் சமாதியினால் அன்னிய விர்த்தி நிரோதிக்கலாகாது. ஏகாக்கிர தன்மையால் மனத்தை தாரணை செய்து அப்பியசித்து நிலைப் பெறச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால் ராஜயோகமின்றிப் பரம புருஷார்த்த பலன் சித்தியாமையால் வாயுவின் கும்பக முத்திரை விதானமாகிய சகல விதிகளையும் மனத்தோடு அப்பியசிக்க வேண்டும். புத்திமான்கள் வாயுவின் விதிக்கு அன்னியமாகிய விஷயத்தில் மனோ விர்த்தியைச் செலுத்தலாகாது. எவர் யோகிகளில் குருபாரம்பரையாகிய சம்பிரதாயத்தால் வந்த சம்பிரதாக்கியமாகிய மகா முத்திரை முதலியவற்றின் உபதேசத்தை தருகின்றாரோ அவரே ஸ்ரீகுரு. அவரே சகல குருக்களுக்கும் சிரேஷ்டரானவர். அவரே பிரபு. அவரே சாக்ஷாத் பிரத்தியக்ஷ ஈஸ்வரர் என்றும் சொல்லப்படுவார்.
அன்றியும் அக்னி மண்டலம் நாபியின் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. அது மனிதர்களுக்குத் தேகத்தின் மத்தியில் பொன்னிறமுள்ளதாய் முக்கோண்மாய் இருக்கின்றது.. அக்குண்டலியை எழுப்பும் விதமாவது சூரிய உதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் தினந்தோறும் இரண்டு முகூர்த்தம் பேதிக்க வேண்டும். சூரியனால் பூரித்து சந்திரனால் இரேசிப்பதால் அபானனும் அக்கினியை அடைந்து உஷ்ண சொருபத்தால் பிராணனை அடைகிறது.
அக்னியின் உஷ்ணத்தால் செவ்வையாகத் தகிக்கப்படுகின்றதால் தண்டத்தால் அடிபட்ட சர்ப்பத்தைப் போல் நிஸ்வாசத்தைச் செய்து நிமிர்ச்சி அடைகிறது. அதன்பின் பிலத்திற் பிரவேசித்த பாம்பைப் போலச் சுழுமுனையினுள் பிரவேசிக்கின்றது.
ஒரு புருஷன் சலனம் செய்து மூல ஸ்தானத்திலிருந்து குண்டலியை மேலே கொண்டு வருவாயின் அவன் மேற்சென்று அமிர்தத்தை அடைவான். இந்தக் குண்டலினி சத்தியை வாலைப் பிடித்து எழுப்பினால் நித்திரையை விட்டு மேலே எழும்புகின்றது. இதை குரு முகமாய் அறிய வேண்டும்.


அமிர்த நிலை!

சிகையின் மத்தியில் பரமாத்துமா பொருந்தியிருப்பதால் மேருவைப்போல உய்ர்ந்திருக்கும் சுழுமுனையானது மேல் பாகத்தின் மத்தியில் சோம ஜலம் ஒழிகிக் கொண்டிருக்கின்றது. அந்தத் துவாரமான சந்திர மண்டலத்தினின்று சரீரத்திற்குச் சாரம் ஒழுகுகின்றது.
ஒழுகும் சந்திர அமிர்தத்தின் சுவை கார்ப்பு, உவர்ப்பு. இவற்றிற்குச் சமானமாய் உள்ளதாயும் தேன், நெய், பால்களைப்போல் இரசமுடையதாயுமானால் அப்போது அவனுக்கு காயசித்து ஆகின்றது. அந்த சந்திராமிர்தம் எனும் சத்தை எவன் பானம் பண்ணுகிறானோ அந்த யோகி வியாதியில்லாதவனாய்த் தாமரைத் தண்டு போல் மிருதுவான சரீர முடையவனாய் வெகுகாலம் ஜீவிப்பான்.

சுவாசங்குலப் பிரமாண நிலை!

இந்த மனித ஜன்மத்திற்கு சாதாரணமாய் சுவாசம்
உள்ளே பத்தங்குலமும் வெளியில் பன்னிரண்டு அங்குலமும் போகும்.
இதுவல்லாமல் நடக்கும்போது 24 அங்குலமும்,
ஓடும்போது 42 அங்குலமும்,
போகஞ் செய்யும்போது 50
தூங்கும்போது 60 அங்குலமும்
சாப்பிடும்போதும் வாந்தியாகும்போதும் 18 அங்குலம் ஓடும்
சாதாரணமாக 12 அங்குலம் ஓடும் இந்த சுவாசத்தை யோக அப்பியாசிகள் கவனிக்க வேண்டும். இவ்வளவு நீளமாகப் போகிற சுவாசத்தைத் தன்னால் கூடிய அளவு சிறிதாக குறைக்க வேண்டும்.
அது ஏனென்றால் இந்த மனித ஜன்மத்திற்குக் கலைகளாகிய சுவாசம் 12 அங்குலம் ஓடி 4 அங்குலம் கழித்து 8 அங்குலந்தான் நின்ற இடத்தில் நோக்கும். இப்படிச் சாதாரணமாக 4 அங்குலம் கழிந்ததனால் 120 வயதாகின்றது. மக்கள் படிப்படியாக சுவாசத்தைப் பந்தனம் பண்ணுவதல் நீண்ட ஆயுளை உடையவர்களாக இருப்பார்கள்.
சாதாரணமாய் மனிதர்களுக்கு உண்டாகிய சுய புத்தி போதாது. ஆகையால் அனுபவமுடைய யோகிகளின் புத்தியைக் கேட்டு நடக்க வேண்டும். அல்லாவிட்டால் துன்பம் நேரிடும். இந்த மூன்று வாயுக்களையும் பஞ்ச தத்துவங்களையும் சுவாசத்தையும் குணிக்க அறிந்து கொண்டால் வரப் போவதைச் சொல்லலாம். தைரியத்தினால் சுறு சுறுப்பாய் மாணாக்கன் இந்த ராஜ யோகத்தை அப்பியசிப்பானாகில் இரண்டு மூன்று வருஷத்தில் அறியப்படுகின்றான்.

மரண நிலை அறிதல்!

இடைகலை அல்லது பிங்கலையில் ஓர் இராத்திரி சுவாசம் முழுவதும் இடைவிடாமல் நடந்தால் அம்மனிதன் மூன்று வருஷத்தில் மரணமடைவான்.
இதே மாதிரி பிங்கலையில் மாறுதலில்லாமல் இரண்டு இராத்திரி இரண்டு பகல் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ம்ரணம் இரண்டு வருஷத்தில் நேரிடும்.
இடைவிடாமல் ஒரு நாசியில் சுவாசம் மூன்று நாளைக்கு நடக்கும் மனிதனுக்கு ஒரு வருஷத்தில் மரணம் நேரிடும்.
இராத்திரி முழுவதும் இடைகலையும் பகல் முழுவதும் பிங்கலையும் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ஆறு மாதத்தில் மரணம் நேரிடும்.
பிங்கலை தொடர்ச்சியாக இடைவிடாமல் ஒரு பாகம் நடக்கும் மனிதனுக்கு பதினைந்து நாளில் மரணம் நேரிடும்.
இடைகலையானது இதே மாதிரியாக ஒரு மாதம் நடந்தால் இந்த விதிப் பிரகாரம் முடியும்.
புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு ஒன்பது நாளிலும்
காது கேளாதவர்களுக்கு ஏழு நாளிலும்,
நக்ஷத்திரம் தெரியாதவர்களுக்கு மூன்று நாளிலும்
மூக்கு நுனி தெரியாதவர்களுக்கு ஐந்து நாளிலும்
இரண்டு கண்களையும் கைகளால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்குப் பத்து நாளிலும் மரணம் நேரிடும் என்பது குரு வாக்கியம்.

யோகிகள்!

யோகிகளுக்கு மேலே கூறிய அடையாளங்கள் நேரிட்டால் உடனே வாயுவைச் சோதித்து அதைச் சரிப்படுத்திக் கொள்ளுந்தனமை உண்டு.
யோகிகளுக்கு மரணம் நேரிடுவது கஷ்டம். யோகிகள் அப்பியாசத்தால் வாயுக்களையும் தத்துவங்களையும் உணர்ந்து முத்திரையைப் பின் தொடர்வார்கள்.
பிறகு கேசரி முத்திரை எவ்வளவு காலம் ஜீவித்திருக்க வேண்டுமோ அவ்வளாவு கலம் ஜீவித்திருப்பார்கள். இந்த யோகிகள் மூன்று வாயுக்களையும் அதிகமாகக் கவனித்து ஸ்திரப்படுத்தவேண்டும்.

சாதரண மனிதர்கள்!

சாதாரணமாய் மனிதர்களுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு சுவாசம் நடக்கும் பக்ஷத்தில் 120 வருஷம் ஜீவித்திருக்கலாம். இப்போது மனிதர்கள் அறுபத்தோராயிரத்து அறுநூறு சுவாத்திற்கு மேல் விடுகின்றார்கள். எப்படியெனில் ஓடுவதினாலும், நடப்பதினாலும், தூங்குவதினாலும், போகம் செய்வதனாலும், சுவாசம் அதிகரிப்பதனால் இந்த நூற்றிருபது வயதுக்கு குறைவு நேரிடுகின்றது.
சாதாரணமாய் மனிதர் விடும் சுவாசம் எவ்வளவு குறையுமோ அவ்வளவு வயது ஏறி வரும். திடீரென்று கட்டக் கூடாது.
மக்கள் அதிக விரைவாக ஓடக்கூடது. அதிகம் சாப்பிடக்கூடாது. வேகமாய் நடக்கக் கூடாது. அதிக போகம் செய்யக் கூடாது.
இந்த விதிகள் ஒன்றும் தவறக்கூடாது.. தவறி நடப்பார்களானால் அதிக கஷ்ட நஷ்டங்களை அடைவார்கள்.

சாம்பவியின் முத்திரை!

உள்ளாதார முதல் பிரம்மரந்திரம்வரை உள்ள சக்கரங்களுள் தன்னாற் கொள்ளப்பட்ட சக்கரத்தில் லக்ஷியமும் தேகத்திற்கு வெளிப்பிரதேசத்தில் மூடுதலும் திறத்தலும் இல்லாத திருஷ்டி பார்வையுமாக இருத்தல் எதுவோ அதுவே சாம்பவி முத்திரையாம்.
அது இருக்கு முதலிய வேதங்களிலும் சாங்கிய பதஞ்சலி முதலிய யோக சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
சாம்பவிக்கு வெளித்திருஷ்டியும் கேசரிக்கு உள் திருஷ்டியும் சாமபவிக்கு இருதய்ப் பார்வையும், கேசரிக்கு புருவநடுப் பர்வையுமாம். ஸ்ரீசாம்பவிக்கும் கேசரிக்கும் ஸ்தான பேதமுண்டு. சித்தம் லயானந்தமானால் பேதமில்லை என்பது கருத்து.
ஸ்ரீசாம்பவி முத்திரையினால் ஸ்திரமனமுடையவனாய் நிஷ்பந்தத் தன்மையாலும் தேகேந்திரிய மனங்களின் நிற்சலனத் தன்மையாலும் சந்திர சூரியர்களை லயமாக்குகிறவனாய் பிராண சஞ்சாரத்தை ஸ்தம்பிக்கிறவன் எவனோ அவனே அதுவிதுவென்று சொல்லக்கூடாத பதமாகிய ஆத்தும சொரூபத்தில் நிலைத்தவனாகிறான்.

கேசரி முத்திரை!

இட வல நாடிகளிலுள்ள வாயு எந்த மத்திய தேசத்தில் செல்கின்றதோ அத்தேசத்தில் கேசரி முத்திரை ஸ்திரமடைகிறது. இதில் ஐயமில்லை. சூனியத்தில் பிராணன் ஸ்திரமாகாகவே வாயுவை விழுங்குதலெனெப்படும்.
சந்திர சூர்யர்கலென்னும் இடைகலை பிங்கலைகளின் மத்தியில் நிராலம்பமாகிய உள் ஆகாயத்திலிருக்கும் ஆகாயங்களின் சமுதாயத்தில் செவ்வையாய் பொருந்தி இருப்பது எதுவோ அம்முத்திரையே கேசரி முத்திரை எனப்படும்.

இதன் அப்பியாசம்!

முன்னமே சுழுமுனையில் பிராணனால் பூரிக்க வேண்டும். அப்போது நிச்சயிக்கப்பட்ட கேசரி முத்திரை உண்டாகிறது.
புருவமத்தி சிவமெனும் சுக வடிவமாகிய பரமாத்துமாவின் ஸ்தானமாம்.
சிவத்தில் ஒடுங்க வேண்டும். எவன் மனத்தை நிராலம்பமாக்கி ஒன்றையும் சிந்தியாதிருக்கின்றானோ அவனே கேசரி முத்திரையை உ?ணருவான். எவன் பிரமகாய விரக்தியைப் பரவைராக்கியத்தால் விடுகின்றானோ அவன் உள்ளும் வெளியும் இருக்கும் ஆகாயத்தில் கடத்தைப்போல் நிற்பான். இது நிச்சயம்.
ஒருவன் தேகத்தினுள்ளும் வெளியுமுள்ள வாயுவைத் தனக்குள் கேசரியில் எப்படி இலயமாக்குகிறானோ அப்படியே தேகத்திலிருக்கும் வாயுவையும் இலயமாக்குவான். இதில் ஐயமில்லை. அன்றியும் பிராணனது ஸ்தானத்தில் ஸ்திரத்தன்மையும் அடைவான். வேறு ஒன்றையும் சிந்தியான். அப்போது சொரூபத்தில் நிலைத்தலாகிய ஜீவன் முத்தனாவது திண்ணம்.

அஜபா காயத்திரியின் நிலை!

பூரக ரேசகம் செய்யுங்கால் ஹம்ஸம் ஸோஹம் என்று நேராகவும் தலைகீழாகவும் பிராகாசிக்கின்றன.
அஜபா மந்திரத்தினால் தத்துவமசி என்னும் மகா வாக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஜீவப் பிரம ஐக்கியம் அடிக்கடி சிந்திக்கப்படுகிறது.
இந்த ஸோ என்னும் அஜபா காயத்திரியை ஈஸ்வர நாமத்தைப்போல் ஜெபிப்பது. சித்த சுத்திக்கு ஹேதுவாகும். வெகுகாலம் வரையில் ஜெபம் செய்யின் விருத்தி அந்தர் முகப்படும்.
அப்போது சுவாசம் வெளிப்படுங்கால் சகாரமாகிறதை (ஸோ எனும் சுவாசத்தை) உட்கொள்ளுங்கால் அகாரத்தை ஹம் என்றே தியானைக்க வேண்டும்.. இந்த அகாரம் மறுபடியும் உட்செல்லுகின்றபடியால் ஹம்ஸம் ஹம்ஸம் என்றே மஹா மந்திரத்தை ஜீவன் எப்போதும் ஜெபிக்கின்ரான். குரு வாக்கியத்தினால் இந்த மந்திரத்தில் ஜெபம் சுழுமுனையில் விபரீதமாய் உண்டாகிறது.
அது ஸோஹம் ஸோஹம் என்றடையப்படுகின்றது. சகாரம் கேசரி எனப்படுகின்றது. த்வம் பதமென்று நிச்சயிக்கப்படிகின்றது. அகாரம் பரமேசுவரானிகிறான். தற்பதமென்று நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.
சகாரத்தை தியானிக்கும் ஆன்மா நிச்சயமாய் அகாரமே ஆகிறான் என்பதை யோக பீஜம், யோக சூடாமணி, உபநிஷத்து, யோக தத்துவ உபநிஷத்து முதலியவற்றால் காணக.
இது அஜபா காயத்திரியாம். இதை முக்கியமான பிரவர்த்தியுடையவன் எவனோ அவன் அதிகாரியாவான். அது சோபாதி சதியானமாம்.
இவற்றினின்றும் சகாரம் அகாரமென்னும் மெய்யெழுத்துக்களை அடக்கி எஞ்சி நிற்கும் ஓம் என்னும் அக்ஷரத்தை தியானைத்தால் நிருபாதிகமாம். ஓம் ஸோஹம் எனும் இரண்டு சத்தங்களும் பிரத்தியேகாத்துமாவோடு பின்னமாகிய பிரமமென்னும் ஒரே அர்த்தமுடையன. சுத்தமாய் இருத்தலால் நிருபாதிகமாயினும் ஓம் எனும் அக்ஷரத்தின் சகார அகாரமென்னும் உபாதிகளைச் சேர்ந்தால் ஸோஹம் என்னும் சத்தமுண்டாகிறது.
ஆகையால் சோபாதிகமெனப்படுவது விசார சகாரம் பதார்த்த மஞ்சூஷரம் முதலிய நூல்களிலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

நாதானு சந்தானம்!

இந்த நாதானுசந்தானத்தை முதலில் அப்பியசிக்கும் மாணாக்கன் சுரராஜ குமார வைரி ரந்தரத்தில் தனது கைவிரல்களிரண்டினால் நிரோதித்து உள்ளே பரவும் சமுத்திரம் போன்ற திரமான நாதத்தை சீக்கிரமாகக் கோருகின்றான். அதனால் எவனுக்குச் செவ்வையாயெழும்பிய நாதமும் வாயுவும் சுத்தமாய் ஜெயிக்கப்பட்டவைகளாகின்றனவோ அந்த மகா குணோதயமுள்ளவனுக்கு அணிமாதி குணங்களும் அளவிறந்த புண்னியமும் உண்டாகின்றன் என்பது சொல்லப்பட்டிருக்கின்றது.
சுரராஜன் இந்திரன் அவன் குமாரன் அர்ச்சுனன், அவன் வைரி கர்ணன் அந்தக்கரண ரந்தரத்தில் என்பது பொரூளாம். அனாகதம் என்னும் நாத வெளியிலுண்டாகும் சுரோத்திர துவக்காதி இந்திரியங்களுக்கு விஷயமாகிய தொனி சூழ்கின்றது. இந்த நாத அப்பியாசி ஒரு பட்சத்தில் சகல சித்த சஞ்சலங்களையும் ஜயித்து நிஜானந்த முடைய்வனாகிறான்.
முதலில் அபியசிங்குங்கால் சமுத்திரம் போலும், பேரி முதலிய வாத்தியம் போலும், நாநாவிதமாகிய நாதம் கேட்கப்படும். பின் நாதானுசந்தானம் நிவர்த்தியாகுங்கால் சூட்சம சூட்சுமமாகக் கேட்கப்படும்.. ஆதியில் வாயு பிரமரந்திரத்திற் செல்லுங் காலத்து சமுத்திரம், சச்சரம், மேகம், பேரிகை, கனக தப்பட்டை என்பனவற்றால் உண்டாகும் சத்தத்தைப் போன்ற நாதமும் அப்படியே பிரமரந்திரத்தில் வாயு ஸ்திரப்பட்டபின் மத்தளம், சங்கு, கண்டாமணி, காகளம் என்பனவற்றால் உண்டாகும் சத்தத்தைப்போன்ற நாதமும், அந்தத்தில் பிராணன் பிரமரந்திரத்தில் மிகவும் ஸ்திரமானபின் கிண்கிணி, வேணு, வீணை, தந்திரி, வண்டு என்பனவற்றின் சத்தங்களைப்போன்ற நாதங்களும் இன்னும் நாநாவிதமான நாதங்களும் தேகத்தின் மத்தியில் உள்ளனவாகக் கேட்கப்படும். மேகம், பேரி முதலியவற்றாலுண்டாகிய பெருஞ் சத்தங்கள் கேட்கப்படினும் அவற்றுள் சூட்சுமமாகிய நாதம் நெடுநேரமிருப்பதால் சித்தம் நெடு நேரம் ஸ்திரமுடையதாக நிலைக்கும்.
கன நாதத்தை விட்டுச் சூட்சுமத்திலும் அல்லது சூட்சுமத்தை விட்டு கனநாதத்திலுமாக இரம்மிப்பதாயிருக்கினும், கன சூட்சுமமென்னும் இரண்டிலொரு நாதத்தைக் கொள்ளுதல் தள்ளுதல் கூடாது. ஏனெனில் அப்படிக் கொள்ளலும் ராஜச குண இயல்பாதலல் அவ்வித ராஜச குணத்தை வரவெட்டாமல் சுத்த சாத்துவிக குணச் செய்கையான சூட்சும நாதத்தில் மனத்தை செலுத்த வேண்டும்.
அஃதேனெனில் நாதங்களில் இரம்மிக்கும் மனமே சமாதியடையும் என்பது கருத்து, அதாவது மலர்ந்த புஷ்ப ரசத்தை குடிக்கும் வண்டு கந்தத்தை விரு,ம்பாதது போல சூட்சும நாதத்தில் சித்தம் நிலைக்க வேண்டும்.. சப்தாதி விஷயமாகிய உத்தியானத்தில் சஞ்சரிக்கும் மனமென்னும் மதயானையை அடக்குவதில் இந்த அனாகதத் தொனியானது கூரிய அங்குசம் போன்ற வலிவுடையதென்பது சொல்லப்பட்டிருக்கின்”றது.

வாசியை அடக்கி அடையும் பலன்!

இந்த யோக அப்பியாசிகள் சூரிய சந்திர கலைகளின் பிராண வாயு செல்லுங்கால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, என்னும் நான்கு தத்துவங்கள் வந்து விலகும். அப்போது அப்பிராண வாயு ஆகாய தத்துவத்தில் அடையும். அச்சமயத்தில் சுவாசம் குறைந்து வரும். அக்காலத்து சுவாச பந்தனம் செய்யக்கூடும். அப்போது
ஓர் அங்குலம் குறைந்தால் இவ்வுலகத்து இச்சையினின்று சுவாதினப்படுவான்.
இரண்டங்குலம் குறைந்தால் மனம் ஆனந்திக்கப்பட்டு ஞானச் செல்வமுண்டாகும்.
மூன்றங்குலம் குறைந்தால் விவேகியாவான்,
நான்கு அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகளைச் சொல்லப்படுவான்.
ஆறங்குலம் குறைந்தால் ஆகாசத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான்.
ஏழங்குலம் குறைந்தால் சரீரம் காயசித்தி பெறுவான்
எட்டங்குலம் குறைந்தால் அணிமா சித்திகளை அடைவான்
ஒன்பங்குலம் குறைந்தால் நவகண்டங்களில் சஞ்சரிப்பான்.
பத்தங்குலம் குறைந்தால் ஒரு தேசத்தை விட்டு மற்றொரு தேசத்தில் பிரவேசிப்பான்.
பதினொரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவைக் கண்டு வசனிப்பான்,
பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருப்பதால் அந்தப் பரமயோகி நெடுங்காலம் அன்னபானாதிகளை நீக்கி அவாவற்றிருப்பான்.
சமாதியிலுட்கார்ந்து மாணாக்கன் இடைகலையைப் பிங்கலையிலும் பிங்கலையை இடைகலையிலும் மாற்றக் கற்றுக் கொண்டபின் பகல் முழுவதும் இடைகலையிலும் இரவில் அதை அடைத்துவிட்டு பிங்கலையிலும் நடத்தப்படுவான்.
இதற்காக பழம்பருத்தியிற் கொஞ்சம் சுத்தம் பண்ணி வைத்துக் கொண்டு இடைகலையை நடத்த வேண்டியிருந்தால் வலநாசியிலும் பிங்கலை நடத்த வேண்டியிருந்தால் இட நாசியிலும் அடைத்துவிட வேண்டும். இப்படிச் சரிவர நடந்தால் மனிதர்கள் நூற்றிருபது வயது ஜீவித்திருக்கலாம்.
மற்றச் சங்கதிகளை சிந்திக்கும் பக்ஷத்தில் யோகிகளுக்கு வயதே இல்லை.
எந்த விதிகள் எப்படியிருந்தாலும் இந்த விதிகள் யாவும் கிருகஸ்தர்களுக்காகவே ஏற்பட்டிருக்கின்றன.
இதை அப்பியாசிகள் எப்போதுமிவ்விதப் பிரகாரம் நடத்துவார்கள். அப்போது தேக சௌக்கியமும் நீண்ட ஆயுளும் மன ஒடுக்கமும் சித்த சாந்தியும் உடையவர்களாய் இருப்பார்கள்.

மனோ நிலை!

பிராணவாயு சுழுமுனையாகிய மத்திய நாடியிற் செல்லுங்கால் அந்தக் கரணம் சூனிய தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத பிரமத்தில் பிரவேசிக்கின்றது. அப்போது சித்த நிரோதமுள்ள யோகவித்தானவன் பிராரத்தத்தோடு சகல கருமங்களையும் நிர்மூலமாக்குகிறான். எது வரையிலும் பிராணனும் இந்திரியங்களும் ஜீவித்திருக்கின்றனவோ அது வரையில் மனத்தில் ஞானம் எப்படி உண்டாகும்! பிராணன் மனம் என்னும் இவ்விரண்டையும் எவன் லயமாக்குகின்றானோ அவன்மோக்ஷத்தை அடைகின்றான்.
பிராண மனோலயங்களில்லாதவன் எவ்விதத்திலும் மோக்ஷம் அடையமாட்டான். நல்ல ஸ்தானத்தில் இருந்து கொண்டு சுழுமுனை என்னும் மத்திய நாடியை நன்றாய் போதிக்கும் தன்மையை குரு மூகமாய் அறிந்து பிராண வாயுவை மத்தியிற் சொலுத்துவதாகிய பிரமரந்திரத்தில் நிரோதித்தல் வேண்டும். இப்படி அப்பியசித்தால் பிராணனது அசைவிற்கு க்ஷயம் வரும். அப்போது மனம் மிகவும் சாந்தியடைகின்றது அக்காலம் நிர்வாணம் மிஞ்சுகிறது.
சூரியனும் சந்திரனும் இராப் பகல் வடிவமாகிய காலத்தைப் புசிப்பவர்களாயிருக்கிறார்கள். இது இரகசியமாய் சொல்லப்பட்டது.
இரண்டரைக் கடிகை சூரியனோடுங்கால் பகலென்றும் சந்திரனோடுங்கால் இரவென்றும் சொல்லப்பட்டிருக்கின்ற்ன. அப்போது சுழுமுனை மார்க்கத்தால் வாயு பிரமரந்திரத்தில் ஒடுங்குகின்றதோ அப்போது இராப்பகல் வடிவாகிய காலமில்லாமையால் அச்சுழுமுனை காலத்தைப் புசிப்பதாய் உள்ளது.
எந்த யோகியால் பிரண வாயு கட்டப்படுகின்றதோ அந்த யோகியால் மனமும் கட்டப்படுகின்றது.
எவனால் மனம் கட்டப்படுகின்றதோ அவனால் பிராணனும் கட்டப்படும்.
மனம் பிராணன் என்னும் இரண்டுள் ஒன்றைக் கட்டினால் மற்றொன்றும் கட்டப்படும். அதலால்
மனம் ஒடுங்காத வரையில் வாசனை நசியாது.
வாசனை நசியாத வரையில் சித்தம் நசியாது.
சித்தம் நசியாத வரையில் தத்துவ ஞானம் உண்டாகாது.
இவற்றுள் மனம் பிராணன் என்னும் இரண்டினுள் ஒன்று நசித்தால் மற்றொன்றும் நாசமாம். ஒன்றின் பிரவிர்த்தியால் மற்றொன்றும் பிரவிர்த்தியாகின்றது. இவ்விரண்டும் லயமானால் மோட்ச சித்தி உண்டாகும்.
மனம் ஸ்திரப்பட்டால் பிராணன் ஸ்திரமாகும்.
சுரோத்திரம் முதலிய இந்திரியங்களுக்கு மனம் நாதனாகிறாது.
மனதிற்குப் பிராணன் நாதனாகிறது.
பிராணனுக்கு மனோலயம் நாதனாகிறது.
அம்மனோலயம் நாதத்தை ஆசரித்திருக்கின்றது.
அதாவது மனம் நாதத்தில் ஒடுங்குகின்றது. சுவாச நிசுவாசங்கள் நஷ்டமாகிறது. சத்தாதி விஷயக் கிரகணம் நஷ்டமாகிறதும் சேட்டைகள் நீங்குகிறதும், விவகாரங்கள் இல்லாததும் மனோலயமேயாகும்.
மனோலயம் எதுவரையில் ஆகவில்லையோ அது வரையில் இந்திரிய விஷயங்கள் ஜயமாகா.
இந்திரிய விஷயங்கள் ஜயமாகாவரையில் எனதென்பது எப்படி நீங்கும்!
எனதென்பது நீங்காத வரையில் யாரென்னும் அகந்தை எப்படி நீங்கும்!
யானென்னும் அகந்தை நீங்காத வரையில் மனச் சுத்தம் எப்படி ஆகும்!
மனம் சுத்தமாகத வரையில் அபரோக்ஷ ஞானம் எப்படி வரும்!
அபரோக்ஷ ஞானம் உதயமாகத வரையில் பிரம் சைதன்யம் சமாதியின் கண் எப்படி புலப்படும்!
பிரம் சைதன்யம் சமாதியின் கண் புலப்படாத வரையில் திடஞானம் எப்படி உதயமாகும்!
திடஞானம் பெற்ற மகான்களுக்கு துவிதமேது! பேதமேது! மாய்கையேது! பந்தமேது! ஜன்மமேது! அப்போது அந்த யோகி ஜன்மாகிதனாகின்றான்.

ஆகையால் இந்த யோகத்தை அனுஷ்டிக்கும் பக்குவமுடைய மூஷுகன் முக்கியமாக கவனிக்க வேண்டியது. யாதெனில் வாசி யோகத்தைய்ன்றி மற்ற ஹடயோகம், கௌடயோகம், அம்பிகா யோகம் முதலிய யோகங்களால் சாட்சாத்காரத்தை அடைய இயலாதென்பதை உணரவேண்டும். அஃது எப்படியெனில் ஒருவன் கௌசனையால் விசாலமான விண்ணை மூடுவது போலாகும். இந்த வாசி யோகம் அப்படியன்று.. கண் மூட விண் மறையுமென்பதாம். ஆகையால் இந்த யோகத்தை அனுஷ்டித்தவர்கள் இந்த நூலை வாசித்தவர்கள், வாசிக்க கேட்டவர்கள், மனம் இவ்வாசியை நாடுவதால் சித்தம் நிலைத்து ஞானம் உதயமாய் அணிமாதி சகல ஐஸ்வரியங்களும் அடைந்து ஜீவன் முத்தர்களாய் நிரதி சயானந்தத்தில் சதா காலமும் நிலைத்து வாழ்வான் என்பது குரு வாக்கியம்.

வாழ்க நாரண தேசிகர் வான்ருள்!
வாழ்க அன்னவர் மாணவர் யாவரும்!
வாழ்க இந்நூல் படிப்பவர் கேட்பவர்!
வாழ்க இந்தச் சிவயோக சாரமே!

#############################################################################################

Read 5185 times Last modified on செவ்வாய்க்கிழமை, 02 June 2020 10:54
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880580
All
26880580
Your IP: 3.239.214.173
2024-03-19 15:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg