gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கொலை செய்யாதிருத்தலைவிட சிறந்த புண்ணியம் எதுவுமில்லை, கொலை செய்வதைவிட கொடிய பாவமும் எதுவுமில்லை!
வெள்ளிக்கிழமை, 20 July 2018 09:19

பிரம்மன்-சரஸ்வதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

####

பிரம்மன்-சரஸ்வதி!

பிரம்மன்!

இறைவனின் உயிர்களின் படைப்புக்குமுன் பிரபஞ்சம் பெயர் உருவமில்லாமல் சுத்த அண்டைவெளியாய், நிர்க்குணமாய், சின் மாத்திரப் பரப்பிரம்மாய் இருந்துள்ளது. அந்த பரப்பிரமத்திலிருந்து பிரமையினால் கானல்நீர் போன்று மூலப்பிரகிருதி என்ற மாயை வெண்மை, சிகப்பு, கருப்பு எனும் மூன்றுவித நிறங்களோடு மூன்று சக்திகளாய் தோன்றியது. ‘பிர’ என்றால் மிகச்சிறந்தது என்றும் ‘கிருதி’ என்றால் மிகச் சிறந்த உற்பத்தி என்றும் பொருள். பிரகிருதி தனிப்பட்டது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இது பரப்பிரமத்துடன் இணைந்திருப்பது. பிரகிருதியின்றி பரப்பிரம்மம் இல்லை. அந்த மூன்று சக்திகளில் வெண்மை நிறம் மாயா (மாயை) சக்தியாகவும், சிகப்பு நிறம் அவித்யா (அறியாமை அஞ்ஞானம்) சக்தியாகவும் கறுப்பு (கருமை) நிறம் ஆவரண விஷேச சக்தி (முனைப்பு/அகங்காரம்) என்றும் ஆகியது.

மாயா சக்தி எப்போதும் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களில் (1.ராஜஸம்-எழுச்சி, 2.தாமஸம்-மயல் (மயக்கம்), 3.ஸாத்வீகம்-நன்மை (அமைதி), சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும். அதில் பரப்பிரம்மம் பிரதிபலிப்பதனால் தோன்றிய பிரதிபிம்பமே ஈசுவரன் ஆகும். ஈசுவரனின் அருட்சக்தியே ஸ்திரி(சக்தி) உருவமாக இயங்குகின்றது. ஈஸ்வரன் அமைதி நிலை (static) சக்தி ஆற்றல் நிலை (dynamic). பிரணவப் பொருளே ஈஸ்வரன் சொரூபம். அது எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படுவது. அதுவே பரபிரம்மம் ஆகும். ஏகாட்சரம்- ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம்.

அப்படித் தோன்றிய ஈஸ்வரன் அந்த மாயையைத் தன்வசப்படுத்திக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் வடிவங்களைத் தோற்றுவித்து உலகங்கள் யாவையும் சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), சம்ஹாரம்(அழித்தல்) என முத்தொழில்களுடன் மறைத்தல், அருளல் என்று இயக்கி உலகை இயக்குகின்றார். இந்த முத்தொழிலுக்கும் உதவி செய்ய அவர்களுக்கு ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது.

முதலில் பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன் அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள் சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின் காயத்திரி என அழைக்கப்பட்டன.

இந்த உற்பத்தியில் மிகச் சிறப்பானது பெண்கள்தான். மற்ற பெண்கள் எல்லாம் முதலில் உற்பத்தியான பெண்களிலிருந்தேதான் உற்பத்தி செய்யப்பட்டனர். அதனால் மற்றவர்கள் இவர்களின் அம்சத்துடன் கூடியவர்கள். அடிப்படி பிரகிருதியிலிருந்தே தோன்றியதால் பெண்களுக்குத் தீங்கிழைப்பது தாய்மைக்குச் செய்யும் கொடுமைக்குச் நிகரான பாபச் செயல் எனப்படும். பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை பிரகிருதிக்கு அளிக்கப்படும் மரியாதையாகும்.

உலகில் படைப்புத் தொழிலை ஆரம்பிக்குமுன் பிரம்மன் தன் உடலை இரு கூருகளாக்கி ஆண்- பெண் என்றமைத்தான். ஆண்-ஸ்வாயம்புவ மனு என்றும் பெண் சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர் தன் மனத்தின் மூலம் நாரதர், தட்சன், வசிஷ்டர், பிருகு, கிருது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மாரீசு ஆகிய மகன்களை உருவாக்கி அவர்கள் பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அதனால் அவர்கள் பிரஜாபதிகள் எனப்பட்டனர். சிருஷ்டி வளர்ச்சி பெற்று நவகோடிகள் தோன்றின. உலக விவகாரம் அறிய உதவும் நிலையில் காலப் பிரமாணம் உருவாகியது.

சரஸ்வதி!

முத்தொழிலுக்கும் உதவி செய்ய ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது. சரஸ்வதிதான் உலகின் முதல் பெண் தெய்வம். இதனால் வேதங்கள் சரஸ்வதியை ஆதிகாரணி என்கின்றன. புரட்டாசி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சரஸ்வதி தோன்றினாள். மூலம்-என்றாள் அடிப்படை- ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி. கல்விக்கு அதிபதி சரஸ்வதி

சரஸ்வதி தேவியின் முகம்- பிரம்ம வித்யை, கைகள்- நான்கு வேதங்கள், கண்கள்- எண், எழுத்து. மார்பு- இசையும் இலக்கியமும், பாதங்கள்- இதிகாச புராணம், யாழ்- ஓங்காரம் என வேதங்கள் விவரிக்கின்றன. காயத்ரி, சாவித்திரி, தண்டா சிறப்பினள், நாமகள், தூயா, பாமகள். பாமுதவல்லி, பாரதி, பிராமி, பூரவாகினி, வாக்காள்வாணி, வெண்தாமரையாள், கமலவல்லி, கலைவாணி, கலைமகள், கலைக்கொடி, கலைஞானதோகை, கலுங்கன் (பாலித்தீவு), பெண்டன் (ஜப்பான்), யங்சன்ம (திபெத்), ஹம்சவல்லி எனப் பலப் பெயர்களால் ஆராதிக்கப்படுகின்றாள்.

மக்கள் உற்பத்தி செய்யப் பட்டால் அவர்கள் பிழைப்பதற்காக எண்களும், பேசுவதற்கு மொழியும், வழிபடுவதற்கு பூஜை முறைகளும் தேவை என்பதை உணர்ந்த சரஸ்வதி. மக்களின் மன இறுக்கத்தைப் போக்க அறிவாற்றலைப் பெருக்கப் 64 கலைகளைத் தோற்றுவித்தாள்.

வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினிசரஸ்வதி ஆகிய எட்டு ரூபங்களில் சரஸ்வதி காட்சியளித்துள்ளாள். இந்த ரூபங்களை ஆராதித்தால் கிடைத்த செல்வத்தை பேணிக் காக்க அறிவும் ஞானத்தால் கிடைக்கும் புகழும் மனநிம்மதியும் பெருகும். வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் (சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யாறிவு) ஆகியவற்றின மூலமாக நிலைக்களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும் விளங்குபவள் சராஸ்வதி.

சிவனைப் போன்றே சரஸ்வதியும் மூன்றாம் பிறையை அணிகின்றாள். சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவிற்குத்தான் தனக்கு கலைகள் தெரியும் என அடக்கத்துடன் இருப்பதைக் குறிக்கின்றது.

கலை என்றால் வளர்வது என்று அர்த்தம். மாக எனும் மாசிமாத வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி- சரஸ்வதி பிறந்த நாள் என்பதால் அன்றும், கலைகளைக் கற்க நன்னாளான விஜயதசமி அன்றும் சரஸ்வதியைத் தொழ வேண்டும். வெள்ளை நிறப் பூக்கள், வெள்ளை ஆடைகள், வெண்சங்கு, சந்தனக் குழம்பு ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். பூஜா என்பதிலிருந்து பிறந்தது பூஜை. பூ என்றால் பூர்த்தி, ஜா என்றால் உண்டாக்குவது. ஞானத்தை உண்டாக்கச் செய்வதே பூஜா என்கிற பூஜை. பொதுவாக தெய்வபூஜைகளில் பூஜை என்ற வார்த்தையைச் சேர்ந்து சொல்வது சரஸ்வதி பூஜை மட்டுமே.

தம்பதியர்கள் ஒற்றுமை!

பிரம்மனும் சரஸ்வதியும் சத்ய லோகத்தில் தன்னால்தான் இந்த சத்ய லோகம் பெருமை படுகிறது என்று ஆரம்பித்து சச்சரவில் முடிந்து இருவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர். அதன்படி இருவரும் சோழ நாட்டில் புண்னிய கீர்த்தி-சோபனை என்ற அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். திருமண வயதில் இருவருக்கும் தாங்கள் யார் என்ற நினைவு வந்தது. சகோதர நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு தெரிய வந்து அனைவரும் முடிவெடுத்து சிவனைத் துதிக்க, தம்பதியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இது போன்ற குழப்பங்கள் வாழ்வில் ஏற்படும் என்பதை உணர்த்தவே இந்த பிறப்பு உங்களுக்கானது. எனினும் நீங்கள் இருவரும் இப்பிறவியில் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே சரஸ்வதியாகிய நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு செல்வத்தை வழங்கு என ஆசி அருள்- கூத்தனூர்.

ஏளனம்- நகைப்பு- சாபம்- சரஸ்வதி பூலோகப் பிறப்பு!

விகார உருவம் கொண்ட மகரிஷி மரீசிக்கைப் பார்த்து அங்கு வந்த சரஸ்வதி சிரிக்க அடுத்தடுத்து பிறவியில் கூன் உருவத்துடன் பிறக்க சாபம். ராமாவதாரத்தின் போது கூனிமந்தரை- இங்கு தவம். குப்ஜாசங்கமம்-மத்தியபிரதேசம் அடுத்து கிருஷ்ணாவதாரத்தின் போது சகுனி கண்ணனின் மகிமையால் விமோசனம்.-

சரஸ்வதி நதி!

லக்ஷ்மி, சரஸ்வதி, கங்கை மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓர் நிலையில் லக்ஷ்மி அமைதியுடன் இருப்பதைப் பார்த்த சரஸ்வதி, சச்சரவை தீர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்! நீ துளசி மரமாக ஆவாய் எனச் சாபமிட, கங்கை சரஸ்வதியைப் பார்த்து நீ நதியாக ஆவாய் என்றும் சரஸ்வதி கங்கையைப் பார்த்து நீ நதியாய் ஆவாய் எனவும் சாபம் இட்டனர். அதன்படியே லட்சுமி துளசிச் செடியாகவும், சரஸ்வதி- சரஸ்வதி நதியாகவும், கங்கை- பகீரதி எனும் நதியாகவும் தோற்றமெடுத்தனர். நதி வடிவடைந்து பாபிகளின் பாபங்களை ஏற்றனர்.

ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் சரஸ்வதி தேவியே அதிபதி. அவைகள்
1. ஆடல்,
2. இசைக்கருவி மீட்டல்,
3. ஒப்பனை செய்தல்,
4. சிற்பம் வடித்தல்,
5. பூத்தொடுத்தல்,
6. சூதாடல்.
7. சுரதம் அறிதல்,
8. தேனும் கள்ளும் சேகரித்தல்,
9. நரம்பு மருத்துவம்,
10. சமைத்தல்,
11. கனி உற்பத்தி செய்தல்,
12. கல்லும் பொன்னும் பிளத்தல்,
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்,
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்,
15. கலவை உலோகம் பிரித்தல்,
16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்,
17. உப்பு உண்டாக்குதல்,
18. வாள் எறிதல்,
19. மற்போர் புரிதல்,
20. அம்பு தொடுத்தல்,
21. படை அணி வகுத்தல்,
22. முப்படைகளை முறாஇப்படுத்தல்,
23. தெய்வங்களை மகிழ்வித்தல்,
24. தேரோட்டல்,
25. மட்கலம் செய்தல்,
26. மரக்கலம் செய்தல்,
27. பொற்கலம் செய்தல்,
28. வெள்ளிக்கலம் செய்தல்,
29. ஓவியம் வரைதல்,
30. நிலச் சமன் செய்தல்,
31. காலக் கருவி செய்தல்,
32. ஆடைக்கு நிறமூட்டல்,
33. எந்திரம் இயற்றல்,
34. தோணி கட்டல்,
35. நூல் நூற்றல்,
36. ஆடை நெய்தல்,
37. சாணை பிடித்தல்,
38. பொன்னின் மாற்றி அறிதல்,
39. செயற்கைப் பொன் செய்தல்,
40. பொன்னாபரணம் செய்தல்,
41. பொன் முலாமிடுதல்,
42. தோல பதனிடுதல்,
43. மிருகத் தோல உரித்தல்,
44. பால் கறந்து நெய்யுருக்கல்,
45. தையல்,
46. நீச்சல்,
47. இல்லத் தூய்மையுறுத்தல்,
48. துவைத்தல்,
49. மயிர் களைதல்,
50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்,
51. உழுதல்,
52. மரம் ஏறுதல்,
53. பணிவிடை செய்தல்,
54. மூங்கில் முடைதல்,
55. பாத்திரம் வார்த்தல்,
56. நீர் கொணர்தல், நீர் தெளித்தல்,
57. இரும்பாயுதம் செய்தல்,
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்,
59. குழந்தை வளர்ப்பு,
60. தவறிணைத் தண்டித்தல்,
61. பிற மொழி எழுத்தறிவு பெறுதல்,
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்,
63. மேற்கூரிய கலைகளை உள்வாங்கும் விரைவு,
64. வெளிப்படுத்தும் நிதானம்.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி!
மாசிமாத சுக்லபக்ஷ பஞ்சமி திதியிலும் வித்தியா ஆரம்ப நாளிலும் முற்பகலில் அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு தூய்மையுடன் ஆகம விதிப்படி விக்னேஸ்வரரை முதலில் வணங்கவும். கடத்தை ஸ்தாபித்து சரஸ்வதி தேவியை அதில் ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

நவநீதம், தயிர், பால், பொரி, எள், லட்டு, கரும்பு, கரும்பின் சாறு, வெள்ளைப்பாகு, வெல்லம், மது, ஸ்வஸ்திகம், சக்கரை, பிளவுபடாதவெள்ளத் தான்ய அட்சதை அவற்றால் உண்டாக்கிய அவல், வெண்மோதகம், நெய்யும் உப்பும் கலந்த வெண் பொங்கல், நெய் கலந்த தினை கோதுமை சுவஸ்திகம் (ஆசனம்) ஆகியவற்றில் மாம்பழம், வாழைப்பழம், ஆகியவற்றை தோல் உரித்து சேர்த்து பிசைந்து செய்த பலகாரம், பரமான்னம் நெய்கலந்த தூய அன்னம் தேங்காய் இளநீர், வெட்டிவேர், பக்குவ நிலையிலுள்ள வாழைப்பழம், வில்வ பழம், இலந்தைப் பழம் அந்தந்த பருவ காலத்திலுண்டாகும் வெள்ளைப் பழங்கள், வெள்ளைச் சந்தனம், புத்தம் புதிய வெண்ணிற ஆடை, அழகான சங்கு அணிகள், முத்தார ஆபரணம் ஆகியன சரஸ்வதி பூஜைக்குரியனவாகும்.

பின் வெண்மை நிறமுடையவளாயும், புன்னகை, சந்துஷ்டி, புஷ்டியான திருமேனியுடன் இருப்பவளும், தூய்மையான ஆடைகளுடன், வீணை புத்தகம் தரித்தவளும், இரத்தின ஆபராணகளை அணிந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், முனிவர்களால் போற்றப்பட்டவளுமான சரஸ்வதி தேவியை உளமாற துதிக்கின்றேன் என்று வணங்கி மூல மந்திரத்தால் தியானிக்கவும்.

சரஸவாணி!

தேவலோகத்தில் துர்வாசர் வேதம் சொல்லியபோது உச்சரிப்பில் சிறிது தடுமாறினார். கோபம் கொண்டால் சபித்து விடுவாரென அஞ்சி அனைவரும் அமைதியாயிருக்க கலைவாணி மட்டும் சிரித்துவிட்டாள். பிரம்மாவும் அமைதியாக இருந்தார். சீற்றமடைந்த துர்வாசர் மானிடராய் பிறந்து இருவரும் சிலகாலம் வாழவேண்டும் எனச்சாபமிட்டார்.

ஒருவரின் அறியாமையை எள்ளி நகையாடியது தவறு என வருந்தினாள் சரஸ்வதி. கனிவுடன் சொல்லி சரி செய்வதற்குப் பதிலாக தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து துர்வாசரிடம் பணிவுடன் சாப விமோசனம் வேண்டினாள். சிவன் ஆதிசங்கராக அவதரிக்கும்போது அவர் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். துர்வாசரால் சாபம் பெற்ற பிரம்மாவும் சரஸ்வதியும் மண்டனமிச்ரர், சரஸவாணியாக மாகிஷ்மதி நகரில் பிறந்திருந்தனர். மண்டனமிச்ரரைப்பற்றி குமாரிலபட்டர் சொல்லக் கேள்விப்பட்டு அவரது மீமாம்ச தத்துவத்தை வென்று அத்வைதத்தை ஸ்தாபிக்க சங்கரர் அங்கு வந்தார்.

மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வளைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வளைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது. வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் எனறு ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.

திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.

அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது. 

ஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.

கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள். 

#####

Read 7225 times Last modified on வெள்ளிக்கிழமை, 20 July 2018 21:46
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19373024
All
19373024
Your IP: 172.69.63.35
2020-10-25 16:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg