gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்தது இல்லை!.வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றி கொண்டதே அவர்களை பெரிய மனிதனாக்கியதாகும்!
ஞாயிற்றுக்கிழமை, 28 April 2019 09:56

வாழ்வில் வளம் சேர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

#*#*#*#*#

வாழ்வில் வளம் சேர்!

மனிதா வாழ்க்கை வழ்வதற்கே! இறைவன் கொடுத்த உடலும் வாழ்க்கையையும் நல்ல முறையில் பயன்படுத்தி நலவாழ்வு வாழவேண்டும் என்பதே அனைவரின் அவா! இருப்பினும் எதை எப்படிச் செய்வது என்று புரியாமலும் தெரியாமலும் பல தவறுகளைச் செய்து வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவிக்கின்றோம். அப்படி துயரங்களில்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள சில தகவல்களை முப்பத்தி நான்கு வளமான வளங்களை உலக உயிர்களின் பயன்பாட்டிற்காக தெரிவிக்கப்படுவதை தவறாமல் கடைபிடித்து வாழ்வில் வளம் பெற்று இனிய வாழ்விற்கு அடிகோலுங்கள். ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழுங்கள். அன்புடன் குருஸ்ரீ பகோரா

அக வளம்!
அகத்தின் அழகே முகத்தில்! ஒருவருடைய அகம் கோபமாயிருந்தால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்பார்கள். அல்லது கோபக்கனல் வீசுகின்றது என்பர். அகத்தில் துயரம் நிறைந்திருந்தால் முகம் வாட்டமுட்டிருக்கும். ஏன் உன் முகம் வாடியிருக்கின்றது என்பர். துக்கம் நிறைந்திருந்தால் முகம் சோகத்துடன் இருக்கும். அகம் நிம்மதியாயிருந்தால் முகத்தில் ஆனந்தம் தெரியும். இப்படி ஒரு முகத்தில் தெரியும் குறிகளைக் கொண்டு சூட்சுமமான அகம் எந்த நிலையிலிருக்கின்றது என்பதை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு தெரிவித்து அவர்களிடமிருந்து ஆறுதல் பெறுகின்றோம். முகத்தில் எந்த உணர்சிகளையும் காட்டாமல் நிர்மலமாய் இருக்க அகத்தில் வெறுமை நிம்மதி வேண்டும். அகத்தில் துக்கம், துயரம், கோபமின்ற் இருக்க எண்ண அலைகளின்றி வெறுமையாய் இருக்க வேண்டும். அப்போதுதான் முகத்தில் எந்த சலனமும் இருக்காது. மேலும் அகத்தில் உடல் உபாதைகளின் நினைவுகள் இன்றி இருக்கவேண்டும் நோயற்ற வழ்வே குறைவற்ற செல்வம். அகத்தேயுள்ள செல்வமே உண்மையான செழிப்பாகும்.

அன்பு வளம்!
அன்பு அன்றால் அன்புதான்! அன்பு கொள்ளாத உயிர்களே உலகில் இல்லை. அன்பை அறியாத உயிர்களும் இல்லை. ஆனால் எல்லோரிடமும் அன்பு மட்டும் இல்லை. இருக்கும் அன்பு வரண்டு போனதாகக் காணப்படுகின்றது. வளமையான இனிமையான குணமான பவித்ரமான அன்பை கொண்டிருங்கள். எதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்கு அவர்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக அன்பு கொள்ளாதீர்கள். உயிர்கள் எல்லாவற்றின்மீதும் அன்பு கொள்ளுங்கள். அன்பே சிவம் என்றார் பெரியோர். நீங்கள் அன்பு கொண்டவராக இருந்தால் உங்களைச் சுற்றி ஓர் அன்பு கொண்ட குழுமம் உருவாகும். உங்களைச் சுற்றி எப்போதும் அன்பு நிரம்பியிருக்கும். நீங்கள் என்றும் எப்போதும் அன்பில் திளைத்துக் கொண்டிருப்பீர்கள். அதுவே ஆனந்தத்தின் அஸ்திவாரம்.

அமைதி வளம்!
எப்பொழுதும் அமைதியாய் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அமைதியே உங்கள் உடலை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவும். ஒருவரை எந்தக் காரணமின்றி கடுமையான சொற்களை உபயோகித்து திட்டினாலோ, அல்லது துன்புறுத்தினாலோ மற்றவர் அதனைப் பொருட்படுத்தாமல் நிலைமையை பொறுமையுடன் சமாளியுங்கள். இதுபோன்ற இக்கட்டான நிலையில் அமைதியாக இருப்பது ஓர் சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகும்.

அந்தக் கடுஞ்சொற்களைக் கேட்டு கலக்கம் அடைய வேண்டாம். அந்தக் கடுஞ்சொற்களை நீங்கள் கேட்டு அமைதியாய் இருந்தீர்களானால் நீங்கள் அடக்கத்திலும் தூய்மையிலும் வளர்ச்சி அடைந்தாக அர்த்தம்.

உங்களைத் திட்டியவரை அல்லது துன்புறுத்துயவரை பற்றி கோப துவேஷங்களையும் பகைமை உணர்ச்சிகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அந்த பகை உங்களின் நன்னடத்தையை நல்ல செயல்களை கெடுக்க வல்லது. நீங்கள் கேட்ட பழிச்சொல்லோ அவதூறோ கடந்த காலத்தில் நிகழ்ந்தது. முடிந்துபோன அதை ஏன் நினைவில் கொண்டு துன்பத்தை நீட்டிக்கின்றீர்கள். பகை, வெறுப்பு உணர்ச்சிகளை மீண்டும் நினைத்து நிலைகுலையாதீர். உங்களிடமிருந்த அமைதியை பறித்துவிடும் கொடுமையானது. அறவே அதை நீக்கி அந்த நிகழ்வை மறந்துவிடுங்கள். அந்த நிகழ்வை உங்கள் ஆழ்மனதில் பதிய விடாதீர்கள். அப்படி பதிந்தால் அது ஒரு புரையோடிய புண்ணாகி விடும்.

ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கும்போது அதைப்பற்றி தெரியாததனால் அதை தட்டிக் கழித்தீர்களானால் அது உங்களை இயலாதவர் என ஆக்கிவிடும். அந்த இயலாமை பற்றி நீங்கள் நினைக்க நினைக்க உங்களின் அமைதி கெட்டுவிடும். தவிர்க்க முடியாத நிகழ்வுகள் வாழ்கையில் நிகழ்கையில் அதை எதிர்கொள்ள முடியாமல் உங்கள் கோழைத்தனத்தை வெளிப்படுத்தினால் அதனால் உங்களுக்கு துன்பமும் துயரங்கள் மட்டுமே மிஞ்சி நிற்கும். இது தொடர் மன அமைதியைக் குலைக்கும் தன்மையுடையது,

மற்றவர்கள் அமைதியைக் குலைக்கும் ஒருவருக்கு தான் அமைதியாய் இருக்க வாய்பில்லை. அந்த தகுதியும் கிடையாது.

எண்ணங்கள் நினைவுகள் இல்லா நிலைதான் பூரண அமைதி நிலவும் உயர்ந்த நிலையாகும். ஆன்மீக முன்னேற்றம் மன அமைதியை ஏற்படுத்தும்.

அடக்க வளம்!
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார். தான் என்ற கர்வம் நிறைந்த முட்டாள்கள் விருப்பம் போல் நினைக்கட்டும் நடக்கட்டும் பேசட்டும். நீங்கள் அடக்கத்துடன் அறிவுடையவர்களாக இருங்கள். நிறைகுடம் தளும்பாது என்பர். நீங்கள் இதனால் உயர்ந்தவர் என்றோ அல்லது இதனால் தாழ்ந்தவர் என்றோ பேதம் கொள்ள வேண்டாம். அனைவரிடமும் இறைவனின் அம்சம் இருப்பதால் அனைவரும் சமம் என்பதை புரிந்து கொண்டால் உங்களது கர்வம் மட்டுப்பட்டு அடக்கம் மேலோங்கும்.

என்னால் முடியும் என்று எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு சரியாக சிந்திக்க முடியாமல் எதை முதலில் முடிக்க வேண்டும் என்ற தடுமாற்றத்தில் தவறுகளைச் செய்து சிக்கி சீரழியாமல் அடக்கமாய் இருந்து உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

ஆனந்த வளம்!
கடந்த கால துனபங்கள் துயரங்கள் எல்லாம் நினைவில் பற்றிக் கொள்ளக் கூடியவை. எவ்வளவு துயரம் மிகுந்ததாக இருந்தாலும் அதை மறக்க நினைக்க வேண்டும். ஏனெனில் உயிர்கள் இன்பத்தை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன. எனவே எல்லா துக்க நிகழ்வுகளையும் மனத்திரையில் இருந்து நீக்கப் பழகுங்கள். சின்னச் சின்ன சந்தோஷ நிகழ்வுகள் வாழ்வில் நிறைய நடந்திருக்கும் அவற்றை அப்போதைக்கு ஆனந்தப்பட்டு மறந்திருப்போம். அவற்றை மீண்டும் நினைவு கூர்ந்து நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். மனத்திரையில் எப்போதும் சந்தோஷம் தரும் நிகழ்வுகளை மட்டுமே பதிய வையுங்கள். அதுவே ஆனந்தத்திற்கு அடிப்படையான நிகழ்வுகள்.

ஆன்ம வளம்! 
உங்களுக்கு மூத்தோர் சொல் கேளீர். உங்கள் குருவின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் பிறந்தது ஏன் என்றும் எப்போது எப்படி இறப்பீர்கள் என்பதும் தெரியாத நிலையில் இறைவனிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். உங்களுக்கென்று உள்ளது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். உங்களை வந்தடைந்ததைக் கொண்டு ஆனந்தப்படுங்கள். அதிக ஆசைப் படாதிர்கள். சுயநலமின்றி பொதுநலமாகச் செயல்படுங்கள். எல்லா உயிர்களையும் மனித நேயத்துடன் நேசியுங்கள்.

பஞ்சபூத உலகில் படைப்பில் அனைத்திலும் இறைவனின் சந்நித்தியத்தை உணருங்கள். படைப்பின் ரகசியம் புரியும். படைத்தவனின் அருமை பெருமை உயர்வு புரியும். ஒப்பில்லா அவரை ஒருநாள் பிறப்பின்போதும் முடியும்போதும் நினைவு கூர்ந்து நன்றி கூறுங்கள். அந்த நாள் இனிமையாக இருப்பதற்கும் இருந்தற்கும் கூறும் நன்றியாக அது இருக்கும். இறைவா என்னை என்ன காரணத்திற்காகப் படைத்தாயோ அந்தக் காரணத்திற்காக என்னை இன்று பயன்படுத்தி என் பிறப்பின் நோக்கம் நிறைவேறச் செய்வாயாக என வேண்டிக் கொள்ளுங்கள். பிறப்பின் கர்ம வினைகள் கொஞ்சமாவது குறையட்டும். இன்று நீங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க நினைவு கொள்ளுங்கள். துன்பம் வரும்போது என்றில்லாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரை நினையுங்கள். அந்த திருநாமத்தை உச்சரியுங்கள்.

சமய சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதிகாசங்கள், பன்னிரு திருமுறைகள் மற்றும் ஆன்மீக நூலகளைப் படித்து தெளியுங்கள். சமயக் கூட்டங்கள், சத் சங்கங்களில் பங்கேற்று செவியின் வழி ஆன்ம வளம் நிரம்பியவர்காளாவீர்! நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வழிபட்டாலும் அதிர்வுகள் நிறைந்த கோவிலுக்கு வாரம் ஒருமுறையேனும் சென்று உங்கள் மனதிற்கு அமைதி தேடி வாருங்கள். எளிய வாழ்க்கைக்கு உரிய உயரிய சிந்தனைகளை உறுதியாக மனதில் கொண்டு இலட்சிய நோக்கோடு இயக்கம் கொள்வீர்.

இதய வளம்! 
நன்மை என்றால் அது பிறருக்குச் செய்வதுதான் அன்றி நமக்கு நாமே நன்மை செய்து கொள்வதல்ல! நீ ஒருவருக்குச் செய்த உதவி அது பிரிதொரு காலத்தில் உனக்குத் தேவைபட்ட போது உனக்கு வந்து சேரும் என்பதே நியதி. தான் என்ற ஆணவம் இன்றி சுயநலமின்றி எதையும் எதிர்பார்ப்பின்றி உதவிடுங்கள்! உயர்ந்திடுங்கள்! செய்யும் தொழிலே தெய்வம் என்று எந்த வேலையையும் இதய சுத்தியுடன் இறைவனுக்கு அர்ப்பணிப்போடு செய்தீர்களானால் நன்மை நிறைந்திடும் வாழ்வாக மலரும் உங்கள் வாழ்க்கை!. ஒவ்வொரு உயிர்களிடமும் உள்ள அதிசயமான வாழ்க்கைத் தத்துவத்தின் உயிர் நாடி இறைவன். அதுவே உணர்வு, வாழ்க்கை என்று கொள்ளுங்கள். எங்கும் இருக்கும் இருப்பு என்று கொள்ளுங்கள். என்றும் உள்ளது எங்கும் நிறைந்த தத்துவம் அது என்பதை சிந்தித்து அதற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இதயத்தை வளமுடன் வைத்திருங்கள்.

இனிமை வளம்!
இனிமை என்றால் அது இனிமைதான். யாரிடம் பேசினாலும் இனிமையாகப் பேசுங்கள். சடச் சடவென்று எரிந்து விழாதீர்கள். கோபமுடன் பேசாதீர்கள். பேச்சில் வேகம் காட்டி பேசாதீர்கள். சொற்களில் கடினமில்லா எளிமையான இனிய சொற்களைப் பயன் படுத்துங்கள். உங்கள் பேச்சின் தன்மை அவரை வசீகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்லிய சொற்களை ஒருவர் கேட்டால் மட்டும் போதாது. அதை அவர் ஏற்றுக் கொள்ளவேண்டும். பின் அதை பின்பற்ற வேண்டும். அந்த அளவிற்கு உங்கள் சொற்களில் இனிமையும் கனிவும் வேண்டும். கொஞ்சமாகப் பேசுங்கள். அதாவது சுருங்கச் சொல்லி விளங்க வையுங்கள்.

போதிய காரணங்களில்லாமல் பேசாதீர்கள். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள். தேவையானதை மட்டும் அளவுடன் பேசுக. நல்ல நோக்கம் கொண்ட சொற்கள் கூட சில சூழ்நிலைகளில் கேட்பவருக்கு தவறாக புரிந்து சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே புத்திமதி என்று எவருக்கும் சொல்லாதீர்கள். அவரவர் விதிப்படி செயலாக்கம் நடைபெறும். உங்கள் ஆலோசனையைக் கேட்டால் மட்டும் நிதானமாக யோசித்து அளவுடன் பேசுக! வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். விவாதத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அதையும் இதையும் சொல்லித் துன்பத்தை தேடிக் கொள்ளாதீர்கள். உங்களிடையே தோன்றிய அந்த ஆணவம் மற்றவர்களுக்கு துன்பத்தை தருவதாகவும் அமைந்துவிடக்கூடாது.

இரக்க வளம்!
இரக்கம் என்றால் ஒருவரைப் பார்த்து அல்லது ஒரு நிகழ்வைப் பார்த்து பரிதாப் படுவதல்ல. அந்த நிகழ்விற்காகப் பரிவு கொள்ளுங்கள். இதனால் இப்படியானதோ என்று பரிவு காட்டுங்கள். பரிவே இரக்கத்தின் அடிப்படை. அந்தப் பரிவின் அடைப்படையில் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். உங்களது பரிவு துன்பத்தில் இருக்கும் அவரை சிறிதளவாவது ஆறுதல் அடைந்து மனதை தேற்றிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். அதுவே உண்மையான பரிவின் நிலைப்பாடாகும். வழ்வில் கஷ்டப்படும் உயிர்கள்மீது இரக்க குணம் கொண்டு அவர்கள் சூழலை கூர்ந்து நோக்கி உங்களால் முடிந்த உதவியைச் செய்திடுங்கள். அங்கு மனித நேயம் மிளிரும்.

இறைவளம்!
ஒவ்வொரு உயிருள்ளும் இறைவன் இருக்கின்றான். ஏனெனில் இறைவனின் அணுவே உயிர்கள். அவரவர்கள் செய்த கர்ம முன்பிறவி வினைகளுக்கேற்ப அந்த அணுவின் தன்மைகள் சிறப்புகள் மாறியிருக்கும். எல்லாமுமாய் இருக்கும் இறைவன் ஒரு பொருளை முழுமையாக பார்கின்றார். அணுவாய் இருக்கும் உயிர்கள் பொருள்களை பகுதியாகவே பார்க்கின்றது. கடவுள் பூரணமான நியாயம் தர்மத்தைப் பார்கின்றார். உயிர்களால் அவ்வாறு செயல் படமுடியவில்லை. இறைவனின் அணுவாயிருந்தும் ஏன் இவற்றை உணரமுடியவில்லை. சூழ்நிலையும் மனக்குழப்பங்களும்தான் காரணம். நீங்கள் கடவுளின் அணு. அதனால் நீங்களும் கடவுளின் பிரதிநிதி என்ற நன்னோக்கோடு நோக்கின் உலகப் படைப்புகளும் அதன் செயல்பாடுகளும் ஓரளவாவது புரியும். அப்போது உங்கள் மனதில் அமைதி ஏற்பட்டு குழப்பங்கள் தீர்ந்து இறை ஆற்றல் பெருகும்.

உண்மை வளம்!
அழியாத ஒன்று உண்மை. எப்போதும் மாறாதது உண்மை. எப்பொழுதும் உண்மையே பேசுங்கள். அது உங்களை ஒர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்.

உடல் நலம்!
நம் முன்னோர்கள் எண்சான் உடம்பிற்கு வயிறே பிரதானம் எனச் சொல்லி வைத்தார்கள். அதாவது உடலின் ஆரோக்கியத்திற்கு வயிறே முக்கியமான பகுதியாகச் செயல்படுவதால் அதை ஆரோக்கியமாகப் பேணுங்கள் என்றனர். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு உடலுக்கு வயிறே முக்கியம் என்று வேண்டாத உணவுகளையும் அளவிற்கு அதிகமான உணவுகளையும் வேளை தவறியும் உண்டு வயிற்றின் தன்மையை கெடுத்துக் கொண்டு அவதிப்படுகின்றனர் பலர்.

மிதமாக உண்ணுங்கள். உடம்பிலிருந்து வரும் எச்சரிக்கையை கவனியுங்கள். நீங்கள் சாப்பிடும்போது போதும் என்ற ஒரு எண்ணம் தோன்றும். அல்லது ஒரு சிறிய ஏப்பம் வரும். அப்போது சாப்பிடும் பதார்த்தம் நன்றாயிருக்கின்றது என்பதற்காகவோ அல்லது நம்மை கவனிப்பவர்களின் வேண்டுகோளுக்காகவோ ஏற்பட்ட ஆசையினால் துண்டுதலால் மீண்டும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற எண்ணம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள். எச்சரிக்கைக்குமேல் கொஞ்சம் கூட சாப்பிடாதீர்கள்.

நம்மை உபசரிப்பவர்கள் நம்முடனே இருப்பவர்கள். அடுத்தடுத்து வரும் நாட்களில் அவர்களின் உபசரிப்பை பெறலாம். அவர்களின் ஆசைகளையும் அளவுடன் நிவர்த்தி செய்யலாம். சாப்பிட்டபின் ஒரு சோடா குடிக்கவேண்டும் என்ற நிலைவரை சாப்பிடாதீர்கள். எப்பொழுதும் சாப்பிடும் சைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு குறைவான அசைவ உணவுகளை உடகொள்ளுங்கள். முடிந்தால் அசைவ உணவுவகைகளை தவிர்த்து விடுங்கள். உடல் நிலை சீரிழந்து கெட்டபின் மருத்துவர் சொல்லி எதையும் நிறுத்தும் அளவிற்கு உண்ண வேண்டாம். எப்பொழுதும் எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

குறிப்பிட்ட நேரத்திற்கு குறிபிட்ட அளவு உணவு உண்ணப் பழகுங்கள். வயிற்றை காலியாக வைத்திருக்காதீர்கள். வயிற்றின் இயங்கு சக்திக்கு அரைவயிறு உணவும் கால் வாசி நீரும் போதும். மீதி வயிறு காலியாக இருந்தால்தான் அதன் இயக்கம் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக மிளகாய், வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், புளி, மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை கூடிய வரைக்கும் தவிர்த்து விடுங்கள். அல்லது எப்பொழுதாவது என்று குறைவாக உபயோகியுங்கள்.

காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

புகைப் பிடித்தல், வெற்றிலை பாக்கு ஆகியவற்றையும் தவிர்த்திடுங்கள்.

மதுவை பூரணமாக ஒதிக்கி வைத்தல் முற்றிலும் நலம்.

மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ உபவாசம் இருந்திடுங்கள். அப்பொழுது பால், பழங்களை மட்டும் உபயோகியுங்கள்.

எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருங்கள். வயதிற்கேற்ற விளையாட்டில் ஈடுபடுங்கள். தினமும் நடைப் பயிற்சி செய்யுங்கள். அதிகாலையில் சுவாசப் பயிற்சி, யோகாசனம், உடற்பயிற்சி இவற்றை உங்களால் முடிந்தவரைக்கும் தினமும் செய்யுங்கள்.

சீக்கிரமாக உறங்கச் செல்லுங்கள். அதிகாலை எழுந்திருங்கள். காலைகடன். உடல்பயிற்சி, தியான பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகப்பயிற்சி மேற்கொண்டு குளித்து ஆதித்தனை வழிபட்டு வீட்டில் குலதெய்வத்தை மற்றும் உங்களுக்கு பிடித்த இறவனை வழிபடுங்கள். உங்கள் செயல்பாடுகள், குறிக்கோள் ஆகியவற்றை மனதில் கொண்டு செயலாக்கம் கொள்வீர். இரவில் இன்று நமது குறிக்கோளை நோக்கி என்ன செய்தோம். எவ்வளவு முன்னேறியிருக்கின்றோம் என்று கணக்கிட்டு இறைவனுக்கு நன்றி சொல்லி உறங்கச் செல்லுங்கள். வேண்டாத எண்ணங்களை அழித்து விடுங்கள்.

எண்ண வளம்!
உங்கள் எண்ணங்களை வளப்படுத்துங்கள். தீயேரிடம் நட்பு கொள்ளாதீர். பொழுது போக்குவதற்காக உலகலாவிய வீண் பேச்சுக்களையும் வாதங்களையும் தவிர்த்திடுங்கள். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை அழித்துவிடுங்கள். நல்ல நிகழ்வுகளை படம் பிடித்தார்போல் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். துயரத்திற்கு இடமான துக்க நிகழ்வுகளை மனதிலிருந்து முற்றிலும் அகற்றி விடுங்கள். வாழ்வில் துன்பம் தேடாமலேயே இருக்கும்போது பழய துங்கங்களை ஏன் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள். எல்லாவற்றிற்கும் ஆசைப்படாமல் இறைவன் உங்களுக்கு கொடுத்ததை நினைத்து திருப்திபட்டு சந்தோஷ எண்ணங்களுடன் இருக்கப் பழகுங்கள். அது வேண்டும் இது வேண்டும் என ஆசைகளை வளர்த்துக் கொண்டு தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு அவதிப்படாதீர்கள்! உங்களுக்குகான தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள். உடைமைகளை குறைத்துக் கொளுங்கள். நீங்கள் பாடுபட்டுச் சேர்த்த எதையும் ஒரு குன்றின்மணி அளவுகூட காலனோடு சேர்த்து எடுத்துச் சொல்ல முடியாது என்பதைப் தெளிவாக எண்ணுங்கள். எளிய வாழ்க்கைக்கான உயரிய சிந்தனை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறரின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையில் உங்கள் செயல் பாடுகள் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஒழுக்க வளம்!
வாழ்வில் நேர்மையாக உழைத்து பணம் சேர்த்துப் பழகுங்கள். அதன் இனிமையான சுகமே தனி. நியாமான வழியன்றி வரும் பொருளை ஏற்றுக் கொள்ள ஆசைப்படாதீர்கள். நேர்மையுடன் பெருந்தன்மையுள்ள மனிதனாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கலியில் சிரமமாயிருந்தாலும் முயற்சி திருவினை ஆக்கும்.

கொள்கை வளம்!
வாழ்வில் வெற்றியடை ஒர் குறிக்கோள் வேண்டும். அந்தக் குறிக்கோளினை அடைந்திட நல்ல சிறப்பான கொள்கைகளை உடைய திட்டங்கள் வேண்டும். மற்றவரின் கொளகையில் தலையிடாதிர்கள். அவர் அவரின் கொள்கையில் நிற்கட்டும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் விலகியிருங்கள். என்ன சொன்னாலும் கேட்காத மூடர்கள் நியாயம் தர்மம் பார்க்காத நபர்களிடம் உங்கள் காலத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள். அதனால் சோர்வுதான் மிஞ்சும். உங்கள் கொள்கைகள் வளமுடன் இருக்க நல்ல ஆலோசனைகளை மூத்தோர், அறிவில் சிறந்தவர், பண்பாளர்கள், மற்றும் புத்தகங்களை நாடவும். ஒரு தடவைக்கு மூன்று முறை சிந்தனை செய்து கொள்கையை இறுதி வடிவம் கொடுங்கள். பின் உறுதியுடன் செயலாக்கம் கொள்ள துணியுங்கள்.

எதையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிய வாய்ப்புண்டு. அது ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை தவிர்த்திடப் பாருங்கள். நீங்கள் அடைய வேண்டியதை அடைந்து அனுபவிக்க வேண்டியதை அடைந்தே தீருவீர்கள். அதற்காண முயற்சியே கொள்கை வடிவில் ஆரம்பிக்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடந்த காலத்தை மறந்து நிகழ்கால நடவடிக்கையில் செயல் கொண்டிருந்ங்கள். உங்கள் முழுத்திறனையும் பயன் படுத்துங்கள் கொள்கை வெற்றி நிலையை அடைய.

ஞான வளம்!
ஞனம் என்பது உலகில் எதுவாயிருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொள்ளும் திறன். எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதை பற்றிய ஞானம் அவசியம் உயிர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உபயோகங்கள், அதன் நன்மைகள், தீமைகள் பற்றித் தெரிந்து அதை எப்படி உபயோகிக்க முடியுமோ அப்படி பயன்தரக்கூடிய வழியில் உபயோகிக்கலாம். அந்த நல்லறிவு எல்லோர்க்கும் இருப்பதில்லை. அந்த அறிவை அனுபவித்து பார்த்தும், படித்தும் பிறர் சொல்லியும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும். எப்படியிருப்பினும் ஒவ்வொரு உயிருக்கும் அந்த அறிவை அறிந்து கொள்ளக்கூடிய ஞானம் வேண்டும். இல்லயெனில் அவரின் செயல்கள் மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் தவறாக அமைந்து விடும். எது செய்யினும் தோல்வி அடைவர். உலகில் எதுவும் அவருக்கு முறையாக பயன் பாட்டிற்கு வராது. ஞானம் கடைபிடிக்கத் தெரியாத உயிர்கள்தாம் வாழ்வில் அல்லலுறுகின்றார்கள்.

சக்தி வளம்!
உங்கள் சூழ்நிலைக்கேற்ப பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிக்கவும். புலன் நுகர்ச்சியில் அடிக்கடி ஈடுபட்டு உடலின் ஜீவ சக்தியை இழந்து விடாதீர்கள். ஜீவசக்தி சேமிப்பு உங்களை ஓர் சக்தி மிக்கவராக மாற்றும்.

மௌனமாக இருந்து பழகுங்கள். அந்த மௌனமே ஒர் சக்தியை உங்களுக்கு அளிக்கும். அதனால் தினமும் கொஞ்சநேரமோ அல்லது வாரத்திற்கு ஒரு நாளில் குறிப்பிட்ட மணி அளவோ மௌனமாக இருந்து பாருங்கள். அதன் நன்மையும் உண்மையும் உங்களுக்கே புரியும்.

செயல் வளம்!
எப்பொழுது உங்களுக்குப் பிடித்த வேலையில் ஈடுபாடு கொள்ளுங்கள். அப்பொழுதான் மனம் அமைதியுடன் இருக்கும். இல்லையென்றால் மனம் அங்குமிங்கும் அல்லாடும். அதைச் செய்தால் சரியாயிருக்குமோ. இதைச் செய்தால் சரியாய் இருக்குமோ என்று எண்ண அலைகள் அலைமோதி அலைக் கழிக்கும். அதனால் மன அமைதி யிழந்துவிடுவீர்.. பிடித்த வேலையைச் செய்யும்போது ஒன்றைச் செய்தோம் நன்றாகச் செய்தோம் என்ற மனத் திருப்தி ஏற்பட்டு அமைதி காண்பாய்

மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்ய முடியாத வேலைகளை ஏற்றுக் கொண்டு திணறாதீர்கள். உங்களால் என்ன முடியுமோ அதை குறைவில்லாமல் செய்ய இறைவனின் ஆசியைப் பெற நினையுங்கள். பெரியோர்களின் ஆசியைப் பெறுங்கள்.

ஒரு செயலின் வெற்றி தன்னம்பிக்கையை அளிக்க வல்லது. அதுவே அடுத்த செயல்களுக்கான திட்ட நடைமுறைகளுக்கு பாதை அமைக்கும். முதல் திட்டத்தில் தவறு ஏற்பட்டு தோல்வி அடைந்தாலும் அதில் ஏற்பட்ட குறைகளைத் திருத்திக் கொண்டு அடுத்த செயலில் வெற்றி அடையலாம். செயலின்றி வெறுமனே அமர்ந்திருந்தால் எதுவும் நிகழப்போவதில்லை. ஒரு செயலைச் செய்யும்போது தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல் படுங்கள். செயலில் ஏற்படும் குறைகள் உங்கள் கவனச் சிதறலால் ஏற்படுபவையாகவோ உங்கள் உறுதியைச் சோதிப்பதற்காகவோ இருக்கலாம். எனவே மிகுந்த உறுதியுடன் செய்து முடிக்க வேண்டும் என நினைத்து செயல் படுங்கள். தடைகளைக் கண்டு மனம் தளராமல் இறைவனை நினைத்து உங்கள் செயல்களில் நம்பிக்கை வைத்து செயல் படுங்கள்.

கால வளம்!
எப்போதும் எல்லோருக்கும் பயனுள்ள நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். இதைச் செய்யலாமா! அதைச் செய்யலாமா! என்ற போராட்டத்தில் அலைந்து நேரத்தை வீணாக்காதீர். நாளை செய்யலாம் என்று நினைத்து அது மீண்டும் நாளை என்று தள்ளிப்போய் இறுதியில் பலநாட்கள் மாதங்கள் ஆனாலும் செய்ய முடியாநிலை ஆகிவிடும். செய்வதை செய்ய நினைப்பதை நன்றே செய்க! அன்றே செய்க! காலம் பொன்னானது! காலவிரயம் செய்யற்க! நல்லது நினைத்து நல்ல திட்டங்களைப் போட்டால் அது நன்றாக உரிய காலத்தில் நடக்க இறையருள் துணை நிற்கும். ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் கால இடைவெளி ஏதும் விடாமல் திட்டம்போட்டு செயல் படுங்கள். ஒரு சில வினாடிகள் கூட கால மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. அதற்கு இறையின் உதவியை நாடுங்கள். காலத்தை பொன்போன்று நினைத்து பயனுள்ள விதமாக செலவிடுங்கள்.

கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களை நினைத்து அந்த பாடங்களை எதிர்காலச் செயல்களுக்கு வாழிகாட்டும் விதமாக மாற்றிக் கொள்ளுங்கள். கடந்த காலம் வீனாகி விட்டதே என்று கவலையில் மூழ்காதீர். ஏனெனில் ஒரு சிறு துகளின் அசைவு முதல் பிரபஞ்சத்தில் பிரமாண்டமான இயக்கம் வரை கடந்த, நிகழ், எதிர் காலத்தின் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு காராண காரியமும், எல்லாம் அறிந்த எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் இச்சைப்படிதான் நடந்து கொண்டிருக்கின்றது! எவ்வாறு நடைபெற வேண்டும் என்று விதிக்கப் பட்டிருக்கின்றாதோ அவ்வாறே நிகழ்கின்றன! நிகழ்வது நிகழ்ந்தே தீரும்! என்பதை உணர்ந்து அமைதி காணுங்கள். வீணான கவலைப்படுதல் வருந்துதல் வேண்டாம்!

சுதந்திர வளம்!
உயிர்களது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்ற உயிர்களை அண்டியிருப்பதுதான் அவர் அமைதியிழப்பதற்காண காரணம். சுதந்திரம் எவ்வளவு துன்ப துயரங்கள் இருந்தாலும் ஆனந்தம் தருவது ஆகும். உயிர்கள் தன் காலில் நிற்க முயல வேண்டும். எல்லா உயிர்களும் தன் காலில்தான் நிற்கின்றன என்றாலும் தன் தேவைகளுக்கு மற்ற உயிர்களை அண்டியிராமல் சுயமாக இயங்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வழக்கு இது. முடிந்தமட்டும் சுதந்திரமாகச் செயல்பட மனப்பூர்வமாக முயற்சி செய்தால் எந்த துறையாயிருந்தாலும் சொந்தமாக செயல்பட்டு வெற்றி காண முடியும்.

உலகம் அனைத்திலும் உள்ள எல்லாம் அனுபவிப்பதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக அதை அனுபவிப்பதில் என்ன தவறு. அனைத்து உயிர்களும் அவரவர் விருப்பத்திற்கேற்ப செயல்படவும் அவர்களது திட்டங்களுக்கு உலகம் இணங்க வேண்டும் என்று சுதந்திரத்தின் தன்மையை மாற்றி யோசிப்பவர்கள், மன அமைதி இழந்தவர்களின் கற்பனைச் சுதந்திரமாகும் அது.

சுதந்திரம் பொதுவானது. எல்லா மக்களுக்கும் உகந்த சட்டதிட்டத்திற்கு உட்பட்டது. தனியாக சிலர் தவறாக தம்முடைய சுதந்திரம் என நினைத்து உலகத்திலிருந்து இன்பங்களை பிழிந்தெடுக்க முயல்பவர்கள், கலக்கமடைந்து தோல்வி, ஏமாற்றம், துன்பம் இவற்றைத்தான் சந்திப்பார்கள். உயிர்களின் வளர்சிக்காக உருவாக்கப்பட்ட உலகில் சுதந்திரமாக பொதுவான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே சுதந்திரத்தை அணுபவிக்க முடியும்.

சூழ்நிலை வளம்!
எல்லா உயிர்களும் அவர்களைச் சுற்றியுள்ள சூழலின் பாதிப்பிற்கு உள்ளாகி விடுவார்கள். இது இயற்கையின் நியதி. எனவே உயிர்கள் அந்த சூழலை தன் வசமாக்கிக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அந்தச் சூழலை மாற்றுவதற்கு முயற்சி செய்து நீங்கள் தோல்வி அடையலாம். அதனால் சூழ்நிலையை மாற்றுவதற்குப் பதிலாக அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்தச் சூழ்நிலை உங்கள் சூழ்நிலையாக பரிமளிப்பதை காண்பீர். வானம் வசப்படும் என்பதை உணர்வீர்.

உலகம் உங்களது உதவிக்கு வரும் என நினைவு கொண்டு ஏமாறாதீர். உலகத்திலுள்ளோர் அவரவர் வேலையை எப்படிச் செய்து முடிப்பது என்றே தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு உயிரும் அவரது பூர்வ ஜென்ம வினையினால் ஆளப்படுகின்றனர். ஒரு சிலரைத்தவர மற்றவர்கள் உதவி செய்யும் எண்ணங்களையே கொண்டிருப்பதில்லை. இதில் எப்படி எல்லோருக்கும் உதவி கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். தன் கையே தனக்கு உதவி என்று கொள்ளுங்கள். மற்றவரிடமிருந்து உதவிகள் கிடைத்தால் லாபம். எல்லா சூழலிலும் இறையின் உதவியை நாடுங்கள்.

தான வளம்!

தானம் செய்வது என்பது ஒர் சிறந்த பண்பாகும். தானம் செய்வதற்கு பெரிய செல்வந்தராக இருக்க வேண்டும் என்றில்லை. தானம் செய்ய நல்ல மனம் வேண்டும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருக்க வேண்டும். தனக்குப் போதும் என்ற எண்ணமிருந்தால்தான் தானம் செய்யும் ஆவல் தானாகத் தோன்றும். உங்கள் வருமானத்தில் உங்கள் தேவைகள் போக கொஞ்சம் வறியோர்களுக்கு ஏழை எளியோர்களுக்கு உதவி செய்து தானத்தின் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்ததை தன்னலமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

தியான வளம்!
ஒழுங்கான தியானம் மனதை அமைதிப்படுத்தும். சலனத்தன்மையை குறைத்து மனதை சாந்தப்படுத்தும். ஒரு மணி நேர ஆழ்ந்த தியானம் அன்றைய மற்ற இருபத்தி மூன்று மணி நேரத்திற்கும் மனதில் தங்கி செயல் படவைக்கும். மனம் முன்போல அலைந்து திரியாது. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். தொடர்ந்த தியானம் உங்கள் திறமைகளை அதிகரித்து எந்த வேலையாயிருந்தாலும் குறைந்த நேரத்தில் சிறப்பாக செய்து முடிப்பதற்கான ஆற்றலைத் தரும்.

திறமை வளம்!
உயிர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். முன்மாதிரி நிகழ்வுகளைக் கொண்டோ படித்துப் பார்த்தோ கேட்டுத் தெரிந்தோ தங்களது சக்தி என்னவென்று ஆய்ந்து திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் தெரியாத நிலையில் இருந்தாலும் செய்து பார்க்கலாம் என்ற உத்வேகம் வேண்டும். செய்யும்போது சிறு தவறுகள் ஏற்படலாம். அதை திருத்திக் கொண்டால் அது சரியானதாகி விடும். எல்லாம் தெரிந்தால் அதை உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. ஓர் சூழலில் அவசியம் ஏற்படின் நீங்கள் அறிந்து வைத்துள்ள அந்த திறமை உங்களுக்கு கைகொடுத்து உதவும். எந்தப் பொறுப்பையும் தட்டிக் கழிக்காமல் செய்து முடிக்க முயற்சி செய்து முடித்தால் அது உங்கள் திறமையாகப் பளிச்சிடும். அந்தப் பொறுப்பிலிருந்து தப்பி ஓட நினைத்தால் உங்களிடம் அதற்காண திறமை இல்லை என்று கணிக்கப்படும்.

தேவை வளம்!
வாழ்வில் தேவை ஏராளம். பார்க்கும் பொருள் எல்லாம் தேவைப் படுபவைப் போல் தெரியும். அந்த பொருளை வாங்கியபின் அது உபயோகமின்றி வீட்டின் மூளையில் கிடக்கும். அதற்காக செலவிட்ட நேரமும் பணமும் வீணாகிவிட்டிருக்கும். உங்கள் வாழ்விற்கு என்ன தேவை என்பதை தெளிவுடன் யோசித்து அதை அடைந்திட நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டு முயற்சி செய்திடுங்கள். உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். அவைகளை அடைய மிகவும் கஷ்டப்படாதீர்கள். அவற்றிற்காக நேரங்களை வீனடிக்காதீர். உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு இருப்பதைக் கொண்டு அரச வாழ்க்கை வாழ முயற்சியுங்கள்.

ஒரு பொருள் வீட்டில் பயன் தந்து கொண்டிருக்கும்போது அதே மாதிரியான உபயோகத்தைக் கொடுக்கக்கூடிய பொருளை பார்த்து அது மிகவும் அழகாயிருக்கின்றது என்றோ அல்லது விலை குறைவு வாங்கினால் என்ன என்றோ வீணான சிந்தனையில் குழம்பி அதை வாங்கி வந்து உபயோகப் பட்டுக் கொண்டிருக்கும் பொருளை வீனடிக்க வேண்டாம். அது உங்கள் உழைப்பை வீணடிக்கக் கூடிய செயல். தேவயான பொழுது தேவையானவற்றை பெற்று மகிழ்ந்து ஆனந்திப்பதே ஆனந்தமான வாழ்க்கையாகும்! தேவைகள் குறைந்தாலும் மனதில் அமைதி அதிகரிக்கும். ஒன்றும் தேவையில்லை என்றால் அங்கு எந்த எண்ண அலைகளுக்கும் இடமில்லை!. தேவைகளும் அதனால் உயிர்கள் பெரும் பொருள்களும் அவர்களுக்கு துனபங்களை உண்டாக்குபவையே!

மன வளம்!
கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பிறர் செய்த தவறுகளைக் கண்டு கோபமுறாதீர்கள். கோபம் உங்களை உணர்ச்சிபடவைக்கும். அது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. கோப நிலையை விட்டு அந்த நிகழ்வு ஏன் நடந்தது. எப்படி நடந்தது என்று சிந்தியுங்கள். கோபமின்றி இருந்தால்தான் இந்த சிந்தனை நிலைக்கு நீங்கள் வரமுடியும். அந்த நிகழ்வின் பாதிப்பிலிருந்து நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவரோ மீண்டு வெளிவர உதவிகரமாய் சிந்தித்து செயலாக்கம் கொள்ள முடியும். இதற்கு மனதில் உறுதி வேண்டும். செம்மையான மனநிலை வேண்டும். தவறு செய்தவரை மன்னிக்கும் மன நிலை வேண்டும். அவர் செய்த நல்ல செயல்களை கருத்தில் கொண்டிருந்தால் ஒருவர் தவறு செய்யும் போது உடனடியாக கோபம் வராது. அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனதில் ஒரு நிகழ்வும் இல்லாதபோதுதான் அது பூரண அமைதியாகின்றது. மனம் என்பது எண்ணங்களே. எண்ணங்கள் என்றால் சலனம் கொண்டவை. செயல் குறைந்தால் சலனம் குறையும். எண்ணங்கள் குறைந்தால் மன அமைதி அதிகரிக்கும்.

உடலளவில் ஓய்வில் இருந்தாலும் மனம் வெறுமையாக இருக்க விடாதீர்கள். கடின செற்களும், தீய செயல்களும் மனதில் உதித்துதான் வெளிவந்து செயலாக்கம் கொள்கின்றது. மனதை ஸ்படிகம் போன்று தூய்மையாக வைத்திருங்கள். அப்போதுதான் நல்ல செயல்களுக்கான நல்ல திட்டங்கள் உருவாகும்.

மகிழ்ச்சி வளம்!
நீங்கள் சுயநலமற்றவராக எந்தப் பிரதி பலனையும் எதிர் கொள்ளாமல் தொண்டு மனப்பான்மையுடன் செய்யும் செயல்கள், தானங்கள், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சியே தூய்மையான நிறைவைத் தருபவை. பொதுவாக நம் செயல்களில் பல நமக்கு மகிழ்ச்சியைத் தறுபவை. ஆனல் தொண்டு மனப்பான்மையுடன் பிற உயிர்களுச் சேய்யும் சேவையே உயர்ந்த நிலை. அது உயிர்களுக்கு மகிழ்ச்சியை தந்து அவர்தம் கணக்கில் புண்ணியத்தைச் சேர்ப்பவை. எதிர்பாராமல் ஒருவர் செய்த தொண்டினால் மற்ற உயிர்கள் பெறும் மகிச்சியில் நீங்கள் ஆனந்தம் அடைவீர். இது போன்ற ஆனந்தத்தை அனைவராலும் அனுபவிக்க முடியும். மற்ற உயிர்கள் அடையும் மகிழ்சியைக் கண்டு ஆனந்தப்படஉங்களுக்கு வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் தொண்டு செய்க!

முக வளம்!
ஒருவரின் முகத்தை பார்த்தால் அன்பு தெரியும் கருணை பொங்கும் ஆனந்தம் தவழும். ஆச்சரியம் தெரியும். இதெல்லாம் அந்த முகத்தில் இனிமையான புன்முறுவல் இருந்தால்தான். அன்றி அந்த முகம் கடுகடுப்பாய் இருக்கும். யாரைப்பார்த்தாலும் எரிந்து விழும் தன்மையுடன் கோபக்காரராய் இருப்பர். அதனால் என்ன பலன். உடலின் சூட்சுமமான மனதில் நிம்மதி, சந்தோஷம், ஆனந்தம் இருந்தால் அந்த முகம் மலர்ச்சியுடன் காணப்படும். அந்த மலர்ந்த புன்னகை பூத்த முகத்தைக் கண்டவர் என்ன இன்று சந்தோஷமாய் இருக்கின்றாய் போலிருக்கின்றதே! என அவரும் அதே சந்தோஷத்தைக் காண்பிப்பார். புன்னகை பூத்த மலர்ந்த முகத்தினை பார்க்கும் ஒவ்வொருவரும் சந்தோஷம் அடைவார்கள் என்றால் அப்படி முகத்தை புன்னகைபூத்த முகமாக வைத்துக் கொள்வதில் என்ன தவறு! நீங்களும் உங்கள் முகத்தை புன்னகை பூக்கும் மலர்ந்த முகமாக இருக்கப் பழகுங்கள்.

முயற்சி வளம்!
அவர் அப்படிச் செய்து பெரும் பேறு பெற்றார். இவர் இப்படிச் செய்ததனால் புகழடைந்தார் என்று நினையாதீர்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்டதை செவ்வனே செய்து முடியுங்கள் நீங்கள் புகழ் அடைய வேண்டுமென்றிருந்தால் அது உங்கள் செயலினால்தான் கிடைக்கும். அப்படிக் கிடைத்தால்தான் அதற்குப் பெருமை. மற்றவர்களைப் பார்த்து போட்டி மனப்பான்மை கொண்டோ பொறாமை கொண்டோ செயல்பாடுகளைச் செய்வதால் அந்த உயர்வு கிட்டாது. உண்மையாக நீங்கள் முயற்சி செய்து வெற்றி பெற்றால் எல்லாம் தானே நடக்கும்.

உங்கள் செயல்களைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்களைப் புறந்தள்ளுங்கள். அந்தத் துறையில் சிறந்தவர்கள், கல்வியாளர்கள், பண்பாளர்கள், மகான்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சியில் தவறு காணாது வெற்றி காண்பீர்.

நட்பு வளம்!
நண்பர்கள் வேண்டும் நல்ல நண்பர்கள் எல்லோருக்கும் வேண்டும். அந்தரங்க பரிசீலனைக்கு நல்ல நட்பே பிரதானமாகும். எந்த ஆபத்து என்றாலும் நேரம் காலம் பார்க்காமல் நட்பே முதலில் உதவிக்கு வரும். எதையும் எதிர்பாரமல் இருப்பதே உண்மையான நட்பு. நம்பகமான நண்பர்கள் என்ற நிலையிருந்தால் மட்டுமே அவர்களிடம் மனம் ஒன்றி பழகுங்கள். மற்ற எவருடனும் நெருங்கிப் பழக வேண்டாம். அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கும்.

நம்பிக்கை வளம்!
எல்லா உயிர்களுக்கும் தங்கள் மேல் நம்பிக்கை வேண்டும் தாங்கள் செய்யும் செயலின்மேல் நம்பிக்கை வேண்டும். தங்கள்மேல் கொள்ளும் நம்பிக்கை அவரின் சூட்சம் ஸ்தூல உறுப்புக்களை நன்கு செயல்படவைத்து அவரை நன்கு இயக்க உதவும். அவர் செய்யும் செயல் மீதான நம்பிக்கை அந்த செயல் திறம்பட நடந்து குறைகளைச் சீர்படுத்தி செயல் வெற்றிகரமாக வெற்றியடைய உதவும். அந்த நம்பிக்கையேதான் உங்களின் அடுத்த வெற்றிகரமான செயல்களுக்கு அச்சாரமாக அமையும். நீங்கள் நம்பிக்கை இழந்து இருக்கும்போது நம் மறை நூல்களின்பால் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மகான்களின் நூல்களைப் படியுங்கள். ஆலோசனைகளைக் கேளுங்கள். தீர்த்த யாத்திரை செல்லுங்கள். ஜபம், பிரார்த்தனை, தியானம் போன்றவைகளில் மனதைச் செலுத்துங்கள். எதோ சில காரணங்களினால் சிதறுண்ட மனத்தை சீர்படுத்தி உங்களுக்கு ஒர் புதிய தெம்பையும் மகிழ்வையும் கொடுக்கும் வழிகளாகும். மிகுந்த நம்பிக்கை உங்களுக்குள் தோன்றும்.

இந்த சிறந்த வழிகளை விடுத்து வேறு வழிகளான மது, மங்கை, மருந்துகளைத் தேடுபவர்களுக்கு அவர்களின் உண்மையான பிரச்சனையை எதிர்கொள்ள முடியா நிலைக்கு தளர்ச்சியை உண்டாக்கி மேலும் தொல்லைகளைத் தரும்.

பணிவு வளம்!
உடலுக்குத்தான் வயது. ஆன்மாவிற்கு வயதில்லை. எந்த ஆன்மா யார் உடலில் இருக்கின்றதோ மூத்ததோ, இளையதோ தெரியாத நிலையில் ஒருவரின் ஆத்மாவை வணங்குவதில் தவறில்லை. அதற்கு பணிவு வேண்டும். பெரியோர்களிடம் பணிவு கொண்டு மரியாதையுடன் நடந்து கொள்ளல் வேண்டும். டம்பம் என்று சொல்லப்படும் கர்வம் மற்றும் போலித்தனத்தை விட்டு விட முயற்சியுங்கள். எந்த நிலையிலும் எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள்.

பொறுமை வளம்!
பொறுமையுடன் இருங்கள். நீங்கள் பொறுமையுடன் இருந்தால்தான் உங்களுக்கு சகிப்புத் தன்மை தோன்றும். என்ன பேரிடர் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் பொறுமையே உங்களை நன்றாக சிந்தித்து செயல் படவைக்கும். பொறுமை காத்தோர் பூமியை ஆள்வார் என்பது மூதோர் மொழி. எங்கும் எதையும் பொறுமையுடன் கவனித்தால் அதன் ஆழம் புரியும். அதன் செயல்பாடுகளில் வெற்றி காணமுடியும்.

உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பிரச்சனைகளுக்கு காரணம் உங்களின் செயல் பாடுகளாகவே இருக்கும். எனவே அந்த செயல் பாடுகளில் கவனம் செலுத்தி துன்பங்களையும் துயரங்களையும் தவிர்த்திடப் பாருங்கள். மற்றவர் பிரச்சனைகளில் தேவையில்லாமல் தலையிட்டு நீங்களாகவே துன்பத்தை தேடிப் போகாதீர்கள்.

யார் எது செய்தாலும் குறைகூறாதிர்கள். அல்லது அந்த நிகழ்விற்கு தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது! ஒருவரை குறைகூறுவது என்பது அவரைத் திட்டுவதற்குச் சமம். உண்மையை புரிந்து தெளியாமல் அவசரப்பட்டு நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் தவாறானதாக இருக்கும் பட்சத்தில் அந்த வார்த்தைகளின் தாக்கம் உங்களையே பாதிக்கும் தன்மையுடையது. ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி அவர்களின் கர்ம வினைகளுகேற்ப நடக்கின்றனர். அப்படியிருக்கும்போது அதில் உங்கள் தலையீடு எதற்கு! உங்கள் செயலில் கவனம் செலுத்தி பிறருக்கு தீங்கு நேராவண்ணம் செயல் படுங்கள். அதுவே நன்மையானது. மன நிம்மதியை கடைபிடிக்க இது முக்கியமான நியதியாகும்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் இறைவன் விருப்பப்படி கர்ம வினைகளுக்கேற்ப நடத்திவைக்கின்றான். அதில் உங்கள் கவனம் வேண்டும் என்பதில்லை. நடப்பது நன்றாக நடக்கும். நீங்கள் ஏன் வீணாக உள நுழைந்து அதில் தலையிடவேண்டும். நடப்பதை அவர் கவனித்துக் கொண்டிருக்கின்றார். எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். எனவே உங்கள் வேலையை செயலை நீங்கள் பாருங்கள்.

நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அதில் கடவுளின் அனுக்கிரகம் உள்ளது. அவர் இச்சைப்படிதான் நடந்துள்ளது. அதைக் குறைகூறுவதோ கண்டணம் செய்வதோ ஆகாது. அதனால் நீங்கள் அமைதியிழந்து விடுவீர். உணர்சி வயப்படுவீர். கோபம் வரலாம். இதற்காகத்தான் உங்களை விலகிப் பொறுமையுடன் இருக்கச் சொல்வது. புரிந்து கொள்ளுங்கள்.

எது நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள். எப்போது ஒன்றைக் குணப்படுத்த முடியோதோ அல்லது அதை குணப்படுத்தும்வரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் ஏனெனில் வேறு வழியில்லை. சூர்ய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் ஏற்படும் இடற்பாடுகளை, வசதிக் குறைவுகளை, தொல்லைகளை, துன்பங்களை வேறுவழியின்றி இன்முகம் காட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதை துன்பமாகக் கருதினால் அது மிகுந்த துயரத்தைக் கொடுக்கும். அதையே இன்பமாக நினைத்தால் அந்த துன்பம் அவ்வளவு துன்பமாகத் தெரியாது. இதற்கு பொறுமை மிகவும் அவசியமான ஒன்று.

வீர வளம்!
இடற்பாடுகளை எதிர்கொண்டு தீர்க்க நீங்கள் தயங்காதீர். அப்படிச் செய்யாமலிருந்தால் வாழ்வில் உங்களால் எதையும் சாதிக்க முடியாத நம்பிக்கை அற்ற நிலை ஏற்படும். போதுவாக ஏனாதான வென்று காலத்தை கழிக்கலாம். ஆனால் அது நல்ல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. வழ்வு இலட்சியத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். அடைவதற்கான இலட்சியங்கள், முயல்வதற்கான குறிகோள்களுடன் இருக்க வேண்டும். எதிர்ப்புகளை வீரத்துடன் சமாளிக்காமல் எந்த இலட்சியமும் வெற்றி அடையாது. எதிர்ப்புகளால் மன அமைதி குலைந்து விடாமல் வாழ்க்கைப் போராட்டத்தை வீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

பல சூழல்களில் உங்கள் மனம் அந்தந்த சூல்நிலைக்கேற்ப தூண்டுதலுக்கு அடிமையாகலாம். அந்த வகையான தூண்டுதலுக்கு அடிமையாகாதீர்கள். அந்த இடங்களுக்கு போகாதீர்கள் போனால் தூண்டுதல்களைத் தவிர்க்க போராட வேண்டியிருக்கும். உங்களிடமுள்ள இச்சா சக்தி வீணாகும். அந்த தூண்டுதலை தடுத்தாலும் அந்த தூண்டுதல் உங்கள் மனதைவிட்டுச் செல்லும்போது ஓர் ஆசையை விட்டுச் செல்லும். பின் அந்த ஆசையினால் ஏற்பட்ட சஞ்சலத்தை நீக்க போராடவேண்டியிருக்கும். உறுதியான வீரத்துடன் அந்த எண்ணங்களை எதிர்த்து போராடுங்கள்.

லௌகிக வாழ்வில் உங்களை விட தாழ்வான நிலையில் இருப்போரையும் ஆன்மீக அளவில் உங்களைவிட மேல்நிலையில் உள்ளோருடனும் ஒப்பு நோக்கினால் உங்களுக்கு லௌகிக திருப்தியும் ஆன்மீக அதிருப்தியும் ஏற்பட்டு முன்னேற்றம் காண்பீர். அதை விடுத்து லௌகிகத்தில் மேல் நிலையில் உள்ளோருடனும் ஆன்மீகத்தில் கீழ் நிலையில் உள்ளோருடனும் உங்களை நீங்கள் ஒப்பிடக்கூடாது. அது லௌகிக அதிருப்தியையும் ஆன்மீக கர்வத்தையும் ஏற்படுத்தும். இந்த அதிருப்தியும் கர்வமும் நல்ல பலன்களைத் தரா!

பொதுவாக இந்த வளங்களில்லாதவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு நிம்மதி கெட்டு தூக்கம்போய் வேண்டாத உடல் உபாதைகள் ஏற்பட்டு நோய்வாய் பட்டு அவதிப்பட நேரிடும். இத்தனை வளங்களும் இல்லாமல் ஒரு சில வளங்கள் இல்லாமலிருந்தாலும் மற்ற வளங்கள் மூலமாக கிடைக்க வேண்டிய வாழ்வு கிட்டும்.

இத்தனை வளங்களைப் பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கை வளமானதாக ஏன் இருக்காது! எல்லா வளங்களும் பெற்றவர்களானால் அது மிகச் சிறந்த பூரணத்துவம் நிறைந்த ஆரோக்கிய வளமுடைய வாழ்வாகவே அமையும்! இந்த வளங்களை வாழ்வில் பெற சிறிய சிறிய பயிற்சிகளைச் செய்து வெற்றி கண்டு எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்! குருஸ்ரீ பகோரா.

#*#*#*#*#

Read 838 times Last modified on வெள்ளிக்கிழமை, 21 June 2019 10:22
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

19373457
All
19373457
Your IP: 172.69.63.36
2020-10-25 16:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg