gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

முருகன்

Written by

               ஒம்சரவணபவஓம்

முருகன்- அழகன் 
பெருமான்-கௌமார சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமண்யன், பழனிஆண்டவன், குமரன், சிங்கார வேலன், வேலாயுதன், சரவணபவன், ஞானபண்டிதன், ஸ்கந்தன், காங்கேயன், ஷண்முகன், தகப்பன்சாமி, 

உகந்த மலர்கள்- வெட்சி, கடம்பம், மல்லிகை, ரோஜா, முல்லை, செண்பகம் மற்றும் செந்நிற மலர்கள்.
உகந்த நாட்கள்- சஷ்டி, செவ்வாய்க்கிழமை, கார்த்திகை நடசத்திரம் சிறப்பு. எந்நாளும் வழிபடலாம்.

விழாநாட்கள்- தைப்பூசம்- தை பௌர்ணமியன்று பூச நட்சத்திரம் சேர்ந்து வரும் நன்னாள். உலகம் தோன்றிய நாள் என புராணங்கள் சொல்கின்றன. அரக்கன் தரகாசுரனை வதம் செய்த நாள். உமையிடம் வேல்பெற்று சூரபதுமனை அழிக்க புறப்பட்ட நாள். வள்ளலார் ஜோதி விழா இந்நாளில் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் அலகு குத்தியும், பால்காவடி, புஷ்பக்காவடி மற்றும் பால் குடமெடுத்து நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை வழிபடுகின்றனர். கார்த்திகை, சித்திரை சிறப்பு சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி ஆறுதாமரைப் பூக்களில் உருவாகி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.
சிறப்பு-முருகன் மலையும் மலிசார்ந்த இடமான குறிஞ்சித் திணைக்குரிய கடவுள். வள்ளி தெய்வானை என இரு மனைவியர். இளமைக்கும் வீரத்திற்கும் எடுத்துகாட்டாகத் திகழ்பவர். தாருகாசுரனையும், சூரபதுமனையும் அழிக்க அவதாரம் எடுத்தவர். சக்திகிரி, சிவகிரி என்ற மலைகளை அகத்தியருக்காக கொண்டுவந்த இடும்பன் களைப்பின் மிகுதியால் ஓர் இடத்தில் வைத்துவிட்டு ஒய்வுக்குப்பின் தூக்கமுடியாமல் திணர அங்குவந்த முருகன் மலை தன்னுடையது என வாதமிட்டு போரில் வென்றார். எல்லா முருகன் கோவில்களிலும் பாதையைக் காவல்காக்கும் பொறுப்பு இடும்பனுக்குத் வரமாகத் தரப்பட்டது. விநாயகர் ஞானப்பழம் பெற்றதனால் கோபம் கொண்டவரை, சிவன் முருகனையே ஞானப்பழம் என உணரவைத்தார்.
வணங்கும்முறை- எல்லா நாட்களிலும் விழா நாட்களிலும் அதிகாலை எழுந்து குளிர்ந்த நன்னீரில் நீராடி திருநீறு உத்திராட்சம் அணிந்து கோவிலுக்குச் செல்லவும். பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் முருகன் இடம் பெற்றமையால் மூலவரை வழிபட்டபின் முருகனை வழிபடுதல் சிறப்பு. தனிக்கோவில்களில் முருகனை  வழிபட்டு வலம் சுற்றி வந்து மூலவருக்கு வலப்பக்கம் ஆண்களும், இடப்பக்கம் பெண்களுமாக இருந்து கொண்டுவந்த அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்து தீப ஆராதனையின் போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து தரிசனம் செய்யவும். கோவிலின் ஒருபகுதியில் அமைதியாக அமர்ந்து கண்களைமூடி இறைவன் திருநாமத்தை அல்லது துதிப்பாடல்களை உதட்டளவில் சொல்லிக் கொண்டிருக்கவும். பின் எழுந்து அமைதியாக கோவிலைவிட்டு வெளியில் செல்லவும்.

 

உள்ளே.....

1.“கந்தர்சஷ்டி கவசம்”-செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற, கஷ்டங்கள் நீங்க- தினமும். 

2.“ஸ்ரீசுப்ரமண்யர் கராவலம்பம்” - கஷ்டங்கள் நீங்க-தினமும்- காலையில்.

3.“சண்முக கவசம்”- ஆரோக்யமாயிருக்க, நோய் நொடிகள் நீங்க- தினமும்/ வேண்டும் போது

4.“சண்முக நவக்கிரக பாமாலை”- சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க-தினமும்/வேண்டும்போது 

5.“ஸ்ரீபழனி ஆண்டவர் தியானம்”- செவ்வாய் தோஷம் விலக-வாழ்வில் சிறப்பு அடைய- தினமும். 

6.“ஸ்ரீமுருகப்பெருமான் துதி”- செவ்வாய் தோஷம் விலக- அறிவுத் திறன் பெருக- செவ்வாய் மற்றும் பங்குனி உத்திரத்தன்று. 

7.“ஸ்ரீசுவாமிநாத துதி”- தீய எண்ணங்கள் நீங்க, நலன்கள் பெருக- செவ்வாய் மற்றும் வியாழன்.

8.“ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்”- பகைவர்களிடமிருந்து காப்பற்ற-கிரக தோஷங்கள் விலக- வாழ்வில் எல்லா சிறப்புகளும் அடைய- தினமும்.

9.“ஸ்ரீ சுப்ரமண்யபுஜங்கம்”-வேண்டும்போது-வேண்டுவன வற்றிற்கு-

10.“ஸ்ரீ சுப்ரமண்யகத்யம்”-செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற- மாதசஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை.

11.“சக்தி வேல் துதி”- மனபயம் நீங்கி வெற்றிபெற- செவ்வாய்க்கிழமை மற்றும் பங்குனி உத்திரத்தன்று- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளியது. 

12.“ஸ்ரீ ஸ்கந்த துதி”- எல்லா நியாயகோரிக்கைகளும் வெற்றிபெற- கார்த்திகை மாதம். 

13.“ஸ்ரீஆறுமுகன் துதி”- ஆனந்த வாழ்வுவாழ- சாஸ்திரம்-ஸ்காந்தம்- மந்திரம்- சரவணபவ- சகல பிராணிகளும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய்வாழ - தினமும். 

14.“சுப்ரமண்ய புஜங்கம்”-ஆதிசங்கரர்-உடல் உபாதைகள், மனோ வியாதிகள் நீங்க -வேண்டும்போது 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை. 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

1.“கந்தர் சஷ்டி கவசம்”- செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற, கஷ்டங்கள் நீங்க- தினமும்.

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட

மைய நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக!
வருக வருக மயிலோன் வருக!

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக! 
வாசவன் மருகா வருக வருக! 
நேசக் குறமகள் நினைவோன் வருக!

ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலன் நித்தம் வருக!
சிரகிரி வேலன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக!

சரவண பவச, ரர ரர ரர ர
ரிவண பவச, ரிரி ரிரி ரிரி ரி
விணபவ சரவண, வீரா நமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென

வசர வணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக!
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! 
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொலி சௌவும், உயிரையுங் கிலியும்

கிலியுஞ் சௌவும், கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும், தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக!

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகெனெ
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

எந்தனையாளும் ஏரகச்செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலை வைத்துன் இனையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிரு தோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவெல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின் கையிரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுனையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்கதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காராரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனைதனையும்

ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அகன்று புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுக்
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குச் செக்கு செதில் செதிலாக
சொக்குச் சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்

பற்றுப் பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டதுவோடப்
புலியும் நரிவயப் போத்தோடு நாயும்

எலியும் கரடியும் இனித்தொடாதோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடுவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ்சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலை சயங்குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிரிதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பரு அரையாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா ஆமராவதியைக் 
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப்பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூபதியை

நேசமுடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவஜம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனையடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென்றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தெனென் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன், பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந்துலக்கி
நேசமுடனொரு நினைவதுவாகிக்

கந்தர் சஷ்டி கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசை மன்னரெண்மர் சேர்ந்தங்கருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவ மதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளு மீரெட்டா வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்காரத்தடி
அறிந்தெனதுள்ளம் அட்டலக்ஷ்மிகளில்
வீரலக்ஷ்மிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொள என்றெனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்யா தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்த போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணஞ் சரணஞ் சரவண பவஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்

2.“ஸ்ரீசுப்ரமண்யர் கராவலம்பம்” - கந்தன் அருளால் கோடி ஜன்மத்தில் செய்த பாவமும் அந்தக் கணமே அழிந்து, எல்லாமே இன்பமயம் ஆகும். கஷ்டங்கள் யாவும் நீங்கி நிறைவாழ்வு வாழ்ந்து முடிவில் முக்தியை அடைய தினமும்- காலையில்.

சுவாமிநாதப் பெருமானே! கருணை நிறைந்தவரே! எளியோர் நாதனே! திருவான உமையவளின் தாமரை மலர் நிகர்த்த திருமடியில் அமர்ந்திருப்பவரே! மகாவிஷ்னு, மகாலட்சுமி உள்ளிட்ட சகல தேவர்களாலும் போற்றப்படும் உமது திருப்பாதங்களுக்குச் சரணம்! வள்ளி மணவாளரே, உமது திருக்கரத்தினால் எனக்கு உதவி அருளுங்கள்!

தேவர்கள் யாவரையும்விட உயர்வானவனே! தேவ கணங்களின் தலைவனே! தேவேந்திரன் உள்ளிட்டவர்களால் வணங்கப்படும் மென்மையான பாதங்களை உடையவரே! நாரதர் உள்ளிட்ட தேவரிஷிகளினால் போற்றப்படும் புகழையுடையவரே! வள்ளிமணாளரே! எனக்கு அருளிட உமது அபயக்கரத்தினை நீட்டுங்கள்!

உலக உயிர்களின்மீது அன்பு கொண்டு சகல உயிர்களும் பசியாறிட உணவளிப்பவரும், வணங்கிடும் பக்தர்களின் பிறவிப் பிணிகளை நீக்கும் மருத்துவராக அருள்பாலிப்பவரும், பக்தர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டவரும், ஸ்ருதி, ஆகமம், பிரணவம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்பவரும், வள்ளி நாயகனுமான சுப்ரமண்யரே! எனக்கு அபயக்கரம் நீட்டி அருளுங்கள்!

இந்திரனையும் வென்று இறுமாப்புடன் திரிந்த க்ரௌஞ்ச மலையின் செருக்கை சக்தி வேலால் தகர்த்தவரே! பாசம் முதலிய திவ்ய பாணங்களை தரித்து பாரினைக் காத்திட பரிதிபோல் உலா வருபவரே! வள்ளி நாயகரே! எனக்கு உதவும் உமது கரத்தினால் ஆறுதல் அளியுங்கள்!

தேவாதி தேவரே! தேவர்களின் நடுவே தேரில் அமர்ந்து பிரகாசிப்பவரே! தேவேந்திர பட்டணத்திணை பகைவர் எவரும் நெருங்காதபடி தீர்க்கமான வேல், வில்லையேந்தி பிரகாசிப்பவரே! கோடானு கோடி அசுரர்களைக் கொன்று தேவர்களால் ஆராதிக்கப்படுபவரே! வள்ளி நாயகரே! அபயக்கரத்தை எனக்கு அளீப்பீராக!

ரத்தினங்கள், முத்துக்கள், மணிகள் போன்றவற்றாலான ஆரங்களும், பொன்னாலான கிரீடமும் அணிந்து ஒளிர்பவரே! கேயூரம், குண்டலம் என பிரகாசமான ஆடை ஆபரணங்களால் மிகுந்த ஓளியுடன் திகழ்பவரே! வீரர்களுள் நிகரற்றவரே! தாரகன் முதலிய அசுரர்களை வென்று தேவர்களைக் காத்தவரே! தேவர்களால் எப்போதும் வணங்கப்படுபவரே! வள்ளி மணாளரே! உம்முடைய அபயகரத்தால் எனக்கு அருளுங்கள்!

ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆதியான பரமனின் மகனே! கங்கையில் தோன்றியதால் காங்கேயன் என்று அழைக்கப்படுபவரே! பஞ்சாமிர்தத்தில் அதிக விருப்பமுள்ளவரே! தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்களாலும், முனி சிரேஷ்டர்களாலும் முடி சூட்டப் பட்டவரே! விஷ்னுவுடன் இனைந்தவரே! விஷ்னுவுக்கு பிரியமானவரே! பொய்கையில் மீன்களைத் துன்புறுத்திய மகன்களை மீன்களாக சபித்து, சரவணப் பொய்கையில் இருக்கும் போது முருகன் மூலம் சாப விமோசனம் பெறுவர் என்றும் சாப விமோசனம் கொடுத்த பராசரரால் போற்றப்படுபவரே! வள்ளி நாயகரே! உங்களுடைய அபயக்கரத்தால் என்னைக் காத்து அருளுங்கள்.!

கார்த்திகை பாலனே, கார்த்திகேயனே! உன்னுடைய பரிபூரண அருள் கிட்டுவது என்பது கருணக் கடலில் முழுகுவதற்குச் சமம் அல்லவா? என்னிடமுள்ள காமம், க்ரோதம், கோபம் போன்ற பிறவிப் பிணிகளை உன் பார்வையாலேயே நீங்கச் செய்பவனே! என்னை உய்விக்கும் பிறையணிந்த பரமேஸ்வரன் பரமேஸ்வரியின் பிரியத்துக்குப் பாத்திரமானவனே! வள்ளி நாயகனே! எனக்கு ஆறுதல் அளிக்கும் அபயக்கரத்தை நீட்டுங்கள்!

3.“சண்முக கவசம்”-பாம்பன் சுவாமிகள்-ஆரோக்யமாக இருக்க, நோய்நொடிகள் நீங்க- தினமும்/வேண்டும் போது

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளது ஆகித்
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேல் காக்க, நாப்பல் முழுதும் நல் குமரன் காக்க
துரிசுஅறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது சுந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருமகன் காக்க
ஆசுஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க

உறுதியாய் முன்கை தன்னை உமையிளமதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன் காக்க, பின்முதுகைச் சேய் காக்க

ஊண்நிறை வயிற்விற மஞ்சை ஊர்தியோன் காக்க, வம்புத் 
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ
ஆணியைக் கந்தன் காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரன் நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின் 
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனை மல்கட்டத்
தவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனாலேனும் நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க

நகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க

சலத்தில்உய் வன்மீன் ஏறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன் கைவேல், நவக்கிரகக் கோள் காக்க
சும விழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாசம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையடி, கண்டமாலை
குமுறு விப்புறுதி, குன்மம், குடல்வலி ஈழை காசம்,
நிமிரொணாது இருந்தும்செட்டை நீர்ப்பிரமேகம எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னிசாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சக்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்ப கந்தராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்க
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐ ரீம்வேல் காக்க

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்வேறு எந்தஇடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அசுரமே முதலாம் ஈராறு அம்பகன் வேலின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க


ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய் வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில் 
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயிவினில் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில்,
கீழ்க்கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க

இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும்நல்ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரார் போற்றும் பாதம்பணிந்து நெஞ்சுஅடக்கும் போதும்
செழும் குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தாம் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல், ஓம்சிவ சாமி காக்க
திளிநாடு பிறபகல்கால் சிவகுரு நாதன் காக்க

இறகுடைக்கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடிநிசி தன்னில் காக்க
மறைதொழு குகன் எம்கோன் மாறாது காக்க காக்க

இனம் எனத்தொண்டரோடு இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந்தன்னில் சரவண பவனார் காக்க
நனி அனுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்க வந்தே!
4.“சண்முக நவக்கிரக பாமாலை”- சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க- தினமும்/வேண்டும் போது

 ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே
ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்!
ஒன்பான் கிரமுமே ஓடிவந்து காப்பாற்றும்!
கண்ணான வேழமுகம் காப்பு
செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி
சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய் 
ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன்
இன்பமெல்லாம் கூட்டும் இனி!

சூரியதிசை:

 ஆறிரு கரங்கள் கொண்டு
அடியார்க்கு அருள் வழங்கி
சீரிய வாழ்வு நல்கும்
செந்திலே பழநி வேலா!
சூரிய திசையிலே உன்னை
துதிட்டேன் காக்க வாராய்!
காரியம் யாவினுக்கும் 
கை கொடுத்து உதவுவாயே!

சந்திர திசை:

 இந்திரன் முதலானோர்கள்
இளமையாய் விளங்கும் உந்தன்
மந்திரம் சொல்லி நல்ல
மகத்துவம் பெற்றது உண்டு!
சந்திர திசையில் உன்னை
சந்தித்துப் போற்றுகின்றேன்!
வந்திடும் செல்வமெல்லாம்
வரத்தினால் வழங்குவாயே!

செவ்வாய் திசை:

 ஒளவைக்கு நெல்லி தந்தாய்!
அருணகிரி நாதருக்கும்
திவ்வியக் காட்டி தந்தாய்
திருவருள் கொடுப்பதற்கே
செவ்வாயின் திசையில் உன்னை 
சேவித்துப் போற்றுகின்றேன்!
வையகம் புகழும் நல்ல
வாழ்க்கையை வழங்கு வாயே!

புதன் திசை:

 கதம்பமும் முல்லை மல்லி
கனிவுடன் சூடும் கந்தா
சதமென ஆயுள் நல்கி
சகலமும் அருளுவாயே!
புதன் திசை நடக்கும் நேரம்
போற்றி நான் வணங்குகின்றேன்!
இதம் தரும் வாழ்வை நல்கி
இன்பத்தை வழங்குவாயே!

வியாழதிசை:

 ஆறுமுகம் கொண்ட செல்வா!
அழகிய வள்ளி நேசா!
பெருமைகள் வழங்கி நாளும்
பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க
குருதிசை நடக்கும் நேரம் 
குமரனை வணங்குகின்றேன்!
திருவருள் தருவதோடு
செல்வாக்கும் அருளுவாயே!

சுக்ரதிசை:

 தக்கதோர் வாகனங்கள்
தனி இல்லம் மனைவி மக்கள்
அக்கறை கொண்டு நாளும்
அசுரகுரு வழங்கு மென்பார்
சுக்கிரதிசையில் நாளும்
சுப்பிரமணியன் உன்னை
சிக்கெனப் பிடித்த தாலே
சிறப்பெலாம் வழங்குவாயே!

சனிதிசை:

 பிணியெலாம் அகலவேண்டிய
பெரும் பொருள் கிடைக்க வேண்டி
அணிதிகழ் வாழ்வு வேண்டி
அல்லல்கள் அகல வேண்டி
சனிசென்னும் திசையில் நாளும்
சண்முகா உனைத் துதித்தேன்!
கனிவுடைத் தெய்வம் நீயே
காட்சி தந்தருளுவாயே!

இராகுதிசை:

 நாகமாய் வடிவில் நின்று
நடந்திடும் தோஷம் நீக்கி
போகத்தை வழங்குதற்கே
பூமியில் அருள் கொடுக்கும்
இராகு எனும் திசையில் உன்னை
இருகரம் கூப்பி வணங்குகிறேன்!
பாகென இனிக்கும் கந்தா
பதினாறு பேறும் தாராய்!

கேதுதிசை:

 ஆதரவு வழங்குதற்கும்
அண்டிய வழக்கு எல்லாம்
தீதின்றி மாறுதற்கும்
திறமைகள் தெரிவதற்கும் 
கேது திசையில் உன்னை
கீர்த்தியாய் வணங்குகின்றேன்
சாதனை செய்த வேலா
சண்முகா அருளுவாயே!

5.“ஸ்ரீபழனி ஆண்டவர் தியானம்”- செவ்வாய் தோஷம் விலக- வாழ்வில் சிறப்பு அடைய- தினமும்.

வணங்குபவர்களுக்கு கற்பக விருட்சம்போல் கேட்பதை தருபவரும், செந்தாமரைப் போன்ற நிறமுடையவரும், இரண்டு கையால் அருள்பவரும், தன் பக்தர்களின் நோய்களைப் போக்குபவரும், ஒரு முகத்தால் உலகையே பரிபாலகனம் செய்பவரும், இடுப்பில் இடது கை பதித்து எழில் தோற்றம் காட்டுபவரும், வலது கையில் தண்டத்தை ஏந்தியவரும், கௌபீனம் தரித்தவருமான பழநி ஆண்டனை வணங்குகின்றேன். என் செவ்வாய் தோஷ பாதிப்புகளை நீக்குபவரும், என் தொழிலிலும் வியாபாரத்திலும் எந்த நஷ்டமும் வராமல் காப்பவருமான பழிநிவாழ் முருகப் பெருமானை நான் உளமாற வணங்குகின்றேன். எனக்கு அவர் அருள்புரிவாராக!

6.“ஸ்ரீமுருகப்பெருமான் துதி”- செவ்வாய் தோஷம் விலக- அறிவுத் திறன் பெருக- செவ்வாய் மற்றும் பங்குனி உத்திரத்தன்று.

யோகீஸ்வரனாகவும், மகாசேனைகளுக்கு தலைவராயும் விளங்குபவரே, கார்த்திகேயன் என்றும் அக்னியிலிருந்து உதித்தவர் என்றும் போற்றப்படுபவரே, கந்தன், குமாரன், தேவசேனாபதி, சுவாமி, சங்கரபுத்திரன், காங்கேயன், பிரம்மச்சாரி, மயில் வாகனமுடையோன், தாரகாசுரனை அழித்தவன், உமாபுத்திரன், கிரௌஞ்சமலையை அடக்கியவன், ஆறுமுகன், ஏழுகடல்களும் தொழுபவன், சரஸ்வதி தேவிக்கு பிரியமான குகன், சனத்குமரன், பகவான் என்றெல்லாம் பக்தர்களால் துதிக்கப்படுபவரே, இம்மையும், மறுமையும் அருள்பவரே, உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள் புரிந்து பாதுகாப்பாயாக.

7.“ஸ்ரீசுவாமிநாத துதி”- தீய எண்ணங்கள் நீங்க, நலன்கள் பெருக- செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை.
பற்றற்ற முனிவரைப் போல காஷாய வஸ்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டவரே, காமம், மோகம் போன்ற தீய எண்ணங்காளை பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள பிட்சைப் பாத்திரம் ஏந்தியிருப்பவரே, கருணை பொழியும் கண்களையுடையவரே, சக்திவேலைக் கையில் பற்றியவரே, பக்தர்களை பரிசுத்தமாக்குபவரே, ஈசனுக்கே ஞானம் விளக்கிய சுவாமிநாத சுவாமியே, உன்னை வணங்குகின்றேன். என் மனதிலிருந்து தீய எண்ணங்களை நீக்கி, என் நலன்களை பெருக்குமாறு உம்மை வேண்டுகிறேன் நிறைவேற்றுவாய் அப்பனுக்கு பாடம் சொன்ன அப்பனே! சுவாமிநாதனே!

8.“ஸ்ரீசுப்ரமண்ய கவசம்”- பகைவர்களிடமிருந்து காப்பற்ற - கிரக தோஷங்கள் விலக- வாழ்வில் எல்லா சிறப்புகளும் அடைய- படிப்போரும், கேட்போரும் இவ்வுலகின் எல்லா விருப்பங்களையும் அடைந்து முடிவில் கயிலையில் உள்ள ஸ்ரீகந்தபுரத்தை அடைவர்- தினமும்.

சிந்தூரம்போல சிவந்த நிறமுள்ளவரும், சந்திரன் போல் அழகான முகமுள்ளவரும், தோள்வளை, முத்தாரம் முதலிய திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உடலழகு உள்ளவரும், சொர்க்க போகத்தை அளிக்க கூடியவரும், தாமரைப்பூ, சக்திவேல், சேவல் ஆகியவற்றைத் தாங்கி அபயகரம் நீட்டுபவரும், சிவந்த வாசனைப் பொடிகளால் பிராகாசிக்கின்றவரும், அடியார்களின் பயத்தைப் போக்குவதிலேயே கருத்துள்ளவருமான ஸ்ரீசுப்ரமண்யரை வணங்குகின்றேன்!

முன்பக்கம் ஸ்ரீசுப்ரமண்யர் ரட்சிக்கட்டும்! தேவ சேனாபதியானவர் பின்பக்கம் காக்கட்டும். தென்பாகத்தில் குஹன் ரட்சிக்கட்டும். இடது பாகத்தில் அக்னியிலிருந்து தோன்றிய அக்னி பூவாகிய முருகன் என்னைக் காக்க துணை நிற்கவேண்டுகிறேன்!

பெரும் சேனையை உடையவர் தலையைக் காக்க வேண்டும். ஸ்கந்தன் நெற்றியைப் பாதுகாக்க வேண்டும். பன்னிரண்டு கண்களை உடையவர் எனது கண்களை ரட்சிக்கட்டும். உலகத்தை காப்பவர் என் காதுகளை ரட்சிக்க வேண்டும்.

ஆறுமுகன் எனது முகத்தைக் காக்க. மூக்கை சிவமைந்தன் காக்க. உதடுகளை வள்ளி மணாளன் காக்க. நாவை ஆறுமுகங்களையுடையவன் காக்க.

தேவசேனாவின் கணவன் பற்களைக் காக்க. பன்னிரு கையன் முகவாய்க் கட்டையைக் காக்க. தாருகணை ஜெயித்தவர் எனது கழுத்தை ரட்சிக்கட்டும். பன்னிரண்டு கைகளையுடையவர் எனது கைகளையும், வேலாயுதத்தைத் தரித்தவர் எனது உள்ளங்கைகளையும் காக்க. நாணற்காட்டில் உண்டானவர் எனது மார்பைக் காக்க. அக்னியிலிருந்து உண்டானவர் எந்து இருதயத்தைக் காக்க. அம்பிகை பாலன் எனது வயிற்றைக் காக்க.

சம்புகுமாரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். சிவபுத்திரன் எனது இடுப்பைக் காக்க வேண்டும். யானையின் மீது அமர்ந்திருப்பவர் எந்து தொடைகளை ரட்சிக்கவேண்டும். கங்காசுதனான காங்கேயன் எனது முழங்கால்களைக் காக்க.

விசாகன் எனது கணுக்கல்களைக் காக்க. மயிலை வாகனமாகக் கொண்டவர் எனதுகால்களைக் காக்க. எல்லா பூதங்களுக்கும் தலைவர் எனது எல்லா அவயவயங்களையும் காக்க. அக்னி குமரன் எனது உடலில்லுள்ள எல்லா தாதுக்களையும் காக்க.

சந்தியாகாலமாகிய பகலும் இரவும் தொடங்கும் நேரங்களிலும், நடுஇரவிலும், பகலிலும், காலையிலும், நீரின் மத்தியிலும், நெருப்பிலும், பயங்கரக் காட்டிலும், அரண்மனை வாயிலிலும், கோரமான போரின் மத்தியிலும், கொடூரமான மிருகங்களின் நடுவிலும், திருடர் நடுவிலும், தடுக்கமுடியாத ஜுரம் முதலிய நோய்களின் பாதிப்பிலும், தீய கிரகங்களின் தோஷங்களினால் பாதிக்கப்படும் போதும், கெட்ட சகுணங்கள் தோன்றிடும் சமயத்திலும், அஸ்திரங்கள், சஸ்திரங்கள் இவை விழும் பொழுதும் கிரௌஞ்ச மலையை தூள் செய்தவரான ஸ்ரீசுப்ரமண்யர் என்னைக் காக்க.

இஷ்ட சித்தியை அளிக்கவல்ல இந்த ஸ்ரீசுப்ரமண்யர் எனக்கு மூன்றுவித தாபங்கள் இல்லாமல் செய்யட்டும். இது சத்தியமான உண்மை. இது சத்யம். சத்யம்.

தர்மத்தை விரும்புபவன் தர்மத்தையும், பொருளை விரும்புபவன் பொறுளையும், நியாயமான பொருளுக்கு ஆசைப்படுபவன் விரும்பும் பொருளையும், மோட்சத்தை விருப்புபவன் மோட்சத்தையும் அடைய அருள்புரிவாய்.

9.“சுப்ரமண்ய புஜங்கம்”-வேண்டும்போது- 
தீராத இடர் நீங்க- முதல் வணக்கம்

என்றும் இளமை எழிலன் எனினும்
இடர் மாமலக்கே இடராவான்
துன்றும் கரிமா முகத்தோன் எனினும்
சிம்ம முகச்சிவன் மகிழ்நேயன்
நன்றே நாடி இந்திரன் பிரமன்
நாடித் தேடும் கணேசனெனும்
ஒன்றே எனக்கு சுபம் திருவும்
உதவும் மங்கள மூர்த்தமதே!

“புலமை ஏற்பட”

சொல்லு மறியேன் கதி அறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளறியேன்
சொல்லைச் சொல்லும் விதி அறியேன்
தோய்ந்து சொல்ல நானறியேன்
எல்லயிலாதோர் ஞானவொளி
இதயத்தமர்ந்து அறுமுகமாய் 
சொல்லை வெள்ளமெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.

“திருவடி தரிசனம் கிட்ட”

மயில்மீது ஆர்த்து உயர்வாக்கிற் போதிந்து
மனதைக் கவரும் உடலான்
பயில்வோர்கள் உள்ள குகைக்கோயில் தங்கி
பார்ப்பவர் தெய்வமானான்
உயிராகும் மறையின் பொருளாகி நின்று 
உலகைப் புரக்கும் பெருமான்
கயிலாயமேவும் அரனாரின் செல்வக்
கந்தன் பதம் பணிகுவாம்.

“பிறவிப்பிணி தீர”

என்றன் சந்நிதியடையும் மனிதர்
எப்போதெனினுமப்போதே
இந்தப் பிறவியின் சாகரக் கரையை
எய்திக் களித்தோராகின்றனர்
மந்தரு மறிய மறையை விளக்கிச்
செந்தில் சாகரக் கரையதனில்
சுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்
தூயன் பாதம் துதிக்கின்றேன்.

“போகாத துன்பம் போக”

கடலில் தோன்றும் அலையும் அழிந்து
காட்சி மறைவது போல்
திடமாய்ச் சந்நிதி சேவித்திடுவார்
தீமையழிந்து படும்
படமாய் மனதில் பதியச் செய்ய
பரவைக்கரையில் குகன்
இடமேயமர்ந்தான் இதயமலர் மேல்
ஏற்றித் தியானம் செய்கின்றேன்

“கயிலை தரிசனம் காண”

என்றன் இருக்கை யறிந்தேயெவரும்
இம்மலை ஏறிவரின்
எந்தைக் கயிலை மலை மீதேறும்
இனிய பலன் கொள்வார்
கந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்
கந்தமான கிரிமேல்
சிந்தை மகிழ மூவிரு முகமாய்த்
திருக் கொலுவமர்ந்தே யிருக்கட்டும்.

“கரையாத பாவம் கரைய”

கொடிதாம் பாவக் குறை நீக்கிடவே
பெரிதாம் கடற்கரையில்
அடியார் தவமே நிறைவே தருமோர்
கந்தமான கிரிமேல்
குடியாம் குகையில் ஒளிவான் வடிவாய்
குலவி விளங்கு குகன்
அடியார் மிடிமை கெடவே செய்வான்
அவனைச் சரணமடைகின்றேன்.

“மனம் சாந்தி, நிம்மதி பெற”

மண்ணும் இளமையாயிரம் ஆதவர்
மலரும் காந்தியுடன்
நன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்
இரத்தின மஞ்சமதில் 
கன்னியரறுவர் போற்றி வளர்த்த
கந்தன் கொலு காணப்
பொன்மயக் குகையில் புகுந்தா மாந்தர்
சித்தம் சாந்தியுறும்.

“புகலிடம் அடைய”

மென்மை மிகுந்த கமலத் திருவடி
மேலும் அசையச் சிவப்பாகும்
மன்னும் அழகு மனதைக் கவர்ந்து
மலரின் மேலே குடி யேற்றும்
சின்னம் சிறிய வண்டாம் மனது
சிக்கல் பலவும் விட்டேகி
பொன்னாம் பாதத் தாமரைச் சார்ந்து
பொலிவு பெற்றே வாழட்டும்.

“அகத்தின் இருள் நீங்க”

பொன்னெனத் திகழும் பூந்துகிலாடை
பொலிவுடன் இடையில் ஒளி துள்ள
மின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க
மேகலை இடையைப் பொன்னாக்க
தன்னிகரில்லா இடையதின் காந்தித்
தன்னொளி ஒன்றை ஏறிவிடும்
நின்னெழில் இடையின் அணியா அழகை
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

“ஆபத்து விலக”

வேட வேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த 
குமரன் மார்பைப் போற்றுகின்றேன்.

“பரம ஞானம் அடைய”

வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோளை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்டமதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன் மதமடக்கும் நின்னுடைய 
காதல் கரங்கள் பன்னிரெண்டும்
கந்த என்னைக் காத்திடுக.

“தாபங்கள் நீங்க”

சந்திரர் அறுவர் வான் வெளியில்
சற்றும் களங்கமில்லாமல்
சுந்தரச் சுடர்தான் வீசியெங்கும்
தோற்றக் குறைவுயேதின்றி
யந்திரமென்னச் சுழன்றாங்கு
என்றும் உதயத் தோற்றமொடு
கந்தா அவைதான் விளங்கினும், நின்
கருனை முகத்திற் கெதிராமோ!

“அமுத லாபம் கிடைக்க”

அன்னம் அசைதல் போல்நின் புன்னகை
அழகின் அதரம் அமுதூர
சின்னஞ் சிறிய கொவ்வைப் பழமாய்ச்
சிவந்த உதடும் அழகூர
பன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து
பவனி கடைசி ஒளியாக
நின் திருமுகங்கள் ஆறும் தாமரை 
நிகர்த்தே நிற்கக் காண்கின்றேன்.

“கிருபா கடாட்சம் கிட்ட”

விண்ணிலும் விரிந்த கருணையதால்
வியத்தகு தயவை அருளுகின்ற
பன்னிரு விழிகள் செவி வரைக்கும்
படர்ந்த இடையீடேதின்றி
மின்னென அருளைப் பெய்வனவாய்
விளங்கு குகனே மனதிறங்கி
என்மீது கடைக் கண் வைத்தால்
ஏது குறைதான் உனக்கெய்தும்.

“இஷ்ட சித்தி ஏற்பட”

மறைகள் ஆறு முறை ஜோதி
வாழ்க மகனே என மகிழும்
இறைவன் உடலில் இருந்தே பின்
எழுந்த கந்தா, முத்தாடும்
துறையாய் விளங்கும் நின் சிரங்கள்
திகழும் மகுடத் தோடுவகை
நிறைவாயக் காக்கும், சிரங்களையே
நெஞ்சில் தியானம் செய்கின்றேன்.

“சத்ரு, பயம் நீங்க”

இரத்தினத் தோள் வளை ஒளிகதுவ 
நல்முத்து மாலை யசைந்தாட 
வரத்தில் உயர்ந்த நின் குண்டலங்கள்
வளைந்த கன்னத்தே முத்தாட
திரிபுரத்தை எரித்த சிவக்குமரா!
செந்தில் தலைவா, வேல்தாங்கி
மரகதப்பட்டை இடையுடுத்தி
வருக என்றன் கண்முன்னே.

“ஆனந்தம் ஏற்பட”

வருக குமரா! அருகெனவெ
மகிழ்ந்தே இறைவன் கரமேந்த 
பெருகும் சக்தி மடியிருந்தே
பெம்மான் சிவனின் கரம்தாவும்
முருகே! பரமன் மகிழ்ந்தணைக்கும்
முத்தே! இளமைவடிவுடைய
ஒரு சேவகனே! கந்தா! நின் 
உபய மலர்த்தாள் தொழுகின்றேன்

“கர்மவினை தீர”

குமரா! பரமன் மகிழ் பாலா!
குகனே! கந்தா! சேனாதிபதியே!
சமரில் சக்தி வேல் கரத்தில்
தாங்கி மயில் மீதூர்பவனே!
குமரி வள்ளிக் காதல! எம்
குறைகள் தீர்க்கும் வேலவனே!
அமரில் தாரகன் தனையழித்தாய்!
அடியன் என்னைக் காத்திடுக!

“திவ்ய தரிசனம் கிடைக்க”

தயவே காட்டும் தன்மையனே!
தங்கக் குகையில் வாழ்பவனே!
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயணமெனப்
பாரைவிட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுக! நீ தோன்றுகவே!

“எமபயம் நீங்க”

காலப் படர்கள் சினம் கொண்டு
கட்டு வெட்டு குத்தென்று
ஓலமிட்டே அதட்டி என்முன்
உயிரைக் கவர வரும்போது
கோலமயில் மேல் புறப்பட்டு
குமரா சக்தி வேலோடு
பாலன் என்முன் நீவந்து
பயமேன் என்னத் தோன்றுகவே

“அபயம் கிடைக்க”

கருணைமிகுமோர் பெருங்கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன் 
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது 
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது

“கவலைகள் தீர”

அண்ட மனைத்தும் வென்றங்கே
ஆண்ட சூரபதுமனையும்
மண்ணுள் மண்ணாய்த் தாரகனை
மாயன் சிம்ம முகத்தனையும்
தண்டித்தவனும் நீ யன்றோ!
தமியேன் மனதில் புகுந்திங்கே
ஒண்டிக் கிடக்கும் கவலையெனும்
ஒருவனைக் கொல்லுதலாகாதோ!

“மனநோய் தீர”

துன்பச் சுமையால் தவிக்கின்றேன்
சொல்ல முடியா தழுகின்றேன்
அன்பை சொரியும் தீனருக்கிங்
கருளும் கருணைப் பெருவாழ்வே
உன்னை நாடித் தொழுவதலால்
ஊமை நானோர் மாற்றறியேன்
நின்னைத் தொழவும் தடி செய்யும்
நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்

கொடிய பிணிகள் அபஸ்மாரம்
குஷ்டம் க்ஷயமும் மூலமொடு
விடியா மேகம் சுரம் பைத்யம் 
வியாதி குன்மமென நோய்கள்
கொடிய பிசாசைப் போன்றவைகள்
குமரா உன்றன் திருநீறு
மடித்த இலையைப் பார்த்தவுடன்
மாயம் போலப் பறந்திடுமே!

“சரணாகதி பலனை அடைய”

கண்கள் முருகன்தனைக் காணக்
காதப் புகழைக் கேட்கட்டும்
பண்ணை வாயிங்கார்க் கட்டும்
பாதத்தைக் கரமும் பற்றட்டும்
எண்சான் உடலும் குற்றவேல்
எல்லாம் செய்து வாழட்டும்
கண்ணாம் முருகைப் புலன்களெலாம்
கலந்து மகிழ்ந்து குலவட்டும்

“வரம் தந்திட”

முனிவர் பக்தர் மனிதர்கட்கே
முன்னே வந்து வரமளிக்கும்
தனித் தனி தேவர் பற்பலர்கள்
தாரணியெங்கும் இருக்கின்றனர்
மனிதரில் ஈன மனிதருக்கும்
மனம்போல் வரமே நல்கிடவே
கனிவுடைக் கடவுள் கந்தனன்றி
கருணை வடினைக் காண்கிலனே

“குடும்பம் இன்புற”

மக்கள் மனைவி சுற்றம் பசு 
மற்ற உறவினர் அனைவோரும்
இக்கணத்தென்னுடன் வசித்திடுவோர்
யாவரும் ஒன்றோ லட்சியமாய்
சிக்கெனப் பற்றி நின் திருவடியைச்
சேவிக்கும் தன்மை தருவாய் நீ
குக்குடக் கொடியோய் செந்தில்வாழ்
குமரா எமக்குக் கதி நீயே!

“விஷம், நோய் தீர”

கொடிய மிருகம் கடும் பறவை
கொட்டும் பூச்சி பேலென்றன்
கடிய உடலில் தோன்றிவுடன்
கட்டி வருததும் நோயினையே
நெடிய உன்றான் வேல் கொண்டு
நேராய்ப் பிளந்து தூளாக்கு
முடியாம் க்ளெரஞ்ச கிரி பிளந்த
முருகா வருக! முன் வருக!

“குற்றம் குறை தீர”

பெற்ற குழந்தை பிழை பொறுக்கும் 
பெற்றோர் உலகில் உண்டன்றோ
உற்ற தேவர் தம் தலைவா!
ஒப்பில் சக்தி யுடையானே
நற்ற வதத்தின் தந்தாய் நீ
நாயேன் நாளும் செய்கின்ற
குற்றம்யாவும் பொருத்தென்னைத்
குறையில்லாமல் காத்தருள்க

“ஆனந்தம் அடைய”

இனிமை காட்டும் மயிலுக்கும்
இறைவன் ஊர்ந்த ஆட்டிற்கும்
தனிமெய் ஒளிகொள் வேலுக்கும்
தாங்கும் சேவற் கொடியுடனே
இனிதாம் கடலின் கரையினிலே
இலங்கும் செந்தில் நகருக்கும்
கனியும் நின்றன் அடிகட்கும்
கந்தா வணக்கமதே!

“வெற்றி கூற”

ஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
அளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்
வான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்
வையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்
தீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்
திகழ்முக்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்
மேன சிவன் புதல்வர்க்கு வெற்றி கூறுவோம்
முருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்
எந்த மனிதன் பக்தியுடன்
எழிலார் புஜங்க விருத்தமதை
சிந்தை கனிந்து படித்திடிலோ
செல்வம் கீர்த்தி ஆயுளுடன்
சுந்தர மனைவி புத்திரர்கள்
சூழ ஆண்டு பல வாழ்ந்து 
கந்தன் பதத்தை அடைந்திடுவார்
காசனி மீதில் நிச்சயமே!

10.“ஸ்ரீசுப்ரமண்ய கத்யம்”- செல்வம், வாரிசு, ஆயுள், ஆரோக்கியம் பெற- மாதசஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை.

திரிபுரமெரித்த சிவனாரின் மகனே! எதிரிகளின் கூட்டத்தை அழிப்பவரே! கோடி சூர்யப் பிரகாசரே! உலக உயிர்களின் தாபங்களைப் போக்குபவரே! சிறந்த மயிலை வாகனமாகக் கொண்டவரே! தேவேந்திரனைக் காப்பவரே! உன்னை வணங்குகிறேன்.

எல்லா உலகையும் காப்பவரே! அசுரக் கூட்டம் என்ற பஞ்சைப் பறக்கடிக்கச் செய்பவரே! முனிவர்களால் நன்கு ஆராதிக்கப்படுபவரே! பாவங்களால் ஏற்படும் காமக்ரோதங்களால் வெல்லப் படாதவரே! இளமையும் அழகும் நிறந்த மன்மதனைவிட அழகான உருவினை உடையவரே! கருணைக் கடலே! உன்னை வணங்குகிறேன்.

மயில் வாகனரே! மகேந்திர மலையை இருப்பிடமாகக் கொண்டவரே! பக்தியாகிய சாதனத்தால் அடையக் கூடியவரே! அழகிய வேலாயுதத்தினை கரத்தில் ஏந்தியவரே! தேவருலகைக் காத்திட்டவரே! திரிபுரமெரித்த சிவனாரின் மகனே! உன்னை வணங்குகிறேன்.

சர்வலோக நாயகனே! மலையையே பிளக்கும் வலிமைமிக்க பாணத்தை உடையவரே! ஸ்ரீ மகாதேவனின் பெரும் பேறே! சொன்னாலே புண்ணியம் பலதரும் பெயர்களை உடையவரே! தொழுபவரின் சோகங்களைப் போக்குபவரே! உலகங்களின் தோற்றத்திற்கு காரணமானவரே! உன்னை வணங்குகிறேன்.

தேவர்களின் எதிரிகளான அசுரர்களுக்கு யமன் போன்றவரே! சிவபாலனே! சம்சாரக் கடலிருந்து மீட்பவரே! மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரே! அமுதரசம் போன்ற கருணையைக் கடல்போல் நிறைத்து வைத்து பக்தர்கள் மேல் பொழிபவரே! சந்திர கலையைத் தலையில் தரித்துக் கொண்டவரே! உன்னை வணங்குகிறேன்.

வள்ளியின் மனதைக் கவரும் வேடத்தைத் தரிப்பவரே! மல்லிகை மாலையைக் கேசத்தில் தரிப்பவரே! தேவர்களைக் காத்தவரே! வணங்கியவர்களின் துன்பங்களைத் தீர்ப்பவரே! நிலவைப் பழிக்கும் முகலாவண்யம் உடையவரே! நற்குணங்களின் இருப்பிடமானவரே! உன்னை வணங்குகிறேன்.

கோடி சூர்யர்களுக்கு ஒப்பான பிரகாசம் உள்ளவரே! பானு கோபனே! அலறக்கூடிய வில்லை உடையவரே! பெற்றோரின் உள்ளங்கவரும் புன்னகை பூப்பவரே! எதிரிகளின் தலைகளைச் சீவும் கத்தியை உடையவரே! காதுகளில் ரத்னகுண்டலங்களைத் தரிப்பவரே! சூர்ய மண்டலத்தைவிட அதீத ஒளி பொருந்தியவரே! உன்னை வணங்குகிறேன்.

தேக்கு மரங்களைவிட உறுதி வாய்ந்த சிறந்த கைகளைக் கொண்டவரே! துதி பாடுபவர்களைக் காப்பவரே! வீரபாகு முதலிய நவ வீரர்களால் சேவிக்கப் படுபவரே! யுத்த வீரர்களால் போற்றப்படுபவரே! மனதைக் கவரும் நடத்தையை உடையவரே! தேவேந்திரனின் விரோதிகளுக்கு மீண்டும் மீண்டும் தாக்கும் கீலாயுதம் போன்றவரே! உன்னை வணங்குகிறேன்.

மலர்ந்த பூப்போன்ற சிரிப்புள்ளவரே! உயர்ந்த மலைகளில் வசிப்பவரே! இந்திரியங்களை வென்ற முனிவர்களால் வணங்கப்படுபவரே! ஜீவன் முக்தர்களால் துதிக்கப் பட்டவரே! கந்த வெற்பில் வசிப்பவரே! தேவருலக நந்தவனத்தில் விளையாடுபவரே! உன்னை வணங்குகிறேன்.

11.“சக்தி வேல் துதி”- மனபயம் நீங்கி வெற்றிபெற- செவ்வாய்க் கிழமை மற்றும் பங்குனி உத்திரத்தன்று- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளியது.

அசுரர்களை வென்ற சக்தி மிகுந்த வேலே! உலகத்தையே பாதுகாத்து அருளும் வல்லமை பெற்ற வேலே! வணங்குவோரின் மனபயத்தை எளிதில் போக்கும் தீரம் மிக்க வேலே! உன்னை வணங்குகிறேன்! முருகப்பெருமானின் திருக்கரத்தில் அலங்காரமாக வீற்றிருக்கும் சக்தி வடிவமே, உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! நீ எப்போதும் என் இதயத்தில் வீற்றிருந்து மன உறுதி தந்து அருள வேண்டும்!

12.“ஸ்ரீஸ்கந்த துதி”- எல்லா நியாய கோரிக்கைகளும் வெற்றிபெற -முடிவில் ஸ்ரீ கந்தனின் பட்டினத்தில் கந்த வெற்பில் அவனுடன் சேர்ந்து வசிக்க! - கார்த்திகை மாதம்.

ஆறுமுகனும் பார்வதியின் குமாரனும் கிரஞ்சமலையைப் பிளந்தவனும், தேவசேனாவின் கணவனும், சிவ குமாரனுமான கந்தனை வணங்குகின்றேன்!

தாராகாசுரனை வதம் செய்தவனும் மயில்மீது அமர்ந்தவனும், ஞானவேலைக் கையில் தரித்தவனும், சிவ மைந்தனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்!

சர்வலோகேஸ்வரனான பரமசிவனின் அன்புக்கு உரியவனும், தேவாதி தேவனும், ஸ்ரீவிஸ்வேஸ்வரனின் புத்திரனும், வள்ளி தேவசேனாவிடம் மாறாத அன்பு கொண்டவனும், பக்தர்களின் கோரிக்கைகளை உடனே அளிப்பவனும், மனதைக் கவருகின்றவனும், சிவ புத்திரனுமான கந்தனைப் பணிகிறேன்!

குமரக்கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகின்றவனும், வள்ளியின் கணவனும் உலகங்கள் தோன்றக் காரணமானவனும் சிவபாலனுமான கந்தனை துதிக்கின்றேன்!

ஊழிக்காலத்தை உருவாக்குபவனும் பின் உயிர்களைக் காப்பவனும் உலகங்களை உருவாக்குபவனும், யாவருக்கும் தலைவனும், அடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனும், ஆனந்தப் பெருக்கினை உடையவனும், பிறைசூடனின் பிள்ளையுமான கந்தனை நமஸ்கரிக்கின்றேன்!

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கார்த்திகை பாலனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும், சிவகுமாரனும், ஜடையைத் தரித்தவனுமான கந்தனை துதிக்கிறேன்!

13.“ஸ்ரீஆறுமுகன் துதி”- ஆனந்த வாழ்வுவாழ- சாஸ்திரம்-ஸ்காந்தம்- மந்திரம்- சரவணபவ- சகல பிராணிகளும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய்வாழ - தினமும்.

யோகிகளும் தத்துவ ஞானிகளும், வேதாந்த விற்பன்னர்களும், கர்மயோகிகளான ஞானிகளும் குகனை விடாது வழிபடுவதால் உலகில் மேன்மையான வாழ்வினை எளிதில் அமைத்துக் கொள்கின்றனர். குகனே, ஆறுமுகனே உன்னை வணங்குகின்றேன்.

குகனுக்கு மேலான தெய்வம் கிடையாது. முருகனே அனைத்திலும் உள்ளான். பிராணவத்திற்கு மேலான தத்துவம் இல்லை என்பது போல, சுப்ரமணியனுக்கு மேலான தெய்வமில்லை. உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

குமரனை உபாசிப்பதை அனைத்து தேவர்களும் தங்களுக்கான தேவதா பூஜையாகவேகருதி மிகவும் மகிழ்ச்சியடைகிரார்கள். அதேபோல் எல்லா பித்ரு தேவதைகளும் மிகவும் சந்தோஷமடைகிறார்களென்பது சத்யம். சத்யமான உண்மை.

 மங்களமான சரவணப் பொய்கையில் உதித்தவரே, கார்த்தி கேயனே, சிவயோகத்தின் மகிமையாக அமைந்தவரே, பரமேஸ்வரனுக்கு பிராணவத்தின் பொருள் உறைத்த சுவாமிநாத, பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவனே நவரசங்களை அருளும் உன் பாத கமலங்களைப் பணிகின்றேன். நாதத்துடன் கூடிய ஹ்ரீம் பீஜ வடிவத்தை உடையவரே, நல்ல நினைவாற்றலை அளிப்பவரே கார்திகேயனே வணக்கம்.

எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருளை வாரி வழங்கும் அந்த குகனை இந்தக் கலியுகத்தில் இடைவிடாமல் துதித்தால் பயம் விலகும். அச்சத்தை உதறிவிட்டு மோட்ச லாபத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தைச் செயல் படுத்த அந்திமகாலம் வரை காத்திருக்காமல் நன்றாய் இருக்கும்போதே உணர்ந்து ஆறுமுகனை ஆராதனை செய்ய வேண்டும்.ஆறுமுகனே உன்னை வணங்குகின்றேன்.

இந்த உலகில் சாஸ்திரம் என்றால் அது ஸ்காந்தம்தான்- எந்த பொருளுக்கும் விளக்கம் கந்த புராணத்தில் உண்டு. ஒரேதேவன், ஈசனின் மகனான கந்தன். ஒரே மந்திரம்-சரவணபவ. ஒரே மோட்சம்- கந்தனுக்கு அண்மைதான். ஆகையால் சகல பிராணிகளும் இகத்திலும் பரத்திலும் இன்பமாய் வாழ சுப்ரமண்யனை வழிபடவேண்டும். அந்த ஆறுமுகனை நான் மனதார வணங்குகின்றேன்.

14.“சுப்ரமண்ய புஜங்கம்”- ஆதிசங்கரர்- உடல் உபாதைகள், மனோ வியாதிகள் நீங்க -வேண்டும்போது 
 சதாபாலன் ஆனாலும் வினைவெற்பு டைப்பான்
பெருயானை ஆனாலும் சிவச்சிங்கச் செல்வன்
சதாநான் முகன் இந்திரன் தேடுசோதிக்
கதிர்மா கணேசக் கரி என்னுள் வாழி.

 கதைகானம் பாடல்களில் வல்லன் அல்லேன்
உரை காவியம் பாடியம் வல்லன் அல்லேன்
சிதானந்தம் ஆறுமுகம் கொண்ட வீறு
உளம் வாழ்வதால் யான் கவிபாடுகின்றேன்.

 மயில்ஏறு செல்வன் மறைசொல்லு முதல்வன்
மனம் ஈர்க்கும் மேனி மகான்போற்று மானி
அயிற்செங்கை வேலன் அரன்தந்த பாலன்
அரும்வேதசீலன் குகன்பாதம் போற்றி.

 இம்மானுடர் என்றும் எம்முன்னே வந்தால்
இமைப்போதில் மாந்தர் கரையேறி உய்வார்
கைம்மான் பரன் தந்த அம்மான் குகன்தான்
சொல்வான் கடல்மோது கோவில் வளர்ந்தே.

 அலைமோதி மோதி அடங்கும் அதேபோல்
நிலைகெட்டு மாந்தர் தறிகெட்டு ஓட 
அலைபோல ஆட்டும் விதி என்முன் மங்கும்
மலைமங்கை பாலன் இதைச் சொல்வான் போலும்.

 சகம்தந்த வெற்பில் சுகந்தப் பொருப்பில்
உவந்தேறினால் கீர்த்தி சிலம்பேறுவார்கள்
குகன் சொல்லவென்றே அவன் வாழும்வெற்பே
சுகந்தபிராட்டி மகன் கந்த வெற்பே.

 வினைக்காடு மாய்க்கும் இருட்பாடு தேய்க்கும்
தனைத்தான் விளக்கும் தனிப்பேறளிக்கும்
முனிக்கூட்டம் மொய்க்கும் மூதறிவாளர் துய்க்கும்
பனிக்காட்டுப் பௌவத் தனிக் கோயில் வாழ்வான்

 மணிக்கோயில் மாட்டுவரைக் கோயில் பாட்டுத்
தனிக்காட்டு மத்தி விளங்கும்பொற்கட்டில் 
அணிப்பட்டுப் போர்த்தி அரும்பூக்கள் சார்த்தி
அதன்மீதிருப்பான் குகன் கந்த வெற்பான்.

 சலங்கை பொற்றண்டை சரம் முத்து வெண்டை
குலுங்கும் சிலம்போ புலம்பும் புலம்பும்
இலங்கும் நலங்காத் துளங்கும் விளங்கும்
பொலம்பூ மலர்பொற் கழல்போற்றி போற்றி.

 பொன்வண்ணப் பட்டு புரண்டாடு கட்டு
நிறைந்தாடு மேகலை மணிமுத்து விட்டே
அனந்தாடு காஞ்சி அதன்மேல்பொன் கத்தி
திகழ்ந்தாடு கந்தன் இடைபோற்றி போற்றி.

 வேடர் தலைவன் மகள்வள்ளி கும்ப
பாரத் தனங்குங்கு மச்சாந்து தோய்ந்த
ஆடப்பொன் னணியின் னகல் மார்பு கந்தன்
நாடாண்டு நமைகாக்கும் பீடொன்றே போற்றி.

 மறையோனைக் குட்டிவெம் மதயானை முட்டிச்
சிறைமீட்டுத் தேவர் குறைகேட்டு வாட்ட
முறையீட்டை ஈட்டி எதிரிதலை வீட்டி
நிறை உன் ஈராறு கரம் போற்றி.

 சரத்கால சந்திரன் இருப்பானேல் ஆறு 
குறையாது தேயாது நிற்பானேல் வானில் 
பதினாறு கலையோடு பகற்பொழுதுகூட
உரைப்பேன்யான் கந்தா உன் முகங்களுக்குவமை.

 முத்தாடு மூரல் முகிழ்த்தெங்கும் சோதி
முத்தத் திருக்கோவை நித்தம் பழிக்கும்
புத்தம் புதுச்சோதி பூங்குமுதச் செவ்வாய்
நித்தம் நிலா எறிஉன் ஆறுமுகம் போற்றி.

 வித்தாரமாய்ச் செவ்வரியோடி நீண்டு
புத்தம் புதுக்கமல மலர் அழகை வென்று
நித்தம் மரகதநீல மணிச்சோதி வென்று
சித்தம்கவர் கடைவிழியை எனக்கருளில் என்ன?

 சிரன் சீவியாகென்றரன் நித்தம்கூறும்
முறைமுறை முக்கண் முதல்வன் ஒர் ஆறு
முகைகூறி முத்தாடி மோந்துமகிழ் காந்த 
சிறந்தொளி பரந்த உனது ஆறுதலை போற்றி.
 ஆரம் அணி கேயூரம் மரகத முத்தாரம் 
கூறுபடை நீறுபடச் சீறுக் கரவேலும்
ஏறுமயில் வாகனமும் இடையில் இளம்படுச்
சீரை ஒளி சோதிவிட வா முருகா என்முன்.

 ‘இங்கு வருவாய் பாலா’ என்றரனார் கூற
மங்கை சிவகாமி உடைத் தங்க மடி இருந்து
பொங்கொளி சலங்கைமணிக் கங்கணம் குலுங்க
சங்கரன் கரம்தாவும் மங்களனே போற்றி.

 குமரா குழந்தாய் குகாவெற்றி வேலா
மயில் வாகனா மா மனோமோகன வா
மகாமாரி கௌமாரி மைந்தா ஏ கந்தா
வரந்தா வரந்தா வளர் வள்ளி காந்தா.

 புலன்கள் நலம் கெட்டொடுங்கி அடங்கிக்
கபம் தொண்டையில் வந்திறுக்கி முறுக்கிப்
பயம் வந்து கவ்வி உடல் நைந்துடைந்து
யமன் வந்திழுத்தால் குகா வந்து காப்பாய்.

 இவன் நெஞ்சில் பாசக் கயிறு பூட் டிறுக்கு
விடாதே பிடி குத்துடம்பை நொறுக்கு
அவன் ஆவி பற்று என எமன் தூதர் வந்தால்
சிவன் மைந்த நீவந்தெனையாள வேண்டும்.

 மலர்ச் சேவடிக்கென் வணக்கம் வணக்கம்,
உடல் பூமி தோய விழுந்தே எழுந்தேன்
யமன் வந்தபோதில் உரைசெய்ய ஆற்றேன்
அவன் வந்து நின்றால் மயில்மீது தோன்று.

 நூறாயிரம் அண்டம் வீறோடு நின்று
மாராமல் ஆண்டான் மகாவீரனாக
சூராதி சூரன் கொடுங்கோல் ஒழித்தாய்
குமரா என் கோரக் குறை ஏனோ கேளாய்
 தாராசுரன் சேனை தன்னோடும் அண்ணன்
சிங்கன் எனும்பேர் ஈராயிரம் கண்ணன்
வேரோடு நீறாக்கும் சூரா குமரா.
மாராபி ராமா என் மனக்கவலை தீராய்.

 வலிப்போடு பீளை இழுப்போடு காய்ச்சல்
துடிக்கும் தொழுநோய் உருக்கும் வெங்காசம்
உலுக்கும் குலைக்கட்டி சூலோடு குன்மம்
நடுக்கம் எடுத்தோடும் உன்பன்னீர் நீறால்.

 கண்கந்தன் ரூபம் காதுன்றன் கீர்த்தி
வாய்கந்தன் காதை கைகந்தன் தொண்டு
எண்சாண் உடம்புன் திருப்பாத சேவை
என்செய்கையாவும் உன்மயமே ஆக,

 முனிக்குப்பலுக்குக் கணக்கற்ர நன்மை
வரம்பின்றி ஈயும் பலதெய்வம் கோடி
குறவர்க்கும் மறவர்க்கும் பரவர்க்கும் முக்தி
தரும் தனிப்பெருந்தெய்வம் குகன் அன்றி யாரோ.

 மனைமக்கள் நண்பர் உறவினர் மற்றோர்
கனைகால் நடைகிள்ளை பூவை புறாவும் 
மனைவாழ் இருபாலர் ஆண்பெண் அடங்கல்
குகா உன்னையே எண்ண வாழத் துதிக்க.

 பொல்லா விலங்கு புழுப்பூச்சி பொட்டு
நல்லார் நலிகிருமி வண்டுடன் நண்டு
பொல்லாத நோயாவும் இல்லாது போக
வல்லாள உனது வடிவேற் சோதி பட்டு.

 தான் பெற்ற பிள்ளை தவறேதும் செய்தால்
தாமே பொறுப்பர் நற்றந்தையும் தாயும்
வான் வண்ண வேலா, நீயே என் பெற்றோர்
கோன் நீ என் குற்றம் பொறுத்தாள் என்னப்பா.

 வணக்கம் வடிவேல் தனக்கும் உனக்கும்
வணக்கம் வளர்பொன் மயில்சேவலுக்கும்
வணக்கம் கிடாவண் கடற்கும் கரைக்கும்
வணக்கம் வணக்கம் என் கந்தப்பனுக்கே.

 ஜயிப்பாய் ஜயானந்த பூமானே சீமான்
ஜயிப்பாய் ஜயிக்கொணா வில்லாள மல்லா,
ஜயிப்பாய் களிப்புக் கடல் ஏழை பங்கா
ஜயிப்பாய் நடிப்போன் குமாரா மாதீரா

 புஜங்க பிரயாத விருத்தச் சந்தத்தில்
புஜங்கப் பெருமான் புதல்வன் துதியை
நிஜங் கற்பவர் கேட்பவர் பத்தி செய்வோர்
பெரும்பேறு பெற்று குகன்நாடு சேர்வார்.

“ஸ்ரீமங்களாஷ்டகம்”மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

                               ஒம்சரவணபவஓம்

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

oகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.

oஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும்.

oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

oஎதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.

oஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்

 “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27435620
All
27435620
Your IP: 3.230.173.188
2024-06-24 15:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg