gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

5-9.நிலையாமை! காலத்தை வீணடிக்காதீர்!

Written by

நிலையாமை-காலத்தை-வீணடிக்காதீர்                                                            

இயற்கையின் கருணை நம்மை வாழவைக்கும். இயற்கையிலிருந்து நாம் பல நிகழ்வுகளை கற்றுக்கொள்ளலாம். அழகை ரசிக்கலாம். மனம் ஆனந்தப்படலாம். மணத்தை நுகர்ந்து அனுபவித்து பரவசப்படலாம். பலநிகழ்வுகளிலிருந்து வாழ்க்கைக்குப் பல பாடங்களை கற்றுத்தரும் முன்னுதாரணமாக திகழ்வதை கண்டு அதிசயிக்கலாம். எல்லாம் வீண் என்ற பொருளில் மண் என்கின்றோம். ஆனால் அதனுள் என்ன? என்ன? பிரமிப்புக்கள் இருக்கின்றன தெரியுமா?
மண்ணுக்குள்தான் ஓர் செடி, மரம், முளைவிட்டு உயிர்பித்து வளரமுடிகிறது. விதைக்குரிய ஈரம் உஷ்ணம் தந்து விதைக்கு உயிர் தந்து முளைத்து உலகில் வளர உதவிபுரிகின்றது. ஊர்வன, பறப்பன முதலியவற்றிற்கும் இந்தமண்ணே, மண்ணில் தோன்றியவையே ஜீவாதாரம். களிமண் என்கிறோம். அதிலிருந்து பாணை செய்கிறோம். அது உடைந்தால் மண்ணாகி மீண்டும் பாணை செய்யப் பயன்படுகின்றது.
ஆனால் மனிதா நீ தோன்றி வளர்ந்து வாழ்ந்து பின் இறந்தால் மண்னோடு மறைகிறாய். சாம்பலாய் கரைகிறாய். மீண்டும் உன் உடலிருந்து உடல் தோன்றுவதில்லை. மண் எல்லாவற்றையும் தன்னுள் வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பயன் தருகின்றது.
இயற்கையின் அனைத்து அங்கங்களும் நடத்தும் பாடங்களை நாம் புரிந்து கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் எழில்மிகுந்த, வர்ணணைக்குள் கட்டுக்கடங்காத அழகை வாரி இறைத்திருக்கும் அதன் கருணையை நன்றியுடன் போற்றி புரிந்து ஏற்றுக்கொண்டால் மண்ணில் இருக்கும்வரை வளமாக வாழ நம் எண்ணங்கள் உதவும்.
அகன்ற வானம், பரந்தகடல், வீசும் தென்றல், சுடர்விடும் ஓளி, உஷ்ணம்தரும் நெருப்பு, பாயும்நதி, கனிதரும் மரங்கள், பூத்துக்குலுங்கும் செடிகள் எல்லாவற்றையும் ஊன்றிப்பார்த்து உள்ளத்தோடு உறவாடினால் எத்தனையோ வாழ்வியல் பாடங்களை அங்கிருந்து நம்மால் பெறமுடியும்.
ஓர் சுணையிலிருந்து உற்பத்தியாகும் நீர் தன்வாழ்வுப் பாதையில் பிரவாகமாக ஓடும் நதியாக மாறிவிடுகின்றது. ஒவ்வொரு அடியாய் நகர்ந்து முன்னேறி பலசுனைகள், ஓடைகள், நீர்நிலைகளை தன்னுடன் சேர்த்து வளர்ந்து ஓரிடத்தில் சங்கமம் ஆகின்றது.
செல்லும் வழியெல்லாம் வளமளிக்கின்றது. தன் கடமையை செய்து தடையின்றி பயணிக்கின்றது. மலையும், மடுவும் சோதனையாக வந்தபோதும் அதைத்தாண்டி பிராவாகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது. தன் ஆற்றலை பயணத்தில் அதிகரித்துக் கொண்டு தடைகளை கடந்து தன் வழி பயணம் தொடர்கிறது.
எந்த நதியும் தடைகளைக்கண்டு திரும்ப நினைப்பதில்லை, தாண்டத்தான் முயலுகின்றது. முடிவு எனும்போது கடலில் ஐக்கியமாகிறது. மனிதனும் நதியைப்போன்றே பயணத்தை தொடர்கின்றான். வழியில் ஏற்படும் தடைகளைகடந்து சங்கமத்தை குறிக்கோளாகக் கொண்டு இலக்கையடையும் வரை தயங்காமல் பயணிக்கவேண்டும். நதியின் பயணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பலப்பல.
நதியில் ஓரிடத்தில் நாம் நின்றால் நம்மை கடந்து நீர் சென்று கொண்டேயிருக்கும். நாம் நிற்க ஆரம்பித்தபோது இருந்த நீர் மீண்டும் கண்களுக்கோ, கைக்கோ வரா! பார்த்த நீரை எடுத்தால் அது அப்போதைய நீர், அவ்வளவுதான்.
அதை கீழேவிட்டால் மீண்டும் அதே நீர் கிடைக்காது. நதியின் போக்கில்வேறு நீர் கிடைக்கும். சென்ற நிமிடத்தில் எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும், ஓர் விதை முளைத்திருக்கும், ஓர் பூ பூத்திருக்கும் அதை இந்த நிமிடத்தில் உணர இயலாது. கடந்தது கடந்ததுதான். இதுவே வாழ்வில் உணரவேண்டியது.
கடந்த அல்லது இறந்த கால நினைவுகளை நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் காலம் நிழல் காலமாகிவிடும். நிகழ்வுகள் இறந்த காலத்தினுடையதாக இருக்கும். இறந்தகாலத்தை நினைத்து இல்லாத ஒன்றுக்கு உயிர்கொடுக்க முயற்சித்து உயிரோடு இருப்பதை உயிரற்றதாக்கி விடாதீர்கள்.
அந்த காலத்தின் ஆன்மாக்கள் இப்போது இருக்கமாட்டார்கள். நம்மால் எதையும் செயல்படமுடியாது. அதன் தாக்கம் நம்மை வெகுவாக பாதிக்கும். இந்த முறன்பாட்டில் மனம் இயங்கினால் செயலாக்கம் சரிவராது. செயல்களில் குழப்பம் ஏற்படும். வெற்றிகள் வெகுதூரம் போய்விடும்.
கையில் கிடைத்த நேரங்கள், சந்தர்ப்பங்களை வீணடித்து விடாதீர்கள். அதை உங்களுக்கு, உங்கள் எண்ணங்களுக்கு, நண்பர்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, மனித சமுதாயத்திற்கு உதவும்படி செய்யுங்கள். அந்த நேரத்தை விட்டு விட்டால், நதியில் நம்மைக் கடந்த நீரைப்போல அது கடந்த காலமாகிவிடும். மீண்டும் அந்தநேரம் வரா. வேறுகாலம் தான் வரும். அதே பயனைத் தருமா என்பது யாருக்குத் தெரியும்!
அழகான ஓர் பெண். அவளை பலர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஏதாவது ஓர்குறை கண்டு தவிர்த்துவிட்டாள். தான் மிகவும் புத்திசாலி. தான் செய்தது சரி என்றும் நினைத்தாள். காலம் கரைந்தது. அழகு குறைந்தது. உலகில் தனித்து இருப்பதாக உணர்ந்தாள்.
ஓர்காலத்தில் அழகால் எல்லோரையும் வசீகரப் படுத்தியிருந்த அவளுக்கு, தற்போது தனக்கு மட்டுமே அழகாகத் தோன்றினாள். அவளுக்குத் தெரிந்த அவள் அழகோ, புத்திசாலித்தனமோ எந்த வகையிலும் அவளுக்கு உதவவில்லை. மற்றவர்களிடமிருந்து பிரித்துதான் வைத்துவிட்டது.
ஓர்நாள் அவள் தோழியை சந்தித்தாள். கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பது கண்டு அதிசயப்பட்டாள். அதுபற்றி அவள் தோழியிடம் கேட்க, ‘உன் வாழ்வில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் நிறைவுகளைப் பார். குறைகளைத் தேடாதே! அவர்களிடம் அன்பு கொண்டு நட்புடன் பழகு! மற்றவர்களை வசீகரிப்பாய்! வாழ்வு ஆனந்தமயமாகும்,’ என்றாள்!
அதன் பிறகு அவளை அவள் திருத்திக் கொண்டாள்! ஆனால் அவள் இழந்தது இழந்ததுதான்! கரைந்த காலம் இறந்தகாலம், அது நிகழ்காலமாகாது! இனிவராது!
அதைப்போல நாளைப் பார்த்துக் கொள்ளலாம் எனவும் இருந்து விடாதீர்கள். நாளை என்பது நிச்சயமில்லா ஒன்று. எதுவும் இடையில் நடக்கலாம். அது யாருக்குச் சொந்தம்! உங்களால் உறுதியாக கூறமுடியுமா? மகாபாரத நிகழ்வு ஒன்று. தருமனிடம் வந்த பிச்சைக்காரனை நாளை வா எனக்கூறி அனுப்பினான். இதைக்கண்ட பீமன் முரசையறைந்து “என் தமையன் தருமன் காலத்தை வென்றுவிட்டான்” என்றான்.
தருமன் அவன் செயலுக்கு விளக்கம் கேட்க, ‘அண்ணா, நாளை நீ நிச்சயம் இருப்பாயா? பிச்சைக்காரன் நிச்சயம் இருப்பானா? உன்னைச் சந்திப்பானா? நாளை அந்த பிச்சையிடும் மனோபாவம் உன்னிடம் இருக்குமா? நாளைவரை அந்த பிச்சைக்காரன் அப்படியே பிச்சைக்காரனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? நீ இருப்பதும், பிச்சைக்காரன் அப்படியே இருப்பதும் உன் கூற்றினால் உண்மை என்றால், நீ காலத்தை வென்று விட்டாய் என்றுதானே பொருள்” என்றான். தர்மன் தன் தவறை உணர்ந்து அந்த பிச்சைக்காரனை வரவழைத்து இயன்றதை அப்போதே கொடுத்து அனுப்பினான்.
நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இன்றே இப்போதே செய்ய வேண்டியதை செய்க என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். “உறங்கும் போது விடுகின்ற மூச்சு சுழி மாறிப்போனாலும் போச்சு” என சித்தர்கள் நிலையாமை குறித்து சொன்னது, நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணமும் முறையான எண்ணங்கள் முறையான செயல்பாடுகளுடன் நம் வாழ்வுப் பாதையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மூச்சுக்காற்றாக உள்வாங்குகின்றோம். வெளியே விடுகின்றோம். வெளியே போன மூச்சுக்காற்று உள்ளே திரும்பவும் வரவேண்டும். உள்வாங்கும் நிகழ்வு இல்லையெனில் மரணம் என்கின்றோம். ஒவ்வொரு சுவாசத்திற்கும் மூச்சுக்காற்று உள்ளேயும் வெளியேயும் சென்று வருகின்றது. அப்படியானல் உயிர் இருப்பதற்கு அறிகுறியான அடிப்படை உள்ளேயும் வெளியேயும் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது “ஒரு மூச்சு விடும் நேரம்” என புத்தர் சொல்லியுள்ளார். அதாவது வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மனிதனின் வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார். நாளை பலா கிடைக்கும் என, கிடைத்த களாவின் ருசியை உதறிவிடாதீர்கள்! நாளை கிடைக்கும் பலா, கஞ்சி பலாவாகக் கூட இருக்கலாம்.
எனவே எதையும் நாளை என்றோ, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றோ ஒத்திப் போடாதீர்கள். கிடைத்ததை எப்படி சந்தோஷமாக அனுபவிக்கலாம் என்ற விழிப்புணர்வுடன் இன்றே, இப்போதே, இக்கணமே, இந்த நொடியிலிருந்து வாழ்வின் பயண ஓட்டத்தில் சுவைகளை அனுபவிக்க துடிப்புடன் செயல்பட்டு சந்தோஷம் காண முயலுங்கள்.
நீங்கள் இப்போது அமைதியாக இருந்துவிட்டால் எதையும் காணமுடியாது. தெரிந்தாலும் புரிந்து கொள்ள இயலாநிலையில் இருப்பீர்கள். நடப்பவை நடக்கட்டும் என சாதாரணமாகவும் விட்டுச் செல்லமுடியாது.
அப்படிச் சென்றால், ஓர் நிலையில் வாழ்வில் எல்லாம் அலுத்து கசப்பாகி போகும், அப்போது இது என்ன வாழ்க்கை, தேடிவந்த சந்தோஷங்களை இழந்து விட்டோமே என குமுறி நீங்கள் திசைமாறி செல்வீர்கள். அதில் என்ன பயன்!
பதவி, பெண் போகமும், சுகங்களும் உண்மையான சந்தோஷத்தை தொடர்ந்து தருவதில்லை. வேதனையைத்தான் விட்டுவைக்கின்றன. அதற்காக இவற்றை விட்டுவிடுவது சரிஎன்று அர்த்தமில்லை. வாழ்வில் ஈடுபட்டு அனுபவிக்கும்போது உங்களை, உங்களின் உள்ளே தேடிப்பாருங்கள்.
உண்மையை உணருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என நினைவுகூறுங்கள். நீங்கள் ஒவ்வொரு நிலையிலும் சந்தோஷமாக இருந்தால்தான் உங்களுக்குள் சீராண எண்ண ஓட்டம் நடைபெறும்.
ஓர் நிகழ்வுக்குப்பின் நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதுதான் பயணத்தின் கடைசி என நினைத்து அந்த நிகழ்வை செய்ய முயலுங்கள்! அந்த பக்குவம் தோன்ற வேண்டும். அடுத்த ஒவ்வொரு நிகழ்வையும் கடைசி என நினைத்து செய்யுங்கள். நீங்கள் பக்குவப்படுவீர்கள். உண்மையை உணர்வீர்.
நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லாமல் போனான் என்று நிலையாமை பெருமைதனை உடையது இப்பூவுலகம். மனித வாழ்வின் நிலையாமைபற்றி குண்டலகேசியில், ‘நமக்கு நாமே தினந்தோறும் செத்துக் கொண்டிருக்கின்றோமே, நாம் ஏன் அழவில்லை என்கிறது’.
‘பாளயாம் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும், காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும் மூப்பும் முதுமையும் வருவதற்குள் ஒர் உடலில் எத்தனை சாவுகள்! குழந்தைப்பருவம், வாலிபப்பருவம், நடுவயது பருவம், என நம் வாழ்க்கைப்பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
விஞ்ஞான ரீதியில் பார்த்தால் உடலில் ஒவ்வொரு கணமும் ஆயிரக்கணக்காண செல்கள் இறப்பைச் சந்திக்கின்றன். புதிய செல்கள் பிறக்கின்றன. மாற்றங்கள் உனக்குத் தெரிவதில்லை மனிதா. தெரியாமல் எத்தனையோ மரணங்கள் உடலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தெரியும் மரணத்திற்கு ஏன் பயம் கொள்கின்றாய்.
கடவுளுடன் மனிதன் கொள்ளும் உறவைத்தவிர மீதி எந்த உறவும் நிரந்தரமல்ல. உறவுகள் என்றால் பிரிவு என்பது நியதி. உறவு தோன்றும் போதே அந்த உறவை பிரிவது என்பதும் தோன்றிவிடும்.
ஒரு உடல் மற்றொரு உடலை என்றேனும் பிரிந்தாக வேண்டும் இதுவும் நியதி. உங்கள் உள்ளே ஓர் ஒளி, ஓர் சக்தி தெரியும். அதைப் புரிந்துகொண்டு செயல்படுவீர். ‘தன்னை அறிதல்நிகழ்ந்து விட்டால் எது குறித்தும் அச்சமில்லை. பயம் என்ற சொல்லுக்கு இடமில்லை.
என்றும் உங்களிடமிருக்கும். உங்களுக்குள் ஓர் மறு மலர்ச்சி ஏற்படும். நீங்கள் உங்களை அறிந்ததால் மரணம் என்ற பயமில்லை. உயிரின் தன்மை புரிந்துகொள்ள வேண்டும்.
விழிப்புணர்ச்சியுடனிருந்தால் உங்களுக்குள்ளே பிறப்பும், இறப்பும் நிகழ்வதை அறியமுடியும். எந்த கணத்தில் உயிர் பிரியும் எனத்தெரிந்தாலும் ஆனந்தமாக ஓர் ஆன்மாவால் இருக்கமுடிந்தால், அது அந்த ஆன்மா மேன்நிலையை எட்டியுள்ளது என அறியப்படும்.
என்றென்றும் கடலுக்குள்ளே உள்ள மீன் தண்ணீரில்தானே இருக்கிறோம். கடல் எங்கே என்று தேடியதைப்போல், நம் உள்ளே அருள் உருவத்தை வைத்துக்கொண்டு அதை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
பார்வையற்றவனுக்கு சூரியனும், சந்திரனும் ஒன்றுதான். எந்த ஒளியும் தெரியாது. ஆன்மா உடலுடன் சேர்ந்து உலகைப் பார்க்கின்றது. அருள்பற்றி தெரியவேண்டும் என்ற உணர்வு இல்லை. அருட்கண் தானாக தோன்றுவதில்லை.
ஆன்மா படிப்படியாக பக்குவமடைந்து அருள் ஒளிபெற வேண்டும், காணவேண்டும் எனத்தீவிரமாக விரும்பும்போது திருஅருள்சேர்ந்து அருள் அனுபவத்தை அனுபவிக்கின்றது.
சம்பந்தர் பெருமான், “உள்ளத்தே அருள் புகுந்த காரணத்தால் கிரகங்களும், யமனும், கொடியவிலங்குகளும், நோய்களும், காலமும், நேரமும், எல்லாமும் நல்லதே செய்யும்,” எனப் பாடியுள்ளார்.
மனிதன் தனக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் இவைகளைச் சேகரித்தபின் தன் குடும்பத்திற்கு, தன் எதிர்காலத்திற்கு, தன்னை சார்ந்தவர்களுக்கு எனச் சேகரித்தான். இவ்வளவு செய்த மனிதன் தான் எப்போதும் இறப்பதில்லை. தன் உடம்புதான் இறக்கின்றது. என்ற நினைவுடன் தான் எப்போதும் ஆனந்தத்துடன் இருக்க எதையும் செய்வதில்லை.
இறந்தபின் என்ன சரணாகதி ? உடலில் உயிர்கொண்டு சேகரித்த பணம், உடலைவிட்டு உயிர் சென்றபின் எவ்வளவு தூரத்திற்கு உதவும். சற்று நிதானமாக சிந்தியுங்கள்.
நமக்கு தற்போதுள்ள திறமை, பண்பு, மனம், சக்தி இவைகளைவைத்து நம் உற்றார் உறவினர் குடும்பத்தினர் எல்லோருக்கும் பாதுகாப்பாக உபயோகமான காரியங்களைச் செய்து கொண்டதுபோல் நமக்கும் செய்து கொள்ளவேண்டும். நமக்கு என செய்யும் செயல்கள் அநாவசியமாக தோன்றும், ஆனால் அவைகள் அவசியமான செயல்களாகும். இறப்பு ஒரு ஆன்மாவிற்கு தூக்கம் போன்றது. பிறப்பு உறங்கி விழித்தலைப் போன்றது. பிறப்பு, இறப்பின் தன்மைகளை உணர்ந்தவராயிருந்தால் உங்களுக்கு அழுகை வராது. ஆனால் இறப்பின் தன்மை அதிர்ச்சி தரும். இதுபோன்ற வேதனை ஒவ்வொரு மனித உயிருக்கும் தேவையா! இறைவா! என்ற கேள்வி எழும்.
அவரது நினைவுகள் காலப்போக்கில் கரைந்திருந்தாலும், நீங்கா நினைவுகள் எழுந்து உங்கள் நினைவுகளில் குடிகொள்ளும். ஏதோவொரு துக்கம் வேதனை உங்கள் நெஞ்சை பிசையவைத்து துன்பம் தரும்.
இந்த ஜென்மத்தில் அவரின் சந்திப்பு முடிந்தது. மீண்டும் அவரை எந்த ரூபத்தில் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற நினைவு அழுந்தும். ஆன்மாக்கள் ஒரு வயப்பட்டிருந்தால் எந்த ரூபத்திலாவது மீண்டும் மீண்டும் சந்திப்புகளும் பிரிவுகளும் நடந்து கொண்டேயிருக்கும். உலகின் மாயை இது.
“ஊனாலும், உயிராலும் உள்ள பயன் கொளல்” என்று நாவுக்கரசர் சொல்லியருளியுள்ளார். உடம்புக்கும் பயன் உண்டு. உயிருக்கும் பயன் உண்டு. உயிரை நீங்கள் தனியாக காணமுடியாது. உடலோடு சேர்ந்து இருக்கும் போதுதான் உணரமுடியும்.
உயிருடன் கூடிய உடலைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் தாக்கங்களை உடல் உள்வாங்கி உயிராகிய ஆன்மாவிற்கு அளித்து அதை செயல்படவைக்கின்றது. உடலிலிருந்து உயிர் நீங்கினால் அது ஜடமாகிறது. சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை உணரமுடியா நிலையில் இருக்கிறது. அதைபிணம் என்று மண்ணுக்குச் சமர்பிக்கின்றோம். மண்ணோடு மண்ணாகிறது.
மூச்சுக் காற்று என்கின்றோம். மூச்சு நின்றுவிட்டது என்கின்றோம். உயிர் உடலை விட்டு நீங்கியதா என்பதை அறிய மூச்சு இருக்கின்றதா என சோதனைச்செய்கின்றோம். அதனால் மூச்சு காற்றுதான் ஆன்மாவா! இல்லை உயிரா! ஏதுமில்லை.
உயிர் போனபின்னும் உள்ளே சென்ற மூச்சு காற்று உடலில் நிரம்பிதான் இருக்கின்றது. ஆனால் வெளியே வந்து உள்ளே செல்லும் செயல் இல்லை. இந்த செயல் ஆன்மாவினுடையது. ஒரு கருவியாக காற்று மூச்சாக வந்து செல்வது ஆன்மா இயக்கத்தில் இருக்கின்றது என நம்மை உணரவைப்பதற்காக. ஆன்மா செயல்பட ஓர் கருவியாக துனைபுரிவது காற்று.
நிகழ்வுகளின் சாதகபாதகங்கள் உயிரின் ஆன்மாவிற்கே! உயிரால் உடம்பு இயங்குகின்றது. உடம்பால் உயிர் உணர்ச்சிகளையும், எழுச்சியும் பெறுகின்றது. எனவே ஆன்மாவின் உயிர் என்றும் எப்போதும் நல்லநிலையில் உலவ நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் செய்து ஆன்மாவின் நலம் பேனுங்கள்.
ஆன்மாவின் ஆதாரம் உயிர். அந்த உயிர் தங்குவதற்கு, உடல் ஆரோக்கியம் வேண்டும். ஆரோக்கியத்திற்கு மௌனம் அவசியமானது. சலனமற்ற மௌனம் பல அர்த்தங்கள் கொண்டது-குருஸ்ரீ பகோரா

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27004493
All
27004493
Your IP: 44.210.149.205
2024-04-12 19:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்